×
Wednesday 11th of December 2024

தேவீ நாராயணீயம் – தசகம் 11 to 20


Devi Narayaneeyam Lyrics in Tamil with Meaning – Dasakam 11 to 20

நன்றி: VASANTHA Amma http://krishvasa.blogspot.com/

தேவீ நாராயணீயம் – தசகம் 11 to 20

தசகம் 11

ப்ரம்ம நாரதஸம்வாதம்

1. ஸ்ரீநாரத: பத்மஜமே,கதாஹா
பிதஸ்த்வ்யா, ஸ்ருஷ்ட,மிதம் ஜகத் கிம்?
கிம் விஷ்ணுநா வா, கிரிசேன வா கிம்?
அகர்த்ருகம் வா, ஸகலேச்வர: கஹ?

ப்ரம்மா, விஷ்ணு, ருத்ரன் மூவரும் அவரவர் தொழிலைச் செய்ய ஆரம்பிக்கின்றனர். ஒருநாள் நாரதர் சத்யலோகம் வருகிறார். அவர் ப்ரம்மாவிடம் கேட்கிறார் “இந்த உலகம் எப்படி உண்டானது? இதற்கு யார் காரணம்? இந்த கேள்வியை இதற்கு முன் பலரிடம் கேட்டிருக்கிறேன். சிலர் சிவன் என்றும், சிலர், விஷ்ணு என்றும், சிலர் சக்தி என்றும், சிலர் ப்ரக்ருதியில் வரும் மார்க்கம் தான் ஜகத் என்றும் சொல்கின்றனர். கர்த்தா இல்லாமல் எந்த காரியமும் நடைபெறாது. எனவே நிச்சயம் யாராவது ஒருவர் இதை உண்டாக்கி இருக்க வேண்டும். அது யார்?” என்று கேட்கிறார்.

2. இதீரிதோஜ:, ஸுதமாஹ, ஸாது
ப்ருஷ்டம் த்வயா, நாரத மாம் ஸ்ருணு த்வம்
விபாதி தேவீ, கலு ஸர்வசக்தி-
-ஸ்வரூபிணீ; ஸா, புவனஸ்ய ஹேதுஹு

ப்ரம்மா நாரதரின் இந்தக் கேள்வியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சி கொண்டார். அவர் சொன்னார் சர்வ சக்தி ஆகிய தேவியே இதற்குக் காரண கர்த்தா என்று சொன்னார்.

3. ஏகம் பரம் ப்ரம்ம, ஸத த்விதீயம்
ஆத்மேதி வேதாந்த,வசோபிருக்தா
ந ஸா புமான் ஸ்தரீ, ச ந; நிற்குணா ஸா
ஸ்த்ரீத்வம் ச பும்ஸ்த்வம், ச குணைர் ததாதி

வேதாந்த வாக்யங்கள் ப்ரம்மம், பரமாத்மா என்பது ஒன்றுதான். அது இரண்டல்ல. அந்த ப்ரம்மம் தேவிதான். அந்த தேவி பெண்ணுமில்லை, ஆணுமில்லை. ஆனால் குணங்களால் பெண்ணாகவும் ஆணாகவும் இருக்கிறாள். அவள் நடத்தும் நாடகத்திற்கு ஏற்ப மாறுகின்றாள். யுத்தம் என்று வந்தால் ஆண் போல் சண்டை செய்கிறாள். அதே நேரம் பக்தர்களிடம் கருணை காட்ட வேண்டும் என்றால் ஒரு தாய் போல் பெண்ணாகிறாள்.

4. ஸர்வம் ததாவாஸ்யமிதம் ஜகத்;,
ஸா-ஜாதா ந ஸர்வம், தத ஏவ ஜாதம்;
தத்ரைவ ஸர்வம், ச பவேத் ப்ரலீனம்
ஸைவாகிலம் நாஸ்தி, ச கிஞ்சநாந்யது

இந்த உலகம் முழுவதும் தேவியால் தான் உண்டாக்கப் பட்டது. உபநிஷத்துக்களும் இதைத் தான் சொல்கின்றன. உதாரணமாக கடலில் அலைகளும், நீர்க்குமிழிகளும், நுரைகளும் எப்படி உண்டாகிறது? கடல் என்ற உற்பத்தி ஸ்தானம் இருப்ததால் தானே? இந்த அலைகளும், நீர்க்குமிழிகளும், நுரைகளும் அடங்கிய பின் எங்கு செல்கிறது? மீண்டும் கடலில் தானே. அதைபோலவே அனைத்தும் அன்னையிடமிருந்து உண்டாகி அவளிடமே லயமடைகிறது.

5. கௌணானி சா,அந்த: கரேந்த்ரியாணி
ஸா நிற்குணா வாங்,மதிகோசரா ச
ஸா ஸ்தோத்ர மந்த்ரை:, சகுணா மஹத்பிஹி
ஸம் ஸ்தூயதே, பக்த, விபன்னிஹந்த்ரீ

ஸகுணையும் அவள்தான். நிர்குணையும் அவள்தான். ஸகுணை என்றால் எப்படி இருப்பாள் என்று வார்த்தையால் வருணிக்க முடியும். மனதால் சங்கல்பமும் செய்யலாம். ஆனால் நிர்குணையை வருணிக்க முடியாது. மனதால் சங்கல்பம் செய்யவோ புத்தியால் ஊகிக்கவோ முடியாது. புத்தியும் மனமும் குணமயமானது. முக் குணங்களால் சூழப்பட்ட மனதால் நிர்குண ப்ரம்மத்தை எவ்வாறு அறிய முடியும்? குணங்கள் அஹங்காரத்தினின்றும் தோன்றியவை. பரமாத்மா அஹங்காரத்திற்கு அப்பாற்பட்டவர். பித்த நீரால் வ்யாபிக்கப் பட்ட நாவினை உடையவன் உறைப்பு, இனிப்புச் சுவைகளை அறியமுடியுமா? சித்தத்தில் அஹங்கார நிவர்த்தி உண்டானால் தான் பரமாத்மாவை தரிசிக்க முடியும். அதனால் ஸகுணையும் நிர்குணையும் ஆன அன்னையை குணமயமான மனதாலோ அல்லது புத்தியாலோ அறியமுடியாது. எனவே நீ ஸகுண பரமாத்மாவை ஸ்தோத்ரம் செய் என்றார் ப்ரம்மா. நாம் சொல்லும் ஸ்தோத்ரங்கள் எல்லாம் ஸகுணையான அன்னைக்கே. நிர்குணையை வார்த்தைகளால் ஸ்தோத்ரம் செய்ய முடியாது.

6. ஸுதா ஸமுத்ரே, வஸதீயமார்யா
த்வீபே விசித்ராத்-பூதசக்தி யுக்தா;
ஸர்வம் ஜகத் யத்,வசகம்; வயம் ச
த்ரிமூர்த்தயோ நாம, யதாச்ரிதா: ஸ்மஹ

நிர்குணையான தேவி எங்கும் எதிலும் நிறைந்திருப்பாள். ஆனால் ஸகுணையான தேவி தூய்மையான இடத்தில் இருப்பாள். சிந்தாமணிக் க்ரஹ்த்தில் உள்ள நான்கு மண்டபங்களில் ஒன்றான ஸ்ருங்கார மண்டபத்தில் சதா பாடிக் கொண்டே இருகின்றாளாம் அன்னை. அதில் இருந்து கொண்டு பக்தர்களுக்குக் கேளிக்கைகளையும், முக்தி மண்டபத்திலிருந்து மோட்க்ஷத்தையும், ஞான மண்டபத்திலிருந்து ஞானோபதேசத்தையும் தருகிறாள், ஏகாந்த மண்டபத்திலிருந்து பூலோகத்தையும் காப்பாற்றுகிறாள். மும் மூர்த்திகளும் இந்த ஏகாந்த மண்டபத்தில் தான் அன்னையை தரிசனம் செய்தனர்.

7. தத் தத்தசக்தி, த்ரயமாத்ரபாஜஹ
த்ரிமூர்த்தய: புத்ர, வயம் வினீதாஹா
ததாஜ்ஞா ஸாது, ஸதாபி குர்மோ
ப்ரமாண்ட ஸர்க,ஸ்திதி ஸம்ஹ்ரிதீச்ச

ப்ரம்மா, நாரதரிடம் மும்மூர்த்திகளாகியத் தாங்கள் விமானம் மூலம் சென்றது, தேவியை ஏகாந்த மண்டபத்தில் தரிசித்தது அனைத்தையும் சொல்கிறார். நாரதருக்கு அனைத்தும் தெரியும். ஆனாலும் ஒன்றும் அறியாதவர் போல் கேட்டுக் கொண்டிருக்கிறாராம். நாங்கள் அன்னை இட்ட கட்டளைகளை மட்டுமே செய்யக் கூடியவர்கள். எதையும் தன்னிச்சையாகச் செய்யமுடியாது. நாங்கள் சுதந்தரர் அல்லர் என்று ப்ரம்மா சொல்கிறார்.

8. தைவேன மூடம், கவிமாத,னோதி
ஸா; துர்பலம் து, ப்ரபலம் கரோதி;
பம்கும் கிரீம் லங்க,யதேச; மூகம்
க்ருபாவதீ சா, தனுதே ஸுவாசம்

தேவியின் சிறப்பும், பெருமையும், சக்தியும் ப்ரம்மாவிற்கு நன்கு தெரியும். அன்னையின் நகத்தில் அகில அண்டத்தையும் பார்த்தவர் அவர். மேலும் மதுகைடபர்கள் வதத்தில் அன்னையின் சக்தியை அறிந்து கொண்டவர். தேவி எந்த வேலையையும் அனாயாஸமாக செய்யக் கூடியவள். மூடனைப் பண்டிதன் ஆக்கவும், முடவனை நடக்கச் செய்யவும், ஊமையைப் பேசச் செய்யவும், குருடனைப் பார்க்க வைக்கவும் செய்யக்கூடியவள். பக்தருக்கு எது அசாத்யமோ அதைச் சாத்யமாக்கும் கிருபாவதி தேவி. அன்னையின் க்ருபையை அறிந்து கொள்ள நிறைய கதைகள் இருக்கின்றன.

9. யத் கிஞ்சித்,அஞ்ஞாயி மயா மஹத்வம்
தேவ்யா ஸ்த,துக்தம், தவ ஸம்க்ரஹேண
ஸர்வத்ர தத், வரணய வஸ்தரேண
விதத்ஸ்வ பக்திம், ஹ்ருதயே ஜனானாம்

இந்த உலகத்திற்குக் கர்த்தா யார் என்ற நாரதரின் கேள்விக்கு, ப்ரம்மா தேவிதான் என்ற பதிலைக் கூறினார். இந்த உண்மையை நீ உலகம் முழுவதும் பரப்ப வேண்டும் என்று சொன்னார். நாரதர் த்ரிலோக சஞ்சாரி அல்லவா? அவரைவிட வேறு யார் இதைச் சிறப்பாகச் செய்ய முடியும்?

10. இதீரிதோஜேன, முனி : ப்ரஸன்னஹ
தவ ப்ரபாவம், கருணார்த்ர சித்தே
வ்யாஸம் ததான் யாம்,ச யதோசிதம் ஸ
ப்ரபோதயா மாஸ, பவித்ரவாக்பிஹி

இந்த சமயத்தில் தான் வ்யாஸர் தனக்குப் புத்திரன் வேண்டும் என்று தபஸ் செய்ய நினைக்கிறார். யாரை நோக்கி தபஸ் செய்தால் புத்ர பாக்யம் சீக்கிரம் கிடைக்கும் என்று நினைத்துப் புரியாமல் இருக்கும் நேரத்தில், நாரதர் அங்கு சென்று தேவியை நினைத்து தபஸ் செய்யும்படிச் சொல்கிறார். தேவியின் மஹாத்மியத்தைக் கிருஷ்ணனின் தந்தையான வசுதேவருக்குச் சொன்னார். (ஸ்கந்த புராணம்) ஸ்த்ரீயாகவும் புருஷனாகவும் மாறி மாறி ஸுத்யும்னன் நாரதரிடம் நவாக்ஷரீமந்திரம் அறிந்துகொண்டதை முன்பு பார்த்தோம். சீதாதேவியைப் பிரிந்து வருந்தும் ஸ்ரீராமருக்கும் நாரதர் தேவியின் மஹிமையைக் கூறுகிறார். ராமரும் தேவி பூஜை செய்கிறார். இது தேவி பாகவதத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. ஜனமேஜயன் செய்த தேவி பூஜையால் பரீக்ஷித்து நற்கதி அடைந்தான்.

11. ந மே குருஸ்த்வச்,சரிதஸ்ய வக்தா;
ந மே மதிஸ்த்வத்ஸ் மரணை க ஸக்தா;
அ வா ச்யவக்தா, ஹ ம கார்ய கர்தா;
நமாமி மாதச்,சரணா ம்புஜம் தே

நாரதருக்கு இதைத் தெரிந்து கொள்ள குருவாக ப்ரம்மா இருந்தார். வ்யாஸருக்கு நாரதர் குருவாகக் கிடைத்தார். ஆனால் எனக்கு குருவும் இல்லை. என்னால் தேவியைத் த்யானம் செய்யவும் முடியவில்லை. மனதை அதில் ஈடுபடுத்த முடியவில்லை. நான் மிகவும் கஷ்டப்படுகிறேன். நல்லதைச் செய்யா விட்டாலும் தீயவைகளையாவது செய்யாமல் இருக்க வேண்டும். அதுவும் முடியவில்லை. செய்யக்கூடாததைச் செய்கிறேன். பேசக் கூடாததைப் பேசுகிறேன். இவைகளிலிருந்து என்னைக் காப்பாற்ற உன் கருணை வேண்டும் என்று இந்த கவி தேவியை நமஸ்கரிக்கிறார்.

பதினொன்றாம் தசகம் முடிந்தது

தசகம் 12

உதத்யஜனனம்

1. புரா த்விஜ: கச்,சன தேவதத்தஹ
நாம ப்ரஜார்தம், தமஸாஸமீபே
குர்வன் மகம் கோபி,லசாபவாசா
லேபே ஸுதம் மூட,மனந்த து:கஹ

கோசல தேசத்தில் தேவதத்தன் என்னும் ஒரு பிராம்மணன், தனக்குப் புத்திர பாக்யம் வேண்டும் என்று தமஸா நதிக் கரையில் யாகசாலை அமைத்து, வேதாத்யாயனத்தில் சிறந்த அந்தணர்களை அழைத்து யாகம் செய்யத் தொடங்கினான். அப்பொழுது சாமவேத அந்தணரான கோபிலர் சாமகானம் செய்யும் பொழுது, மூச்சை அடக்கிச் சொல்ல வேண்டிய இடத்தில் அப்படிச் செய்ய முடியாமல் சுவாசத்தை விட்டு விட்டு ஸ்வரபங்கமாகச் சொன்னார். அதைக் கண்ட தேவதத்தன் “ஏ பிராம்ணரே! நான் புத்திர பாக்யம் வேண்டி இந்த யாகத்தைச் செய்கிறேன். ஆனால் நீரோ ஸாமகானத்தைச் ஸ்வர பங்கமாகச் சொல்கிறீரே! இது அமங்கலம் அல்லவா? இது என்ன மூடத்தனம்?” என்று அவரைக் கோபித்தான். உடனே கோபிலர் எனக்கு வயதான காரணத்தால் ஸாமகானம் இசைக்கும் பொழுது சிறிது ஸ்வரபங்கம் வந்தது. இதற்காக என்னை நீர் கோபித்தல் ஆகாது. என்னை மூடனென்று சொன்ன உனக்கு மூடனாகவே புத்திரன் பிறக்கட்டும்’ என்று சபித்தார். தேவதத்தன் உடனே’ அய்யா! நான் ஏற்கனவே புத்திரன் இல்லையே என்று துக்கத்தில் இருக்கிறேன். மூடனாகப் புத்திரனைப் பெறுவது அதைவிட துக்கம் அல்லவா? என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று சரணாகதி அடைந்தான். கோபிலரும் அவன் துக்கம் தணிக்க வேண்டி மூடனாக ஜனித்தாலும் காலம் செல்லச் செல்ல அவன் வித்வானக மாறுவான் என்று அனுக்கிரஹம் செய்தார்.

2. உதத்ய நாமா வவ்ருதே ஸ பாலோ
மூடஸ்து த்ருஷ்டம், ந ததர்ச கிஞ்சித்
ச்ருதம் ந சுச்ராவ, ஜகாத நைவ
ப்ருஷ்டோ, ந ச ஸ்நா,ந ஜபாதி சக்ரே

சிறிது காலம் சென்ற பின் தேவதத்தன் மனைவி கர்பமானாள், ரோஹிணி நட்க்ஷத்திரத்தில் குமாரனைப் பெற்றாள் “உதத்தியன்” என்று பெயரும் வைத்தார்கள். அவன் வளந்து வந்தான். உரிய வயதில் உபநயனம் செய்வித்தார்கள். இப்படியாக 12 வருடம் கழிந்தது. ஆனால் உதத்தியனுக்கு சந்தியாவந்தன மந்திரம் கூடச் சொல்லத் தெரியவில்லை. அவனுடைய சக வயதுக் குழந்தைகளும் அவனைக் கேலி செய்யத் துவங்கினர். பெற்றவர்களும் குருடனாகவோ, முடவனாகவோ இருந்தாலும் கல்வி அறிவு இருந்தால் அவன் உயந்தவனே. இப்படி மூடனாக இருப்பதால் பயன் யாது? என்று மனம் வருந்தினர். உதத்யனும் அவமானத்தால் மனம் வருந்தி ஒரு நாள் காட்டிற்குச் சென்றுவிட்டான்.

3. இதஸ்ததோடன், ஸமவாப்த கங்கஹ
ஜலே நிமஜ்ஜன், ப்ரபி பம்ஸ்த தேவ,
வஸன் முநீநா,மூடஜே ஷு வேத
மந்த்ராம்ச்ச ச்ருண்வன், ஸதினானி நிந்யே

பின் அந்த வனத்திலிருந்துச் சென்று கங்கைக் கரையின் ஓரத்தில் ஒரு குடிலை அமைத்துக் கொண்டு, கங்கையில் குளிப்பதும், அந்த நீரை உட்கொள்வதும், அங்கிருந்த முனிவர்கள் செய்யும் பூஜையைப் பார்ப்பதும், அவர்கள் தரும் பழங்கள் போன்ற பிரசாதங்களைச் சாப்பிடுவதும் ஆக இப்படியே காலம் கழித்தான். அவன் தீயவர்கள் யாருடனும் சேராமல் இப்படி முனிவர்களின் ஸத்சங்கம் கிடைத்தது அன்னையின் அருள் அல்லவா!

4. க்ரமேண ஸத்ஸங்க, விவ்ருத்த ஸத்வஹ
ஸத்யவ்ரத: ஸத்ய,தபாச்ச பூத்வா
நாஸத்ய வாக், த்வத், க்ருபயா ஸ மூடோபி
யுன்மீலிதாந்தர், நயனோ பபூவ

அவனுக்கு ஸத் சங்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமோ குணம் நீங்கி ஸத்வ குணம் வந்தது. அன்னையின் அருளால் அவன் அகக்கண் திறந்தது. மெதுவாகப் பேச ஆரம்பித்தான். அவன் பொய்யே பேசாமல் எப்பொழுதும் உண்மையையே பேச ஆரம்பித்தான். அதனால் அவனை “ஸத்யவ்ரதன்” என்று அழைக்க ஆரம்பித்தார்கள். பிறருக்கு இது நன்மை தரும், இது தீமை தரும் என்று எதையும் உணராது வனத்தில் பயமில்லாமல் இருந்து வந்தான்.

5. குலம் பவித்ரம், ஜனனீ விசுத்தா
பிதா ச ஸத்கர்ம,ரத: ஸதா மே,
மயா க்ருதம் நைவ நிஷித்தகர்ம
ததாபி மூடோ,ஸ்மி ஜனைச்ச நிந்த்யஹ

இந்த கட்டில் மிருகத்தைப் போல் உலாவிக் கொண்டு வாழ்ந்து வருவதும் ஒரு வாழ்க்கையா? என் தாயும் தந்தையும் உயர்ந்தவர்களே! ஆனாலும் நான் எப்படி இப்படி மூடனாகப் பிறந்தேன்? இது தெய்வத்தின் செயலோ? பின் வேறு ஏது காரணம் இருக்க முடியும்? என்று யோசிக்கிறான்.

6. ஜந்மாந்தரே கிம், நு க்ருதம் மயாகம்?
கிம் வா ந வித்யார்,திஜனஸ்ய தத்தா?
க்ரந்தோப்ய தத்த: கிமு? பூஜ்ய பூஜா
க்ருதா ந கிம் வா, விதிவன்ன ஜானே

தெய்வத்தை நிந்திப்பதால் என்ன பயன்? என் கர்ம பயன் அப்படி யிருந்தால் என்ன செய்ய முடியும்? என் பூர்வ ஜன்மத்தில், கற்ற வித்தையைப் பிறருக்குச் சொல்லித் தராமல் இருந்திருக்கலாம்? அல்லது ஒரு புத்தகமாவது தந்து உதவாமல் இருந்திருக்கலாம்?

பிராம்மணர்களைப் பூஜிக்காமல் இருந்திருக்கலாம்? அதனால் தான் நான் பிராமிணர் குலத்தில் பிறந்தும் மூடனாக இருக்கிறேன் என்று யோசித்தார்.

7. நாகாரணம் கார்ய,மிதீர்யதே ஹி
தைவம் பலிஷ்டம், துரதிக்ரமம் ச
ததோத்ர மூடோ, விபலீக்ருதோஸ்மி
வந்திய த்ருவத்னிர், ஜலமேகவச்ச

இது போன்ற பாபங்கள் நான் ஏதோ செய்து இருக்கிறேன். ரூபவதியானவள் மலடியானது போலும், தழைத்த மரம் பழம் தராதது போலும், செழிப்பான பசு, பால் தராதது போலவும் என் ஜன்மம் வீணானது. செய்த பாபங்களுக்கான பரிகாரமும் செய்யவில்லை. இப்பொழுது யோசிப்பது வீண். நமக்கு தெய்வம் தான் துணை என்று நினைத்தான். கங்கையில் ஸ்நானமும், மஹரிஷிகளின் நெருக்கமும் அவனை இப்படி நினைக்க வைத்தது. கோபிலர் கூறியது நடக்கப் போகிறது. இப்படியே 14 வருடங்கள் கழித்தான். இருந்தும் அவன் பூஜையோ, ஜபமோ, காயத்ரி மந்திரமோ எதையுமே அறியவில்லை. ஆயினும் பொய் பேசாதவனாக இருந்தபடியால் அவனை ஸத்யவ்ரதன் என்று எல்லோரும் புகழ்ந்தார்கள்.

8. இத்யாதி ஸஞ்சின் த்ய, வநே ஸ்தித: ஸ
கதாசித் ஏகம், ருதி ராப்ளு தாங்கம்
பீபத்ஸரூபம், கிடிமேஷ பச்யன்
“அநய்யய்ய ” இத்யுத், ஸ்வன முச்சசார

ஒரு சமயம் ஒரு கொடிய வேடன் விட்ட அம்பினால் அடிபட்ட பன்றி ஒன்று, உடல் முழுவதும் இரத்தம் பெருகி நனைந்தபடி ஸத்யவ்ரதன் முன் வந்தது. அதைக் கண்டதும் இரக்கத்துடன் தன் உடலும் நடுங்க ஐயய்யோ! என்று சொல்லத் துவங்கினான்.

9. சரேண வித்த: ஸ, கிரிர் பயார்ரத்தஹ
ப்ரவேபமானஹ. முனிவாஸ தேசே
அந்தர் நிகுஞ்சஸ்ய, கதச்ச தைவாது
அத்ருச்ய தாமாப, பயார்திஹந்த்ரி

ஜீவர்களைக் காக்கும் க்ருபாவதியான தேவிதான் அந்த பன்றியை அங்கு அனுப்பி இருக்கிறாள். அந்த பன்றியும் துன்பத்துடன் அருகில் இருந்த ஒரு புதரில் மறைந்து கொண்டது.

10. வினா மகாரம், ச வினா ச பக்திம்
உச்சார்ய வாக் பீஜ,மனும் பவித்ரம்
ப்ரஸன்ன புத்தி: க்ருபயா தவைஷ
பபூவ தூரீக்ருத,ஸர்வபாபஹ

“அய்யய்யோ” என்று சொல்ல ஆரம்பித்து, அதைச் சொல்ல முடியாமல் “ஐம்”, “ஐம்” “ஐம்” என்று சொன்னான். இது ஸாரஸ்வத பீஜாக்ஷர மந்திரம். இதுவரை அறியாததும் கேட்காததுமான இந்த மந்திரம் அவன் வாயிலிருந்து மூன்று முறை வந்தது. இது தேவியின் அனுக்ரஹம்தான். அன்னையும் அவன் வாக்பீஜ மந்திரத்தை ஜபித்தான் என்று அவன் மூடத்தனத்தை நீக்கி நல்ல புத்தியை அளித்தாள்.

11. நாஹம் கவிர், கான, விசக்ஷணோ ந
நடோன சில்பாதிஷு ந ப்ரவீணஹ
பச்யாத்ர மாம், மூடம் அனன்ய பந்தும்
ப்ரஸன்ன புத்திம், குரு மாம் நமஸ்தே

உதத்யனன் மூடனாகப் பிறந்தாலும் அன்னையின் அருளால் கங்கைக் கரையை அடைந்து ஸத் ஸங்கம் கிடைக்கப் பெற்று, வாக்பீஜ மந்திரமும் தன்னை அறியாமல் சொன்னான். ப்ரகாஸமான புத்தியை அடைந்தான். இந்த ஸ்தோத்திரத்தை எழுதும் நானும் மந்த புத்தி உடையவன் தான். எனக்கு உன்னைத் தவிர வேறு யாரும் உறவினர் இல்லை. உதத்யனைப் போல் என்னையும் ப்ரஸன்ன புத்தி உடையவனாக ஆக்கு என்று இதன் ஆசிரியர் வேண்டினார்.

பன்னிரெண்டாம் தசகம் முடிந்தது

தசகம் 13

உதத்யமஹிமை

1. அதாகத: கச்சித் அதிஜ்ய தன்வா
முனிம் நிஷாத:, ஸஹஸா ஜகாத
த்வம் ஸத்யவாக் ப்ரூஹி, முனே த்வயா கிம்
த்ருஷ்ட: கிடி; ஸா,யகவித்த தேஹஹ?

அந்தப் பன்றியை வேட்டை ஆடுவதற்காக வந்த வேடன், தர்பாஸனத்தில் அமர்ந்திருக்கும் ஸத்யவ்ரதனைப் பார்த்து “ஐயா! என் அம்பினால் அடிபட்டு வந்த பன்றி ஒன்று இவ்வழியே வந்ததா? நீங்கள் ஸத்யவ்ரதன் என்பதை நான் அறிவேன். எனவே பொய் கூறாமல் உண்மையைச் சொல்லவேண்டும்” என்று சொன்னான்.

2. த்ருஷ்டஸ்த்வயா சேத், வத ஸுகர: க்வ
கதோ ந வாத்ருச்,யத கிம் முநீந்த்ர
அஹம் நிஷாத:, கலு வன்யவ்ருத்திர்
மமாஸ்தி தாரா,திக போஷ்யவர்கஹ

மேலும் அந்த வேடன் சொன்னான் “ஐயா! என் குடும்பம் பசியால் வாடிக்கொண்டிருக்கிறது. அவர்களின் பசியைப் போக்கி அவர்களை ரக்ஷிக்கும் கடமை எனக்கு இருக்கிறது. ப்ரம்மன் என்னை வேடனாகத்தான் படைத்திருக்கிறான். எனக்கு வேட்டை யாடுவதைத் தவிர வேறு தொழில் தெரியாது. அது புண்ணியமோ பாபமோ எனக்குத் தெரியாது என் குடும்பத்தைக் காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது. நான் கூறும் அனைத்தும் உண்மையே. ஆகவே தாங்களும் உண்மை கூற வேண்டும்” என்று ஒரு பொறுப்புள்ள குடும்பஸ்தனைப் போலப் பேசினான்.

3. ச்ருத்வா நிஷாதஸ்ய, வசோ முனி: ஸ
தூஷ்ணீம், ஸ்திதச்சின்,தயதி ஸ்ம காடம்
வாதாமி கிம் த்ருஷ்ட, இதீர்யதே சேது
ஹன்யாதயம் தம்; மம சாப்யகம் ஸ்யாது

பன்றியை பார்த்தீர்களா? அது எங்கே போயிற்று? என்ற வேடனின் கேள்விக்கு பதில் சொல்லாமல் பேசாமல் இருக்கிறான் உதத்யனன். பன்றி இங்குதான் புதரில் ஒளிந்திருக்கிறது என்று சொன்னால் வேடன் அதைக் கொல்வான். அது ஹிம்சைக்குத் துணை போன பாபத்தைத் தரும். பன்றியைக் காணவில்லை என்று சொன்னால் அது அசத்யம் ஆகும். ஸத்யவ்ரதன் பொய் சொல்லலாமா? கூடாது. எனவே என்ன பதில் சொல்வது என ஆலோசிக்கிறான்.

4. ஸத்யம் நரம் ரக்ஷதி ரக்ஷிதம் சேது
அஸத்யவக்தா, நரகம் வ்ரஜேச்ச
ஸத்யம் ஹி ஸத்யம், ஸதயம் ந கிஞ்சிது
ஸத்யம் க்ருபாசூன்ய, மிதம் மதம் மே

பொய் சொல்லக்கூடாது என்பது சரிதான். ஆனால் உண்மை பேசினால் ஒரு உயிர் போகும். அதனால் இந்த உயிர் போகாமல் இருக்கப் பொய் சொல்வதா? அல்லது பொய் பேசக்கூடாது என்பதற்காக உண்மையைச் சொல்வதா? என யோசிக்கிறான். எல்லா சத்யமும் சத்யமாகாது. எதில் கருணை அதாவது க்ருபை இருக்கிறதோ அதுதான் சத்யமாகும் என்ற முடிவிற்கு வருகிறான்.

5. ஏவம் முனேச் சின்,தயத: ஸ்வகார்ய-
-வ்யக்ரோ நிஷாத:, புனரேவ,மூசே
த்ருஷ்டஸ்த்வயா கிம்,ஸ கிடிர் ந கிம் வா
த்ருஷ்ட: ஸ ,சீக்ரம், கதயாத்ர ஸத்யம்

இப்படி ஸத்யவ்ரதன் ஆலோசித்துக் கொண்டிருக்கும் போது வேடன் பன்றியைக் கண்டீர்களா? இல்லையா? சீக்கிரம் சொல்லுங்கள். இல்லாவிட்டால் பன்றி எங்காவது ஓடிவிடும். என் குடும்பம் பட்டினி ஆகிவிடும். சீக்கிரம் சொல்லுங்கள் என்கிறான்.

6. முனிஸ்த,மாஹா த்ர, புன: புன: கிம்
நிஷாத மாம் ப்ருச்,சஸி மோஹமக்னஹ?
பச்யன் ந பாஷேத, நச ப்ருவாணஹ
பச்யே தலம் வாக்பி; ரவேஹி ஸத்யம்

தேவியினால் அனுக்ரஹிக்கப் பட்ட ஸத்யவ்ரதன் ஒரு கவிஞனைப் போல் “எவன் பார்க்கின்றானோ அவன் சொல்வதில்லை. எவன் சொல்கிறானோ அவன் பார்ப்பதில்லை” என்றான். கண் பார்த்தாலும் அது பேசுமா? பேசாது. வாய் பேசுகிறது அது பார்க்க முடியுமா? முடியாது. எனவே இது உண்மைதானே. இப்படி அந்தச் சூழ்நிலையைச் சமாளித்தான்.

7. உன்மாதினோ ஜல்,பனமேத தேவம்
மத்வா நிஷாத: ஸஹஸா ஜகாம;
நாஸத்ய முக்தம், முனினா ந கோலஹ
ஹதச்ச சர்வம், தவ தேவி! லீலாஹா

இவன் என்ன இப்படி பார்ப்பதில்லை, சொல்வதில்லை என்று பயித்தியம் போல் உளறுகிறானே என்று வேடன் நினைக்கிறான். ஆனால் ஸத்யவ்ரதன் சொன்னது ஸத்யம்தான். அவன் பொய்யும் சொல்லவில்லை, பன்றியும் காப்பாற்றப்பட்டது. அது தேவியின் க்ருபை. ஸத்யவ்ரதன் பொய் சொல்லலாமா என்ற கேள்வி வரலாம். வேடனுக்கு வேட்டை ஆடுவது அவன் தொழில். அது அவனுக்கு நியாயமே. பாபமல்ல. ஆனால் அவன் துரத்தி வந்த பன்றியை ஹிம்சைக்குக் காட்டிக் கொடுப்பது நியாயமல்ல. தர்ம நியாயம் என்பது எல்லோருக்கும் ஒன்றல்ல. அதற்குச் சில விதி விலக்குகள் இருக்கிறது. அதனால் தான் பன்றியைக் காப்பாற்றினார்.

8. த்ரஷ்டா பரம் ப்ரம்ம, ததேவ ச ஸ்யாது
இதி ச்ருதி: ப்ராஹ; ந பாஷதே ஸஹ
ஸதா ப்ருவாணஸ்து, ந பச்யதீதம்
அயம் ஹி ஸத்ய, வ்ரதவாக்ய ஸாரஹ

உதத்யனன் சொன்னது அந்த நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்கச் சொன்ன பதில் அல்ல. உபநிஷத்துக்களின் தத்வம்.

“யா பஸ்யதி நஸாப்ரூதே யாப்ரூதே ஸா நபஸ்யதி /
அஹோ வ்யாத ஸ்வகார்யார்த்தின் கிம ப்ருச்சஸி புந: புநஹ //

ப்ரம்மத்தை உணந்தவன் ப்ரம்மமாகிறான். தானே ப்ரம்மம் என்று உணர்ந்தவன் அதிகம் பேசமாட்டான். அதிகம் பேசுபவர்களுக்கு ப்ரம்ம தத்வம் அசாத்யமாகும். அந்த ஆனந்தத்தை நாம் அனுபவிப்போம். ஆனால் சொல்லமுடியாது. மௌனமாக இருந்தால் தான் அந்த ஆனந்தம் கிடைக்கும். பேசிக்கொண்டே இருந்தால் த்யானத்தில் மனம் நிலைக்காது. அவன் பக்தனும் ஆகாமாட்டான்.

9. பூய: ஸ ஸாரஸ்,வத பீஜ மந்த்ரம்
சிரம் ஜபன் ஞான,நிதி: கவிச்ச
வால்மீகிவத் ஸர்வ,திசி ப்ரஸித்தஹ
பபூவ பந்தூன், ஸமதர்பயச்ச

உதத்யனன் கோபிலரின் சாபத்தால் மூடனாகப் பிறந்தான். அவன் ஞானி ஆவான் என்றும் அவர் அனுக்ரஹித்தார். அது உண்மை ஆயிற்று. அடிபட்ட பன்றியைக் கண்டு பயத்தினால் உதத்யனன் உளறிய வார்த்தைகளைத் தன் பீஜாக்ஷர மந்திரத்தைச் சொன்னதாக நினைத்து அவனை உலகம் போற்றும் கவிஞனாக்கினாள் தேவீ. ஒரு பெரும் கொள்ளைக்காரன் ராம நாமம் சொன்னதால் வால்மீகீ என்னும் கவிஞனாக மாறினான். தேவீ மூடனைக் கவிஞன் ஆக்குவாள். மூடனைப் பேசவைப்பாள். உதத்யனன் கதை இதற்கு ஒரு உதாரணமாகும். அந்த பரதேவதை எல்லோராலும் பூஜிக்கத் தக்கவள். பக்தியுடன் பூஜித்தால் அன்னை எதுவும் தருவாள்.

10. ஸ்ம்ருதா நதா தேவி, ஸுபூஜிதா வா
ச்ருதா நுதா வா, கலு வந்திதா வா
ததாஸி நித்யம், ஹிதமா ச்ரிதேப்யஹ
க்ருபார்த்ர சித்தே, ஸததம் நமஸ்தே

தேவியை வணங்குவதற்குப் பலவிதமான வழி முறைகள் உள்ளன. தேவியின் நாமத்தைச் சொல்வது, அவளின் கதைகளைக் கேட்பது, தேவியின் பெருமையைப் பாட்டாகப் பாடுவது, கதைகளைப் படிப்பது, த்யானம் செய்வது, பூஜை செய்வது போன்று பல வழிகள் உள்ளன. அதில் ஏதேனும் ஒரு வழியைச் சிரத்தையுடன் செய்தால் அன்னை காட்சி தருவாள்.

தசகம் பதிமூன்று முடிந்தது

தசகம் 14

ஸுதர்சனகதை—பரத்வாஜாச்ரமப்ரவேசம்

1. ராஜா புராSSஸீத், கில கோஸலேஷு
தர்மைக,நிஷ்டோ, த்ருவஸந்திநாமா
ஆஸ்தாம் ப்ரியே, அஸ்ய மனோரமா ச
லீலாவதீ சேதி, த்ருடானுரக்தே

கோஸல தேசத்தில் சூர்ய வம்சத்தில் துருவசிந்து என்னும் அரசன் தர்மாத்மாவாகவும், சத்ய சந்தனாகவும், வர்ணாச்ரம தர்மத்தைத் தானும் கடைபிடித்து, மற்றவர்களையும் அவரவருடைய தர்மத்தைத் கடைபிடிக்கும்படிச் செய்பபவனாகவும் இருந்து கொண்டு, அயோத்தியை எல்லா வளங்களுடனும் அரசாண்டு வந்தான். கலிங்க நாட்டு அரசனான வீரசேனன் மகளான மனோரமாவையும், உஜ்ஜயினி நாட்டு ராஜாவான யுதாஜித் என்பவரின் மகளான லீலாவதியையும் மணந்து கொண்டு, இரு மனைவியருடனும் எந்தவிதமான பிரச்சனைகளும் இன்றி சந்தோஷமாக வாழ்ந்து வந்தான்.

2. மனோரமாSஸூத, ஸுதர்ஷனாக்யம்
குமாரகம், சத்ருஜிதம், ச ஸாந்யா;
ஸம்வர்த்தயம்,ஸ்தௌ, ம்ருகயாவிஹாரீ
வனே ந்ருபோ ஹா!, ஹரிணா ஹதோபூது

சில காலம் இப்படிச் சந்தோஷமாகச் செல்ல, லீலாவதிக்கு சத்ருஜித் என்னும் மகனும், மனோரமாவிற்கு ஸுதர்சனன் என்னும் மகனும் பிறந்தனர். ஒரு நாள் வேட்டை ஆடுவதில் மிகுந்த ஆர்வமும் ஆசையும் கொண்ட துருவசிந்து காட்டிற்கு வேட்டை ஆடச் சென்ற போது, ஒரு கொடிய புலியினால் தாக்கப்பட்டு அதன் நகத்தால் கீறப்பட்டு மரணம் அடைந்தார்.

3. விசிந்தயன், ராஜ,குலஸ்ய வ்ருத்தம்
தஜ்,ஜ்யேஷ்ட புத்ரஸ்ய, ஸுதர்சனஸ்ய
ராஜ்யாபிஷேகாய குருர்,வஸிஷ்டஹ
ச்சகாரமந்த்ரம், ஸசிவை: ஸமேதஹ

துருவசிந்து மரணம் அடைந்ததும் யாருக்குப் பட்டபிஷேகம் செய்வது? ஸுதர்சனனுக்கா அல்லது சத்ருஜித்திற்கா? என்று அனைவரும் யோசிக்கும் பொழுது, குல குருவான வஸிஷ்டரும், மந்திரிகளும் தர்ம பத்தினியான மனோரமாவின் புதல்வன், அரசனுக்குரிய நல்ல சாந்த குணமும், நல்ல ரூபமும் உடையவனாக இருப்பதால் ஸுதர்சனனே பட்டத்திற்கு உரியவன் என நிச்சயித்தனர்.

4. மாதாமஹ: சத்ருஜிதோ யுதாஜிது
அப்யேத்ய ஸத்யோ,Sமிதவீர்யஷாலீ
ராஜ்யே, ஸ்வதௌஹித்ரம்,இஹாபி,ஷிக்தம்
கர்த்தும் குபுத்தி: குருதேஸ்ம யத்நம்

இந்த நேரத்தில் லீலாவதியின் தந்தையான, உஜ்ஜயினிக்கு ராஜாவான யுதாஜித்தும், மனோரமாவின் தந்தையான கலிங்க ராஜாவான வீரசேனனும், தத்தம் பேரன்களுக்குப் பட்டம் கட்ட நினைத்து அங்கு வந்து சேர்ந்தனர். தர்மபத்தினியின் குமாரனாக இருந்தாலும் ஸுதர்சனன் ஒரு அப்பாவி அவனின் சாந்த குணம் அரசாட்சிக்கு ஏற்றதல்ல, அதனால் மூத்தவனான தன் பேரன் சத்ருஜித்திற்கே பட்டம் சூட்ட வேண்டும் என்று யுதாஜித் சொல்கிறார்.

5. மனோரமாயா அபி வீரஸேனஹ
பிதாப்யு,பேத்யாSSசு ருரோத தஸ்ய
யத்நம் பலீ; ஸ்வ,ஸ்வஸுதாஸுதாபி-
-ஷேகைக புத்தி, கலு தாவபூதாம்

இதைக் கேட்டவுடன் மனோரமாவின் தந்தை வீரசேனன் எப்படிப் பேசாமல் இருப்பார்? மூத்த மனைவியான, தர்மபத்னியான, என் மகளின் மகனான ஸுதர்சனனே ராஜா ஆகத் தகுதி உள்ளவன் என்று சொல்கிறார்.

6. க்ருத்வா விவாதம் ச, ததோ ந்ருபௌத்வௌ
கோரம் ரணம் சக்ரதுரித்த ரோஷௌ
யுதாஜிதா தத்ர, து வீரஸேனோ
தைவாத் ஹதோபூத், ஹரிணா கரீவ

இருவரும் இதை விவாதித்து, முடிவில் இருவரும் யுத்தத்திற்குத் தயாராகினர். யுத்தத்தில் இரு பக்க வீரர்களும் சண்டையிட்டுப் பலர் மாண்டு போனார்கள். போரின் முடிவில் யுதாஜித்தின் வாளுக்கு வீரசேனன் பலியாகி மரணம் எய்தினான்.

7. ராஜ்யேSபிஷித்த:, கலு சத்ருஜித் ஸஹ
பாலஸ்ததோSயம், ரிபுபித் யுதாஜிது
தௌஹித்ர ராஜ்யம், ஸுகமேகநாதஹ
சசாஸ வஜ்ரீவ, திவம் மஹேசி

வீரசேனன் மரணம் அடைந்ததும் ச்த்ருஜித்திற்குப் பட்டம் கட்டப்படுகிறது. இருந்தாலும் அவன் பாலகன் அல்லவா? அதனால் அவன் பாட்டனாரான யுதாஜித் ராஜ்ய பரிபாலனம் செய்கிறார். கோஸல நாடு சகல சம்பத்துக்களும் நிறைந்து ஒரு சொர்க்கம் போல் இருக்கும் ஒரு ராஜ்யம். அதை ஆள்பவன் இப்பொழுது ஒரு பாலகன். அதனால் யுதாஜித்தைக் கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள்? தன் இஷ்டப்படி ராஜ்யத்தை ஆண்டு வருகிறான் யுதாஜித்.

8. பத்யு: பிதுச் சாபி, ம்ருதேரநாதா
பீதா விதள்ளா,பித மந்த்ரி,யுக்த்தா
மனோராமா பால,ஸுதா த்வரண்யே
யயௌ பரத்வாஜ,முனிம் சரண்யம்

யுதாஜித் தான் நினைத்தை அடைந்தான். கோஸல ராஜ்யத்தை ஆளத் தொடங்கினான். ஆனால் மனோரமாவிற்குக் கவலை வந்துவிட்டது. தன் தந்தையோ யுத்தத்தில் இறந்துவிட்டான். நமக்கு உதவி செய்பவர்கள் யாரும் இல்லை. முன்பு நம்மை ஆதரித்த மந்திரிகள் கூட இப்பொழுது யுதாஜித்தை ஆதரிக்கத் தொடங்கி விட்டனர். இவர்களால் தனக்கும் தன் மகனுக்கும் எந்த நேரமும் துன்பம் வரலாம். நமக்கு இந்த கஷ்டம் தெய்வாதீனமாய் வந்துவிட்டது. இதை நினைத்து நினைத்து கவலைப்படுவதில் எந்த உபயோகமும் இல்லை. எப்படியாது தன்னையும் மகனையும் காத்துக் கொள்ள வழி தேட வேண்டும் என்று ஆலோசிக்கிறாள். நம்பிக்கைக்குப் பாத்திரமான விதள்ளன் என்னும் ஒரு மந்திரியை அழைத்து யோசனைக் கேட்கிறாள். அவரின் யோஜைனைப்படி தன் பிதாவின் ராஜ்யத்தைப் பார்க்கப் போவதாகப் பொய் சொல்லிவிட்டு, தன் மகனுடன் காட்டு வழியாகப் போகிறாள். அங்கு சில கள்வர்களால் வழி மறிக்கப் பட்டு, இருந்த சில ஆபரணங்கள் பணம் எல்லாவற்றையும் இழந்து விடுகிறாள். மனம் வருந்தி அழுகிறாள். எப்படியாவது தப்பிக்க வேண்டுமே என்று ஒரு நதிக்கரையில் ஒரு படகைப் பிடித்து கங்கைக் கரையை அடைகிறாள். பின் அங்கிருந்து திரிகூட பர்வதம் அடைந்து பரத்வாஜ ஆஸ்ரமத்தை அடைகிறாள்.

9. தபோநிதிர் தீந,ஜனானு கம்பி
ஞாத்வா முனிஸ்தாம், த்ருவஸந்தி,பத்னீம்
உவாச-வத்ஸே! வச நிர்பயைவ
தபோவனேத்ராஸ்து சுபம் தவேதி

மனோரமா எந்தக் காரியத்தை நினைத்துப் புறப்பட்டாளோ அது நடந்தது. பரத்வாஜர் ஒரு சிறந்த தபஸ்வி. மிகுந்த இரக்க மனம் கொண்டவர். அழுதுகொண்டும், பயத்தினால் மனமும் நடுங்கிக் கொண்டிருக்கும் மனோரமாவிடம், சகல விபரங்களும் அறிந்து கொள்கிறார். “அம்மணீ! கவலையை விட்டு விடும். இங்கு நீங்கள் சுகமாக பாதுகாப்பாக இருக்கலாம். உங்களுக்கு எந்த ஆபத்தும் வராது. உன் குமாரன் மீண்டும் அரசனாவான். இதில் சந்தேகம் வேண்டாம். உங்களுக்கு இனி துன்பம் வராது “ என்று ஆசீவதித்தார். விதள்ளன் மிண்டும் ராஜ்யம் திரும்பினார்.

10. அல்போSப்யு,பேக்ஷ்யோ, ந ரிபுர் ந ரோகோபி
ஏவம் ஸ்மன்னாசு, ந்ருபோ யுதாஜிது
தாம் ஹர்துகாம:, ஸஸுதாம் மஹர்ஷேஹே
ப்ராபாSSச்ரமம் மந்த்ரி,வரேண ஸாகம்

ஒருவனுக்கு வியாதி, விரோதி இரண்டும் ஒன்று போலத்தான். வியாதி இருந்தாலும் அல்லது விரோதிகள் இருந்தாலும் உடனே நிவர்த்திக்க வேண்டும். இல்லையென்றால் அது மிகுந்த துன்பத்தைத் தரும். யுதாஜித் மனோரமாவையும் ஸுதர்சனனையும் எதிரிகளாக நினைக்கிறான். சில காலம் சென்று இவர்கள் ராஜ்யத்தை மீண்டும் அபகரிக்க முயற்சி செய்வார்கள். அதனால் கஷ்டம் வரும். அவர்களைக் கொன்று விடுவதே நல்லது என்று முடிவு செய்கிறான். அவர்கள் இருக்கும் இடம் தேடி அலைகிறான். பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் இருப்பதை அறிந்து கொள்கிறான்.

11. ந மாநிதஸ்தேன தபஸ்வினா ஸ
மனோரமாம் நைவ, ஸுதம் ச லேபே;
ப்ரஹர்த்து காமோSபி, முனிம் ஸ மந்த்ரி
வாசா நிவ்ருத்த:,ச்ருத கௌசிகோSபூது

யுதாஜித் வருவதை அறிந்து கொண்ட மனோரமா, யுதாஜித் என்ன செய்வானோ என்று மிகவும் பயப்படுகிறாள். அப்பொழுது அங்கு வந்த யுதாஜித்திடம், யாரும் இங்கு வரவில்லை என்று முனிவர் சொல்கிறார். உண்மையைச் சொல்லாவிட்டால் பலத்காரமாக அவர்களைச் கொண்டு செல்வேன் என்று மிரட்டுகிறான். “என்னைச் சரண் அடைந்தவர்களை நான் உன்னோடு அனுப்பமாட்டேன். முன்பு விசுவாமித்ரர் எப்படிப் பசுவை வஸிஸ்டரிடமிருந்து அபகரித்தாரோ, அப்படி, உனக்குச் சக்தி இருந்தால் அழைத்துக் கொண்டு போ” என்றார் பரத்வாஜர். யுதாஜித் மந்திரிகளிடம் ஆலோசனைக் கேட்கும் பொழுது அவர்கள் முன்பு விஸ்வாமித்திரர் ராஜாவாக இருந்த பொழுது, வஸிஷ்டரிடம் காமதேனுவை அபகரிக்க முயற்சி செய்து, முடிவில் க்ஷத்ரிய பலத்தை விடத் தபோ பலம் மிகுந்த சக்தி உடையது என அறிந்து தானும் கடின தவம் செய்து, ப்ரம்ம தேஜோ பலத்தை அடைந்தார். எனவே நாம் இவரை பகைத்துக் கொள்ளலாகாது. பெண்ணான மனோரமாவாலும், பண பலமில்லாத ஸுதர்சனாலும் எந்த ஆபத்தும் வராது என்று சொன்னார்கள். யுதாஜித்தும் தன் கோபம் தணிந்து பரத்வாஜரை வணங்கித் தன் நகரம் போய்ச் சேர்ந்தான்.

12. ஏவம் முனிஸ்தாம், ஸஸுதாம் ரரக்ஷ
பீதோஸ்மி ஸம்ஸார,யுதாஜிதோSஹம்
ந மே ஸஹாயோஸ்தி, விநா த்வயைஷ
ஸ நூபுரம் தே, சரணம் நமாமி

மனோரமாவிற்கும் ஸுதர்சனுக்கும் அபயம் தர பரத்வாஜர் இருந்தார். யுதாஜித் என்கின்ற கொடியவனான ஸம்சார சாகரத்திலிருந்து காப்பாற்றினார். தாயே! நான் இந்த ஸம்சாரத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறேன். எனக்கு யாரும் இல்லை. நீ மட்டுமே துணை. நான் உன் பாதத்தில் சரணடைகிறேன். என்னை ரக்ஷிக்க வேண்டும் என்று இந்நூலின் ஆசிரியர் அன்னையை வேண்டிக் கொள்கிறார்.

பதிநான்காம் தசகம் முடிந்தது

தசகம் 15

ஸுதர்சணகதை (தேவீ தர்சனம்)

1. ஏவம் தவைவ க்ருபயா, முனிவர்யசீத-
-சாயாச்ரிதோ ஹதபய: ஸ, ஸுதர்சனோயம்
வேதத்வனிச்ரவணபூத, ஹ்ருதாச்ரமாந்தே
ஸம்மோதயன் முனிஜனான், வவ்ருதே குமாரஹ

ஸுதர்சனனும் அவன் அன்னையும் ஆஸ்ரமத்தில் எந்தவிதமான பயமும் இல்லாமல் நிம்மதியாக இருந்து வந்தனர். ஸுதர்சனன் தினமும் ஆஸ்ரமத்தில் தெய்வீக மந்திர சப்தத்தைக் கேட்டு வந்தான். ஸுதர்சனனின் சுபாவத்தைக் கண்டு முனிவர்கள் அனைவரும் மிகவும் நல்ல குழந்தை என்று சந்தோஷப்பட்டனர்.

2. ஆபால்யமேஷ, முனிபாலகசங்கமேன
க்ளீம் க்ளீ மிதீச்வரி! ஸதா, தவ பீஜமந்த்ரம்
தத்ரோச்சசார; க்ருபயாSஸ்ய, புர: கதாசித்
ஆவிர்பபூவித நதம், தமபாஷதாச்ச

தேவியின் அனுக்ரஹம் இருந்தால் நம்முடைய வாழ்க்கை படகு சீக்கிரம் எந்த கஷ்டமும் இல்லாமல் கரை வந்து சேரும். அதற்கு உதாரணம் தான் இந்த ஸுதர்சனின் கதை. தந்தை இறந்ததும் வேறு வழியில்லாமல் நாட்டை விட்டு அனாதையாக பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் வந்து சேர்ந்தான். அவனுடைய சக நண்பர்கள் எல்லோரும் முனி குமாரர்களே. அவன் காதில் தினமும் விழுந்து கொண்டிருப்பது மந்திர சப்தமே. முனி குமாரர்கள் “க்ளீம் க்ளீம்” என்று உச்சரிக்கும் மந்திர சப்தத்தைக் கேட்டு அவனுக்கு அதில் ஒரு ஈடுபாடு வந்தது. முனி குமார்கள் சொல்வது தேவியின் காமராஜ பீஜ மந்திரம். ஆனால் ஸுதர்சனன் அதன் பொருள் புரியாமல் சந்தோஷமாக அதை 5 வயது முதல் 11 வயது வரைச் சொல்லி வந்தான். பரத்வாஜரும் அவனுக்கு உபநயம் செய்வித்து, அவனுக்குச் சகல வித்தைகளையும் கற்பித்தார். அவன் அனைத்தையும் எளிதில் அறிந்து கொண்டு, பண்டிதனாக ஆனாலும் தன் தாய்க்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளையும் மறவாமல் செய்து வந்தான். ஒரு நாள் நதிக்கரையில் வந்து கொண்டிருக்கும் பொழுது தேவீ அவனுக்குக் காட்சி தந்தாள்.

3. ப்ரீதாSஸ்மி தே ஸுத! ஜகஜ்,ஜனனீ மவேஹி
மாம் ஸர்வகாம,வரதாம்; தவ பத்ரமஸ்து;
சந்த்ரானனாம், சசிகலாம், விமலாம் சுபாஹோஹோ
காசீச்வரஸ்ய தனயாம், விதிநோத் வ ஹ த்வம்

சிவந்த நிறம், சிவந்த நிற ஆடை, சிவந்த ஆபரணம் ஆகியவைகளுடன் கருட வாகனத்தில் மஹாலக்ஷ்மி ஸ்வரூபிணீயாக அன்னை தோன்றி ஸுதர்சனனை “மகனே” என்று அழைக்கிறாள். அவனுக்கு வில்லும், அம்பும், அம்பராத் துணியும், வஜ்ரகவசமும் தந்து “நீ காசிராஜன் மகள் சசிகலையை விவாஹம் செய்துகொள். உனக்கு எல்லா நன்மையும் உண்டாகும்” என்று சொன்னாள்.

4. நஷ்டா பவே,யுரசிரேண, தவாரிவர்க்கா
ராஜ்யம் ச யைர,பஹ்ருதம், புனரேஷ்யஸி த்வம்
மாத்ருத்வயேன, ஸசிவைச்ச, ஸமம் ஸ்வதர்மானு
குர்யா: ஸதேதி, ஸமுதீர்ய திரோததாத

மேலும் “உன்னுடைய எதிரிகள் எல்லோரும் அழிந்து போவார்கள். ராஜ்யம் உனக்கே கிடைக்கும். உன் தாயாரான மனோரமாவோடு, லீலாவதியையும் உன் தாயாராக நினைக்க வேண்டும். எந்தவிதமான விரோத மனப்பான்மையும் இருக்கக் கூடாது. யுதாஜித்திற்கு உதவியாக இருந்த மந்திரிகள் அவர்கள் கடமையைத் தான் செய்தார்கள். எனவே அவர்களிடமும் விரோத மனம் காட்டக் கூடாது. ஒரு ராஜாவிற்கு ராகத்வேஷம் இருக்கக் கூடாது. எனவே ராஜ தர்மங்களை நீ அனுஷ்டிக்க வேண்டும் ” என்று சொல்லி மறைந்தாள்.

5. ஸ்வப்னே த்வயா, சசிகலா, கதிதாS”ஸ்தி பார-
-த்வாஜாச்ரமே, ப்ரதித,கோஸலவம்சஜாதஹ
தீமான் ஸுதர்சன,இதி த்ருவஸந்தி புத்ர
ஏனம் பதிம் வ்ருணு; தவாஸ்து சுபம் ஸதே”தி

ஸுதர்சனனுக்கும் சசிகலைக்கும் திருமணம் செய்வித்து சசிகலாவின் தந்தை சுபாகுவிற்கு அனுக்ரஹம் செய்ய தேவீ நினைத்தாள். அதனால் ஸுதர்சனனுக்குக் காட்சி தந்த தேவீ காசிராஜன் மகள் சசிகலையின் கனவிலும் தோன்றினாள். சசிகலையிடம், “உன்னை விவாஹம் செய்து கொள்ளப் பிறந்திருக்கும் துருவஸந்தி என்னும் கோசல நாட்டு ராஜாவின் மகன் ஸுதர்சனன் பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் இருக்கிறான்” என்று சொல்லி மறைந்தாள்.

6. ஸ்வப்னானுபூத,மன்ருதம் கிம்ருதம் ந வேதி
ஸுப்தோத்திதா து மதி,மத்யபி ந வ்யஜானாது
ப்ருஷ்டாத் ஸுதர்சன,கதாம்,ஸுமுகீ த்விஜாத் ஸா
ச்ருத்வாSனுரக்த் ஹ்ருதயைவ பபூவ தேவீ

சசிகலை கண் விழித்ததும் தான் தேவியைப் பார்த்ததும், தேவி சொன்னதும், நிஜமா அல்லது கனவா என்று ஒன்றும் புரியவில்லை. ஆயினும் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தாள்.

நந்தவனத்திற்குச் சென்று தான் கண்ட கனவைத் தன் தோழியிடம் சொல்லி மகிழும் போது அங்கு ஒரு பிராமணர் வர, அவரைக்கண்டு நமஸ்கரித்து “எங்கிருந்து வருகிறீர்”? என வினவுகிறாள். அவரும் பரத்வாஜர் ஆஸ்ரமத்திலிருந்து வருவதாகச் சொன்னார். அந்த ஆஸ்ரமத்தில் ஏதும் அதிசியமாக உலகில் இல்லாதது உண்டா? எனக் கேட்கிறாள். குணத்திலும், உருவத்திலும், சிறப்பாக ப்ரம்மனால் படைக்கப் பட்டிருக்கும் புருஷனுக்குரிய சகல லட்க்ஷணங்களும் உடைய ஸுதர்சனன் தான் அந்த அதிசயம். நீ அவனை மணந்து கொண்டால் ஸ்வர்ணமும், மாணிக்கமும் இணந்த அழகு போல் ஆகும் என்று சொன்னார். தான் சொப்பனத்தில் கண்டது உண்மைதான் என்ப் புரிந்து கொள்கிறாள். அவனையே கல்யாணம் செய்து கொள்ள ஆசைப் படுகிறாள்.

7. ஞாத்வா ஸுபாஹுரிதம் ஆகுல மானஸஸ்தாம்
அஸ்மான்னிவர்த்தயிதும் ஆசு ஸஹேஷ்ட பத்ன்யா
க்ருத்வா ப்ரயத்னம் அகிலம், விபலம் ச பச்யன்னு
நிச்சாஸ்வயம்,வரவிதிம், ஹிதமேவ மேநே

ஸுதர்சனனுக்கு எந்த ராஜ்யமும் இல்லை. அவன் காட்டில் ஒரு ஆஸ்ரமத்தில் இருப்பவன். அவனுக்கு எந்த வேலையும் இல்லை. காட்டில் இருப்பவனுக்கு எந்த வேலை இருக்க முடியும்? ராஜ்யம் இல்லாத ஒருவனைத் தன் மகள் காதலிப்பது காசி ராஜனான சுபாகுவிற்குச் சிறிது வருத்தத்தைத் தருகிறது. தன் மகளிடம் அவனிடம் ராஜ்யம் இல்லை, செல்வம் இல்லை. அவனைக் கல்யாணம் செய்து கொண்டால் நீ கஷ்டப் படுவாய் என்று சொல்லி அவள் மனதை மாற்ற முயற்சிக்கிறார். அதனால் சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்கிறார். அந்த காலத்தில் சுயம்வரம் என்பது மூன்று வகை. 1. இச்சா சுயம்வரம் (விரும்பிய மணாளனைத் தேர்ந்தெடுப்பது) 2. வீர சுயம்வரம். வீர தருமத்தால் கன்னிகையை வரிப்பது. உதாரணம் பீஷ்மர்) 3. பந்தய சுயம் வரம். ( ராமன், அர்ஜுனன்) இதில் இந்த முதல் வகை சுயம்வரத்தை ஏற்பாடு செய்கிறார். ராஜாக்களின் அழகு, பலம், வீரம், செல்வம் இவைகள் எல்லாம், தன் மகளின் மனத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் சசிகலை என்ன செய்தாள்?

8. கச்சித் கதாசன ஸுதர்சன,மேத்ய விப்ரஹ
ப்ராஹாSSகத:, சசிகலா,வசஸாSஹமத்ர;
ஸா த்வாம் ப்ரவீதி – ந்ருபபுத்ர! ஜகஜ்ஜனன்யா
வாசா வ்ருதோஸி பதி;, ரஸ்மி தவைவ தாஸீ

ருக்மிணி தேவீ எப்படி ஒரு அந்தணரிடம் செய்தி அனுப்பினாளோ, அதைப் போல் சசிகலாவும் அந்தணரிடம் ஒரு கடிதம் அனுப்புகிறாள். அவரும் பரத்வாஜர் ஆஸ்ரமம் சென்று, அனைத்தையும் ஸுதர்சனிடம் சொல்கிறார். சசிகலைக்கு சுயம்வரம் ஏற்பாடு நடக்கிறது என்றும் சொல்கிறார்.

9. அத்ராSSகதா ந்ருபதயோ, பஹவஸ்தவமேத்ய
தேஷாம் ஸுதீர! மிஷதாம், நய மாம் ப்ரியாம் தே
ஏவம் வதூவசன; மாநய தாம் ஸுசீலாம்
பத்ரம் த்வாஸ்த்வி, தமுதீர்ய ஜகாம விப்ரஹ

சுயம் வரத்திற்கு அழகு, படை பணம், பலம் வீரம் உடைய எல்லா ராஜாக்களும் காசி நகரம் வர ஆரம்பித்தார்கள். ஆனால் சசிகலைக்கு யாரிடமும் விருப்பமில்லை. அவள் ஸுதர்சனனை மட்டுமே காதலித்தாள். வீரனும் ராஜா த்ருவஸந்தியின் புதல்வனுமான ஸுதர்சனன், தன்னை விவாஹம் செய்தல் மிகவும் பொருத்தமே என்று நினைத்தாள். அந்த அந்தணர் சொல்லியது போல் கட்டாயம் ஸுதர்சனன் சுயவரத்திற்கு வருவான். தன்னை விவாஹம் செய்து கொள்வான் என்று நம்பினாள்.

10. ஸ்வப்னே ச ஜாக்ரதி ச, பச்யதி பக்தவர்யஹ
த்வாம் ஸந்ததம் தவ வசோ, மதுரம் ச்ருணோதி
ஐஸ்வர்யமாசு லபதேபி ச முக்தி,மேதி
த்வத்பக்திமேவ மம தேஹி; நமோஜனன்யை

ஸுதர்சனனுக்கு அன்னை நேரில் காட்சி தந்தாள். சசிகலாவிற்குக் கனவில் காட்சி தந்தாள். அவர்களுடன் அன்னை பேசினாள். அவர்களுக்கு நிச்சயம் ஐஸ்வர்யமும் மோட்க்ஷமும் கிடைக்கும். தாயே அவர்களைப் போல் எனக்கும் உன்னிடம் பக்தி வர வேண்டும் என்று இந்த கவிஞன் அன்னையை நமஸ்கரிக்கிறார்.

தசகம் பதினைந்து முடிந்தது

தசகம் 16

ஸீதர்சன விவாஹம்

1. ச்ருத்வா வதூவாக்ய,மரம் குமாரோ
ஹ்ருஷ்டோ பரத்வாஜ,முனிம் ப்ரணம்ய
ஆப்ருச்ய மாத்ரா, ஸஹ தேவி! ஸ த்வாம்
ஸ்மரன் ரதேனாSப புரம் ஸுபாஹோஹோ

இந்த சூழ்நிலையில், தேவி தன்னிடம் கூறிய சசிகலையைக் காண வேண்டும் என்று ஸுதர்சனன் ஆவல் கொண்டான். அந்த நேரத்தில் சசிகலையிடமிருந்து, அந்த அந்தணன் வந்து, அங்கு நடந்தவைகளையும் “ஸுதர்சனன் சுயம்வரத்திற்கு வரவேண்டும், தன்னை மணந்து கொள்ள வேண்டும்” என்று சசிகலை தெரிவித்ததாகவும் கூறுகிறான். அதனால் ஸுதர்சனன் பரத்வாஜரைப் பார்த்து, தேவி தன்னிடம் கூறியவற்றையும், சசிகலையிடமிருந்து அந்தணர் கொண்டு வந்த செய்தியையும் கூறி, அவர் அனுமதியும் ஆசியும் பெற்றுத், தன் தாயையும் வணங்கி, காசி நகரம் நோக்கி ரதத்தில் புறப்படுகிறான். அங்கு உள்ள முனிவர்கள் “சுதர்சனா! உனக்குக் கோஸல நாடு மீண்டும் கிடைக்கும், நீ மீண்டும் அரசனாவாய்” என்று அவனுக்கு ஆசி கூறி அனுப்புகிறார்கள்.

2. ஸ்வயம்வராஹுத, மஹீபுஜாம் ஸ
ஸபாம் ப்ரவிஷ்டோ, ஹதபீர் நிஷண்ணஹ
கன்யா கலா பூர்ண,சசீ த்வஸா விஹி
ஆஹுர் ஜனாஸ்தா,வபி வீக்ஷமாணாஹா

ஸுதர்சனன் சுயவரத்திற்கு வருகிறான். அங்கு பல பெரிய பெரிய ராஜாக்கள் வந்திருக்கின்றனர். ஸுதர்சனனுக்கு ராஜ்யம் இல்லை, அவன் ராஜாவும் இல்லை. ஆனால் அவனிடம் மற்றவர்களிடம் இல்லாத ஒன்று இருக்கிறது. அது என்ன? பக்தி. தேவி பக்தி. அந்த பக்தியினால் உண்டான தைரியத்தால் அவன் அங்கு வந்திருக்கிறான். அவனைக் கண்டதும் சில ராஜாக்கள் ஆகா! இவனன்றோ சசிகலைக்கு ஏற்றவன். இவன் சந்திரன் போலவும், அவள் கலையாகவும் இருக்கின்றனரே. இவர்களல்லவோ ஒருவருக்கொருவர் பொருத்தமானவர்கள் என நினைக்கின்றனர்.

3. வதுச்ச தத்தர்,சனவர்திதானு-
ராகா ஸ்மரந்தீ, தவ வாக்யஸாரம்
ஸபாம் ந்ருபாணாம் அஜிதேந்த்ரியாணாம்
ந ப்ராவிசத் ஸா, பித்ருசோதிதாSபி

சபையில் அமர்ந்திருக்கும் ஸுதர்சனனை சசிகலா பார்க்கிறாள். ஆகா! இவன் தேவி சொன்னது போல் மிக அழகாக இருக்கிறான். எனக்கு ஏற்றவனாகவும் இருக்கிறான். நான் நினைத்ததை விட அழகாக இருக்கிறான் என்று நினைக்கிறாள். அவளின் தந்தை அவளை சுயம்வர மண்டபத்திற்கு அழைக்கிறார். ஆனால் சசிகலை ” அப்பா! நான் ஏற்கனவே ஸுதர்சனனை மணாளனாக வரித்து விட்டேன். அதனால் நான் சுயம்வர மண்டபம் வர விரும்பவில்லை. என்னை ஸுதர்சனனுக்கே விவாஹம் செய்துவையுங்கள்” என்று சொன்னாள்.

4. சங்காகுலாஸ்தே, ந்ருவரா பபூவுஹு
உச்சைர் யுதாஜித், குபிதோ ஜகாத
மா தீயதாம் லோக,ஹிதானபிஜ்ஞா
வதூரசக்தாய ஸுதர்சனாய

எல்லா தேசத்து ராஜாக்களும் சபையில் கூடியிருந்தும், சசிகலை இன்னும் சுயம்வரம் மண்டபத்திற்கு வரவில்லை. சசிகலைக்கு ஸுதர்சனனிடம் பிரேமை. ஏதோ பிரச்சனை இருக்கிறது என்று எல்லோரும் நினைக்கிறார்கள். அப்போது மிகவும் பிரபலமான ராஜாவான யுதாஜித் “சசிகலையை சுயம்வரத்திற்கு அழைத்த ராஜாக்களில், ஏதோ ஒரு ராஜாவிற்கு மட்டுமே கல்யாணம் செய்து தர வேண்டும். ஸுதர்சனன் ராஜாவல்ல. ராஜ கன்னிகையை மணக்க அவனுக்குத் தகுதியில்லை. ஸுதர்சனன் எதற்கும் தகுதியில்லாதவன். அவனுக்கு சசிகலையை கல்யாணம் செய்து கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்”.

5. பாலோSயமித்யேஷ, மயாSSச்ரமே ப்ராது
உபேக்ஷித: ஸோSத்ர ரிபுத்வமேதிஹி
மாSயம் ச வத்வா, வ்ரியதாம்; வ்ருதச்சேது
ஹன்யாம் இமம்; தாம், ச ஹரேயமாசு

பரத்வாஜர் ஆஸ்ரமத்தில் ஸுதர்சனனும் அவன் தாயான மனோரமாவும் இருந்த போது, அவர்களை பலவந்தமாகக் கொண்டு போக முயற்சி செய்தான் யுதாஜித். ஆனால் முனிவரின் சாபத்திற்கு பயந்து அவர்களை அப்படியே விட்டு வைத்தான். அன்று செய்த செயல் இன்று தவறாக ஆனது. அதனால் தான் ஒன்றும் அறியாத பாலகனாக இருந்த ஸுதர்சனன் வளர்ந்து, இப்படி எதிரியாக வந்து நிற்கிறான் என்று நினைத்தான். சுபாகுவிடம் சசிகலையை ஸுதர்சனனுக்குக் கல்யாணம் செய்து கொடுத்தால் ஸுதர்சனனைக் கொன்று விடுவேன் என்று மிரட்டுகிறான். (தேவீ பாகவதத்தில் இந்த சுயம்வரப் பகுதி மிக முக்யமாகச் சொல்லப் படுகிறது).

6. சுருத்வா யுதாஜித்,வசனம் ந்ருபாலா
ஹிதைஷிண:கே,சிதுபேத்ய ஸர்வம்
ஸுதர்சனம் ப்ரோசு; ரதாபி தீரஹ
ஸ நிர்பயோ நைவ, சசால தேவி

யுதாஜித்தின் மனதை அறிந்த சில நல்ல குணமுடைய ராஜாக்கள், ஸுதர்ஸனனிடம் சென்று “ராஜ புத்திரனே! இந்த சுயம்வரத்திற்கு நீயாக வந்தாயா? அல்லது யாரும் உன்னை அழைத்தார்களா? நீயோ தனியாக வந்திருக்கிறாய். உன் சகோதரனுக்கு அந்த கன்னிகையை மணமுடிக்க யுதாஜித் நிச்சயித்திருக்கிறான். உனக்கு அவனைப் பற்றி நன்றாகத் தெரியும். அவன் எதற்கும் துணிந்தவன். அவன் இதற்காக யுத்தத்திற்கும் தயாராக இருக்கிறான். உனக்கோ சகாயம் செய்ய யாரும் துணை இல்லை. அதனால் நீ யோசித்து முடிவு செய். இல்லாவிட்டால் இப்பொழுதே நீ கிளம்பிப் போய்விடு. இதை உன் நலனுக்காகவே கூறினோம்” என்று சொன்னார்கள். ஸுதர்சனன் சொல்கிறான் “நீங்கள் கூறிய அனைத்தும் உண்மையே. என்னிடம் எந்த படை பலமும் இல்லை. என் இஷ்ட தேவதை பகவதியின் விருப்பப்படி நான் இங்கு சுயம்வரத்திற்கு வந்தேன். அவள் விருப்பம் என்னவோ அதன் படிதான் எல்லாம் நடக்கும். இந்த உலகம் முழுவதும் அவள் விருப்படிதான் இயங்குகிறது. அதனால் எது நடக்கவேண்டுமோ அது தானாகவே நடக்கும். அதை மாற்ற யாராலும் முடியாது. என்னிடம் பகைமை காட்டும் யுதாஜித்திடமோ அல்லது அவருக்குத் துணை புரியும் மற்ற ராஜாக்களிடமோ எனக்குப் பகைமை இல்லை (இது ஸத் புத்தி உள்ளவர்களின் குணம்). அந்த பகவதி எல்லாம் பார்த்துக் கொள்வாள். எனக்கு எந்த பயமும் இல்லை” என்று சொல்கிறான்.

7. ஏகத்ர புத்ரீச, ஸுதர்சனச்ச,
யுதாஜிதன்யத்ர, பலீ ஸகோபஹ
தன்மத்யகோமம்.க்ஷீ ந்ருப: ஸுபாஹுர்
பத்தாஞ்சலி: ப்ராஹ, ந்ருபான் வினம்ரஹ

இந்த நேரத்தில் சுபாஹு நினைக்கிறார் ஸுதர்சனனைத்தான் மணப்பேன் என்று சசிகலை சொல்கிறாள். ஸுதர்சனன் சசிகலையை பலாத்காரமாக கொண்டு போக மாட்டான். அந்த தவறான செயலை அவன் செய்யவும் மாட்டான். சுயம்வரத்திற்கு வந்த அவனை நான் திரும்பிப் போ என்று சொல்ல மாட்டேன். அது நியாயம் இல்லை. ஆனாலும் சசிகலை அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்வாள். அப்படி நடந்தால் யுதாஜித்தும் அவனைப் போன்ற மற்ற ராஜாக்களும் கோபம் கொண்டு சண்டைக்கு வருவார்கள். இந்த சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? என்ன செய்வது என்று மனம் குழம்பி ஒரு முடிவுக்கு வருகிறான். என்ன முடிவு அது?

8. “ந்ருபா வசோ மே, ச்ருணுதேஹ பாலா
நாSSயாதி புத்ரீ, மம மண்டபேSத்ர
தத்ஷம்யதாம், ச்வோத்ர, நயாம்யஹம் தாம்
யாதாத்ய வோ விச்,ரமமந்திராணி”

சுபாஹு சுயம்வரம் மண்டபத்தில் கூடியிருக்கும் ராஜாக்களிடம் நானும் என் மனைவியும் எவ்வளவு அழைத்தும் என் மகள் இன்று மண்டபத்திற்கு வரச் சம்மதிக்கவில்லை. எல்லோரும் தயை கூர்ந்து எங்களை மன்னிக்க வேண்டும். அவரவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருக்கும் மாளிகையில் ஓய்வெடுக்க வேண்டும். நாளை மண்டபத்திற்கு சசிகலையை அழைத்து வருகிறேன் என்று ஒரு பொய்யைச் சொல்லி நிலைமையை சமாளித்தார். ஏன் என்றால் அவருக்கு நன்றாகத் தெரியும் மகள் மண்டபத்திற்கு வர சம்மதிக்க மாட்டாள் என்று. அந்த சூழ்நிலையில் வேறு என்ன செய்ய முடியும்?

9. கதேஷு ஸர்வேஷு, ஸுதர்சனஸ்து
த்வாம் ஸம்ஸ்மரன் மாத்,ரு ஹிதானுஸாரீ
ஸுபாஹுனா தன்,னிசி தே ந தத்தாம்
வதூம் யதாவித்,யுதுவாக தேவி!

இதைக் கேட்டதும் சுயம்வரம் மண்டபத்தில் இருந்த யுதாஜிதிற்குக் கோபம் வருகிறது. அவர் சொல்கிறார் “உன் நடவடிக்கையில் எங்களுக்குச் சந்தேகம் வருகிறது. ஸுதர்சனனுக்கு உன் மகளை மணம் செய்விக்க நினைக்காதே. என் பேரனுக்கோ அல்லது வேறு ராஜகுமாரனுக்கோ கல்யாணம் செய்து வை. அதில் எனக்கு சம்மதம் தான். ஆனால் என் எதிரியான ஸுதர்சனுக்கு விவாஹம் செய்விக்க நினைத்தால் உனக்கும் எனக்கும் பகை உண்டாகும். இதை உன் மகளிடம் சொல்லி முடிவு செய்” என்று சொல்கிறார். சுபாகுவிற்கு மிகவும் கவலை வருகிறது. மனைவியுடன் சென்று மகளிடம் பேசுகிறார். ஆனால் சசிகலையோ பிடிவாதமாக ஸுதர்சனைத்தான் விவாஹம் செய்து கொள்வேன் என்று முடிவாகச் சொல்கிறாள். மகளின் நல்வாழ்வை மனதில் எண்ணி நள்ளிரவில் ஸுதர்சனனை அழைத்துக் கொண்டு ஒரு ரகஸ்ய இடத்திற்குச் சென்று, தேவியின் முன்னிலையில், மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்கிறார். ஸுதர்சனனும் தன் அன்னை மனோரமாவின் ஆசியைப் பெற்று சசிகலையை மணந்து கொள்கிறான்.

10. ப்ராதர் யுதாஜித், ப்ரபலோ விவாஹ
வார்தாம் நிசம்யாSSத்,தருஷா ஸஸைன்யஹ
ஸுதர்சனம் மாத்ரு,வதூஸமேதம்
யாத்ரோன் முகம், பீமரவோ ருரோத

வாத்ய கோஷங்களைக் கேட்ட மற்ற ராஜாக்கள் சுபாகு மகளுக்குச் ஸுதர்சனனை விவாஹம் செய்து வைத்து விட்டான் என்று புரிந்து கொள்கின்றனர். அதனால் ஸுதர்சனன் போகும் வாயில் வழியில் யுதாஜித்தும் மற்ற ராஜாக்களும் தங்களை அவமானப்படுத்திய அனைவரையும் எதிர் கொள்ளத் தயாராகப் படைகளுடன் நிற்கின்றனர். அதே நேரத்தில் சசிகலையையும் தன் தாயாரையும் அழைத்துக் கொண்டு சுபாகு ஏற்பாடு செய்திருந்த ரதத்தில் ஏறி, ஸுதர்சனனும் அங்கு வருகிறான்.

11. ததோ ரணே, கோரதரே, ஸுபாஹுஹு
க்ளீம் க்ளீமிதீசானி! ஸமுச்ச சார
தத்ராSSவிராஸீ:,ஸமராங்,கணே த்வம்
ஸிம்ஹாதிரூடா, ஸ்வஜனார்த்தி ஹந்த்ரீ

காமராஜ பீஜ மந்திரமான “க்ளிம் க்ளிம்” என்ற மந்திரத்தை ஜபித்தபடி ஸுதர்சனன் ரதத்தில் வருகிறான். ஆனால் சசிகலையை கவர்ந்து செல்லும் நோக்கத்துடன் மற்ற ராஜாக்கள் சத்ராஜித் யுதாஜித்துடன் படைகளுடன் நிற்கிறார்கள். சுபாகு தன் மகளையும் மருமகனையும் காப்பாற்ற அவர்களுடன் யுத்தம் செய்கிறார். எதிரிகள் பாண மழை பொழிகிறார்கள். அதனால் அவர் தேவி உபாஸனை செய்யும் ஸுதர்சனனை உதவிக்கு அழைக்கிறார். அப்பொழுது ஸுதர்சனனுக்கு உதவி செய்ய தேவி யுத்த களத்தில் தோன்றுகிறாள். அந்த மஹா தேவி எப்படியிருந்தாள்? திவ்ய வஸ்த்ரங்கள் தரித்தவளாக மந்தார புஷ்பமாலை சூடி, திவ்ய ஆபரணங்களால் அலங்கரித்துக் கொண்டு, நானாவிதமான ஆயுதங்களுடன் சிம்மவாஹனத்தில் தோன்றினாள். ஆண்கள் யுத்தம் செய்யும் இடத்தில் ஒரு பெண்ணா என்று யுதாஜித் அன்னையைப் பார்த்துக் கேலியாகச் சிரிக்கிறான். அன்னைக்கும் யுதாஜித்திற்கும் ஒரு பெரிய யுத்தம் நடக்கிறது.

12. த்வன்னாம காயன், கதயன் குணாம்ஸ்தே
த்வாம் பூஜயம்ச்,சாத்ர நயாமி காலம் ;
ஸ்வப்னேபி த்ருஷ்ட , ந மயா த்வம் அம்பே!
க்ருபாம் குரு த்வம், மயி ; தே நமோஸ்து

இந்த நாராயணீயம் எழுதிய ஆசிரியர் நினைக்கிறார் சுபாகு, சசிகலை, ஸுதர்சனன் இவர்களுக்கு அன்னை நேரிலோ அல்லது கனவிலோ காட்சி கொடுத்தாள். நானும் இந்த தேவியைத்தான் த்யானம் செய்கிறேன். ஆனால் கனவிலோ நினைவிலோ அன்னையைப் பார்க்க முடியவில்லையே என்று மனம் வருந்துகிறார். அன்னையின் கருணைக்கு ஏங்கிக் கொண்டிருக்கிறார்.

16 ஆம் பதினாறாம் தசகம் முடிந்தது

தசகம் 17

ஸுதர்சன கோஸலப்ராப்தி

1. யுதாஜிதம் சத்ரு,ஜிதம் ச ஹத்வா
ரணாங்கணஸ்தா, நுதிபி: ப்ரசன்னா
ஸுபாஹு முக்யான,னுக்ருஹ்ய பக்தான்
ஸர்வேஷு பச்யத்ஸு திரோததாத

யுத்தத்தில் ஸுதர்சனனைக் கொன்றே தீருவேன் என்று முழக்கமிட்ட யுதாஜித்தை, அன்னை வதம் செய்தாள். ஸுதர்சனனை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை. சத்ருஜித்திற்கு சசிகலையை விவாஹம் செய்வதற்காகத்தான் இந்த யுத்தம் நடந்தது. ஆனால் யுத்தத்தில் அவனும் மாண்டான். இவர்களின் மரணத்திற்குக் காரணம் அம்பாளிடமும் பக்தி இல்லை, நல்ல ஸத் ஜனங்களிடமும் விரோதம். சுபாஹு பக்தியுடன் தேவியை துதித்தான். அன்னை பக்தர்களைக் காப்பாற்றினாள். யுத்தம் முடிந்ததும் அன்னை மறைந்து விடுகிறாள்.

2. ப்ருஷ்டோ ந்ருபான் ப்ராஹ, ஸுதர்சனஸ்தான்
த்ருஷ்டா பவத்பி:, கலு ஸர்வசக்தா
யா நிர்குணா யோகி,பிரப்ய த்ருச்யா
த்ருச்யா ச பக்தை:, ஸகுணா வினீதைஹி

யுத்தத்தில் யுதாஜித், சத்ருஜித் இருவரும் இறந்த பிறகு சுபாகுவும், ஸுதர்சனனும் தேவியைத் துதிக்கிறார்கள். சுபாகுவின் பக்திக்கு மெச்சிய அன்னை அவன் விருப்பப்படி காசி நகரத்தை ஒரு முக்தி க்ஷேத்ரமாக விளங்கும் படி அனுக்ரஹித்து, காசியில் சகல சம்பத்தும் இருக்கும், உலகம் உள்ளளவும் நான் இந்த காசியில் வாசம் செய்வேன் என்று சொன்னாள். உன்னை பூஜிக்காமல் இதுகாரும் நான் வாளா இருந்தேனே என வருந்திய ஸுதர்சனனிடம், அயோத்திக்குச் சென்று தன்னை முக்காலமும் கிரமப்படி பூஜித்து வரும்படிச் சொன்னாள். இதைக் கண்ட மற்ற அரசர்கள் அவர்களிடம் “நீங்கள் துதிக்கின்றீர்களே இங்கு யுத்தம் செய்த அந்தப் பெண் யார்? என்று வினவினார்கள். ஸுதர்சனன் அன்னையின் மகிமையைச் சொல்கிறார். இது தேவி பாகவதத்தில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. ஸுதர்சனன் சொல்கிறார், சகுணையும் நிர்குணையும் அவளே. நிர்குணையான தேவியை யோகிகள் கூடப் பார்க்க முடியாது. ஆனால் சகுணையான தேவியை பக்தர்களால் காண முடியும். யுதாஜித், சத்ருஜித் ஆகிய துர் புத்தி கொண்டவர்கள் முன் கூட அன்னை காட்சி தந்தாள். ஆனால் அவர்களால் அன்னையை அறிந்து கொள்ள முடியவில்லை. அதனால் வணங்கவோ துதிக்கவோ செய்ய முடியவில்லை. காரணம் மனதில் பக்தி இல்லை. தானே அனைவரையும் விட உயர்ந்தவன் என்ற நினைவு தான் காரணம்.

3. யா ராஜஸீதம், ஸ்ருஜதீவ சக்திர்
யா ஸாத்விகீ பா,லயதீவ விச்வம்
யா தாமஸீ ஸம்,ஹரதீவ ஸர்வம்
ஸத் வஸ்து ஸைவான்,யதஸத் ஸமஸ்தம்

தேவர்களும் ப்ரம்மாவும் கூட அறிந்து கொள்ள முடியாத பெருமை உடையவள் தேவி. அப்படியிருக்க நான் என்னவென்று சொல்வேன்? அனைத்திற்கும் ஆதியான சக்தி அவள் தான். அவள் முக்குண சக்தி கொண்டவள். அவளின் ரஜோகுணத்தால் உலகம் தோன்றுகிறது. சத்வ குணத்தால் உலகம் காப்பாற்றப்படுகிறது. தமோகுணத்தால் உலகம் அழிக்கப் படுகிறது. அவளே அந்த நிர்குண பராசக்தியும் ஆவாள். வேண்டுவோர் வேண்டும் பயனைத் தரும் காரணமும் அவளே.

4. பக்தார்த்தி ஹந்த்ரீ, கருணாமயீ ஸா
பக்தத்ருஹாம் பீ,திகரீ ப்ரகாமம்;
வஸன் பரத்வாஜ,த போவனாந்தே
சிராய மாத்ரா ஸஹ தாம் பஜேSஹம்

இந்த அன்னை உலகத்திற்கே மாதா. அனைத்து ஜீவன்களும் அவளின் குழந்தைகள். அவளின் கருணைக்கு அளவே இல்லை. நம்முடைய துக்கம் துடைப்பவள், போக்குபவள் அவள் தான். தன் பக்தனுக்கு யாரும் துன்பம் தந்தால் அவர்களை அன்னை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டாள். அவர்களுக்குத் தகுந்த தண்டனையைத் தருவாள். காசி நகரத்தில் யுதாஜித், சத்ருஜித் இவர்களோடு யுத்தம் செய்து சுபாஹு, ஸுதர்சனன், சசிகலை இவர்களுக்கு அனுக்ரஹம் செய்தாள். ஸுதர்சனன் சிறு வயது முதல் அர்த்தம் தெரியாமலே சொல்லி வந்த காமராஜ பீஜ மந்திரம் அவனுக்கு அன்னையின் அனுக்ரஹத்தைத் தந்தது.

5. தாமேவ பக்த்யா, பஜதேஹ புக்தி
முக்திப்ரதாம் அஸ்து, சுபம் ஸதா வஹ
ச்ருத்வேதமானம்,ரமுகா ஸ்ததே தி
ஸம்மந்த்ரய பூபாச்ச, ததோ நிவ்ருத்தாஹா

எல்லா அரசர்களும் அந்தப் பெண் யார் என்று கேட்டதற்கு அன்னையின் மகிமை, பெருமை, சிறப்பு அனைத்தும் சொல்கிறான் ஸுதர்சனன். கண்கூடாக அவர்கள் அன்னையை யுத்த களத்திலும் பார்த்தார்கள். அனைவரும் இனி நாங்களும் தேவியை பூஜிப்போம் என்று அன்னையின் பக்தர்களாக அவரவர் இல்லத்திற்குத் திரும்பினார்கள்.

6. ஸுதர்சனோ மாத்ரு,வதூ ஸமேதஹ
ஸுபாஹு மாப்ருச்ச்ய, ரதாதி ரூடஹ
புரீம்அயோத்யாம், ப்ரவிசன் புரேவ
ஸீதாபதிஸ்தோ,ஷயதி ஸ்ம ஸர்வானு

பிறகு ஸுதர்சனன் சுபாகுவிடம் விடை பெற்றுக் கொண்டு தன் மனைவி சசிகலை, தாயார் மனோரமாவுடன், காசி நகரத்திலிருந்து கிளம்பி, கோஸல ராஜ்யம் வந்து சேர்கிறான். ஸுதர்சனனைக் கண்ட மக்கள் மிகுந்த ஆனந்தத்துடன் அவர்களை வரவேற்கின்றனர். அந்த காட்சி எப்படி இருந்தது என்றால் ராம ராவண யுத்தம் முடிந்து வெற்றியுடன் திரும்பிய ராமனுக்கு அயோத்தி மக்கள் தந்த வரவேற்பு போல் இருந்ததாம்.

7. லீலாவதீம் ப்ராப்ய, விமாதரம் ச
நத்வா விஷண்ணாம், ஹதபுத்ரதாதாம்
ஸ்துக்த்திபி; கர்ம,கதீ: ப்ரபோத்ய
ஸ ஸாந்த்வயாமாஸ, மஹேசி! பக்தஹ

அயோத்திக்குச் சென்ற ஸுதர்சனன், தன் தாயாரான லீலாவதியைத் தான் முதலில் நமஸ்கரித்தான். இதைப் போலவே ராமனும் அயோத்தி திரும்பியவுடன் முதலில் கைகேயியைத் தான் நமஸ்கரித்தான். லீலாவதி ஆரம்ப காலத்தில் மனோரமாவுடனும் ஸுதர்சனனிடமும் மிகவும் அன்பாகத்தான் இருந்தாள். அவள் தந்தை யுதாஜித்தால் தான் பிரச்சனைகள் வந்தது. தன் கணவனை இழந்த மனோரமா தன் மகனுடன் அன்று எப்படி அனாதையாக இருந்தாளோ, அப்படி இன்று லீலாவதியும் தன் மகனை இழந்து, கணவனையும் இழந்து தனித்து நின்றாள். ஸுதர்சனன் அவளுக்கு ஆறுதல் சொல்லி, யுதாஜித்தும் சத்ருஜித்தும் தன்னால் யுத்தத்தில் கொல்லப் படவில்லை. தேவிதான் அவர்களை வதம் செய்தாள் என்று நிலையை விளக்கி, எது நடக்க வேண்டுமோ அது நடந்திருக்கிறது. நான் சிறிதும் இந்த ராஜ்யத்திற்கு ஆசைப்படவில்லை. நாம் வெறும் பொம்மலாட்ட பொம்மைதான். அவள் ஆட்டிவைப்பது போல் அனைவரும் ஆடுகிறோம். இதற்கு நாம் யாரும் காரணம் இல்லை என்று சொன்னான். மேலும் நான் உங்களை என் தாய் போல் கவனித்துக் கொள்கிறேன் என்றும் ஆறுதல் கூறினான். வயதானவர்களுக்கும் துக்கத்தில் இருப்பவர்களுக்கும் ஆறுதல் சொல்வது மிக மிக உயர்ந்த குணம்.

8. ஜனேஷு பச்யதஸு, ஸுதர்சனோத்ர
த்வாம் பூஜயித்வா, குருணாSபிஷிக்த
ராஜ்யே த்வதீயம், க்ருஹாமாசு க்ருத்வா
பூஜாவிதானா,தி ச ஸம்வ்ரு தத்த

ஸ்வர்ண மயமாயும் மணிமயமாயுமுள்ள சிம்மாசனம் ஒன்றைச் செய்து, வேத வாத்ய கோஷங்களுடன் தேவியை அதில் பிரதிஷ்டைச் செய்து, பூஜை செய்தான். பிரஜைகளையும் தேவியை பூஜிக்க வேண்டும் என்று சொன்னான். நவராத்ரியில் 9 நாட்களும் சிறப்பாக பூஜை செய்தான். அது போல் சுபாகுவும் காசியில் தேவியின் விக்ரஹம் பிரதிஷ்டை செய்து, பூஜித்து, மக்களையும் பூஜிக்கச் சொன்னான்.

9. தஸ்மின் ந்ருப்பே த்வத்,ஸதனானி க்ருத்வா
ஜனா: ப்ரதிக்ரா,மமபூஜயம்ஸ்த்வாம்
காச்யாம் ஸுபாஹுச்ச, ததாகரோத் ; தே
ஸர்வத்ர பேது: கருணா கடாக்ஷாஹா

ஒரு ராஜ்யத்தில் ராஜா எப்படியோ மக்களும் அப்படியே. ராஜா தேவியை பூஜிப்பதால் அனைவரும் தேவியை பக்தியுடன் பூஜித்து வந்தனர். எல்லோரும் தேவி பக்தர்கள் ஆக ஆனார்கள். ஒவ்வொரு ஊரிலும் அன்னையின் ஆலயம் கட்டினார்கள். அதுமட்டும் இல்லாமல் பூஜையும் முறைப்படி செய்து வந்தனர். எல்லோருக்கும் அன்னையின் கருணா கடாக்க்ஷமும் கிடைத்தது. ஸுதர்சனனின் ராஜ்யமும் சுபாஹுவின் ராஜ்யமும் சிறப்பாக நடந்து வந்தன.

10. ந கர்மணா ந, ப்ரஜயா தனேன
ந யோகஸாங்க்யா,தி விசிந்தயா ச
ந ச வ்ரதே,னாபி ஸுகானுபூதிர்
பக்த்யைவ மர்த்ய:, ஸுகமேதி மாதஹ

பக்தி இல்லாத மனிதனின் வாழ்க்கை வீண்தான். பக்தி இருந்தால் தேவியின் அருளால் எல்லாம் நன்றாக நடக்கும். பக்தி இல்லை என்றால் எல்லாம் துக்கமயம் தான். பக்தனுக்கு எல்லாம் இன்ப மயம். பக்தியே அனைத்திலும் சிறந்தது.

11. நாஹம் ஸுபாஹுச்ச, ஸுதர்சனச்ச
ந மே பரத்வாஜ,முனி: சரண்யஹ
குரு: ஸுஹ்ருத், பந்துரபி த்வமேவ
மஹேச்வரி த்வாம், ஸததம் நமாமி

சுபாஹு ஒரு நல்ல பக்தன். ஸுதர்சனன் பரத்வாஜர் ஆஸ்ரமம் சென்றதால் பக்தனானான். எனக்கு இப்படி ஒரு சந்தர்ப்பம் கிடைக்கவில்லையே என்று இந்த கவிஞன் ஏங்குகிறார்.

எனக்கு உன்னைத் தவிர யாரும் இல்லை. நீதான் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என வேண்டுகிறார்.

தசகம் பதினேழு முடிந்தது

தசகம் 18

ராமகதை

1. ஸூர்யாந்வயே தாச,ரதீ ரமேசோ
ராமாபிதோSபூத், பரதோத ஜாதஹ
ஜேஷ்டானுவர்த்தீ, கலு லக்ஷ்மணச்ச
சத்ருக்னநாமாபி, ஜகத் விதாத்ரி!

சூர்யவம்சத்தில் அயோத்தியில் தசரதன் என்னும் அரசன் அரசாண்டு வந்தான். அவருக்கு ராமன், பரதன், லக்ஷ்மணன், சத்ருக்னன் என்னும் நான்கு குமாரர்கள் பிறந்தார்கள். தாசரதி என்னும் பெயர் நால்வருக்கும் பொருந்தும். கோசலைக்கு ராமனும், கைகேயிக்கு பரதனும், சுபத்திரைக்கு லக்ஷ்மணனும் சத்ருக்னனும் பிறந்தார்கள்.

2. விமாத்ரு வாக்யோஜ்,ஜித ராஜ்யபோகோ
ராம; ஸஸீத:, ஸஹலக்ஷ்மணச்ச
சரண் ஜடாவல்,கலவாந் அரண்யே
கோதாவரீ தீரம், அவாப தேவி!

தசரத குமாரர்கள் வளர்ந்து வந்தார்கள். யுவராஜா பட்டத்திற்கான நேரமும் வந்தது. மூத்த குமாரனான ராமனுக்குப் பட்டம் கட்ட முடிவு செய்தனர். ஆனால் கைகேயி, தன் மகன் பரதனுக்கே பட்டம் சூட்ட வேண்டும், அது தவிர ராமன் 14 ஆண்டுகள் காட்டிற்குப் போகவேண்டும் என்று அடம் பிடித்தாள். தசரத மகாராஜாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. தன் பத்னியான சீதையையும் உடன் அழைத்துக் கொண்டு ராமன் புறப்பட்டான். லக்ஷ்மணனும் அவர்களுடனே சென்றான். மூவரும் கோதாவரி நதியை அடைந்தனர். அங்கு சூர்ப்பனகை, ராமனின் அழகைக் கண்டு, ஆசையுடன் ராமனிடம் நெருங்க, லக்ஷ்மணன் அவளின் மூக்கை அறுத்து, அவமானப்படுத்தி அனுப்பிவிட்டான்.

3. தம் வஞ்சயன், ராவண ஏத்ய மாயீ
ஜஹார ஸீதாம், யதிரூபதாரீ
ராமஸ்ய பத்னீ, விரஹாதுரஸ்ய
ச்ருத்வா விலாபம், வனமப்யரோதீது

ராவணனின் ஆணைப்படி, மாரீசன் பொன் மானாக உருவம் கொண்டு, சீதையின் கண் முன் அங்கும் இங்கும் உலவினான். சீதை பொன் மானைக் கேட்க, ராமன் அதன் பின் சென்றார். சிறிது நேரத்தில், லக்ஷ்மணா! சீதே! என்று அழுகை சத்தம் கேட்டது. உடனே லக்ஷ்மணனும் அங்கு போனான். ராமனும் லக்ஷ்மணனும் இல்லாத அந்த நேரத்தில், ராவணன் சந்நியாசி வேஷத்தில் அங்கு வந்து, சீதையைத் தூக்கிச் சென்றான். ராம லக்ஷ்மணர்கள் திரும்பி வந்தபோது, ஜடாயு மூலம் சீதையை ராவணன் தூக்கிச் சென்றதை அறிகின்றனர். சீதையைக் காணாத ராமன் அழுதான். ராமன் அழுவதைக் கண்ட அந்தக் காடும் அழுதது.

4. ஸ்ரீ நாரதோப்யேத்ய, ஜகாத ராமம்
கிம் ரோதிஷி ப்ரா,க்ருத மர்த்யதுல்யஹ:?
த்வம் ராவணம், ஹந்து,மிஹாவதீர்ணோ
ஹரி :, கதம் விஸ்மர,ஸீதமார்ய?

அந்த நேரத்தில் நாரத மகரிஷி அங்கு வந்தார். ராமன் அழுவதைப் பார்த்தார். அவருக்குப் பழைய சம்பவங்களை நினைவு படுத்தினார். ராமா! நீ பாமர மக்களைப் போல் அழலாமா? தாங்கள் சாதாரண மனிதன் இல்லை. இராவண வதத்திற்காக அவதாரம் செய்த மஹாவிஷ்ணு. இதைத் தாங்கள் மறந்தீர்களா? என்றார்.

5. க்ருதே யுகே, வேதவதீதி கன்யா
ஹரீம் ச்ருதிஞா, பதிமாப்துமைச்சத்
ஸா புஷ்கர த்வீப,கதா ததர்த்த
மேகாகினி தீவ்,ரத பச்சகார

நாரதர் மேலும் சொல்ல ஆரம்பித்தார். க்ருத யுகத்தில் குஸத்வஜன் என்று ஒரு ராஜா இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதற்கு சிறுவயது முதல் வேதம் நன்றாகத் தெரிந்தபடியால் அதற்கு “வேதவதீ” என்று பெயர் வைத்தனர். வேதவதிக்கு சிறுவயது முதல் விஷ்ணுவைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை. அதற்காக ஒரு புஷ்கர க்ஷேத்ரத்தில் கடுமையான தவம் செய்ய ஆரம்பித்தாள் .

6. ச்ருதா தயாபூத், அசரீரிவாக் – தே
ஹரி: பதிர்பாவினி ஜன்மனி ஸ்யாது
நிசம்ய தத் ஹ்ருஷ்ட,மனாஸ்ததைவ
க்ருத்வா தபஸ்தத்ர, நினாய காலம்

வேதவதியின் தவத்திற்குப் பலன் கிடைத்தது. “அடுத்த ஜன்மத்தில் விஷ்ணு உனக்குப் பதியாவார்” என்று ஒரு ஆகாசவாணி ஒலித்தது. வேதவதீ தவத்தை மேலும் தொடர்ந்து கொண்டு அங்கேயே இருந்தாள்.

7. தாம் ராவண: காம,சரார்தித: ஸம்
ச்சகர்ஷ; ஸா ச, ஸ்தவனேன தேவீம்
ப்ரஸாத்ய கோபாருண,லோசனாப்யாம்
நிரீக்ஷ்ய தம், நிச்சல,மாததான

வேதவதீ அங்கு தவம் செய்து வரும்பொழுது, ஒருநாள் ராவணன் அங்கு வந்தான். வேதவதியின் அழகில் மோகம் கொண்டான். அவளைத் தன் மனைவி ஆகும்படி கட்டாயப் படுத்தினான். அவள் நிராகரிக்க, அவளின் தலை முடியைப் பிடித்து பலவந்தப் படுத்தினான். அவள் தன் ஜ்வலிக்கும் கண்களால் ராவணனைப் பார்த்தாள். அவள் பார்வையின் தீர்க்கத்தைக் கண்ட ராவணன் ஸ்தம்பித்து நின்றான். அவனால் கை கால்களைக் கூட அசைக்க முடியவில்லை. ராவணன் தேவியை மனதில், மீண்டும் துதித்ததால், கை கால்களை அசைக்க முடிந்தது.

8. சசாப தம் ச, த்வமரே! மதர்த்தே
ஸாபாந்தவோ, ராக்ஷஸ!, நம்க்ஷ்யஸீ! தி
ஸ்வம் கௌணபஸ், ப்ருஷ்ட,மசுத்த தேஹம்
யோகேன ஸத்யோ, விஜஹௌ ஸதீ ஸா

வேதவதீ ராவணனை சபித்தாள். “என்னைத் தொட்ட காரணத்தால் நீ உன் உறவினர்களுடன் அழிவது நிச்சயம். விஷ்ணுவிற்குப் பத்னியாக நினைத்த இந்த உடலை நீ தொட்டதால், இது அசுத்தமானது. இதை நான் வைத்திருக்க மாட்டேன்” என்று தன்னுடைய உடலை விட்டாள்.

9. ஜாதா புன: ஸா, மிதிலேசகன்யா
காலே ஹரிம் த்வாம், பதிமாப தைவாது
ஸ ஹன்யதாம் ஸத்,வரமாச ரேந்த்ரஹ
ஸ்தன்னாச காலஸ்து, ஸமாகதச்ச

நாரதர் சொன்னார், வேதவதிக்கு அடுத்த ஜன்மத்தில் விஷ்ணு கணவனாவார் என்று அசரீரி சொன்னதல்லவா? அந்த வேதவதி தான் இந்த சீதை. ராமனான விஷ்ணுவே அவள் கணவன். அன்று வேதவதி தந்த சாபம் ராவணனுக்குச் சீக்கிரம் பலிக்கட்டும். ராவணனையும் மற்ற ராக்ஷசர்களையும் அழிக்கட்டும். ராவணன் அழியும் காலம் நெருங்கிவிட்டது என்றார்.

10. ததர்த்தமாரா,தய லோகநாதாம்
நவாஹயக்ஞேந, க்ருதோபவாஸ:
ப்ரஸாத்ய தாமேவ, ஸுரா நராச்ச
காமான் லபந்தே; சுபமேவ தே ஸ்யாது

ராவண வதம் செய்வதற்கு, ராமன் உபவாசம் இருக்க வேண்டும். நவாக யக்ஜம் செய்ய வேண்டும். தேவியின் கதைகள் கேட்கவேண்டும், தேவியின் நாமத்தை ஜபிக்க வேண்டும், தேவியின் கீர்த்தனைகள் பாட வேண்டும், தேவியை பூஜை செய்ய வேண்டும். இப்படியாக ஒன்பது நாளும் தேவியின் ஆராதனை நடக்க வேண்டும். இதுதான் நவாக யக்ஜம் எனப்படும். இதனால் தேவி சந்தோஷமடைந்து அனுக்ரஹிப்பாள். அதன் பின் ராவண வதம் நடக்கும். அன்னையின் அனுக்ரஹத்தால் தான் தேவர்களும் மனிதர்களும் தன தேவைகளை அடைகிறார்கள். ராமனுக்கும் நன்மையே வரும் என்று சொல்லிவிட்டு நாரதர் மறைந்தார்.

11. இத்யூ சிவாம்ஸம், முனிமேவ ராம
ஆசார்யமா,கல்ப்ய, ஸ லக்ஷ்மணஸ்த்வாம்
ஸம்பூஜ்ய, ஸுஸ்மேர,முகீம் வ்ரதாந்தே
ஸிம்ஹாதி ரூடாம் ச புரோ ததர்ச

அந்த நாரதரையேத் தன் குருவாக ஏற்று, ராமன் நவாக யக்ஜம் செய்தார். 9 ஆவது நாளின் முடிவில் தேவி சிம்ம வாகனத்தில் ராமனுக்குக் காட்சி தந்தாள்.

12. பக்த்யா நதம் தம் , த்ருதமாத்த ராம!
ஹரிஸ் த்வமம்சேன, மதாஞயைவ
ஜாதோ நரத்வேன, தசாஸ்ய ஹத்யை
ததாமி தச்சக்தி, மஹம் தவேஹ

13. ச்ருத்வா தவோக்திம், ஸ ஹனு மதாத்யைஹி
ஸாகம் கபீந்த்ரை:,க்ருதஸேது பந்தஹ
ஸங்காம் ப்ரவிஷ்டோ, ஹத ராவணாத்யஹ
புரீம யோத்யாம், அகமத் ஸ ஸீதஹ

தேவியைக் கண்ட ராமன் நமஸ்கரித்தார். தான் யார் என்பதை மறந்திருந்த ராமருக்கு தேவி நினைவுபடுத்தினாள். ராமன் சாட்ஷாத் அந்த மகாவிஷ்ணுவேதான். விஷ்ணுவின் அம்சமாக தசரதனுக்கு மகனாகப் பிறந்தார். இந்த அவதாரத்தின் காரணமே ராவண வதம் தான். தேவியின் ஆணைப்படியே அவர் மனிதனாக அவதரித்தார். ராமன் மறந்திருந்த பூர்வ கதையை நினைவுபடுத்தினாள். ராவணனை வதம் செய்வதற்கான சக்தியையும் தந்தாள். வேதவதீ த்ரேதா யுகத்தில் சீதையாகப் பிறந்திருக்கிறாள். அவளின் சாபத்தால், ராவணன் மரணம் அடைய வேண்டும். சீதையை ராவணன் அபஹரித்தது, ராவண வதத்திற்குக் காரணமாகிறது. அன்னையின் அனுக்ரஹத்துடன் ராமன் அனுமன், வானரப்படை இவைகளின் உதவியுடன் சீதையைத் தேடி, இலங்கையில் இருப்பதை அறிந்து கொள்கிறான். சமுத்ரத்தில் பாலம் கட்டி, இலங்கை சென்று, ராவணை வதம் செய்து, சீதையை மீட்டு, சீதா லக்ஷ்மண சமேதராக அயோத்தி வந்தார். அம்பாளின் கருணை இருந்தால் எந்த காரியமும் சாத்தியமாகும் என்பதற்கு இது உதாரணமாகிறது.

14. ஹா! தேவி! பக்திர், நஹி மே குருச்ச
ந சைவ வஸ்து, க்ரஹ ணே படுத்வம்
ஸத்ஸங்கதிச் சாபி, ந, தே பதந்து
க்ருபா கடாக்ஷா, மயி, தே நமோஸ்து

ராமாய ராம பத்ராய
ராமசந்ராய வேதஸே
ரகு நாதாய நாதாய
ஸீதா பதயே நமஹ

ராமனுக்கு நாரதர் குருவாக அமைந்தார். எனக்கு குருவோ ஸத்சங்கமோ எதுவுமே இல்லை. அதனால் நீதான் எனக்குத் துணை என்று இதன் ஆசிரியர் தேவியை வணங்குகிறார்.

பதினெட்டாம் தசகம் முடிந்தது

தசகம் 19

பூமியின் துக்கம்

1. புரா தரா துர்,ஜனபாரதீனா
ஸமம் ஸுரப்யா, விபுதைச்ச, தேவி!
விதிம் ஸமேத்ய, ஸ்வதசாமுவாச;
ஸ சாநயத் க்ஷீ,ரபயோநிதிம் தான்

துர் ஜனங்கள் கணக்கில்லாமல் பூமியில் அதிகமாக ஜனிக்க ஆரம்பித்ததும், பூமியின் பாரம் மிகவும் அதிகமாக ஆரம்பித்தது. பூமிதேவி ஸ்வர்க்கம் சென்று, இந்த்ராதி தேவர்களிடம் முறையிட்டும் பலன் இல்லை. அதனால் காமதேனுவுடனும் தேவர்களுடனும் பிரம்மாவிடம் சென்றாள். பூதேவியே! உன் பாரத்தைக் குறைப்பதற்கு நான் சக்தி உடையவன் அல்லன் என்று சொல்லி, பிரம்மா எல்லோரையும் பாற்கடலுக்கு அருகில் அழைத்துச் சென்றார்.

2. ஸ்துதோ ஹரி: பத்ம,பவேன ஸர்வம்
ஞாத்வாSகிலான் ஸாஞ்,சலிபந்தமாஹ
ப்ரம்மன்! ஸீரா நைவ, வயம் ஸ்வதந்த்ரா;
தைவம் பலீய:! கிமஹம் கரோமி?

அனைவருடனும் பாற்கடலுக்குச் சென்ற பிரம்மா, புருஷஸூக்த ஜபம் செய்தார். மனம் குளிர்ந்த விஷ்ணு அவர்கள் முன் தோன்றி, அனைவரையும் கைகூப்பி வரவேற்றார். அவர்கள் வந்த காரணத்தை அவரே அறிந்து கொண்டார். விஷ்ணு சொன்னார் “பூமியின் துக்கத்தை நானோ பிரம்மாவோ தீர்க்க முடியாது. அவரவர் கர்மத்தையும் விதியையும் மாற்ற யாராலும் முடியாது. அதனால் பூமியின் பாரத்தைக் குறைக்க என்னால் என்ன செய்ய முடியும்”? என்றார் .

3. தைவேன நீத: கலு மத்ஸ்யகூர்ம
கோலாதி ஜன்மான்ய, வசோSஹமாப்தஹ
ந்ருஸிம்ஹ பாவா,ததி பீகரத்வம்
ஹயான னத்வாத், பரிஹாஸ்யதாம் ச

தெய்வமானாலும் விதியை அனுபவித்துத் தான் ஆகவேண்டும். இது அவருடைய சொந்த அனுபவம். அவருக்கு வைகுண்டம் என்னும் ஒரு இடம் உண்டு. லக்ஷ்மி என்ற அழகிய பத்னியும் உண்டு. ஆனால் அவரால் அங்கு சுகமாக வாழ முடிந்ததா? அது தெய்வத்தால் தீர்மானம் செய்யப்படுகிறது. மீனாக, ஆமையாக, பன்றியாக அவதரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. மனித உடலும் சிங்கத்தின் தலையும் கூடிய நரசிம்ம அவதாரம் எடுத்தார். குதிரைத்தலையுடன் ஹயக்ரீவ அவதாரம் செய்தார். இதையெல்லாம் யாராவது விரும்புவார்களா? இதன் காரணங்களை தேவர்களும் அறிவார்கள். இப்படியிருக்க அவரால் எப்படி பூமியின் பாரத்தைக் குறைக்க முடியும்?

4. ஜாத: புநர் தாச,ரதிச்ச துக்காது
துக்கம் கதோஹம், விபினாந்தசாரீ
ராஜ்யம் ச நஷ்டம்; தயிதா ஹ்ருதா மே;
பிதா ம்ருதோஹா!; ப்ளவகா; சஹாயா:

விஷ்ணு தன் விதியை நொந்து கொள்கிறார். மச்ச, கூர்ம அவதார காலம் மிகவும் குறைவுதான். ஆனால் தசரத குமாரனாக, ராமனாக, அவதரித்த துக்கம் இன்று நினைத்தாலும் துக்கத்தையேத் தருகிறது. சீதாவைப் பிரிந்த போது, லக்ஷ்மணன் மட்டுமே அருகில் உதவியாக இருந்தான். அதன் பிறகு உதவிக்கு வந்தது யார்? குரங்குகள் மட்டுமே!

5. க்ருத்வா ரணம் பீம,மரிம் நிஹத்ய
பத்னீம் ச ராஜ்யம், ச புநர் க்ருஹீத்வா
துஷ்டாபவாதேன பதிவ்ரதாம் தாம்
விஹாய ஹா! துர்ய,சஸாSபிஷிக்தஹ

குரங்குகளின் உதவியால்தான் ராவணனை வதம் செய்ய முடிந்தது. கற்ப்புக்கரசியான சீதையை மீட்டு அயோத்தி வந்து, இழந்த ராஜ்ஜியம் மீண்டும் பெற்று, பட்டாபிஷேகமும் நடந்தது. ஏதோ ஒரு துஷ்டன் சீதையைப் பழிக்க, அதன் காரணமாக இன்றும் எல்லோரிடமும் பழிச்சொல் கேட்கிறேன் என்றார் ராமன். ராமனுக்கு மூன்று விதமான பட்டாபிஷேகம். 1. நஷ்டமான பட்டாபிஷேகம் 2. உண்மையான பட்டாபிஷேகம் 3. துஷ்கீர்த்தியால் பட்டாபிஷேகம். இப்படி மூன்று விதமான பட்டாபிஷேகம்.

6. யதி ஸ்வதந்த்ரோ&ஸ்மி, மமைவ மார்த்திர்
ந ஸ்யாத்; வயம், கர்ம, கலாப பத்தாஹா
ஸதாSபி மாயா,வசகா, ஸ்ததோSத்ர
மாயாதி நாதாம், சரணம் வ்ரஜாமஹ

தான் கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவன் இல்லை என்றால் இப்படித் துக்கம் வருமா? இந்த விஷ்ணு, இதைக் கேட்கும் தேவர்கள், பூமி எல்லோருமே கர்ம பந்தத்திற்குக் கட்டுப்பட்டவர்களே! எல்லோரும் மாயைக்கு அடிமையானவர்களே! இந்த மாயை இல்லாதவர் யார்? அது தேவிமட்டுமே! இந்த கர்மபந்த விடுதலை பெற ஒரே வழி தேவியைத் துதிப்பது தான். அதனால் பூமியின் துக்கம் தீர்க்க தேவியினால் மட்டுமே முடியும்.

7. இதீரிதைர் பக்தி,விநம்ர சீர்ஷைர்
நிமீலி,தாக்ஷைர், விபுதை: ஸ்ம்ருதா த்வம்
ப்ரபாதஸந்த்யேவ, ஜபாஸுமாங்கீ
தமோனி ஹந்த்ரீ, ச புர: ஸ்திதாSSத்த

விஷ்ணுவின் பேச்சைக் கேட்ட அனைவரும் பக்தியுடன் தலை குனிந்து, ஒன்றாக தேவியைத் துதித்தார்கள். இருளை நீக்கும் காலை நேர செந்நிற ஒளி போல, தேவியும் உடனே அவர்கள் முன், தோன்றினாள். அந்த தேவி என்ன சொன்னாள்?

8. ஜானே தஸாம் வோ, வஸுதேவ புத்ரோ
பூத்வா ஹரிர் துஷ்ட,ஜனான் நிஹந்தா;
ததர்த்தசக்தீ,ரஹமஸ்ய தத்யா-
மம்சேன ஜாயே,ய ச நந்தபுத்ரீ

விஷ்ணு வசுதேவ புத்திரனாக யது குலத்தில் அம்சாவதாரம் செய்வார். அவரே துஷ்டர்களை சம்ஹாரம் செய்வார். அதற்கானச் சக்தியை நான் தகுந்த சமயத்தில் அவருக்குத் தருவேன். நானும் அம்சமாக கோகுலத்தில் யசோதையிடம் தோன்றுவேன். அனைத்து தேவ காரியத்தையும் முடித்து வைப்பேன் என்று சொன்னாள்.

9. யூயும் ச ஸாஹாய்,யமமுஷ்ய கர்தும்
அம்சேன தேவா, த்யிதா ஸமேதாஹா
ஜாயேத்வ முர்வ்யாம்;, ஜகதோSஸ்து பத்ரம்
ஏவம் வினிர்திச்ய, திரோததாதா

தேவி மேலும் சொன்னாள் பூபார நாசத்தை விஷ்ணு நடத்துவார், துஷ்டர்களைச் சம்ஹாரம் செய்வார். இது உலகிற்கு நன்மை தரும். தேவர்களாகிய நீங்களும் உங்கள் பத்னிகளுடன் தோன்றி தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் என்று சொல்லி மறைந்தாள்.

10. விசித்ர துஷ்டா,ஸுர பாவபார
நிபீடிதம் மே, ஹ்ருதயம் மஹேசி!
அத்ராவதீர்யேதம், அபாகுரு; த்வம்
மாதா ஹி மே; தே வரதே; நமோஸ்து

அம்மா! என் மனதிலும் தீய சிந்தனைகள் பெருகி வருகின்றன. காம க்ரோதாதிகளும் நிறைந்திருக்கிறரர்கள். அதனால் தாங்கள் என் இதயத்தில் அவதரித்து இவைகளைச் சம்ஹாரம் செயுங்கள் என்று இதன் ஆசிரியர் வேண்டுகிறார்.

பத்தொன்பதாம் தசகம் முடிந்தது

தசகம் 20

தேவகீ புத்ரவதம்

காளிந்தி நதிக்கரை ஓரத்தில் ஒரு மதுவனம் நம் இருந்தது. அதில் லவணன் என்னும் ஒரு அஸுரன் இருந்தான். அவன் தன் தவ வலிமைக் காரணமாக மஹரிஷிகளைத் துன்பப்படுத்தி வந்தான். லக்ஷ்மணனின் தம்பியான சத்ருக்னன், அந்த அஸுரனைக் கொன்று, அவ்வனத்திற்கு மதுராபுரி என்று பெயர் வைத்து, தன் இரு மகன்களிடம் ஒப்படைத்து விட்டு ஸ்வர்கம் சென்றான். சூரிய வம்சம் அழியும் நேரத்தில், யாதவர்கள் அங்கு குடி புகுந்தனர். யயாதி புத்திரனான சூரசேனன் அவர்களை ரட்க்ஷித்து வந்தான். அந்த சூர சேனனுக்கு வருணனின் சாபத்தால், காசிபர் மகனாகப் பிறந்தார். அவரே வஸுதேவர். இவர் தன் தந்தை இறந்த பிறகு, வைசிய விருத்தியில் ஜீவனம் செய்து வந்தார். அப்பொழுது உக்ரசேனன் மதுராவை ஆண்டு வந்தான். அவனுக்கு கம்ஸன் பிறந்தான். காசிபரின் மனைவியாகிய அதிதியும் வருண சாபத்தால் தேவகனுக்கு மகளாகப் பிறந்து தேவகீ என்று அழைக்கப்பட்டாள்.

1. அதோருபுண்யே, மதுராபுரே து
விபூஷுதே மௌக்,திக மாலிகாபிஹி
ஸ்ரீ தேவகீ சௌரி விவாஹ,ரங்கே
ஸர்வை: ச்ருதம் வ்யோ,மவச: ஸ்புடார்த்தம்

துஷ்டர்களை அழிப்பதற்கு தேவ லோகத்தில் நடந்தவைகளைப் பார்த்தோம். இனி பூமியில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கப் போகிறோம். பாற்கடலிலிருந்து திரும்பி வந்த தேவர்களும், ப்ரம்மனும் இனி நமக்குக் கவலை இல்லை. கிருஷ்ணன் பிறப்பார். நம் கவலை எல்லாம் தீர்ந்துவிடும் என்று நிம்மதியாக இருக்கின்றனர். பூமியில் மதுராபுரியில் வசுதேவர் தேவகிக்குக் கல்யாணம் நடக்கிறது. தன் பிரிய சகோதரியைக் கணவன் வீட்டில் கொண்டுவிட வசுதேவர் தேவகியைத் தன் தேரில் ஏற்றிக் கொண்டுத் தானே தேரை ஓட்டிக் கொண்டு போகிறான். போகும் வழியில் அவனுக்கு அசரீரி கேட்கிறது. யார் பேசுகிறார்கள்? எங்கிருந்து பேசுகிறார்கள்? இது ஒன்றும் கம்ஸனுக்குப் புரியவில்லை.

2. அவேஹி போ தேவக, நந்தனாயாஹா
ஸுதோSஷ்டம: கம்ஸ, தவாந்தக: ஸ்யாது”
ஸ்ருத்வேதி தாம் ஹந்து,மஸிம் ததானஹ
கம் ஸோ நிருத்தோ, வஸுதேவமுக்யைஹி

“தேவகியின் 8 ஆவது புத்ரன் உன்னைக் கொல்வான்” என்ற இந்த அசரீரி வாக்கைக் கேட்டதும், கம்ஸனுக்கு பயம் வந்துவிடுகிறது. தன் உயிருக்கு ஆபத்து என்றதும், தங்கை இருந்தால் தானே புத்திரன் பிறப்பான் என்று, அவளின் தலைமயிரைப் பிடித்து இழுத்து, கொல்வதற்கு வாளை எடுக்கிறான். வஸுதேவரின் நண்பர்களும், யாதவர்களும், “தங்கையைக் கொல்லாதே” இது பாபம் என்று தடுக்கிறார்கள். அவன் அதைக் காதிலேயே வாங்கவில்லை. அவர்களுக்கும் கம்ஸனுக்கும் சண்டை நடக்கிறது.

3. அதாSSஹசௌரி:, ச்ருணு கம்ஸ! புத்ரானு
ததாமி தேSஸ்யா:, சபதம் கரோமி
ஏதத் வசோ மே, வ்யபிசர்யதே சேது
மத்பூர்வஜாதா, நரகே பதந்து

யாருடைய பேச்சையும் காதில் வாங்காத கம்ஸனைப் பார்த்து வஸுதேவர் சொல்கிறார். “தேவகிக்குப் பிறக்கும் எல்லாக் குழந்தைகளியும் உன்னிடம் தந்து விடுகிறேன். இது சத்யம். நான் வாக்குத் தவறினால் என் முன்னோர்கள் நரகத்திற்குச் செல்வர்” என்றார். எல்லோரும் இதுவே சரி என்று சொன்னார்கள்.

4. ச்ரத்தாய சௌரேர், வசனம் ப்ரசாந்த-
-ஸ்தாம் தேவகீம் போஜ,பதிர் முமோசஹ
ஸர்வே ச துஷ்டா, யதவோ நகர்யாம்
தௌ தம்பதீ சோஷ,துராத்த மோதம்

வஸுதேவர் சொன்ன வார்த்தயை மீற மாட்டார் என்று நம்பிக்கை வைத்து, கம்ஸன் கோபத்தை விட்டுச் சாந்தமானான். தேவகீ வஸுதேவர் தன் இருப்பிடம் போய்ச் சேர்ந்தனர்.

5. காலே ஸதீ புத்ரம்,அஸுத; தாதஹ
கம்ஸாய நிச்சங்க,மதாத் ஸுதம் ஸ்வம்
ஹந்தா ந மேSயம், சிசுரித்யுதீர்ய
தம் ப்ரத்யதாத், போஜபதிச்ச தஸ்மை

தேவகீ யௌவனம் அடைந்து கர்பவதியாகி, ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். வஸுதேவரும் குழந்தயைக் கேட்க, அவளும் இக்குழந்தயைக் காப்பதற்கு ஏதும் பிராயச்சித்தம் செய்ய முடியாதா? என்று கேட்கிறாள். நல்வினை தீவினையால் வரும் பயன்களை யாரானாலும் அனுபவித்தே ஆகவேண்டும் என்று சொல்லிக் குழந்தையை கம்ஸனிடம் கொண்டு தருகிறார். சத்யவானான வஸுதேவரிடம் கம்ஸன் சொல்கிறான் “8 ஆவது குழந்தை தானே என்னைக் கொல்லப் போகிறது. இது எனக்கு எதிரி அல்ல. அதனால் உம்மிடமே இருக்கட்டும்” என்று வஸுதேவரிடம் குழந்தையைத் திருப்பிக் கொடுத்து விடுகிறான்.

6. அதாSSசு பூபார, வினாசனாக்ய
த்வன்நாடகப்ரேக்ஷண கௌதுகேன
ஸ்ரீநாரத: ஸர்வவிதேத்ய கம்ஸம்
அத்ருச்ய ஹாஸம், ஸகலம் ஜகாத

8 ஆவது குழந்தைதானே எனக்கு எதிரி. மற்ற குழந்தைகளை ஏன் கொல்ல வேண்டும் என்று சொன்ன கம்ஸனின் வார்த்தை கேட்டு, மந்திரிகளும் மற்றவர்களும் சந்தோஷித்தனர். அப்பொழுது நாரதர் வருகிறார். அவருக்கு வஸுதேவர் தேவகிக்குப் பிறக்கும் குழந்தகளின் பூர்வ சரித்திரம் தெரியும். பூமியின் பாரத்தைக் குறைப்பது தேவியின் திட்டமல்லவா? அதற்கு அவரால் ஆனதைச் செய்ய வேண்டுமல்லவா? அதனால் நாரதர் சொல்கிறார்,

7. த்வம் பூப! தைத்ய: கலு காலநேமிஹி
ஜகத்ப்ரஸித்தோ, ஹரிணா ஹதச்ச
ததோSத்ர ஜாதோஸி ஸுரா ஹரிஸ்ச
த்வாம் ஹந்துமிச்சந்,த்ய துனாSபி சத்ரும்

கம்ஸா! நீ முன் ஜன்மத்தில் காலநேமி என்னும் உலகம் முழுவதும் அறிந்த ஒரு அஸுரன். யுத்தத்திலே நீ விஷ்ணுவால் கொல்லப்பட்டாய். இந்த ஜன்மத்தில் நீ உக்ரசேனனுக்கு மகனாக, யது வம்சத்தில் பிறந்திருக்கிறாய். ஆனாலும் உன்னைத் தேவர்களும் விஷ்ணுவும் எதிரியாகத்தான் நினைக்கிறார்கள். உன்னைக் கொல்வதற்கே அவர்கள் ஆசைப்படுகிறார்கள் என்று நாரதர் தன்னுடைய கலகத்தை ஆரம்பித்தார்.

8. தேவாஸ்த,தர்த்தம் நர ரூபி,ணோத்ர
வ்ரஜே ச ஜாதா, வஸீதே வமுக்யாஹா
நந்தா தயச்ச த்ரிதசா; இமே ந
விஸ்ரம்பணீயா, ந ச பாந்தவாஸ்தே

தேவர்கள் உன்னைக் கொல்வதற்கான திட்டங்களைத் தீட்டி இருக்கிறார்கள். அவர்கள் மானிட ரூபத்தில் அவதரித்திருக்கிறார்கள். சிலர் மதுராவிலும், சிலர் நந்தகோபர் இருக்கும் இடத்திலும் இருக்கிறார்கள். உனக்கு இது தெரியவில்லை. எல்லோரும் நண்பர்கள் போல் நடிக்கிறார்கள். ஏன் வஸுதேவரும், நந்தகோபரும் கூட நண்பர்கள் போல் நடிக்கிறார்கள் என்றார்.

9. த்வம் வ்யோம வாணீம், ஸ்மர; தேவகஸ்ய
புத்ர்யா: ஸுதேஷ்வ, ஷ்டமதாம் கத: ஸன்
ஸ த்வாம் நிஹந்தா, ஹரிரேவ; சத்ருஹு
அல்போSபி நோபேக்ஷ்ய, இதீர்யதே ஹி

உனக்கு ஒரு அசரீரி வாக்கு கேட்டதே! 8 ஆவது குழந்தை உன்னைக் கொல்லும் என்று சொன்னதே! அந்த 8 ஆவது குழந்தை யார் என்று உனக்குத் தெரியுமா? அது வேறு யாரும் இல்லை. அந்த விஷ்ணுவே தான் 8 ஆவது குழந்தையாக அவதரிக்கப் போகிறார். நீ பூர்வ ஜன்மத்தில் கால நேமியாக இருந்த போதும் அவர்தான் உன்னைக் கொன்றார். அவர் உன் ஜன்ம விரோதி. சத்ரு அல்பன் ஆனாலும் அலட்க்ஷயம் செயக்கூடாது.

10. ஸர்வாத் மஜானாம், ந்ருப! மேளனேஸ்யாஹா
ஸர்வேSஷ்டமா: ஸ்யு:, ப்ரதமே ச ஸர்வே
மாயாவினம் வித்தி, ஹரிம் ஸதேதி
கதே முனௌ க்ரோ,தமியாய கம்ஸஹ

நீ முதல் குழந்தயை ஏன் கொல்ல வேண்டும் என்று விட்டு விட்டாய். ஒன்றை நீ அறிந்து கொள். அந்த விஷ்ணு மாயாவி. எதையும் செய்யக் கூடியவன். எட்டு குழந்தைகளையும் வட்டமாக நிற்க வைத்தால் எது 8 ஆவது குழந்தை? வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக எண்ணிப்பார்? எது 8 ஆவது குழந்தை? முதல் குழந்தை கூட 8 ஆவது ஆகலாமே? எனவே கம்ஸா! நீ ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றார்

11. ஸ தேவகீ, ஸூனு,மரம் ஜகான
காராக்ருஹே தாம், பதிமப்ய பத்னாது
தயோ: ஸுதான் ஷட், கலு ஜாதமாத்ரான்
ஹத்வா க்ருதம் ஸ்வம், ஹிதமேவ மேனே

கம்ஸன் மீண்டும் தேவகியிடம் சென்று கொடுத்த குழந்தயை வாங்கி கற்பாறையில் அடித்துக் கொன்று விடுகிறான். தேவகீயையும் வஸுதேவரையும் சிறையில் வைக்கிறான். அதன் பின் பிறந்த 6 குழந்தைகளையும் அப்படியே கொன்று விடுகிறான். இவர்கள் சிறையில் இருக்கும் வரை நமக்கு பயம் இல்லை என்று நினைக்கிறான்.

12. காயேன வாசா, மனஸேந்த்ரியைர்வா
மா ஜாது பாபம், கரவாணீ தேவி!
மமாஸ்து ஸத் கர்ம, ரதி:ப்ரியஸ்தே
பவானி; பக்தம் குரு மாம் நமஸ்தே.

சரீரத்தாலேயும், மனதினாலேயும் ஒருவன் நல்லதையேச் செய்ய வேண்டும். அது நல்ல கதியைத் தரும். செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் நல்லதோ தீயதோ எந்த கதியும் இல்லை. செய்யக் கூடாததைச் செய்தால் அதோகதிதான். மனதாலும், உடலாலும் நான் எந்த பாபச் செயல்களையும் செய்யக்கூடாது. நான் எப்போதும் தேவிக்கு ப்ரியமுடையவனாக இருக்க வேண்டும் என்று இந்த கவி வேண்டுகிறார்.

இருபதாம் தசகம் முடிந்தது

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை