- டிசம்பர் 2, 2024
உள்ளடக்கம்
பரமபத நாதனாய் தேவிமார் இருவருடன்
திருக்கூடல் தலம் கொண்டாய் நான்யுகமுன்னே!
இருகரம் இணைத்துச் சிரம் பணிந்தேன் கூடலழகா!
வரமொன்று வேண்டும் உன் புகழ் பரப்பிட! (1)
துயின்மடிந்தான் திருக்கரணத் தளிமம் மீதே!
அயன் படைத்தான் உந்தியில், உலகுப் படைக்க!
அவ்வுலகிலே என்னையும் ஓருயிராய் படைத்தான்
அவ்விடம் அழகனின் அருள் சூழ்ந்தத் திருக்கூடலே! (2)
நாடினர் அழகனை பிரளயத்தின் தாக்கத்தால்
கூடிய மேகங்கள் நான்மாடம் போல் அமைந்திட
ஆடலும் பாடலும் ஆங்காங்கே திளைத்திட - திருக்
கூடல் காத்தக் கூத்தனாய் அமர்ந்தது கருணையே! (3)
நான்யுகம் கண்டவன் நாளும் காத்தருளும்
நான்மறை நாயகன் கலியில் அமர்ந்தருளும்
மணவாள மாமுனிகள் மனதாறப் பூசித்த
மணிவண்ணன் வசித்திடும் திருக்கூடல் தலமே! (4)
வந்தோரை வரவேற்று அபயமளிக்கும் அரிகேசவன்
சந்ததியும் காத்தருள்வான் வாழையடி வாழையாய்
இடர் கொஞ்சம் இடம் விலகி வழி தெரியாது ஓடிடும்
சுடர் தரும் வாழ்வினை சுகரமாயருளும் கதலிவனத்தானே! (5)
கங்கையைக் கொண்டவன் நான்மாடக் கூடலில்
பங்கயற்கண்ணனின் தங்கையை மணம் முடிக்க!
அங்கயற்கண்ணி சொக்கனை கரம்பிடித்தாள் மங்கலத்
திங்களில் கூடலழகிய மாதவன் அருளுடன்! (6)
எல்லோரும் வணங்கிடும் அருட்பெருமழகனாய்
மூலமாய் முதல்வனாய் பல்லாண்டுக்குரியவன்!
சீராப்தி சயனனோ அட்டங்க உச்சியில் - மத்தியில்
சூரிய நாராயனண் சொலிக்கின்றான்! (7)
அட்டாங்கம் விரித்த அழகனின் முக்கோலம் தெ
விட்டாத நாராயண நாமத்தை சொல்லியே
தட்டாமல் நாமுமோர் மண்டலம் சுற்றிவந்தால்
எட்டாத ஏற்றத்தை எளிதினில் எட்டிடுவோம் ! (8)
ஆதியில் தானவன் சோதியாய் ஆனவன்
வேதியன் ஓதுவன் யாகத்தில் பாவகன்
மாதிசை மானுடர் காத்திடுங் காவலன்
ஆதித்தன் ஆதவன் மாசில்லா மாதவன்! (9)
சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போல
சூரிய நாராயணா உன்னைச் சுற்றி வந்தேன்!
அண்டத்தின் தீபமாய் நீ மிளிர உன்னையே
அண்டிப் பிழைக்குமென் நெஞ்சத்தின் தீபமும் நீதானே! (10)
விதைகளின் வலிமை அறிந்தமையால்
விதைகளின் வளர்ச்சியை கதிர்களில் தந்தாயோ
சுதை வண்ண கரங்களில் வீசும் அருட்கதிர்கள்
நிதம் தாராயோ நலமுடன் யாம் வளர்ந்திடவே! (11)
Also, read
Our Sincere Thanks:
கம்பத்தடியான் (Sudharsana Srinivasan)
Email ID: kambathdiayaan@gmail.com or viruvasan@gmail.com
நன்றி அம்மா படித்தமைக்கு!
நன்றி அண்ணா!
மதுரை கூடல் அழகரின் மேல் கொண்டுள்ள பக்திபரவசத்தை , தேர்ந்த தமிழ்ச்சுவையாக கொடுத்துள்ளீர்கள். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமை
வாழ்க! வளர்க !! வெல்க!!
கூடல் அழகர் மேல் புனைந்துள்ள அனைத்து பாடல்கள் பக்திச் சுவையும் தமிழ்ச்சுவையும் இணைந்து மிளிர்கின்றன.
வெல்க ! வளர்க!!
Super arumai thambi varthaikal onrum arputham niraiya paadalkal elutha valthukal