×
Monday 9th of December 2024

யுத்தம்


இத்தனை பெரும் பேரிரைச்சலுடன் இதுவரையிலும் அவன் எந்த வெடி விபத்தையும் பார்த்திருக்க மாட்டான். அத்தனை பெரும் சத்தத்தில் அந்த வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் எத்தனை சிதறிப்போயின எத்தனை தூக்கி எறியப் பட்டனவென்று உறுதியாகச் சொல்ல முடியாது. அந்தக் கார்களுடன் சேர்த்து எறியப்பட்டான் இவனும். இப்போது அவன் நினைவுகள் மெல்ல புகை மண்டலத்திற்குள் தடுமாறிக் கொண்டிருந்தது…

பரந்து விரிந்த அந்த வெள்ளைப் பிரதேசத்தில், மரங்களும் அடுக்குமாடி குடியிருப்புகளும், சாலையோரத்தில் நிற்கும் தெருவிளக்கு கம்பங்களும், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமும், வெள்ளை ஆடையைப் போர்த்திய வண்ணமிருக்கும். பத்து நிமிடத்திற்கு மேல் ஒரு கிளையில் பறவை ஒன்று தன் சிறகை அசைக்காமல் இருக்குமானால், பனிப்பொழிவு அதையும் மூடிப்போட்டு வைத்து விடும்!

சாலையில் நடப்பவரில் யாருக்கும் ஆடைக் குறைப்பு என்பது இருந்ததே இல்லை. உறவோ நட்போ, இல்லை அறிமுகமான யாரேனும் கண்டால், ஒருவருக்கொருவர் கைகொடுப்பது அவர்கள் மரபு. அதில் பாலினப் பாகுபாடு இருந்ததில்லை. சாலையில் நின்று நலம் விசாரிக்கும் போது அடுத்தவர் கையின் கதகதப்பு இந்தப் பனிப்பொழிவுக்கு நல்ல அருமருந்து.

இங்கு யாரையும் யாரும் கத்திப் பேசுவதில்லை. காரணம் குளிரில் பேச்சு வருவதே கடினம் இதில் சத்தம் எப்படி வரும். இன்னும் ஒன்று இங்கு வாகனத்தில் கூட யாரும் ஒலியெழுப்புவது இல்லை.

இங்கே யாருக்கும் சாலை விதியை கடைபிடிக்கக் கட்டாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. தெருவில் வீண் சண்டைகளையோ தேவையற்றக் குப்பைகளையோ யாரும் போடுவதில்லை. இப்படித்தான் நாடு இருக்க வேண்டும் என்று நாம் நினைக்கும் நாடுகளில் ஒன்று உக்ரைன்.

இது மட்டுமல்ல “சொந்தநாட்டிலும் கடைசியில் கைவிட்ட உயர் கல்வியில் ஒதுக்கப்பட்ட ஏழை நடுத்தர மாணவர்களின் வளர்ப்புத் தாய்” என்றும் சொல்லலாம். அந்த நாடு, அந்த வளர்ப்பு தாய் இப்போது தீயில் குளித்துக் கொண்டிருக்கிறது…


வேகமாக ஓடி வந்த நகுலன் சொன்னான் – ஒருவேளை யுத்தம் இன்னும் ஒருசில நாட்களில் தொடங்கலாம் போலிருக்கிறது.. என்று சொல்லிவிட்டு அவனாலும் பதட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அந்த உணவுக் கூடத்தில் இருந்தவர் அனைவரும் பேயறைந்தார்போல் இருந்தனர். நகுலன் மேலும் தொடர்ந்தான் மார்க்கெட்டில் விற்பனை அதிவிரைவாக நடைபெறுகிறதாம். குறிப்பாக பதப்படுத்தப் பட்ட உணவுகள். சிலர் பக்கத்து நாட்டுக்கு தஞ்சம் புகுந்து விட்டார்களாம். இன்னும் சிலர் அப்படியெல்லாம் ஒன்றும் நடக்காது என்று கேளிக்கையாகச் சிரிக்கிறார்கள். எனக்கென்னவோ யுத்தம் உறுதி என்பது போலத்தான் தோன்றுகிறது.. என்றான்.

இதை கேட்டதும் உணவை பாதியில் வைத்துவிட்டு, அப்படியே யுத்தம் வந்தாலும் நமக்கு பாதிப்பு இருக்குமா? என்றாள் கீர்த்தி. அதன் தொடர்ச்சியாக – இருக்கும் என்றால் நாம் எப்படி தப்பிப்பது..? என்று அப்பாவித்தனமாகக் கேட்டாள் அமுதா..

அதெல்லாம் அப்படி ஒன்றும் நடக்காது யாரும் பயப்பட வேண்டாம்.. என்றான் நவீன். போர் வரும் என்பது அவனுக்கும் தெரியும், என்றபோதும் அவன் சொன்னது அமுதாவின் ஆறுதலுக்காக..

இந்த ரஷ்யக் காரனுக்கு சரியான திமிரு. யாராலும் நம்மை ஒண்ணுமே செய்ய முடியாதுன்னு ஆட்டம் காட்டுகிறான். அவனுக்கு நல்ல பாடம் காட்டியே ஆகனும். எனக்கு மட்டும் ஒரு துப்பாக்கி கிடைச்சுதுன்னா.. என்று ஆவேசத்துடன் பேசினான் வினேஷ். யாருக்கு? அவனுக்கா பயமில்லை..? எங்கே உக்ரைன் நேட்டோவில் சேர்ந்துவிட்டால் இவனை அடக்கமுடியாதுனு பயந்துதான் போருக்கே தயார் ஆகுறான் போலிருக்கு. அவனுக்கு பயம் இல்லைங்குறியே, என்றான் நகுல். “அப்போ நேட்டோவில் சேர வேண்டியது தானே.?” என்றான் வினேஷ்.

“அதெல்லாம் அவ்வளவு சுலபமான காரியமில்லை. அந்த நேட்டோ அமைப்பில் இருக்கும் கூட்டமைப்பு நாடுகள் அனைவரும் கையெழுத்துப் போடனும். இன்னும் சில அடிப்படையான ரகசியத் திட்டங்களும் இருக்கிறதாம் அதையெல்லாம் இவர்கள் ஏற்றுக் கொண்டு, அந்த கோப்பில் இவர்களும் கையெழுத்துப் போட்டால் அமைப்பில் சேர்க்கப்படுவர்.” என்ற நவீனைப் பார்த்துக் கொண்டே இருந்த அமுதாவிடம்,

“என்ன.? அவன் பேசுவதை கவனிப்பது மாதிரி ரசிப்பில் இருக்கிறோம்போல தெரியுது” என்று கிசுகிசுத்தாள் கீர்த்தி. “சும்மா இருடி” என்று செல்லமாகச் சிணுங்கிக் கொண்டு வெட்கத்தில் பூத்துச்சிரித்தாள்.

தனக்கு பிடித்தமான அந்த இனியவன் தன்னையும் விரும்புகிறான் என்பது தெரிந்திருந்தும் அவளால் தனது விருப்பத்தையோ இல்லை தானும் விரும்புகிறேன் என்ற உணர்வையோ வெளிப்படுத்த முடியவில்லை. இப்படி அவள் நெருங்கவும் இல்லாமல் விலகவும் செய்யாமல் ரசித்து மகிழ்வதே போதும்! என்று நினைத்திருந்தாள். காரணம் தன்னை நம்பி இவ்வளவு தூரம் அனுப்பி வைத்தத் தன் பெற்றோரையும் குடும்பச் சூழ்நிலையும் நினைக்கும் போது இதெல்லாம் இப்போதைக்கு வேண்டாம் என்று தனக்குத்தானே ஒரு எல்லையை வகுத்துக் கொண்டாள்.

அமுதா முதல் முறையாக கல்லூரிக்கு வரும்போது தன்னிடம் நேசமாகப் பேசிப் பழகிய மற்றவரை விட.. நவீன் கொஞ்சம் பாசமாகவும் பண்பாகவும் பேசினான். அன்று முதல்தானோ என்னவோ, அவன்மேல் ஒரு சொல்லமுடியாத நம்பிக்கை. அந்த நம்பிக்கை “ஒரு மலைச்சரிவில் இருந்து சரிந்துவீழும் ஒருவனின் கைக்கு அகப்படும் உறுதியான செடியின் பாதுகாப்பு எப்படி இருக்குமோ அப்படித்தான் உணர்ந்தாள்..” அந்த அன்பான நேசம்.. அது அடுத்த நிலைக்கும் பயணப்படாமல் பார்த்துக் கொள்வதில் தான் அமுதா மிகவும் சிரமப்பட்டாள்.

இவர்கள் இருவரும் அதிகம் பேசிக் கொண்டதுமில்லை. ஆனாலும் அவர்கள் கண்கள் ஒருவரை ஒருவர் தேடிக்கொள்ளும். அப்படியே நடக்கும் அந்த நிகழ்வும் எதேச்சையாக நடந்ததாய்ப் பாவனையும் செய்வார்கள். அதில் இருவருமே குறைந்தவர்கள் இல்லை. அவர்களின் அந்தப் பார்வை பட்டுபோன ஒரு மூங்கில் காட்டில் பட்டால் எட்டுத்திக்கும் அனல் பறக்கும் என்பது மட்டும் உறுதி. இவர்களின் இந்த நடிப்புக் காதலைக் கண்டும் காணாததுபோல் நடிப்பவர் ஏராளம். அதுவும் சகதோழர்கள்தாம் என்றால் பாருங்களேன்!

ஆனாலும் கீர்த்திக்குத் தெரியாமல் அமுதாவின் நகங்கூட அசையாது 🙂 அன்று இரவு விளையாட்டாகப் பேச்சுக்கொடுத்தாள் கீர்த்தி.. “ஏன்டி உனக்கு வேற ஆளேக்கிடைக்கலையா ..?. இவன் கர்னாடகக் காரன்டி… குடிக்கவே தண்ணீ தரமாட்டான்.” என்றவாறு ஒரு நையாண்டிச் சிரிப்பும் சிரித்தாள். புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்த அமுதா, தன்பார்வையை அவள் பக்கம் திருப்பி அது வேறு அரசியல் என்றுதான் சொல்லவந்தாள்; அவளின் நையாண்டிச் சிரிப்பைப் பார்த்ததும் அவள் வேறு எதையோ நினைத்துச் சொல்வதாய் உணர்ந்தவள். “முதலில் நீ நிறுத்து!” என்று கடுமையாகச் சொன்னாள். இதுவரை அப்படி பேசியவளில்லை அமுதா. இந்தப் பதிலை எதிர்பார்க்காத கீர்த்தி முகம் சட்டென்று வாடிபோனாள். இருவருக்கும் இடையில் எங்கிருந்து வந்து புகுந்து கொண்டதோ அந்த மவுனம். ஒருசில நிமிடங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை. அந்த அறையில் இதுவரை இல்லாத ஒரு சூழலை உருவாக்கியது.

எப்ப வரும் எப்ப வரும்? என்று எல்லோரும் எதிர்பார்த்து இருந்ததுதான், ஆனாலும் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வந்து தொலைத்ததே அந்த யுத்தம்..

வெடிச்சத்தம். இடைவிடாத வெடிச் சத்தம். சிவகாசிப் பட்டாசே பாதி ஊரை தாண்டும் என்றால். இது அடுத்தவர் நாட்டை அழிவுக்குள்ளாக்க வேண்டும், என்றே தயாரித்தத் தனிரகம். சத்தம் குறைந்தா இருக்கும்.? நிமிடங்கள் செல்லச் செல்ல சத்தம் நெஞ்சுக்குள் வந்து இடி முழக்கம் செய்து கொண்டிருந்தது.

இருப்பதில் தேவையானதை எடுத்துக் கொண்டு அடுத்த நாட்டுக்கு தஞ்சம் பிழைக்கப் புறப்பட்டனர் மக்கள். புறப்பட்ட மக்களில் யாரிடமும் பதட்டமோ பரிதவிப்போ தென்படவில்லை. எல்லோரும் இயல்பாகவே நடந்தனர். அந்த இயல்பு அவர்களுக்கே உரியனவா இல்லை, இயல்பற்ற நிலை அங்கே தேவைப்பட வில்லையா, என்பதும் நமக்கு புரியவில்லை.

அப்படி ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத ஒரு பெருங்கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்த கூட்டத்தில் அரிதிலும் அரிதாய் சிலர் மட்டும் வேகமாக ஓடினர். ஓடிய சிலரையும் நாம் உற்றுப் பார்த்தோம் என்றால் தெரியும். அவர்கள் நம் இந்தியர்கள். கையிலும் முதுகுப் புறத்திலும் சுமக்க முடிந்த அளவை விட அதிகமான அளவு தங்கள் உடமைகளில் சிலவற்றை எடுத்துக் கொண்டு பரிதாபத்துடன் பயணமானார்கள். ஆனால் எங்கே போவது என்று மட்டும் தெரியவில்லை.?

அந்த நாட்டில் மிகவும் பாதுகாப்பான இடமென்றால் அது மெட்ரோ இரயில் பாதைதான். பொதுவாகவே அந்நாட்டில் மெட்ரோ தடம் நிலத்துக்கடியில்தான் செல்லும். கடல்வாழ் உயிரினம் ஆயிரமாயிரம் நீருக்குள் நீந்திக் கொண்டிருந்தாலும்.. கடலின் மேலே கப்பலும் படகு செல்வதுபோல்.. மெட்ரோ இரயில் பாதைக்கு மேலே வீடுகளும் சில தொழில் நிறுவனங்களும் அமைந்திருப்பது இயல்பு. ஆதலால் அந்தச் சுரங்கப் பாதை மிகமிக உறுதித் தன்மையோடு அமைந்துள்ளது என்று அதற்கு நாம் சான்றளிக்க அவசியமில்லை.

அது தெரிந்தோ தெரியாமலோ இந்திய மாணவர்கள் அனைவரும் அங்கும் இங்குமாக அந்த மெட்ரோ இரயில் பாதைக்குள் தஞ்சம் புகுந்தனர். மெல்லிய வெளிச்சம் சீராகப் பரவியிருந்த அந்தச் சுரங்கப் பாதைக்குள் வந்தபோது மாணவர்கள், தங்கள் சொந்த நாட்டிற்கே வந்துவிட்டோம் என்றுதான் முதலில் நினைத்தார்கள். காரணம் அங்கே இருந்தவர்கள் அனைவரும் இந்தியர்கள். பிறகுதான் உக்ரைன் அரசும் அந்த நாட்டு மக்களை அந்த குகைப்பாதைக்குள் அனுப்பி வைத்தனர் பாதுகாப்பிற்காக..

சினிமாவிலும் எங்கோ தூரதேசத்தில் நடக்கும் நிகழ்வை நாளிதழ்களிலும் தொலைக்காட்சியிலும் பார்த்த யுத்தம் எனும் செய்தி; இப்போது தங்கள் நெஞ்சு முழுதும் தீயாய் நிறைந்திருந்ததில் திணறித்தான் போனார்கள். அந்நாட்டு மக்களோடு சேர்ந்து நம் இந்திய மாணவர்களும்.

யுத்தம் எத்தனை நாள் நீடிக்கும் என்று தெரியவில்லை. உண்ணவும், குடிக்கவும் கூட இனி கிடைக்குமா? என்பதும் தெரியவில்லை. கையில் இருக்கும் உணவும் தண்ணீரும் எத்தனை நாள் வருமோ?, என்று நினைக்கும் போதே… உள்ளத்தில் இன்னும் கொஞ்சம் கனமேறியது. அழுகையும் அடக்கமுடியாமல் வந்துதான் தொலைத்தது.

வெளியில் இருந்து யாரேனும் இங்கு புதிதாக வந்து பார்த்தால் இது பதுங்கும் இடமா, இல்லை பிரார்த்தனைக் கூடமா? என்பதை புரிந்துகொள்ளவே கொஞ்சம் சிரமமாகத்தான் இருக்கும். அழுத விழியும் தொழுத கையுமாக எதையோ முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்த இடம் பார்ப்பவரை கலங்கவே செய்யும்.

கூட்டத்தில் இருப்பவரில் சிலர் நடக்கும் நிகழ்வுகளையும் தங்களின் நிலைபாட்டையும் விபரமாக இந்திய ஊடகங்களுக்கும் தங்களின் உறவினருக்கும் தெரிவித்துக் கொண்டே இருந்தனர். அதன் மூலம் ஏதேனும் உதவி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில்! அந்த தேசம் முழுதும் இருள் மெல்ல கவ்வத்துடங்கியது. இதயம் மேலும் மேலும் கனம் கூடிக் கொண்டே போனது.

உறக்கம் என்பது யாருக்கும் இமையைக்கூட உரசிப் பார்க்கவில்லை. இரக்கமற்ற இதயங்கொண்டோர் எறியும் வெடிகுண்டும் தூரத்தில் இருந்து, வருகிறேன் வருகிறேன் என்று தீக்குள் தன் சிரிப்பை ஒளித்துவைத்துக் கொண்டு. திடீர் திடீரென்று சிரித்துச் சிரித்து மகிழ்ந்து கொண்டிருந்தது.

எப்போது இங்கிருந்து உயிர்பிழைத்து இந்தியா போவது? என்று நிமிடந்தோறும் பெரும் அச்சத்தில் உறைந்து இருந்தபோதுதான். இந்தியா அறிவித்தது, “ஆபரேசன் கங்கா” எனும் திட்டத்தின் வழி இந்திய மாணவர்களை மீட்டுக்கொண்டு வருவோம்!” என்று. அதை கேட்டதும் உயிர்பிழைக்க ஒரு வழி இருக்கிறது, என்ற நம்பிக்கையோடு தான் அந்தப் பதுங்குழிக்குள் “விற்பனைக்கு வைக்கப்பட்ட மீன்கூட்டம் போல் கால்களையும் கைகளையும் நீட்டவும், முடக்கவும் முடியாமல் முடங்கிக் கிடந்தனர்”. இயற்கை உபாதைகளுக்குக் கூட ஒதுங்க ஒரு இடமில்லாமல்.


அமுதா தன் அடிவயிற்றில் கை வைத்து அமர்த்திப் பிடித்தவாறு விசும்பிக் கொண்டிருந்தாள். அந்த அடர்த்தியான கூட்ட நெரிசலிலும் அவளின் விசும்பல் சத்தம் பத்துபேருக்கு அப்பால் நிற்கும் நவீனுக்குக் கேட்கவே செய்தது. எப்போதும் தன் பார்வையில் ஒன்றை அவள்மேல் வைத்திருக்கும் அவனுக்கு எப்படித் தெரியாமல் போகும், அவள் அசைவும் இசைவும்.

அவள் அருகில் நிற்கும் கீர்த்தியிடம் கேட்டான் “என்ன?” என்று. அவள் சொன்னாள் “பசியும் சேர்ந்து வாட்டுகிறதாம்” என்று. அந்த வார்த்தையை மறுமுறையும் யோசித்தான். பசியும் சேர்ந்தா? அப்போ எதையோ சொல்லாமல் சொல்லவே கீர்த்தி முயற்சித்து இருக்கிறாள். சுற்றும் இருக்கும் சக தோழர்களைப் பார்த்தான். அதிலும் கவனமாகத் தோழிகளைக் கூர்ந்து கவனித்தான். “சிலர் தலையில் கை வைத்துக் கொண்டும். சிலர் விட்டத்தைப் பார்த்த வண்ணமுமாக இருந்தார்கள். அவர்களின் வேதனையும், பசியும் வாதனையும் சொல்லாமல் புரிந்துகொள்ள முடிந்தது”.

ஒரு பெருமூச்சு விட்டுக்கொண்டு தன்னைத்தானே முதலில் ஆசுவாசப்படுத்திக் கொண்டான். பின் மெல்ல நகர்ந்தான். கொஞ்சம் வழிவிடுங்கள் என்று திரும்பத்திரும்ப கேட்டுக் கொண்டே நடந்தான். எல்லோரும் விலகி நின்ற நிலையில் அந்த கோரிக்கைக்கு ஒருவன் மட்டும் வழிவிடாமல் “எங்கே?” என்றான். கேட்ட அவனை அப்போதுதான் கவனித்தான். அவன் முகம் மனதில் பதியும் முன்பே குரல் அவன் யார்? என்பதைச் சொல்லிற்று.

நகுல் திரும்பவும் கேட்டான்” எங்கே?” என்று.

“ஒன்றும் இல்லை, வருகிறேன்!” என்று சொல்லிக் கொண்டே நடக்கலானான். நவீன் எங்கே போகிறான், என்ற சந்தேகத்துடனே பார்த்துக் கொண்டிருந்தான் நகுல். பார்த்துக் கொண்டிருந்தவனும் அதிர்ச்சியடைந்துதான் போனான்.

“இவன் ஏன் வெளியே போகிறான்?”


நிலவறையில் இருந்து மேல்நோக்கிச் செல்லும் அந்தப் படிக்கட்டில் நடந்தான். அவன் கால்களை எடுத்து வைக்கும் போதே இதயம் இருமடங்காகத் துடிக்கத் தொடங்கியது. அவன் இயல்பாகவே கொஞ்சம் சாதுவானவன் இப்போது தன் பிரியமானவளுக்காக இந்த விபரீத முடிவில் இறங்கியுள்ளான். மெல்ல மெல்ல மேலேறித் தரைத்தளம் வந்தான். வந்தவன் மூச்சே நின்றுதான் போயிருக்க வேண்டும். எந்தப் பக்கம் பார்த்தாலும் மனித நடமாட்டம் என்பது இல்லை. தூரத்தில் வெடி குண்டுகளும் ஏவுகணைகளும் வந்து விழுந்து கொண்டே இருந்தது.

தான் நிற்கும் இடம் திரையரங்கமா…!! இல்லை…!!! இல்லவே இல்லை யுத்தகளம் தாம் என்பதை உறுதிபட வைத்தது தூரத்தில் தெரியும் விபரீதம் வெளிச்சப்பாடு. வெளியில் யாரும் வரக்கூடாது என்று ஊரடங்குச் சட்டம் இருக்கும்போதும் கூட, நவீன் அதை மீறியும் வெளியில் வந்துவிட்டான். சாலையில் நடக்கவில்லை அவன், கட்டடங்களின் ஓரத்தில் நடந்துபோனான். ஒருவேளை ஏவுகணை இங்கேயும் வந்துவிழுமோ? என்ற அச்சத்திலும் முன்னெச்சரிக்கையிலுமே அவன் ஓரத்தில் நடந்தான். இன்னும் எப்படியும் இரண்டு கிலோமீட்டர் தூரம் போகனும் என்பதால் நடையை வேகப்படுத்தினான்.

அடுத்த சில நிமிடங்களில் அவன் அந்த சூப்பர் மார்க்கெட்டை வந்தடைந்தான் என்ற போதும், அது நாம் எப்போதும் வரும் கடைதானா, என்ற சந்தேகமும் தயக்கமும் ஏற்படாமல் இல்லை. காரணம் மக்கள் நடமாட்டம் என்பது பாதியிலும் பாதியாய்க் குறைந்து இருந்தது. அவனும் அந்த சந்தேகப் பார்வை குறையாமல் தான் உள்ளே போனான். அங்கே வேலை செய்பவரிலும் பாதியைக் காணோம். விட்டால் மீதியுள்ளவர்களும் ஓடத் தயார்தான் போலும்.

நவீன் தன் கையில் இருந்த அத்தனை பணத்திற்கும் உணவுகளையும் மற்றும் தன் பிரியமான அமுதாவுக்கும் கூட இருக்கும் தோழமைகளுக்கும் தேவையான ரகசியப் பொருட்கள் அனைத்தும் வாங்கிக் கொண்டு புறப்பட்டும் நேரம். அவன் கண்ணில் பட்டது அந்த நாள்காட்டி. தேதி 24/ 02 / 2022 என்று காட்டிற்று. எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டது ஒரு புன்னகை. காரணம் நாளை மறுநாள் அமுதாவின் பிறந்தநாள். “சூழ்நிலை உயிர்வதை எடுக்கும் நாள்தான் என்றாலும் தன் உயிரானவளை வாழ்த்தாமல் எப்படி இருப்பது?” அவளுக்காக ஒரு அழகான கவிதைப் புத்தகமும் வாங்கிக் கொண்டான். அதில் முதல் பக்கத்தில் “இனி எப்போதும் உன்னுடனிருப்பேன் என்னுயிரே.!” என்று தன் விருப்பத்தை முதல்முறையாக அந்தப் புத்தகத்தில் எழுதி வைத்துவிட்டு புத்தகத்தை தன் நெஞ்சோடு சேர்த்து ஒருநிமிடம் கண்களை மூடிச் சுவாசித்தான் பின் புன்னகைப் பூவிரித்தான்.

பிறகு வாங்கிய பொருட்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு, அந்த சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியேறினான். வெளியேறிய அடுத்த நிமிடம். நவீனை எதிர்பார்த்துக் காத்திருந்ததுபோல் வெடித்துச் சிதறியது அந்த வெடிகுண்டு.

மிகப்பெரிய சத்தம். மிகப் பெரிய சத்தம். அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் எத்தனை தூக்கி எறியப்பட்டன? எத்தனை எத்தனை சிதறிப்போயின? எத்தனை தீக்கிரை ஆயின? என்று உறுதியாகச் சொல்லமுடியாது.

அங்கே தூக்கி எறியப்பட்ட கார்களோடு சேர்ந்தே எறிப்பட்டான் நவீன், ஒரு பொம்மையைப் போல். தூரத்தில் விழுந்தவன் தன் கைகளைக் கூட அசைக்க முடியவில்லை. உடலில் எரியாத பாகமே இருக்காதோ.. உடலாவது கொஞ்சமேனும் மீதம் இருக்கிறதா என்ற சந்தேகம் அலை அலையாக வந்து தன் கைகளால் தொட்டுப்பார்க்க முயற்சிக்கும் முன்பே அவன் நினைவையும் மெல்ல கரைத்துக் கொண்டிருந்தது காலம்.

கார்குண்டு வெடித்தோ? இல்லை ஏவுகணை வந்து விழுந்தோ? தெரியவில்லை நவீன் இறந்துவிட்டன். நம்மைப் பிரிந்து போய்விட்டான் என்று அந்த நிலவறையில் இருந்தவரில் பாதிக்கும் மேல் அழுது தீர்த்தனர். தங்கள் துயரத்தை கண்ணீரால் கரைத்தனர். அதில் அமுதா அழுத காட்சி இருக்கே. ஐயோ… அது ஒரு கிராமத்துத் துக்கவீட்டை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திற்று. இத்தனை நாளில் அவன் பெயரை ஒருமுறை கூடச் சத்தமாகச் சொல்லாதவள். அவன் பெயரைச்சொல்லி சத்தமிட்டு அழுகிறாள். நகுலனின் கைகளைப் பற்றிக்கொண்டு ” என்னை நவீனிடம் கூட்டிக்கொண்டு போ… நகுல்” கடைசியா அவன் முகத்தை ஒரே ஒரு தடவை பார்த்துக்கிறேன்.. என்று சொல்லி அழுதவளைப் பார்த்து தானும் அழுது அசைவற்று நின்றான்.

அவனிடம் பதில் இல்லை எனும்போது.. கீர்த்தி.. கீர்த்தி.. நீயாச்சும் சொல்லுடி என்னை கூட்டிக் கொண்டு போகச்சொல்லுடி.. என்று தன் தலையில் அடித்துக்கொண்டு அப்படியே அந்த கைகளால் தன் முகத்தையும் காயப்படுத்தியும் கொண்டு அழுது துடித்தாள். வினேஷ் சொன்னான், நவீனை உக்ரைன் ராணுவம் கைப்பற்றி இருக்கும். எப்படியும் இந்திய தூதரகத்திடம் தான் கொடுப்பார்கள். நம்மால் இப்போது வெளியே போகமுடியாது.. போகவும் கூடாது! என்று வேதனையோடு சொல்லி நின்றான்.

யார் சொல்லி என்ன பண்ண அவள் நவீனை பாக்கனும் பாக்கனும் என்று புலம்பலுடனே அழுது துவண்டாள். தன் வேதனை தீர்க்கப் போனவன் தீக்கிரையானதை நினைத்து நினைத்து அழுதாள். அந்த அழுகையில் தன்னவன் நிழல் எங்கோ தூரத்தில் நின்று. எப்போதையும் விட இன்று உரிமையோடு பார்ப்பதும் மெல்ல தன்னருகில் வரும்படி சைகையால் அழைப்பதுமாக நிற்க. அவள் அப்படியே மயங்கி விழுந்தாள். மயங்கி விழுந்தாளா? இல்லை ஆவிமட்டும் விலகி அன்பான நவீனை தொட்டுப்பார்க்க விரைந்ததா என்று தெரியவில்லை..?


மயங்கி விழுத்த அமுதாவை அழுதவிழியோடு மடியில் கிடத்தி ஆறுதலாய் அவள் தலையை வருடிக்கொடுத்தாள் கீர்த்தி. வெளியில் யுத்தம் கடுமையாகிக் கொண்டிருந்தது. நிலவறைக்குள் உள்முகப் பயணமாக நகர்ந்துகொண்டே இருந்தார்கள். உணவுபொருள் வாங்கவும் வேறுயிடம் போகவும் சில மணிநேரம் மட்டும் அவகாசம் கொடுக்கப்படும். பிறகு அந்த அபாயகரமான சங்கொலி கேட்கும். அந்த ஒலியை காதோர்த்தால் மக்கள் காததூரம் ஓடி ஒளிவார்கள். இருட்டறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் ஆயுள் கைதிக்குத் திடீரென்று விடுதலை என்பதுபோல். “இரவெது பகலெது என்று தெரியாமல் இருந்த அவர்களை விமானம் ஏற்றிச் சொந்த நாட்டில் கொண்டுவந்து விட்டது இந்திய அரசாங்கம்.”

யுத்தத்தை விரும்பும் அரசுக்கு விரோதிகள் இருந்துகொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால் உருவாக்கப்படுவார்கள் என்பதை அறிவோம். ஆனாலும், மருத்துவம் படிக்கும் கனவோடு விமானம் ஏறியவர்களுக்கு இப்போதும் விடை கிடைக்கவில்லை. அவர்களுக்கு நிராசை ஒன்றே நிரந்தரம் என்றானது. “நீட்”டும் ஒருபக்கப் பாராமுகமாகத் துரத்தியபோதும் நீட்டியக் கரத்தோடு அரவணைத்த உக்ரைனும் இப்போது உருக்குலைந்து போச்சுது. இவளின் சொல்லாதக் காதலும் இன்று இல்லாமலே போச்சு. அது வெறும் கானல் நீரென்றாச்சு. அடுத்தவர் துன்பம் நமக்கில்லை என்னும் இந்த யுத்தம் இனியும் தொடருமா.. முடியுமா..?

நன்றி

செந்தில் சுலோ, செருவாவிடுதி.


2 thoughts on "யுத்தம்"

  1. யுத்தத்தில் அழிந்தது காதல்
    மனதின் கனத்துடன் கரைந்தது கண்ணீர்..
    தீர்வின்றி போகிறது யுத்தம்
    முடிவேதும் இல்லை தலைவிதியே..
    வாழ்த்துகள் அண்ணா..

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • பிப்ரவரி 9, 2024
சுசீலா ஆன்ட்டி
  • பிப்ரவரி 5, 2024
சலீம் மாமா
  • ஜனவரி 28, 2024
ஆவிகள் நமது நண்பர்கள்