×
Wednesday 11th of December 2024

ஜோதிடம்: கோள்களும் அவற்றின் தன்மைகளும்


உள்ளடக்கம்

ஜோதிடம் என்றால் என்ன?

பெருவெளியில் அமைந்திருக்கும் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு கோளும் தனித்துவமான விட்டம், இயல்பு, ஆற்றலைக் கொண்டவை என்பதை தற்கால அறிவியல் ஆதாரங்களுடன் நிருபித்திருக்கிறது. இதில் பூமியில் மட்டுமே உயிரிங்கள் வாழும் சூழல் இருப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கிறது.

தற்போதைய அறிவியல் ஆய்வு வசதிகள் ஏதுமில்லாத ஓர் கால கட்டத்தில் நமது முன்னோர்கள் ஒன்பது கோள்களையும் அவற்றின் குணாதிசியங்களையும், அவற்றின் நகர்வுகளையும் அவதானித்து குறித்து வைத்தனர். இந்த கோள்களின் நகர்வுகள், சேர்க்கைகள், ஒன்று மற்றதன் அருகில் வரும்போது பூமியில் உண்டாக்கும் மாற்றங்களையும், அதனால் உண்டான விளைவுகள் என எல்லாவற்றையும் விவரமாகவும், விளக்கமாயும் பதிந்து வைத்தனர்.

இந்த வகையில் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் ஒவ்வொரு கோளும் எந்த நிலையில் இருக்கிறது என்பதைக் குறித்து வைத்து பின்னர் அவனுடைய வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுக்கும், இந்த கோள்களின் நகர்வுகளுக்கும் தொடர்பு படுத்திய ஒரு முயற்சிதான் ஜோதிடம் என்பதன் ஆரம்பமாய் இருந்திருக்க வேண்டும். பல்லாயிரம் ஆண்டுகள் தொடர்ந்த இந்த கணிப்புகள், கால ஓட்டத்தில் மெருகேற்றப்பட்டு இன்ன நிலையில் கோள்கள் அமைவதால் இன்ன பலன் உண்டாகும் என்பதாக ஒரு வரையறைக்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும்.

இன்னும் எளிமையாக சொல்வதானால், “சூரிய குடும்பத்தில் இருக்கும் ஒன்பது கோள்களும் ஒரு மனிதன் பிறக்கும் நேரத்தில் எந்த நிலையில் உள்ளது என்று கணக்கிடுவதன் மூலம் அந்த மனிதனின் சென்ற காலம், நிகழ் காலம், வரும் காலம், என்ற மூன்று காலங்களையும் கணக்கிடுதல்”. இதுவே சோதிடத்தின் அடிப்படை. துணைக்கண்டத்தின் ஜோதிட முறைக்கு பொதுவில் இந்திய வண்ணம் பூசப்பட்டாலும், இந்த இயலில் தமிழர்களின் பங்களிப்பு மகத்தானது என்பதை இந்த இடத்தில் பதிந்து வைக்க விரும்புகிறேன்.

Astrology Shastra Types in Tamil

ஜோதிட வகைகள்

ஜோதிட இயலில் சித்தர்களின் பங்களிப்பு அளப்பறியது. அவர்கள் வகுத்தளித்த பல முறைகள் முற்றிலுமாகவே நமக்கு கிடைக்கவில்லை. சிலவற்றின் பெயர்கள் மட்டுமே காணக்கிடைக்கிறது. இழந்தவற்றைப் பற்றி கவலைப்படுவதைக் காட்டிலும், நமக்கு கிடைத்தவற்றை, குருவருளினால் மேலும் ஆக்கப் பூர்வமாய் பயன்படுத்திக்கொள்ள முனைவதே இந்த பதிவுகளின் நோக்கம்.

நம்மிடம் இருக்கும் சித்தர்களின் பாடற் தொகுப்பில் இருந்து நமக்கு ஆறு வகையான ஜோதிட முறைகள் கிடைத்திருக்கின்றன.

சோதிட சாத்திரம்: இவை எல்லாமே வானில் உள்ள கோள்களின் அமைப்பு மற்றும் கோளின் நிலை, நட்சத்திர அமைப்பு ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

பஞ்ச பட்சி சாத்திரம்: ஐந்து வகையான பறவை இனங்களின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

மனையடி சாத்திரம்: வீடு, கட்டடங்கள், விவசாய நிலங்களின் தன்மைகளையும் அவற்றை தக்க வகையில் அமைத்துப் பயன்படுத்தும் முறைகளை கணிக்கும் முறை.

விருட்ச சாத்திரம்: குறிப்பிட்ட மரங்களை வளர்ப்பதன் மூலம் வளர்ப்பவருக்கு கிடைக்கும் நன்மைகளையும், மரத்தின் தன்மைகளையும் கொண்டு கணிக்கும் முறை.

உடற் சாத்திரம்: மனிதனின் உடலில் உள்ள அவயங்களின் அமைப்பு, அளவுகள், தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டு கணிக்கும் முறை.

ஆரூடம்: செய்யப் போகும் காரியம், அல்லது குறிப்பிட்ட செயலின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை முன் கூட்டியே கணிக்கும் முறை.

இந்த அனத்துமே மனித சமூகத்தின் நலனை முன்வைத்தே கணிக்கப்படுகிறது. இந்த முறைகளில் கணிக்கப்படும் கணிப்புகள் தவறாகாது என்று சித்தர் பாடல்களில் காணப்படுகிறது. மேலும் இந்த கலைகள் தீயவர்கள் கைக்கு சென்றுவிடக் கூடாது என்பதிலும் சித்தர்கள் உறுதியாக இருந்ததும் தெரிகிறது.

9 Planets and Their Characteristics in Astrology in Tamil

சோதிடத்தில் 9 கோள்களும் அவற்றின் பண்புகளும்

  • சூரியன் (SUN)
  • சந்திரன் ( MOON)
  • செவ்வாய் (MARS)
  • புதன் (MERCURY)
  • குரு – வியாழன் (JUPITER)
  • சுக்கிரன் (VENUS)
  • சனி (SATURN)
  • இராகு (RAKU)
  • கேது (KETU)

சூரியன்: Sun in Tamil Astrology

சூரிய குடும்பத்தின் முதன்மை கோளான சூரியனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

surya bhagavan

அண்டயோனி, அரி, அரியமா, அருக்கன், அருணன், அலரி, அழரவன், அனலி, ஆதவன், ஆதவன், ஆயிரஞ்சோதி, இதவு, இருள்வலி, இனன், உதயம், எல், எல்லை, எல்லோன், என்றுள், எழ்ப்ரியோன், ஒளி, ஒளியோன், கதிரவன், கனவி, கிரணமாலி, சண்டன், சவிதா, சான்றோன், சித்ரபானு, சுடரோன், சூரன், செங்கதிரோன் , சோதி, ஞாயிறு, தபணன், தரணி, திவாகரன், தினகரன், தனமணி, நாபாமணி, பகலோன், பகல், பங்கயன், பதங்கன், பரிகி, பர்க்கன், பனிப்பகை, பானு, மார்த்தாண்டன், மித்திரன், விசுரத்தனன், விண்மனி, விரிச்சிகன், விரோசனன், வெஞ்சுடர், வெயில், வேய்யோன் ஆகியனவாகும்.

உரிய பால் ஆண் கிரகம்.
உரிய நிறம் வெண்மை நிறம்.
உரிய இனம் சத்திரிய இனம்.
உரிய வடிவம் சம உயரம்.
உரிய அவயம் தலை.
உரிய உலோகம் தாமிரம்.
உரிய மொழி சமஸ்கிருதம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளாம்.
உரிய ரத்தினம் மாணிக்கம்.
உரிய ஆடை சிவப்பு (இரத்த சிவப்பு) நிற ஆடை.
உரிய மலர் செந்தாமரை.
உரிய தூபம் சந்தனம்.
உரிய வாகனம் மயில், தேர்.
உரிய சமித்து எருக்கு.
உரிய சுவை துவர்ப்பு.
உரிய பஞ்ச பூதம் தேயு.
உரிய நாடி பித்த நாடி.
உரிய திக்கு கிழக்கு.
உரிய அதி தேவதை சிவன்.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) நிலையான கோள்.
உரிய குணம் மந்தம்(தாமஸ்ம்).
உரிய ஆசன வடிவம் வட்டம்.
உரிய தேசம் கலிங்கம்.
நட்புப் பெற்ற கோள்கள் சந்திரன், வியாழன், செவ்வாய்.
பகைப் பெற்ற கோள்கள் சுக்கிரன், சனி, ராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள் புதன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம்.
உரிய தெசா புத்திக் கா லம் ஆறு ஆண்டுகள்.
சூரியனின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு விருச்சிகம், தனுசு, கடகம், மீனம்.
பகை வீடு ரிஷபம், மகரம், கும்பம்.
ஆட்சி பெற்ற இடம் சிம்மம்.
நீசம் பெற்ற இடம் துலாம்.
உச்சம் பெற்ற இடம் மேடம்.
மூலதிரி கோணம் சிம்மம்.
உரிய உப கிரகம் காலன்.
உரிய காரகத்துவம் சூரியன் பித்ருகாரகன்.

மேலும் பிதா, ஆத்மா, சிராசு, தந்தம், வலது நேத்ரம், பித்தம், ஒருதலை நோவு போன்ற சிரசு ரோகங்கள், சித்தசுவாதீனம், சௌரியம், பிரதாபம், தைரியம், இராஜசேவை, அரச உத்தியோகம், யாத்திரை, கிராம சஞ்சாரம், இரசவாதம், யானை, மலை, காடு, தபசு, சைவானுஷ்டானம் இவைகளுக்கு எல்லாம் சூரியன்தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

சீலமாய் வாழச் சீரருள் புரியும்
ஞாலம் புகழும் ஞாயிறே போற்றி
சூரியா போற்றி சுந்தரா போற்றி
வீரியா போற்றி வினைகள்
களைவாய் போற்றி போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

ஜபாகுஸும ஸங்காஷம்
காஸ்யபேயம் மஹாத்யுதிம்|
தமோரிம் ஸர்வ பாபக்நம்
ப்ரணதோஸ்மி திவாகரம்||

சூர்ய காயத்திரி மந்திரம்

Surya Gayatri Mantra in Tamil

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே; பாசஹஸ்தாய தீமஹி
தன்நோ ஸூர்ய: ப்ரசோதயாத்||

ஓம் பாஸ்கராய வித்மஹே; மஹத்யுதிகராய தீமஹி
தந்நோ ஆதித்ய: ப்ரசோதயாத்||


சந்திரன்: Moon in Tamil Astrology

சோதிடவியலில் இரண்டாவது கோளான சந்திரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

chandra bhagavan

அமுக்கதிரோன், அமுதகிரணன், அம்புலி, அரி, அரிச், அலவன், அல்லோன், ஆலோன், இந்து, இமகரன், இராக்கதிர், இவன், உடுபதி, உகுவின்வேந்தன், கலாநிதி, கலையினன், களங்கள், குபேரன், குமுதநண்பன், குரங்கி, சசி, சீதன், சுதாகரன், சோமன், தண்சுடர், கண்ணவன், தாராபதி, தானவன், திங்கள், தெவ்வு, நிராசரன், நிசாபதி, நிலவு, பசுங்கதிர், மதி, மதியம், மனேந்தி, முயலின் கூடு, விது, விபத்து, வெண்கதிரோன், வேந்தன் ஆகியனவாகும்.

உரிய பால் பெண் கிரகம்.
உரிய நிறம் வெண்மை நிறம்.
உரிய இனம் வைசிய இனம்.
உரிய வடிவம் குள்ள மான உயரம்.
உரிய அவயம் முகம், வயிறு.
உரிய உலோகம் ஈயம்.
உரிய மொழி இல்லை.
உரிய ரத்தினம் முத்து.
உரிய ஆடை வெண்மை (முத்து வெண்மை) நிற ஆடை.
உரிய மலர் வெள்ளை அலரி.
உரிய தூபம் சாம்பிராணி.
உரிய வாகனம் முத்து விமானம்.
உரிய சமித்து முருக்கு.
உரிய சுவை உப்பு.
உரிய பஞ்ச பூதம் அப்பு.
உரிய நாடி சிலேத்தும நாடி.
உரிய திக்கு வடமேற்கு.
உரிய அதி தேவதை பார்வதி.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) சரக் கோள்.
உரிய குணம் வளர் பிறையில் சாந்தம், தேய்பிறையில் கொடூரம்.
உரிய ஆசன வடிவம் சதுரம்.
உரிய தேசம் யமுனா.
நட்புப் பெற்ற கோள்கள் சூரியன், புதன்.
பகைப் பெற்ற கோள்கள் இராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள்கள் செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் இரெண்டேகால் நட்சத்திர அளவு.
உரிய தெசா புத்திக் காலம் பத்து ஆண்டுகள்.
சந்திரனின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு மிதுனம், சிம்மம், கன்னி.
பகை வீடு எல்லா வீடுகளும் நட்பு ( பகைவீடு கிடையாது).
ஆட்சி பெற்ற இடம் கடகம்.
நீசம் பெற்ற இடம் விருச்சிகம்.
உச்சம் பெற்ற இடம் ரிஷபம்.
மூலதிரி கோணம் ரிஷபம்.
உரிய உப கிரகம் பரிவேடன்.
உரிய காரகத்துவம் மாத்ரு காரகன்.

மேலும் பராசக்தி, கணபதி, சுகபோசனம், வஸ்திரம், நித்திரை, சித்த சுவாதீனமின்மை, சயரோகம், சீதளநோய்கள், இடக்கண், புருவம், குடை, உத்தியோகம், கீர்த்தி, முத்து, வெண்கலம், அரிசி, உப்பு, மச்சம், உழவன், சத்திரம், சாமரம் , பலம், ஸ்நானாதிகம் இவைகளுக்கு எல்லம் சந்திரன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

எங்கள் குறைகள் எல்லாம் தீர்க்கும்
திங்களே போற்றி திருவருள் தருவாய்
சந்திரா போற்றி சத்குரு போற்றி
சங்கடந் தீர்ப்பாய் சதுரா போற்றி போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

ததிஸங்க துஷாராபம்
க்ஷீரோதார்ணவ ஸம்பவம்|
நமாமி ஸஸிநம் ஸோமம்
ஸம்போர் மகுட பூஷணம்||

சந்திர காயத்திரி மந்திரம்

Chandra Gayatri Mantra in Tamil

ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேமரூபாய தீமஹி
தந்நோ ஸோம: ப்ரசோதயாத்||


செவ்வாய்: Mars in Tamil Astrology

சோதிடவியலில் மூன்றாவது கோளான செவ்வாய்க்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

sevvai bhagavan

அரத்தன், அழலோன், அழல், அறிவன், ஆரல், உதிரன், குசன், குருதி, செந்தி, வண்ணன், சேய், நிலமகள், பௌமன், மங்கலன், வக்கிரன் ஆகியனவாகும்.

உரிய பால் ஆண் கிரகம்.
உரிய நிறம் சிவப்பு நிறம்.
உரிய இனம் சத்திரிய இனம்.
உரிய வடிவம் குள்ள மான உயரம்.
உரிய அவயம் கை, தோள்.
உரிய உலோகம் செம்பு.
உரிய மொழி தெலுங்கு, தமிழ்.
உரிய ரத்தினம் பவளம்.
உரிய ஆடை நல்ல சிவப்பு (பவள நிறம்) நிற ஆடை.
உரிய மலர் செண்பகம்.
உரிய தூபம் குங்கிலியம்.
உரிய வாகனம் செம்போத்து, சேவல்.
உரிய சமித்து கருங்காலி.
உரிய சுவை உறைப்பு.
உரிய பஞ்ச பூதம் பிருதிவி.
உரிய நாடி பித்த நாடி.
உரிய திக்கு தெற்கு.
உரிய அதி தேவதை சுப்ரமண்யர்.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) சரக் கோள்.
உரிய குணம் ராசஜம்.
உரிய ஆசன வடிவம் முக்கோணம்.
உரிய தேசம் அவந்தி.
நட்புப் பெற்ற கோள்கள் சூரியன், சந்திரன், வியாழன்.
பகைப் பெற்ற கோள்கள் புதன், இராகு, கேது.
சமனான நிலை கொண்ட கோள்கள் சனி, சுக்கிரன்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை மாதங்கள்.
உரிய தெசா புத்திக் காலம் ஏழு ஆண்டுகள்.
செவ்வாயின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு சிம்மம், தனுசு, மீனம்.
பகை வீடு மிதுனம், கன்னி.
ஆட்சி பெற்ற இடம் மேஷம், விருச்சிகம்.
நீசம் பெற்ற இடம் கடகம்.
உச்சம் பெற்ற இடம் மகரம்.
மூலதிரி கோணம் மேஷம்.
உரிய உப கிரகம் தூமன்.
உரிய காரகத்துவம் பிராத்ருக் காரகன்.

சகோதரன், பூமி, சுப்பிரமணியர், கோபம், குயவன், யுத்தம், இரத்தம், செம்பு, பவளம், அக்கினிபயம், கடன், உற்சாகம், அதிகாரம், அடுதி மரணம் இவைகளுகு எல்லாம் செவ்வாய் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

சிறப்புறு மணியே செவ்வாய்த் தேவே
குறைவிலாத ருள்வாய் குணமுடன் வாழ
மங்களச் செவ்வாய் மலரடி போற்றி
அங்காரகனே அவதிகள் நீக்குவாய் போற்றி போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

தரணி கர்ப்ப ஸம்பூதம்
வித்யுத் காந்தி ஸமப்ரபம்|
குமாரம் ஸக்திஹஸ்தம் ச
மங்களம் ப்ரணமாம்யகம்||

செவ்வாய் காயத்திரி மந்திரம்

Sevvai Gayatri Mantra in Tamil

ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ பௌம: ப்ரசோதயாத்||


புதன்: Mercury in Tamil Astrology

சோதிடவியலில் நான்காவது கோளாய் கருதப்படும் புதனுக்கு பல்வேறு தமிழ் பெயர்கள் வழங்கப்படுகிறது.

budhan bhagavan

அநூரு, அருணன், அனுவழி, கணக்கன், சௌமன், சலமன், சிந்தை, சூரியன், சௌமியன், துவன், தேர்ப்பாகன், நற்க்கொள், நிபுணன், பச்சை, பண்டதன், பாகன், புந்தி, புலவன், மதிமகன், மாலவன், மால்மேதை ஆகியனவாகும்.

உரிய பால் அலி கிரகம்.
உரிய நிறம் பச்சை நிறம்.
உரிய இனம் வைசிய இனம்.
உரிய வடிவம் உயரம்.
உரிய அவயம் கழுத்து.
உரிய உலோகம் பித்தளை.
உரிய மொழி தமிழ், கணிதம், சிற்பம், ஜோதிடம்.
உரிய ரத்தினம் மரகதம்.
உரிய ஆடை நல்ல பச்சை நிற ஆடை.
உரிய மலர் வெண்காந்தள்.
உரிய தூபம் கற்பூரம்.
உரிய வாகனம் குதிரை, நரி.
உரிய சமித்து நாயுருவி.
உரிய சுவை உவர்ப்பு.
உரிய பஞ்ச பூதம் வாயு.
உரிய நாடி பித்த நாடி.
உரிய திக்கு வடக்கு.
உரிய அதி தேவதை விஷ்ணு.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) உபயக் கோள்.
உரிய குணம் தாமசம்.
உரிய ஆசன வடிவம் அம்பு.
உரிய தேசம் மகதம்.
நட்புப் பெற்ற கோள்கள் சூரியன், சுக்கிரன்.
பகைப் பெற்ற கோள் சந்திரன்.
சமனான நிலை கொண்ட கோள்கள் செவ்வாய், வியாழன்,சனி, இராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒருமாதம்.
உரிய தெசா புத்திக் காலம் பதினேழு ஆண்டுகள்.
புதனின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 3, 6, 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு ரிஷபம், சிம்மம், துலாம்.
பகை வீடு கடகம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் மிதுனம், கன்னி.
நீசம் பெற்ற இடம் மீனம்.
உச்சம் பெற்ற இடம் கன்னி.
மூலதிரி கோணம் கன்னி.
உரிய உப கிரகம் அர்த்தப்பிரகரணன்.
உரிய காரகத்துவம் மாதுல காரகன்.

கல்வி, ஞானம், தனாதிபதி, தூதுவன், சங்கீதம், வாக்கு சாதுர்யம், ஜோதிடம், பிரசங்கம், சிற்பத்தொழில், வியாபாரங்கள், புத்திரக் குறைவு, வாத நோய், விஷரோகம் இவைகளுகு எல்லாம் புதன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

இதமுற வாழ இன்னல்கள் நீக்கு
புத பகவானே பொன்னடி போற்றி
புதந்தந்து ஆள்வாய் பண்ணொலியானே
உதவியே அருளும் உத்தமா போற்றி போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

பிரியங்கு கலிகா ஸ்யாமம்
ரூபேணாப்ரதிமம் புதம்|
ஸெளம்யம் ஸெளம்ய குணோபேதம்
தம் புதம் ப்ரணமாம்யகம்||

புதன் காயத்திரி மந்திரம்

Budhan Gayatri Mantra in Tamil

ஓம் கஜத்வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத: ப்ரசோதயாத்||


வியாழன் (குரு): Jupiter in Tamil Astrology

சோதிடவியலில் ஐந்தாவது கோளான வியாழனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

guru bhagavan

அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டனப்பான், குரு, சிகண்டிசன், சீவன், சுருகுறா, தாரபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகற்பதி, வீதகன், பொன், மறையோன், வேதன், வேந்தன் ஆகியனவாகும்.

உரிய பால் ஆண் கிரகம்.
உரிய நிறம் மஞ்சள் நிறம் (பொன்னிறம்).
உரிய இனம் பிராமண இனம்.
உரிய வடிவம் உயரம்.
உரிய அவயம் இருதயம்.
உரிய உலோகம் பொன்.
உரிய மொழி தெலுங்கு, கன்னடம்,மலையாளம்.
உரிய ரத்தினம் புஷ்பராகம்.
உரிய ஆடை பொன்னிற ஆடை.
உரிய மலர் முல்லை.
உரிய தூபம் ஆம்பல்.
உரிய வாகனம் யானை.
உரிய சமித்து அரசு.
உரிய சுவை தித்திப்பு.
உரிய தான்யம் கொத்துக்கடலை.
உரிய பஞ்ச பூதம் தேயு.
உரிய நாடி வாத நாடி.
உரிய திக்கு வடகிழக்கு( ஈசான்யம் ).
உரிய அதி தேவதை பிரம்மா, தட்சிணாமூர்த்தி.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம்) உபயக் கோள்.
உரிய குணம் சாந்தம்.
உரிய ஆசன வடிவம் செவ்வகம்.
உரிய தேசம் சிந்து.
நட்புப் பெற்ற கோள்கள் சூரியன், சந்திரன், செவ்வாய்.
பகைப் பெற்ற கோள்கள் புதன், சுக்கிரன்.
சமனான நிலை கொண்ட கோள்கள் சனி, ராகு, கேது.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒருவருடம்.
உரிய தெசா புத்திக் காலம் பதினாறு ஆண்டுகள்.
வியாழனின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 3,6,8,12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு சிம்மம், கன்னி, ரிஷபம், மிதுனம், துலாம், கும்பம்.
பகை வீடு மேஷம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் தனுசு, மீனம்.
நீசம் பெற்ற இடம் மகரம்.
உச்சம் பெற்ற இடம் கடகம்.
மூலதிரி கோணம் தனுசு.
உரிய உப கிரகம் எமகண்டன்.
உரிய காரகத்துவம் புத்திர காரகன்.

புத்திரர், பிரம்மா, ஞானம், யோகாப்பியாசம், அச்சாரியத்துவம், அட்டமா சித்திகள், அரச சேவை, இராச சன்மானம், சொர்ணம், தேன், கடலை, புத்தியுக்தி, இவைகளுக்கு எல்லாம் வியாழன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

குணமிகு வியாழக் குரு பகவானே
மணமுள வாழ்வு மகிழ்வுடன் அருள்வாய்
ப்ருகஸ்பதி வியாழப் பாகுரு நேசா
க்ரகதோஷம் இன்றிக் கடாக்ஷித்தருள்வாய் போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

தேவாநாஞ்ச ரிஷீணாஞ்ச
குரும் காஞ்சன ஸநிபம்|
பக்தி பூதம் த்ரிலோகேஸம்
தம் நமாமி ப்ருஹஸ்பதிம்||

வியாழன் காயத்திரி மந்திரம்

Guru Gayatri Mantra in Tamil

ஓம் வருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு: ப்ரசோதயாத்||


சுக்கிரன்: Venus in Tamil Astrology

சோதிடவியலில் ஆறாவது கோளான சுக்கிரனுக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

sukran bhagavan

அசுரர்மந்திரி, அநாவிலன், ஆசான், உசனன், ஒள்ளியோன், கவி, காப்பியன், சல்லியன், சிதன், சீதகன், சுங்கன், தயித்திய மந்திரி,நற்கோள், பளிங்கு, பார்கவன், பிரசுரன், பிருகு, புகர், புயல், மழைக்கோள், வெள்ளி ஆகியனவாகும்.

உரிய பால் பெண் கிரகம்.
உரிய நிறம் வெண்மை.
உரிய இனம் பிராமண இனம்.
உரிய வடிவம் சம உயரம்.
உரிய அவயம் மர்மஸ்தானம்.
உரிய உலோகம் வெள்ளி.
உரிய மொழி ஹிந்தி, சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம்.
உரிய ரத்தினம் வைரம்.
உரிய ஆடை பட்டிப் போன்றவெண்மை.
உரிய மலர் வெண்தாமரை.
உரிய தூபம் லவங்கம்.
உரிய வாகனம் குதிரை, மாடு.
உரிய சமித்து அத்தி.
உரிய சுவை புளிப்பு.
உரிய தான்யம் மொச்சை.
உரிய பஞ்ச பூதம் அப்பு.
உரிய நாடி சிலேத்தும நாடி.
உரிய திக்கு தென்கிழக்கு.
உரிய அதி தேவதை இலக்குமி, வருணன்.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) ஸ்திரக் கோள்.
உரிய குணம் ரஜசம்.
உரிய ஆசன வடிவம் ஐங்கோணம்.
உரிய தேசம் காம்போஜம்
நட்புப் பெற்ற கோள்கள் புதன், சனி, இராகு, கேது.
பகைப் பெற்ற கோள்கள் சூரியன், சந்திரன்.
சமனான நிலை கொண்ட கோள்கள் செவ்வாய்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒரு மாதம்.
உரிய தெசா புத்திக் காலம் இருபது ஆண்டுகள்.
சுக்கிரனின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 3,8ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு மேடம், விருச்சிகம், மிதுனம், மகரம், கும்பம்.
பகை வீடு கடகம், சிம்மம், தனுசு.
ஆட்சி பெற்ற இடம் ரிஷபம், துலாம்.
நீசம் பெற்ற இடம் கன்னி.
உச்சம் பெற்ற இடம் மீனம்.
மூலதிரி கோணம் துலாம்.
உரிய உப கிரகம் இந்திரதனுசு.
உரிய காரகத்துவம் களத்திர காரகன்.

களத்திரம், கிருகம், சங்கீதம், பரத நாட்டியம் போன்றவற்றில் பிரியம் ஏற்படுதல், ஆசை, ஸ்ரீ தேவதை உபசனை, அழகு, இளமை, இலக்குமி கடாட்சம், ஆகாய சமுத்திர யாத்திரைகள், இவைகளுக்கு எல்லாம் சுக்கிரன் தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

சுக்கிரமூர்த்தி சுபமிக யீவாய்
வக்கிரமின்றி வரமிகத் தருள்வாய்
வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

ஹிமகுந்த ம்ருணாலாபம்
தத்யாநாம் பரமம் குரும்|
ஸர்வஷாஸ்த்ர ப்ரவக்தாரம்
பார்கவம் ப்ரணமாம்யகம்||

சுக்கிரன் காயத்திரி மந்திரம்

Sukran Gayatri Mantra in Tamil

ஓம் அச்வ த்வஜாய வித்மஹே தநு: ஷஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்||


சனி: Saturn in Tamil Astrology

சோதிடவியலில் ஏழாவது கோளான சனிக்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

sani bhagavan

அந்தன், கதிர்மகன், கரியவன், காரி, கீழ்மகன், சுந்தில், சவுரி, சாவகன், தமணியன், நீலன், நோய்முகன், பங்கு, மந்தன், முடவன், முதுமகன், மேற்கோள் ஆகியனவாகும்.

உரிய பால் அலிக் கிரகம்.
உரிய நிறம் கருமை.
உரிய இனம் சூத்திர இனம்.
உரிய வடிவம் குள்ள உயரம்.
உரிய அவயம் தொடை,பாதம், கணுக்கால்.
உரிய உலோகம் இரும்பு.
உரிய மொழி அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம் நீலம்.
உரிய ஆடை கறுப்பு.
உரிய மலர் கருங்குவளை.
உரிய தூபம் கருங்காலி.
உரிய வாகனம் காகம், எருமை.
உரிய சமித்து வன்னி.
உரிய சுவை கைப்பு.
உரிய தான்யம் எள்.
உரிய பஞ்ச பூதம் ஆகாயம்.
உரிய நாடி வாத நாடி.
உரிய திக்கு மேற்கு.
உரிய அதி தேவதை யமன், சாஸ்தா.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) உபயக் கோள்.
உரிய குணம் தாமசம்.
உரிய ஆசன வடிவம் வில்.
உரிய தேசம் செளராஷ்டிரம்.
நட்புப் பெற்ற கோள்கள் புதன், சசுக்கிரன், இராகு, கேது.
பகைப் பெற்ற கோள்கள் சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள் குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் இரெண்டரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம் பத்தொன்பது ஆண்டுகள்.
சனியி மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு ரிஷபம், மிதுனம்.
பகை வீடு கடகம், சிம்மம், விருச்சிகம்.
ஆட்சி பெற்ற இடம் மகரம்,கும்பம்.
நீசம் பெற்ற இடம் மேடம்.
உச்சம் பெற்ற இடம் துலாம்.
மூலதிரி கோணம் கும்பம்.
உரிய உப கிரகம் குளிகன்.
உரிய காரகத்துவம் ஆயுள் காரகன்.

தீர்க்க ஆயுள், ஜீவன, இரும்பு, சேவகர் விருத்தி, களவு, ஆத்ம இம்சை, சிறைப்படல், ராஜதண்டனை, வீண்வார்த்தை, சித்தப்பிரம்மை, வாயடித்தல், மயக்க போஜனம், அவயக் குறைவு, மரவேலை, ஆளடிமை இவைகளுக்கு எல்லாம் சனி தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்
சச்சரவின்றிச் சாகா நெறியில்
இச்செகம் வாழ இன்னருள் தருவாய் போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

நீலாஞ்ஜன ஸமாபாஸம்
ரவிபுத்ரம் யமாக்ரஜம்|
ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி ஸநைச்சரம்||

சனி காயத்திரி மந்திரம்

Sani Gayatri Mantra in Tamil

ஓம் காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்||


ராகு: Rahu in Tamil Astrology

சோதிடவியலில் எட்டாவது கோளான இராகுவிற்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

rahu bhagavan

கரும்பாம்பு, தமம், மதாப்பகை, மதாயுணி ஆகியனவாகும்.

உரிய பால் பெண் கிரகம்.
உரிய நிறம் கருமை.
உரிய இனம் சங்கிரம இனம்.
உரிய வடிவம் உயரம்.
உரிய அவயம் தொடை,பாதம், கணுக்கால்.
உரிய உலோகம் கருங்கல்.
உரிய மொழி அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம் கோமேதகம்.
உரிய ஆடை கறுப்புடன் சித்திரங்கள் சேர்ந்தது.
உரிய மலர் மந்தாரை.
உரிய தூபம் கடுகு.
உரிய வாகனம் ஆடு.
உரிய சமித்து அறுகு.
உரிய சுவை கைப்பு.
உரிய தான்யம் உளுந்து.
உரிய பஞ்ச பூதம் ஆகாயம்.
உரிய நாடி பித்த நாடி.
உரிய திக்கு தென் மேற்கு.
உரிய அதி தேவதை காளி,துர்க்கை, கருமாரியம்மன்.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) சரக் கோள்.
உரிய குணம் தாமசம்.
உரிய ஆசன வடிவம் கொடி.
உரிய தேசம் பர்பர.
நட்புப் பெற்ற கோள்கள் சனி, சசுக்கிரன்.
பகைப் பெற்ற கோள்கள் சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள் புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம் பதினெட்டு ஆண்டுகள்.
இராகுவின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் கன்னி.
நீசம் பெற்ற இடம் ரிசபம்.
உச்சம் பெற்ற இடம் விருச்சிகம்.
மூலதிரி கோணம் கும்பம்.
உரிய உப கிரகம் வியதீபாதன்.
உரிய காரகத்துவம் பிதாமஹன்.

பிதாமஹன் அதாவது பிதுர் பாட்டன் வம்சம், களவு, சேவகத்தொழில், பரதேசவாசம், சாதிக்கு விரோதமான தொழில், விகட வினோத வித்தைகள், குஷ்டம், நாள்பட்ட ரோகம், விஷ்பயம், அங்கவீனம், வெகு பேச்சு, ஜல கண்டம், வெட்டுக்காயம், சிரைப்படல் இவைகளுக்கு எல்லாம் இராகு தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

அரவெனும் ராகு அய்யனே போற்றி
கரவா தருள்வாய் கஷ்டங்கள் நீக்கி
ஆகவருள் புரி அனைத்திலும் வெற்றி
ராகுக்கனியே ரம்மியா போற்றி போற்றி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

அர்த்தகாயம் மஹாவீர்யம்
சாந்த்ராதித்ய விமர்தநம்|
ஸிம்ஹிகா கர்ப்ப ஸம்பூதம்
தம் ராஹும் ப்ரணமாம்யஹம்||

இராகு காயத்திரி மந்திரம்

Rahu Gayatri Mantra in Tamil

ஓம் நகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராஹு: ப்ரசோதயாத்||


கேது: Ketu in Tamil Astrology

சோதிடவியலில் ஒன்பதாவது கோளான கேதுவிற்கு தமிழில் பல்வேறு பெயர்கள் வழங்கப்படுகிறது.

ketu bhagavan

கதிர்ப்பகை, சிகி, செம்பாம்பு, மதிப்பகை ஆகியனவாகும்.

உரிய பால் அலிக் கிரகம்.
உரிய நிறம் சிவப்பு.
உரிய இனம் சங்கிரம இனம்.
உரிய வடிவம் உயரம்.
உரிய அவயம் கை, தோள்.
உரிய உலோகம் துருக்கல்.
உரிய மொழி அன்னிய மொழிகள்.
உரிய ரத்தினம் வைடூரியம்.
உரிய ஆடை புள்ளிகளுடன் சிவப்பு (பல நிறங்கள்).
உரிய மலர் செவ்வல்லி.
உரிய தூபம் செம்மரம்.
உரிய வாகனம் சிம்மம்.
உரிய சமித்து தர்ப்பை.
உரிய சுவை உறைப்பு.
உரிய தான்யம் கோதுமை.
உரிய பஞ்ச பூதம் ஆகாயம்.
உரிய நாடி பித்த நாடி.
உரிய திக்கு வட மேற்கு.
உரிய அதி தேவதை விநாயகர், சண்டிகேச்வரர்.
உரிய தன்மை (சர – சத்திர – உபயம் ) சரக் கோள்.
உரிய குணம் தாமசம்.
உரிய ஆசன வடிவம் மூச்சில்.
உரிய தேசம் அந்தர்வேதி.
நட்புப் பெற்ற கோள்கள் சனி, சசுக்கிரன்.
பகைப் பெற்ற கோள்கள் சூரியன், சந்திரன், செவ்வாய்.
சமனான நிலை கொண்ட கோள்கள் புதன்,குரு.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் கால அளவு ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை வருடம்.
உரிய தெசா புத்திக் காலம் ஏழு ஆண்டுகள்.
கேதுவின் மறைவு ஸ்தானம் லக்கினத்துக்கு 8, 12ல் இருந்தால் மறைவு.
நட்பு வீடு மிதுனம், கன்னி, துலாம், தனுசு, மகரம், மீனம்.
பகை வீடு கடகம், சிம்மம்.
ஆட்சி பெற்ற இடம் மீனம்.
நீசம் பெற்ற இடம் சிம்மம்.
உச்சம் பெற்ற இடம் கும்பம்.
மூலதிரி கோணம் சிம்மம்.
உரிய உப கிரகம் தூமகேது.
உரிய காரகத்துவம் மதாமஹன்.

மதாமஹன் அதாவது மாதுர் பாட்டன் வம்சம், கபடத்தொழில், கீழ்குலத்தொழில், விபச்சாரம், பாபத்தொழில், பரதேச ஜீவனம், அக்னிகண்டம் இவைகளுக்கு எல்லாம் கேது தான் காரகன்.

தியான சுலோகம் (தமிழ்)

கேதுத் தேவே கீர்த்தித் திருவே
பாதம் போற்றி பாபம் தீர்ப்பாய்
வாதம் வம்பு வழக்குகளின்றி
கேதுத் தேவே கேண்மையாய் ரக்ஷி

தியான சுலோகம் (சமஸ்கிருதம்)

பலாஷ புஷ்ப ஸங்காஷம்
தாரகா க்ரஹ மஸ்தகம்|
ரௌத்ரம் ரௌத்ராத்மகம் கோரம்
தம் கேதும் ப்ரணமாம்யஹம்||

கேது காயத்திரி மந்திரம்

Ketu Gayatri Mantra in Tamil

அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது: ப்ரசோதயாத்||

Reference: http://thamilarjothidam.blogspot.com



One thought on "ஜோதிடம்: கோள்களும் அவற்றின் தன்மைகளும்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 7, 2024
திருமாங்கல்யம்
  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil