- டிசம்பர் 2, 2024
உள்ளடக்கம்
Read Aigiri Nandini Lyrics in English
🛕 மகிஷாசுரனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி அனைத்து கடவுளர்களின் சக்தியையும், ஆயுதங்களையும் பெற்று மகிஷாசுரமர்த்தினியாகப் போற்றி வணங்கப்பட்டாள்.. அசுரனை அழித்த அன்னையின் கோவத்தை சாந்த படுத்த இந்த மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் பாடப்பட்டது.
🛕 தர்மத்திற்கு எப்போதெல்லாம் குறைவு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இறைவன் பல தோற்றங்களை எடுத்து அதர்மங்களை வீழ்த்தி தர்மத்தை நிலைபெற செய்கிறார். நாமும் நமது முன்வினை பயன்கள் மற்றும் இப்பிறவியில் செய்த சில கர்ம வினைகளின் பலனாக பொருளாதார சிக்கல்கள், வீட்டில் வறிய நிலை உண்டதால், எதிலும் தோல்வி, நீண்ட கால நோய் நொடிகள் போன்றவை ஏற்படுகின்றன. இவை எல்லாவற்றையும் நீங்க செய்ய நவராத்திரி தினங்கள் மற்றும் விஜயதசமி தினத்தில் துதித்து வழிபட வேண்டிய மகிஷாசுரமர்த்தினி ஸ்தோத்திரம் இதோ:
1. அயிகிரி நந்தினி நந்தித மேதினி
விச்வ வினோதினி நந்தநுதே
கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி
விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே
பகவதி ஹே சிதிகண்ட குடும்பினி
பூரிகுடும்பினி பூரிக்ருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: மலையரசனின் மகளே, உலகை மகிழ்விப்பவளே, விளையாட்டாக உலகை நடத்திச் செல்பவளே, நந்தனால் வழிபடப்பட்டவளே, சிறந்த மலையான விந்திய மலையில் உறைபவளே, திருமாலுக்குப் பெருமை சேர்ப்பவளே, வெற்றி வீரர்களால் துதிக்கப்படுபவளே, பகவதீ, நீலகண்டரின் பத்தினியே, உலகமாகிய பெரிய குடும்பத்தை உடையவளே, அரியவற்றைச் சாதிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
2. ஸுரவர வர்ஷிணி துர்தர தர்ஷிணி
துர்முக மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபுவன போஷிணி சங்கர தோஷிணி
கில்பிஷ மோஷிணி கோஷரதே
தனுஜ நிரோஷிணி திதிஸுத ரோஷிணி
துர்மத சோஷிணி ஸிந்துஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: நல்லோருக்கு வரங்களை மழைபோல் பொழிபவளே. கொடியவர்களை அடக்கி வைப்பவளே, கடுமையான வார்த்தைகளையும் பொறுப்பவளே, மகிழ்ச்சியுடன் பொலிபவளே, மூன்று உலகங்களுக்கும் உணவளித்துக் காப்பவளே, சிவபெருமானை மகிழ்விப்பவளே, பாவங்களைப் போக்குபவளே, பேரொலியில் மகிழ்பவளே, தீயவர்களிடம் கோபம் கொள்பவளே, கொடியவர்களை அடக்குபவளே, அலை மகளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
3. அயி ஜகதம்ப மதம்ப
கதம்பவன ப்ரிய வாஸினி ஹாஸரதே
சிகரி சிரோமணி துங்க ஹிமாலய
ச்ருங்க நிஜாலய மத்யகதே
மதுமதுரே மதுகைடப கஞ்ஜினி
கைடப பஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: உலகின் அன்னையே, என் தாயே, கதம்ப வனத்தில் வசிப்பதை விரும்புபவளே, சிரிப்பில் மகிழ்பவளே, மலைகளில் சிறந்த இமயமலையில் உச்சியிலுள்ள ஸ்ரீசக்கரத்தின் நடுவில் வீற்றிருப்பவளே, தேன்போல் இனியவளே, மது கைடப அசுரர்களை அழித்தவளே, கேளிக்கைகளில் மகிழ்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
4. அயி சதகண்ட விகண்டித ருண்ட
விதுண்டித சுண்ட கஜாதிபதே
ரிபுகஜ கண்ட விதாரண சண்ட
பராக்ரம சுண்ட ம்ருகாதிபதே
நிஜபுஜ தண்ட நிபாதித கண்ட
விபாதித முண்ட பதாதிபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: சதகண்டம் என்ற ஆயுதத்தால் முண்டாசுரனை வீழ்த்தியவளே, யானை முகத்தினனான கஜாசுரனின் தும்பிக்கையைத் துண்டித்தவளே, எதிரிகளான யானைகளின் கழுத்தைத் துண்டித்து எறிவதில் திறமை மிக்கவளே, தண்டாயுதம் போன்ற தன் தோள்களின் வலிமையால் முண்டாசுரனின் சேனாதிபதியைக் கண்டதுண்டமாக வெட்டியெறிந்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
5. அயிரண துர்மத சத்ரு வதோதித
துர்தர நிர்ஜர சக்தி ப்ருதே
சதுர விசார துரீண மஹாசிவ
தூதக்ருத ப்ரமதாதிபதே
துரித துரீஹ துராசய துர்மதி
தானவ தூத க்ருதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: அருவிபோல் எதிரிகளின் பிணக் குவியலைப் பொழிகின்ற ஆற்றல் பெற்றவளே, பகுத்து ஆராய்வதில் வல்லவரான சிவபெருமானை எதிரிகளிடம் தூதாக அனுப்பியவளே, தீய சிந்தனையும் கெட்ட நோக்கமும் கொண்ட அசுரர்களை அழிப்பவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
6. அயி சரணாகத வைரிவ தூவர
வீர வராபய தாயகரே
த்ரிபுவன மஸ்தக சூலவிரோதி
சிரோதி க்ருதாமல சூலகரே
துமிதுமி தாமர துந்துபி நாத
மஹோ முகரீக்ருத திங்மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: தஞ்சம் அடைந்த எதிரிகளின் மனைவியருக்கும் சரணடைந்த வீரர்களுக்கும் அடைக்கலம் தந்து காத்தவளே, மூன்று உலகங்களுக்கும் தலைவியாக விளங்குபவளே, எதிரிகளின் கழுத்தில் திரிசூலத்தை நாட்டியவளே, தும் தும் என்று முழங்குகின்ற துந்துபி வாத்தியத்தையே வெட்கப்படச் செங்கின்ற கம்பீரக் குரல் படைத்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
7. அயி நிஜஹுங்க்ருதி மாத்ர நிராக்ருத
தூம்ர விலோசன தூம்ரசதே
ஸமரவிசோஷித சோணிதபீஜ
ஸமுத்பவ சோணித பீஜலதே
சிவசிவ சும்ப நிசும்ப மஹாஹவ
தர்ப்பித பூத பிசாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: தூம்ரவிலோசனன் முதலிய நூற்றுக்கணக்கான அசுரர்களை ஹூங்காரத்தினாலேயே தோற்று ஓடச்செய்தவளே, போரில் மாண்ட அசுரர்களின் ரத்தக்கடலில் தோன்றிய அழகிய சிவந்த கொடி போன்றவளே, சும்ப நிசும்ப அசுரர்களை அழித்ததாகிய மாபெரும் வேள்வியால் பூதகணங்களை மகிழ்வுறச் செய்தவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
8. தனுரனு ஸங்க ரணக்ஷண ஸங்க
பரிஸ்ஃபுர தங்க நடத்கடகே
கனக பிசங்க ப்ரிஷத்க நிஷங்க
ரஸத்பட ச்ருங்க ஹதாபடுகே
க்ருத சதுரங்க பலக்ஷிதிரங்க
கடத்பஹுரங்க ரடத்படுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: வில்லை வளைத்துப் போர் செய்வதால் நடனமாடுவது போல் அசைகின்ற கைவளைகளை அணிந்தவளே, பொன் அம்புகளில் ஒரு கையும் அம்பறாத்தூணியில் மற்றொறு கையுமாக விரைந்து அம்புகளைப் பொழிந்து, ஒலி எழுப்புகின்ற வீரர்களைக் கொன்றவளே, நால்வகை சேனைகளும் நிறைந்த போர்க்களத்தில் வெட்டப்பட்ட தலைகளைச் சதுரங்கக் காய்களைப்போல் விளையாடுபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
9. ஜய ஜய ஜப்ய ஜயே ஜய சப்த
பரஸ்துதி தத்பர விச்வ நுதே
ஜணஜண ஜிஞ்ஜிமி ஜிங்க்ருத நூபுர
ஸிஞ்ஜித மோஹித பூதபதே
நடித நடார்த்த நடீ நட நாயக
நாடித நாட்ய ஸுகான ரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: பகைவர்களால் வெல்ல முடியாதவளே, ஜெய ஜெய என்ற கோஷத்துடன் உலகினரால் போற்றப்படுபவளே, ஜண ஜண என்று ஒலித்து சிவபெருமானை மோகத்தில் ஆழ்த்துகின்ற கொலுசுகளை அணிந்தவளே, நடனம், நாட்டியம், நாடகம், பாடல்கள் என்று விதவிதமான கேளிக்கைகளில் ஆர்வம் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
10. அயி ஸுமன: ஸுமன: ஸுமன:
ஸுமன: ஸுமனோஹர காந்தியுதே
ச்ரித ரஜனீ ரஜனீ ரஜனீ
ரஜனீ ரஜனீகர வக்த்ர வ்ருதே
ஸுநயன விப்ரமர ப்ரமர ப்ரமர
ப்ரமர ப்ரமரா திபதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: நல்மனம் படைத்த தேவர்களின் அழகிய சோலையில் மலர்ந்த பாரிஜாத மலர்களைப்போல் பிரகாசிப்பவளே, பாற்கடலில் பிறந்து இரவில் ஒளிரக்கூடிய நிலவை ஒத்த முகம் உடையவளே, பார்த்தவர் வியந்து நிற்கும் வண்ணம் சுழல்கின்ற அழகிய விழிகளைப் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
11. ஸஹித மஹாஹவ மல்ல மதல்லிக
மல்லி தரல்லக மல்லரதே
விரசித வல்லிக பல்லி கமல்லிக
ஜில்லிக பில்லிக வர்கவ்ருதே
சிதக்ருத ஃபுல்லஸ முல்லஸி தாருண
தல்லஜ பல்லவ ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: மற்போரில் பல்வேறு திறமைகள் காட்டுகின்ற மாமல்லர்களுடன் மற்போர் செய்வதை விரும்புபவளே, மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பல்வேறு மலர்களைச் சூடிய பெண்களால் சூழப்பட்டவளே, தளிரின் இளஞ்சிவப்பும் வெட்கப்படுகின்ற சிவப்பு நிறம் கொண்டவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
12. அவிரலகண்ட கலன்மத மேதுர
மத்த மதங்கஜ ராஜபதே
த்ரிபுவன பூஷண பூதகலாநிதி
ரூப பயோநிதி ராஜஸுதே
அயிஸுத தீஜன லாலஸ மானஸ
மோஹன மன்மத ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: ஓயாமல் மதநீரைப் பெருக்குகின்ற யானையின் இன்பநடையை ஒத்த நடை உடையவளே, மூன்று உலகங்களுக்கும் ஆபரணமான நிலவை ஒத்தவளே, பாற்கடலாகிய அரசனுக்குப் பிறந்தவளே, அழகிய பெண்களின் மனத்தில்கூட மோகத்தையும் ஆசையையும் தூண்டுகின்ற அழகுவாய்ந்த இளவரசியே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
13. கமல தலாமல கோமல காந்தி
கலா கலிதாமல பாலலதே
ஸகல விலாஸ கலாநிலய க்ரம
கேலிசலத்கல ஹம்சகுலே
அலிகுல சங்குல குவலய மண்டல
மௌலிமிலத் பகுலாலிகுலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: தாமரை இதழ்போன்ற மென்மையும் அழகும் வாய்ந்த பரந்த நெற்றியை உடையவளே, எல்லா கலைகளின் இருப்பிடமும் நீயே என்பதை உணர்த்துகின்ற அன்னநடை உடையவளே, தாமரை மலர்களை வண்டுகள் சூழ்வதுபோல், வண்டுகள் சூழ்ந்து மொய்க்கின்ற வகுள மலர்களைத் தலையில் சூடியவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
14. கர முரலீரவ வீஜித கூஜித
லஜ்ஜித கோகில மஞ்ஜுமதே
மிலித புலிண்ட மனோஹர குஞ்ஜித
ரஞ்சித சைல நிகுஞ்ஜகதே
நிஜகுணபூத மஹா சபரீகண ஸத்குண ஸம்ப்ருத கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாசுர மர்தினி
ரம்யக பர்தினி சைலஸுதே
🛕 பொருள்: உன் கையிலுள்ள புல்லாங்குழல் வெட்கப்படுகின்ற அளவுக்கு குயில்போல் இனிய குரல் படைத்தவளே, மலைவாசிகள் பாடி மகிழ்ந்து திரிகின்ற மலைகளில் மகிழ்ச்சியுடன் உறைபவளே, நற்குணங்கள் அனைத்தும் சேர்ந்து ஓர் உருவம் பெற்றதுபோல் வேட்டுவப் பெண்களின் கூட்டத்தில் சிறந்து விளங்குபவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
15. கடிதடபீத துகூல விசித்ர
மயூக திரஸ்க்ருத சந்த்ரருசே
ப்ரணத ஸுராஸுர மௌலி மணிஸ்ஃபுர
தன்சுல ஸன்னக சந்த்ரருசே
ஜிதகனகாசல மௌலி பதோர்ஜித
நிர்பர குஞ்ஜர கும்பகுசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: நிலவின் தண்ணொளியைக்கூட தோற்கச் செய்கின்ற அழகிய கிரணங்கள் பிரகாசிக்கின்ற பட்டாடையை இடுப்பில் அணிந்தவளே, உன் திருவடிகளைப் பணிகின்ற தேவர் மற்றும் அசுரர்களின் கிரீடங்களில் பதிக்கப்பட்ட மாணிக்கக் கற்களைப் பிரதிபலிக்கச் செய்கின்ற நிலவொளி போன்ற ஒளியை வீசுகின்ற நகங்களை உடையவளே, யானையின் மத்தகத்தைப் போன்றதும், அழகில் பொன்மலையான மேருவை நிகர்த்ததுமான மார்பகங்களை உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
16. விஜித ஸஹஸ்ர கரைக ஸஹஸ்ர
கரைக ஸஹஸ்ர கரைகநுதே
க்ருத ஸுர தாரக ஸங்கர தாரக
ஸங்கர தாரக ஸூனுஸுதே
ஸுரத சமாதி ஸமான ஸமாதி
ஸமாதி ஸமாதி ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: உன்னால் வெல்லப்பட்ட கோடி சூரியர்களால் துதிக்கப்படுபவளே, தேவர்களைப் பாதுகாக்கவும் தேவ-அசுரப் போரை முடிவிற்கு கொண்டு வரவும் முருகப்பெருமானை மகனாகப் பெற்றவளே, சுரதன், சமாதி ஆகியோரின் உயர்ந்த நிலைகளைப்போல் உயர்நிலைகளை நாடுபவர்களிடம் ஆர்வமும் அக்கறையும் உடையவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
17. பதகமலம் கருணா நிலயே
வரிவஸ்யதியோ ஸ்னுதினம் ஸுசிவே
அயி கமலே கமலா நிலயே
கமலா நிலய ஸகதம் நபவேத்
தவ பதமேவ பரம்பதமித்
யனு சீலயதோ மமகிம் ந சிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: கருணையின் இருப்பிடமே! தினமும் உன் திருவடித் தாமரைகளை வணங்குபவர்களின் இதயத் தாமரையை உறைவிடமாகக் கொள்கின்ற மகாலட்சுமியே! நீ அடியவர்களின் நெஞ்சில் வாழ்ந்தால் அவர்களே திருமால் ஆகிவிட மாட்டார்களா? உனது திருப்பாதங்களே மிக உயர்ந்த செல்வம் என்று கருதுகின்ற எனக்கு அதைவிட வேறு செல்வம் வேண்டுமா? மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
18. கனகல ஸத்கல ஸிந்துஜலைரனு
ஸிஞ்சிநுதே குண ரங்கபுவம்
பஜதி ஸகிம் நசசீ குசகும்ப
தடீ பரிரம்ப ஸுகானுபவம்
தவ சரணம் சரணம் கரவாணி
நதாமரவாணி நிவாஸிசிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: பொன்போல் பிரகாசிக்கின்ற சிந்து நதியின் நீரினால் பக்தர்கள் உன்னை நீராட்டுகின்றனர். அவர்கள், தேவர்களின் தலைவியான இந்திராணியின் மார்பகங்களைப் போன்ற பெரிய மார்பகங்களை உடைய பெண்கள் தழுவுகின்ற சுகத்தைப் பெறமாட்டார்களா என்ன? அந்த சுகத்தைப் பெரிதென்று கருதாமல் உன்னையே நான் தஞ்சமடைந்துள்ளேன். என் நாவில் கலைமகளை எழுந்தருளச் செய்வாய். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
19. தவ விமலேந்து குலம் வதனேந்துமலம்
ஸகலம் நனு கூலயதே
கிமு புரஹூத புரீந்துமுகீ
ஸுமுகீபிரஸெள விமுகீ க்ரியதே
மமது மதம் சிவநாமதனே
பவதீ க்ருபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: எல்லா முகங்களையும் மலரச் செய்வதற்கு நிலவை ஒத்த உன் முகம் போதும். தேவலோகப் பெண்கள் உன்னை விடுத்து ஏன்தான் நிலவை நாடுகிறார்களோ? அதுவும் உன் செயல்தான் என்பது எனக்குத் தெரியும். சிவை என்ற பெயர் பெற்றவளே, மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
20. அயி மயி தீனதயாலு தயா
க்ருபயைவ த்வயா பவித்வயமுமே
அயி ஜகதோ ஜனனீ க்ருபயாஸி
யதாஸி ததாஸனு மிதாஸிரதே
யதுசித மத்ர பவத்யுரரீ
குருதா துருதா பமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுர மர்தினி
ரம்ய கபர்தினி சைலஸுதே
🛕 பொருள்: அம்மா! உமையே! கதியற்ற என்னைக் கருணையுடன் காக்க வேண்டும். எல்லையற்ற கருணையால் நீ இந்த உலகிற்கெல்லாம் தாயாக விளங்குகிறாய். எது சரியானது என்று உனக்குப் படுகிறதோ அதைச் செய். என் மன ஏக்கத்தை அதுவே போக்கும். மஹிஷாசுரனை அழித்தவளே, அழகாகப் பின்னிய கூந்தலை டையவளே, மலைமகளே, ஜெய ஜெய என்று உன்னைப் போற்றுகிறேன்.
Also, read
It’s useful ????