×
Sunday 1st of December 2024

மஹான் ஸ்ரீ சூர்தாஸ் வரலாறு


Shri Surdas History in Tamil

ஸ்ரீ சூர்தாஸ்

🛕 16ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு விழியற்ற கிருஷ்ண பக்தர் சூர்தாஸ். இது அவர் பெயர் அல்ல. சூர் என்றால் அவர்கள் பாஷையில் குருடன் என்று அர்த்தம்…பிறவிக் குருடர் அவரை வீட்டை விட்டு துரத்தி விட்டார்கள். ஆறு வயதில் உலகில் தள்ளப்பட்ட சூர்தாஸ் மெதுவாக நடந்து ப்ரஜ் என்கிற உ.பி. தேசத்தில் வாழ்ந்தார். கண்ணன் பிறந்த மதுரா அருகில் உள்ளது இந்த ப்ரஜ் கிராமம்.

🛕 ஹிந்தியில் கவிதைகளை ப்ரஜ் பாஷா எனும் அந்த ஊர் ஹிந்தி பாஷையில் தான் பாடினார். சூர்தாஸ் பாடிய கண்ணன் பாடல்களை சூர் சாகர் ( கிருஷ்ண சமுத்திரம்) என்று சொல்வார்கள். எல்லாமே குழந்தை கண்ணனை பற்றியே என்றால் எவ்வளவு சுகம்!

🛕 சிறு வயதில் பெற்றோராலும் மற்றோராலும் புறக்கணிக்கப்பட்ட சூர்தாஸ் தனிமையில் தான் வளர்ந்தார். ஒரு நாள் அவர் உட்கார்ந்த திண்ணை அருகே தெருவில் சிலர் கிருஷ்ண பஜனை செய்து கொண்டு சென்றது காதில் விழுந்தது. ”ஆஹா எனக்கும் கிருஷ்ணன் மேல் பாட வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஏன் முடியாது ஒருநாள் என்னையும் கிருஷ்ணன் பாட வைப்பான்” என்ற நம்பிக்கையோடு மெதுவாக அந்த கூட்டத்தோடு சேர்ந்து கொண்டார்.

கூட்டத்தில் ஒருவன் ”டேய் ஏன் எங்களை தொடர்ந்து வருகிறாய்?””

🛕 “கிருஷ்ணன் பாட்டு நீங்கள் பாடுவது பிடிக்கிறது. எனக்கும் உங்களை மாதிரி பாட ஆசையா இருக்கு”.. ”சரி வா.”

🛕 இரவு வந்தது. சாப்பிட ஆகாரம் கொடுத்தார்கள். எதற்கு இந்த குருட்டு பையனை அழைத்து போக வேண்டும். அவனால் உபத்திரவம் தானே வந்து சேரும்” இந்த முடிவு சூர்தாஸிடம் சொல்லாமலேயே அந்த பக்தர் கூட்டம் மறுநாள் காலை அவரை அங்கேயே விட்டு விட்டு சென்றதற்கு காரணம்.

🛕 ஒரு மரத்தடியில் அமர்ந்து மனதில் தோன்றிய கற்பனை வளத்தை உபயோகித்து இட்டு கட்டு பண்ணி கிருஷ்ணன் பாடல்களை பாடினார் சூர்தாஸ். அதை கேட்டு வருவோர் போவோர் கொடுத்த ஆகாரம் தான் ஜீவனம். அருகே ஒரு பெரிய ஏரி. பிருந்தாவனம் மதுரா போவோர் அங்கே வந்து மரத்தடியில் தங்கி ஓய்வெடுப்பார்கள். அவர்கள் மூலம் காதில் விழுவது தான் உலக ஞானம்.

🛕 பதினாலு வயதில் ஏதோ குறி சொல்ல வந்தது. சொன்னது நடந்தது. ஊர் மக்கள் அவரை போற்றி பாதுகாத்தனர். கிருஷ்ணன் தன்னை நம்பினோரை ஏமாற்றுவானா? ஒரு வழி காட்டினான் . ”இவன் ஒரு அதிசய பையன்” என்று அந்த ஊரே நம்பியது.

🛕 அந்த ஊர் பஞ்சாயத்து தலைவனின் பிள்ளை ஒரு சிறு பையன் ஒருநாள் வழி தவறி எங்கோ போய் விட்டான். பஞ்சாயத்து தலைவன் திண்டாடுகிறான். சூர்தாஸ் மனதில் தோன்றிய ஏதோ ஒரு இடத்தின் பெயர் சொல்லி அங்கே போய் பார் உனக்காக அழுகிறான் என்று சொல்லி, அவன் அங்கே சென்று பார்க்க அந்த பையன் அழுதுகொண்டு நின்றான். அப்புறம் என்ன கிருஷ்ணன் அருளால் சூர்தாஸுக்கு ஒரு கூரை போட்ட ஆஸ்ரமம் கிடைத்தது. ஊர்க்காரர்கள் ஒரு ஒற்றை கம்பி ”டொய்ங் டொய்ங் ” வாத்யம் சூரதாஸிடம் கொடுத்தார்கள். அதை உபயோகித்துக் கொண்டே ஏதோ ஒரு சுருதியில் அதை சேர்த்து கூடவே பாடுவார் சூர்தாஸ். நிறைய சிஷ்ய பிள்ளைகள் சேர்ந்தார்கள். அவர்கள் தான் சூரதாஸ் பாட பாட எழுதி வைத்தவர்கள்.

🛕 ”சூர்தாஸ் இங்கிருந்து கிளம்பி நீ பிருந்தாவன் வா. நான் அங்கே உனக்காக காத்திருக்கிறேன்.” ஒரு இரவு கண்ணன் சூர்தாசை அழைத்தான் ஆஹா அப்படியே ” — சூர்தாஸ் கிளம்ப சிஷ்யர்கள் வருந்தினார்கள். ”ஏன் எங்களை விட்டு போகிறீர்கள். நாங்கள் என்ன தப்பு, அவமரியாதை செய்தோம்?”

🛕 ”அதெல்லாம் ஒன்றுமில்லை. எனக்கு பிருந்தாவனம் செல்ல வேண்டும். நடக்க ஆரம்பிக்கிறேன். வழியெல்லாம் கண்ணனை பாடிக்கொண்டே செல்கிறார். இங்கேயே இருங்கள் என்று போகும் வழியெல்லாம் அழைப்பு. ”நான் ஒரு பரதேசி. ஒரு இடத்திலும் நிற்காதவன்” என்று ஒரே பதில் அனைவருக்கும் கிடைக்கிறது.

🛕 சூர்தாஸின் கால்கள் பிருந்தாவனத்தை நோக்கியே நகர்கின்றன. வழியே காட்டில் ஒரு பெரிய கிணறு. யாரும் இல்லாத இடம். கண்ணில்லாத சூர்தாஸை அந்த கிணறு விழுங்கியது. உடலில் காயம். எப்படி மேலே ஏறி வருவது? பசியோடு ஏழு நாள் கிணற்றில்.

🛕 ”தாத்தா உன் கையை நீட்டு. மேலே இழுக்கிறேன்” எங்கிருந்தோ அந்தப்பக்கம் வந்த ஒரு மாடு மேய்க்கும் பையன் குரல் அருகில் கேட்கிறது. கிணற்றில் இறங்கி உதவுகிறான். மேலே ஏற்றிவிட்ட பையன் ஏன் காணாமல் போய் விட்டான்? . கோபால கிருஷ்ணன் ஒரே இடத்தில் இருப்பவனா? . எங்கெல்லாமோ யாருக்கெல்லாமோ உதவ ஓடுபவனாச்சே!

🛕 ”சூர்தாஸ், விஷயம் தெரியுமா உங்களுக்கு? இன்று பிரபல கிருஷ்ண பக்தர் சுவாமி வல்லபாச்சாரியார் இந்த ஊர் வருகிறார்.”

🛕 ”அடடா நான் அவரை சென்று நமஸ்காரம் பண்ண முடியுமா?”

🛕 சூர்தாஸ் எப்படியோ தட்டு தடுமாறி தன்னை சந்திக்க வரும் முன்பே வல்லபாச்சாரியார் சூர்தாஸை தேடி வந்துவிட்டார். வல்லபாச்சார்யர் திருவடிகளை பிடித்துக்கொண்டு கதறுகிறார் சூர்தாஸ்.

🛕 ”சூர்தாஸ், நான் வந்ததே உங்கள் திவ்ய கிருஷ்ண கானத்தை கேட்கத்தான்”. தொடர்ந்து வெகுநேரம் சூர் சமுத்திர சுனாமி அங்கே கான வெள்ளமாக பெருகுகிறது.

🛕 வல்லபாச்சார்யர் சில நாள் தங்கிய போது கிருஷ்ணனை பற்றிய சகல சரித்திரங்களையும் விஷயங்களையும் சூர்தாஸ் காதால் கேட்டு மனதில் இருத்தி வைத்துக் கொள்கிறார். அவ்வளவும் பாடல்களாகியது.

🛕 வல்லபாச்சாரியார் சூர்தாஸை பிருந்தாவனம் அழைத்து செல்கிறார். பிருந்தாவனத்தில் கோவர்தன கிரிதாரி ஆலயத்தில் சூர்தாஸ் ஆஸ்தான வித்துவான் ஆகிறார்.


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 20, 2024
அதர்வ வேதத்தில் நோய் மற்றும் சிகிச்சை பரிந்துரைகள்
  • செப்டம்பர் 14, 2024
அன்னை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
  • ஆகஸ்ட் 14, 2024
பக்தி