×
Monday 9th of December 2024

பூரணை, புஷ்கலையை ஐயப்பன் மணந்த கதை


Poorna, Pushkala, Dharma Sastha Marriage Story in Tamil

பூரணை, புஷ்கலையை ஐயப்பன் மணந்த வரலாறு

🛕 பந்தள மன்னர் அரண்மனையில் வளர்ந்து வந்த சாஸ்தாவின் அம்சமான ஐயப்பன், தன் இளவயதில், இப்பகுதியில், வீர விளையாட்டுகளை கற்க வந்தார். அதன் காரணமாக, இங்கு முதன்முதலில், சாஸ்தாவிற்கு கோவில் எழுந்ததாகவும், பின், அவரது வரலாற்று நிகழ்வுகள் நடந்த குளத்துப்புழா, ஆரியங்காவு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் கோவில்கள் எழுப்பப்பட்டதாகவும், இறுதியாக அவர் தவம் மேற்கொண்ட சபரிமலையில் கோவில் தோன்றியதாகவும் செவிவழி கதைகள் உண்டு. தர்மசாஸ்தாவை பற்றி சொல்லப்படும் கதைகளில் மகேஸ்வரனின் புத்திரனாகிய அவர் குறுகிய காலத்திலேயே சகல சாஸ்த்திரங்களையும் பிரம்மாவிடம் கற்று “மஹா சாஸ்த்ரு” என்ற நாமத்தையும் பெற்றார்.

🛕 தர்மசாஸ்தா வேறு, ஐயப்பன் வேறு அல்ல என்றாலும் தர்மசாஸ்தாவின் திரு அவதாரமே ஐயப்பன். ஐயப்பனாக நாம் இன்று வணங்கும் திருமூர்த்தி தர்மசாஸ்தாவின் திரு அவதாரமாகும். தர்மசாஸ்தா தர்மத்தை நிலை நாட்டுவதற்காகத் தோன்றியவர். அவர் எட்டு அவதாரங்கள் எடுத்ததாக சொல்லப்படுகிறது.

🛕 சம்மோஹன சாஸ்தா: வீட்டையும், குடும்பத்தையும் காக்கும் தெய்வம் இவர்.

🛕 கல்யாண வரத சாஸ்தா: தேவியருடன் காட்சி தரும் இவரை வழிபட்டால் திருமணத்தடைகள், தோஷங்கள் விலகும்.

🛕 வேத சாஸ்தா: சிம்மத்தில் அமர்ந்திருக்கும் இவரை வழிபட்டால் கல்வி, முதலான பல கலைகளில் சிறந்து விளங்கலாம்.

🛕 ஞான சாஸ்தா: தட்சிணாமூர்த்தியைப் போன்ற ஞானகுருவான இவரை வழிபட்டால் உள்ளார்ந்த ஞானம் சிறக்கும்.

🛕 பிரம்ம சாஸ்தா: குழந்தைச் செல்வம் பெற இவரை வழிபடலாம்.

🛕 மஹா சாஸ்தா: வாழ்வில் முன்னேற இவரை வழிபடலாம்.

🛕 வீர சாஸ்தா: ருத்ர மூர்த்தியான இவரை வணங்குவதால் தீமைகள் அழியும்.

🛕 தர்ம சாஸ்தா: இவரே ஐயப்பனின் திரு அவதாரம். சபரிமலையில் காட்சி தருபவர் இவரே!

🛕 எல்லா கதைகளும் செவிவழி கதைகளாகவே வந்திருக்கின்றன. பலவாறு கதைகளை பேசப்பட்டாலும், தர்மசாஸ்தா அவதரித்து கலியுகத்தில் அருள்பாலிப்பது என்பது உண்மையே. முதலாவது தர்மசாஸ்தாவான புஷ்கலையை ஐயன் திருமணம் செய்தது பற்றிய செவிவழி வந்த கதையை பார்க்கலாம். நெசவுத்தொழில் செய்துவந்த மதுரையில் குடியேறிய குலத்தவர்கள் நெய்து கொடுக்கும் பட்டாடைகளைத்தான் சேரமன்னர்கள் அணிவார்கள். அப்படியான ஒரு காலகட்டத்தில் சௌராஷ்டிரா நெசவு வணிகர் ஒருவர், தான் நெய்த பட்டாடைகளை மன்னனுக்கு எடுத்து செல்லும் போது தன்னுடைய மகளையும் உடன் அழைத்து சென்றார் .  செல்லும் வழியில் “ஆரியங்காவு” என்னும் ஊர் வரும்போது இருட்டி விடுகிறது.

🛕 அந்த காலத்தில் கோவில்கள் எல்லாம் அன்ன சத்திரங்களாகவும் தங்கும் இடங்களாகவே இருந்திருக்கின்றன. அதனால் நெசவு வணிகரும், அவரது மகளும் அங்கேயே தங்கி விடுகின்றனர். நெசவு வணிகனின் மகளான புஷ்கலை அங்கிருந்த  ஐயப்பனின் உருவத் திருமேனியைக் கண்டவுடன் ஐயன்மேல் அளவற்ற காதலும், பக்தியும் கொள்கிறாள்.  மறுநாள் சேரமன்னனைக் காணத் தந்தை கிளம்பும் சமயம், தந்தையுடன் செல்ல மறுக்கிறாள். கோவிலிலேயே தான் தங்கப் போவதாய்ப் பிடிவாதமாய்ச் சொல்லுகிறாள். வணிகர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் மகள் கேட்கவில்லை. நீங்கள் திரும்பும்போது உங்களுடன் வருகிறேன் என்றே திரும்பத் திரும்பச் சொல்கிறாள்.  என்ன செய்வதென்று புரியாத வணிகர், அந்தக் கோவிலின் மேல்சாந்தியின் வேண்டுகோளின்படி, மகளைக் கோவிலிலேயே மேல்சாந்தியின் பொறுப்பில் விட்டுவிட்டு அரை  மனதுடன் மன்னனைகாண  செல்லுகிறார்.

🛕 அந்த அடர்ந்த காட்டுவழியே தனியே சென்ற நெசவு வணிகன், ஒரு ஒற்றை யானையிடம் சிக்கிக்கொள்கிறார் .உடனே பயந்து ,தான் ஆரியங்காவில் பார்த்த அய்யப்பனை நினைத்து, ஐயப்பா காப்பாற்று என கதறுகிறார். அப்பொழுது அங்கே அழேகே உருவான ஒரு வேடன் வருகிறான். அந்த யானையை அடக்குகிறான். இதைக்கண்டு மகிழ்ச்சியுற்ற நெசவு வணிகன் தன்னிடம் இருந்த உயர்ந்த பட்டாடை ஒன்றினை பரிசாக கொடுக்கிறான் மனம் மகிழ்ந்த வேடுவ வாலிபன், உடனே அதை அணிந்து அழகே உருவாக காட்சிகொடுத்து சிரித்துக்கொண்டு இருக்கிறான். இளைஞனின் செளந்தரியத்தைப் பார்த்து வியந்த வணிகர், “மாப்பிள்ளை போல் இருக்கிறாய்? வேறு என்ன வேண்டும் உனக்கு?” எனக் கேட்கிறார். “நான் கேட்பதைக் கொடுப்பீர்களா?” என வேடன் கேட்க, “என் உயிரைக் காத்த உனக்கு என்ன வேண்டுமானாலும் தருவேன்!” என வணிகர் சொல்கின்றார். “உங்கள் மகளை எனக்குத் திருமணம் செய்து கொடுங்கள்” என வேடன் கேட்க, தனக்கு மகள் இருப்பது இவனுக்கு எவ்வாறு தெரியும் என வணிகர் வியப்பில் ஆழ்ந்தார். அவனிடம் சரி எனச் சம்மதிக்க, வேடன் அவரை நீங்கள் திரும்பும்போது என்னை ஆரியங்காவு கோவிலில் சந்தியுங்கள் எனச் சொல்லிவிட்டுச் சென்று விடுகிறான்.

🛕 மன்னனைக் கண்டு திரும்பிய வணிகர் ஆரியங்காவுக் கோவிலை அடைகிறார். மகள் அங்கே இல்லை. எங்கேயும் இல்லை. இரவு முழுதும் தேடுகிறார். மேல்சாந்தியும் தேடுகிறார். இரவாகிவிடுகிறது. மேல்சாந்தி, அசதி மேலிட அப்படியே தூங்கிவிடுகிறார். தூக்கத்தில் ஐயப்பன் கனவில் தோன்றி, புஷ்கலை தன்மீது கொண்ட பக்தியினால் அவளைத் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொண்டதாய்ச் சொல்கின்றான் ஐயன். திடுக்கிட்டு எழுகிறார் மேல்சாந்தி. மேல்சாந்தி, வணிகர் உள்ளிட்ட அனைவரும் காலையில் கோவிலை திறந்து ஐயன் சந்நிதியை பார்த்தார்கள். என்ன அதிசயம்! காட்டில் வேடனுக்கு வணிகர் கொடுத்த பட்டாடை ஐயன் இடுப்பில் காணப்பட்ட்டது. அதே மாப்பிள்ளைக் கோலம். வணிகர் தன் மகளின் தீராத பக்தியையும், அவளின் பக்திக்குக் கிடைத்த முக்தியையும் புரிந்து கொள்ளுகின்றார்.

🛕 இதேப்போல் மற்றொரு செவிவழி கதையும் இருக்கிறது. அது நடைபெற்ற இடமும், புவியில் அமைப்பில் வெகுதொலைவில் இருந்தாலும், பெயர்களும் சம்பவங்களும் ஒற்றுமையாகவே இருக்கின்றன.

🛕 நேபாள நாட்டில் மந்திர தந்திரங்களில் சிறந்த பளிஞன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவன் காளி உபாசகனாகவும், மந்திர சாஸ்திரத்தில் பண்டிதனாகவும் இருந்தான். அவனுக்கு புஷ்கலை என்னும் மகள் இருந்தாள் பளிஞன் என்றும் சிரஞ்சீவியாக இருக்க அநேக கன்னி பெண்களை காளிக்கு பலியிட்டுவந்தான். அந்த நாட்டில் சிவனிடத்தில் பக்திக்கொண்ட கன்னிகா என்னும் பெண் வசித்துவந்தாள். பக்தியில் சிறந்த அவளை காளிக்கு பலியிட பளிஞன் முடிவு செய்தான். கருணையே வடிவான அந்த சிவன், பளிஞனின் கொட்டத்தை அடக்கவும் கன்னிகாவை காப்பாற்றவும், குமாரனாக இருந்த சாஸ்தாவையும், கருப்பண்ண ஸ்வாமியையும் கன்னிகாவிற்கு பாதுகாப்பாக அனுப்பி மறைத்து வைத்தார்.

🛕 சாஸ்திரத்தில், மந்திரக்கலைகளில் வல்லவரான தர்ம சாஸ்தா பளிஞனின் பல்வேறு சூழ்ச்சிகளையும் மந்திர வித்தைகளையும் தவிடு பொடியாக்கினார். கடைசியில் தன்னுடைய சுயரூபம் காட்ட, பளிஞன் அவரிடம் மன்னிப்பு கேட்டு தன்னை ரட்சிக்குமாறு வேண்டினான். தன் மகளான புஷ்கலையை மனம் முடிக்கவேண்டும் என்றும் வேண்டினான். அவரும் அவ்வாறே செய்து புஸ்கள காந்தன் என்ற பெயரும் பெற்றார் என்றும் ஒரு செவிவழிக்கதை உண்டு.

🛕 இனி, பூரணை மற்றும் புஷ்கலை பற்றிய தர்மசாஸ்தாவின் அவதார தத்துவத்தை பற்றி பார்க்கலாம். முன்னொரு காலத்தில் சத்ய பூர்ணர் என்றோரு மகரிஷி வசித்துவந்தார். அவருக்கு பூரணை, புஷ்கலை என்ற இரு மகள்கள் இருந்தனர். அவர்கள் ஹரியினுடைய மகனை மனக்கவேண்டி கடுமையாக விரதம் இருந்தார்கள். இறைவன் அவர்களுடைய தவத்தை மெச்சி உங்கள் இவருடைய எண்ணங்களும் அடுத்த பிறவியில் ஈடேறும் என்று கூறி மறைந்தார். அவர்களில் ஒருத்தி நேபாள மன்னனுடைய மகளாக பிறந்து தர்ம சாஸ்தாவை மணம் முடிக்கிறாள். மற்றொருத்தி இப்பொழுது மலையாள தேசத்தில் இருக்கும் கொச்சியானது அப்பொழுது வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்பட்டது. அதை பிஞ்சகன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். அவனுக்கு மகளாக பூரணை என்ற திருநாமத்தில் வளர்ந்துவந்தாள். மணப்பருவம் எய்திய பூரணை மற்றும் பரிவாரங்களுடன் வேட்டைக்கு சென்ற மன்னன் வேட்டையாடுதலில் தன்னை மறந்து ,தன்னுடன் வந்தவர்களை பிரிந்து வெகுதூரம் வந்துவிட்டான். இரவு நெருங்கியபோதுதான் தான் தனித்துவிடப்பட்டதை மன்னன் அறிந்தான்.

🛕 திடீரென அந்த இடத்தில கூச்சல், அழுகை, ஆர்ப்பாட்டமென எல்லா வீடும் அல்லோகலப்பட்டது. சுற்றும் முற்றும் பார்த்தால், அங்கு ஒரு சுடுகாடும், அங்கிருக்கும் பூதங்களும், பேய்களும் ஆட்டம் போட்டு பாட்டுப்பாடி களியாட்டம் ஆடிக்கொண்டிருந்தன. இதைக்கண்ட மன்னன் கதிகலங்கி போய் பூதநாதனாகிய தர்ம சாஸ்தாவை நினைத்து பிரார்த்தனை செய்தான்.

பூதநாதனே சரணம்,
மோகினி மைந்தனே சரணம் ,
செண்டாயுதத்தை ஏந்தியவனே சரணம் ,

🛕 என பலவாறு வேண்டி துதித்தான். உடனே ஐயன் அங்கே வந்து தன் அருட்பார்வையால் பூதகணங்களை நோக்க, அவரைக்கண்ட மாத்திரத்தில் அவல்யெல்லாம் திக்கு தெரியாமல் ஓடி மறைந்தன பயம் வேண்டாம் என அபாயம் கொடுத்த தர்ம சாஸ்தா மன்னனை தன் குதிரையில் ஏற்றி பத்திரமாக அரண்மனைக்கு கொண்டு சென்று விட்டுவிடுகிறார். மனம் மகிழ்ந்த மன்னன் திருமண வயதில் இருக்கும் தன்மகள் பூரணையை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று அய்யனிடம் வேண்டுகிறார். தர்மசாஸ்தாவான அய்யன், அவளின் பிறப்பு ரகசியத்தையும் தன்னை மணப்பதற்காகவே அவள் பிறந்து தனக்காக காத்து இருக்கிறாள் என்பதனையும் உணர்த்தி, பூரணையை மணம் முடித்து ஹரிஹராத்மஜனான தர்மசாஸ்தா கயிலாயம் சென்றடைந்தார். அங்கு, மகாதேவரின் ஆணைக்குட்பட்டு பூதகணங்களுக்கு தலைவணங்கி அவற்றை வழிநடத்தி, பூதநாதன் என்று திருநாமம் பெற்று பூரணை, புஷ்கலை சமேதனாக எழுந்தருளினார். தர்மசாஸ்தா, இவருக்கு சத்யகன் என்ற புத்திரனும் உண்டு அவனை செல்லப்பிள்ளை என்றும் கைலாயத்தில் அழைப்பார்கள்.

🛕 இப்படி இருக்க பூரணயை அய்யன் திருமணம் செய்ததை கேள்விப்பட்ட புஷ்கலையின் தந்தை பளிஞன், ஆவேசம் கொண்டு தன்மகளிடம் முறையிடுகிறான். முற்பிறவியை தன் ஞானதிருஷ்டியினால் அறிந்துக்கொண்ட புஷ்கலை ஏதும் அறியாததைப்போல மௌனம் சாதிக்கிறாள். இதனால் கோபங்கொண்ட பளிஞன் தர்மசாஸ்தாவிடமே சென்று, நீ செய்தது சரியோ என முறையிடுகிறான். ஒரு தந்தையாக பளிஞனின் கோபம் நியமானது என உணர்ந்த அயன் மெளனமாக இருக்க, மேலும் கோபங்கொண்ட பளிஞன் தர்ம சாஸ்தாவான அவனுக்கு சாபம் கொடுக்கிறான். ஒரு பெண்ணுக்கு துரோகம் செய்து மற்றொரு பெண்ணை மணந்த நீ பூலோகத்தில் ஜெனித்து பிரம்மச்சாரியாகவும் யோகியாகவும் இருக்க கடவாய் என சாமிட்டார்.

🛕 அதையும் சந்தோஷமாக புன்முறுவலோடு ஏற்றுக்கொண்ட அய்யன் பளிஞனே! நான் பூவுலகில் மானிடனாக வாழவேண்டிய கட்டாயம் ஒன்று இருக்கிறது. அதில் நான் பிரம்மச்சாரியாகவும் இருக்கவேண்டும். இப்பொழுது உன் சாபம் அதை மிகவும் எளியதாக்கி விட்டது. அப்பொழுது நீயே பந்தள தேசத்து அரசனாக வந்து என் வளர்ப்பு தந்தையுமாய் ஆவாய். நான் என்னுடைய அவதார நோக்கத்தை பூர்த்தி செய்ய நீயே உறுதுணையாக இருப்பாய் என்று கூறி பளிஞனுக்கு அருள்பலித்தார். இன்றும் தர்மசாஸ்தா, பூரணை, புஷ்கலை திருக்கல்யாணத்திற்கு மதுரையிலிருந்து சௌராஸ்டிர மக்கள் சீர் கொண்டு போவதை வழக்கத்தில் வைத்திருக்கின்றனர்.

 

Also, read



3 thoughts on "பூரணை, புஷ்கலையை ஐயப்பன் மணந்த கதை"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஆகஸ்ட் 8, 2024
ஸ்ரீ ஷீரடி சாய்பாபாவின் அற்புதங்கள்
  • ஜூலை 14, 2024
குரு ராகவேந்திர சுவாமி பிருந்தாவன தீர்த்த யாத்திரை
  • ஜனவரி 8, 2024
நடராஜர் பற்றிய தகவல்