- டிசம்பர் 8, 2024
உள்ளடக்கம்
தமிழ்க் கடவுளாக விளங்கும் முருகப்பெருமானோடு தொடர்புடைய நட்சத்திரங்கள் மூன்று. அவை:
விசாக நட்சத்திர தினத்தன்றுதான் முருகன் அவதரித்தார். ஞானமே திரண்டு முருகனாக அவதரித்தது. அதனால் அது ஞானத்திருநாள் ஆனது. கார்த்திகை மாதர்கள் அவருக்குப் பாலூட்டி வளர்த்தனர். அவர்களுக்குச் சிறப்பு அளிக்கும் வகையில் முருகன் கார்த்திகை நட்சத்திரத்துக்குச் சிறப்பளித்தும் அந்நாளைத் தன்னை வழிபடும் நாளாகவும் ஆக்கினார். உத்திர நட்சத்திர நாள் அவர் வள்ளியை மணந்து அருள்புரிந்த திருநாளாகும்.
வைகாசி விசாகத்தில் தோன்றியதால் முருகனுக்கு விசாகன் என்பது பெயரானது. அதனாலேயே விசாகப் பெருமாள் எனவும் அழைத்தனர். மேலும், அவனது தோழர்கள் சாகன், விசாகன் எனப்படுகின்றனர். வைகாசி விசாக நாளில் சிவ பெருமானின் நெற்றிக்கண்ணில் தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து ஆறு தனித்தனிக் குழந்தைகளாக மாறிய முருகன் ஒன்று சேர்ந்து ஆறுமுகங்களும், பன்னிரண்டு தோள்களும் கொண்ட அழகனாக உருப்பெற்றான்.
அவனை ஆறு கார்த்திகைப் பெண்களும் அன்று வழிபட்டுப் பேறு பெற்றனர். ஞானக் கொழுந்தாக நின்ற பெருமான் அவ்வேளையில் சரவணப் பொய்கையில் மீனாக வசித்து வந்த பராசரர்களின் குமாரர்களுக்கு ஞானத்தை வழங்கினான். முருகன் ஞானம் வழங்கிய முதன் முதல் நாளாக அது அமைந்தது. இதையொட்டி முருகன் ஆலயங்களில் ஆறுமுக சுவாமிக்குச் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன; ஆறுமுகருக்கு ஷண்முகார்ச்சனை செய்து வீதியுலா நடத்துகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் உள்ள ஷண்முகநாதருக்குப் பால்குடம் எடுத்து வந்து பெரிய அளவில் அபிஷேகம் செய்கின்றனர். இதற்கென அமைந்த அபிஷேக மேடையை அபஷேகக் குறடு என்று அழைக்கின்றனர். ஷண்முகப் பெருமானுக்கு அன்று செய்யப்படும் பால் அபிஷேகம் சாதாரண நாளில் செய்வதை விடப் பன்மடங்கு பலன் தருவதாகும். முருகனுக்கு விசாகன் என்னும் பெயர் இருப்பது போலவே மயிலுக்கும் விசாகம் என்பது பெயர். இதற்கு வி – மேலாக : சாகன் – எங்கும் சஞ்சரிப்பது என்பது பொருள்.
இந்த அற்புத வைகாசி விசாக தினத்தில் ஆறுமுகன் அவதரித்த நாளாக கொண்டாடப்படும் அதே வேளை எமதர்ம ராஜனின் அவதார தினமாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால் இந்த தினத்தில் நாம் விரதம் இருந்து வழிபாடு செய்தால் நமக்கு முருகனின் அருளும், நீண்ட ஆயுள் கிடைக்கும்.
இந்த விசேச தினத்தில் திருச்செந்தூர் சுப்ரமண்ய திருக்கோவிலில், கருவறையில் தண்ணீர் நிற்கும் படி வைத்து இறைவனுக்கு உஷ்ண சாந்தி உற்சவம் எனும் வெப்பம் தணிக்கும் விழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம். இந்த நாளில் இறைவனுக்கு சிறுபருப்பு பாயசம், அப்பம், நீர்மோர் முதலியவை நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
அன்னை பராசக்தியை ஞானேஸ்வரியாகப் போற்றுகின்றோம். அவள் வைகாசி விசாக நாளில் ஞானேஸ்வரியாகக் காட்சி தருகின்றாள். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் எழுந்தருளியிருக்கும் அன்னை கற்பகவல்லி, வைகாசி விசாக நாளில் ஞான பரமேஸ்வரியாகக் காட்சி தருகிறாள். அந்நாளில் அவள் இடுப்பில் ஞானவாளுடன் காட்சி தருகிறாள். அது அன்பர்களின் அஞ்ஞானத்தை வேரோடு வெட்டி எறியும் ஞான வாளாகும். இத்தகைய காட்சி வேறெந்தக் கோவிலிலும் காணக்கிடைக்காதது.
Also read,