×
Wednesday 4th of December 2024

அறுகம்புல் – ஆன்மிகமும் அறிவியலும்


Arugampul Spiritual & Scientific Benefits in Tamil

அறுகம்புல்

🛕 அறுகம்புல் சிறு செடி. புல் வகையைச் சேர்ந்தது. பசுமையான அகலத்தில் குறைந்த, நீண்ட கூர்மையான இலைகளை கொண்ட தாவரம். தண்டு குட்டையாக இருக்கும். ஈரமான இடங்களில் வளரும். தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் இது வளரும். இதன் தாவரவியல் பெயர் cynodon dactylon . சமஸ்கிருதத்தில் துர்வா என்றும் ஆந்திராவில் ஜெரிக்கி என்றும் கேரளத்தில் கருக்கா என்றும் கர்நாடகத்தில் காரிக ஹால்லு என்றும் அழைக்கிறார்கள்.

🛕 புல் இனத்திலேயே முதன்முதலில் தோன்றியது அறுகம்புல். இது உறுதியான வேர்களை கொண்டிருப்பதால் புல்லை பிடித்திழுத்தால் மேல்பாதி அறுபட்டு புல் மட்டும் கையில் வரும். வேர் மட்டும் பூமியில் தங்கி மீண்டும் முளைக்கும். அறுபட்டு மீண்டும் உடனே தழைத்து நிற்பதால் இதற்கு ‘அறுகம்புல்’ எனப் பெயர் வழங்கலாயிற்று. அறுகம்புல்லிற்கு மூதண்டம், தூர்வை, அறுகு, பதம், மேகாரி என பல மூலிகைப் பெயர்களும் உண்டு.

🛕 அறுகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல் வரப்புகளிலும் வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடுச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது.

🛕 முன்னொரு சமயம் அனலாசுரன் என்ற ஒரு அரக்கன் தேவர்களையும், ரிஷிகளையும் மிகவும் துன்புறுத்தியதோடு யாகங்களுக்கும், நற்காரியங்களுக்கும் இடையூறாக இருந்து வந்தான். அவன் வாயிலிருந்து அக்கினியை உமிழ்ந்து எதிரிகளை அறுகில் வரவிடாமல் செய்வதால், இந்திரனால் அவனை போரிட்டு வெல்ல முடியவில்லை. வேறு வழியின்றி இந்திரன், தேவர்கள் புடைசூழ கைலாயம் சென்று விநாயகப் பெருமானிடம் அனலாசுரனை வதம் செய்து தங்களைக் காக்க வேண்டுமென்று முறையிட்டார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற விநாயகப்பெருமான் அனலாசுரனுடன் போரிட்டு கடைசியில் அவனை எடுத்து அப்படியே விழுங்கிவிட்டார்.

🛕 ஆனால் விநாயகரின் வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் உள்ளேயே அக்னியை உமிழ, விநாயகர் எரிச்சல் தாங்க முடியாமல் குதிக்கத் துவங்கினார். விநாயகரின் துடிப்பை கண்ட இந்திரனும் தேவர்களும் கங்கையை அவர்மீது பொழிந்தார்கள். விநாயகரின் எரிச்சல் தணியவில்லை. சந்திரன் தன் குளிர்ச்சியான நிலைவை விநாயகரின் மீது பொழிந்தான். அப்போதும் விநாயகரின் எரிச்சல் அடங்கவில்லை. தேவர்களும் இந்திரனும் என்னென்னவோ செய்து பார்த்தும் விநாயகரின் எரிச்சல் அடங்கவேயில்லை. அப்போது அங்கு வந்த ரிஷி ஒருவர் அறுகம்புல்லைக் களைந்து அவற்றை விநாயகரின் தலையில் கொட்டினார். உடனே விநாயகரின் எரிச்சல் அடங்கியது. அனலாசுரன் அவரது வயிற்றிலேயே ஜீரணமாகிவிட்டான். அகம்மகிழ்ந்த விநாயகர், ‘இனி என்னை அறுகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுபவர்களின் குறைகள் அனைத்தும் நீங்கும்‘ என்று வரமளித்தார். அன்றுமுதல் விநாயகருக்கு அறுகம்புல் அர்ச்சனை சிறப்புப்பெற்றது, அதோடு அனலாசுரனை விழுங்கி அவனை ஜீரணம் செய்ததால்தான் விநாயகருக்கு பெருத்த வயிறும் உண்டாயிற்று.

Arugampul Benefits in Tamil

🛕 நல்ல தளிர் அறுகம்புல்லை சேகரித்து நீரில் கழுகி நன்கு அரைத்து பசும்பாலுடன் சுண்டக்காய்ச்சி நாள்தோறும் இரவில் படுக்கச் செல்லும்முன் சாப்பிட்டு வந்தால் பலவீனமடைந்த உடல் தேறி நல்ல பலம் பெற்றுவிடும். வளர்ந்து வரும் குழந்தைகள் எளிதாக ஊட்டச்சத்து பெற இதே முறையை கையாளலாம்.

🛕 அறுகம்புல்லுடன் வெண்தாமரை பூவிதழ்களை சேர்த்து கஷாயமாக்கி தினமும் இருவேளை குடித்துவர இதய பலவீனம் நீங்கி, இதயமும், ரத்தக் குழாய்களும் உறுதிபெறும்.

🛕 தீடீரென ஏற்படும் வெட்டு காயம் போன்ற ரண காயங்களுக்கு அரிவாள் மூக்கு என்று சொல்லப்படும் பச்சிலையையும் அறுகம்புல்லையும் சம அளவாக எடுத்து அரைத்துக்கட்டினால் உதிரப்பெருக்கு உடனடியாக நின்றுவிடும். காயமும் வெகு விரைவில் ஆறிவிடும்.

🛕 அறுகம்புல்லையும் தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். அறுகம்புல்லை பொடியாக்கி கடலை மாவுடன் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

🛕 அறுகம்புல்லுடன் மாதுளை இலையை சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை இரண்டு வேளையும் 100 மில்லி அளவு குடித்துவர பெண்களுக்கு மாதவிலக்கின்போது ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கு கட்டுப்படும்.

🛕 அறுகம்புல்லுடன் மஞ்சளும், சுண்ணாம்பும் சேர்த்து அரைத்து நகச்சுற்று உள்ள இடத்தில் பூசிவர வலியும், வீக்கமும் குறையும்.

🛕 அறுகம்புல் வேரையும், அகத்தி வேரையும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்து, காலையில் அதனை காய்ச்சி வடிகட்டி குடித்துவர நீர் எரிச்சல், ஆண் குறி எரிச்சல் குணமாகும்.

🛕 அறுகம்புல் 2 பங்கு, கீழாநெல்லி ஒரு பங்கு சேர்த்து அரைத்து, அதை தயிரில் கலந்து குடிக்க சிறுநீர் எரிச்சல், சிறுநீருடன் ரத்தம் கலந்து வெளியாகுதல், உடல் வறட்சி போன்றவை குணமாகும். உடல் வெப்பம் தணியும்.

🛕 அறுகம்புல் வேரை நிழலில் உலர்த்தி பொடியாக்கி நல்லெண்ணெயில் கலந்து காய்ச்சிக் கொள்ளவும். இதனை உடலில் தேய்த்து குளித்துவர எல்லாவித தோல் நோய்களும் குணமாகும். அதை, தலையில் தேய்த்து குளிக்க பொடுகுத்தொல்லை நீங்கும். உடல் குளிர்ச்சியாகும்.

🛕 வாயுத் தொல்லை உள்ளவர்கள் அறுகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டையும் இது தணிக்கிறது.

🛕 உடல் ரத்த சுத்திகரிப்புக்கு அறுகம்புல் சாறு பேருதவியாக உள்ளது.

🛕 அறுகம்புல்லின் கணுக்களை நீக்கிவிட்டு 10 கிராம் அளவு எடுத்து, அதனுடன் வெண்மிளகு 10 சேர்த்து 4 டம்ளர் நீர்விட்டு காய்ச்சி, பாதியாக வற்றியதும், அதில் சிறிதளவு பசு வெண்ணெய் சேர்த்து குடித்துவர, மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் வெப்பம், நீர் கடுப்பு, மூலக்கடுப்பு, வெள்ளைப்படுதல் போன்றவைக் குணமாகும்.

🛕 தீராத வயிற்றுவலிக்கு அறுகம்புல்லுடன் வேப்பிலையை சமஅளவு எடுத்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி 100 மில்லி அளவு குடித்துவர குணமாகும்.

🛕 ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிப்பதுடன், ரத்தச் சோகை, ரத்த அழுத்தத்தையும் அது சீராக்குகிறது. அறுகம்புல் சாற்றில் வைட்டமின் ‘ஏ’ சத்து உள்ளது. இதை உட்கொண்டால் உடல் புத்துணர்வு பெறுகிறது. குழந்தைகளுக்கு பாலில் கலந்து கொடுக்கலாம்.

🛕 பல் சம்பந்தப்பட்ட நோய்கள், பல் ஈறில் இருந்து ரத்தம் கசிந்து, வாய் நாற்றம் போன்றவை விலகும்.

🛕 அறுகம்புல் சாற்றுடன் சிறிதளவு பன்னீர், பப்பாளிப் பழம் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி, உலர்ந்தவுடன் கழுவிவர வெயிலால் ஏற்பட்ட கருமை அகன்று முகம் பளபளப்பாகும்.

🛕 யுனானி மருத்துவத்தில் அறுகம்புல் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதை முறையாக பதப்படுத்தி கிட்னி ஃபெயிலியர், ஆஸ்துமா போன்ற நோய்களுக்கு மருந்தாகத் தரப்படுகிறது.

🛕 தினமும் டீ, காபிக்கு பதிலாக அறுகம்புல் சாற்றுடன் தண்ணீர் அல்லது தேன் அல்லது இளநீர் கலந்து சாப்பிடுங்கள். தினமும் காலையில் வெறும் வயிற்றில் தான் இதை குடிக்க வேண்டும். அப்போது தான் பலன் உண்டு.

– நன்றி சந்திரசேகரன் கோபாலகிருஷ்ணன்



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil
  • நவம்பர் 23, 2024
Happy Birthday Messages in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள்