×
Tuesday 3rd of December 2024

திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பதிகம்


Thiruvempavai Lyrics in Tamil

திருவெம்பாவை

திருவெம்பாவை என்பது மாணிக்கவாசகரால் சைவ சமயத்தின் முழுமுதற்கடவுளான சிவபெருமானைக் குறித்து எழுதப்பட்ட 20 பாடல்களின் தொகுப்பாகும். இந்த திருவெம்பாவை பாடல்களுடன், திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் பாடல்களையும் இணைத்து மார்கழி மாதத்தில் பாடுவதை சைவர்கள் மரபாக கொண்டுள்ளார்கள். கன்னிப் பெண்கள் மார்கழி மாதத்தில் இருக்கும் பாவை நோன்பின் ஒரு பகுதியாக இந்த பாடல்களைப் பாடுவது உள்ளது.

Thiruvempavai Pasuram 1

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்தியவாழ்த்தொலிபோய்
விதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னேஎன்னே
ஈதே எம்தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 1 Meaning in Tamil

வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவ பெருமான் குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள். பின்னர் தரையில் விழுந்து புரண்டு மூர்ச்சையானாள். ஆனால், நீ உறங்குகிறாயே! பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக!

Thiruvempavai Pasuram 2

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 2 Meaning in Tamil

அருமையான அணிகலன்களை அணிந்த தோழியே! இராப்பகலாக எங்களுடன் அமர்ந்து பேசும் போது ஜோதி வடிவான நம் அண்ணாமலையார் மீது நான் கொண்ட பாசம் அளவிடற்கரியது என்று வீரம் பேசினாய். ஆனால், இப்போது நீராட அழைத்தால் வர மறுத்து மலர் பஞ்சணையில் அயர்ந்து உறங்குகிறாய், என்கிறார்கள் தோழிகள். உறங்குபவள் எழுந்து, தோழியரே! சீச்சி! இது என்ன பேச்சு! ஏதோ கண்ணயர்ந்து விட்டேன் என்பதற்காக இப்படியா கேலி பேசுவது? என்றாள். அவளுக்கு பதிலளித்த தோழியர், கண்களை கூசச்செய்யும் பிரகாசமான திருவடிகளைக் கொண்ட சிவபெருமானை வழிபட தேவர்களே முயற்சிக்கிறார்கள். ஆனால், அவர்களால் முடியவில்லை. நமக்கோ, நம் வீட்டு முன்பே தரிசனம் தர வந்து கொண்டிருக்கிறான். அவன் சிவலோகத்தில் வாழ்பவன், திருச்சிற்றம்பலமாகிய சிதம்பரத்தில் நடனம் புரிபவன். நம்மைத் தேடி வருபவன் மீது நாம் எவ்வளவு தூரம் பாசம் வைக்க வேண்டும், நீயே புரிந்து கொள்வாயாக, என்றனர்.

Thiruvempavai Pasuram 3

முத்தன்ன வெண்ணகையாய் முன்வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென் றள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துள் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மைதீர்த்தாட்கொண்டாற்பொல்லாதோ
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ
சித்தம் அழகியார் பாடாரோ நம்சிவனை
இத்தனையும் வேண்டும் எமக்கேலோ ரெம்பாவாய்

Thiruvempavai Pasuram 3 Meaning in Tamil

முத்துப்பற்கள் தெரிய சிரித்து எங்களை மயக்குபவளே! கடந்த ஆண்டுகளில், நாங்கள் வந்து எழுப்பும் முன்னதாக நீயே தயாராக இருப்பாய். சிவனே என் தலைவன் என்றும், இன்ப வடிவினன் என்றும், இனிமையானவன் என்றும் தித்திக்க தித்திக்க அவன் புகழ் பேசுவாய். ஆனால், இப்போது இவ்வளவு நேரம் எழுப்பியும் எழ மறுக்கிறாய். கதவைத் திற, என்கிறார்கள். தூங்கிக் கொண்டிருந்த தோழி, ஏதோ தெரியாத்தனமாக தூங்கி விட்டேன். அதற்காக, என்னிடம் கடுமையாகப் பேச வேண்டுமா? இறைவனின் மேல் பற்றுடைய பழமையான அடியவர்கள் நீங்கள். உங்களைப் போல் எனக்கு இந்த விரதமிருந்ததில் அனுபவமில்லை. மேலும், பக்திக்கு நான் புதியவள். என் தவறைப் பெரிதுபடுத்துகிறீர்களே! என வருந்திச் சொல்கிறாள். வந்த தோழியர் அவளிடம், அப்படியில்லையடி! இறைவன் மீது நீ வைத்துள்ளது தூய்மையான அன்பென்பதும், தூய்மையான மனம் படைத்தவர்களாலேயே சிவபெருமானை பாட முடியும் என்பதும் எங்களுக்குத் தெரியும். நீ சீக்கிரம் எழ வேண்டும் என்பதாலேயே அவசரப்படுத்துகிறோம், என்றனர்.

Thiruvempavai Pasuram 4

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக்கொ டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக்
கண்ணுக் கினியானைப் பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோ ம் நீயேவந்(து)
எண்ணிக் குறையில் துயிலேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 4 Meaning in Tamil

ஒளிசிந்தும் முத்துக்களைப் போன்ற பற்களுடன் சிரிக்கும் பெண்ணே! இன்னுமா உனக்குப் பொழுது விடியவில்லை? என்ற பெண்களிடம், உறங்கிய பெண், அதெல்லாம் இருக்கட்டும்! பச்சைக் கிளி போல் பேசும் இனிய சொற்களையுடைய எல்லா தோழிகளும் வந்துவிட்டார்களா? என்றாள். எழுப்ப வந்தவர் களோ, அடியே! உன்னை எழுப்புவதற்காக வந்த பெண்கள் எத்தனை பேர் என்பதை இனிமேல் தான் எண்ணவேண்டும். அதன்பின்பு எண் ணிக்கையைச் சொல்கிறோம். நாங்கள் தேவர்களின் மருந்தாகவும், வேதங்களின் பொருளாகவும் இருக்கும் சிவபெருமானைப் பாடி உள்ளம் உருகும் வேளை இது. இந்நேரத்தில் அவர்களை எண்ணிக் கொண்டிருக்க முடியுமா? ஆகவே, நீயே எழுந்து வந்து எத்தனை பேர் இருக்கிறோம் என்பதை எண்ணிப்பார். நீ எதிர்பார்க்கும் அளவுக்கு இங்கே பெண்கள் இல்லை என்றால், மீண்டும் போய் தூங்கு, என்று கேலி செய்தனர்.

Thiruvempavai Pasuram 5

மாலறியா நான்முகனும் காணா மலையினைநாம்
போலறிவோ மென்றுள்ள பொக்கங்க ளேபேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடை திறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான்
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனே சிவனே என்(று)
ஓலமிடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி பரிசேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 5 Meaning in Tamil

நறுமணத்திரவியம் பூசிய கூந்தலையும், பாலும் தேனும் ஊறும் இனிய உதடுகளைக் கொண்டவளுமான பெண்ணே! திருமால் வராகமாகவும், பிரம்மா அன்னமாகவும் உருவெடுத்துச் சென்றும் அவரது உச்சியையும், பாதங்களையும் காண முடியாத பெருமையை உடைய மலை வடிவானவர் நம் அண்ணாமலையார். ஆனால், அவரை நாம் அறிவோம் என நீ சாதாரணமாகப் பேசுகிறாய். நம்மால் மட்டுமல்ல, இவ்வுலகில் உள்ள மற்றவர்களாலும், அவ்வுலகிலுள்ள தேவர்களாலுமே அவனை புரிந்து கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பெருமைக்குரியவனை உணர்ச்சிப்பெருக்குடன் “சிவசிவ” என்று ஓலமிட்டு அழைக்கிறோம். நீயோ, இதை உணராமல் உறக்கத்தில் இருக்கிறாய். முதலில் கதவைத் திற என்று தோழியை எழுப்புகிறார்கள் திருவண்ணாமலைப் பெண்கள்.

Thiruvempavai Pasuram 6

மானேநீ நென்னலை நாளைவந் துங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானேவந் தெம்மைத் தலையளித்தாட் கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 6 Meaning in Tamil

மான் போன்ற நடையை உடையவளே! நேற்று நீ எங்களிடம், உங்களை நானே வந்து அதிகாலையில் எழுப்புவேன் என்றாய். ஆனால், நாங்கள் வந்து உன்னை எழுப்பும்படியாகி விட்டது. உன் சொல் போன திசை எங்கே? மேலும், சொன்னதைச் செய்யவில்லையே என்று கொஞ்சமாவது வெட்கப்பட்டாயா? உனக்கு இன்னும் விடியவில்லையா? வானவர்களும், பூமியிலுள்ளோரும், பிற உலகில் உள்ளவர் களும் அறிய முடியாத தன்மையை உடைய சிவபெருமானின் திருவடிகளைப் புகழ்ந்து பாடி வந்த எங்களுக்கு இன்னும் பதில் சொல்லாமல் இருக்கிறாய். அவனை நினைத்து உடலும் உள்ளமும் உருகாமல் இருப்பது உனக்கு மட்டுமே பொருந்தும். எனவே உடனே எழுந்து நாங்களும் மற்றையோரும் பயன்பெறும் விதத்தில் நம் தலைவனைப் புகழ்ந்து பாடு.

Thiruvempavai Pasuram 7

அன்னே இவையும் சிலவோ பல அமரர்
உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்
தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோம்கேள் வெவ்வேறாயின்னந்துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 7 Meaning in Tamil

தாயினும் மேலான பெண்ணே! உனது சிறப்புத்தன்மைகளில் இந்த தூக்கமும் ஒன்றோ? தேவர்களால் சிந்திப்பதற்கும் அரியவன் என்றும், மிகுந்த புகழுடையவன் என்றும், சிவனுக்குரிய திருநீறு, ருத்ராட்சம் முதலான சின்னங்களை அணிந்தவர்களைக் கண்டாலே “சிவசிவ” என்பாயே! அப்படிப்பட்ட இறைவனை, நாங்கள் தென்னாடுடைய சிவனே போற்றி என சொல்லும்போது, தீயில்பட்ட மெழுகைப் போல் உருகி உணர்ச்சிவசப்படுவாயே! அந்தச்சிவன் எனக்குரியவன்! என் தலைவன்! இனிய அமுதம் போன்றவன் என்றெல்லாம் நாங்கள் புகழ்கிறோம். இதையெல்லாம் கேட்டும், இன்று உன் உறக்கத்துக்கு காரணம் என்ன? பெண்ணே! பெண்களின் நெஞ்சம் இறுகிப்போனதாக இருக்கக்கூடாது. ஆனால், நீயோ நாங்கள் இவ்வளவு தூரம் சொல்லியும் இன்னும் எழாமல் இருக்கிறாய். அந்த தூக்கத்தை நீ என்ன ஒருபரிசாகக் கருதுகிறாயா?

Thiruvempavai Pasuram 8

கோழி சிலம்பச் சிலம்பும் குருகெங்கும்
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்கெங்கும்
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழியீ தென்ன உறக்கமோ வாய்திறவாய்
ஆழியான் அன்புடைமை யாமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழைபங் காளனையே பாடேலோ ரெம்பவாய்.

Thiruvempavai Pasuram 8 Meaning in Tamil

தோழியை எழுப்ப வந்த பெண்கள், அன்புத்தோழியே! கோழி கூவிவிட்டது. பறவைகள் கீச்சிடுகின்றன. சரிகமபதநி என்னும் ஏழு ஸ்வரங்களுடன் வாத்தியங்கள் இசைக்கப்படுகின்றன. நம் அண்ணாமலையார் கோயிலில் வெண் சங்குகள் முழங்குகின்றன. இந்த இனிய வேளையில், உலக இருள் எப்படி நீங்குகிறதோ, அதுபோல் பரஞ்ஜோதியாய் ஒளிவீசும் சிவனைப் பற்றி நாங்கள் பேசுகின்றோம். அவனது பெரும் கருணையை எண்ணி வியக்கின்றோம். அவனது சிறப்புகளை பாடுகின்றோம். ஆனால், நீயோ எதுவும் காதில் விழாமல் தூங்குகிறாய். இந்த உறக்கத்துக்கு சொந்தமானவளே! இன்னும் பேசமாட்டேன் என்கிறாயே! வாழ்க நீ! பாற்கடலில் பள்ளி கொண்டுள்ள திருமாலின் சிவபக்தியைப் பற்றி தெரியுமல்லவா? (அவர் வராக வடிவமெடுத்து சிவனின் திருவடி காணச்சென்றவர்). அப்படிப்பட்ட பெருமையுடைய உலகத்துக்கே தலைவனான சிவனை, ஏழைகளின் தோழனை பாடி மகிழ உடனே புறப்படு.

Thiruvempavai Pasuram 9

முன்னைப் பழம்பொருட்கு முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 9 Meaning in Tamil

கோடி வருடங்களுக்கும் முற்பட்ட பழமையான பொருள் இது என்று சொல்லப்படும் பொருட்களுக்கெல்லாம் பழமையானவனே! இன்னும் லட்சம் ஆண்டுகள் கழித்து இப்படித்தான் இருக்கும் இந்த உலகம்என்று கணிக்கப்படும் புதுமைக்கெல்லாம் புதுமையான சிவனே! உன்னை தலைவனாகக் கொண்ட நாங்கள், உனது அடியார்களுக்கு மட்டுமே பணிவோம். அவர்களுக்கே தொண்டு செய்வோம். உன் மீது பக்தி கொண்டவர்களே எங்களுக்கு கணவராக வேண்டும். அவர்கள் இடும் கட்டளைகளை எங்களுக்கு கிடைத்த பரிசாகக் கருதி, மிகவும் கீழ்ப்படிதலுடன் பணி செய்வோம். இந்த பிரார்த்தனையை மட்டும் நீ ஏற்றுக் கொண்டால், எங்களுக்கு எந்த குறையும் இல்லை என்ற நிலையைப் பெறுவோம்.

Thiruvempavai Pasuram 10

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணுந் துதித்தாலும்
ஓதஉலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 10 Meaning in Tamil

தீயபண்புகள் இல்லாத குலத்தில் உதித்தவர்களும், கோயில் திருப்பணியையே சொந்தமாக்கிக் கொண்டவர்களுமான பெண்களே! நம் தலைவனாகிய சிவபெருமானின் சொல்வதற்கரிய பெருமையுடைய திருப்பாதங்கள் ஏழு பாதாள லோகங்களையும் கடந்து கீழே இருக்கிறது. பல்வேறு மலர்களை அணியும் திருமுடியானது வானத்தின் எல்லைகளைக் கடந்து எல்லாப் பொருட்களுக்கும் எல்லையாக இருக்கிறது. சக்தியை மேனியில் ஒரு பாகமாகக் கொண்டதால் அவன் ஒருவனல்ல என்பது நிஜமாகிறது. வேதங்களும், விண்ணவரும், பூலோகத்தினரும் ஒன்று சேர்ந்து துதித்தாலும் அவன் புகழைப் பாடி முடிக்க முடியாது. யோகிகளுக்கும் ஞானிகளுக்கும் அவன் நண்பன். ஏராளமான பக்தர்களைப் பெற்றவன். அவனுக்கு ஊர் எது? அவனது பெயர் என்ன? யார் அவனது உறவினர்கள்? யார் அவனது பக்கத்து வீட்டுக்காரர்கள்? எந்தப் பொருளால் அவனைப் பாடி முடிக்க முடியும்? சொல்லத் தெரியவில்லையே!

Thiruvempavai Pasuram 11

மொய்யார் தடம்பொய்கை புக்கு முகேரென்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம்காண் ஆரழல்போல்
செய்யாவெண் ணீறாடி செல்வா சிறுமருங்குல்
மையார் தடங்கண் மடந்தை மணவாளா
ஐயாநீ ஆட்கொண் டருளும் விளையாட்டின்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 11 Meaning in Tamil

சிவபெருமானே! உன் அடியவர்களான நாங்கள் வண்டுகள் மொய்க்கும் மலர்களைக் கொண்ட குளத்தில் “முகேர்” என சப்தம் எழுப்பி குதித்து, தண்ணீரைக் குடைந்து நீந்தியபடியே உன் திருவடிகளை எண்ணிப் பாடினோம். வழிவழியாக இந்த பாவை நோன்பை நிறைவேற்றி வருவதை நீ அறிவாய். சிவந்த நெருப்பைப் போன்றவனே! உடலெங்கும் திருநீறு அணிந்தவனே! செல்வத்தின் அதிபதியே! சிறிய இடையையும், மையிட்ட அழகிய கண்களையும் உடைய பார்வதிதேவியின் மணாளனே! ஐயனே! நீ இந்த உயிர்களை ஆட்கொண்டதும் அவை என்னவெல்லாம் நன்மையடையுமோ, அவை அனைத்தையும் அடைந்து விட்ட உணர்வு உன்னைப் பாடினாலே எங்களுக்கு கிடைத்து விடுகிறது! இந்த பேரின்பநிலை மறைந்து விடாமல் என்றும் நிலைத்திருக்க அருள்செய்வாயாக!

Thiruvempavai Pasuram 12

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன் இவ் வானும் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீ ராடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 12 Meaning in Tamil

தோழியரே! இப்போது வாய்த்துள்ள பிறவியாகிய துன்பம் இனிமேலும் வராமல் தடுக்கும் கங்கையைத் தலையில் கொண்டவனும், சிறந்த திருத்தலமான சிதம்பரத்தில், கையில் அக்னியுடன் நடனமாடும் கலைஞனும், வானத்தையும், பூலோகத்தையும், பிற உலகங்களையும் காத்தும், படைத்தும், அழித்தும் விளையாடுபவனுமான தன்மைகளைக் கொண்டவர் நம் சிவபெருமான். அவரை, நம் கரங்களிலுள்ள வளையல்கள் ஒலியெழுப்பவும், இடுப்பிலுள்ள ஆபரணங்கள் பெருஒலி எழுப்பவும், பூக்களையுடைய பொய்கையில் நீந்தி மகிழ்ந்து, “சிவாயநம” என்னும் மந்திரம் சொல்லி, அவனது பொற்பாதத்தை வணங்கி மகிழ்வோம்.

Thiruvempavai Pasuram 13

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 13 Meaning in Tamil

கரிய நிற குவளை மலர்கள் குளத்தின் நடுவிலே உள்ளன. அருகில் சிவந்த நிறத்தில் தாமரை மலர்கள் முளைத்துக் கிடக்கின்றன. நீர் காக்கைகள் நீரில் மிதக்கின்றன. இந்தக் குளத்தில் தங்கள் அழுக்கைக் களைய மக்கள் வருகிறார்கள். அவர்கள் “நமசிவாய” என சொல்லி சப்தம் எழுப்புகிறார்கள். இந்தக் காரணங்களால், இந்தக் குளம் எங்கள் சிவனையும், பார்வதியையும் போல் தோற்றமளிக்கிறது. தாமரை மலர்கள் நிறைந்த இந்த தெய்வீக குளத்தில், நம் சங்கு வளையல்கள் சலசலக்க, கால் சிலம்புகள் கலகலவென ஒலியெழுப்ப, மார்புகள் விம்ம, பாய்ந்து நடுப்பகுதிக்கு சென்று நீராடுவோம்.

Thiruvempavai Pasuram 14

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாமாடச்
சீதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடிச்
சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்
பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வளைதன்
பாதத் திறம்பாடி ஆடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 14 Meaning in Tamil

ஆண்கள் அணிந்துள்ள காதணிகள் தண்ணீரில் ஆட, அவர்களின் தங்கநகைகள் ஆட, பெண்களின் கூந்தல் ஆட, அக்கூந்தலில் மலர்கள் அணிந்திருந்ததால் ஏற்பட்ட வாசனை கருதி அதை முகர வண்டுகள் ஆட, குளிர்ந்த நீரில் ஆடுங்கள். அவ்வாறு நீராடும் போது சிற்றம் பலத்தில் நடனமிடும் சிவபெருமானின் புகழ் பாடுங்கள். வேதத்தின் பொருளையும், வேதத்தின் பொருளாக விளங்குகின்ற சிவனின் பெயரையும் சொல்லி நீராடுங்கள். ஜோதி வடிவாய் திருவண்ணாமலையிலே காட்சி தரும் அந்த சிவனின் மாபெரும் விருத்தாத்தங்களையெல்லாம் சொல்லுங்கள். அவனது மார்பில் தவழும் கொன்றை மாலையின் மகிமை பற்றி பேசுங்கள். முதலும் முடிவும் இல்லாத அந்த இறைவனின் புகழைப் பாடுங்கள். பந்த பாசங்களில் இருந்து நம்மைப் பிரிக்கும் வளையல்கள் அணிந்த தாயுமானவாய் விளங் கும் அந்த சிவனின் பாதமலர்களைப் பாடி நீராடுங்கள்.

Thiruvempavai Pasuram 15

ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான்
சீரொருகால் வாயோவாள் சித்தங் களிகூர
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப்
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற் கிங்ஙனே பித்தொருவ ராமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர்தாள்
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 15 Meaning in Tamil

அழகிய மார்புகச்சையும், ஆபரணங்களும் அணிந்த பெண்களே! நம் தோழி “எம்பெருமானே” என்று சிவனை ஒவ்வொரு நேரமும் அழைப்பாள். அவரது சிறப்புகளை நிறுத்தாமல் பேசுவாள். மனம் மகிழ இவ்வாறு அவள் அவரது சிறப்புகளைப் பேசுவதால் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக பெருகும். அந்த பக்திப் பரவச உலகில் இருந்து அவளால் இந்த பூமிக்கு மீண்டும் வரவே இயலாத நிலை ஏற்படும். அவள் விண்ணில் இருந்து எந்த தேவன் வந்தாலும் வணங்கமாட்டாள். சிவபெருமான் மட்டுமே தனது தெய்வம் என்ற நிலையில் பித்துப்பிடித்து நிற்பாள். அவளைப் போலவே நம்மையும் ஆட்கொள்ளக் காத்திருக்கும் வித்தகனான சிவனின் தாள் பணிந்து பாடுவோம். பூக்கள் நிறைந்த கலப்பை வடிவிலான குளத்தில் பாய்ந்து நீராடுவோம்.

Thiruvempavai Pasuram 16

முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துடையாள்
என்னத் திகழ்ந்தெம்மை ஆளுடையா ளிட்டிடையின்
மின்னிப் பொலிந்தெம் பிராட்டி திருவடிமேல்
பொன்னஞ் சிலம்பிற் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னிற் பிரிவிலா எங்கோமான் அன்பர்க்கு
முன்னி அவள்நமக்கு முன் சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 16 Meaning in Tamil

இந்தக் கடல் நீர் முழுவதையும் முன்னதாகவே குடித்து விட்டு மேலே சென்ற மேகங்கள் எங்கள் சிவனின் தேவியான பார்வதிதேவியைப் போல் கருத்திருக்கின்றன. எங்களை ஆளும் அந்த ஈஸ்வரியின் சிற்றிடை போல் மின்னல் வெட்டுகிறது. எங்கள் தலைவியான அவளது திருவடியில் அணிந்துள்ள பொற்சிலம்புகள் எழுப்பும் ஒலியைப் போல இடி முழங்குகிறது. அவளது புருவம் போல் வானவில் முளைக்கிறது. நம்மை ஆட்கொண்டவளும், எங்கள் இறைவனாகிய சிவனை விட்டு பிரியாதவளுமான அந்த தேவி, தன் கணவரை வணங்கும் பக்தர்களுக்கு சுரக்கின்ற அருளைப் போல. மழையே நீ விடாமல் பொழிவாயாக.

Thiruvempavai Pasuram 17

செங்க ணவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாததோர் இன்பம்நம் பாலதாக்
கொங்குண் கருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட் காரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 17 Meaning in Tamil

தேன்சிந்தும் மலர்களைச் சூடிய கருங்கூந்தலை உடைய பெண்களே! செந்தாமரைக் கண்ணனான நாராயணன், பிரம்மா, பிற தேவர்கள் யாரும் தராத இன்பத்தை அள்ளி வழங்க நம் தலைவனாகிய சிவபெருமான், இதோ! வீடுகள் தோறும் எழுந்தருளுகிறான். அவனது தாமரை போன்ற திருவடிகளால் நம்மை ஆட்கொள்ள சேவகன் போல் இறங்கி வருகிறான். அழகிய கண்களை உடையவனும், அடியவர்களுக்கு அமுதமானவனும், நமது தலைவனுமான அந்தச் சிவனை வணங்கி நலம் பல பெறும் பொருட்டு, தாமரை மலர்கள் மிதக்கும் இந்த பொய்கையில் பாய்ந்து நீராடி அவன் தரிசனம் காண தயாராவோம்.

Thiruvempavai Pasuram 18

அண்ணா மலையான் அடிக்கமலஞ் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகைவீ றற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமழுங்கித் தாரகைகள் தாமகலப்
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகிக்
கண்ணா ரமுதமுமாய் நின்றான் கழல்பாடிப்
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந் தாடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 18 Meaning in Tamil

சூரியனின் ஒளிக்கீற்று வெளிப்பட்டதும் விண்ணிலுள்ள நட்சத்திரங்கள் எல்லாம் எப்படி மறைந்தனவோ, அப்படி அண்ணாமலையாரின் திருவடியைப் பணிந்ததும், தேவர்களின் மணிமுடியிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. பெண்ணாகவும், ஆணாகவும், அலியாகவும் என முப்பிரிவாகவும் திகழும் அவர் வானமாகவும், பூமியாகவும், இவையல்லாத பிற உலகங்களாகவும் திகழ்கிறார். கண்ணுக்கு இனிய அமுதம் போல் தோன்றும் அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் புகழ்ந்து பாடி. பூக்கள் மிதக்கும் இந்தக் குளத்தில் பாய்ந்து நீராடுங்கள்.

Thiruvempavai Pasuram 19

உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலமென்(று)
அங்கப் பழஞ்சொல் புதுக்கும்எம் அச்சத்தால்
எங்கள் பெருமான் உனக்கொன் றுரைப்போம் கேள்
எம்கொங்கை நின்னன்ப ரல்லார்தோள் சேரற்க
எங்கை உனக்கல்லா தெப்பணியும் செய்யற்க
கங்குல் பகலெங்கண் மற்றொன்றும் காணற்க
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல்
எங்கெழிலென் ஞாயி றெமக்கேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 19 Meaning in Tamil

உன்னிடம் கொடுக்கப்படும் என் மகள் உனக்கு மட்டுமே சொந்தமானவள் என்று ஒரு தந்தை தன் மகளை ஒருவனிடம் திருமணம் செய்து கொடுக்கும்போது சொல்லும் பழமொழி இருக்கிறது. அதன் காரணமாக, எங்களைத் திருமணம் செய்வோர் எப்படி இருக்க வேண்டும் என்று உன்னிடம் கேட்கும் உரிமையுடன் விண்ணப்பிக்கிறோம். எங்களைத் தழுவுவோர் உன் பக்தர்களாக மட்டுமே இருக்க வேண்டும். எங்கள் கைகள் உனக்கு மட்டுமே பணி செய்வதற்கு அவர்கள் அனுமதிப்பவர்களாய் இருக்க வேண்டும். எங்கள் பார்வையில் உனக்கு பணி செய்பவர்கள் மட்டுமே தெரிய வேண்டும். பிற தீமைகள் எதுவும் பார்வையில் படவே கூடாது. இப்படி ஒரு பரிசை எம்பெருமானான நீ எங்களுக்கு தருவாயானால், சூரியன் எங்கே உதித்தால் எங்களுக்கென்ன?

Thiruvempavai Pasuram 20

போற்றி அருளுகநின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுகநின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றிஎல் லாஉயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றிஎல் லாஉயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றிமால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீ ராடேலோ ரெம்பாவாய்.

Thiruvempavai Pasuram 20 Meaning in Tamil

சிவபெருமானே! எல்லாவற்றுக்கும் முதலாவதான உன் பாதமலர்களை வணங்குகிறோம். எல்லாவற்றுக்கும் முடிவாயுள்ள உன் மென்மையான திருவடிகளை பணிகின்றோம். எல்லா உயிர்களையும் படைக்கின்ற உன் பொற் பாதங்களை சரணடைகின்றோம். எல்லா உயிர்களுக்கும் வாழும் காலத்தில் இன்பமான வாழ்வு தரும் மலரடிகளை பிரார்த்திக்கிறோம். உயிர்களை அழித்து இறுதிக்காலத்தை தருகின்ற இணையற்ற காலடிகளைப் போற்றுகின்றோம். திருமாலாலும், பிரம்மாவாலும் காண முடியாத தாமரை பாதங்களைக் காண்பதில் பெருமிதமடைகின்றோம். எங்களுக்கு பிறப்பற்ற நிலை தரும் பொன் போன்ற திருவடிகளை பற்றுகின்றோம். இவ்வாறு உன்னோடு ஐக்கியமாகி, உன் நினைவுகளுடன் நீர்நிலைகளில் நீராடி மகிழ்கிறோம்.


One thought on "திருவெம்பாவை திருப்பள்ளியெழுச்சிப் பதிகம்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 2, 2024
உங்கள் பிறந்த நட்சத்திரத்திற்கான தேவார பாடல்கள்
  • அக்டோபர் 23, 2024
சங்கட மோசன் ஹனுமான் அஷ்டக்: ஒரு முழுமையான விளக்கம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை