×
Sunday 1st of December 2024

சிவவாக்கியம் – சிவவாக்கியர் பாடல்கள் (301 – 450)


Sivavakkiyam with Meaning in Tamil (301 – 450)

Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (1 – 150)

Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (151 – 300)

சிவ வாக்கியம் பாடல்கள் (301 – 450)

மூலவாசல் மீதுளே முச்சதுர மாகியே
நாலுவாச லெண்விரல் நடுவுதித்த மந்திரம்
கோலமொன்று மஞ்சுமாகு மிங்கலைந்து நின்றநீ
வேறுவேறு கண்டிலேன் விளைந்ததே சிவாயமே. 301

உடலுக்கு ஒன்பது வாயில். மூல வாசல் பத்தாம் வாசல். அதுவே கபாலக் குகை வாயில். நாலு வாசல் என்பது கண் இமைகளாகும். இவை மூன்றும் சேர முச்சதுரமாம் முக்கோணம் கிட்டும். இதன் சுற்றளவு எட்டு விரல் நடு அளவு. இம்முக்கோணத்தில் நினைவை வைத்து பிராணனைக் கட்ட ஈசனின் கோலம் அஞ்சாகும். இங்குமங்கும் அலைந்து திரியும் நீ இத்தவத்தைச் செய். இஞ்ஞனம் செய்த நான் வேறெதையும் கண்டிலேன். ஆக சிவாயம் என்னுள் விளைந்தது.

சுக்கிலத் தடியுளே சுழித்ததோ ரெழுத்துளே
அக்கரத் தடியுளே யமர்ந்தவாதி சோதிநீ
உக்கரத் தடியுளே யுணர்ந்தவஞ் செழுத்துளே
அக்கரம தாகியே யமர்ந்ததே சிவாயமே. 302

ஆணுறுப்புக்குள்ளே விந்து சுழித்த ஒரு எழுத்துப்போல் உள்ளது. அகாரமான உடலில் ஆதியான சோதியாக அமர்ந்து இருப்பவன் ஈசன். அவனை உகாரமான உயிரில் உணரவேண்டும். அஞ்செழுத்துக்குள்ளே அவனே ஒரெழுத்தாகி அமர்ந்து இருப்பது சிவாயமே.

குண்டலத்து ளேயுளே குறித்தகத்து நாயகன்
கண்டவந்த மண்டலங் கருத்தழித்த கூத்தனை
விண்டலர்ந்த சந்திரன் விளங்குகின்ற மெய்ப்பொருள்
கண்டுகொண்ட மண்டலஞ் சிவாயமல்ல தில்லையே. 303

காதில் அணியும் குண்டலங்கள் தொங்கி ஆடும். அதுபோல, முகத்தில் இரு பளபளக்கும் குண்டலங்கள் ஆடிக்கொண்டு இருக்கின்றன. அவைகள்தான் கண்கள். அதற்குள்ளேதான் சோதி வடிவான ஈசன் உள்ளான் என்பதைக் குறிப்பால் அறிந்து கொள்ளுங்கள். கண்ட அந்த மண்டலத்திலே இருளாகிய அஞ்ஞானக் கருத்துக்களை அழித்து, சந்திரனைத் தலையில் தாங்கி நடனமிடும் மெய்ப்பொருள் ஈசன் உள்ளான். அப்படிக் குறித்த இடத்தில் ஈசனைக் கண்டுகொண்டால், அவ்விடத்தே சிவாயம் மட்டுமே இருக்கும்.

சுற்றுமைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவனுமாக நின்றதன்மை யோர்கிலீர்
சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளறிந்திலீர் பிரானிருந்த கோலமே. 304

ஐம்பூதங்களால் உருவாக்கப்பட்ட உடலில் மவுனவெளிக் கூடம் உள்ளது. அம்மையாம் உடலில் சீவனாம் சிவன் நின்ற தன்மையை அறிவீர்களா? இங்ஙனம் சிவசக்தி நம் உடலில் இருப்பதை அறியாத பித்தர்களே! எம்பிரான் இருந்த கோலத்தை அறியாமல் இருக்கிறீர்களே!

மூலமென்ற மந்திர முளைத்தவஞ் செழுத்துளே
நாலுவேத நாவுளே நவின்றஞான மெய்யுளே
ஆலம்முண்ட கண்டனு மரியயனு மாதலால்
ஓலமென்ற மந்திரஞ் சிவாயமல்ல தில்லையே. 305

ஐந்து பூதங்களும் ஐந்து எழுத்துக்களாக உள்ளது. அதுவே உடல். அதற்குள் மூல மந்திரமாம் ஒரெழுத்து மந்திரம் உள்ளது. அதுவே ஆதி. நான்கு வேதங்களும், நாவினால் சொல்லும் ஞானக் கருத்துக்களும் அவ்வோரெழுத்தில் அடக்கம். விடமுண்ட கண்டனும், திருமால், பிரமனும் அதற்குள்ளேதான். ஆக, ஓம் என்னும் மந்திரம் சிவாயமே.

தத்துவங்க ளென்றுநீர் தமைக்கடிந்து போவிர்காள்
தத்துவஞ் சிவமதாகில் தற்பரமும் நீரல்லோ
முத்திசீவ னாதமே மூலபாதம் வைத்தபின்
அத்தனாரு மும்முளே யறிந்துணர்ந்து கொள்ளுமே. 306

தன்னையும் தன் உடல், உயிர், இறைத் தத்துவங்களையும் உணராது தன்னையே கடிந்து கொள்வீர்கள். தத்துவம் சிவம் ஆனால் தற்பரம் நீங்கள் தானே? உங்கள் உடலில் மூலபாதமாகிய கண்களை வைத்தது அதற்குத்தானே. முக்தி என்பது சிவனாகிய உயிரிலும், நாதமானது உடலிலும் உள்ளது. ஆகவே, ஈசன் உமக்குள்ளே என்பதை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள்.

மூன்றுபத்து மூன்றையு மூன்றுசொன்ன மூலனே
தோன்றுசேர ஞானிகாள் துய்யபாத மென்றலை
என்றுவைத்த வைத்தபின் னியம்பு மஞ்செழுத்தையும்
தோன்றவோத வல்லிரேல் துய்யசோதி காணுமே. 307

தொண்ணூற்றி ஆறு தத்துவங்களையும் தன்னுடைய திருமந்திரத்தில் சொன்ன திருமூலன் வழியில் வந்த ஞானிகளே! துய்ய பாதத்தைக் கண்ணாக என் தலையில் வைத்துள்ளான் ஈசன். அதை அறிந்து ஓதும் ஐந்தெழுத்தையும் நினைவில் அழுத்தி ஓத வல்லவர்கள் ஆனால் பரிசுத்த சோதியான ஈசனைக் காணலாம்.

உம்பர்வான கத்தினு முலகபார மேழினும்
நம்பர்நாடு தன்னிலும் நாவலென்ற தீவினும்
செம்பொன்மாட மல்குதில்லை யம்பலத்து ளாடுவான்
எம்பிரான லாதுதெய்வ மில்லையில்லை யில்லையே. 308

எங்கும் பரந்து விரிந்த ஆகாயத்திலும், ஈரேழு பதினான்கு உலகங்களிலும், நாம் வாழும் நாட்டிலும், நாவலந்தீவு என்ற தீவிலும், எங்கு பார்த்தாலும் ஈசன் ஒருவனே. அவன் தில்லையில் செம்பொன் மாடத்தில் நடனம் ஆடுகிறான். நம் உடலில் (செம்பொன் மாடத்தில்) சீவனாக ஆடிக்கொண்டுள்ளான்.. அந்த எம்பிரானைத் தவிர வேறு தெய்வம் இல்லை இல்லை இல்லையே

பூவிலாய வைந்துமாய் புனலில்நின்ற நான்குமாய்
தீயிலாய மூன்றுமாய் சிறந்தகா லிரண்டுமாய்
வேயிலாய தொன்றுமாய் வேறுவேறு தன்மையாய்
நீயலாமல் நின்றநேர்மை யாவர்காண வல்லரே. 309

பஞ்ச பூதங்கள், இந்த உலகத்தில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகையான நிலங்களாகவும், புனலாகிய நீரில் ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர், கடல் நீர் என்ற நான்கு வகையாகவும், தீயாக சூரியன், சந்திரன், அக்னி என்று மூன்று வகையாகவும், காற்றில் தென்றல், சூறாவளி என்ற இரண்டு வகையாகவும், வெட்ட வெளியாகிய ஆகாயம் ஒன்றாகவும் அமைந்து வெவேறு தன்மை உடையதாய் உள்ளது. அவைகளுக்குள் நீ நின்ற நேர்மையை யார் காண வல்லவர்கள்.

அந்தரத்தி லொன்றுமா யசைவுகா லிரண்டுமாய்
செந்தழலில் மூன்றுமாய்ச் சிறந்தவப்பு நான்குமாய்
ஐந்துபாரி லைந்துமா யமர்ந்திருந்த நாதனை
சிந்ததையிற் றெளிந்தமாயை யாவர்காண வல்லரே. 310

நம் உடலில் பஞ்சபூதங்கள் கீழ்கண்டவாறு அமைந்துள்ளன. ஆகாயம் அந்தரத்தில் மனம் என்ற ஒன்றாகவும், காற்று வெளிச்சுவாசம் உட்சுவாசம் என இரண்டு வகையாகவும், நெருப்பு சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் என மூன்று வகையாகவும் நீர், இரத்தம், வியர்வை, எச்சில், சிறுநீர் என நான்கு வகையாகவும், மண், எலும்பு, நரம்பு, தசை, தோல், உரோமம் என ஐந்து வகையாகவும் அமைந்திருக்கிறது. இந்த பஞ்சபூதங்களிலும் அஞ்செழுத்தாக ஊடுருவியுள்ள நாதனை சிந்தையில் உணர்ந்து தெளியும் மாயம் யார் காண வல்லவர்கள்?

மனவிகார மற்றுநீர் மதித்திருக்க வல்லிரேல்
நினைவிலாத மணிவிளக்கு நித்தமாகி நின்றிடும்
அனைவரோதும் வேதமு மகம்பிதற்ற வேணுமேல்
கனவுகண்ட துண்மைநீர் தெளிந்ததே சிவாயமே. 311

மன விகாரங்கள் நீங்கி ஈசனையே மதித்து நினைவில் நிற்க, மனதில் வேறு எண்ணங்களுக்கு இடமில்லை. உடலில் உள்ள மணிவிளக்காம் கண்களில் உள்ள சோதி நித்தியமாக ஒளிவீசும். அனைவரும் ஓதும் வேதம் கூறும் ஈசனை நினைந்து அகமாம் மனம் பிதற்ற, கனவு கண்டது போல் உண்மை தெரியும். அப்படித் தெளிந்தது சிவாயமே.

இட்டகுண்ட மேதடா விருக்கு வேத மேதடா
சுட்டமட் கலத்திலே சுற்றுநூல்க ளேதடா
முட்டிநின்ற தூணிலே முளைத்தெழுந்த சோதியை
பற்றிநின்ற தேதடா பட்டநாத பட்டரே. 312

யாகம் செய்ய அமைக்கும் யோனி குண்டம் எதற்கு? அங்கே ஓதும் இருக்கு முதலிய நாலு வேதங்கள் சொல்வதின் பொருள் என்ன? அங்கு சுட்ட மண் பானைகளாம்(உடல்) கடங்களில் நூல் சுற்றி வைப்பது எதற்காக? யாக குண்டங்களில் உள்ள தீயில் நெய்யூற்றி அத்தீயை வளர்ப்பது எதற்கு? உனக்குள் உள்ள தீயை வளர்த்து மேலேற்ற, அது மேலேறி, கபாலத்தில் உள்ள உள்நாக்கு என்னும் நட்ட தூணிலே முட்டும். அங்கு முளைத்து எழுந்த சோதியைப் பற்றி நின்றது ஆன்மா. அதை அறியுங்கள் பட்டநாத பட்டரே!.

நீரிலே முளைத்தெழுந்த தாமரையி னோரிலை
நீரினோடு கூடிநின்றும் நீரிலாத வாறுபோல்
பாரிலே முளைத்தெழுந்த பண்டிதப் பராபரம்
பாரினோடு கூடிநின்ற பண்புகண் டிருப்பிரே. 313

தடாகத்திலே முளைத்து உள்ள தாமரை இலையானது நீரில் மிதந்தாலும், அதன் மீது நீர் ஒட்டாது. அதுபோல, மண்ணாலான இவ்வுடலில் முளைத்தெழுந்த ஈசன், அனைத்து சீவராசிகளிலும் ஒட்டியும் ஒட்டாமலும், பற்றியும் பற்றாமலும் உள்ளான். இப்படிக் கூடிநின்ற பண்பை கண்டு, அவனை உணர முயலுங்கள்.

உறங்கிலென் விழிக்கிலெ லுணர்வுசென் றொடுங்கிலென்
சிறந்தவைம் புலன்களுமந் திசைத்திசைக ளொன்றிலென்
புறம்புமுள்ளு மெங்கணும் பொருந்திருந்த தேகமாய்
நிறைந்திருந்த ஞானிகாள் நினைப்பதேது மில்லையே. 314

தூங்கினாலும், விழித்திருந்தாலும், உணர்வு நினைவில் ஒடுங்கினாலும், சிறந்த ஐம்புலன்களையும் ஒரு சேர அடக்கி எத்திசையும் ஒன்றே என ஒன்றி இருந்தாலும், உள்ளும் புறமும், எல்லா இடங்களிலும் ஈசன் இருப்பதை அறிந்த ஞானிகள், தங்கள் உடலில் பரம்பொருளே சிவமாக இருப்பதை உணர்ந்து அதைத் தவிர வேறு எதையும் நினைப்பது இல்லையே.

ஓதுவார்க ளோதுகின்ற வோர்எழுத்து மொன்றதே
வேதமென்ற தேகமாய் விளம்புகின்ற தன்றிது
நாதமொன்று நான்முகன் மாலும்நானு மொன்றதே
ஏதுமன்றி நின்றதொன்றை யானுணர்ந்த நேர்மையே. 315

சைவமறைகளை ஓதும் ஓதுவார்கள் ஓதும் ஓர் எழுத்து சிகாரம். வேத மந்திரங்களைப் போல் வெளிப்படையாக உச்சரிக்கக் கூடாதது. நாதம், பிரம்மா, திருமால், நானாகிய சிவனும் இணைந்த ஒன்று. எல்லாமாய், ஏதுமின்றி நின்ற ஈசனை இங்ஙனம்தான் உணர்ந்தேன்.

பொங்கியே தரித்தவச்சு புண்டரீக வெளியிலே
தங்கியே தரித்தபோது தாதுமா துளையதாம்
அங்கியுட் சரித்தபோது வடிவுக ளொளியுமாய்க்
கொம்புமேல் வடிவுகொண்டு குருவிருந்த கோலமே. 316

விந்துவும் முட்டையும் கலந்து உடல் உருவானது. உயிர், புண்டரீகம் எனும் ஆகாயத் தாமரையாம் நினைவிலே இருந்தது. இரண்டும் சேர்ந்து கருவாகி உருவாகி உடலாக வெளிவந்தது. தீயில் சேர்ந்தபோது வடிவுக்குள் ஒளி ஊடுருவியது. ஈசனான சோதிதான் சிகார வடிவு கொண்டு உடலில் உயிராகவும், ஒளியாகவும் விளங்கும் உண்மையான குரு என்பதை உணருங்கள்.

மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாற தெங்கெனில்
கண்ணினோடு சோதிபோற் கலந்தநாத விந்துவும்
அண்ணலோடு சத்தியு மஞ்சுபஞ்ச பூதமும்
பண்ணினோடு கொடுத்தழிப் பாரொடேழு மின்றுமே. 317

மண்ணில் வாழும் மனிதர்களும், விண்ணில் உள்ளவர்களும் கண்ணில் கலந்திருக்கும் சோதிபோல விந்துநாதம் சேர்ந்ததால் உருவானார்கள். அப்பனோடு அம்மையும்(அ+உ) ஐந்து பூதங்களும் சேர்ந்து உயிர் உண்டாயிற்று. ஏழு உலகங்களிலும் உள்ள சீவராசிகள் இங்ஙனம் பிறந்து வாழ்ந்து இறக்கின்றன. இதை உணர்ந்து தவம் செய்து பிறவிப் பெருங்கடல் தாண்டுங்கள்.

ஒடுக்குகின்ற சோதியு முந்திநின்ற வொருவனும்
நடுத்தலத்தி லொருவனும் நடந்துகாலி லேறியே
விடுத்துநின்ற விருவரோடு மெய்யினோடு பொய்யுமாய்
அடுத்துநின் றறிமினோ வனாதிநின்ற வாதியே. 318

உந்திக்கமலமான மணிபூரகத்தில் நின்ற திருமாலையும் நடு உடம்பில் உள்ள சுவாதிட்டானத்தில் உள்ள பிரம்மனையும் அறிந்து, முக்கலை ஒன்றி வாசிக்காலால் மேலேறி, அனாகதத்தில் உருத்திரனையும் விசுத்தியில் மகேசுவரனையும் ஆஞ்ஞையில் சதாசிவனையும் அறிந்து வாசியை மேலேற்றித் தவம் செய்ய, அனைத்தையும் ஒடுக்கி இருக்கின்ற சோதியான ஈசனை அடையலாம். அனாதியாய் நிற்கும் ஆதியை இங்ஙனம் அறிந்து, உணர்வு நினைவு ஆகியவற்றை ஒன்றித்து, கருத்தினில் நிறுத்தவேண்டும். இதுவே தவம்.

உதித்தமந் திரத்தினு மொடுங்கு மக்கரத்தினும்
மதித்தமண் டலத்தினும் மறைந்துநின்ற சோதிநீ
மதித்தமண் டலத்துளே மரித்துநீ ரிருந்தபின்
சிறுத்தமண் டலத்துளே சிறந்ததே சிவாயமே. 319

ஐந்தெழுத்து மந்திரமாம் உடல் உதித்தது. அவ்வுடலிலே ஒடுங்கிய அக்கரமாம் குத்தெழுத்தாம் கண் உள்ளது. அந்த மதித்த மண்டலத்திலே விளங்கும் ஈசனாம் சோதி நீ. அக்கண்ணின் கருமணிக்குள்ளே முக்கலையையும் ஒன்றி மனதை அழித்துப் பிணம்போல் தவம் செய்ய, அச்சிறிய துளைக்குள்ளே சிவாயம் காணலாம்.

திருத்திவைத்த சற்குருவைச் சீர்பெற வணங்கிலீர்
குருக்கொடுக்கும் பித்தரே கொண்டுநீந்த வல்லிரோ
குருக்கொடுக்கும் பித்தருங் குருக்கொள் வந்தசீடனும்
பருத்திபட்ட பாடுதான் பன்னிரண்டும் பட்டதே. 320

மூன்று ஆசைகளாலும் அலைக்கழிக்கப்பட்டு, பாவங்கள் பல செய்த இப்பிறவியை திருத்தி, அறிவை உள் மெய்யில் அறிய வைத்து, உண்மையை உணர வைத்து, ஈசனைக் நமக்குள் காட்டிய சற்குருவாம் கண்களைச் சீர் பெற வணங்கமாட்டீர்கள். பித்தர்களே! அங்ஙனம் குரு உபதேசித்தவாறு தவம் செய்து பிறவி என்னும் கடலை நீந்திக் கடக்க முடியுமா? பருத்தி பல பாடுகள் பட்டு ஆடையாகும். அதுபோல், குரு உபதேசித்தபடி இன்னல் பல கடந்து பித்தராம் சிவனை அடையுங்கள்.

விழித்தகண் துதிக்கவும் விந்துநாத வோசையும்
மேருவுங் கடந்தவண்ட கோளமுங் கடந்துபோய்
எழுத்தெலா மழிந்துவிட்ட விந்திரஞால வெளியிலே
யானும்நீயு மேகலந்த தென்னதன்மை யீசனே. 321

விழித்த கண்கள் உன்னையே துதித்திருந்தது. அதனுள்ளே சென்றால், அங்கே விந்துநாத ஓசை கேட்டது. நினைவு மேருவாம் தலை கடந்து, அண்டங்கள் கோளங்கள் என அனைத்தையும் கடந்து, எழுத்தெல்லாம் அழிந்துவிட்ட வெட்ட வெளியாம் இந்திரஞால வெளியிலே போய் சூனியமாய் இருந்த உன்னுடன் கலந்துவிட்டது. நீயும் நானும் கலந்து இருந்த தன்மையை என்னவெனச் சொல்வேன், ஈசா.

ஓம்நம வென்றுளே பாவையென்று அறிந்தபின்
பானுடற் கருத்துளே பாவையென் றறிந்தபின்
நானும்நீயு முண்டடா நலங்குலம் துண்டடா
ஊனுமூணு மொன்றுமே யுணர்ந்திடா யுனக்குளே. 322

நமசிவய என்னும் உடலில் பாவையாம் பராசக்தி உயிராக உள்ளாள். அவள் ஊடாடும்போது நானும், நீயும், அனைத்து நலன்களும், குலங்களும் உண்டு. ஊனாகிய சதையும், ஊணாகிய ஆன்ம இன்பதுன்ப உணர்வும் ஒன்றும் என்பதை உணர்வாய் உனக்குள்ளே. பிண்டத்தில் பாவையைக் கண் என்று சொல்வார்கள். கண்வழி சென்று கருத்தினில் கலந்தபின், எல்லா நன்மைகளும் உண்டு. உயிர்போனால் ஒன்றுமில்லை.

ஐம்புலனை வென்றவர்க் கன்னதான மீவதாய்
நன்புலன்க ளாகிநின்ற நாதருக்க தேறுமோ
ஐம்புலனை வென்றிடா தவத்தமே யுழன்றிடும்
வம்பருக்கு மீவதுங் கொடுப்பது மவத்தமே. 323

ஐம்புலன்களையும் வென்ற ஞானிகளுக்கு அன்னதானம் செய்தால், புண்ணியமாகி, அவர்களுக்குள் இருக்கும் ஈசனைச் சேரும். புண்ணியம் கிட்டும். அல்லாது, ஐம்புலன்களை அடக்கமுடியாமல் அவத்தத்தில் உழலும் வம்பர்களை ஞானி எனப்போற்றி தான தர்மம் செய்வது பாவம்.

ஆதியான வைம்புலன்க ளவையுமொக்கு ளொக்குமோ
யோனியிற் பிறந்திருந்த துன்பமிக்கு மொக்குமோ
வீணர்காள் பிதற்றுவீர் மெய்மையே யுணர்த்திரேல்
ஊணுறக்க போகமு முமக்கெனக்கு மொக்குமே. 324

உலகில் அனைவருக்கும் உங்களுக்கு இருப்பது போல அனைத்தும் அமைந்துள்ளது. பாவ புண்ணியங்களுக்கு காரணமான ஐம்புலன்களும், அன்னையின் வயிற்றில் பத்து மாதம் இருந்து பிறந்த இன்பதுன்பங்களும், உணவு, உறக்கம், போகம் போன்றவைகளும் யாவருக்கும் ஒன்றாகவே அமைந்துள்ளது. அதுபோல் உடலில் அனைவருக்கும் ஒரே மாதிரி அமைந்திருக்கும் மெய்ப்பொருளை உணராமல் பிதற்றுகின்ற வீணர்களே! மெய்யில் மெய்யை உணருங்கள்.

ஓடுகின்ற வைம்புல னொடுங்கவஞ் செழுத்துளே
நாடுகின்ற நான்மறை நவிலுகின்ற ஞானிகாள்
கூடுகின்ற கண்டித குணங்கள்மூன் றெழுத்துளே
ஆடுகின்ற பாவையா யமைந்ததே சிவாயமே. 325

உடலில் ஓடுகின்ற ஐம்புலன்களையும் ஐந்தெழுத்தால் அடக்கி, நாலு வேதத்தையும் பொருளுணர்ந்து ஓதும் ஞானிகளே! உங்களுக்குள் உள்ள கண்டித குணங்களாம், ராஜசம், தாமசம், சாத்வீகம் என்ற முக்குணங்களையும் விலக்க ஓம்(அ+உ+ம்) எனும் ஓங்காரத்தினுள் ஆடிக் கொண்டிருக்கும் கண்ணின் கருமணியைப் பிடித்து தவம் செய்யுங்கள். அதுவே சிவாயமாகும்.

புவனசக் கரத்துளே பூதநாத வெளியிலே
பொங்குதீப வங்கியுள் பொதிந்தெழுந்த வாயுவைத்
தவனசோம ரிருவருந் தாமியங்கும் வாசலில்
தண்டுமாறி யேறிநின்ற சரசமான வெளியிலே. 326

புவன சக்கரமாம் கண்ணின் கருமணிக்குள் செல்ல பூதநாத வெளி செல்லலாம். சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றுவித்து மேலேற்றி, கண்ணுக்குள் இருக்கும் தீபத்தில் உள்ள நெருப்பில் செலுத்த வேண்டும். அது கபாலத்துக்குள் மடைமாறி, ஏறி வெட்ட வெளிக்கு செல்லும். இதுதான் வாசியோகம்.

மவுனவஞ் செழுத்திலே வாசியேறி மெள்ளவே
வானளாய் நிறைந்தசோதி மண்டலம் புகுந்தபின்
அவனுநானும் மெய்கலந் தனுபவித்த வளவிலே
அவனுமுண்டு நானுமில்லை யாருமில்லை யானதே. 327

ஐந்தெழுத்தாம் உடலிலே மவுனத்தில் இருந்து வாசியோகப் பயிற்சியால் வாசியை ஏற்றி ஆகாயத் தலமாம் வெட்ட வெளிக்குள் நிறைந்திருந்த சோதி மண்டலத்தில் புகுந்து ஈசனுடன் கலக்கவேண்டும். அப்போது ஈசன் மட்டும் உண்டு; நான் இல்லை; வேறு யாரும் இல்லை. சராசரம் முழுதும் ஈசனே நிறைந்திருப்பான்.

வாளுறையில் வாளடக்கம் வாயுறையில் வாய்வடக்கம்
ஆளுறையில் ஆளடக்கம் அருமைஎன்ன வித்தைகாண்
தாளுறையில் தாளடக்கம் தன்மையான தன்மையும்
நாளுறையில் நாளடக்கம் நானும்நீயுங் கண்டதே. 328

வாளின் உறைக்குள்ளே வாள் அடங்கி உள்ளது. வாய் எனும் வாயுறையில் நம் ஆயுள் முழுதும் விடும் மூச்சுக் காற்று அடங்கியுள்ளது. மானிட உடலில் நான் எனும் ஆன்மா அடங்கியுள்ள விந்தை என்ன? நெற்பயிரின் தாளுக்குள்ளே மற்றொரு தாளும் உள்ளே ஒடுங்கி உள்ள தன்மையையும், சூரிய உதயம் மறுநாள் சூரிய உதயம் வரை ஒரு நாள் அடங்கியிருப்பதையும் அறிந்து கொள்ளுங்கள். இதுதான் அன்றுமின்றும் நீயும் நானும் கண்டதே.

வழுத்திடா னழித்திடான் மாயரூப மாகிடான்
கழன்றிடான் வெகுண்டிடான் காலகால காலமும்
துவண்டிடா னசைந்திடான் தூயரூப மாகிடான்
சுவன்றிடா னுரைத்திடான் சூட்சசூட்ச சூட்சமே. 329

ஈசனை வாழ்த்திக்கொண்டே ஆன்மா உடலுக்குள் இயங்குகிறது. அதனால் அழிவில்லாதது. கண்ணுக்குத் தெரியாததால் மாய ரூபம் ஆகி நின்றது. உடலை விட்டு கழன்றிடாது இருப்பது. சினமில்லாது இருப்பது. காலா காலமும் நித்தியமாக உள்ளது. எந்நிலையிலும் துவளாது ஒரே நிலையில் இருப்பது. அசையாத தூய உருவானது. ஒரே அளவில் அனைத்திலும் சுவன்றிடாது இருப்பது. அது வெளியாக உரைக்கப்படாதது. ஐதுதான் சூட்சுமத்தின் சூட்சுமம்.

ஆகிகூவென் றேயுரைத்த வட்சரத்தி னானந்தம்
யோகியோகி யென்பர்கோடி யுற்றறிந்து கண்டிடார்
பூகமாய் மனக்குரங்கு பொங்குமங்கு மிங்குமாய்
ஏகமேக மாகவே யிருப்பர்கோடி கோடியே. 330

அ, இ, உ என்ற மூன்றெழுத்து மந்திரத்தை உச்சரித்து இறை ஆனந்தம் அடைந்த யோகி யோகி என்று சொல்லித் திரியும் பலர், அந்த அக்கரத்தையே உற்றுப் பார்த்து பயிற்சி செய்து கண்டறியார். அப்படி வாசி யோகம் செய்து இன்பம் கண்ட யோகிகள், அங்குமிங்கும் குரங்கைப் போல் தாவும் மனதை அடக்கி ஏகமாகிய மெய்ப்பொருளை உணர்ந்து ஏகமனதோடு தவத்தில் இருப்பார்கள்.

கோடிகோடி கோடிகோடி குவலயத்தோ ராதியை
நாடிநாடி நாடிநாடி நாளகன்று வீணதாய்
தேடிதேடி தேடிதேடி தேகமுங் கசங்கியே
கூடிகூடி கூடிகூடி நிற்பர்கோடி கோடியே. 331

உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் ஆதியாம் ஈசனை அடைந்தால் சொர்க்கத்தை அடையலாமென எண்ணி, அவனை நாடி, பூசைகள் பல செய்து நாட்கள் வீணாகியது. ஈசனிருக்கும் இடத்தை விட்டு, இல்லாத இடங்களில் எல்லாம் தேடி அலைந்து, உடல் இளைத்தது. அந்த ஆதியான மெய்ப்பொருள் தன் உடலின் உச்சியில் கபாலத்தில் இருப்பதை உணர மாட்டார்கள். இப்படி உணராதவர்கள் கூடிக்கூடி ஏங்கி நிற்பவர்கள் கோடி.

கருத்திலான் வெளுத்திலான் பரனிருந்த காரணம்
இருத்திலா னொளித்திலா னொன்றுமிரண்டு மாகிலான்
ஒருத்திலான் மரித்திலா னொழிந்திடா னழிந்திடான்
கருத்திற்கீயுங் கூவுமுற்றோன் கண்டறிந்த வாதியே. 332

முதன்முதலில் பரனாம் ஈசன் இருந்த காரணத்தை அறியுங்கள். அது கருப்பு இல்லை; வெளுப்பும் இல்லை. இருப்பதும் இல்லை; ஒளிவதும் இல்லை. ஒன்றும் இல்லை; இரண்டும் இல்லை. ஒன்றாகவும் அநேகமாகவும் உள்ளது. பிறப்பதும் இல்லை; இறப்பதும் இல்லை. அது ஒழிந்து போவதோ அழிந்து போவதோ இல்லை. இவைகளைக் கருத்தில் கொண்டு தவம் செய்யவேண்டும். அப்போது வாசியினால் கீ என்று கூவி, கபாலத்திற்குள் ஊதவேண்டும். அப்படிச் செய்தவர்கள் ஆதியாம் ஈசனைக் கண்டறிவார்கள்.

வாதிவாதி வாதிவாதி வண்டலை யறிந்திடான்
ஊதியூதி யூதியூதி யொளிமழுங்கி யுளறுவான்
வீதிவீதி வீதிவீதி விடைஎருப் பொறுக்குவோன்
சாதிசாதி சாதிசாதி சாகாரத்தை கண்டிடான். 333

வாத வித்தை செய்யும் இரசவாதிகள் வழலையிலிருந்து காய்ச்சி எடுக்கும் வண்டலாகிய உப்பையும் அதை முப்பு ஆக்கும் முறையையும் அறியமாட்டார்கள். இரசவாதம் செய்கின்றேன் என்று செம்பை பொன்னாக்க முயற்சித்து உலையில் வைத்து ஊதி ஊதி, தனக்குள் உள்ள ஒளி மழுங்கி கண்டபடி உளறுவார்கள். வீதி வீதியாகச் சென்று மாட்டுச் சாணத்தாலாகிய எருவைப் பொறுக்கி, அதை வைத்துப் புடம் போடுவார்கள். இன்னல் பல பட்டும் சொக்கத் தங்கம் செய்ய இயலாது மடிவார்கள். இப்படிப்பட்டவர்கள் சொக்கத் தங்கமாக உடலில் விளங்கும் சாகரத்தில் உள்ள சோதியை உணர மாட்டார்கள்.

ஆண்மையாண்மை யாண்மையாண்மை ஆண்மைகூறும் அசடரே
காண்மையான வாதிரூபங் காலகால காலமும்
பாண்மையாகி மோனமான பாசமாகி நின்றிடும்
நாண்மையான நரலைவாயில் நங்குமிங்கு மங்குமே. 334

ஆண்மைதான் உயர்வு என ஆண்மை பேசும் அசடர்களே! பெண்மை இல்லாத ஆண்மை எப்படி வந்தது? கிடையாது. உங்களின் உடலிலே உள்ள ஆதியான வாலைக்குமரி ரூபம்தான் காலா காலமாக அனைவருக்கும் இருக்கின்றது. அது மவுனத்திலே, பதி, பசு, பாசமாகி நின்றுள்ளது. அந்த வாலைக்குமரி நாற்றம் இல்லாத நரகல் வெளி வரும் வாசலில் தங்கி உள்ளாள் என்பதையும், இங்கும் அங்கும் எங்குமே அவளால் ஆகி நிற்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

மங்குவென்ற அட்சரத்தின் மீட்டுவாகிக் கூவுடன்
துங்கமாகச் சோமனோடு சோமன்மாறி நின்றிடும்
அங்கமா முனைச்சுழியி லாகுமேக வாகையால்
கங்குலற்றுக் கியானமுற்று காணுவாய் சுடரொளி. 335

மங்கு என்ற அட்சரத்தோடு கூவைச் சேர்த்து, சூரிய, சந்திர கலைகளை அக்கினியில் சேர்த்து கபாலத்தினுள் ஊதவேண்டும். கபாலத்தில் உள்ளே உள்ள சுழுமுனையில் மடைமாறி ஏகமாகி வெட்டவெளியில் நிற்கும். அந்த இரவு பகலற்ற இடத்தில் ஞானம் கிட்டி சுட்ரொளி காணலாம்.

சுடரெழும்பும் சூட்சமுஞ் சுழுமுனையின் சூட்சமும்
அடரெழும்பி யேகமாக வமர்ந்துநின்ற சூட்சமுந்
திடரதான சூட்சமுந் திரியின்வாலை சூட்சமுங்
கடலெழும்பு சூட்சந்தன்னை கண்டறிந்தோன் ஞானியே. 336

உடலில் சீவ உறுப்பிலிருந்து சோதியை எழுப்பும் சூட்சமத்தையும், கபாலத்தின் உள்ளே உள்ள சுழிமுனையின் சூட்சமத்தையும், அக்கினியில் உயிர் கலந்து எழும்பி ஏகமாக அமர்ந்து நின்ற சூட்சமத்தையும், திடப்பொருளாக உள்ள மெய்ப்பொருளின் சூட்சமத்தையும், உடலில் உயிர் என்னும் திரியாக வாலைக்குமரி இருக்கும் சூட்சமத்தையும், ஏழு கடலையும் எழுப்பும் சூட்சமத்தையும், தன்னை அறிந்து தனக்குள்ளேயே கண்டவர்களே ஞானிகள்.

ஞானிஞானி என்றுரைத்த நாய்கள் கோடிகோடியே
வானிலாத மழைநாளென்ற வாதிகோடி கோடியே
தானிலான சாகரத்தின் தன்மைகாணா மூடர்கள்
மூனிலாமற் கோடிகோடி முன்னறிந்த தென்பரே. 337

கோடி கோடியான பேர்கள் தன்னையே ஞானி ஞானி என்று அழைத்துக்கொண்டு அலையும் நாய்கள். வானிலிருந்து பெய்யாத நீரே அமுரி என்று நாள்தோறும் கூறி அதனை தேடித் தேடி அலையும் இரசவாதிகளும் கோடி கோடி. இவர்கள் எல்லாம் தன்னில் உள்ள கடலில் மிதக்கும் கண்களின் தன்மையை அறியாத மூடர்கள். தன் உடலின் முன் பகுதியில் உள்ள வாயிலைத் திறக்க வழி அறியார். இந்த இரகசியங்கள் எல்லாம் எங்களுக்கு முன்னரே தெரியும் எனப் பேசி மடிவார்கள்.

சூட்சமான கொம்பிலே சுழிமுனைச் சுடரிலே
வீச்சமான வெயிலே விபுலைதங்கும் வாயிலே
கூச்சமான கொம்பிலே குடியிருந்த கோவிலே
தீட்சையான தீவிலே சிறந்ததே சிவாயமே. 338

கபாலத்தின் உள்ளே உள்நாக்கு தொங்கும் இடத்தில் உள்ள சுழி முனையில் உள்ள தீயான சுடரிலே ஆடிக்கொண்டு இருக்கும் உயிரில் வாலைக்குமரி தங்கியுள்ளாள். அந்தக் கொம்பிலேதான் ஈசன் குடியிருக்கிறான். அந்தக் கோயிலான இடத்திலே தொட்டுக் காட்டி குரு தீட்சை வழங்கிய சோதி விளங்கும் இடத்தில் சிறந்து இருந்தது சிவாயமே.

பொங்கிநின்ற மோனமும் பொதிந்துநின்ற மோனமுந்
தங்கிநின்ற மோனமுந் தயங்கிநின்ற மோனமுங்
கங்கையான மோனமுங் கதித்துநின்ற மோனமுந்
திங்களான மோனமுஞ் சிவனிருந்த மோனமே. 339

உடலில் பொதிந்து நின்றது கண்கள். அது மவுனம். ஞானம் பொங்கி நின்றது, உயிரில் தங்கி நின்றது, தயங்கி ஆடுவது, கங்கையான நீரைப் பொழிவது, மூச்சோட்டத்தில் நின்றது, சந்திரனானது ஆகிய எல்லாம் சிவன் இருந்த மவுனமே.

மோனமான வீதியில் முனைச்சுழியின் வாலையில்
பானமான வீதியில் பசைந்தசெஞ் சுடரிலே
ஞானமான மூலையில் நரலைதங்கும் வாயிலில்
ஓனமான செஞ்சுட ருதித்ததே சிவாயமே. 340

மவுனமான வீதியில் ஆகாயத் தலத்தில் வாலைக்குமரி உள்ளாள். முக்கலையையும் ஒன்றித்து மேலேற்றி வீதிகளைக்(ஆதாரங்கள்) கடந்து, செஞ்சுடரில் கலக்கவேண்டும். அப்போது ஞானம் விளங்கும் மூலையில், கழிவுப் பொருள் வெளியேறும் வாயிலில் ஓங்காரச் செஞ்சுடர் உதிக்கும். அதுவே சிவாயம்.

உதித்தெழுந்த வாலையு முயங்கிநின்ற வாலையும்
கதித்தெழுந்த வாலையுங் காலையான வாலையும்
மதித்தெழுந்த வாலையும் மறைந்துநின்ற ஞானமுங்
கொதித்தெழுந்து கும்பலாகி ஹூவும்ஹீயும் ஆனதே. 341

வாலைக்குமரி, உதித்தெழுந்தவள்; உயிராய் இயங்குபவள்; உடலில் மூச்சுக் காற்றாய் கதி தவறாமல் ஓடுபவள்; காலையில் உதிக்கும் கதிரவனில் நின்றவள்; மதித்துப் பூசிக்க எழுபவள்; நமக்குள் மறைந்து நின்ற ஞானத்தைத் தருபவள். அவளை அறிந்து, வாசியோகம் செய்து, ஹூங்காரம் ஹீங்காரம் இரண்டையும் ஒன்று சேர்த்து ஓத, வாலை ஓங்காரமாகி நிற்பாள்.

கூவுங்கியும் மோனமாகி கொள்கையான கொள்கையை
மூவிலே யுதித்தெழுந்த முச்சுடர் விரிவிலே
பூவிலே நறைகள்போற் பொருந்திநின்ற பூரணம்
ஆவியாவி யாவியாவி யன்பருள்ள முற்றதே. 342

கூ என்பது உகாரம்; கி என்பது இகாரம். இது அகாரத்துடன் சேர்ந்து மவுனமாக நின்றதை உணர்ந்திடுங்கள். மூன்று எழுத்தாக உதித்தெழுந்த வாசி சூரிய, சந்திர, அக்கினி கலையாக விரிவாகி நின்றது. பூவிலே உள்ள மணம் போல நமக்குள் பொருந்தி நின்ற அதுவே பூரணம். அது ஆவியாக ஆன்மாவாகி, சிவாமாய் அன்பர் உள்ளத்தில் உள்ளது.

ஆண்மைகூறு மாந்தரே அருக்கனோடும் வீதியைக்
காண்மையாகக் காண்பிரே கசடறுக்க வல்லிரே
தூண்மையான வாதிசூட்சஞ் சோபமாகு மாகுமே
நாண்மையான வாயிலில் நடித்துநின்ற நாதமே. 343

ஆண்மை பேசும் மனிதர்களே! சூரிய கலை ஓடும் வழியை உற்று நோக்கி மெய்ப்பொருளைக் காணுங்கள். ஆணவம், கன்மம், மாயை ஆகியவைகளால் ஏற்பட்ட பாவங்களையும், குற்றங்களையும் அகற்ற வல்லவர்களானால் கபாலத்தில் தூணாகி நிற்கும் ஆதியின் சூட்சத்தில் பரஞ்சோதியைக் காணலாம். நாக்கில் நடமாடும் நாதமாக உள்ளவன் ஈசனே.

நாதமான வாயிலில் நடித்துநின்ற சாயலில்
வேதமான வீதியில் விரிந்தமுச் சுடரிலே
கீதமான ஹீயிலே கிளர்ந்துநின்ற கூவிலே
பூதமான வாயிலைப் புகலறிவ னாதியே. 344

சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றி, வேதமான நான்கு வாசல் பொருந்திய வீதியில் மேலேற்றி, நாதம் வெளிவரும் வாயால் ஹீங்கார ஒலி எழுப்பி, இரண்டையும் சேர்த்து கூவெனும் உகாரத்தில் சேர்க்கவேண்டும். ஐம்பூதங்களும் ஒன்றாகப் பொருந்தி நின்ற அகாரத்தினுள் புகுந்து செல்ல, அங்கிருப்பது அறிவாகிய ஆதியே.

ஆவியாவி யாவியாவி ஐந்துகொம்பி னாவியே
மேவிமேவி மேவிமேவி மேதினியில் மானிடர்
வாவிவாவி வாவிவாவி வண்டல்க ளறிந்திடார்
பாவிபாவி பாவிபாவி படியிலுற்ற மாந்தரே. 345

ஆவி எனும் ஆன்மா ஐம்புலன்களிலும் கலந்து ஆவியாகவே உள்ளது. அது உலகில் மனிதர்களின் உடலில் பரவி நின்றுள்ளது. உடலில் மற்ற தன்மைகள் இல்லாதுபோயின், மிஞ்சி நிற்பது வண்டல்களாய் இருந்த உப்பு. அதன் தன்மைகளை யாரும் அறியவில்லை. உப்பைப் படியில் அளந்து அதனை உண்டு வாழ்பவர்கள் அதன் மகிமையை அறியாதது பாவமே.

வித்திலே முளைத்தசோதி வில்வளைவின் மத்தியில்
உத்திலே யொளிவதாகி மோனமான தீபமே
நத்திலோதி ரட்சிபோன்ற நாதனை யறிந்திடார்
வத்திலே கிடந்துழன்ற வாலையான சூட்சமே. 346

ஆன்ம வித்தில் முளைத்த சோதி வில்லின் வளைவை ஒத்த புருவ மத்தியில் அமர்ந்துள்ளது. அந்த உத்தமமான ஒளிதான் ஆன்மசோதியாம் ஈசன். தவம் செய்து அதன் ஒளியைப் பெருக்குங்கள். நத்தையின் திரட்சி போன்று நம் உடலுக்குள் கண்களாக உள்ள நாதனை அறியாது இருக்கின்றீர்கள். அது நம் முகத்தில் இருந்து உழன்றுகொண்டிருக்கும் வாலை. அதுவே சூட்சமம்.

வாலையோடு காலையும் வடிந்துபொங்கும் மோனமே
மாலையோடு காலையான வாறறிந்த மாந்தரே
மூலையான கோணமின் முளைத்தெழுந்த செஞ்சுடர்
காலையோடு பானகன்று தங்கிநின்ற மோனமே. 347

வாலைக்குமரியுடன் காலாகிய காற்றைச் சேர்க்க, அனைத்தும் அடங்கி, மவுனம் பொங்கி வடியும். காலையும் மாலையும் மாறிமாறி வருவதுபோல, பிறப்பும் இறப்பும் தொடர்ந்து வருகிறது. உங்கள் கபாலத்துக்குள்ளே உள்ள முக்கோணத்தின் மூலையில் முளைத்து எழுகின்ற செஞ்சுடராக விளங்கும் சோதியைக் கண்டு, சர்வகாலமும் சூரிய கலையில் நின்று தவம் இயற்ற தங்கி நின்றது மவுனம்தான்.

மோனமான வீதியில் முடுகிநின்ற நாதமே
ஈனமின்றி வேகமான வேகமென்ன வேகமே
கானமான மூலையில் கனிந்திருந்த வாலையில்
ஞானமான செஞ்சுடர் நடந்ததே சிவாயமே. 348

வாசியோகத்தால் முக்கலையையும் ஒன்றாக்கி மேலேற்றி, கபாலத்துக்குள்ளே மவுனமான பாதையில் செல்ல ஹுங்கார நாதம் வேகமாகக் கேட்கும். இன்னும் மேலேற்ற, கபாலத்தின் உச்சியில் ஆகாயத்தில் கனிந்திருந்த வாலையில் உள்ள ஞானமான செஞ்சுடருடன் கலக்கும். இங்ஙனம், வாசியும் வாலையும் சேர்ந்தது சிவாயமே.

உச்சிமத்தி வீதியி லொழிந்திருந்த சாதியிற்
பச்சியுற்ற சோமனும் பரந்துநின் றுலவவே
செச்சியான தீபமே தியானமான மோனமே
கச்சியான மோனமே கடந்ததே சிவாயமே. 349

கபாலத்தின் மத்தியில் சாதி பேதமற்ற மெய்ப்பொருள் உள்ளது. சூரிய, சந்திர, அக்கினி கலைகளை ஒன்றாக்கி மேலேற்ற, மனம் அழிந்து, உயிர் செக்கச் சிவந்த சோதியில் ஒன்றும். அங்கே மவுனத்தில் நின்று தவம் செய்ய, கச்சியாம் இறுதியைக் கடக்கலாம். கடந்ததும் இருப்பது சிவாயமே.

அஞ்சுகொம்பி னின்றநாத மாலைபோ லெழும்பியே
பிஞ்சினோடு பூமலர்ந்து பெற்றியுற்ற சுத்தமே
செஞ்சுட ருதித்தபோது தேசிகன் சுழன்றுடன்
பஞ்சபூத மானதே பறந்துநின்ற மோனமே. 350

ஐம்புலன்களில் நின்ற நாதம் வாசியோகத்தால், ஆலையில் இருந்து கிளம்பும் புகைபோல் மேல் நோக்கி எழும். அது விந்துவுடன் சேர்ந்து பூவாக மலர்ந்து உடலில் பரிசுத்தமாகி நின்றிருக்கும். அதில்தான் செஞ்சுடராக சிவம் உதித்து சுழன்று கொண்டுள்ளது. அங்கே பஞ்ச பூதங்களும் பரந்து நின்றுள்ளது. அங்குதான் மவுனம் உள்ளது. அதில் நினைவை வைத்து ஈசனை அடையுங்கள்.

சடுதியான கொம்பிலே தத்துவத்தின் ஹீயிலே
அடுதியான ஆவிலே அரனிருந்த ஹூவிலே
இடுதியென்ற சோலையி லிருந்தமுச் சுடரிலே
நடுதியென்று நாதமோடி நன்குற வமைந்ததே. 351

நொடியில் மறையும் இவ்வுடலின் தத்துவங்கள் எல்லாம் ‘ஹீ‘ என்னும் எழுத்தில்தான் உள்ளது. அகாரமானது, அரன் இருக்கும் ஹூ. இரு தீயாக உள்ள சூரிய, சந்திர கலைகளை அக்கினி கலையுடன் சேர்த்து மேலேற்றி, நடுத் தீயாம் ஈசனுடன் கலக்கவேண்டும். அந்த இடத்தில் நாதம் வாசியுடன் சேர்ந்து கூடி நன்றாக அமைந்து உள்ளது.

அமையுமால் மோனமு மரனிருந்த மோனமும்
சமையும்பூத மோனமுந் தரித்திருந்த மோனமும்
இமையு(ய)ம்கொண்ட வேகமு மிலங்குமுச்சி மோனமும்
தமையறிந்த மாந்தரே சடத்தையுற்று நோக்கிலார். 352

திருமாலும், சிவனும் மவுனத்தில் அமைந்திருப்பதையும், ஐந்து பூதங்களும் ஒன்றாகி சமைந்திருப்பதையும், அங்கு உடல் தரித்திருந்ததையும், தங்கள் உடலில் இமயம் என்ற மலையாம் தலையின் உச்சியில் வாசி இயங்கிக்கொண்டு இருப்பதையும், தன்னை உணர்ந்த ஞானிகளே அறிவார்கள். அவர்கள் இந்தப் பொய்யான உடலைப் பற்றியோ, அது அழிவதைப் பற்றியோ கவலைப்பட மாட்டார்கள்.

பாய்ச்சலூர் வழியிலே பரனிருந்த சுழியிலே
காய்ச்சகொம்பி னுனியிலே கனியிருந்த மலையிலே
வீச்சமான தேதடா விரிவுதங்கு மிங்குமே
மூச்சினோடு மூச்சைவாங்கு முட்டிநின்ற சோதியே. 353

மனமாகிய நினைவு பாய்ந்து செல்லும் வழியிலேதான் பரம் பொருளான ஈசன், காயமான உடலினுள்ளே கபாலத்துக்குள் உள்ள சுழிமுனையில் உள்ளான். அனைவரின் உடலிலும் அது வெட்டவெளியாம் ஆகாயத்தில் இங்குமங்கும் தங்கியும், விரிந்தும் உள்ளது. அதை உணர்ந்து வெளி மூச்சோடு உள் மூச்சை முட்டி அவ்விடத்துக்கு ஏற்றி சுழிமுனையில் நிற்கும் சோதியோடு கலக்கலாம்.

சோதிசோதி யென்றுநாடித் தோற்பவர் சிலவரே
ஆதிஆதி யென்றுநாடு மாடவர் சிலவரே
வாதிவாதி யென்றுசொல்லும் வம்பருஞ் சிலவரே
நீதிநீதி நீதிநீதி நின்றிடும் முழுச்சுடர். 354

சோதியே ஈசன் என்று நாடித் தவமிருந்து அதை அடைய முடியாது தோற்றவர்கள் சிலரே. அதுவே ஆதி என உணர்ந்து, அதையே நாடித் தேடும் வல்லவர்கள் சிலரே. காயகற்பம் செய்து உண்டு ஈசனை அடையலாம் என்று சொல்லி இரசவாதம் செய்து வம்பு பேசுபவர்கள் சிலரே. அது ஆதியும் அந்தமும் இல்லாது; அனைவருக்கும் பொதுவான நீதியாக நிற்பது; முழுச்சுடர் என்பதை உணருங்கள்.

சுடரதாகி யெழும்பியங்கு தூபமான காலமே
இடரதாய்ப் புவியும்விண்ணு மேகமா யமைக்கமுன்
படரதாக நின்றவாதி பஞ்சபூத மாகியே
அடரதாக அண்டமெங்கு மாண்மையாக நின்றதே. 355

ஈசன் இவ்வுடலில், காலங்காலமாக ஒளிமிக்க சுடராக இருந்து இயங்குகிறான். அந்த சோதியே பரிபூரணம். அந்த நெருப்புக் கோளத்திலிருந்துதான் அண்ட சராசரங்கள் உண்டாகியது. அது ஆதியாகி, அனைத்திலும் படர்ந்து பஞ்ச பூதங்கள் ஆகின. அதுவே அண்டத்திலும் பிண்டத்திலும் அகாரமான சீவனிலிருந்து ஆண்மையாகி, சிவனாக நின்றது.

நின்றிருந்த சோதியை நிலத்திலுற்ற மானிடர்
கண்டறிந்து கண்குளிர்ந்து காதலுற் றுலாவுவோர்
கண்டமுற்ற மேன்முனையின் காட்சிதன்னைக் காணுவார்
நன்றியற்று நரலைபொங்கி நாதமும் மகிழ்ந்திடும். 356

நம் உடலில் நின்று கொண்டிருக்கும் சோதியை இப்பூமியிலே உள்ள மனிதர்கள் தனக்குள்ளேயே கண்டு, அறிந்து, கண்களில் நீர் தளும்ப, அன்பே சிவம் என உணர்ந்து ஞானப் பயிற்சி செய்து வாழ்வார். தன் இரு கண்களால் உச்சியில் உள்ள ஞானக் கண்ணை நோக்கி ஞானப் பயிற்சி செய்ய, ஞானக் கண்ணில் தன்னையே காணுவார்கள். அப்போது, ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்களும் விலகி நரலை(கடல்) பொங்கி வடிந்திடும். விந்து நாதமாகிய சிவசக்தி இணையும். பேரின்பம் கிட்டும்.

வயங்குமோனச் செஞ்சுடர் வடிந்தசோதி நாதமுங்
கயங்கள்போலக் கதறியே கருவூரற்ற வெளியிலே
பயங்கொடின்றி யின்றியே படர்ந்துநின்ற பான்மையை
நயங்கள்கோ வென்றேநடுங்கி நங்கையான தீபமே. 357

வடிந்த சோதியான ஒளியும் நாதமான ஒலியும் நிலையாக இயங்கும் மோனச் செஞ்சுடராகிய சிவத்திலிருந்து தோன்றியது. அதுவே யானைக்குட்டி போலக் கதறி அழுது பிறப்பெடுக்கின்றது. யோனியற்ற சூன்ய வெளியில் பஞ்ச பூதங்களும் கோள்களும் தோன்றிப் படர்ந்து நின்ற பாங்கைப் பாருங்கள். இவை யாவும் உடலிலே கபாலத்தின் உச்சியில் ஆடிக்கொண்டிருக்கும் வாலைத் தீபமே.

தீபவுச்சி முனையிலே திவாகரத்தின் சுழியிலே
கோபமாறு கூவிலே கொதித்துநின்ற தீயிலே
தாபமான மூலையிற் சமைந்துநின்ற சூட்சமுஞ்
சாபமான மோட்சமுந் தடித்துநின் றிலங்குமே. 358

கபாலத்தில், தீபமாம் சோதியின் உச்சி முனையிலே சூரியன் என்னும் அகாரத்தின் சுழியில் கொதித்து நின்ற தீயாக ஈசன் உள்ளான். அத்தீயை, முக்கலைகளையும் ஒன்றாக்கி கோபமாக ஊதுவதைப்போல, கூ என்னும் உகாரத்தால் ஊதவேண்டும். தாபமான மூலையில் உள்ள வாலை அங்கு நிற்கும் சூட்சமம் தெரியும். சாபங்களையும், பாவங்களையும் ஒழித்து நினைவை அங்கேயே நிறுத்தித் தவம் செய்யுங்கள். அந்த வாலையில்தான் ஆன்மா உள்ளது.

தேசிகன் சுழன்றதே திரிமுனையின் வாலையில்
வேசமோடு வாலையில் வியனிருந்த மூலையில்
நேசசந்தி ரோதயம் நிறைந்திருந்த வாரமில்
வீசிவீசி நின்றதே விரிந்துனின்ற மோனமே. 359

கபாலத்தில், மூன்று கலைகளும் ஒன்று சேருமிடத்தில் வாலை உள்ளாள். அங்குதான் ஈசன் சுழன்று ஆடிக் கொண்டிருக்கிறான்.. வேடமிட்டு நிற்கும் வாலையை அறிந்து அதன் மூலையில் உள்ள ஈசனை உணர்ந்து, கண்களைப் பவுர்ணமியாக்கி முக்கலைகளையும் வீசிவீசித் தவம் இருக்க மவுனம் விரியும்.

உட்கமல மோனமி லுயங்கிநின்ற நந்தியை
விக்கலோடு கீயுமாகி வில்வளைவின் மத்தியில்
முட்பொதிந்த தென்னவே முடுகிநின்ற செஞ்சுடர்
கட்குவைகள் போலவுங் கடிந்துநின்ற காட்சியே. 360

உடலில் உள்ள கண்களில் மவுனத்தில் இயங்கும் நம் தீயை அறியுங்கள். இரு கண்களால் வில்லைப் போல் வளைந்த புருவ மத்தியில் நோக்க, அது நெற்றிக்கண்ணாம் ஞானக் கண்ணில் உள்ள செஞ்சுடரில் கலக்கும். அப்போது வாசியை “கீ” என்னும் ஒலியோடு மேலேற்ற வேண்டும். அப்படி ஞானத்தவம் செய்ய கல்லால மரத்தடியில் இருக்கும் குருவின் காட்சி கிட்டும்.

உந்தியிற் சுழிவழியி லுச்சியுற்ற மத்தியிற்
சந்திர னொளிகிரணந் தாண்டிநின்ற செஞ்சுடர்
பந்தமாக வில்வளைவிற் பஞ்சபூத விஞ்சையாங்
கிந்துபோற் கீயில்நின்று கீச்சுமூச்சு வென்றதே. 361

உகாரமான உடலின் உந்தியில்(உன்+தீ) உள்ளே சுழிவழியாகச் சென்றால் கபாலத்தின் மத்தியில் செஞ்சுடர் உள்ளது. அது சூரிய சந்திர கலைகளைத் தாண்டி உள்ளது. இரு கண்களாலும் வில்வளவை ஒத்த புருவ மத்தியில் வைக்க, அது மேலேறி இந்துவாம் வேள்வித் தீயாக எழும்பி சோதியில் கலக்கும். அப்போது கீச்சுமூச்சு என ஒலி கேட்கும்.

செச்சையென்ற மூச்சினோடு சிகாரமும் வகாரமும்
பச்சையாகி நின்றதே பரவெளியின் பான்மையே
இச்சையான ஹூவிலே இருந்தெழுந்த ஹீயிலே
உச்சியான கோணத்தி லுதித்ததே சிவாயமே. 362

சிவ சிவ எனும் சிகார வகாரத்தை நினைவில் வைத்து பிசிறு இல்லாத ஒழுங்குடன் வாசியை மேலேற்றுங்கள். ஈசன், சோதியாக, பச்சை பசேல் என்றுள்ள பரவெளியில் உள்ளான். வாசியை உள்ளே இழுத்து ஹூ என்ற உகாரத்தினால் ஊத, அதில் இருந்து எழுகின்ற ஹீ என்னும் சிகாரத்தின் மீத ஏறும். கபாலத்தின் உச்சியில் சோதியாக உதித்து நின்றது சிவாயம் என்னும் சோதி என அறிந்து, வாசியோகம் செய்யுங்கள்.

ஆறுமூலைக் கோணத்தி லமைந்தவொன்ப தாத்திலே
நாறுமென்று நங்கையான நாவியுந் தெரிந்திட
கூறுமென்று ஐவரங்கு கொண்டுநின்ற மோனமே
பாறுகொண்டு நின்றது பரந்ததே சிவாயமே. 363

ஆறு ஆதாரங்களும் ஒன்பது வாயில்களும் கொண்ட இந்த உடல், உயிருடன் இருக்கும்போதும் மடிந்த பின்னும் நாற்றம் வீசுகிறது. அப்படி நாறுகின்ற இவ்வுடலில் நாறாத வாயிலில் வாலைக்குமரியாக நம் ஆவியில் உள்ளது வாலை. அதிலேயே ஐந்து பூதங்களும் இணைந்து நிற்கும் மவுனமே திருவடி. இது, இவ்வுலகம் முழுவதும் உள்ள எல்லா உயிர்களின் தலையிலும் உள்ளது. இத் திருவடி, கண்களாய் விளங்கிப் பரந்து நின்று இயங்குகிறது. அப்படி இயக்குவது சிவமே.

பறந்ததே கறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
பிறந்ததே பிராணனன்றிப் பெண்ணுமாணு மல்லவே
துறந்ததோ சிறந்ததோ தூயதுங்க மானதோ
இறந்தபோதி லன்றதே இலங்கிடுஞ் சிவாயமே. 364

உயிர் இறக்கும்போது பத்தாம் வாயிலாம் வாய் வழியாகப் பறந்து சென்றது. அங்கிருந்து பிரிந்த ஆன்மா ஆணுமல்ல; பெண்ணுமல்ல; அலியும் அல்ல. அவ்வான்மா மறு உடலில் பிறவி எடுத்து தூய தங்கமாக விளங்கியது. உடலில் உலாவி நின்ற உயிரானது இறந்த போதில் எங்கு சென்றது? யாவும் சிவத்தின் செயல் என்றுணர்ந்து, உயிரோடு உள்ள காலத்தில் தவம் செய்து அத்துடன் ஒன்றவேண்டும்.

அருளிருந்த வெளியிலே அருக்கனின்ற விருளிலே
பொருளிருந்த சுழியிலே புரண்டெழுந்த வழியிலே
தெருளிருந்த கலையிலே தியங்கிநின்ற வலையிலே
குருவிருந்த வழியினின்று ஹூவும்ஹீயு மானதே. 365

சிவத்தின் அருள் இருந்தது வெட்டவெளியாகிய ஆகாயத்தில்; சூரியன் நின்றுள்ளது இருளாகிய மனத்தில்; மெய்ப்பொருள் இருந்தது சுழிமுனையில்; வாசி புரண்டு எழுந்து மேலே ஏறுவது சுழிமுனை வழியில். ஆன்மா அலைக்கழிக்கப் படுவது ஆசை என்னும் வலையில். இதனை எல்லாம் நன்குணர்ந்து தெளிவு பெறுங்கள். ஆன்மா கடைத்தேற வாசி யோகம் என்னும் கலையால் மட்டும் முடியும் எனத் தெளிவுற்று, குரு உபதேசித்த வழியில் அறிவு, உணர்வு, நினைவு ஆகியவற்றைக் கருத்தில் வைத்து, தவம் செய்யுங்கள். ஹூ என்னும் உயிரை, ஹீ என்னும் சிகாரத்தில் சேர்க்கும் வழி இதுதான்.

ஆனதோ ரெழுத்திலே யமைந்துநின்ற வாதியே
கானமோடு தாலமீதிற் கண்டறிவ தில்லையே
தானுந்தானு மானதே சமைந்தமாலை காலையில்
வேனலோடு வாறுபோல் விரிந்ததே சிவாயமே. 366

ஆதி, குத்தெழுத்தாய் நம் முகத்தில் கண்ணாய் உள்ளது. அது கானல் நீரைப் போல் தனக்குள் இருப்பதை உலகத்தில் உள்ளவர்கள் உணர்வதில்லை. தானாகவே ஆகித் தானாக நின்ற அந்த ஆதியை இராப்பகல் இல்லாத இடத்தே கண்டு காலையும் மாலையும் நினைவைக் கருத்தில் நிறுத்தித் தவம் செய்யுங்கள். அது நம் உடலில் நெருப்பாறாக ஓடி விரிந்த இடமே. அதுதான் சிவாயம்.

ஆறுகொண்ட வாரியு மமைந்துநின்ற தெய்வமுந்
தூறுகொண்ட மாரியுந் துலங்கிநின்ற தூபமும்
வீறுகொண்ட மோனமும் விளங்கு முட்கமலமும்
மாறுகொண்ட ஹூவிலே மடிந்ததே சிவாயமே. 367

ஆறுகள் கலக்கும் திருப்பாற்கடலும், அதில் பள்ளிகொண்ட திருமாலும், தூய்மையான மழை நீரும், விசுவரூபம் எடுக்கும் மவுனமும், உடலில் உள்ள தாமரையாம் மனமும் எல்லாம் ஒன்றாக ஹூங்காரத்தில் மறைந்து சிவமாகும்.

வாயில்கண்ட கோணமில் வயங்குமைவர் வைகியே
சாயல்கண்டு சார்ந்ததும் தலைமன்னா யுறைந்ததுங்
காயவண்டு கண்டதும் கருவூரங்கு சென்றதும்
பாயுமென்று சென்றதும் பறந்ததே சிவாயமே. 368

ஐம்புலன்களை அடக்கி, ஈசனிருக்கும் வாயில் கண்டு, அவனின் கோணமில்லா சாயல் கண்டு, உடலுள் உள்ள தலையில் வாழும் அவனை வாசியோகத்தால் சார்ந்து, கருத்து என்னும் கரு இருக்கும் ஊரில் அவனுடன் சேருங்கள். உடல் இறந்ததும் பரந்து நின்ற சிவம் பாய்ந்து வெளியே சென்றதே.

பறந்ததே துறந்தபோது பாய்ச்சலூர் வழியிலே
மறந்ததே கவ்வுமுற்ற வாணர்கையுன் மேவியே
பிறந்ததே யிறந்தபோதிற் பீடிடாமற் கீயிலே
சிறந்துநின்ற மோனமே தெளிந்ததே சிவாயமே. 369

உடலைத் துறந்து பறந்த சிவம் பாய்ச்சலூர் வழியிலே சென்றதை அறியுங்கள். வாசி யோகத்தினால், முக்கலைகளையும், வாணர்கை யாழிசையைப் போல் இடைவிடாது ஏற்றுங்கள். கபாலத்தின் உள்ளே சென்று ஈசனை அடையுங்கள். பிறப்பறுக்க ‘கீ‘ என்னும் சிகாரத்தில் சோதியாக விளங்கும் மவுனத்தில் தவம் புரிந்து சிவத்தை தெளிந்து அதனுடன் ஒன்றுங்கள்.

வடிவுபத் மாசனத் திருத்திமூல வனலையே
மாருதத்தி னாலெழுப்பி வாசலைந்து நாலையு
முடிவுமுத்தி ரைப்படுத்தி மூலவீணா தண்டினால்
முளரியால யங்கடந்து மூலநாடி யூடுபோய். 370

பத்மாசனத்தில் அமர்ந்து மூலாதாரத்தில் கனலாக இருக்கும் குண்டலினி சக்தியை வாசிக் காற்றினால் எழுப்பி ஒன்பது வாசல்களையும் ஒருசேர அடைத்து, யோக முத்திரையில் இருந்து முதுகுத் தண்டின் மூலம் மேலேற்றுங்கள். முளரியாம் பிரமலோகத்தில் உள்ள ஆலயங்கடந்து, மூல நாடியான சுழுமுனையின் ஊடே செலுத்தி சிவத்தை அடையுங்கள்.

அடிதுவக்கி முடியளவு மாறுமா நிலங்கடந்
தப்புறத்தில் வெளிகடந்த வாதிஎங்கள் சோதியை
யுடுபதிக்கண் ணமுதருந்தி யுண்மைஞான யுவகையுள்
உச்சிபட் டிறங்குகின்ற யோகிநல்ல யோகியே. 371

அடியாம் மூலாதாரத்திலிருந்து முடியாம் ஆகாயத் தலம் வரை முக்கலைகளையும் ஒன்றாக்கி சேர்த்து ஆறு ஆதாரங்களையும் கடந்து செலுத்த வேண்டும். அப்பாலுக்கு அப்பாலாய் அப்புறத்தில் வெளிக்கு உள் கடந்த வெளியில் ஆதியாக விளங்கும் சோதியில் சேர்த்துத் தவம் இருத்தல் வேண்டும். அப்போது அமிர்தம் உண்ணாக்கில் இறங்கும். உண்மையான ஞான ஆனந்தம் கிட்டும். உச்சிக்கு ஏற்றிப் பின், உச்சி முதல் பாதம் வரை உடல் முழுவதும் இறங்க வைத்து, தவம் செய்யும் யோகியே நல்ல யோகி.

மந்திரங்கள் கற்றுநீர் மயங்குகின்ற மாந்தரே
மந்திரங்கள் கற்றநீர் மரித்தபோது சொல்விரோ
மந்திரங்க ளும்முளே மதித்தநீரு மும்முளே
மந்திரங்க ளாவது மனத்தினைந் தெழுத்துமே. 372

மந்திரங்கள் அனைத்தையும் ஐயமின்றிக் கற்று உச்சரித்து, அவைகளால்தான் ஈசனை அடைய முடியும் என்னும் மாயையில் மயங்குகின்ற மாந்தர்களே! இநத மந்திரங்களை வைத்துக்கொண்டு, இறக்குமுன் அவற்றை உச்சரித்து மரணத்தைத் தள்ளிப்போட முடியுமா? மந்திரமாக இருப்பது உனக்குள்ளே உள்ள குத்தெழுத்தே. அதுவே யாவரும் மதிக்கும்படி நீங்களாக உள்ள உயிராகி நின்றது. மந்திரங்கள் என்பது மனதின் திடம். பஞ்சாட்சரமே அந்த மந்திரங்கள் என்று உணருங்கள். நினைவாம் குத்தெழுத்தில்(ஆதி) உள்ளத்தை சேருங்கள்.

உள்ளதோ புறம்பதோ உயிரொடுங்கி நின்றிடம்
மெள்ளவந்து கிட்டிநீர் வினாவவேண்டு மென்கிறீர்
உள்ளதும் பிறப்பது மொத்தபோது நாதமாங்
கள்ளவாச லைத்திறந்து காணவேண்டு மாந்தரே. 373

உயிர் உடலுள் உள்ளதா? அல்லது இவ்வுடலுக்கு வெளியே நின்றுள்ளதா? என மெல்ல அருகில் வந்து கேட்கவேண்டும் என்று சொல்லுகிறீர்கள். உயிர் உடலின் வெளியே நினைவு என்னும் ஆகாயத்திலும், பிறந்தபின் உடலுக்கு உள்ளே சோதியாகவும், இரண்டும் சேர்ந்தபோது நாதமாகவும் உள்ளது. இதை உணர்ந்து, இரகசிய வாயிலாம் வாயைத் திறந்து ஞான யோகம் செய்து அதனுள் சென்று ஈசனைக் காணவேண்டும், மனிதர்களே!

ஓரெழுத்தி லிங்கமா யோதுமட் சரத்துளே
ஓரெழுத் தியங்குகின்ற வுண்மையை யறிகிலீர்
மூவெழுத்து மூவராய் முளைத்தெழுந்த சோதியை
நாவெழுத்து நாவுளே நவின்றதே சிவாயமே. 374

நம் உடலில், குத்தெழுத்தாம் புள்ளியே இலிங்கமாக உள்ளது. அது, ஓதுகின்ற அட்சர மந்திரங்கள் முதலாகவும், நடுவாகவும் முடிவாகவும் இருந்து இயங்குகின்ற உண்மையை அறியாது இருக்கின்றீர்கள். அதுவே அகார, உகார, மகாரமான மூன்றெழுத்தாகிறது. அங்கு அதுவே அரி, அரன், அயன் என்ற மூவராகவும், முளைத்து எழும் சோதியாகவும் உள்ளது. அந்த நாக்குதான் கபலத்துக்குள்ளே செல்லும் வழி என உணர்ந்து கொள்ளுங்கள். அந்த நாக்கால் அனுதினமும் ஐந்தெழுத்தாம் சிவாயத்தை ஓதித் தவம் செய்யுங்கள்.

முத்திசித்தி தொந்தமா முயங்குகின்ற மூர்த்தியை
மற்றுதித்த வப்புனல்க ளாகுமத்தி மப்புலன்
அத்தர்நித்தர் காளகண்ட ரன்பினா லனுதினம்
உச்சரித் துளத்திலே யறிந்துணர்ந்து கொண்மினே. 375

முத்திக்கும் சித்திக்கும் காரணமான ஈசன், நம் உடலில், கண்களின் நடுவில் நீருக்குள் சோதியாய் மிதந்து கொண்டுள்ளான். பக்தர்களும், ஞானிகளும், யோகிகளும் அன்பினால் அனுதினமும் உள்ளத்தில் சிவயநம என உச்சரித்து ஈசனைப் பூசிக்கிறார்கள். அனைவரும் அவ்வழியே சென்று தவம் செய்ய ஈசனை உணரலாம்.

மூன்றிரண்டு மைந்துமாய் முயன்றெழுந்த தேவராய்
மூன்றிரண்டு மைந்ததாய் முயன்றதே யுலகெலாம்
ஈன்றதாயு மப்பனு மியங்குகின்ற நாதமாய்
தோன்றுமோ ரெழுத்தினோடு சொல்லஒன்றும் இல்லையே. 376

அகார, உகார, மகாரம் என்ற மூன்றாகிய ஓங்காரமும் நாதம் விந்து ஆகிய இரண்டும் சேர்ந்து, அதில் முயன்றெழுகின்ற சக்தியே ஈசன். ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்றினோடு இரு வினைகள் சேர்ந்து, பெற்ற தாய் தந்தையாகி, உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் இயங்குகின்றன. இவை யாவும் நாதமாய் விளங்கும் குத்தெழுத்தால்தான் என்பதை உணருங்கள். இதைத் தவிர சொல்ல ஒன்றுமில்லையே!

வெளியுருக்கி யஞ்செழுத்து விந்துநாத சத்தமுந்
தளியுருக்கி நெய்கலந்து சகலசத்தி யானதும்
வெளியிலு மவ்வினையிலு மிருவரை யறிந்தபின்
வெளிகலந்த தன்மையால் தெளிந்ததே சிவாயமே. 377

வெட்ட வெளியாகிய மனத்தை உருக்கி, சிவயநம என்று அஞ்செழுத்தை ஓதித் தவமிருக்க விந்தும், நாதமும் சேர்ந்து ஒலி கேட்கும். தயிரைக் கடைந்து நெய் எடுப்பது போல உடலை உருக்கி, உயிரினைக் கடைந்து, நெய்யாகிய மெய்ப்பொருளை உணருங்கள். அது உங்களுக்குள்ளே சகல சக்தியாக உள்ளது. வெளியான மனதையும் நல்வினை தீவினையையும் அறிந்து சக்தியான உடம்பையும், சிவனாகிய உயிரையும் ஒன்றாக்கித் தவம் இருங்கள். அப்போது சோதி வெட்டவெளியில் கலந்து இருப்பது தெளிவாகத் தெரியும். அதுவே சிவாயம்.

முப்புறத்தி லப்புறம் முக்கண்ணன் விளைவிலே
சிற்பரத்து ளுற்பனஞ் சிவாயமஞ் செழுத்துமாந்
தற்பரமுதித்து நின்று தாணுவெங்கு மானபி
னிப்புற மொடுங்குமோடி யெங்கும்லிங்க மானதே. 378

சூரிய மண்டலம், சந்திர மண்டலம், அக்னி மண்டலம் ஆகிய மூன்று மண்டலங்களுக்கும் அப்பால் இருக்கும் முக்கண்ணாம் ஈசன் அருளால் அனைத்தும் விளைந்தது. உனக்குள் இருக்கும் சிற்றம்பலத்தில் உற்பத்தி ஆகி நிற்கும் சிவாயம் அஞ்செழுத்தே. அது தனக்குள் உதித்து நின்று, தாணு எனும் ஈசனாகி உலகெங்கும் பரவி உள்ளது. அதுவே உன் உடலில் ஒடுங்கி, ஓடி இலிங்கமாய் அமைந்துள்ளது.

ஆடிநின்ற சீவனோ ரஞ்சுபஞ்ச பூதமோ
கூடிநின்ற சோதியோ குலாவிநின்ற மூலமோ
நாடுகண்டு நின்றதோ நாவுகற்ற கல்வியோ
வீடுகண்டு விண்டிடின் வெட்டவெளியு மானதே. 379

உடலில் ஆடி நின்ற சீவனே பஞ்சபூதங்களாய் விரிந்து நின்றது. அதிலே கூடி நின்றது சோதி. அங்கே குலாவி நின்றது மூலப் பொருளான ஆதி. அனைட்து நாட்டையும் கண்டு நின்ற கண்கள் அதுவே. நாவினால் கற்றுத் தெளிந்த ஞானக்கல்வி அதுவே. அது இருக்கும் இரகசிய வீட்டை கண்டு உணர்ந்து சொன்னால் அதுவே வெட்ட வெளியாம்.

உருத்தரித்த போதுசீவ னொக்கநின்ற வுண்மையுந்
திருத்தமுள்ள தொன்றிலுஞ் சிவாயமஞ் செழுத்துமா
மிருத்துநின் றுறுத்தடங்கி யேகபோக மானபின்
கருத்தினின் றுதித்ததே கபாலமேந்தும் நாதனே. 380

உரு உண்டாகியபோதே சிவனும் சீவனும் ஒன்றாகி நின்ற உண்மையையும், அது உனக்குள் திருத்தமுள்ளதாக ஓரெழுத்தாகவும் அஞ்செழுத்தாகவும் ஆகி நிற்பதை அறிந்து கொள்ளுங்கள். அந்த ஒன்றிலேயே நினைவை இருத்தி நின்று வாசியை ஏற்றினால் மனம் அடங்கி ஐம்புலன்களும் ஒடுங்கும். கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனையே கருத்தில் வைத்து துதித்துத் தவம் செய்யுங்கள். அது ஏகபோகத்தைத் தரும்.

கருத்தரித் துதித்தபோது கமலபீட மானதுங்
கருத்தரித் துதித்தபோது காரணங்க ளானதுங்
கருத்தரித் துதித்தபோது கரணமிரண்டு கண்களாய்
கருத்தினின் றுதித்ததே கபாலமேந்தும் நாதனே. 381

கருத்தரித்து உதித்த போது உயிர், உடலில் உள்ள ஆகாயத் தாமரையான கமல பீடத்தில் இருந்தது. அவ்வுயிரே, அனைத்திற்கும் காரணமானது. கருவாக உருவானபோது முதலில் தோன்றியது, காணும் இரண்டு கண்களே. நான் உருவாகும்போது என் கருத்தில் நின்று உதித்தது கபாலம் ஏந்தும் நாதனாகிய ஈசனே.

ஆனவன்னி மூன்றுகோண மாறிரண்டு எட்டிலே
யானசீவ னஞ்செழுத் தகாரமிட் டலர்ந்தது
மானசோதி யுண்மையு மனாதியான வுண்மையு
மானதான தானதா யவலமாய் மறைந்திடும். 382

ஆறும் இரண்டும் எட்டாகிய உடலில் வன்னி என்னும் தீ சூரிய சந்திர அக்னி கலைகளாக (மூன்று கோணமாகி) உள்ளது. அதிலே ஆன அஞ்செழுத்தாகிய சீவன் அகாரத்திலே அமர்ந்திருக்கிறது. அதுவே தனக்குள்ளே தானாகி நின்றது. அந்த சீவ சோதியின் உண்மையையும் அதிலே அநாதியான ஈசனின் உண்மையையும் உணர்ந்து தவம் செய்யுங்கள். தவம் விளைய விளைய அனைத்து அவலங்களும் மறைந்திடும்.

ஈன்றெழுந்த வெம்பிரான் திருவரங்க வெளியிலே
நான்றபாம்பின் வாயினால் நாலுதிக்கு மாயினான்
மூன்றுமூன்று வளையமாய் முப்புரங் கடந்தபின்
னீன்றெழுந்த அவ்வினோசை யெங்குமாகி நின்றதே. 383

திருவரங்கவெளியாம் உடலிலே எம்பிரானாகிய ஈசன் தலையில் எழுந்து நிற்கின்றான். நான்கு திசைகளாக ஆகி உள்ளான். குண்டலினி சக்தியாக ஆறு ஆதாரங்களையும் சூரிய சந்திர அக்னி மண்டலமான முப்புரங்களையும் கடந்த பின் அவ்வின் ஓசை எங்கும் கேட்கும். ஈசன் எங்குமாகி நாதமாகி நிற்கின்றான்.

எங்குமெங்கு மொன்றலோ வீரேழ்லோக மொன்றலோ
அங்குமிங்கு மொன்றலோ வனாதியான தொன்றலோ
தங்குதா பரங்களுந் தரித்தவார தொன்றலோ
உங்களெங்கள் பங்கினி லுதித்ததே சிவாயமே. 384

எங்கெங்கும் ஈரேழு உலகத்திலும் அங்கும் இங்கும் அனாதியானதும் உள்ளது ஒன்றுதான். இப்பூமியில் உள்ள தாவரங்களிலும் உயிர் தரித்திருப்பதும் இவ்வாறே. உங்களிடமும் எங்களிடமும் உடலில் பங்கு கொண்டு இருப்பது அந்த ஒன்றாகிய மெய்ப்பொருளே. அதுவே சிவாயம்.

அம்பரத்தி லாடுஞ்சோதி யானவன்னி மூலமா
மம்பரமுந் தம்பரமு மகோரமிட் டலர்ந்தது
மம்பரக் குழியிலே யங்கமிட் டுருக்கிட
வம்பரத்தி லாதியோ டமர்ந்ததே சிவாயமே. 385

உடலில் கண்களில் ஆடுகின்ற சோதியான தீயே அனைத்திற்கும் மூலம். உடலுக்குள் உயிர் அகாரத்தில் உள்ளது. கபாலக் குழியில் உள்ள கண்களில் உள்ள உயிரை அறியுங்கள். ஞானவினையால் அங்கம் உருகத் தவம் இருங்கள். உடலில் ஆதியான சோதியாக அமர்ந்திருப்பதே சிவாயம்.

வாடிலாத பூமலர்ந்து வண்டுரிசை நாவிலே
யோடிநின் றுருவெடுத் துகாரமா யலர்ந்தது
மாடியாடி யங்கமு மகப்படக் கடந்தபின்
கூடிநின் றுலாவுமே குருவிருந்த கோலமே. 386

வாடாத பூவாகக் கண்களாக மலர்ந்திருக்கும் மலரடி அது. வண்டைப்போல் நாவிலே ரீங்காரமிட்டு ஓடி நின்று உருவெடுத்து உகாரமாய் மலர்ந்திருக்கிறது. வாசி யோகத்தால் அதனை உடலுக்குள் மேலும் கீழும் ஏற்றி இறக்கி, செலுத்தி, ஞானக்கண் சோதியில் கூடி நின்று உலாவுவது குரு இருந்த கோலமே.

விட்டடி விரைத்ததோ வேருருக்கி நின்றதோ
எட்டிநின்ற சீவனு மீரேழ்லோகம் கண்டதோ
தட்டுருவ மாகிநின்ற சதாசிவத் தொளியதோ
வட்டவீ டறிந்தபேர்கள் வானதேவ ராவரோ. 387

உடலை விட்டு உயிர் போனால் மரணம். வேராகிய உயிர் உருக்கி வெளி வரும். வந்த சீவன் ஈரேழு லோகங்களையும் ஆகாயத் தலத்தில் நின்று கண்டது. பின்னர் தான் செய்த இரு வினைகளால் மறுபடியும் பிறப்பெடுக்கிறது. இது சதாசிவத்தின் ஒளியினால்தான். இவ்வொளி இருக்குமிடம் கண்களில்தான். அதையறிந்து தவம் செய்ய மனிதன், வானவர், தேவர் ஆகலாம்.

வானவர் நிறைந்தசோதி மானிடக் கருவிலே
வானதேவ ரத்தனைக்குள் வந்தடைவர் வானவர்
வானகமும் மண்ணகமும் வட்டவீ டறிந்தபின்
வானெலாம் நிறைந்தமன்னு மாணிக்கங்க ளானதே. 388

ஆகாயத் தலத்தில் நிறைந்துள்ள ஈசனாம் சோதி, மானிடக் கருவில் உட்புகுந்து உயிருள்ள உடலாய் ஆனது. வானவர்கள், தேவர்கள் ஆகியோர் தவம் செய்து அந்த சோதியில் கலந்து ஈசனை அடைந்தனர். அதுபோல, மானிடரும் தன்னுள் உள்ள வட்ட வீடாம் கண்களை அறிந்து, அதனுள்ளே சென்று தவம் புரிய நிலைபெற்ற மாணிக்கங்களாய் வானில் நிறைந்து விளங்கும் ஈசனை அடைவார்கள்.

பன்னிரண்டு கால்நிறுத்திப் பஞ்சவர்ண முற்றிடின்
மின்னியே வெளிக்குணின்று வேறிடத் தமர்ந்ததுஞ்
சென்னியாந் தலத்திலே சீவனின் றியங்கிடும்
பன்னியுன்னி யாய்ந்தவர் பரப்பிரம்ம மானதே. 389

ஐந்து வண்ணங்கள் கொண்ட திருவடியாம் கண்களில் மின்னியபடி உள்ள தீச்சுடர், வெட்டவெளிக்குள் இருந்ததையும், அத்தீயே உள்ளே சோதியாகக் கண்களில் இருப்பதையும் அறிந்து, நினைவைக் கருத்தில் வைத்து, பன்னிரண்டு அங்குலம் சூரியகலையில் ஏறும் காற்றை கும்பகம் செய்து நிறுத்தி ‘சிவயநம‘ என தவம் செய்யுங்கள். அப்போது சென்னி எனும் தலையில் சீவனாகிய ஈசன் நின்று இயங்கும். இதனை உணர்ந்து தவம் செய்ய பரம்பொருளைச் சார்ந்து பரப்பிரம்மம் ஆவார்கள்.

உச்சிகண்டு கண்கள்கட்டி யுண்மைகண்ட தெவ்விடம்
மச்சுமாளி கைக்குளே மானிடங் கலப்பிரேல்
எச்சிலான வாசல்களு மேகபோக மாய்விடும்
பச்சைமாலு மீசனும் பரந்ததே சிவாயமே. 390

கண்களை மூடி கபால உச்சியில் கருத்தை நிறுத்தித் தவமிருந்து மெய்ப்பொருளைக் கண்டது எந்த இடம்? நம் உடலிலே மச்சு வீடான தலைக்குள்ளே உள்ள சீவனுடன், அங்கேயே அறிவு, உணர்வு, நினைவு என்ற மூன்றையும் ஒன்றாக்கிக் கலந்து தவம் செய்யுங்கள். எச்சில் சுரக்கும் வாயில் அமிர்தம் சுரக்கும். அதையுண்டால் ஏகபோகம்தான். அந்த இடத்தில்தான் பச்சை வண்ணத் திருமாலும், ஈசனும் ஒன்றாகி நிறைந்து விரிந்து உள்ளனர்.

வாயிலிட்டு நல்லுரிசை யட்சரத் தொலியிலே
கோயிலிட்டு வாவியுமங் கொம்பிலே யுலர்ந்தது
மாயிலிட்ட காயமு மனாதியிட்ட சீவனும்
வாயுவிட்ட வன்னியும் வளர்ந்ததே சிவாயமே. 391

வாயில் உள்ள உள்நாக்கை மேலெழுந்தவாறு மடக்கி, துளையை அடைத்து, வாசியை வாய்க்குள் இழுத்து மேலேற்ற நாதம் கேட்கும். கோயிலாம் உடலின் உச்சியில் உள்ளது உயிராம் ஈசன். மாயையான உடம்பும் அனாதியான சீவனான உயிரும் கபாலத்தில் தங்கியுள்ளது. கண்களில் உள்ள நந்தி(நம்+தீ)யாக விளங்கும் சோதியினுள்ளே சென்று தவம் செய்யுங்கள். அதனால் சீவன் சிவத்தை அடையும்.

அட்சரத்தை யுச்சரித் தனாதியங்கி மூலமா
யட்சரத்தை யுந்திறந் தகோரமிட் டலர்ந்தது
மட்சரத்தி லுட்கர மகப்படக் கடந்தபின்
அட்சரத்தி லாதியோ டமர்ந்ததே சிவாயமே. 392

“ஓம் நமசிவய” எனும் அட்சரத்தை உச்சரித்து உணர்வில் ஓத அதில் அனாதியாக இயங்கும் சிகாரமே அனைத்திற்கும் மூலமாய் உள்ளது. அதனை வாசி யோகத்தால் அறிந்து திறக்க அகாரம் மலரும். ‘ஓம்‘ என்ற அட்சரத்தின் மெய்ப்பொருள் உணர்ந்து ஓரெழுத்தாம் குத்தெழுத்தை அறிந்து மாயையைக் கடந்த பின் அந்த ஓங்காரத்தில் ஆதியோடு அமர்ந்திருந்தது சிவாயமே.

கோயிலுங் குளங்களுங் குறியினிற் குருக்களாய்
மாயிலும் மடியிலும் மனத்திலே மயங்குறீர்
ஆயனை யரனையு மறிந்துணர்ந்து கொள்விரேல்
தாயினுந் தகப்பனோடு தானமர்ந்த தொக்குமே. 393

கோயிலும் குளங்களும் தன் உடலில் கண்ணாக(குறியாக) இருக்கும் மெய்குருவை அறிவதற்குத்தான். அதுவே தாயாகவும் தகப்பனாகவும் தானாகவும் அமர்ந்திருப்பது. இதை உணராமல் உலக மாயையிலும் பெண்ணின் மடியிலும் விழுந்து மனம் போனபடி அலமலந்து, மயங்கி அலைகிறீர்கள். தனக்குள்ளே வசிக்கும் ஆயனாம் மாலையும், அரனாம் ஈசனையும் அறிந்து, உணர்ந்து தவம் செய்யுங்கள். அப்படிச் செய்ய ஈசனுடன் கலக்கலாம்.

கோயிலெங்கு மொன்றலோ குளங்கணீர்க ளொன்றலோ
தேயுவாயு மொன்றலோ சிவனுமங்கே யொன்றலோ
ஆயசீவ னெங்குமா யமர்ந்துவார தொன்றலோ
காயமீ தறிந்தபேர்கள் காட்சியாவர் காணுமே. 394

அனைத்துக் கோயில்களிலும் இறைவன் ஒன்றே என்பதையும், எல்லாக் குளங்களிலும் உள்ள நீர் ஒன்றே என்பதையும், தேயுவாகிய நெருப்பும், வாயுவாகிய காற்றும் ஒன்றே என்பதையும், அனைத்து சீவராசிகளிலும் உள்ள சீவன் ஒன்றே என்பதையும் உணருங்கள். நம் உடலில் நீரில் நெருப்பாய், சோதியாய் ஈசன் கண்களில் உள்ளான். அதை உணர்ந்து உடலுக்குள் தவம் செய்ய ஈசன் காட்சி கிட்டும்.

காதுகண்கள் மூக்குவாய் கலந்தவார தொன்றலோ
சோதியிட் டெடுத்ததுஞ் சுகங்களஞ்சு மொன்றலோ
ஓதிவைத்த சாத்திர முதித்தவார தொன்றலோ
நாதவீ டறிந்தபேர்கள் நாதராவர் காணுமே. 395

நம் உடலில், காது கண்கள் மூக்கு வாய் ஆகிய யாவும் கலந்து நின்ற இடம் கண்களில்தான். ஆங்குதான் சோதி தீயாக உதித்து ஆடிக்கொண்டுள்ளது. எண்சாண் உடல் எடுத்ததும், அதனால் அடையும் இன்பங்கள் பல(அஞ்சு) வகையாயினும் இன்பம் ஒன்றுதான். ஓதிவைத்த சாத்திரங்கள் யாவும் கூறுவதும் ஒன்றுதான். சோதியில் நாதம் ஒடுங்குமிடத்தை அறிந்தவர்கள் நாதனாம் ஈசன் ஆவர்.

அவ்வுதித்த வட்சரத்தி னுட்கலந்த வட்சரம்
சவ்வுதித்த மந்திரஞ் சம்புளத் திருந்ததால்
மவ்வுதித்த மாய்கையால் மயங்குகின்ற மாந்தர்காள்
உவ்வுதித்த தவ்வுமா யுருத்தரித்த வுண்மையே. 396

‘அ‘ எனும் எழுத்துக்குள் முன்பு உதித்த ஒரேழுத்து குத்தெழுத்தாம் புள்ளியாகிய ஆதி. தொண்டைச் சவ்வில் உதித்த ‘ஓம்‘ எனும் மந்திரம்தான் சம்புவாகிய ஈசன் உள்ளத்து இருக்கும் மந்திரம். ‘மவ்‘ எனும் மாயையால் மயங்குகின்ற மாந்தர்களே! ‘உவ்‘ எனும் உகாரமாம் உடலில் உயிராகவும், ‘அவ்‘ எனும் அகாரமாம் உயிரில் உடலாகவும் உருத்தரித்தது உண்மையே.

அகாரமென்னு மக்கரத்தி லக்கர மெழுந்ததோ
அகாரமென்னு மக்கரத்தி லவ்வுவந் துதித்ததோ
உகாரமு மகாரமு மொன்றிநன்று நின்றதோ
விகாரமற்ற ஞானிகாள் விரிந்துரைக்க வேணுமே. 397

‘அகாரம்‘ என்னும் உயிரில் குத்தெழுத்தாகிய அக்கரம் எழுந்தது. அகாரமாகிய உயிர் உகாரமாகிய உடலில் ஓடிக்கொண்டு உள்ளது. அத்துடன் மகாரமாகிய மனமும் சோதியில் உள்ளது. மனவிகாரமற்ற ஞானிகளே! இப்படி அகார, உகார, மகாரம் சேர்ந்து ஓங்காரமாகவும், உடல், பொருள், ஆன்மாவாகவும், அறிவு உணர்வு நினைவாகவும், எட்டும், இரண்டும் சேர்ந்து பத்தாகிய கண்ணாகவும் நம் உடலில் உள்ளதை விரிவாக விளக்கி சொல்ல வேண்டுமே.

சத்தியாவ துன்னுடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளிதற்குமேல் பிதற்றுகின்ற தில்லையே
சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்திசிவமு மாகிநின்று தண்மை யாவதுண்மையே. 398

உன் உடல் சக்தி; அதில் இயங்கிக்கொண்டிருப்பது சீவன்; அதனுள் இருப்பது சிவம். இத்தத்துவங்களை அறியாத பித்தர்களே! இதற்குமேல் பிதற்றுவதற்கு ஒன்றும் இல்லையே. ஐம்புலன்களாக சுற்றி அமைந்துள்ள கபாலத்தில் உள்ளது சொல்லிறந்த மௌன வெளி. அங்கு சக்தியும் சிவமும் ஒன்றாகி சோதியாய் நின்ற தன்மையை உணருங்கள். அச்சோதியே மெய்ப்பொருளாம்.

சுக்கிலத் துளையிலே சுரோணிதக் கருவுளே
முச்சதுர வாசலில் முளைத்தெழுந்த மோட்டினில்
மெய்ச்சதுர மெய்யுளே விளங்குஞான தீபமா
யுச்சரிக்கும் மந்திரம் ஓம்நமசி வாயமே. 399

சுக்கிலமாம் விந்துவும், சுரோணிதமாம் முட்டையும் கலந்து கரு உண்டானது. அது சீவனாம் சிவனுடன் கலந்து உயிருள்ள உடல் ஆனது. அதற்குள் சூரிய, சந்திர, அக்கினி கலைகள் ஊடாடிக் கொண்டுள்ளது. கண்களை உச்சிக்குக் கொண்டு செல்ல முக்கோணப் பார்வை கிடைக்கும். அங்கு உச்சி மோட்டினில் சோதி உள்ளது. மூன்று கலைகளையும் ஒன்றுவித்துக் குவித்து சோதியில் நிறுத்த உச்சரிக்க வேண்டிய மந்திரம் “ஓம் நமசிவாய“வே.

அக்கர மனாதியல்ல வாத்தும மனாதியல்ல
புக்கிருந்த பூதமும் புலன்களு மனாதியல்ல
தக்கமிக்க நூல்களுஞ் சாத்திர மனாதியல்ல
ஒக்க நின்றுடன்கலந்த வுண்மைகாண் அனாதியே. 400

நம் உடல், அதில் வாழும் ஆன்மா, உடலில் உள்ளே உள்ள பஞ்சபூதங்கள், ஐம்புலன்கள், தகுதிமிக்க மெய் நூல்கள் சொல்லும் கருத்துக்கள், சாத்திரங்கள் உரைக்கும் உண்மைகள், ஆகியன யாவும் அனாதி இல்லை. உயிராம் சிவனும், உடலாம் சிவையும் ஒன்று கலந்து உள் மெய்யில் சோதியாய் நின்ற சிவம் ஒன்றுதான் அனாதி.

மென்மையாகி நின்றதேது விட்டுநின்று தொட்டதேது
வுண்மையாக நீயுரைக்க வேணுமெங்க ளுத்தமா
பெண்மையாகி நின்றதொன்று விட்டுநின்று தொட்டதை
யுண்மையா யுரைக்கமுத்தி யுட்கலந் திருந்ததே. 401

உத்தமரே! நம் உடலில் மென்மையான மலரைப்போன்றதும், உடலை விட்டு நின்றும் உயிரைத் தொட்டும் உள்ளது எது என்ற உண்மையை உரைக்கவேண்டும். எண்ணங்களை உருவாக்கும் மனமென்னும் பெண்மையாகி நின்ற ஒன்றை என்ன என உரைப்பீர். அதுதான் கண்மலர். இந்த உண்மையை சொல்லிவிட்டால், அதற்குள்ளேயே முத்தி உட்கலந்து சோதியாய் இருக்கின்றது.

அடக்கினா லடங்குமோ வண்டமஞ் செழுத்துளே
யுடக்கினா லெடுத்தகாய முண்மையென் றுணர்ந்துநீ
சடக்கிலாறு வேதமுந் தரிக்கவோதி லாமையால்
விடக்குநாயு மாயவோதி வேறுவேறு பேசுமோ. 402

நாம் முயன்று அடக்கினால், அஞ்செழுத்துக்குள்ளே அண்டங்களை அடக்கலாம். உள் மருமத்தால் (விந்துவும் முட்டையும்கூடி) வந்த இவ்வுடலை உள் மெய் என உணருங்கள். வேதங்கள் ஓதினாலும், சடங்குகள் செய்தாலும் ஈசனை அடையும் வழி அறியமாட்டீர்கள். எவ்வளவுதான் ஆற்றில் நீர் ஓடினும், நாய் நக்கித்தான் குடிக்கும். அதுபோல அலையாதீர்கள். ஈசனை அடையும் வழி அறிந்து, அதன் வழி சென்று மவுனத்தில் ஒன்றுங்கள்.

உண்மையான சக்கர முபாயமா யிருந்ததும்
தண்மையான காயமுந் தரித்தரூப மானதும்
வெண்மையாகி நீறியே விளைந்துநின்ற தானது
முண்மையான ஞானிகள் விரிந்துரைக்க வேணுமே. 403

வெண்மையான விந்து முட்டையுடன் சேர்ந்த்து உடல் உருவானது. அதில் உள்ள சக்கரமான கண்வழி சென்றுதான் பரஞ்சோதியை அடையவேண்டும். உண்மையான ஞானிகளே! இந்த உண்மையை அனைவருக்கும் புரியும் வண்ணம் விரிவாய் எடுத்துச் சொல்ல வேண்டுமே.

எள்ளகத்தி லெண்ணெய்போல வெங்குமாகி யெம்பிரா
னுள்ளகத்தி லேயிருக்க வூசலாடும் மூடர்காள்
கொள்ளைநாயின் வாலினைக் குணக்கெடுக்க வல்லிரேல்
வள்ளலாகி நின்றசோதி காணலாகு மெய்ம்மையே. 404

எம்பிரான் ஈசன், எள்ளுக்குள் இருக்கும் எண்ணெய் போல எங்கும் பரவி உள்ளான். ஈசனை நம் உடலில், கபாலத்தில் கண்ணாக இருப்பதை உணராமல் உலகமெங்கும் தேடி ஊசலாடும் மூடர்களே! திருட்டு நாயின் வாலைப்போல் ஆடிக் கொண்டிருக்கும் மனத்தின் அலைபாயும் குணத்தை அடக்கித் தவம் இருக்க வல்லவர்களானால், வள்ளலாகிய ஈசன் நமக்குள்ளே பரஞ்சோதியாக நின்றதைக் காணலாம். பரஞ்சோதியே மெய்ப்பொருள்.

வேணுமென்ற ஞானமும் விரும்புகின்ற நூலிலே
தாணுவுண்டங் கென்கிறீர் தரிக்கிலீர் மறக்கிலீர்
தாணுவொன்று மூலநாடி தன்னுள்நாடி யும்முளே
காணுமன்றி வேறியாவுங் கனாமயக்க மொக்குமே. 405

ஞான நூல்களை எல்லாம் படித்துவிட்டு மட்டும், தாணுவாம் ஈசனைக் காணாது, அவன் நமக்குள்ளே இருக்கிறான் என்று சொல்கிறீர்கள். தன்னை மறந்து தவம் செய்து அவனை உணரவில்லை. மூலநாடியைத் தன் நாடியுடன் சேர்த்து மேலேற்றித் தவம் செய்து மெய்ப்பொருளுடன் கலக்கவேண்டும். அவ்வின்பத்தை உணரவேண்டும். மற்றவை அனைத்தும் கனவில் கண்ட காட்சி போலத்தான்.

வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளே தவிக்கிறீர்
உழக்கிலாது நாழியான வாறுபோலு மூமைகாள்
உழக்குநாலு நாழியான வாறுபோலு மும்முளே
வழக்கிலே யுரைக்கிறீர் மனத்துளீசன் மன்னுமே. 406

இறைவன் எங்கு இருக்கிறான்? என வழக்காடும்போது, பல வாதங்களையும் எடுத்து வைக்கிறீர்கள். ஆனால் அவன் எங்குள்ளான் என உங்களுக்கே தெரியாது. மனதுக்குள் தவிக்கிறீர்கள். எப்படிக் கடல் நீரைச் சூடாக்கி, உப்பை எடுத்து அளப்பது என்ற உண்மையை அறியாதது போல், ஈசன் எங்கு உள்ளான் என்னும் உண்மையை உணராத ஊமைகளே! கடல் நீரினில் உப்பாக, உப்பு இருப்பதைப்போல், உங்கள் உடலுக்குள்ளே உப்பான மெய்ப் பொருளாய் ஈசன் இருப்பதை உணருங்கள். உள்ளுக்குள்ளே தவம் செய்து வந்தால் மனதுக்குள்ளேயே ஈசன் உள்ளதை அறியலாம்.

சுத்தியைந்து கூடமொன்று சொல்லிறந்த தோர்வெளி
சத்தியுஞ் சிவமுமாகி நின்றதன்மை யோர்கிலீர்
சத்தியாவ தும்முடல் தயங்குசீவ னுட்சிவம்
பித்தர்கா ளறிந்துகொள் பிரானிருந்த கோலமே. 407

சக்தியாவது உங்கள் உடல்; அதில் இயங்கும் சீவனாம் சிவம் உயிர். இங்ஙனம் இவ்வுடலில் சக்தியும் சிவனும் இணைந்து உலவுவதை அறியமாட்டீர்கள். ஐம்பூதங்களாலாகிய உடலின் மேல் உள்ள மவுன வெளியில் ஈசன் சக்தியுடன் கூடி சோதி வடிவில் உள்ளான். பித்தர்களே! இதுதான் எம்பிரான் உடலில் இருக்கும் கோலம் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அகாரமான தம்பலம் மனாதியான தம்பலம்
உகாரமான தம்பல முண்மையான தம்பலம்
மகாரமான தம்பலம் வடிவமான தம்பலஞ்
சிகாரமான தம்பலம் தெளிந்ததே சிவாயமே. 408

அகாரமாகிய உயிர்தான் அநாதியான ஈசன். அவன், உகாரம் என்னும் உடலில், உள் மெய்யில், குடி கொண்டு இருக்கிறான். மகாரமாகிய மனதில் சோதி வடிவாகி உள்ளான். ஆதி, நடு, அந்தம் ஆகிய அனைத்துமான சிகாரத்தில் நினைவை வைத்துத் தவம் செய்ய சிவாயம் தெளிவாய் விளங்கும்.

சக்கரம் பறந்தோடி சக்கரமேல் பலகையாய்
செக்கிலாடு மெண்ணெய்போல சிங்குவாயு தேயுவு
முக்கிலே யொளிகலந்து யுகங்களுங் கலக்கமாய்
புக்கிலே புகுந்தபோது போனவாற தெங்ஙனே. 409

வண்டிச் சக்கரம் கழன்று ஓடினால், வண்டி வெறும் பலகைதான். சக்கரமாக இருக்கும் கண்களிலிருந்து உயிர் பிரிந்தால் உடல் வெறும் கட்டைதான். கண்களில் உள்ள சோதியில் உள்ள நெருப்பையும், உயிரில் உள்ள வாயுவையும் இணைத்து சோதியில் நிறுத்தி யுகங்கள் தோறும் தவம் செய்யுங்கள். கண்களாகிய பூவினுள்ளே இருந்த ஆன்மா கலங்கி உடலை விட்டு போனது எவ்வாறு என்பதை ஆராயுங்கள்.

வளர்ந்தெழுந்த கொங்கைதன்னைமாய மென்றெண்ணிநீ
ரருள்கொள்சீவ ராருடம்புடைமை யாகத்தேர்வீர்காள்
விளங்கு ஞானமேவியே மிக்கோர்சொல்லலைக் கேட்பிரேல்
களங்கமற்று நெஞ்சுளே கருத்துவந்து புக்குமே. 410

வளர்ந்து கொழுத்த மார்பகங்களை உடைய பெண்களின் மேல் உள்ள ஆசையை மாயம் எனப் புறந்தள்ளி, அருளுடைய சீவனிருக்கும் உடலை நிலையென நினைத்து, ஞானமிகுந்தவர்களின் போதனைகளைக் கேட்டு, அதன்படி நடந்து தவமிருக்க, களங்கம் இல்லா மனம் கிட்டும். அதனுள் கருத்தாய் ஈசன் வந்து அமர்வான்.

நாலுவேத மோதுகின்ற ஞானம்ஒன் றறிவிரோ
நாலுசாம மாகியே நவின்றஞான போதமா
யாலமுண்ட கண்டனு மயனுமந்த மாலுமாய்ச்
சாலவுன்னி நெஞ்சுளே தரித்ததே சிவாயமே. 411

நான்கு வேதங்களும், நான்கு சமயங்களும் ஓதும் ஞானம் ஒன்றுதான். ஈசன் நம் உடலினுள்ளே உள்ளான் என்பதுதானது. அவனை அடையும் வழியையும் அவைகள் சொல்கின்றன. அதன்படி முக்கலைகளையும் ஒன்றாக்கி மேலேற்றித் தவம் புரிய, விடமுண்ட கண்டனாம் சிவன், பிரம்மா, திருமால் ஆகிய மூவரும் ஒன்றாகி நெஞ்சத்தில் சிவாயமாகி இருப்பார்கள்.

சுற்றமென்று சொல்வதுஞ் சுருதிமுடிவில் வைத்திடீ
ரத்தன்நித்த மாடியே யமர்ந்திருந்த தெவ்விடம்
பத்திமுற்றி யன்பர்கள் பரத்திலொன்று பாழது
பித்தரே யிதைக்கருதி பேசலாவ தெங்ஙனே. 412

உயிர் பிரியும்போது சுற்றம் எங்கு போயிற்று. நம் உடலில், தினம்தோறும், அத்தனாகிய ஈசன் ஆடிக்கொண்டு இருக்கும் இடம் எந்த இடம்? அதுவே கண்கள். ஞானிகள் அதனை அறிந்து அதிலேயே பக்தியுடன் நினைவை வைத்துத் தவம் செய்து, பாழ் என்ற சூன்யமே பரம்பொருள் என்பதை உணர்ந்து, பரத்தை அடைவார்கள். பித்தர்களே! இதைக் கருத்தில் கொண்டு ஈசனை அடைவதைத் தவிர வேறு பேசுவதால் என்ன பயன்?

எங்ஙனே விளக்கதுக்கு ளேற்றவாறு னின்றுதா
னெங்ஙனே எழுந்தருளி யீசனேச ரென்பரே
லங்ஙனே இருந்தருளு மாதியான தற்பரம்
சிங்கமண்மி யானைபோலத் திரிமலங்க ளற்றவே. 413

நம் உடலில் உள்ள கபாலக் குகையில் உள்ள கண்களில் உள்ள சோதியான விளக்கின் உள்ளே நினைவை நிறுத்திக் கருத்தில் கலவுங்கள். அங்கே ஆதியான தற்பரத்தில் ஈசன் எழுந்தருளி உள்ளான். அவனை அறிந்து அங்கேயே நின்று அவனையே நினைத்துத் தவமிருக்க, நாம் யோக சிங்கங்களாக ஆகி, யானையைப் போன்ற அறிவு பெற்று, ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களையும் அறுத்துப் பிறவாநிலை அடையலாம்.

அற்றவுள் ளகத்தையு மலக்கிடு மெழுகிடு
மெத்ததீப மிட்டதிற்பிற வாதபூசை யேத்தியே
நற்றவம் புரிந்துஏக நாதர்பாதம் நாடியே
கற்றிருப்ப தேசரிதை கண்டுகொள்ளு மும்முளே. 414

உள் மனதினுள்ளே உள்ள மும்மலங்களையும் விலக்கி, ஈசனைப் பற்றிய சிந்தனையால் மெழுகி, தலையில் ஏற்றி வைத்த தீபமாம் கண்களில் உள்ள சோதியிலேயே நினைவை நிறுத்துங்கள். மூன்று கலைகளையும் ஒன்றாக்கி உயிர் மூச்சை மேலேற்றி, ஈசனின் திருவடி நாடித் தவம் செய்யுங்கள். இதுவே நீங்கள் கற்கவேண்டிய ஞானக்கல்வி. தவம் செய்யச் செய்ய விளங்காத உண்மைகளெல்லாம் விளங்கும். சாத்திரப் பூட்டுக்கள் உடையும்.

பார்த்துநின்ற தம்பலம் பரமனாடு மம்பலங்
கூத்துநின்ற தம்பலங் கோரமான தம்பலம்
வார்த்தையான தம்பலம் வன்னியான தம்பலஞ்
சீற்றமான தம்பலந் தெளிந்ததே சிவாயமே. 415

மெய்ப்பொருள் எது? அதுவே கண்கள். அது பார்த்து நின்றது. பரமன் சோதியாக ஆடிக் கொண்டிருக்கும் இடம். விழித்துக் கூர்மையாகப் பார்ப்பது. விழிக்கும்போது கோரமாக உள்ளது. சொல்லாத சொல்லின்(மவுனம்) பொருள். வன்னியாகிய தீச்சுடரை உள்ளடக்கியது. சினந்து பார்க்க சீற்றம் தோன்றும். இதுவே ஈசனின் அம்பலமாம் கோயில். அறிவாகத் தெளிவாக இருப்பது கண்களாம் சிவாயமே.

சென்றுசென் றிடந்தொறும் சிறந்தசெம்பொன் னம்பலம்
அன்றுமின்று நின்றதோ ரனாதியான தம்பலம்
என்றுமென்று மிருப்பதோ ருறுதியான வம்பல
மொன்றியொன்றி நின்றது ளொழிந்ததே சிவாயமே. 416

ஆலயங்கள் இல்லாவிடினும் நாம் செல்லுமிடங்களில் எல்லாம் சிறந்த பொன்னம்பலமாக விளங்குவது கண்கள். அன்றும் இன்றும் எப்பொழுதும் இருக்கும் அநாதியான, உறுதியான ஆலயம். அதன் உள்ளே சென்று சோதியில் நினைவை ஒன்றித் தவம் செய்யவேண்டும். அச்சோதியில் ஒளிந்திருப்பது சிவாயமே.

தந்தைதாய் தமரும்நீ சகலதே வதையும்நீ
சிந்தைநீ தெளிவுநீ சித்திமுத்தி தானும்நீ
விந்துநீ விளைவுநீ மேலதாய வேதம்நீ
யெந்தைநீ யிறைவனீ யென்னையாண்ட வீசனே. 417

என்னுள் இருந்து என்னை ஆண்டுகொண்டிருக்கும் ஈசனே! என் தந்தை, தாய், மற்றும் சுற்றமும் நீயே. அனைத்து தேவதைகளும் நீயே. என் சிந்தை நீயே. சிந்தையில் தெளிந்த அறிவும் நீயே. சித்தியும் முத்தியும் நீயே. விந்தாகிய முதலும் நீயே. அதில் விளைந்த உயிரும் நீயே. வேதங்கள் உரைக்கும் இறையும் நீயே. எந்தையாம் ஏக இறைவன் நீயே. அனைத்தும் நீயே.

எப்பிறப்பி லும்பிறந் திருந்தழிந்த வேழைகா
ளிப்பிறப்பி லும்பிறந்து என்னநீறு பூசுறீ
ரப்புடன் மலமறுத்து ஆசைநீக்க வல்லிரேல்
செப்புநாத வோசையிற் றெளிந்துகாண லாகுமே. 418

எந்தப் பிறவி எடுத்தாலும், பிறக்கிறீர்; வாழ்கிறீர்; இறக்கிறீர். கிடைத்தற்கரிய மானிடப் பிறவி எடுத்தும், ஈசனை அடையும் வழி என்ன என்று தேடாது, எருவாலாகிய சாம்பலை உடல் முழுதும் பூசிக்கொள்கிறீர்கள். நீரால் ஆகிய உடல் பற்றி இருக்கும் மும்மலங்களையும் அறுத்து, ஆசைகளை ஒழிக்க வல்லவர்களானால், ஞானிகள் சொல்லியுள்ள நாத ஓசையாம் “நமசிவய” என ஓதித் தவம் இருந்து, அந்த நாதத்தில் கலக்கத் தெளிவு உண்டாகும்.

எட்டுயோக மானது மியங்குகின்ற நாதமு
மெட்டுவக்க ரத்துளே உகாரமு மகாரமும்
விட்டலர்ந்த மந்திரம் வீணாதண்டி னூடுபோ
யட்டவட்ச ரத்துளே யமர்ந்ததே சிவாயமே. 419

எண் சாண் அளவுள்ள உடலில் செய்யும் யோகத்தால், ஓம்(அகாரமாம் உயிர்+உகாரமாம் உடல்+மகாரமாம் மனம்) எனும் நாதத்தை எழுப்பி மேலேற்ற வேண்டும். அது வீணாத் தண்டின் ஊடே போய் “அ” என்னும் உயிர் அட்சரத்துள் செல்லும். அங்குதான் சிவாயம் அமர்ந்துள்ளது.

பிரான்பிரா னென்றுநீர் பினாத்துகின்ற மூடரே
பிரானைவிட்டு மெம்பிரான் பிரிந்தவாற தெங்ஙனே
பிரானுமாய் பிரானுமாய் பேருலகு தானுமாய்
பிரானிலே முளைத்தெழுந்த பித்தர்காணு மும்முடல். 420

உடலை விட்டு சீவன் பிரியும் நேரத்திலே, எம்பிரானே! ஈசா! என பிதற்றுகின்ற பித்தர்களே! நம் உடலில் ஓடும் சீவனாகிய பிராணனை விட்டு எம்பிரான் பிரியவே இல்லை. அவனை நீங்கள் அப்போது உணரவில்லை. பிராணனாகவும், அதனுள் எம்பிரானாகவும் இப்பேருலகில் உள்ள அனைத்து சீவராசிகளிலும் ஈசன் இருக்கிறான். அப்பிராணனில் முளைத்தெழுந்ததே நம் உடல்.

ஆதியில்லை யந்தமில்லை யானநாலு வேதமில்லை
சோதியில்லை சொல்லுமில்லை சொல்லிறந்த தூவெளி
நீதியில்லை நேசமில்லை நிச்சயப் படாததும்
ஆதிகண்டு கொண்டபின் னஞ்செழுத்து மில்லையே. 421

இறைவனுக்கு ஆதியில்லை; அந்தமுமில்லை. நான்கு வேதங்களால் ஆனதும் இல்லை. அது சோதி இல்லை; சொல்லாலாகிய மந்திரங்களும் இல்லை; சொல்லற்ற மவுன தூய வெட்டவெளி; அதற்கென்று எந்த நீதியும் இல்லை; அன்பும் இல்லை. அது இப்படித்தான் என வரையறுக்க முடியாதது. இப்படிப்பட்டதான, இருந்தும் இல்லாததான ஆதியைக் கண்டபின் எந்த எழுத்தாலாகிய மந்திரமும் வேண்டாம். அஞ்செழுத்தாகிய நமசிவய என்னும் மந்திரமும் இல்லை.

அம்மையப்ப னப்பநீ ரமர்ந்தபோ தறிகிலீ
ரம்மையப்ப னானநீ ராதியான பாசமே
அம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யானபின்
னம்மையப்ப னின்னையன்றி யாருமில்லை யில்லையே. 422

நம் உடலில் அம்மையப்பன் அமர்ந்திருந்த போது நீங்கள் அவனை அறியவில்லை. நீரான விந்துவும், அம்மையப்பனும் ஆதியான பாசமாகவும், மனமாகவும் உள்ளதை அறியுங்கள். அனைத்தையும் அம்மையப்பனிடம் ஒப்படைத்து, சரணடைந்து, அவன் திருவடியில் நினைவை வைத்துவிட்ட பின், அவனைத் தவிர யாரும் இல்லையே.

முந்தவோ ரெழுத்துளே முளைத்தெழுந்த செஞ்சுட
ரந்தவோ ரெழுத்துளே பிறந்துகாய மானது
மந்தவோ ரெழுத்துளே யேகமாகி நின்றது
மந்தவோ ரெழுத்தையு மறிந்துணர்ந்து கொள்ளுமே. 423

ஆதியாகிய விந்துவால் உண்டாகியது பிறப்பு. அவ்வுடலில் ஏகமாக நின்றது உயிராகிய சோதி. எந்த எழுத்தையும் எழுத ஆரம்பிக்கும்பொழுது முதலில் ஒரு புள்ளி வைத்து அதிலிருந்துதான் எழுதத் தொடங்குகிறோம். அப்புள்ளியே முந்திய எழுத்து. அதுவே ஆதி. அதுதான் கண்ணின் கருமணி. அதனுள் முளைத்து எழுந்து ஆடிக்கொண்டிருக்கும் சோதி. அந்த சோதியை அறிந்து, உணர்ந்து கொள்ளுங்கள்.

கூட்டமிட்டு நீங்களுங் கூடிவேத மோதுறீர்
ஏட்டகத்து ளீசனு மிருப்பதென் னெழுத்துளே
நாட்டமிட்டு நாடிடும் நாலுமூன்று தன்னுளே
யாட்டகத்து ளாடிடு மம்மையாணை யுண்மையே. 424

சகல காரியங்களும் நிறைவேற இதைச் செய்; அதைச் செய் எனக் கூறி, கூட்டங்களைச் சேர்த்து வேத மந்திரங்களை ஓதுகிறீர்கள். நூல் ஏடுகளின் உள்ளே ஈசன் எந்த எழுத்தில் இருக்கின்றான் என்பதை அறிவீர்களா? நாலும் மூன்றுமான சப்த(ஏழு)நாடிகளுக்குள்ளே ஓடிடும் ஆன்மா, கபாலமெனும் ஆட்ட அரங்கிலே ஆடிடும் சோதியில் கலந்தால் ஈசனை அடையலாம். இதுவே உண்மை. இது பராசக்தியின் மீது ஆணை.

காக்கைமூக்கை யாமையா ரெடுத்துரைத்த காரணம்
நாக்கையூன்றி யுள்வளைத்து ஞானநாடி யூடுபோ
யேக்கைநோக்க வட்சர மிரண்டெழுத்து யேத்திடிற்
பார்த்தபார்த்த திக்கெலாம் பரப்பிரம்ம மானதே. 425

தவம் செய்யும் முறை பற்றி காகனாம் காகபுசுண்டர், மூலனாம் திருமூலர், ஆமையாம் அகத்தியர் போன்ற சித்தர்கள் எடுத்துரைத்த உண்மையை உணருங்கள். நாக்கை உள்மடக்கி உண்ணாக்கைத் தொட்டு, கபாலத்துக்குள் போய் ஏக்கத்துடன் மேலே நோக்கி, வாசியை அம், உம் என மேலேற்ற, பார்த்த திக்கில் எல்லாம் பரப்பிருமமே தெரியும்.

ஓசையுள்ள கல்லைநீ ருடைத்திரண்டாய் செய்துமே
வாசலிற் பதித்தகல்லை மழுங்கவே மிதிக்கிறீர்
பூசனைக்கு வைத்தகல்லில் பூவும்நீருஞ் சாத்துறீர்
ஈசனுக் குகந்தகல் லெந்தக்கல்லு சொல்லுமே. 426

தட்டினால் ஓசை வரும் ஒரே பாறையை இரண்டாய் உடைத்து, ஒன்றை வாசல்படியாக்கி வாசலில் போடுகிறீர்கள்; மற்றொன்றில் ஈசனை சிலையாய் வடித்து பூசைகள் செய்கிறீர்கள். வாசல்படி மழுங்கும்படி மிதிக்கிறீர்கள். ஆனால், அதே கல்லில் செய்த ஈசனின் உருவுக்கு நீரால் முழுக்காட்டி பூ சாத்தி வணங்குகிறீர்கள். இவ்விரு கற்களில் எந்தக்கல் ஈசனுக்கு உகந்த கல் எனக் கூறுங்கள். அவனிருப்பதோ பிண்டக்கல்லாம் உடலில்தான் என்பதை உணருங்கள்.

ஓட்டுவைத்து கட்டிநீ ருபாயமான மந்திரங்
கட்டுபட்ட போதிலுங் கர்த்தனங்கு வாழுமோ
எட்டுமெட்டு மெட்டுளே யியங்குகின்ற வாயுவை
வட்டமிட்ட யவ்விலே வைத்துணர்ந்து பாருமே. 427

விந்தாகிய நீரால் உருவாகிய இவ்வுடல் எலும்பும் தோலும் ஒட்டு போட்ட ஒன்று. இதில் பிறப்பறுக்கும் மந்திரம் ஓரெழுத்தாம் கண்ணே. அதில்தான் ஈசன் சோதி உருவாகக் கட்டுப்பட்டுள்ளான். எண்சாண் உடலிலே எட்டும் வரைக்கும் ஓடும் பிராணனை வட்டமான கண்களின் உள்ளே வைத்து, உணர்ந்து பாருங்கள்.

இந்தவூரி லில்லையென்று எங்குநாடி யோடுறீ
ரந்தவூரி லீசனு மமர்ந்துவாழ்வ தெங்ஙனே
யந்தமான பொந்திலாரில் மேவிநின்ற நாதனை
யந்தமான சீயிலவ்வி லறிந்துணர்ந்து கொள்ளுமே. 428

இந்த ஊரில் ஈசன் இல்லை; அந்த ஊரில்தான் இருக்கிறான்; என்று எண்ணி அவனை நாடி ஓடுகிறீர்கள். அவன் இருக்கும் இடத்தை விட்டு எங்கெங்கோ அலைகிறீர்கள். இந்த ஊரில் இல்லாத அந்த ஈசன் அந்த ஊரில் எங்கு உள்ளான். கபாலத்தில் முடிவான பொந்து ஒன்று உண்டு. அதில்தான் கண்கள் உள்ளது. கண்களில் உள்ளே உள்ள ஈசனை அறிய வழி என்ன? சிகாரமாம் கண்களில் அகாரமாம் உயிரை ஏற்றி, ஈசனை அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். அதாவது உயிர் மூச்சை கண்களில் உள்ளே செலுத்துங்கள்.

புக்கிருந்த தும்முளே பூரியிட்ட தோத்திரம்
தொக்குசட்சு சிங்குவை யாக்கிராணன் சூழ்ந்திடி
லக்குமணி கொன்றைசூடி யம்பலத்து ளாடுவார்
மிக்கசோதி யன்புடன் விளம்பிடாது பின்னையே. 429

நம் உடலில் புகுந்திருந்ததும், பூரணமானதும் கண்ணே. தொக்கு, சட்சு, சிங்கு என்னும் மூன்று நாடிகளையும் ஆக்கிராணன் என்னும் நாடியில் இணைத்து மேலேற்றினால் கபாலத்துக்குள் உருத்திராட்சமும் கொன்றையும் சூடிய சிவன் சோதி உருவில் தாண்டவம் செய்வதைக் காணலாம்.

பின்னெழுந்த மாங்கிசத்தை பேதையர் கண்பற்றியே
பின்புமாங்கி சத்தினால் போகமாய்கை பண்ணினால்
துன்புறும் வினைகள்தாம் சூழ்ந்திடும்பி னென்றலோ
அன்பரா யிருந்தபேர்க ளாறுநீந்தல் போல்விடே. 430

பெண்களின் உடலில் பின்புறம் முதுகுக்கு கீழே முட்டிக் கொண்டுள்ள சதையின் மேல் ஆசை கொண்டு, அவர்களின் கண் வீச்சில் மயங்கி, பெண்ணாசையால் அவர்களை புணர்ந்து அலைந்தால், அதன் பலனாகத் தீராத நோய்களும் வினையும் வந்து சூழும். அதைவிடுத்து பேரின்பம் பெற விழைந்தால், ஆற்றைக் கடந்து அக்கரை செல்வது போல் எளிதாகப் பிறவிப் பெருங் கடலைத் தாண்டலாம்.

விட்டிருந்த தும்முளே விதனமற் றிருக்கிறீர்
கட்டிவைத்த வாசல்மூன்று காட்சியான வாசலொன்று
கட்டிவைத்த வாசலுங் கதவுதாள் திறந்துபோய்த்
திட்டமான வீசனைத் தெளியுமாங் கிசத்துளே. 431

ஈசனிருப்பது உன் உடலுக்குள்ளே கபாலத்தில். அதை பற்றிய கவலை ஏதும் இல்லாது இருக்கிறீர்கள். உடலுக்குள் சந்திர, சூரிய, அக்கினி மண்டலங்கள் மூன்று. இவைகள் கட்டி வைத்த வாசல்கள். கண்கள் காட்சியான வாசல். கண்களைத் திறந்து மூன்று மண்டலங்களையும் ஒன்றாக்கி மேலேற்றி உள்நாக்கின் மேல் உள்ள கதவைத் திறக்க, இச்சதைப் பிண்டத்தினுள்ளே திடமாக ஈசனைக் காணலாம்.

ஆகுமாகு மாகுமே யனாதியான வப்பொருள்
ஏகர்பாதம் நாடிநாடி யேத்திநிற்க வல்லிரேல்
பாகுசேர் மொழியுமைக்குப் பாலனாகி வாழலாம்
வாகுடனே வன்னியை மருவியே வருந்திடீர். 432

அநாதியான ஈசனை அடைய நம் உடலில் உள்ள கண்ணால்தான் முடியும். அதனால்தான் எல்லாமே ஆகும். அதுவே ஏகராம் ஈசன் பாதமாம் திருவடி. அதுவே சூரிய, சந்திர கலைகளாம். அத்துடன் வன்னியாம் அக்கினி கலையை சேர்த்து மேலேற்றி அங்கேயே நிற்க முடியுமானால், இனிய மொழியுடைய உமைக்குப் பாலனாகி வாழலாம். ஆகவே முக்கலைகளும் ஒன்றிய வன்னியாகிய சுத்த அக்கினியைத் தழுவி வாழ்ந்து, இறையடியே கதியென வருந்தித் தவம் செய்யுங்கள்.

உண்மையான தொன்றதொன்றை யுற்று நோக்கியும்முளே
வண்மையான வாசியுண்டு வாழ்த்தியேத்த வல்லிரேல்
தண்மைபெற் றிருக்கலாம் தவமும்வந்து நேரிடும்
கன்மதன்ம மாகுமீசர் காட்சிதானுங் காணுமே. 433

உண்மையானது எது? உள் மெய்யில் உள்ள கண்கள்தான். அதனுள் உற்று நோக்கி, முக்கலைகளை ஒன்றாக்கி உயிர் மூச்சை(வாசி) வாழ்த்தி ஏற்ற முடிந்தவரானால், குளிர்ச்சி பொருந்தியவராகலாம். தவமும் வந்து சேரும். இதுவே மனிதனின் கர்மமும் தருமமும் ஆகும். இதனால் ஈசனின் காட்சி கிட்டும்.

பாலனாக வேணுமென்று பத்திமுற்று மென்பரே
நாலுபாத முண்டதில் நினைந்திரண் டடுத்ததால்
மூலநாடி தன்னில்வன்னி மூட்டியந்த நீருண
ஏலவார் குழலியூடே யீசர்பாத மெய்துமே. 434

இளமையாக வாழவேண்டும் என்றால், உடலும் உயிரும் பக்தியிலேயே முற்றி மூழ்கியிருக்க வேண்டும் என்பார்கள். நான்கு இதழ் கமலமாம் மூலாதாரத்தில் எழும் குண்டலினி சக்தியை ஞான வினையால் எழுப்பி, சூரிய, சந்திர கலைகளை அக்கினி கலையோடு சேர்த்து மூல நாடியில் ஏற்றி, அங்கேயே நினைவில் நின்று தவம் செய்தல் வேண்டும். அப்படி செய்ய, ஏலவார் குழலியுடன் இருக்கும் ஈசனின் திருவடி அடையலாம்.

எய்துநின்னை யன்பினா லிறைஞ்சியேத்த வல்லிரே
லெய்துமுண்மை தன்னிலே யிறப்பிறப் பகற்றிடும்
மையிலங்கு கண்ணிபங்கன் வாசிவானி லேறிமுன்
செய்தவல் வினைகளுஞ் சிதறுமது திண்ணமே. 435

மனிதப் பிறப்பு எடுத்த நோக்கமே இறைவனை அடைவதுதான். அவனை அடைய அவன் திருவடியிலேயே அறிவு உணர்வு நினைவு என்ற மூன்றையும் இணைத்து, நின்று அன்பினால் கெஞ்சித் தவம் இருத்தல் வேண்டும். அப்படி செய்ய வல்லவராயின், பிறப்பும் இறப்பும் இன்றி இருக்கலாம். வாசியானது ஆகாயத்தலத்தில் ஏறி நிற்க, மைதீட்டிய கண்ணை உடைய உமைபாகன் அருளால் முன் செய்த தீவினைகள் அனைத்தும் சிதறி ஓடும். இது திண்ணமே.

திண்ணமென்று சேதிசொன்ன செவ்வியோர்கள் கேண்மினோ
யண்ணலன் புளன்புகுந் தறிந்து நோக்கலாயிடும்
மண்ணதிர விண்ணதிர வாசியை நடத்திடில்
நண்ணியெங்க ளீசனும் நமதுடலி லிருப்பனே. 436

வாசி யோகம் செய்தால் பிறவா நிலை கிடைக்கும்; இது உறுதி என்ற சேதி சொன்ன செம்மை வழி நின்றவர்களே! கேளுங்கள். அண்ணல் அன்பு உள்ளத்தில் உள்ளான் என்பதை உணர்ந்து, அவனை நோக்கித் தவம் இருங்கள். மண்ணாம் உடல் அதிர, விண்ணாம் உயிர் அதிர வாசியை மேலேற்ற, நம் ஈசனும் நம்மை நாடி வந்து நம் உடலில் இருப்பானே! அப்போது பிறவா நிலை தானே கிட்டும்.

இருப்பனெட் டெட்டெண்ணிலே இருந்துவேற தாகுவன்
நெருப்பவாயு நீருமண்ணும் நீள்விசும்பு மாகுவன்
கருப்புகுந்து காலமே கலந்தசோதி நாதனைக்
குருப்புனலில் மூழ்கினார் குறித்துணர்ந்து கொள்வரே. 437

படுக்கவைத்த 8 கண்கள். அதுவே தமிழ் எழுத்தான அகாரம். ஆக, எண்ணாகவும் எழுத்தாகவும் இருப்பது ஈசனான கண்கள். உடலுக்குள் இருக்கும் அகாரம் சிகாராமாகும்; அதுவும் வேறான ஒன்றாகும். நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் என ஐந்து பூதங்களாகவும் இருக்கும். சோதி வடிவில் நாம் கருவில் உருவானபோதே நம் உடலில் கலந்தது. அதுவே குரு. இருளை நீக்கி ஒளி தருவதால் குரு. அது மிதப்பது நீரில். இதுவே ஈசனின் திருவடி. ஆக, இந்த இரகசியத்தை அறிந்து தவம் செய்யவேண்டும்.

கொள்ளுவார்கள் சிந்தையிற் குறிப்புணர்ந்த ஞானிகள்
விள்ளுவார்கள் பக்குவத்தில் வேண்டிவேண்டி யேத்தினால்
உள்ளுமாய்ப் புறம்புமா யுணர்வதற் குணர்வுமாய்த்
தெள்ளிதாக நின்றசோதி செம்மையைத் தெளிந்திடே. 438

ஈசனை அடைய வழி அறிந்த ஞானிகள், எந்த நேரமும் நினைவைக் கருத்தினில் ஒன்றி வைத்திருப்பர். அவர்களை அடையாளம் கண்டு, சென்று, பக்குவமாக திரும்பத் திரும்ப வேண்டிக்கொண்டால், அந்த வழியை சொல்லித் தருவார்கள். அவ்வழியில் தவம் செய்ய, நமக்கு உள்ளாகவும், புறமாகவும், உணர்வதற்கு உணர்வாகவும், தெளிவானதாகவும் நின்ற சோதியை அடையும் செம்மையான வழி தெளிவாகத் தெரியும்.

தெளிந்தநற் சரியைதன்னில் சென்று சாலோகம்பெறும்
தெளிந்தநற் கிரியைபூசை சேரலாஞ் சாமீபமே
தெளிந்தநல் யோகந்தன்னில் சேரலாகுஞ் சாரூபந்
தெளிந்தஞானம் நான்கிலும் சேரலாஞ் சாயுச்சியமே. 439

சரியை வழி செல்ல சாலோகம் அடையலாம். நல்ல கிரியை வழி செல்ல சாமீபம் கிட்டும். தெளிந்த நல்ல யோகம் செய்தால் சாரூபம் என்னும் நிலை கிட்டும். ஞானம் நான்கு வகை. அவையாவன: ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை, ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் ஆகும். இவ்வழிகளில் செல்ல சாயுச்சியம் என்னும் நிலை அடைந்து ஈசனுடன் கலந்து இருக்கலாம்.

சேருவார்கள் ஞானமென்று செப்புவார் தெளிவுளோர்
சேருவார்கள் நாலுபாதச் செம்மையென்ற தில்லையே
சேருவார்கள் சிவகதி திருவருளைப் பெற்றபேர்
சேருமாறு கண்டுநாலுஞ் செய்தொழில் திடப்படே. 440

ஈசனிருக்கும் இடம் செல்ல வழி அறிந்து, அதனுடன் பொருந்தினால்தான் ஞானம் கிட்டும் என்பர் ஞானிகள். தெளிவோடு தவம் செய்பவர் அதனுடன் சேருவார்கள். நான்கு இதழ் தாமரையாம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை எழுப்பித் தவம் செய்வதுதான் செம்மையாகும். முக்கலை ஒன்றி, குண்டலினி எழுப்பி சோதியில் ஒன்றித் தவம் செய்ய ஈசனின் திருவருள் கிட்டும். அதற்கு, சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நிலைகளிலும் நின்று திடமாகத் தவம் செய்யவேண்டும்.

திறமலிக்கு நாலுபாதஞ் செம்மையுந் திடப்படார்
அறிவிலிகள் தேசநாடி யவத்திலே யலைவதே
குழி(றி)யதனைக் காட்டியுட் குறித்துநோக்க வல்லிரேல்
வெறிகமழ் சடையுடையோன் மெய்ப்பத மடைவரே. 441

நான்கு இதழ் தாமரையாம் மூலாதாரத்தில் உள்ள குண்டலினி சக்தியை திறமை அனைத்தையும் பயன்படுத்தி மேலேற்றி, செம்மையாகத் தவம் செய்து திடப்படார்கள். அறிவிலிகள் இறைவனை நாடெங்கும் தேடி அங்குமிங்கும் அலைந்து அவத்தைப் படுகின்றனர். கபாலத்தில் குழியில் உள்ள குறியை அறிந்து அதற்குள் உற்று நோக்க வல்லவராயின், கங்கையையும் பிறையையும் தாங்கிய சடையுடைய ஈசனின் மெய்ப்பாதத்தை அடைவார்கள்.

அடைவுளோர்கள் முத்தியை யறிந்திடாத மூடரே,
படையுடைய தத்துவமும் பாதகங்க ளல்லவோ
மடைதிறக்க வாரியின் மடையிலேறு மாறுபோல்
உடலில்மூல நாடியை யுயரவேத்தி யூன்றிடே. 442

எல்லா அறிவும் இருந்தாலும், முத்தியை அறியாத முட்டாள்களே! ஏகப்பட்ட அலங்காரங்கள் செய்து, தத்துவங்கள் பல சொல்லி, “நான் முத்தியடையும் வழி கண்டுவிட்டேன்” என மற்றவர்களை ஏமாற்றுவது பாவம். அது உனக்கே பாதகங்கள் செய்யும். அதனால், தத்துவம் பேசிக்கொண்டிருக்காது,, அணையில் தேக்கி வைத்துள்ள நீர் மடை திறந்ததும் வெள்ளமாக மடை மீது ஏறுவது போல, குண்டலினி சக்தியை மூல நாடியினுள் மேலேற்றி அங்கேயே ஊன்றி நில்லுங்கள்.

ஊன்றியேத்தி மண்டல முருவிமூன்று தாள்திறந்
தான்றுதந்தி யேறிடி லமுர்தம்வந் திறங்கிடும்
நான்றிதென்று தொண்டருக்கு நாதனும் வெளிப்படு
மான்றியு முயிர்பரம் பொருந்திவாழ்வ தாகவே. 443

முக்கலைகளையும் ஒன்றாக்கி, அதை ஊன்றி மேலே ஏற்றி மூன்று மண்டலங்களையும் ஊடுருவிக் கடந்து, உண்ணாக்கின் மேல் உள்ள கதவின் தாளைத் திறக்க, அமிர்தம் வந்து உண்ணாக்கில் இறங்கிடும். அப்போது ஞான வினை செய்பவருக்கு, நான் என்பது என்ன? எனும் வினாவுக்கு விடை கிட்டும். நாதனான ஈசனும் சோதியாய் வெளிப்படும். நம் உயிரில் பரம்பொருள் பொருந்தி இருப்பதை, நன்கு ஆராய்ந்து அறிந்துணர்ந்து தவம் புரிந்து எம பயமின்றி வாழுங்கள்.

ஆகமூல நாடியி லனலெழுப்பி யன்புடன்
மோகமான மாயையில் முயல்வது மொழிந்திடில்
தாகமேரு நாடியே கனேகமான வாறுபோல்
ஏகபாத மன்புட னிறைஞ்சினா ரறிவரே. 444

மோகமாகிய மாயையில் மயங்கி, சிற்றின்பத்தை ஒழித்தபின், வாசி யோகத்தால் மூல நாடியில் மூலக் கனலை எழுப்பி அன்புடன் கபாலத்தில் உள்ள மேருவை நாடி, அங்கேயே நின்று தவம் செய்யுங்கள். ஏகன் அனேகன் ஆனதுபோல் இருக்கும் ஏகபாதனாம் ஈசனை அன்புடன் கெஞ்சிக் கெஞ்சி வேண்டினால், அந்த ஈசனை அறியலாம்.

அறிந்துநோக்கி யும்முளே யயன்தியான மும்முளே
யிருந்திராம லேகர்பாதம் பெற்றிருப்ப துண்மையே
யறிந்துமீள வைத்திடா வகையுமரண மேத்தினார்
செறிந்துமேலை வாசலைத் திறந்துபாரு மும்முளே. 445

கபாலக் குகையின் வாசல் கண்தான் என்று அறிந்து அதற்குள்ளேயே நோக்கி ஈசனையே எண்ணித் தவமிருக்க, மும்மூர்த்திகளும் அந்தத் திருவடியாம் ஏகபாதத்தில் இருக்கும் உண்மையை உணரலாம். உணர்ந்த பின்னர் முக்கலைகளையும் ஒன்றாக்கி, மேலேற்றி, உண்ணாக்கின் மேல் உள்ள வாயிலைத் திறந்து, நினைவைக் கருத்தில் இருத்தினால் மரணத்தை வெல்லலாம்.

சோதியாக வும்முளே தெளிந்துநோக்க வல்லிரேல்
சோதிவந் துதித்திடுந் துரியாதீத முற்றிடு
மாதிசக் கரத்தினி லமர்ந்துதீர்த்த மாடுவான்
பேதியாது கண்டுகொள் பிராணனைத் திருத்தியே. 446

நம் உடலில் சோதியாக உள்ளது கண்கள். அதற்குள்ளே தெளிவாக உற்று நோக்கி பிராணனைத் திருத்தினால் வாசி இலயமாகும்; கபாலத்துக்குள் சோதி உதிக்கும். அதன் பின்னர், இவையிரண்டும் சேர்ந்து துரியாதீதமாகிய வெட்டவெளிக்குள் செல்லும். இலயமான வாசியை இலயம் தவறவிடாது (பேதியாது) ஞான வினையாற்ற, ஆதி சக்கரமாகிய கண்ணின் கருமணிக்குள் நீரில் அமர்ந்து தீர்த்தமாடும் ஈசனைக் கண்டு கொள்ளலாம்.

திருவுமாய் சிவனுமாய் தெளிந்துளோர்கள் சிந்தையில்
மருவிலே யெழுந்துவீசும் வாசனைய தாகுவன்
கருவிலே விழுந்தெழுந்த கன்மவா தனையெலாம்
பருதிமுன் னிருளதாய் பறியுமங்கு பாருமே. 447

மரு என்னும் மலரின் வாசனையை உடைய ஈசன், திருவுமாகி சிவனுமாகி இருப்பதைத் தெளிந்து வாழுவோர் நினைவில் உள்ளான். கருவில் உருவாகிய உடல் எடுத்தபோதும், பின்னரும் உண்டாகிய கர்ம வினைகளெல்லாம், பகலவனைக் கண்ட இருளைப்போல் விலகி ஓடிவிடும். ஆகவே, நினைவைக் கருத்தில் வைத்து அங்கு பாருங்கள்.

பாருமெந்தை யீசர்வைத்த பண்பிலே யிருந்துநீர்
சேருமே நடுவறிந்து செம்மையான வப்பொருள்
வேரையும் முடியையும் விரைந்துதேடி மாலயன்
பாரிடந்து விண்ணிலே பறந்துங்கண்ட தில்லையே. 448

அனைத்துலக சீவராசிகளுக்கும் எந்தையாம் ஈசர், தன் திருவடியை ஒளிபொருந்திய பாகமாகத் தத்தம் உடலில் வைத்துள்ளார். அந்த செம்மையான மெய்ப்பொருள் கண்கள்தான். திருமாலும் பிரமனும் அடி முடி தேடி ஒருவர் நிலத்தைத் தோண்ட, மற்றொருவர் மேலே பறக்க, ஒருவராலும் காண இயலவில்லை. ஏனெனில் ஈசன் இருப்பது ஒவ்வொருவர் உடலிலேதான். கண்ணின் நடு அறிந்து மேலேறிக் கபாலத்துக்குள் செல்ல ஈசனைக் காணலாம்.

கண்டிலா தயன்மாலென்று காட்சியாக சொல்லுறீர்
மிண்டினா லரனுடன் மேவலா யிருக்குமோ
தொண்டுபட்டு மன்புடன் தொழுதுநோக்க வல்லிரேல்
பண்டுமுப் புரமெரித்த பத்திவந்து முத்துமே. 449

திருமாலும், பிரமனும் ஈசனின் அடிமுடியைத் தேடிக் கண்டதில்லை என்று கதை கதையாய்ப் பார்க்காமலே சொல்லுகிறீர்கள். செருக்குடன்(மிண்டு) பேசித் திரிவதால் ஈசனுடன் மேவி இருப்பது எங்ஙனம்? இறைத்தொண்டுகள் பல செய்து, அன்புடன் ஈசனை நினைந்து, தொழுது, திருவடிக்குள் (கண்) நோக்க வல்லவர்களானால், முன்னொரு காலத்தில் முப்புறம் எரித்த ஈசன் நம் அருகில் வந்து ஆட்கொள்ளுவான்.

முற்றுமே யவனொழிந்து முன்பினொன்று காண்கிலேன்
பற்றிலாத தொன்றுதன்னை பற்றிநிற்க வல்லது
கற்றதாலோ யீசர்பாதங் காணலா யிருக்குமோ
பெற்றபேரை யன்புடன் பிரியமாகக் கேளுமே. 450

அனைத்திலுமே ஈசன் பரவியுள்ளான். அதனால் அவனைத் தவிர முன்னும் பின்னும் வேறு ஒன்றையும் காண்கிலேன். அவன் பற்றில்லாத பரம்பொருள். ஆயினும் நம்மைப் பற்றி நிற்கும் வல்லமையுடைய ஒன்று. கண்டதையெல்லாம் கற்றுப் பண்டிதன் ஆனாலும், உனக்குள் இருக்கும் ஈசனின் திருவடி அறியாது இருக்கலாமோ? கல்வியால் மட்டும் ஈசன் பாதம் அறிய முடியாது. திருவடியைப் பற்றி நின்று பரம் பொருளை அடைவதுதான் மெய் கல்வி. ஈசனின் திருவடி வழி சென்று ஞானம் அடைந்த பெரியோரை அணுகி, அவர்கள் பெற்ற பெரும் பேற்றைத் தனக்குத் தருமாறு அன்புடன் வேண்டிக் கேட்டால் தருவார்கள். அவ்வழி நின்று வாழுங்கள்.

Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (1 – 150)

Click to read: சிவ வாக்கியம் பாடல்கள் (151 – 300)

Also, read



12 thoughts on "சிவவாக்கியம் – சிவவாக்கியர் பாடல்கள் (301 – 450)"

  1. This explanation for Sivavakkiyar Siddhar songs was written by Paattu Siddhar Ayya in his book. You stole his content without giving proper credits to him. Explanations were exactly same as in his book without changing a single word. Don’t do this kind of cheating.

  2. ஈடு இணையில்லா பொக்கிஷத்தை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி. இந்த சேவைக்கு உங்களை பாராட்ட வார்தைகள் இல்லை. வணக்கம் பணிந்து சமர்ப்பிக்கிறேன்.

  3. பாடல் எண். 287 மற்றும் 288 இரண்டும் ஒன்றாக உள்ளது. தயவுசெய்து சரிசெய்து அளிக்கவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்