×
Wednesday 11th of December 2024

திருஞானசம்பந்தர் வரலாறு


உள்ளடக்கம்

Thirugnanasambandar History in Tamil

திருஞானசம்பந்தர் சோழ நாட்டில் சீர்காழி என்னும் திருத்தலத்தில் அந்தணர் குலத்தைச் சார்ந்த சிவபாத இருதயர் – பகவதி அம்மையார் தம்பதிகளுக்கு தோணியப்பர் அருளால் மகனாக அவதரித்தார். சம்பந்தருக்கு மூன்று வயதாக இருக்கும்போது ஒருநாள் சிவபாத இருதயர் சீர்காழி தோணியப்பர் (சட்டைநாதர்) கோவிலுக்கு செல்லும்போது தானும் வருவதாக அடம்பிடித்து உடன் சென்றார். சிவபாத இருதயர் குழந்தையை கோவிலுக்குள் உள்ள குளக்கரையில் அமரவைத்துவிட்டுக் குளத்தில் நீராடினார். தந்தையைக் காணாத குழந்தை அழுதது. உடனே, இறைவன் உமாதேவியோடு காளை வாகனத்தில் தோன்றினார். உமாதேவி குழந்தைக்குப் பொற்கிண்ணத்தில் தாய்ப்பால் ஊட்டினார். பின்னர் இருவரும் மறைந்தனர்.

Also, read: 63 Nayanmargal History in Tamil (63 நாயன்மார்களின் வரலாறு)

நீராடிவிட்டு குளக்கரைக்கு வந்த சிவபாத இருதயர் குழந்தையின் கடைவாயில் பால் ஒழுகுவதைக் கண்டு ஆத்திரம் கொண்டு அருகில் கிடந்த குச்சியை எடுத்து அடிக்க ஓங்கி, யார் கொடுத்த பாலை உண்டாய் என்று கேட்டார். ஞானசம்பந்தர், இறைவன் காட்சி அளித்து, இறைவி பால் கொடுத்ததைக் குறிப்பால் உணர்த்தும் “தோடுடைய செவியன்” என்னும் பாடலைப் பாடினார். இந்த பாடலே தேவாரப் பதிகத்தின் முதல் பாடலாகும். அதன் பின்னர் தந்தையுடன் ஞானசம்பந்தர் ஊர் ஊராகச் சென்று இறைவனைத் தமிழால் பாடினார்.

திருக்கோலக்கா என்ற தலத்தில் பாடும்போது, குழந்தை கைகளால் தாளம் போடுவதைக் கண்டு இறைவன் அவர் கையில் ஒரு பொற்தாளத்தை அளித்தார். பல தலங்களை தரிசனம் செய்து திருவரத்துறை என்ற தலத்தை நோக்கி செல்லும் வழியில் மாறன்படி என்ற ஊரை அடைந்தபோது ஞானசம்பந்தரும், அடியார்களும் களைப்புற்று அன்றிரவு அங்கே தங்கினர். அப்பொழுது இறைவன் திருவரத்துறை அந்தணர்கள் கனவில் தோன்றி, “எம்மிடம் உள்ள முத்துச்சிவிகை, மணிக்குடை, பொற்சின்னங்கள் ஆகியவற்றை சம்பந்தரிடம் சேர்த்திடுக” என்று கூறி, சம்பந்தர் கனவிலும் தோன்றி அவை வருவதை அறிவித்தார். மறுநாள் காலையில் அந்தணர்கள் வியந்து கோவிலுக்குச் சென்று அப்பொருள்களை எடுத்துச் சென்று சம்பந்தரைச் சிவிகையில் அமரவைத்து ஊர்வலமாக அழைத்து வந்தனர். திருவரத்துறை அடைந்ததும் சம்பந்தர், நடந்து சென்று இறைவனை வணங்கினார்.

சம்பந்தப் பெருமானின் தெய்வீகத் தன்மையை அறிந்த திருநீலகண்ட யாழ்ப்பாணரும், அவருடைய மனைவியும் சம்பந்தரைக் கண்டு வணங்கி, அவர் செல்லும் தலங்களுக்கு அவருடன் சென்று அவரது பாடல்களுக்கு ஏற்ப யாழ் வாசித்து மகிழ்ந்தனர். சம்பந்தருக்கு உபநயனம் செய்யும் பருவம் வந்ததும் தந்தையார் அதைச் சிறப்பாக நடத்தினார். அதனை நடத்தவந்த அந்தணர்களுக்கே சம்பந்தர் ஐந்தெழுத்தின் பெருமையை விளக்கினார். பின்னர் சம்பந்தர் பல தலங்களைத் தரிசனம் செய்து திருக்கொடிமாடச் செங்குன்றூர் என்னும் தலத்தை அடைந்தார். அங்கு பரவியிருந்த ஒரு கொடிய தொற்று நோய் சம்பந்தருடன் வந்த அடியார்களையும் பற்றிக் கொண்டது. உடனே சம்பந்தர், இறைவனை வணங்கி பதிகம் பாட, நோய் முற்றிலும் நீங்கியது. பிறகு திருவலஞ்சுழி என்னும் தலத்தை அடைந்தபோது வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், இறைவன் ஒரு பெரிய முத்துப் பந்தலை அனுப்பி, அதன் நிழலில் அடியார்கள் பயணம் செய்ய பணித்தார்.

பிறகு சம்பந்தர் தருமபுரத்தை அடைந்தார். அங்கு திருநீலகண்டரின் உறவினர்கள் அவரின் யாழிசையால்தான் சம்பந்தரின் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன என்று கூறியதால், சம்பந்தர் திருநீலகண்டர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, யாழில் வாசிக்க முடியாத “மாதர் மடப்பிடி” என்ற பதிகத்தைப் பாடினார். பாடலுக்கு வாசிக்க முடியாத திருநீலகண்ட யாழ்ப்பாணர் யாழை உடைக்க முயல, சம்பந்தர் தடுத்து தொடர்ந்து தன்னுடன் இருந்து யாழ் வாசிக்க வேண்டும் என்றார். அவரும் அதற்கு சம்மதித்து உடன் சென்றார். திருப்புகலூர் என்னும் தலத்தில் திருநாவுக்கரசரை சந்தித்த சம்பந்தர் அவருடன் வேதாரண்யம் என்னும் தலத்தை அடைந்து அங்கு பலகாலம் அடைக்கப்பட்டிருந்த கோவில் கதவுகளை திறக்க அப்பர் பாடினார். மீண்டும் கதவடைக்க சம்பந்தர் பாடினார். அன்று முதல் கோவில் கதவு திறக்கவும், அடைக்கவும் முடிந்தது.

அந்நாளில் பாண்டிய நாட்டில் சமண மதம் பரவத் தொடங்கியதால் மன்னனும் சமண மதத்திற்கு மாறினான். ஆனால் அரசி மங்கையர்க்கரசியாரும், அமைச்சர் குலச்சிறை நாயனாரும் சம்பந்தப் பெருமானுக்கு செய்தி அனுப்பி மதுரைக்கு வரும்படி கோரினர். மதுரை வந்த சம்பந்தர் தங்கவைக்கப்பட்ட மடத்துக்கு சமணர்கள் தீ வைத்தனர். ஆனால் சம்பந்தர் பதிகம் பாட, மடத்தில் எரிந்த தீ அணைந்து, மன்னனின் உடலில் வெப்பம் மிகுந்தது. வெப்பத்தால் துடித்த மன்னனிடம் அரசியார், சம்பந்தர் இதைத் தீர்க்க முடியும் என்று கூற, அவனும் சம்பந்தரை அழைத்து வரச்செய்தான். சமணர்கள் மன்னனின் இடதுபுறம் தாங்கள் நோயைத் தீர்த்து வைப்பதாகவும், சம்பந்தர் வலதுபுறம் நோயைத் தீர்க்க வேண்டும் என்றும் கூறினர். உடனே சம்பந்தர் அரசனின் வலதுபுறம் திருநீறு பூசி நோயைத் தீர்த்தார். ஆனால், சமணர்களால் அரசனின் இடப்பக்க நோயைத் தீர்க்க முடியவில்லை. மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க சம்பந்தர் அதனை தீர்த்தார்.

சமணர்கள் தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் சம்பந்தரை அனல் வாதம், புனல் வாதத்துக்கு அழைத்தனர். அதன்படி அவரவர் கொள்கையை ஏட்டில் எழுதி நெருப்பில் இட்டனர். சமணர்களின் ஏடு எரிந்து சாம்பலானது. சம்பந்தரின் ஏடு எரியாமல் பசுமையாக இருந்து அனல் வாதத்தில் வென்றார். பின்பு இரு பிரிவினரும் வேறொரு ஏட்டில் எழுதி வைகை ஆற்றில் போட்டனர். சமணர்களின் ஏடு ஆற்றோடு போயிற்று. சம்பந்தின் ஏடு கரை ஏறியது. தோற்ற சமணர்களை அரசன் கழுவில் ஏற்றி மீண்டும் சைவ மதத்தில் சேர்ந்தான். பின்னர் பல தலங்களை தரிசனம் செய்து திருநாவுக்கரசரைப் பார்க்க திருப்பூந்துருத்திக்கு சென்றார். அங்கு தமது பல்லக்கில் சென்று திருநாவுக்கரசர் எங்கு உள்ளார் என்று கேட்க, அவரது பல்லக்கை சுமந்து வந்த திருநாவுக்கரசர், இங்கு தான் இருக்கிறேன் என்றார். உடனே சம்பந்தர் பல்லக்கில் இருந்து இறங்கி அப்பரை வணங்கினார். இருவரும் சிலகாலம் அங்கு இருந்து தலங்களை தரிசிக்க பிரிந்து சென்றனர்.

தொண்டை நாட்டுத் தலங்களை தரிசித்து விட்டு சீர்காழி சென்ற சம்பந்தருக்கு, அவரது பெற்றோர்கள் நம்பியாண்டார் நம்பி என்பவரின் மகளை திருமணம் செய்து வைத்தனர். அந்த திருமணத்தின் முடிவில் இறைவனை வணங்க கோவிலுக்கு சென்ற அனைவரும் அங்கே இறையருளால் சோதியில் கலந்து வீடுபேறு பெற்றனர். 16 வயதே நிரம்பிய திருஞானசம்பந்தர் வைகாசி மாதம் மூல நட்சத்திரமான அன்று இறைவனுடன் கலந்தார். இவர் பாடிய பாடல்கள் சைவத்திருமுறைகளில் முதல் மூன்று திருமுறைகளாக தொகுக்கப்பட்டுள்ளது.



2 thoughts on "திருஞானசம்பந்தர் வரலாறு"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • ஜூலை 14, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (கபீர்தாஸர்)
  • ஜூலை 2, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஜெயதேவர்)