×
Wednesday 11th of December 2024

நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள்


7 Chakras in Our Body in Tamil

உடலில் உள்ள 7 சக்கரங்கள்

🛕 நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள் பற்றிய சிறு குறிப்புகள்:

மூலாதாரம்

🛕 முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது. உடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூல காரணமாக விளங்குவதால் மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறது. சிறுநீரகங்களுக்கு மேலுள்ள அட்ரீனல் சுரப்பிகள் இதன் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கின்றன. சிறுநீரகங்கள், சிறுநீர்ப்பை, முள்ளந்தண்டு ஆகியவற்றையும் மூலாதாரச் சக்கரம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது.

ஸ்வாதிஷ்டானம்

🛕 இது பாலியல் உணர்வுகளை தூண்டும் சக்கரம். தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. பாலியல் சக்தி இதில்தான் மையம் கொண்டிருக்கிறது. பாலியல் சக்தியைக் கொடுப்பதிலும் பெறுவதிலும் இதற்கு முக்கிய பங்கு உண்டு. ஈகோவிற்கும் இந்த சக்திதான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது. பாலியல் சுரப்பிகளின் மீது இது ஆதிக்கம் செலுத்துகிறது. உற்பத்தி உறுப்புகள், கால்கள் இதன் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.

மணிபூரகம்

🛕 சோலார் ப்ளெக்ஸஸ் என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்று மேலே இது இருக்கிறது. உடலின் மையமாக இதனை கருதலாம். இந்த பகுதியில் இருந்துதான் உடல் இயக்கச் சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்குதான் கருக்கொள்கிறது. அதனால்தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோ ஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம், என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில்தான் செயல்படுகிறது. இரைப்பை, கல்லீரல், பித்தப்பை, மண்ணீரல் ஆகியவை இதன் கட்டுப்பாட்டில்தான் செயல்படுகின்றன.

அனாகதம்

🛕 இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம், இரக்கம், சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள், இரத்த ஓட்டம், கல்லீரல் ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

விசுத்தி

🛕 இதற்கு குரல்வளைச் சக்கரம் என்றொரு பெயரும் உண்டு. தொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல் ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக்கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான் அறிகிறோம். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள் இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன.

ஆக்ஞா சக்கரம்

🛕 இதை நெற்றிக்கண் சக்கரம் என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்று மேலாக அமைந்திருக்கிறது. தொலை உணர்தல் (Telepathy) தொலை அறிதல் போன்ற சக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை, ஆகியவற்றின் இருப்பிடம் இது. இதன் மூலம்தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக் கண் திறக்கின்ற போது ஆன்மீகக் கண் திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள். பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்கு, காதுகள் ஆகிய அவயங்கள் இதன் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவை.

சகஸ்ரஹாரம்

🛕 இதற்கு தாமரைச் சக்கரம் என்ற பெயரும் உண்டு. இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. இந்தச்சக்கரத்தின் மூலம்தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும். பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்துகின்ற சக்கரம் இது. என்ன நடக்கப் போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்துதான் கிடைக்கிறது. பீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல்பகுதி இதன் ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

Also, read



2 thoughts on "நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 7, 2024
திருமாங்கல்யம்
  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil