×
Tuesday 10th of December 2024

ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில், காஞ்சிபுரம்


40 Years once Athi Varadar Story in Tamil

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்தி வரதர் திருவிழா

☸ காஞ்சிபுரத்தில் திவ்ய தேசங்களில் ஒன்றான 2,000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது வரதராஜ பெருமாள் கோவில் குளத்தில் இருக்கும் அத்தி வரதர், 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பக்தர்களுக்கு காட்சியளிப்பது வழக்கம்.

☸ இதற்கு முன் கடந்த 18-8-1854, 13-6-1892, 12-7-1937, 2-7-1979 ஆகிய தேதிகளில் அத்தி வரதரை தரிசனம் செய்யும் உற்சவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

Athi Varadar History in Tamil

☸ சராசரியாக 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே அத்தி வரதர் நீரிலிருந்து வெளியே எடுத்து வரப்பட்டு காட்சியளிக்கிறார் என்பதால், ஒவ்வொருவரும் அவரது ஆயுள்காலத்திற்குள் “ஒருமுறை அல்லது அதிகபட்சம் இருமுறை மட்டுமே அத்தி வரதர் பெருமாளை தரிசிக்க முடியும்”.

☸ வரதராஜப் பெருமாள் கோவிலின் 100 கால் மண்டபத்தின் அருகில் தண்ணீருக்கு அடியில் உள்ள 4 கால் மண்டபத்தில் தன்னை மறைத்துக்கொண்டு பக்தர்களின் எண்ணத்தோடு அத்தி வரதர் அருள்பாலித்து வருகிறார். இக்குளத்தில் எப்போதும் நீர் வற்றுவதில்லை என்பதால் அத்தி வரதர் யார் கண்ணுக்கும் புலப்படமாட்டார்.

☸ பெருமாளின் திருமேனி மிகப்பெரிய அத்தி மரத்தால் வடிவமைக்கப்பட்டு, பிரம்மதேவனால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அத்தி வரதப் பெருமாளை வெள்ளித்தகடு பதித்த பெட்டியில் சயனக் கோலத்தில் வைத்து, அனந்த புஷ்கரணி மண்டபத்தின் நடுவே நீரில் வைத்துள்ளனர்.

அத்தி வரதர்

☸ நம் வாழ்விற்குப் பின்னர் மோட்சப் பதவிக் கிடைக்க வேண்டுமானால், அயோத்தி, மதுரா, துவாரகா, காசி, மாயா, அவந்தி, காஞ்சிபுரம் ஆகிய நகரங்களில் வசித்திருக்க வேண்டும்! அல்லது இங்கெல்லாம் கோவில் கொண்டிருக்கும் பெருமாளைத் தரிசித்திருக்க வேண்டும்! என நம் புராணங்கள் சொல்கின்றன. நகரேஸு காஞ்சி (நகரென்றால் அது காஞ்சியே) எனப் புகழப்பட்ட காஞ்சிபுரம் கோவில் நகரமாகும்.

athi varadar sayana kolam image

☸ பெருமாளின் 108 திருப்பதிகளுள் 14 காஞ்சிபுரத்திலேயே உள்ளதன. பட்டுப் பீதாம்பரத்தோடு எப்பொழுதும் அலங்காரப் பிரியனாகவே இருக்கும் பெருமாள் மகிழ்துறையும் தலமாதலால் தான் காஞ்சி, பட்டு உற்பத்தியிலும் தலைசிறந்து விளங்குகிறது போலும். காஞ்சிபுரத்திலுள்ள பதினான்கு திருப்பதிகளுள் முதன்மையானது, சின்ன காஞ்சிபுரத்திலுள்ள திருக்கச்சி என்னும் அத்திகிரி.

☸ பிரம்மா, உலகைப் படைப்பதற்கு முன்னர், வேள்வி இயற்றி, திருமாலை வணங்கி, அருள் பெற்ற சத்யவிரத ஷேத்திரம் இந்த அத்திகிரியே. சரஸ்வதி தேவியை மதிக்காது பிரம்மா வேள்வியைத் தொடங்கியதால், கோபங்கொண்ட சரஸ்வதிதேவி, நதியாகப் பெருக்கெடுத்து, பிரம்மா வளர்த்த வேள்வித் தீயை அணைக்க முயன்றாள்.

☸ பிரம்மா, திருமாலை வேண்ட, கரைபுரண்டோடி வரும் நதி, வேள்விச்சாலையை நெருங்காதபடி, நீரின் குறுக்கே ஓர் அணையெனப் படுத்துக்கொண்டார் பரந்தாமன். பெருமாளே மீறிச் செல்ல முடியாத சரஸ்வதி நதி, பெருமாளை வணங்கி, தன் சினம் தவிர்த்தாள்! பிரம்மாவுடன் இணைந்து வேள்வியையும் நடத்தினாள். வேள்வியில் இடப்பட்டவைகளைப் பெருமாளே ஏற்றுக்கொள்ள வேண்டுமென பிரம்மா வேண்ட, அவ்வாறே ஏற்றார் திருமால்.

☸ பெருமாள் இங்கே அக்னிப் பிழம்பாக அத்திகிரி என்ற திருத்தலத்தில் நூற்றுக்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ராம்! எனவே இஙகுள்ள உற்சவரின் திருமுகத்தில் அக்னியால் ஏற்பட்ட வடுக்கள் போன்ற புள்ளிகளை இன்றும் நாம் காணலாம். வேள்வியால் பங்கேற்ற தேவர்கள் அனைவருக்கும் கேட்ட வரங்களை எல்லாம் திருமால் கொடுத்தார்ம்! எனவே பெருமாளுக்கு இங்கே வரதர் (கேட்கும் வரங்களைத் தருபவர்) எனப் பெயர் வந்தது.

☸ திருமால் இங்கே என்றென்றும் தங்கியிருப்பதற்காக (நித்யவாசம்) தேவலோக யானை (ஐராவதம்) மலையின் வடிவெடுத்து, திருமாலைத் தாங்கி நின்றது. “அத்தி என்றால் சமஸ்கிருதத்தில் யானை என்று பொருள். கிரி என்றால் மலை என்று பொருள்”. அத்தியே கிரியானதால் (யானையே மலையானதால்) இவ்விடம் அத்திகிரி என்றானது.

அத்திகிரி, அத்தியூர்,வாரணகிரி (வாரணம் = யானை) என்றெல்லாம் அழைக்கப்படும் இக்காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலிலுள்ள அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் தான் ஓர் அதிசயம் மறைந்துக் கிடக்கிறது.

☸ அத்திகிரி என்ற திருத்தலத்தில் நூற்றுக்கால் மண்டபத்தின் பின்னால், அனந்தசரஸ் என்ற திருக்குளத்தில் எப்பொழுதும் தண்ணீர் நிரம்பிக் காட்சியளிக்கிறது. இக்குளத்து நீரை நம் தலையில் தெளித்துக் கொண்டாலே பெருமாளின் அபிஷேக நீரைத் தெளித்துக் கொண்டதற்குச் சமமாகும். இக்குளத்தின் நடுவிலுள்ள மண்டபத்தில் தண்ணீருக்கடியில் அத்திவரதர் எழுந்தருளியுள்ளார்.

☸ பாற்கடலில் பாம்பணையில் பள்ளிக்கொண்ட திருமாலுக்கு எப்பொழுதுமே தண்ணீரின் மீது பள்ளிக் கொள்வது பிரியமானதே! ஆனால் இங்கோ, தண்ணீருக்கடியில் வாசம் செய்கிறார். கேட்பவர்களுக்குக் கேட்கும் வரங்களை அளித்து வரதர் எனப் பெயர் பெற்ற பரந்தாமன், உலகம் உய்ய இங்கே தீர்த்தவாசம் செய்கிறார்.

☸ தமிழர்களின் முல்லை நிலக் கடவுளான திருமால் நீளாதேவியின் மணாளர் என்பதும், நீர்நிலைகளின் அம்சமே அன்னை நீளாதேவி என்பதும், பெருமாள் நீரின் மீது மகிழ்துறைய ஒரு முக்கிய காரணமாகும். எனவேதான் நீர்நிலைகளைக் காக்கக் காக்கும் கடவுளான திருமாலுக்கு நீர் நிலைகளின் அருகே கோவில்களைக் கட்டி வைத்தனர் நம் முன்னோர்கள்! எனவேதான் மழையின் வருகையைக்கூட நாரணன் வருகை என நம் முன்னோர்கள் போற்றினர்.

☸ ஆனால் இங்கே ஜலவாசம் செய்யும் பெருமாள், நாற்பது வருடங்களுக்கு ஒரு முறையே திருக்குளத்திற்கு வெளியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். “முன்பு 1979 ல் இந்த அத்திவரதர் நீருக்கு வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்”. இப்பொழுது நம் பிறவிப்பயனின் காரணமாக 2019 ஆனி மாதம்-26 (ஜுலை-1) ஆம் தேதி முதல் 48 நாட்களுக்கு பக்தர்களுக்குத் தரிசனம் தந்து நல்லருள் புரிவார் அத்திவரதர்!

athi varadar stand kolam image

Why Athi Varadar in Water?

☸ தண்ணீருக்குள் அத்திவரதர் இருப்பதற்குப் பலவிதமான காரணங்கள் சொல்லப்படுகின்றன:

  • பிரம்மாவின் வேள்வியின்போது ஏதோவொரு காரணத்தால் அத்திவரதரின் திருமேனியில் சிறு பின்னம் (குறை) ஏற்பட்டுவிட்டதாம். இதனால் பதறிப்போன பிரம்மா, பெருமாளைப் பணிந்து வேண்ட, அஞ்சவேண்டாம் பிரம்மதேவரே! பின்னமான திருமேனியை வெள்ளிப் பேழையில் வைத்து, அனந்தசரஸில் அமிழ்த்தி வையுங்கள் என்றாராம்! அதனாலேயே இவ்வாறு நீருக்கடியில் வரதரை வைத்திருப்பபதாகக் கூறுகின்றனர் ஆன்மிகப் பெரியோர்கள்!
  • முற்காலத்தில் இத்தலத்தில் மூலவராக இருந்தவர் இந்த வரதரே என்றும், அச்சிலை இலேசாகப் பின்னமடைந்து விட்டதால், மேலும் பாதிப்படையாமல் இருக்க, இவ்வரதரை நீருக்குள் வைத்தனர் என்றும் கூறுகிறார்கள்!
  • கோவிலைப் புனரமைத்து, கும்பாபிஷேகம் செய்யும்போது, மூலவரின் சக்தியை அத்திமர விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்து கருவறையில் வைத்துவிட்டு, மூலவரை நகர்த்தி வைப்பது மரபு. கும்பாபிஷேகத்தின் போது அத்திமர விக்ரஹத்தை எடுத்துவிட்டு, மூலவரைப் பிரதிஷ்டை செய்வார்கள். அவ்வாறே ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மூலவராக இருந்த அத்திமரத் திருமேனியே, பெருமாளின் உத்தரவின்படி, (உலகம் செழிப்பாக இருக்கப் பகவான் இவ்வாறு திருவருள் புரிந்திருக்கலாம்) திருக்குளத்தில் நீருக்கடியில் வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறுகின்றனர்!
  • இந்த வரதர் அத்தி மரத்தால் ஆனவர் தண்ணீரில் மூழ்கியிருந்தால் அத்தி மரத்தின் வலு மேலும் அதிகரிக்கும் என்பதாலும் இவ்வாறு செய்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்!

☸ எவ்வாறானாலும், அனந்தசரஸைப் பாற்கடலாகப் பாவித்து, பெருமாள் குளிர்ச்சியான நீரில் எப்பொழுதும் ஆழ்ந்திருந்தப்படி, தன்னை வழிபடும் பக்தர்களையும், நேரில் வர இயலாவிட்டாலும், எங்கிருந்தும் மானசீகமாக வழிபடும் பக்தர்களின் வாழ்விலும் நிம்மதியையும், வளத்தையும், மகிழ்ச்சியையும் வாரி வழங்குகிறார் அத்திவரதர்!

24 நாட்களுக்குச் சயனத் திருக்கோலத்திலும், மீதி 24 நாட்களுக்கு நின்ற திருக்கோலத்திலும் மொத்தம் 48 நாட்கள் அத்திவரதரின் அரிய தரிசனத்தை ஆனந்தமாகப் பக்தர்கள் கண்டு மகிழலாம். பெருமாளோடு, பெருந்தேவித் தாயாரையும் வழிபட்டு, அருளைப் பெற்றிடுவோம்.

☸ 40 வருடங்களுக்கு ஒருமுறேயே அத்திவரதரின் தரிசனம் என்பதால் மீண்டும் அத்திவரதரை 2059-ல் தான் நாம் தரிசிக்க இயலும். நீண்ட ஆயுள் உள்ளவர் மட்டுமே தன் வாழ்நாளில் முயன்றால், கேட்கும் வரங்களைக் கேட்டபடியே அருளும் அத்திவரதரை இருமுறைகள் தரிசிக்கும் பேற்றை அடைவார்.

Kanchipuram Varadaraja Perumal Temple History in Tamil

திருத்தலம் வரதராஜப் பெருமாள் (அத்தி வரதர்) கோவில்
மூலவர் வரதராஜர் (தேவராஜர்)
அம்மன் பெருந்தேவி
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் அனந்த சரஸ்
புராண பெயர் அத்திகிரி, திருக்கச்சி
ஊர் காஞ்சிபுரம்

kanchipuram varadaraja perumal temple theertham

சக்கரத்தாழ்வார்

☸ திருக்குளத்தின் கிழக்குத்திசையில் சக்கரத்தாழ்வார் என பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதி அமைந்துள்ளது. தமிழகத்தில் எங்கும் காணமுடியாத மிகப்பெரிய அளவில் சுதர்சன ஆழ்வார் திருமேனி காட்சி தருகின்றது. இவர் 16 கைகளுடன் சங்கு சக்கரங்கள் தாங்கி காட்சியளிக்கின்றார்.

☸ பிரம்மாவின் யாக அக்னியில் கிடைத்த மூர்த்தி, இங்கு முகத்தில் தழும்புடன் உற்சவராக இருக்கிறார். இதனால், இவருக்குப் படைக்கும் நைவேத்யத்தில் மிளகாய் சேர்ப்பதில்லை. இவரே இங்கு பிரதானம் பெற்றவர் என்பதால், பக்தர்கள் இவரைத் தரிசித்து விட்டே மூலவரைத் தரிசிக்கிறார்கள். பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 44 வது திவ்ய தேசம்.

☸ நாரத முனிவர், பிருகு முனிவர், பிரம்மா, ஆதிசேசன் கஜேந்திரன் ஆகியோருக்கு பெருமாள் காட்சி தந்த முக்கிய தலம் . இராஜகோபுரம் 96 அடி உயரமுள்ளது. 2000 ஆண்டுகள் முந்தைய பழமையான தலம். பல்லவ மன்னர்கள் மற்றும் விஜயநகர மன்னர்களால் திருப்பணிகள் நடைபெற்ற தலம் வரதராஜப் பெருமாள் கோவில்.

☸ இங்குள்ள பெருமாளை வணங்கினால் கல்வி கேள்விகளில் சிறந்த ஞானம், குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும். சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால் திருமணத்தடை நீங்குகிறது. வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள்.

☸ தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன. குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்.

தங்க பல்லி

☸ இவ்விடத்தில் தங்கபல்லி, வெள்ளி பல்லிகளாக இருக்கும் சூரியன் சந்திரரை தரிசனம் செய்தால் நம்மீது பல்லி விழுவதால் உண்டாகும் தோசங்களும், கிரகண தோசங்களும் விலகி ஷேமம் உண்டாகும். நம் மனதில் நினைத்த காரியம் கைகூடும் என்பது ஐதீகம்.

kanchipuram golden lizard image

Golden Lizard Story in Tamil

☸ ஸ்ரீ ஸ்ருங்கி பேரர் என்னும் முனிவரின் இரு குமாரர்கள், கௌதம முனிவரிடம் சிஷ்யர்களாக இருந்த போது பூஜைக்கு தீர்த்தம் கொண்டு வந்ததில் பல்லிகள் இறந்து கிடந்ததை கண்டு, முனிவர் கோபம் கொண்டு இருவரையும் பல்லிகளாகும்படி சபித்துவிட்டார்.

☸ பிறகு சிஷ்யர்கள் வேண்டிக் கொண்டதால் காஞ்சி சென்றால் மன்னிப்பு உண்டு என கூறிவிட்டார். பிறகு இருவரும் சப்தபுரிகளையும் சுற்றி வந்து விட்டு வரதராஜ பெருமாளிடம் மோட்சம் கேட்டனர். பெருமாள் உங்கள் ஆத்மா வைகுந்தம் செல்ல சரீரம் பஞ்ச உலோகத்தில் என் பின்புறம் இருக்க என்னை தரிசிக்க வருபவர்கள் உங்களை தரிசித்தால் சகல தோசம் நீங்கி ஷேமம் உண்டாகும். சூரியன் சந்திரன் இதற்கு சாட்சி என்று மோட்சம் அளித்தார்.

மாந்துளிர் உற்சவம்

☸ பங்குனியில் பல்லவ உற்சவம் 7 நாள் நடக்கும். இந்நாளில் சுவாமியை நூறு கால் மண்டபத்தில் எழச்செய்து, குங்குமப்பூ தீர்த்தம், சந்தனம் சேர்ந்த கலவையைப் பூசி, ஈரத்துணியை அணிவிப்பர். பின்பு, சுவாமியை மாந்தளிர் மீது சயனிக்கச் செய்து, 7 திரைகளைக் கட்டி பூஜை செய்வர். சுவாமிக்கு கோடை வெப்பத்தின் தாக்கம் இல்லாதிருக்க, அவர் மீது கொண்ட அன்பின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள்.

தல சிறப்புகள்

☸ இங்குள்ள உற்சவர் சக்கரத்தாழ்வார் மிகவும் விசேஷமானவர். இவரைச் சுற்றியுள்ள அலங்கார வளைவில் 12 சக்கரத்தாழ்வார் உருவங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

சரஸ்வதி பூஜை, வைகாசி திருவிழாவில் ஒருநாள், பங்குனி உத்திரம் என ஆண்டில் மூன்று முறை மட்டும் வரதராஜர் இவளுடன் சேர்த்திக்காட்சி தருகிறார்.

☸ வேதாந்த தேசிகர் இங்கு சுவாமியைத் தரிசிக்க வந்தபோது, ஒரு ஏழை அவரிடம் பொருள் வேண்டினான். அவர் அந்த ஏழைக்காக பொருள் கேட்டு, பெருந்தேவி தாயாரை வேண்டி பாடல் பாடினார். அவருக்கு இரங்கிய தாயார், தங்க மழையை பெய்வித்தாள். இதனால் இவளை பக்தர்கள், தங்கத்தாயார் என்று அழைக்கிறார்கள்.

☸ இந்திரனுக்கு அருளிய யோகநரசிம்மர், இத்தலத்தில் குடவறை மூர்த்தியாகக் காட்சி தருகிறார். இவருக்கான தாயார், ஹரித்ராதேவி தனிச்சன்னதியில் இருக்கிறாள். இவளை மலையாள நாச்சியார் என்றும் அழைப்பர். சிறிய மலையின் மீது காட்சி தருவதால் வரதராஜருக்கு, மலையாளன் என்றும் பெயருண்டு.

☸ சித்ரா பவுர்ணமியன்று சுவாமிக்கு பாலாற்றில் திருமஞ்சனத்துடன் பூஜை நடக்கும். பின்பு, சுவாமி அருகிலுள்ள நடவாவி கிணற்றிற்கு எழுந்தருளுவார். மண்டபம் போன்ற உள்கட்டமைப்பைக் கொண்ட வித்தியாசமான கிணறு இது. இந்நாளில் மட்டும் கிணற்று நீரை வெளியேற்றிவிடுவர். கிணற்றுக்குள்ளேயே சுவாமி வலம் வருவார்.

☸ ராபர்ட் கிளைவ் என்ற வெள்ளையர், வரதராஜர் மீது கொண்ட பக்தியால் மகர கண்டி (கழுத்தில் அணியும் மாலை) கொடுத்தார். இதேபோல், வெள்ளைக்கார கலெக்டர் பிளேஸ் துரை, சுவாமிக்கு பல ஆபரணங்களைக் கொடுத்துள்ளார். விழாக்காலங்களில் சுவாமி இந்த ஆபரணங்களை அணிந்து உலா செல்வார்.

காயத்ரி மந்திரத்தின் 24 அட்சரங்களைக் குறிக்கும் விதமாக மூலஸ்தான படிகள், மதிலில் பதிக்கப்பட்ட கற்கள், தீர்த்தக்கரை படிகள் ஆகியவை 24 என்ற எண்ணிக்கையில் அமைந்துள்ளன.

☸ ராமானுஜருக்காக கண்களை இழந்த கூரத்தாழ்வார், பார்வை பெற்ற தலம் என்பதால், கண் நோய் நீங்க இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.

☸ கீதையில் கிருஷ்ண பகவான், தனது வடிவமாகக் குறிப்பிட்ட அரச மரமே இத்தலத்தின் விருட்சம். மரத்தின் எதிரே கரியமாணிக்க வரதர் சன்னதி உள்ளது. புத்திரதோஷம் உள்ளவர்கள் அமாவாசையுடன், திங்கள் கிழமை சேர்ந்த நாளில் மரத்தையும், சன்னதியையும் சுற்றிவந்து வழிபடுகிறார்கள்.

kanchipuram varadaraja perumal temple theertham

Sri Varadharaja Perumal Temple Festival

திருவிழா: பிரம்மோற்ஸவம்: வைகாசி – 10 நாட்கள் – பௌர்ணமி விசாக நட்சத்திரத்தன்று நடக்கும், நவராத்திரி: புரட்டாசி – 10 நாட்கள், வைகுண்ட ஏகாதசி மற்றும் புது வருடப் பிறப்பின் போதும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் கூடுவர். தவிர மாதந்தோறும் இக்கோவிலில் திருவிழாக்கள் நடந்த வண்ணம் இருப்பது மிகவும் சிறப்பானது.

பிரார்த்தனை: இங்குள்ள பெருமாளை வணங்கினால் கல்வியில் சிறந்த ஞானம், குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவை கிடைக்கும். சக்கரத்தாழ்வார் எனப் பேசப்படுகின்ற சுதர்சன ஆழ்வார் சந்நிதியில் இருக்கும் பெருமானை வணங்கினால், திருமணத்தடை நீங்குகிறது. வழக்குகளில் வெற்றி கிடைக்கிறது. வாழ்வில் வளமும் நிம்மதியும் கிடைக்கிறது என அனுபவித்தவர்கள் கூறுகிறார்கள். தனி சன்னதியில் வீற்றிருக்கும் பெருந்தேவித் தாயாரை வணங்கினால் பெண்களுக்கு உடல் ரீதியான பிரச்சினைகள் தீர்கின்றன. குழந்தை வரம் வேண்டுவோரும் தாயாரை வணங்குகின்றனர்.

நேர்த்திக்கடன்: பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்தல், தாயாருக்கு புடவை சாத்துதல், மற்றும் சர்க்கரைப் பொங்கல் பெருமாளுக்கு படைத்தல் ஆகியவை இங்கு நேர்த்திக்கடன்களாக இருக்கின்றன.

Kanchipuram Varadaraja Perumal Temple Timings

திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

Kanchipuram Varadaraja Perumal Temple Phone Number: +91-4427269773, +91 9443990773

Kanchipuram Varadaraja Perumal Temple Address

அருள்மிகு ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோவில், காஞ்சிபுரம் – 631501



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்