×
Monday 9th of December 2024

அஷ்டமி – நவமி


Ashtami Navami Meaning in Tamil

அஷ்டமியும் நவமியும்

அம்மாவாசை பௌர்ணமி நாட்களுக்கு பிறகு எட்டாவது நாள் அஷ்டமி ஆகும் ஒன்பதாவது நாள் நவமி ஆகும்.

நம்மில் பலர் எத்தனையோ நல்ல விஷயங்களைத் தவறாகப் புரிந்து கொள்கிறோம். தவறாகப் பிரசாரமும் செய்கிறோம். இதுவே நம் ஆன்மிகத்தைப் பின்னடையச் செய்வது! இவற்றைதான் வள்ளல் பெருமான், “கண் மூடிப் பழக்கம்” என்றார். “அவை மண் மூடிப் போக” என்றும் சாடியுள்ளார்.

எட்டாம் எண் கெட்டது என்று பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கடவுளையே எண்குணத்தான் என்று சொல்கிறோமே! அப்படியானால் கடவுள் கெட்டவரா என்ன? உலகப் பொதுமறை பாடிய திருவள்ளுவரும் இறைவனை “எண் குணத்தான்” என்றுதானே கூறியுள்ளார்?

மகான்கள் யோகத்தினால் இயற்றும் சித்திகள் எட்டு. அவை  அட்டமா சித்திகள்  என்று போற்றப்படுகிறதே!

காக்கும் கடவுள் கண்ண பெருமான் பிறந்தது “அஷ்டமி” எனப்படும் எட்டாவது திதியில்தானே!

“அஷ்டமி, நவமியில் தொட்டது துலங்காது” என்பது ஒரு தவறான சொல் வழக்கு! இதற்குச் சரியான பொருள் –  அஷ்டமி, நவமியில் துஷ்டர்கள் துலங்கார் ! அதாவது அஷ்டமியும் நவமியும் தீயவர்களுக்கு அழிவுநாள் என்பதாகும். அஷ்டமியில் பிறந்த கண்ணன்தானே கொடியவன் கம்சனை அழித்தான்?

இந்த நாட்களை கண்ணன், துர்க்கை போன்ற தெய்வங்களை வழிபடும் நாளாக வைத்தனர். அதனால் அந்த நாட்களில் நமது நலத்திற்கான மங்கல நிகழ்ச்சிகளைச் செய்தல் வேண்டாம் என்றனர். பதினைந்து திதிகளில் எல்லாமே நல்லவை என்று சொல்லிவிட்டால் மனிதர்கள் அத்தனை திதிகளிலும் தன்னலத்திற்குரிய செயல்களையே செய்வர். வழிபாட்டிற்கு நேரமில்லையே என்று கூறிவிடுவர்.

பெருமாளை வழிபடும் மந்திரமும் எட்டெழுத்தே! அதுவே “ஓம் நமோ நாராயணாயா” என்பது.

நேரமில்லை என்று சொல்லிக் கொண்டே நாம் ஓடி ஓடித் தேடும் செல்வமும் எட்டு வகை! அவை  அஷ்ட ஐஸ்வர்யம்  என்பவை. அவற்றை வழங்கும் திருமகளுக்கும் “அஷ்ட லட்சுமிகள்” என்ற உருவங்கள் உண்டு.

சைவத் திருமுறைகள் பன்னிரண்டு. அவற்றுள் முதல் ஏழு திருமுறைகள் சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் பாடிய தேவாரம். மணிவாசகர் இவர்கள் மூவருக்கும் காலத்தால் முற்பட்டவர். மேலும் மணிவாசகர் சொல்லச் சொல்ல தில்லை சிற்றம்பலவாணன் கைப்பட எழுதியது என்று நடராசப் பெருமானே கையொப்பமிட்ட பெருமை திருவாசகத்திற்கு உண்டு.

அதுமட்டுமல்ல, திருப்பெருந்துறையில் குருந்த மரத்தடியில் சிவபெருமானே வேதியர் வடிவில் குருவாக வந்து திருவாதவூரருக்கு உபதேசம் அருளினார். அந்த உபதேசம் பெற்றதுமே திருவாதவூரர் பாடியதுதான் திருவாசகம்.  நமசிவாய வாழ்க; நாதன் தாள் வாழ்க  என்று முதன்முதல் பாடியதுதான் “சிவபுராணம்” எனப்படும் திருவாசகத்தின் முதற்பகுதி. இதனைக் கேட்டு மகிழ்ந்த சிவபெருமானே திருவாதவூரரை “மாணிக்க வாசக” என்று தன் திருவாயால் அழைத்தார்.

திருவாசகத்தின் ஒரு பகுதியாகிய திருவெம்பாவை இருபது பாடல்களையும் மாணிக்கவாசகர் திருவண்ணாமலையில் பாடியருளினார். அது கேட்டு மகிழ்ந்த ஈசன், “மணிவாசக, பாவை பாடிய வாயால் கோவை பாடு” என்று திருவருளாணை பிறப்பித்தார். அதன்படி மணிவாசகப் பெருமான் பாடியதே திருக்கோவையார் என்னும் அற்புத நூல். இது அகப்பொருள் துறையில் அமைத்துப் பாடியது. திருவாசகமும் திருக்கோவையாரும் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டன.

எட்டாம் திருமுறையாயினும் திருவாசகமே “தலைமை மந்திரம்” என்கிறார் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள். இதனை விளக்க அவர் கூறுவன:

பஞ்ச பிரம்ம மந்திரங்கள் என்பவை ஐந்து. அவை-

ஓம் ஈசானாய நம,
ஓம் தத்புருஷாய நம,
ஓம் அகோரேப்யே நம,
ஓம் வாமதேவாய நம,
ஓம் சத்யோஜாதாய நம.

இவை சிவனது ஐந்து முகங்களைக் குறிப்பவை.
ஷடங்க மந்திரங்கள் என்பவை ஆறு. அவை-

ஓம் ஹ்ருத்யாய நம (இதயம்),
ஓம் சிரசே நம (தலை),
ஓம் சிகாயை நம (முடி),
ஓம் கவசாய நம (கவசம்),
ஓம் நேத்ரேப்யோ நம (கண்),
ஓம் அஸ்த்ராய நம (கை).

மேற்கண்ட பதினொன்றும் சம்மிதா மந்திரங்கள் எனப்படும். இதில் எட்டாவது மந்திரம் “சிகாயை நம”.

சிகை என்பது தலைமுடி. உடல் என்பது அவரவர் கையில் எட்டு சாண் அளவுடையது. எட்டு சாணில் ஒரு சாண் தலை. அதனால் எண் சாண் உடம்பிற்கு சிரசே பிரதானம் எனப்பட்டது. சிரசிற்கு மேலே இருப்பது சிகை. சிகைக்கு மேலே எதுவும் இல்லை. அதுவே ஆகாயம் எனப்படும் வெளி.

மேலே சொன்ன மந்திரங்களின் இறுதியில் சேர்த்துச் சொல்லப்பட வேண்டியவை:

 நம, ஸ்வதா, ஸ்வாஹா, வஷட், வவுஷட், பட், ஹும்பட். 

என்பவையாகும். வணங்கும்போது “நம” என்று சேர்த்துச் சொல்ல வேண்டும். பொருளைத் தந்து திருப்தி செய்யும்போது (தானம்) “ஸ்வதா” சேர்க்க வேண்டும். யாகத்தில் பொருளைத் தரும்போது “ஸ்வாஹா” என்று சேர்க்க வேண்டும்.

“ஸ்வாஹா” என்பது அக்னி தேவனின் மனைவி பெயர். யாகத் தீயில் இடும் பொருள்களை இந்த “ஸ்வாஹா” தான் உரிய தேவர்களிடம் கொண்டு சேர்ப்பவள்.

திருவாசகம் எட்டாவது திருமுறை. ஆகவே அது சிகா மந்திரம் – தலையாய மந்திரம். பன்னிரு திருமுறைகளில் மிகவும் உயர்வானது திருவாசகமே.

தெய்வம் மனிதனுக்குச் சொன்னது கீதை. மனிதன் தெய்வத்திற்குச் சொன்னது திருவாசகம். மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்.

திருக்குறள் உலகப் பொதுமறை. உலகின் எல்லா மொழியினருக்கும் எல்லா மதத்தினருக்கும் பொதுவான நீதிகளை, ஒழுக்கங்களைக் கூறுவது. எனவே அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படும் தகுதி பெற்றது.

திருவாசகம் தமிழில் பாடப்பெற்ற பக்தி நூல். இறைவன்மீது பாடிய துதிப் பாடல்கள். மணிவாசகர் உலகத்து உயிர்களுக்காக இறைவனிடம் அழுது அழுது, தொழுது தொழுது பாடியது.

இது ஒரு புதினமோ வரலாறோ கதையோ நாடகமோ அல்ல. இது பிற நாட்டினர் உள்ளங்கவர்ந்தது என்றால் அது வியப்பிலும் வியப்பு! அதுவும் டாக்டர் ஜி.யு. போப் அவர்களால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. தற்பொழுது இளையராஜா அவர்களால் சிம்பொனி இசை வடிவமும் தரப்பட்டுள்ளது. இன்று மேல்நாட்டில் திருவாசகம் பண்ணுடன் பாடப்படுவது தமிழனை உலகம் போற்றச் செய்கிறது.

“திருவாசகத்திற்கு உருகாதார் ஒரு வாசகத்திற்கும் உருகார்”

“திருவாசகம் ஒருகால் ஓதக் கருங்கல் மனமும் கசிந்துருகும்”

போன்ற பழமொழிகள் திருவாசகத்தின் பெருமையை விளக்கும்.

வான் கலந்த மாணிக்க வாசக நின் வாசகத்தை
நான் கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து என்
ஊன் கலந்து உயிர் கலந்து உவட்டாமல் இனிப்பதுவே

என்று வள்ளலார் இராமலிங்க அடிகள் தம் திருவாசக அனுபவத்தை வடித்துள்ளார்.

இறைவனை அடைய நான்கு நெறிகள். மகனாக திருஞான சம்பந்தரும் தொண்டராக (தாசர்) அப்பரும் தோழராக (சகா) சுந்தரரும் சன்மார்க்கமாக (ஞானம்) மணிவாசகரும் வழிபட்டனர்.

வேத ஆகமங்களை முறையாக உணர்ந்து முப்பொருள் இலக்கணத்தையும் பழுதற அறிந்து இறைஞானம் பெற்று அவனோடு ஒன்றும் நிலையை எய்துவதுதான் சன்மார்க்கம் எனும் ஞானநெறி. இந்நிலையடைவோர் இறைவன் தானேயாகி ஏகனாய் உணர்வர். (தத்வமஸி- நான் அதுவாகிறேன் என்பது வேதவாக்கியம்). இது பரமுத்தி எனப்படும்.

மந்திரம் என்றால் “ஈர்ப்பு” என்று பொருள்படும். தனது திருவாசகத்தால் இறைவனை ஈர்த்தமையால் திருவாசகம் மந்திரங்களில் தலைமையானது.

அதேபோல, 8 என்பது சனி பகவான் ஆதிக்கம் உடைய எண். மகர ராசி, கும்ப ராசிக்காரர்களும் அஷ்டமி அன்று எது வேண்டுமானாலும் செய்யலாம். மேலும், சனி பகவானின் ஆதிக்கம் பிறந்தவர்கள். அதாவது, ஜாதகத்தில் சனி உச்சம் அல்லது ஆட்சி பெற்றவர்களும் அஷ்டமி திதியில் எது வேண்டுமானாலும் செய்யலாம். அது அவர்களை பாதிக்காது.

நவமி என்பது 9வது திதி. 9ஆம் எண்ணில் 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு நவமி மிகவும் விசேஷமானதாக இருக்கும். இது செவ்வாயுடைய ஆதிக்கம் உள்ள திதி. அதனால் செவ்வாயினுடைய மேஷ ராசி, விருச்சிக ராசியில் பிறந்தவர்களும் நவமியில் எது வேண்டுமானாலும் செய்யலாம்.

 

Also, read


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 8, 2024
மார்கழி பாவை நோன்பு – திருவெம்பாவை
  • டிசம்பர் 7, 2024
திருமாங்கல்யம்
  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil