×
Sunday 1st of December 2024

ஓம் என்றால் என்ன?


What is Om in Tamil?

ஓம் என்றால் என்ன?

ஓம் என்பது கடவுளின் பெயர் என்றும், பிரணவ மந்திரம் என்றும் கூறப்படுகிறது. இறைவனின் எல்லா நாமங்களையும், குணங்களையும், அழிவற்ற, நித்தியமான, தூய்மையான, மாறுதலற்ற, எல்லையற்ற அறிவையும், அளவற்ற பேராற்றலையும் தன்னுள் ஆழ்ந்து, அகன்று பொதிந்து வைத்துள்ள ஒரு பெயராகும்.

மனிதனுக்கும் மற்ற பொருட்களுக்கும் இடப்படும் பெயர்கள் எல்லாம் வேதத்திலிருந்து எடுத்தே இடப்பட்டன. அதாவது அந்த பெயர்கள் அவர்களுக்கோ, மற்ற பொருட்களுக்கோ அதன் தன்மையை வெளிப்படுத்துமாறு சூடப்பட்டன. ஆனால் மனிதர்களுக்கு சூட்டப்படும் பெயர்கள் சில சமயம் அவர்களுக்கு பொருந்தாமல் போய்விடுவதுண்டு. உதாரணமாக, வீரன் என்ற பெயரை வைத்துக் கொண்டு அதற்கு பொருத்தமில்லாமல் கோழையாக இருப்பான். அதே போல் இலட்சுமி என்ற பெயர் கொண்டவள் பிச்சைக்காரியாக இருப்பாள். சரஸ்வதி என்ற பெயர் வைத்துக் கொண்டு படிப்பறிவில்லாதவளாக இருப்பாள். ஆனால் இறைவனின்  ஓம்  என்ற நாமமும் அதன் முடிவற்ற பொருளும் அந்த ஒப்பற்ற ஓர் இறைவனுக்கே முழுமுதலாய் பொருந்தியிருக்கிறது.

மனிதன் பிறக்கும் போது நாமம் இன்றி பிறக்கிறான். பிறந்த சில நாட்கள் கழித்து அவனுக்கு, பெயர் சூட்டும் விழா எடுத்து பெயர் இடப்படுகிறான். பின்பு அவன் பெற்றோர், உறவினர் மற்றும் இந்த சமூகத்தார் அவனை அந்த பெயரால் அழைக்கின்றனர். மேலும் அவன் பெற்றோர் இட்ட பெயரைத் தவிர உறவுமுறை பெயர்களாலும் அவன் அழைக்கப்படுகிறான். எடுத்துக்காட்டாக, அவனுக்கு திருமணம் ஆகியதும் கணவன் என்ற நாமமும், குழந்தை பிறந்தவுடன் அப்பா என்ற நாமமும், தன்னுடைய தாய் தந்தைக்கு மகன் என்ற நாமமும், தந்தையின் தந்தைக்கு பேரன் என்ற நாமமும், இவனுடைய மகனின்/மகளின்குழந்தைக்கு தாத்தா என்ற நாமமும் உறவுமுறைகளால் ஏற்படுகின்றன. இது தவிர, சில குணங்களையோ, குற்றங்களையோ குறிக்க சில பட்டப் பெயர்களும் அவனுக்கு சமுதாயத்தால் வாய்க்கின்றன.

உதாரணத்திற்கு இராமனையும், ஹனுமானையும், கிருஷ்ணனையும் நாம் பல பெயர்களால் அழைக்கிறோம்.காரணம் அவர்களின் பலம், வீரம், தீரம், சூர பராக்கிரம செயல்களைப் பாராட்டி. அதே போல் இறைவனையும் நாம் சிவன், விஷ்ணு, ருத்ரன், சரஸ்வதி, சனி, குரு, இலட்சுமி, இந்திரன், மித்ரன், வருணன், யமன், வாயு, அக்னி என்று பல பெயர்களால் அழைக்கிறோம். மேற்கூறிய நாமங்கள் யாவும் இறைவனின் குணங்களையோ, தத்துவங்களையே குறிப்பனவே அல்லாமல் உருவங்களை அல்ல. மேலும் மற்ற எல்லா பெயர்களும் இறைவனின் நிஜ நாமமான ஓம் என்பதிலிருந்தே வெளிவந்தன. ஓம் இறைவனின் மிக முக்கியமான, தன்னியற்கையான நாமம். மற்ற நாமங்களெல்லாம் குணவாகுப் பெயர்களே!

ஓம் எனும் ஓசை பரமாத்மாவை தியானிக்க உதவுகிறது. வேதம், உபநிஷத், பகவத் கீதை, இராமாயணம், மஹாபாரதம், ஸ்மிருதி போன்ற நூல்கள் இறைவனை தியானிக்க  ஓம் என்ற பிரணவ நாமத்தை  உச்சரிக்க சொல்லியிருக்கிறது. வால்மீகி மூல இராமாயணத்தில் இராமபிரான் காலையில் எழுந்து ஓங்காரத்தை உபாசனை செய்தார் என்று சொல்லியிருக்க, நாமோ வெறும் இராம நாமம் சொல்வது இராமபிரான்செய்ததற்கு எதிராக செய்வதாகும்.

முன்பு எல்லா ரிஷி, முனிகளும் ஓம் என்று சொல்லிதான் நூல்களை ஆரம்பித்தனர். பௌராணிகர்களும் தங்கள் இஷ்ட தெய்வத்தை அழைக்கும் போதும் “ஓம் நம: சிவாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் பகவதயே நம:, ஓம் கணேசாய நம:, ஓம் சரவண பவ” என்று தான் ஆரம்பிக்கின்றனர். மேலும் தந்த்ர நூல்களும்  ஓம் ஸ்ரீம், ஹ்ரீம், க்லீம்  என்றே தொடங்குகின்றன. மேலும் பௌராணிகர்கள் ஓங்கார யந்திரம் கூட செய்கிறார்கள். ஆனால் நாமோ இன்று “ஹரி ஓம்” என்று சொல்லி இறைவனின் முக்கிய முதல் நாமத்தை பின்னுக்குத் தள்ளி “ஹரி” என்று முதலில் சொல்கிறோம். இனிமேலாவது நாம்  ஓம் ஹரிஅல்லது “ஓம்”  என்று உச்சரிக்கத் தொடங்குவோமாக.

Om Mantra Tamil

இனி ஓங்காரத்தைப் பற்றி மற்ற நூல்களின் கருத்துகளைப் பார்ப்போம்.  அதர்வம் 14-3-6:  ”ஓங்காரம் இசைக்கவும், உபாசிக்கவும், பற்றக்கூடியதும், இலயிக்கக் கூடியதும் என கூறுகிறது.” பக்தி செய்ய எல்லாவற்றையும் விட அழகிய சாதனம் ஓங்காரமாகும்.

 கோபத பிராஹ்மணத்தில் கூறப்படுகிறது  – “ஆத்மபேஷஜ்யம் ஆத்ம கைவல்யம் ஓங்காரஹ:” அதாவது ஓங்காரமானது ஆத்மாவை சிகிச்சை செய்வதும், ஆத்மாவிற்கு முக்திக்கான வழிகாட்டுவதுமாகும் என்று. மேலும் “அம்ருதம் வை ப்ரணவ:” என்கிறது கோபதம். அதாவது ஓம் அது அம்ருதம் – அமுதமாகும் என்று.

 சதபத பிராஹ்மணத்தில் யாக்ஞ்யவல்கியர் கூறுகிறார் :- ஓங்காரம் மங்களமானது, பவித்ரமானது, தர்ம காரிய ரூபமான செயல்களின் மூலம் எல்லா விருப்பங்களையும் சித்திக்க வைப்பது என்று புகழ்கிறார்.

 யோக தர்சனத்தில்  “தஸ்ய வாசக ப்ரணவ:” என்று கூறப்பட்டுள்ளது. அதாவது அவனுடைய நாமம் பிரணவம் என்று பதஞ்சலி முனிவர் கூறுகிறார்.

 முண்டகோபனிஷத் கூறுகிறது :- ஆத்மாவின் தியானம் ஓங்காரத்தாலேயே நடக்கிறது என்று.

 கடோபனிஷத் :- எந்த பதத்தை வேதங்கள் போற்றுகிறதோ, எல்லா தவங்களிலும் மேன்மையான தவமானதோ, புலனடக்கத்தை தரவல்லதோ, பிரம்மத்தின் மீது வேட்கையை உண்டாக்க வல்லதோ, மரணத்தை வெல்ல வல்லதோ, அந்த பதம் ஓங்காரமாகும் என்று யமராஜா நசிகேதனிடம் சொல்கிறார்.

 தைத்திரிய உபநிஷத் :-“ஓம் இதி ப்ரஹ்ம”, “ஓம் இதி இதம் ஸர்வம்” அதாவது ஓங்காரமே பிரம்மம், அந்த முடிவற்றஓங்காரத்தினுள்ளே எல்லாம் அடக்கம் என்று சிறப்பிக்கிறது.

 அக்னி புராணம் :- ஓங்காரத்தை நன்கறிந்து உணர்ந்தவனே யோகி, அவனே துக்கத்தை வென்றவன் என்கிறது.

 சுபாவமான ஒலி (தன் இயல்பான ஒலி) :- பிறந்த குழந்தை தன் மழலை மொழியில் அ, உ, ம, ஓம், ஓம் என்கிறது.அழுவதும் கூட அப்படியே தான். அந்த குழந்தை எழுப்பும் ஓசையை சற்று உற்று கவனித்தால் விளங்கும். வயதான பல்லிழந்தவர் கூட “ஓமை” நன்றாக சொல்ல முடியும். பிறந்த குழந்தை பருவம் முதல் ஒன்றிரண்டு வயது வரை இராமன், கிருஷ்ணன் என்று சொல்ல வராது. ஆனால் ஓம் என்று சொல்ல நன்றாக வரும். அதே போல் பல் விழுந்த முதியவருக்கும் ஓம் என்று நன்றாக சொல்ல வரும். இராம் என்று சொல்ல சொன்னால்  லாம்  என்று வார்த்தை குழறி வரும். காரணம் ஓம் ஓர் இயல்பான இயற்கையான ஒலி.

 சிறியதினினும் சிறியது, பெரியதினும் பெரியது :- இறைவன் நுண்மையினும் நுண்மையானவன். சிறியதினும் சிறியதாய் பெரியதினும் பெரியதாய் உள்ளவன். அவனின் நாமமான ஓம் என்ற ஒலி அளவில் மூன்று மாத்திரை தான். மற்ற நாமங்களோ மாத்திரை அளவில் பெரியது. ஆயினும் ஓங்காரத்தின் அர்த்த விளக்கமோ விளக்க முடியாதது, முடிவற்றது, பெரியதினும் பெரியது. அந்த மூன்று மாத்திரை என்பதின் மகத்துவம் அளவற்றது.பின்வருவன மூன்றாகப் பிரிக்கப்பட்டு அந்த மூன்று மாத்திரைகளின் தத்துவங்களாக விளக்கப்படுகின்றன.

1. ஈஸ்வரன், ஜீவன், இயற்கை
2. பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரன்
3. பூ:, புவ:, ஸ்வ:
4. சத்வம், ரஜம், தமம்
5. விழிப்பு, கனவு, ஆழ்ந்த உறக்கம்
6. மாதா, பிதா, குழந்தை
7. எலக்ட்ரான், புரோட்டான், நியுட்ரான்
8. நிமித்த காரணம், உபாதான காரணம், சாதாரண காரணம்
9. ஆண், பெண், அலி
10. சூரிய கலை, சந்திர கலை, சுழுமுனை
11. சூரியன், சந்திரன், நக்ஷத்திரம் என இவ்வாறாக பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

Om Meaning in Tamil

 ஓம் விளக்கம் :- அ, உ, ம் என்ற எழுத்துகள் சேர்ந்தே ஓம் என்ற பிரணவ ஒலி பிறக்கிறது. இதில் அ, உ என்பது உயிர் எழுத்துகள், ம் என்பது மெய் எழுத்து. மேலும் ‘அ’ என்பது இறைவனையும், ‘உ’ என்பது உலக உயிர்களையும், ‘ம்’ என்பது இந்த பஞ்ச பூதங்களாளான இயற்கையையும் குறிக்கும். இரண்டு பொருட்கள் உயிருள்ளவை என்பதை உணர்த்த ‘அ’, ‘உ’ என்ற இரண்டு உயிரெழுத்துகளும், உயிரற்ற ஜடமான இயற்கையாகிய இந்த பிரபஞ்சத்தை உணர்த்த ‘ம்’ என்ற மகாரத்தின் மூலம் குறிக்கப்படுகிறது. மேலும் ஓம் என்பது எல்லாவற்றையும் பாதுகாப்பது என்பதாகும். முதலில் தாயின் கர்ப்பத்தில் அது நம்மை காக்கிறது. அதனால் நாம் நிலைப் பெற்றோம்.

இலக்கண விளக்கம்

ஓம் என்ற சொல் ஆண் பாலும் அல்ல, பெண் பாலும் அல்ல. ஒருமை ஒலியே. இதற்கு இருமையோ பன்மையோ கிடையாது. வேற்றுமை உருபுகளும் அதாவது முதலாம் வேற்றுமை முதல் எட்டாம் வேற்றுமை வரையுள்ள உருபுகளும் இதற்கு கிடையாது. இலக்கண வரம்புகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது. மேலும் ஓம் ‘அவ்’ என்ற தாதுவில் – வேர்ச்சொல்லிலிருந்து உண்டாகிறது. ‘அவ்’ என்றால் இந்த உலகம் மற்றும் உயிர்களின் இரட்சகன் – பாதுகாவலன் என்று பொருள். மேலும் இது “அவ்யயம்” ஆகும். அதாவது மாறுதலற்றது, சாசுவதமானது. இலக்கணத்தில் எண், பால், இடத்தால் மாறுபாடு அடையாத சொல். (வினை உரிச்சொல், இடைச்சொல், விளிச்சொல் முதலியன). எனவே இறைவன் ஒருவனே என்பது இதன் மூலம் சித்தமாகிறது.

 மற்ற மதங்களில் ஓம் :- கிறிஸ்துவ மதத்தில் ஓம் என்ற சொல்  ஆமென்  என்ற ஒலியின் மூலம் உச்சரிக்கப்படுகிறது, இஸ்லாம் மதத்தில் ஓம் என்ற சொல்  ஆமீன்  என்ற சொல்லால் உச்சரிக்கப்படுகிறது. புத்த மதத்தில்  ஓம் மணி பத்மோஹம் என்று உச்சரிக்கப்படுகிறது. ஜைன மதத்தில்  ஓம் நமோ அரிஹந்தாணம்  என்று உச்சரிக்கப்படுகிறது. கிரேக்க மொழியில் முதல் எழுத்து ‘அ’ என்பதை  ஓமேன்  என்று உச்சரிக்கப்படுகிறது. பார்ஸி மத நூலான ஜென்தாவஸ்தாவில் ஓங்காரத்தின் பொருள் ஈஸ்வரன் ஆகும். ஆங்கிலத்தில் ஓம் என்பதை OMNI PRESENT, OMNI POTENT, OMNISCIENT என்று சொல்கிறார்கள். ஓம் என்ற ஓசையோ அதன் பொருளோ இல்லாமல் எந்த மதமும் எந்த மொழியும் இல்லை.

Om Chanting Tamil

ஸ்ரீமத் பாகவத புராணத்தில் ஸ்ரீகிருஷ்ணரிடம் கேட்கப்படுகிறது:- மனிதன் மரணிக்கும் தருவாயில் யாரை ஜெபம் செய்ய வேண்டும்? என்று. ஸ்ரீகிருஷ்ணர் பதிலுரைத்தார்:- ஓங்காரத்தை ஜெபம் செய்ய வேண்டும் என்று. அவர் தன்னுடைய நாமத்தை ஜெபிக்கும்படி கூறவில்லை. மேலும் ஹரி ஓம், ராம், ராம், ஸ்ரீகிருஷ்ண, ஸ்ரீகிருஷ்ண, ஹரே ராம ஹரே கிருஷ்ணா, இராதேசியாம், சீதாராம், விட்டல விட்டல, கோவிந்தா, கோவிந்தா, சிவா, சிவா, முருகா, முருகா, நாராயணா, நாராயணா, அரோகரா, அரோகரா என்று நாம ஜெபம் சொல்லுமாறு வேதத்தில் எங்கும் உபதேசிக்கப்படவில்லை. சிலர் “ஓம்” என்று முதலில் சொல்லாமல் மற்ற நாமங்களை முதலில் உச்சரித்து விட்டு பிறகு “ஓம்” என்று சொல்கிறார்கள். உதாரணமாக “ஹரி ஓம்” என்பது. இது சரியல்ல. ஏனெனில் வேதங்களில் முதலில் “ஓம்” என்றே உச்சரிக்கப்படுகிறது. பிறகே இறைவனின் குணங்களை குறிக்கும் மற்ற நாமங்கள் வருகின்றன.

சீக்கிய மதநூலான குரு கிரந்தஸாஹிப்பில் இறைவனின் 37 நாமங்கள் 15025 முறை வருகின்றன. அவற்றில் 230 முறை ஓம் என்ற பிரணவ மந்திரம் வருகிறது. குரு நானக்கர் சொல்கிறார் – ஓங்காரத்தின் சப்தத்தை ஜெபம் செய்யுங்கள், ஓங்காரம் உன்னுடைய குருமுகமாகும்,ஓங்காரத்தில் எல்லாம் அடங்கியிருக்கின்றன என்று.

வேதத்தில் காலை எழுந்தவுடன் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன. உணவு உண்ணும் போதும், உண்ட பிறகும், தூங்கும் போதும் சொல்ல வேண்டிய மந்திரங்கள் உள்ளன. இவை எல்லா மந்திரங்களும் ஓம் சொல்லியே ஆரம்பிக்கப்படுகிறது. இறைவன் எங்கும் நிறைந்தவன், அவன் எல்லா இடங்களிலும், எல்லா காலத்திலும், எப்பொழுதும் உள்ளவன் ஆனதால் அவனை தியானிப்பதிலும், அவன் நாமத்தை பொருளுடன் அறிந்து உச்சரிப்பதிலும், அவனை எப்பொழுதும் நினைப்பதிலும் என்றும் நன்மையே உண்டாகும்.

 

Read, also



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 24, 2024
ஊக்கமூட்டும் மேற்கோள்கள்: Motivational Quotes In Tamil
  • நவம்பர் 24, 2024
வாழ்க்கை மேற்கோள்கள்: Short Life Quotes In Tamil
  • நவம்பர் 23, 2024
Happy Birthday Messages in Tamil | பிறந்தநாள் வாழ்த்துக்கள்