×
Sunday 1st of December 2024

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – கடுவெளிச் சித்தர்


Kaduveli Siddhar Details in Tamil

கடுவெளிச் சித்தர்

🛕 கடுவெளிச் சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார்.  கடுவெளி  என்றால் வெட்ட வெளி என்பதைக் குறிக்கும். இவர் சூனியத்தை தியானித்து சித்தி பெற்றதால் கடுவெளிச் சித்தர் என்று அழைக்கப்பட்டார். கடுவெளி சித்தரின் பாடல்கள் தமிழ் அறிந்த அனைவரிடமும் பிரபலமானவை. அவர் பாடிய பாடல் இது:

நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி

நல்ல வழிதனை நாடு- எந்த
நாளும் பரமனை நத்தியே தேடு
வல்லவர் கூட்டத்திற் கூடு – அந்த
வள்ளலை நெஞ்சினில் வாழ்த்திக் கொண்டாடு

🛕 மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.

நந்தவனம் = உலகு
ஆண்டி= ஆன்மா
நால் ஆறு மாதம்= 4+6 பத்து மாதங்கள் தாயின் வயிற்றிலிருந்த கருவறை
குயவன் = இறைவன் தோண்டி= மனிதப் பிறவி

🛕 மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று  நா + லாறு மாதமாய்க் அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.

🛕 நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள். ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான்.

🛕 தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டும் உடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.

🛕 ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவெளி சித்தர் இந்தப்பாடலில்.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • ஜூலை 14, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (கபீர்தாஸர்)
  • ஜூலை 2, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஜெயதேவர்)