×
Tuesday 10th of December 2024

துளசி தீர்த்தம், தர்ப்பை புல், கற்பூர தீபாராதனை மகிமை


Thulasi Theertham Benefits in Tamil

துளசி தீர்த்தம் மகிமை

🌸 இந்து சமயத்தில் துளசிச்செடி புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது. அபிஷேக தீர்த்தங்களிலும், தெய்வீக மூர்த்திகளுக்கு மாலையாக அணிவிப்பதிலும், பூசைகளின் பொது அர்ச்சனையாக சமர்ப்பிப்பதிலும், துளசியிலை முக்கியத்துவம் பெறுகிறது.

🌸 மிகத் தொன்மையான காலத்தில் கிரேக்க நாட்டுத் தேவாலயங்களில் துளசிகலந்த புனித நீர் மக்களுக்கு தீர்த்தமாக விநியோகிக்கப்பட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் காணப்படுகின்றன.

🌸 துளசி எல்லா இடங்களிலும், பலதரப்பட்ட காலநிலைகளிலும் வளரக் கூடியதாகும். துளசி அதிகமாக வளரும் பகுதிகளில் உள்ள சயனைட் போன்ற விசவாயுக்களை உள்ளெடுத்து கூடுதலான ஒட்சிசன் நிறைந்த வாயுவை வெளியிடும். இது மனிதர்கள் சுவாசத்திற்கு சிறந்த புத்துணர்ச்சி தரும். அத்துடன் நுளம்புகள் துளசிச்செடி உள்ள சுற்றாடலில் காணப்படுவதில்லை.

🌸 துளசியில், வெண் துளசி, கருந்துளசி என்ற இருவகை பிரசித்தமானவை. இவற்றுள் கருந்துளசியே மிகச்சிறந்ததாக சொல்லப்படுகிறது.

🌸 துளசி ஊறப் போட்ட தூய நீரை உட்கொண்டு வந்தால் இருதய நோய்கள் குணமாவதுடன் இருதயமும் வலிமை பெறும். கோவில்களில் துளசி கலந்த புனித நீர் தீர்த்தமாக விநியோகிப்பதை நாம் அறிவோம்.

🌸 ஹரி பக்தி சுதோயம் என்னும் நூலில் துளசியின் மகிமை பற்றி விரிவாக சொல்லப்பட்டுள்ளது. துளசி இலையின் நுனியில் நான் முகனும், மத்தியில் திருமாலும், அடியில் சிவனும், மற்றைய பகுதிகளில் பன்னிரண்டு ஆதித்யர்களும், பதினோரு ருத்திரர்களும், எட்டு வசுக்களும், இரு அசுவினி தேவர்களும் எழுந்தருளியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த துளசி செடியை வணங்கிவந்தால் இவர்களை வணங்கியதற்க்கு சமனாகும் என்றும் சொல்லப் பட்டுள்ளது.

Darbha Grass in Tamil

தர்ப்பையின் மகிமை

🌸 சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாய் இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. கிரகண காலங்களில் சேமிக்கும் உணவு பதார்த்தங்கள் இருக்கும் பாத்திரங்களில் தர்ப்பை புல்லை போட்டு வைத்தால் அவை பாதிப்படையாமல் இருக்கும் என்பார்கள்.

🌸 அரிதான இடங்களில் மட்டுமே வளரும் புல் வகை தாவரமான தர்ப்பையில் பலவகைகள் உண்டு.

🌸 தர்ப்பையால் பவித்திரம் (மோதிரம் போன்ற வளையம்) செய்து , ஆண்கள் வலது மோதிர விரலிலும், பெண்கள் இடது மோதிர விரலிலும், அணிந்து கொண்டு சங்கல்பம் செய்த பின்னரே எந்த காரியத்தையும் ஆரம்பிப்பார்கள்.

🌸 நல்ல நாள் நட்சத்திரம் பார்த்து தான் தரப்பை புல் அரிவார்கள். “தீர்த்தத்தின் மறு ரூபமே தர்ப்பை, தீர்த்தம் வேறு தர்ப்பை வேறல்ல” என்கிறது வேதம். இதற்காக ஒரு புராணக் கதையும் சொல்லப்படுகிறது,

🌸 விருத்திராசுரன் என்ற அசுரன், தேவர்களுக்கும், பூலோக உயிர்களுக்கும் பெரும் கொடுமைகள் புரிந்து வந்தான். இதனால் கோபங்கொண்ட தேவேந்திரன். தனது வஜ்ஜிராயுதத்தை பிரயோகித்து அவனை அழிக்க முயன்றும் பலனில்லை, அசுரன் மீண்டும் மீண்டும் தேவேந்திரனை போருக்கு அழைத்தான், திகைத்தான் இந்திரன். இதைக் கண்ட பிரம்மா, வஜ்ஜிராயுதத்தை தனது கமண்டல தீர்த்தத்தில் நனைத்து கொடுத்து இப்போது பிரயோகிக்குமாறு கூற தேவேந்திரனும் அவ்வாறே செய்தான்.

🌸 தீர்த்தத்தின் மகிமையால் பலம் பெற்ற வஜ்ராயுதம் விருத்திராசுரனின் அங்கங்களை கண்ட துண்டமாக வெட்டியது. வஜ்ஜிராயுதத்தின் பலத்துக்கு காரணம் புனித தீர்த்தங்களே என்று அறிந்த விருத்திராசுரன், உலகிலுள்ள எல்லா தீர்த்தங்களுக்கும் சென்று, ரத்தம் வழியும் தனது உடலை நனைத்து தீர்த்தங்களின் புனிதத்தை மாசுபடுத்த முயன்றான். இதைக் கண்ட பிரம்மா தீர்த்தங்களை எல்லாம் தர்ப்பை புட்களாக மாற்றி விட்டாராம்.

Karpoora Deeparadhana in Tamil

கற்பூர தீபாராதனையின் மகிமை

🌸 மூலஸ்தானத்தின் கருவறையில் வெளி உலகத்திலுள்ள காற்று, ஒளி இலகுவாக உட்புக முடியாத படி அமைக்கப் பட்டிருக்கும். அங்கு ஒரு இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.

🌸 நடை திறந்து திரை விலகி மணி ஓசையுடன் தீபாராதனை நடை பெறும் போது இருள் நிறைந்த மூலஸ்தானத்தின் இருளானது நீங்கி தூய ஒளிப்பிளம்பான இறைவனை நாம் காணலாம். இதே போல்,

🌸 எண்ணங்கள், சிந்தனைகள் என்று சதா அலை பாயும் எங்கள் உள் மனதிலும் இறைவன் உறைந்திருப்பான். அப்படி இருக்கும் இறைவனை உலக இன்பங்கள் என்ற எண்ணங்களான இருள் மூடி இருக்கும் அந்த இருள் அகன்றால் எங்கள் உள் மனதிலுள்ள இறைவணக் காணலாம் என்பதையே கற்பூர தீப ஆராதனை உணர்த்துகிறது.

🌸 கற்பூரம் தன்னை முழுமையாக அழித்துக் கொண்டு, பூரணமாய் கரைந்து காணாமல் போகிறது. அது போல இறை இன்ப ஒளியில், அதாவது பூரண சோதியாகிய இறைவனுடன் நாமும் ஐக்கியம் ஆகிவிடவே பிரப்பெடுத்துள்ளோம் என்னும் தத்துவத்தையும் கற்பூர தீபம் எங்களுக்கு உணர்த்துகிறது.

🌸 இறைவனுக்கு எல்லாத்தையும் அர்ப்பணித்து மன நிறைவடையாமல் தன்னையே அர்ப்பநிப்பதையே அதாவது ஆத்ம சமர்ப்பணம் செய்வதையே கற்பூர தீபாராதனையும், அதை கண்ணில் ஒற்றிக் கொண்டு இறைவனின் பாதார விந்தங்களில் நாம் வீழ்ந்து வணங்குவது உணர்த்துகிறது.

இதையே,

தீதனையா கற்பூர தீபமென நான் கண்ட
ஜோதியும் ஒன்றித் துரிசறுப்ப – தெந் நாளோ

என்கிறார் தாயுமானவர்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 7, 2024
திருமாங்கல்யம்
  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil