- அக்டோபர் 20, 2024
உள்ளடக்கம்
🛕 கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அந்தக் கோடி புண்ணியத்தை பெற்றவர்கள், அதே கோபுரங்களில் உச்சியில் கோரை பற்களும், கொடூரமான கோர முகமும் கொண்ட ஒரு சிற்பத்தைக் கவனித்திருப்பார்கள். அவர்களில் பிரமாண்டமாகவும், கம்பீரமாகவும், மிகுந்த அழகுடையதுமான கோபுரங்களில் இப்படி ஒரு கோர முகமா? என சிந்தித்தவர்களும் உண்டு சிந்திக்காதவர்களும் உண்டு.
🛕 கோபுரங்களின் அமைப்பு “ஒன்றே பலவானவை” என்ற மிக உயர்ந்த உண்மையை உணர்த்துவதாகும். அதில் பரலோகம், தேவலோகம், பூலோகம், வெளிலோகம் என மேலிருந்து கீழாகப் படிப்படியாக, அந்தந்த லோகங்களில் வாழ்வோரை சுதைச் சிற்பங்களாக வடிவமைத்து காட்டப்பட்டிருக்கும். அவற்றில் உலகத்தின் இயக்கம் தங்கச்சங்கிலி போல் தொடர இனவிருத்தி மிகவும் அவசியம் என்பதைக் குறிக்கும் சிற்பங்களும் உள்ளடங்கும். அச்சிற்பங்களை ஞானக் கண்ணோடு நோக்கினால் மட்டுமே அதில் உள்ளடங்கியுள்ள வாழ்வியல் உண்மைகளை அறியமுடியும் என்றனர் ஞானிகள்.
🛕 கோபுரத்தின் கலசங்கள் உள்ள சிகரத்தின் இருபுறமும் கோரை பற்களும்; கொடூரமான கோர முகம் வடிவமைக்கப்பட்டிருக்கும். அந்த கோர முகமே கீர்த்தி முகமாகும். அந்த கீர்த்தி முகத்திற்கு ஒரு வரலாறு உண்டு. அந்த வரலாற்றைப் பற்றி ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதுவானது –
🛕 முன்னொரு காலத்தில் சலேந்திரன் என்னும் அசுரன் உலகில் உள்ள அழகான பெண்களை அடைய விரும்பி செயல்பட்டான். ஒரு கட்டத்தில் உமையம்மையை அடைய விரும்பி இராகுவை ஏவினான். இதனை அறிந்த சிவபெருமான், கோரைப் பற்களுடைய மனிதமுகமும், காளையின் கொம்புகளும், யானையின் துதிக்கையும், புலியின் உடலும், தேள் கொடுக்குடைய வாலும் கொண்ட அதிபயங்கரமான ஒரு புருடாமிருகத்தைப் படைத்தார்.
🛕 இராகு வருவதைக் கண்ட அந்த புருடாமிருகம் அதனை பிடித்து தின்பதற்காக ஓடி வந்தது. தன்னை பிடித்து தின்பதற்காக ஓடி வரும் புருடாமிருகத்தின் அதிபயங்கரமான தோற்றத்தைக் கண்டு பயந்த இராகு ஓடி ஒளிந்துகொள்ள முயற்சி செய்ததது. ஒளிந்து தப்பித்துக் கொள்ள தகுந்த இடம் ஏதும் இல்லாமையால் தன்னை காத்தருளும் படி வேண்டி சிவபெருமானிடம் சரணடைந்தது. அருளும் குணமுடைய சிவபெருமான் புருடாமிருகத்தை தடுத்தி நிறுத்தி “இராகுவை விட்டு விடு” எனப் பணித்தார்.
🛕 இறைவன் இட்ட கட்டளையை ஏற்றுக்கொண்ட புருடாமிருகம் “இனி நான் யாரை உண்ணுவேன்” என இறைவனிடம் கேட்டது. அதற்கு இறைவன் “உன்னையே நீ உண்பாயாக” எனப் பணித்தார். அதன்படி தன் உள்ளங்கால் முதல் கழுத்துவரை உள்ள உடல் பாகங்கள் அனைத்தையும் உண்டு தீர்த்தது. இனி உண்பதற்கு ஏதும் இல்லாததை உணர்ந்த புருடாமிருகம் ஏக்கத்துடன் இறைவனை நோக்கியது.
🛕 தான் இட்ட கட்டளை ஏற்று செயல்பட்ட புருடாமிருகத்தை புன்முறுவலோடு நோக்கி இனி “நீ எதையும் உண்ண வேண்டாம்” எனப் பணித்தார். உன் பக்தியின் பெருமையை அனைவரும் அறியும்படியாக முதலில் உன் கீர்த்தி முகத்தை வணங்கிய பிறகே எம்மை அனைவரும் வழிபடுவர் என வரம் அளித்தார். இறைவனால் பெயரிடப்பட்ட “கீர்த்தி முகம்” (Face of Glory) என்பதே தற்போது “நாசித்தலை” என்று அழைக்கப்படுகிறது. “பக்தியின் சிறப்பை உணர்த்தும்” இதுவே திருக்கோவில் கோபுரங்களின் உச்சியின் இருபுறங்களில் காட்சித்தரும் கீர்த்தி முகத்தின்; வரலாறு ஆகும்.
🛕 பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அதிகப் பலமுடைய பீமனுக்கு புத்தி புகட்டி அவரின் அகம்பாவத்தை அகற்ற எண்ணிய மகாவிஷ்ணு சிவபெருமானிடம் முறையிட்டதாகவும், அவரும் ஒரு புருடாமிருகத்தை படைத்ததாகவும், அம்மிருகம் பீமனை ஓட ஓட விரட்டியதாகவும், அகம்பாவம் அகன்ற பீமன் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டதாகவும் மற்றொரு வரலாறு கூறுகிறது. இந்த வரலாறு தற்காலத்தில் குறிப்பாகத் தென்மாவட்டங்களில் சிவராத்திரி தினத்தன்று “ஸ்தல ஓட்டம்” என்ற பெயரில் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது.
🛕 மேலும் கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் புருடாமிருகத்தை “மேன்டிகோர்” (மனிதர்களை உண்ணும் மிருகம்) என வணங்கி வழிபட்டதாக 2600 ஆண்டுகளுக்கு முன் சட்டிசியஸ் எழுதிய நூல் கூறுகிறது.
🛕 7500 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தில் சிந்து சமவெளியில் வாழ்ந்த பழந்தமிழர்களின் வாழ்வியல் தத்துவங்களை கூறும் முத்திரைகளில் அந்த “புருடாமிருத்தின் முழுமையான உருவம்” பொறிக்கப்பட்டுள்ளது ஒரு சிறப்புச் செய்தி என திருச்சிராப்பள்ளி மாநகரை சேர்ந்த தொன்மைக் குறியீட்டாய்வாளர் தி.லெ.சுபாஸ் சந்திர போஸ் (போஸ் ஐயா) குறிப்பிட்டுள்ளார்.
Our Sincere Thanks to: 🙏 T.L.Subash Chandira Bose 🙏