×
Tuesday 10th of December 2024

அரிவாட்டாயர், திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகிய மூன்று நாயனார்களை குறிக்கும் குறியீடுகள் கண்டுபிடிப்பு


Arivattaya Nayanar, Thirugnanasambandar, Thirunavukkarasar

🛕 திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் தாலுகா, கோபுரப்பட்டிக்கு அருகாமையில் பாச்சில் அருள்மிகு மேற்றிலீஸ்சுவரர் என்றத் திருப்பெயருடைய சிவன்கோவில் ஒன்று உள்ளது. இத்திருக்கோவிலுக்கு எதிரே உள்ள நந்தி சிற்பத்திற்கு அருகே முன் புறத்தில் ஒரு சூலம் பின் புறத்தில் மூன்று குறியீடுகள் மற்றும் கல்லெழுத்துப் பொறிப்புக்கள் கொண்ட ஒரு கல்தூண் உள்ளது.

🛕 இக்கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள கல்லெழுத்துப் பொறிப்புக்கள் இரண்டாம் நந்திவர்ம பல்லவரின் 15 ஆவது ஆட்சிக் காலத்தைச் (கி.பி.746) சார்ந்தது என அறிஞர் பெருமக்கள் பதிவுசெய்துள்ளனர்.

Also, read: 63 Nayanmargal History in Tamil (63 நாயன்மார்களின் வரலாறு)

🛕 இக்கல்தூணில் பொறிக்கப்பட்டுள்ள அக்குறியீடுகளை மறுஆய்வு செய்த தொல்லியல் ஆய்வு மையத்தின் நிறுவனத்தலைவரும் தொன்மைக் குறியீட்டாய்வாளருமான தி.லெ. சுபாஸ் சந்திர போஸ் வெளியிட்டுள்ள செய்தியாவது:
உலகத்திலுள்ள பொதுவான எல்லா உண்மைகளையும் சிறப்பான ஒழுக்கங்களையும் ஏணிப் படிகளைப் போல தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டு பல்லாயிரம் ஆண்டுகளாக அதீத நிலையில் நிலைத்திருப்பது சைவ சமயம் என்பது நம் முன்னோர்களின் வாயிலாக அறியமுடிகிறது.

🛕 சைவ சமயத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்துவதற்காகத் தமிழ் மண்ணில் அவதரித்த 63 சிவனடியார்களை, “கடவுளர் என்னும் நாயன்மார்கள்” என சேக்கிழார் பெருமான் 12 ஆம் நூற்றாண்டில் அருளிய “திருத்தொண்டர்புராணம் என்னும் பெரிய புராணம்” கூறுகிறது. முனைவர் மா. இராசமாணிக்கனார் பெரியபுராணத்தைப்பற்றி 19 ஆம் நூற்றாண்டில் எழுதிய “பெரியபுராண ஆராய்ச்சி” நாட்டுடைமையாக்கப்பட்ட நூல் என்பது குறிப்பிடத்தக்கது.

🛕 அந்த 63 நாயன்மார்களில் ‘தாயனார்’ என்னும் அரிவாட்டாய நாயனார், “கவுணியர்கோன்” என்னும் கவுண்டினிய கோத்திரத்துப் பெரியாரான திருஞானசம்பந்தர் நாயனார், திருஞானசம்பந்தர் நாயனரால் “அப்பர்” என அன்புடன் அழைக்கப்பட்ட திருநாவுக்கரச நாயனார் ஆகிய மூவராவர்.

🛕 அரிவாட்டாய நாயனார், திருஞானசம்பந்த நாயனார், திருநாவுக்கரச நாயனார் ஆகிய மூன்று நாயனார்களை முறையே அரிவாள், மூன்றரைச் சுற்றுக்களைக் கொண்ட ஞானத்தைக் குறிக்கும் திருச்சுழி, உழவாரப்படை ஆகிய மூன்று குறியீடுகளாக இக்கல்தூணில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன என்பது ஒரு சிறப்புச் செய்தியாகும். மேலும் இக்குறியீடுகளின் வாயிலாக இம்மூன்று நாயன்மார்கள் வாழ்ந்த காலம் கி.பி. 6 – 7 ஆம் நூற்றாண்டு என்பது தெரியவருகிறது.

🛕 திருஞானசம்பந்த நாயனாரை குறிக்கும் வலமிருந்து இடமாக சுழலும் மூன்றரைச் சுற்றுக்கள் கொண்ட திருச்சுழி ஞானத்தைக் குறிப்பிடுகின்றன என்பதும் அது மூலாதாரத்தில் உள்ள பாம்பின் வடிவமைந்த குண்டலினி சக்தி என்பதும் இராசயோக சாத்திர நூல்களின் வாயிலாக அறியமுடிகிறது. அரிவாட்டாய நாயனாரை குறிக்கும் அரிவாள் குறியீடு பிரான்மலை, பெருமுக்கல் ஆகிய இடங்களிலுள்ள சைவத் திருத்தலங்களிலும்; காண முடிகிறது.

🛕 சிவலாயத்தைக் குறிக்கும் “சூலம்” பொறிக்கப்பட்டுள்ள பழங்காலத்துக் கல்வெட்டுச் செய்திகளில் சைவ சமய நாயன்மார்களை சூட்சுமமாக உணர்த்துவதற்கு குறியீடுகளைப் பயன்படுத்தும் பழந்தமிழர் மரபு இக்கல்தூண் வாயிலாகத் தெரியவதாகக் கருதலாம் என தெரிவித்துள்ளார். தமது களஆய்வின் போது வரலாற்று ஆய்வாளர்களான திருவரங்கப்பட்டி வ.வெங்கடேசன், பூனாம்பாளையம் வெ.வெங்டேசன் ஆகியோர் உடனிருந்தனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Also, read

Our Sincere Thanks to: 🙏 T.L.Subash Chandira Bose 🙏

T.L.Subash Chandira Bose
T.L.Subash Chandira Bose

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்