×
Tuesday 3rd of December 2024

கோவில்களில் சங்கு ஊதுவதும் மணி அடிப்ப‍தும் ஏன்?


Why do we Blow Shankh in Temple in Tamil?

கோவில்களில் சங்கு ஊதுவது ஏன்?

சங்கு உருவானதால் சங்கொலி அதர்மத்தின் அழிவையும், தர்மத்தின் வெற்றியையும் காட்டுகிறது. சங்கு பிறந்த கதைக்கேற்ப சங்கை நம் காதருகில் வைத்துக் கேட்டால் கடல் அலைகளின் ஓசையை நம்மால் கேட்க முடியும்.

வேதங்களின் பொருளான ஓம்கார மந்திரத்தைத் தருவதாலும், தர்மத்தை நிலைநாட் டும் பொருளைத் தருவதாலும் பூஜையறையில் இறைவன் முன்பு வைத்து வணங்கப்படும் அளவு சங்கிற்கு சிறப்பு உண்டு. மங்கலகரமான பூஜை நேரங்களில் அமங்கலமான வார்த்தைகளோ, பேச்சுக்களோ பக்தர்களின் காதில் விழுந்து பக்தி மனோபாவத்தைக் குறைத்து விடாதிருக்கவும் சங்கு ஊதுவது உதவுகிறது.

மேலும் சங்கு ஊதுவது ஆன்மிக ரீதியாக அல்லாமல், ஆரோக்கிய ரீதியாகவும் உதவுகிறது. சங்கு ஊதும் போது நாதமானது மூலாதாரத்தில் இருந்து எழுகிறது. அதனால் சங்கு ஊதுவதன் மூலம் மூலாதார சக்ரா நன்றாக செயலாக்கம் பெறுகிறது.

மேலும் சங்கு ஊதுவதினால் மூச்சு ஆழப்பட்டு, நுரையீரல் செயல்படுவதும் சீராகிறது. சங்கிற்கு உடலைப் பாதிக்கும் நுண்கிருமிகளை அழிக்கும் தன்மை உள்ளது என்று நம் முன்னோர் நம்பினார்கள். அதனால் தான் தீர்த்தம் சங்கில் தரப்படுவது விசேஷமாகக் கருதப்பட்டது. குழந்தைகளுக்கும் அக்காலத்தில் மருந்தையும், பாலையும் சங்கில் ஊற்றித் தரும் வழக்கம் நம் வீடுகளில் இருந்தது.

Why do we Ring Bell in Temple in Tamil?

கோவில்களில் மணி அடிப்ப‍து ஏன்?

கோவில்களிலும், வீடுகளிலும் பூஜை செய்யும் போது மணி அடிப்பதும் கூட சங்கு ஊதுவதைப் போன்றே மங்கல ஒலியாகக் கருதப்படுகிறது. மணி அடிக்கும் போதும் ஓம்கார ஒலி ஒலிக்கிறது. பூஜை நேரங்களில் தெய்வீகசூழ் நிலைக்குப் பொருந்தாத ஓசைகளை மூழ்கடித்து இறைவனிடம் மனம்லயிக்க மணி அடிப்பதும் உதவுகிறது.

கோவில்களில் பெரிய பெரிய மணிகள் தொங்க விடப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை அடிப்பதில் பெரியோர் முதல் சிறியோர் வரை ஆர்வம் காட்டுவதுண்டு. அந்த மணிகளை அடிப்பதன் காரணம் குறித்து சிலர் தான்தோன்றித்தனமாக ஏதேதோ சொல்வது உண்டு. இறைவனை உறக்கத்தில் இருந்து எழுப்புவதற்காக மணி அடிப்பதாகவும், தங்கள் வருகையை இறைவனுக்குத் தெரியப்படுத்துவதற்காக மணி அடிப்பதாகவும் சிலர் அறியாமையால் சொல்வதுண்டு. எழுப்பி தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இறைவனுக்கு இல்லை. மணி அடிப்பது அறியாமை உறக்கத்தில் ஆழ்ந்து கிடக்கிற நம்மை அதில் இருந்து தட்டி எழுப்பத்தான். அந்த ஓங்கார ஒலியைக் கேட்டவுடன் இறையுணர்வு எழும்பி நம் மனதினை ஒருநிலைப்படுத்த நாம் செய்யும் ஆயத்தம் தான் மணியை அடிப்பதன் உண்மைப் பொருள்.

பண்டைய காலங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு பிரதான கோவில் இருக்கும். இறைவனுக்குச் செய்யப்படும் பூஜைகளின் போது கோவில்களில் இருக்கும் பெரிய மணிகள் அடிக்கப்படும், சங்கு ஊதப்படும். அந்த ஒலி அந்தக் கிராமம் முழுவதும் கேட்கும். பூஜையில் கலந்து கொள்ள ஆலயத்திற்கு நேரில் செல்லும் சூழ்நிலை எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. வேலை உள்ளவர்கள், உடல் நலம் குன்றியவர்கள் போன்றவர்கள் பூஜையில் பங்கேற்க முடியாது.

கோவில் மணியின் பலத்த ஒலியும், சங்கொலியும் கேட்கும் போது வேலை செய்பவர்கள் தங்கள் வேலையை அப்படியே நிறுத்தி விட்டு தாங்கள் இருக்கும் இடத்திலேயே இறைவனை கணநேரம் தொழுவார்கள். அதேபோல் உடல் நலம் குன்றியவர்களும் அந்த நேரத்தில் வீட்டில் இருந்தபடியே கணநேரம் இறைவனை வணங்குவார்கள். இப்படி மானசீகமாக இருக்கும் இடத்திலேயே இறைவனைத் தொழும் மங்கலமான சூழ்நிலையை மணி ஒலியும், சங்கொலியும் ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஊருக்கே கேட்கும் வண்ணம் பெரிய பெரிய ஆலய மணிகளை அடிப்பதன் உள்ளார்ந்த இந்த அர்த்தம் மிக உன்னதமானது.

கிராமமானாலும் நகரமானாலும் நீங்கள் இப்படிக் கோவில் மணியோசையும், சங்கொலியும் கேட்க நேர்ந்தால் மேலே சொன்ன காரணத்தை நினைவு கொள்ளுங்கள். இறைவனை நினைக்க ஒரு நல்ல சந்தர்ப்பமாக அதை எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இருக்கும் இடமே கோவில். அந்த மணியோசையும், சங்கொலியும் உங்களுக்காகவே ஒலிக்கின்றன. எல்லாவற்றையும் ஒரு கணம் ஒதுக்கி வைத்து விட்டு எல்லாம்வல்ல இறைவனை ஒரு கணம் மானசீகமாக வணங்குங்கள்.

எத்தனையோ விதங்களில் நேரத்தை நாம் வீணாக்குகிறோம். அப்படி இருக்கையில் அந்த ஒரு கணத்தில் மனதை இறைவனிடம் திருப்புவதால் நம் நேரம் பெரிதாக வீணாகிவிடப் போவதில்லை. மாறாக கோவிலுக்குச் சென்று இறைவனை வணங்கிப் பெறும் பெரும்பயனை நாம் அந்தக் கணத்தில் பெற்று விடுகிறோம் என்பதை நினைவில் வையுங்கள்.

 

Also, read



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 20, 2024
அதர்வ வேதத்தில் நோய் மற்றும் சிகிச்சை பரிந்துரைகள்
  • செப்டம்பர் 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • ஆகஸ்ட் 14, 2024
பக்தி