×
Tuesday 3rd of December 2024

பசு இட்ட பதி யான்


உலக நாகரிகங்களில் எல்லாம் மூத்த நாகரிகம் என்பதும், 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்டது என்பதுமானது சிந்து சமவெளி அல்லது அரப்பா நாகரிகம். அந்நாகரிகத்திற்கான மிகச் சிறந்த ஆதாரச் சான்றுகளில் ஒன்றே குறியீடுகள் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ள முத்திரைகளாகும்.

அம்முத்திரைகளில் எம்-304எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை ஒன்று மோஹெஞ்சொ-தரோ-வில் மேற்கொண்ட தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது. அடையாள எண் இல்லாத மற்றொரு முத்திரை சிந்து சமவெளியில் மேற்கொண்ட தொல்பொருள் தொல்பொருள் அகழாய்வின் போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இவ்விரு முத்திரைகளைப் பற்றித் தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் தெரிவித்துள்ளச் செய்தியாவது,

எம்-304எ

சதுர வடிவிலான இம்முத்திரையின் வலது புற கீழ் முனைப் பகுதி உடைந்த நிலையில் உள்ளது. இதனுடைய நிழல்படம் சர் அஸ்கோ பர்போலா அவர்களின் படைப்பான சி.ஐ.எஸ்.ஐ. தொகுப்பு 1, பக்கம் 75-லும், மற்றக் குறிப்புக்கள் பக்கம் 368-லும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த முத்திரையின்  மேல் பகுதியில் புடைப்பு வகையைச் சார்ந்த 7 எழுத்துக்களும், ‘அன்’ என்றச் சொல்லைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன.

மய்யப் பகுதியில், இரண்டு கொம்புகளும், விசிறித் தலைப்பாகையும் கொண்ட கிரீடத்தை தலையில் அணிந்தும், மூடிய கண்கள், கூர்மையான மூக்கு, தடித்த உதடு உடைய மூன்று முகங்களும், மேல் மற்றும் கீழ் கரங்களில் காப்புகளும், ஆபரணங்களும் கீழாடையும் அணிந்து, ஒரு யோக பீடத்தின் மீது யோக நிலையில் மூலபந்த யோகாசனத்தில் அமர்ந்துள்ள ஒரு மனித உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

யோகாசனத்தில் அமர்ந்துள்ள மனித உருவத்தைச் சுற்றி, வடகிழக்குத் திசையில் ஒரு யானை, கிழக்குத் திசையில் ஒரு மனித கோட்டுருவம், தென்கிழக்குத் திசையில் ஒரு வரிப்புலி, தெற்குத் திசையில் இரட்டை வரையாடுகள், தென்மேற்குத் திசையில் ஒரு எருமை மாடு, வடமேற்குத் திசையில் ஒரு காண்டாமிருகம் ஆகியவை பொறிக்கப்பட்டுள்ளன.

அடையாள எண் இல்லாத முத்திரை

அடையாள எண் ஏதும் இல்லாததும், சதுர வடிவிலானதுமான இந்த முத்திரையின் வலது புற கீழ் முனைப் பகுதி உடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் மேல் பகுதியில் புடைப்பு வகையைச் சார்ந்த 7 எழுத்துக்களும், ‘அன்’ என்றச் சொல்லைக் குறிக்கும் ஒரு குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் எம்.304எ என்ற எண்ணுடைய முத்திரையில் பொறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த முத்திரையில் மூன்றாவது, நான்காவது ஆகிய இரண்டு எழுத்துக்களான (இ)ட், ட ஆகிய இரண்டும், தனியாகப் பொறிக்கப்பட்டுள்ளது நோக்கத்தக்கது.

மய்யப் பகுதியில், விசிறித் தலைப்பாகை கொண்ட கிரீடத்தை தலையில் அணிந்த ஒரு எருதின் முகமும், கரங்களில் காப்புகளும், ஆபரணங்களும், கீழாடையும் அணிந்து, யோக பீடத்தின் மீது யோக நிலையில் மூலபந்த யோகாசனத்தில் அமர்ந்துள்ள ஒரு நந்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

யோகாசனத்தில் அமர்ந்துள்ள நந்தியின் உருவத்தின் இடது புறத்தில் ஒரு காண்டாமிருகம், வலது புறத்தில் ஒரு வரிப்புலி ஆகிய இரண்டு மிருகங்கள் மட்டும் பொறிக்கப்பட்டுள்ளன.

எம்-304எ, அடையாள எண் ஏதும் இல்லாத முத்திரை ஆகிய இவ்விரண்டு முத்திரைகளிலும் பொறிக்கப்பட்டுள்ள புடைப்பு வகையைச் சார்ந்த 7 எழுத்துக்களும், ‘அன்’ என்றச் சொல்லைக் குறிக்கும் ஒரு குறியீடும் மிருதுவான துணி அல்லது மரப்பட்டை மீது அச்சிட்டு படிக்கக் கூடியவை. அவற்றை –

ப + சு + (இ)ட் + ட + ப + தி + யா + அன், பசு இட்ட பதி யான் (Pasu Itta Pathi Yaan) எனப் படிக்கப்படுகிறது.

இச்சொற்களில் உள்ள ‘ப’ என்பது 9 – ஆவது உயிர்மெய் எழுத்து, ‘சு’ என்பது 3 – ஆவது உயிர்மெய் எழுத்து, ‘(இ)ட்’ என்பது 5 – ஆவது மெய் எழுத்து,  ‘ட’ என்பது 5 – ஆவது உயிர்மெய் எழுத்து, ‘ப’ என்பது 9 – ஆவது உயிர்மெய் எழுத்து, ‘தி’ என்பது 7 – ஆவது உயிர்மெய் எழுத்து, ‘யா’ என்பது 11 – ஆவது உயிர்மெய் எழுத்து, இறுதியாக பொறிக்கப்பட்டுள்ள மனிதக் கோட்டுருவம் ‘அன்’ என்ற ஒரு சொல்லைக் குறிப்பதாகும்.

பசு : சிற்றுயிர், சீவான்மா, ஆ என்னும் ஆன்மா, இடபம்,
இட்ட : கொடுத்த, படைத்த
பதி : தலைவன், அரசன், கடவுள், கணவன்
யான் : தன்மை யொருமைப் பெயர்

பொருள்: சிற்றுயிர்களைப் படைத்த கடவுள் (பசுபதி) என்பது தன்மை யொருமைப் பெயர்.

மிருகங்களும், மனித கோட்டுருவமும்

மேற்கண்ட இரண்டு முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ள மிருகங்களின் உருவங்கள் சம்பு தீபகற்பம் அல்லது பாரதம் என்றழைக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்டத்தில் பல்வேறு திசைகளில் வாழ்ந்த பழம்பெருங்குடி மக்களின் அடையாளச் சின்னங்கள் என்பது தெரியவருகிறது. அதற்கு உதாரணமாக தற்போதைய கர்நாடகம் மாநிலத்தை எருமை நாடு என பழமையான கல்வெட்டுக்கள் கூறுகின்றன. மனித கோட்டுருவம் காசி நகரத்தில் எழுந்தருளியுள்ள பசுபதி என்னும் அருள்மிகு காசி விசுவநாதரைக் குறிப்பிடுவதாகக் கருதலாம்.

பசுபதி என்பதற்கு ஆன்மாக்களுக்கு (உயிரிணங்களுக்கு) தலைவனாகிய சிவபெருமான் எனவும், நந்தி என்பதற்கு சிவபெருமான் எனவும் தமிழ் அகராதி பொருள் கூறுகிறது. சிவபெருமானுக்கு நந்திகேசன், நந்திகேச்சுரன் ஆகிய பெயர்களுண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்கு ஒரு சான்றாக கீழ்கண்ட திருமந்திரம் பாடல்களைச் சுட்டிக்காட்டலாம். அவையாவன –

தரிக்கின்ற பல்லுயுர்க் கெல்லாந் தலைவன்
இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்
பிரிக்கின்ற இந்தப் பிணக்குஅறுத்து எல்லாம்
கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேன்திருமந்திரம் 1589

பொருள்: பண்ணிய புண்ணிய பாவ நல்வினை, தீ வினைகளுக்கு ஏற்ப உடம்பு எடுக்கும் உயிர்ப் பிறவிகளுக்கெல்லாம் தலைவனாக இருப்பவன் பரம்பொருள். இந்தப் பரம்பொருள் சீவன்களின் உயிரோடு கலந்து இருப்பதைப் பற்றி எதுவும் அறியாதவராக மாந்தர் உள்ளனர். உயிர்களையும் இறை உணர்வையும் பிரித்து வைத்துள்ள அறியாமையாகிய இந்தத் தடை நீங்கி எல்லாம்- கருக்கொண்ட- எல்லா உயிர்களையும் தன்னுள் தாயாக நின்று தாங்கும் தயாபரனான பரமபொருளை நான் கண்டுணர்ந்தேன்.

நந்தி பெருமான் நடுஉள் வியோமத்து
வந்தென் அகம்படி கோயில்கொண்டான் கொள்ள
எந்தை வந்தான் என்றுஎழுந்தேன் எழுந்ததும்
சிந்தையின் உள்ளே சிவன் இருந்தானே.திருமந்திரம் 2641

பொருள்: நந்திப் பெருமானாகிய சிவப்பரம்பொருள், என் சிந்தையை இடமாகக் கொண்டு, வந்து சித்தத்துள்ளே கோயில் கொண்டெழுந்தருளினான். அவன் என் உள்ளம் புகுந்ததைக் கண்டதும், நான் எம்பெருமான் எனக்குள் வந்துவிட்டான் என்றறிந்து எழுந்து நின்றேன். எழுந்து நின்று நானவனைத் தொழுது பணிய, அவன் என் சிந்தைக்கு இனியவனாக என்னுள் கலந்து இருந்தான்.

மேற்கண்டவற்றின் வாயிலாக சர் ஜான் மார்சல் அவர்களால் பசுபதி முத்திரை என அடையாளப்படுத்தப்பட்ட எம்-304எ என்ற அடையாள எண்ணுடைய முத்திரை, அடையாள எண் இல்லாத முத்திரை ஆகிய இரண்டின் மய்யப் பகுதியில் மூலபந்த ஆசானத்தில் அமர்ந்துள்ள மனித உருவம் ‘பசுபதி’ என்னும் ‘சிவபெருமானே’ என்பதையும், ‘மகாயோகியுமான’ அவரின் திருவுருவமே ‘நந்தி’ என்பதும், அவரே அனைத்து உயிர்களைப் படைத்து, காத்து, மறைக்கும் தலைவன் என்பதை உணர்த்துவதாகக் கருதலாம் எனக் குறிப்பிட்டுள்ளார்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • ஜூலை 6, 2022
சிந்து சமவெளி முத்திரையில் அதிசய அழிஞ்சில் மரத்தின் குறிப்பு
  • மே 23, 2022
திரு பாநாட்டான் படைத்தப் பாட்டு மங்களகரமானது
  • மே 7, 2022
போற்றுதலுக்குரிய நிலவு / வெந்தயம்