×
Wednesday 11th of December 2024

ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோவில்


Avudaiyarkoil Temple History in Tamil

சிவஸ்தலம் ஆவுடையார் கோவில், திருப்பெருந்துறை
மூலவர் ஆத்மநாதர் ஆத்மநாதசுவாமி
அம்மன் யோகாம்பாள்
தல விருட்சம் குருந்த மரம்
தீர்த்தம் அக்னிதீர்த்தம்
புராண பெயர் திருப்பெருந்துறை, சதுர்வேதிமங்கலம், சிவபுரம்
ஊர் ஆவுடையார்கோயில்
மாவட்டம் புதுக்கோட்டை

ஆவுடையார்கோயில் வரலாறு

🛕 திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோயில், உலக உயிர்கள் வீடுபேறு பெறுவதற்குச் சாதனமாகப் பிறவிக் கடலிலிருந்து கரையேறுவதற்குத் துணையாக – பெரும் துறையாக விளங்கும் தலம் ஆதலின் திருப்பெருந்துறை எனப் பெயர் பெற்றது. மக்களால் ஆவுடையார்கோயில் என்று வழங்கப்படுகிறது. அரிமர்த்தன பாண்டியனிடம் முதலமைச்சராக இருந்த வாதவூரர் கீழ்கடற்கரைக்குக் குதிரை வாங்கச் சென்றபோது அவரைக் குருந்த மரத்தின் கீழிருந்து குருவடிவில் இறைவன் ஆட்கொண்டு, அவரை மாணிக்கவாசகராக ஆக்கிய மாட்சிமை பெற்ற தலம்.

நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல்

🛕 மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்த வாதவூரர் (மாணிக்கவாசகர்), மன்னன் உத்தரவுப்படி குதிரை வாங்க இப்பகுதிக்கு (திருப்பெருந்துறை) வருகிறார். அப்போது இங்கு சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்க அங்கு சென்று பார்க்கையில் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார். தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசமளிக்கும்படி மாணிக்கவாசகர் கேட்டுக் கொள்ள, குருவும் ஒப்புக் கொண்டார். உபதேசம் கேட்டு சிவநிஷ்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது கண்டு, சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டு உள்ளம் உருகி பாடினார். குதிரை வாங்க கொண்டு வந்த பணத்தில் ஆத்மநாதசுவாமி கோவிலைக் கட்டி சிவதொண்டில் ஈடுபடலானார்.

avudaiyarkoil-nariyai-pariyakkiya-kaatchi

🛕 குதிரை வராத செய்தி கேட்டு மன்னன் மாணிக்கவாசகரை பிடித்து சிறையில் அடைத்தார். ஆவணி மூலத்தில் குதிரைகள் வரும் என்று சொல்லச் செய்த பெருமான் அவ்வாறே நரிகளைப் பரிகளாக்கி அவரே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். அவ்வாறு செய்த இடம் நரிக்குடி என்று இன்று வழங்குகிறது. ஆனால் இரவிலேயே குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் போக, மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு மணலில் நிறுத்தி தண்டிக்க, வைகையில் வெள்ளம் வந்தது. கரையை அடைக்க சிவபெருமான், “கூலியாளாக வந்து பிட்டு வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால், பிரம்படி வாங்க அந்த அடி எல்லோர் முதுகிலும் விழ”, வந்தது இறைவன் என்பதைத் தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு கேட்டான். இந்த சிறப்பு வாய்ந்த திருவிளையாடற் புராண கதை நிகழ காரணமானது இக்கோவில் ஆகும்.

ஆத்மநாதருக்கு புழுங்கலரிசி, பாகற்காய், முளைக்கீரை நிவேதனம்

🛕 ஒரு முறை இறைவனே அந்தணராய் கிழவேடங்கொண்டு பெருந்துறையில் வாழந்து வரும் 300 அந்தணர் வீட்டுக் குழந்தைகட்கும் வேதசாத்திரங்களைக் கற்றுத்தர முன்வந்தார். அந்தணர்களும் அதுகேட்டு மகிழ்ந்து விநாயகரைப் பிரதிஷ்டை செய்து பாடசாலையொன்றை ஏற்படுத்தித் தந்தனர். அந்தணர்களின் வீடுகளில் நாடொறும் புழுங்கலரிசி, பாகற்காய், முளைக்கீரை சமைத்து அப்பெரியவருக்கு உணவாகத் தந்து வந்தனர். அவரும் அவ்வுணவை உண்டு பிள்ளைகளுக்கு வேதங்களைக் கற்பித்து வந்தார்.

🛕 ஞானயோக சாஸ்திரங்கள், வியாகரணம், தர்க்கம் முதலியவை அனைத்தையும் முறையாகக் கற்பித்தார். குழந்தைகளோடு குழந்தையாய்க் கலந்து ஓடியாடியும், கண்ணைப் பொத்தி விளையாடியும் மகிழ்வித்தார். இவருடைய வரவால் குழந்தைகள் பெரிதும் மகிழ்ந்து வேதங்களைப் பயின்று வந்தனர். ஒருநாள் குழந்தைகளோடு விளையாடிய கிழவர் தீடீரென மறைந்தார். குழந்தைகள் அவரைக் காணாது வருந்தினர் – தத்தமது பெற்றோர்களிடம் முறையிட்டனர். அவர்களும் மனம் வருந்தி எல்லாவிடங்களிலும் தேடினர்; பயனில்லை.

🛕 அன்றிரவு குழந்தைகள் அனைவருடைய கனவிலும் ஒரே சமயத்தில் இறைவன் தோன்றி, “கிழவராக வந்து உங்களுக்கு வேதசாத்திரங்களைக் கற்பித்தது நானே. உங்கள் பெற்றோரிடம் சொல்லி இதுவரையில் நான் சுடச்சுட விரும்பியுண்டு வந்த புழுங்கல் அரிசி, முளைக்கீரை, பாகற்காய் ஆகிய இவற்றையே எனக்குச் சமைத்துச் சூட்டோடு நிவேதித்து வரச்செய்யுங்கள்” என்றருளிமறைந்தார். குழந்தைகள் விழித்து, மகிழ்ந்து, தத்தம் பெற்றோர்களிடம் செய்தியைச் சொல்ல; வந்தவர் இறைவனே என்று மகிழ்ந்து வணங்கினர். அன்று முதல் சுவாமிக்கு மேலே சொல்வதுபோல் நிவேதனம் செய்யப்பட்டு வருகின்றது. இறைவன் குழந்தைகட்கு வேதசாத்திரங்களை ஓதுவித்த இடமாகிய குருந்தவனத்தில் ஸ்ரீ வித்யாகணபதி எழுந்தருளியுள்ளார்.

மூலவர் ஆத்மநாதர் (ஆவுடையார்)

🛕 “ஆத்மாவுக்கு நாதராய்” விளங்குவதால் இவர் ஆத்மநாதர் எனப்படுகிறார். அனைத்து சிவன் கோவில்களிலும் உள்ள சிவலிங்கத் திருமேனி பாணம், சக்தி பீடம், பிரம்ம பீடம் என மூன்று பகுதிகளாக விளங்கும். ஆனால் இங்கு நடுவில் உள்ள சக்தி பீடம் பகுதி மட்டுமே உள்ளது. அதற்கு மேலே குவளை ஒன்று சாத்தியிருப்பார்கள். அதாவது சக்தி பீடத்தில் அறிவொளியாக ஆத்மநாதர் விளங்குகிறார். அதாவது உருவம் இல்லாத அருவமாக இறைவன் விளங்குகிறார். சக்தி பிம்பம் மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதால் சக்தியே பிரம்மத்தை வெளிப்படுத்துகிறது என்பது தத்துவம் ஆகும். ஆவுடையார்க்குப் பின்புறச் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும் அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி என்ற மூன்று தீபங்களும் (வெள்ளை, பச்சை, சிவப்பு) சுடர்விடுகின்றன.

🛕 மூலவருக்கு மகுடாகமம் உத்தரபாகத்தின்படி பூஜைகள் நடைபெறுகின்றன. நாள்தோறும் ஆறுகால பூஜைகள். ஆத்மநாதருக்கு ஆறு காலங்களிலும் புழுங்கலரிசி நிவேதனம், ஒரு தவலையில் வடித்து, கைபடாமல் அப்பாத்திரத்தோடு கொண்டுவந்து அமுத மண்டபத்தில் உள்ள கருங்கல் மேடையில் (சுவாமிக்கு எதிரில்) அப்படியே கொட்டி, ஆவியோடு சுவாமிக்கு நிவேதிப்பதை நாமும் பார்த்து ரசிக்கலாம்.

யோகாம்பாள் (யோகாம்பிகை) சந்நிதி

🛕 ஆத்மநாத சுவாமியின் கருவறைக்கு வடமேற்கில் முதல் பிரகாரத்தில் யோகாம்பிகை சந்நிதி உள்ளது. இக்கோவிலின் உள்ளே யோகபீடமும் அதன்மேல் அம்பிகையின் பாதங்களும் உள்ளன. அம்பிகை அரூபமாக இருப்பதால் அம்பிகைக்கு திருவுருவம் இல்லை. 100 இதழ்கள் கொண்ட தாமரையாகிய பீடத்தில் – யோகாம்பாளின் திருவடிகள் மட்டுமே தங்கத்தாலான யந்திர வடிவமாக உள்ளன. முன்புறமுள்ள கருங்கல் பலகணி (கல் ஜன்னல்) வழியாக தரிசனம் செய்யவேண்டும். இக்கோவிலை வலம்வரப் பிரகார அமைப்பு இருக்கிறது.

avudaiyarkoil-yokambal-sannidhi

கோவில் அமைப்பு

🛕 சிவாலயங்கள் பெரும்பாலும் கிழக்கு நோக்கியிருக்கும், சில மேற்கு நோக்கியிருக்கும். ஆனால் குருமூர்த்தமாக அமைந்த இத்திருக்கோவில் தெற்கு நோக்கியுள்ளது. தவிர, சிவாலயங்களில் இறைவன்; சிவலிங்கபாண வடிவில் அருவுருவாகக் காட்சிதர, இக்கோவிலில் மட்டும் குருந்தம் மேவிய குருபரனான ஆத்மநாதர் “அருவமாக” இருந்து சித்தத்தைச் சிவமாக்கும் சித்தினைச் செய்தருளுகின்றார். கோவிலைச் சுற்றி தேரோடும் நான்கு வீதிகள் அழகுற அமைந்துள்ளன. கோவிலுக்குள் மூன்று பிரகாரங்கள் உள்ளன.

🛕 சாலையில் இருந்து கோவிலுள் நுழையும் முன்பு மண்டபத்தின் மேற்புறம் குருந்தமர உபதேசக்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. உட்புற மண்டபத்தின் விதானம் மரத்தாலாகியது.

avudaiyarkoil-kurunthamara-nizhalil-manikavasagaruku-shivaeruman-ubathesam

🛕 பார்வையைச் சற்று உயர்த்தினால் மேற்புறக் கொடுங்கையின் மேலே ஒரு குரங்கும் (கீழ்நோக்கியவாறு), ஒரு உடும்பும் (மேல் நோக்கியவாறு) செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். “அலைபாயும் குரங்கு மனத்தை அடக்கி, ஆத்மநாதரின் திருவடியில் உடும்புப்பிடிபோல நிறுத்தி அவருடைய திருவடிகளைச் சிக்கென பிடித்து, உய்வுபெற வேண்டுமென்னும்” எண்ணத்துடன் உள்ளே செல்க என்று நமக்கு உணர்த்துவது போல இது உள்ளது.

🛕 அடுத்துள்ள பெரிய மண்டபம் ரகுநாத பூபால மண்டபம். அற்புதமான வேலைப்பாடுடைய பெரிய மூர்த்தங்கள், அகோர வீரபத்திரரும் ரண வீரபத்திரரும் உட்புறமாகத் திரும்பியவாறு தரிசனம் தருகின்றனர். மத்தியில் மேற்புறத்தில் விராட் சொரூபம் வண்ணத்தில், பாலவனம் ஜமீன்தாரர்களின் முன்னோர்களான வேதவனப் பண்டாரம், ஆறு முகப் பண்டாரம் ஆகியோர்களால் இம்மண்டபம் 330 ஆண்டுகட்கு முன்பு கட்டப்பட்டதாம்.

🛕 இடப்பால் சிவானந்த மாணிக்கவாசகர் சன்னிதி. வலமாகச் சுற்றி வரும்போது துவாரபாலகர்களையும் விநாயகரையும் தரிசிக்கிறோம். சுவரில் வண்ண ஓவியங்கள் மிகப்பழமையானவை. அழிந்த நிலையில் உள்ளன. அவற்றுள் ஒன்று. ‘அண்டரண்ட பட்சி’யின் வண்ண ஓவியம். இப்பறவை இரண்டு யானைகளை ஒரு சேரத் தூக்குமளவுக்கு வலிமையுடைய பறவையாகத் திகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. பாம்பன் சுவாமிகள் பாடியுள்ள வீரபத்திரச் சக்கரத்தின் வண்ண ஓவியம் உள்ளது. அட்டாங்கயோக வளர்ச்சி சிற்பங்கள் மேற்புறத்தில் உள்ளன. தூணில் கண்ணப்பர், கண்களை அப்பும் கோலம் முதலியவைகளையும் காணலாம். மண்டபத்தின் ஓரங்களில் அமைந்துள்ள கொடுங்கைகளின் அழகைக் கண்டு ஆனந்தம் பெறலாம். கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளைக் கொண்டு விளங்குகிறது. இத்திருக்கோவில் யோகம் மற்றும் ஞான மார்க்கத்தார் போற்றும் சிறப்புடையது.

avudaiyarkoil-manikavasagar-sannidhi

🛕 உள்கோபுரத்தை கடந்து சென்றால் அடுத்துள்ளது பஞ்சாட்சர மண்டபம் – இதை கனகசபை என்பர். 300 ஆண்டுகட்கு முன் கட்டப்பட்டதாகும். கொடுங்கைகளை அழகாகப் பெற்றுள்ள இம்மண்டபத்தின் மேற்புறச் சுவரில் எண்ணற்ற புவனங்களைக் குறிக்கும் அட்சரங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் இருதலைகளும் ஓருடலும் கொண்டு பின்னிய நிலையிலுள்ள பாம்பும், சாமுத்திரிகா லட்சணத்தைக் காட்டும் பெண் முதலான சிற்பங்களும் உள்ளன. இங்குள்ள தூண் ஒன்றில் நவக்கிரகங்கள் கல்லில் அடித்து வைக்கப்பட்டுள்ளன. தனியாக இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை. சந்நிதி மேற்புறத்தில் 27 நட்சத்திர வடிவங்களும் கல்லிற் செதுக்கப்பட்டுள்ளன. சந்நிதியில் வெளிச்சுவரில் வண்ண ஓவியத்தில் ஸ்பரிச – உபதேச – திருவடி தீட்சை ஓவியங்கள் உள்ளன.

avudaiyarkoil-27-natchathiram-art

🛕 அடுத்தது நிருத்த மண்டபம்/தில்லை மண்டபம் – இதை நடனசபை/ நர்த்தன சபை என்பர். மண்டபத்தின் இரண்டு தூண்களில் பதஞ்சலி, வியாக்கிரபாதர் சிற்பங்கள் உள்ளன. இதில் குறவன், குறத்தி சிலைகள் அற்புதமான கலையழகு. தலைக்கொண்டை முதல் ஒவ்வொரு உறுப்பையும், கை விரல் ரேகைகள் கூடத் தெளிவாகத் தெரியும் வண்ணம் செதுக்கியுள்ள கைவண்ணம் – வேடனின் நளினத் தோற்றம் – இவ்வாறே வலதுபுறம் காட்சித்தரும் வேடன் வேடுவச்சி சிற்பங்கள் – அற்புதமான கலையழகு கருவூலங்கள்.

🛕 வாயிலைக் கடந்து உட்புகுந்தால் அடுத்து வருவது தேவசபை – சுந்தர பாண்டிய மண்டபம் (சுந்தர பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்டதாதலின் இப்பெயர் பெற்றது). இம்மண்டபம் நடுவில் சதுர அமைப்பும் நான்கு புறமும் தாழ்வார அமைப்பும் கொண்டிருக்கிறது. நடுப்பகுதியிலுள்ள தூண்களில் குதிரைச் சாமி என்ற அசுவநாத சிற்பமும், பாண்டிய மன்னன் சிற்பமும், மாணிக்கவாசகரின் அமைச்சர் கோலச் சிற்பமும், குறும்பர்கோன் சிற்பமும் உள்ளன. புவனம், தத்துவம், கலை என்ற ஆறு அத்துவாக்களும் கட்டங்களாக இம்மண்படத்தின் மேல் தளத்தில் – மந்திரம், பதம், வன்னம், அமைத்துக் காட்டப்பெற்றுள்ளன. மேல் தளத்தை ஒட்டியமைந்த ஒரு சரத்தில் முந்நூற்றொருவர் சிற்பமும், நம்பிமார் ஒருவர் சிற்பமும் உள்ளன.

🛕 இடப்பால் பிராகாரத்தில் மாணிக்கவாசகர் உற்சவ மூர்த்தி சந்நிதி. இப்பெருமானைத் தரிசித்து விட்டுத்தான் மூலவரைத் தரிசிக்க செல்ல வேண்டும் என்பது இக்கோவில் மரபு. சுவாமியைப் போலவே அம்பாளும் தெற்கு நோக்கிய சந்நிதி; சுவாமியைப் போலவே அம்பாளும் அருவம்தான்.

🛕 அடுத்து தல விசேடக் காட்சியான குருந்தமர உபதேசக் காட்சி. கல்லில் வடித்துள்ள குருந்தமரம் – கீழே இறைவன் குரு வடிவில் அமர்ந்திருக்க, எதிரில் மாணிக்கவாசகர் பவ்வியமாக இருந்து உபதேசம் பெறும் காட்சி வடிக்கப்பட்டுள்ளது. ஆனித் திருமஞ்சன நாளிலும், மார்கழித் திருவாதிரையிலும் மாணிக்கவாசகருக்கு உபதேச ஐதீகம் நடக்கிறது. இங்குள்ள திருவாசகக் கோவிலில் திருவாசக ஓலைச்சுவடியே இருப்பது விசேடம்.

🛕 அடுத்த சபை, சத்சபை – இங்குள்ள விசாலமான கல்மேடையில்தான் சுவாமிக்கு கைபடாத (புழுங்கல் அரிசி) அன்னம் நிவேதிக்கப்படுகிறது. (இதனால் இதற்கு அமுத மண்டபம் என்றும் பெயர்).

🛕 அடுத்தது, சித்சபை – பூஜை செய்வோர் நிற்குமிடம். ஐந்து (பஞ்ச) கலைகள் தீபங்களாக காட்சி நல்குமிடம்.

🛕 பரமசுவாமியான ஆத்மநாதர் எழுந்தருளியுள்ள கருவறையே – குருவருள் கொலு வீற்றிருக்குமிடமே ஆநந்த சபை. ஆவுடையார் – சதுரபீடம். மேலே சிவலிங்க பாணமில்லை. ஆத்மநாதசுவாமி அருவமாகக் காட்சியளிக்கிறார். அதற்குரிய இடத்தில் தங்கத்தாலான குவளை (ஆவுடையாரின் மேலே) சார்த்தி வைக்கப்பட்டுள்ளது. ஆவுடையாரின் பின்னால் 27 நட்சத்திரங்களைக் கொண்டதான திருவாச்சி உள்ளது. அதன்மேலே மூன்று விளக்குகளை வைத்துள்ளனர். அவற்றுள் சிவப்பு அக்கினியையும், வெண்மை சூரியனையும், பச்சை சந்திரனையும் குறிக்கிறதென்பர். சுவாமிக்கு முன்னால் இரு தூங்கா விளக்குகள் சுடர்விடுகின்றன.

தியாகராஜ மண்டபம்

🛕 அக்கினி தீர்த்தத்திற்கு வடக்கே பிரகாரத்தின் வடகோடியில் தியாகராஜ மண்டபம் இருக்கிறது. இதற்கு அச்சுதப்ப பூபால மண்டபம் என்ற பெயரும் உண்டு. இம்மண்டபத்து இரண்டு பெரிய தூண்களில் குதிரை வீரர் சிற்பங்கள் இரண்டு உள்ளன. மண்டபத்தின் நடுவில், உள்மதிலை ஒட்டினாற்போல் மேற்கு முகமாக முத்து விநாயகர் சந்நிதி உள்ளது. இம்மண்டபத்தின் மேல் தளத்தில் கருங்கல் சங்கிலி தொங்குகிறது.

🛕 இந்த மண்டபத்தின் வடக்குப் பகுதியில் ஊஞ்சல் மண்டபம் ஒன்று இருக்கிறது. இவ்விரு மண்டபங்களும் ஒன்றுபோல் இணைக்கப்பட்டு மேல் தளத்தால் மூடப்பட்டிருக்கிறது. மேல் தளத்தின் நான்கு பக்கங்களிலும் உள்ள கொடுங்கைகள், அதி அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. வடகிழக்குப் பகுதியிலுள்ள கொடுங்கையில் சில துளைகளைக் காணலாம். இத்துளைகள், கொடுங்கையின் கனம் எவ்வளவு என்பதை அறியத் துணையாகின்றன. கொடுங்கையின் கனம் சுமார் ஓரங்குலம். (ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், மேற்கூரை உண்மையிலேயே கல்லால் ஆனதா அல்லது இரும்பினாலானதா என்று தெரிந்து கொள்வதற்காக துப்பாக்கியால் சுட்டு துளை ஏற்படுத்தியதாகவும் கூறுவார்.)

வசந்த மண்டபம்

🛕 மூன்றாம் பிரகாரத்தில் கிழக்குப் பகுதியில் வெளிமதிலை ஒட்டித் திருமாளிகைப் பத்தி மண்டபம் உள்ளது. மடப்பள்ளிக்குத் தெற்கே திருமாளிகைப் பத்தியில் வசந்த மண்டபம் இருக்கிறது. இம்மண்டபத்தின் நடுவில் ஒருமேடையும் அதனைச் சுற்றி நீராழியும் உள்ளன. இந்த மேடைக்கு வடக்கே வசந்த விநாயகர் எழுந்தருளி உள்ளார். ஆனி, மார்கழி மாத விழாக்களில் ஐந்தாந் திருநாள் விழாவன்று மாணிக்கவாசகர் இம்மண்டபத்தில் எழுந்தருளிக் காட்சி வழங்குவது வழக்கம். இதற்குத் தெற்கே திருமாளிகைப் பத்தியில் நெற்களஞ்சிய அறைகளும் அரிசிக் களஞ்சிய அறைகளும் உள்ளன.

avudaiyarkoil-kurunthamaram-manikavasagar-shivaperuman

ஆவுடையார் கோவில் சிறப்புகள்

🛕 ஆவுடையார்கோவில், இறைவனின் கட்டளைப்படி மாணிக்கவாசகரால் கட்டப்பட்டது.

🛕 இக்கோவிலில் கொடிமரம், பலிபீடம், நந்தி, சண்டீசர் இல்லை.

🛕 திருவாசகத்திலுள்ள 51 பகுதிகளுன் 20 பகுதிகள் (சிவபுராணம், திருச்சதகம், திருப்பள்ளியெழுச்சி, செத்திலாப்பத்து, அடைக்கலப்பத்து, ஆசைப்பத்து, அதிசயப்பத்து, புணர்ச்சிப்பத்து, வாழாப்பத்து, அருட்பத்து, பிரார்த்தனைப்பத்து, குழைத்தபத்து, உயிருண்ணிப்பத்து, பாண்டிப்பதிகம், திருவேசறவு, அற்புதப்பத்து, சென்னிப்பத்து, திருவார்த்தை, திருவெண்பா, பண்டாயநான்மறை) இத்தலத்தில் பாடப்பெற்றவை.

🛕 வாதவூரரை மணிவாசகராய் மாற்றிய இத்திருப்பெருந்துறைக்கு பதினெட்டுத் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. அவைகளாவன – 1. திருப்பெருந்துறை, 2. குருந்தவனம், 3. சதுர்வேதபுரம், 4. சிவபுரம், 5. ஞானபுரம், 6. திரிமூர்த்திபுரம், 7. தென்கயிலை, 8. தேசுவனம், 9. பராசத்திபுரம், 10. பவித்திரமாணிக்கம், 11. யோகபீடம், 12. ஆளுடையார் கோவில், 13. உபதேசத்தலம், 14. அனாதிமூர்த்தத்தலம், 15. ஆதிகயிலாயம், 16. சதுர்வேத மங்கலம், 17. தட்சிணகயிலாயம், 18. யோகவனம் என்பனவாம்.

🛕 இத்தலத்தில் ஆத்மநாத சுவாமிக்கும் பதினெட்டு திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. அவை – 1. ஆத்மநாதர், 2. பரமசுவாமி, 3. திருமூர்த்திதேசிகர், 4. சதுர்வேதபுரீசர், 5. சிவயோகவனத்தீசர், 6. குந்தகவனேசர், 7. சிவக்ஷேத்ரநாதர், 8. சன்னவனேசர், 9. சன்னவநாதர், 10. மாயபுரநாயகர், 11. விப்பிரதேசிகர், 12. சப்தநாதர், 13. பிரகத்தீசர், 14. திருதசதேசிகர், 15. அசுவநாதர், 16. சிவபுரநாயகர், 17. மகாதேவர், 18. திரிலோககுரு என்பன. மற்றும் ஷடாராதனர் என்ற பெயருமுண்டு.

🛕 இத்தலம் வனம், தலம், புரம், தீர்த்தம், மூர்த்தி, தொண்டர் எனும் 6 சிறப்புக்கள் அமைந்தது. அவை: 1. வனம் – குருந்தவனம், 2. தலம் – தீர்த்தத்தலம், 3. புரம் – சிவபுரம், 4. தீர்த்தம் – தீருத்தமாம் பொய்கை, 5. மூர்த்தி – ஆத்மநாதர், 6. தொண்டர் – மாணிக்கவாசகர்.

avudaiyarkoil-panchabootham-art

🛕 கொடுங்கைகளின் அழகுக்குப் பெயர் பெற்ற கோவில். பண்டைநாளில் ஸ்பதிகள் கோவில் கட்டுவதற்கு உடன்படிக்கை எழுதுங்கால் ஆவுடையார்கோயில் கொடுங்கைகளைப்போலத் தங்களால் அமைக்க முடியாது என்பதைக் குறிக்கும் வகையில் “ஆவுடையார்கோயில் கொடுங்கைகள் நீங்கலாக” என்று எழுதும் வழக்கம் இருந்ததாம்.

🛕 கனகசபை – 81 தீபங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நர்த்தனசபை (நடன/நிருத்தசபை) – பதஞ்சலி வியாக்ரபாதர்கள் பெருமானிடம் கருணையை வேண்டிப் பெற்ற இடம் 224 புவன தீபங்களையுடையது. தேவசபை – சூரனிடம் பயந்த தேவர்கள் தவஞ்செய்த இடமாகச் சொல்லப்படுவது. இங்கு ஏகாதச மந்திரங்கள் 11 தீபங்களாக உள்ளன. சத்சபையில் 36 எண்ணுடைய தத்துவத் தீபங்கள் பிரகாசிக்கின்றன. சித்சபையில் அகர முதலான 51 எண்ணுடைய தீபங்கள் திகழ்கின்றன. ஆநந்தசபையில் (கருவறை) பஞ்ச கலைகள் என்னும் சுடர் பிரகாசிக்கிறது. இவ்வாறு இத்திருக்கோவிலில் தத்துவம் அனைத்தும் தீப வடிவங்களாகவே வைத்துக் காட்டப்பட்டுள்ளன.

🛕 இத்தலத்தில் 24 தீர்த்தங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவை – அக்கினி தீர்த்தம், ஆத்ம கூபம், வேத தீர்த்தம், நாராயண தீர்த்தம், தேவ தீர்த்தம், வாயு தீர்த்தம், மானவ தீர்த்தம், காலாக்னிருத்ர தீர்த்தம், ரிஷி தீர்த்தம், ஆசுர தீர்த்தம், காந்தர்வ தீர்த்தம், இந்திர தீர்த்தம், பராசர தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர வாவி, வைதிக தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சரஸ்வதி கூபம், பக்த தீர்த்தம், பாண்டவ தீர்த்தம், கௌதம தீர்த்தம், தொண்டர் குழி, கீழ் நீர், சுவேதநதி என்னும் வௌ¢ளாறு என்பவாகும்.

🛕 ஆவுடையார் கோவிலில் நவக்கிரக சன்னதி இல்லை. ஆனால், நவக்கிரக தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. முதல் தூணில் ராகு, கேது, 2வது தூணில் சனி, வியாழன், சுக்கிரன், செவ்வாய், மூன்றாவது தூணில் உஷா, பிரத்யூஷா, சூரியன், புதன், நான்காம் தூணில் சந்திரனும் இருக்கின்றனர். அருகிலுள்ள 2 தூண்களில் காளத்தீஸ்வரர், கங்காதேவி உள்ளனர்.

avudaiyarkoil-veerabathirar

ஆவுடையார்கோயிலில் பார்த்து ரசிக்கவேண்டிய சிற்பங்கள்

  • வல்லப கணபதி
  • உக்கிர நரசிம்மர்
  • பத்திரகாளி
  • ஊர்த்துவ தாண்டவர்
  • பிட்சாடனர்
  • வில் ஏந்திய முருகன்
  • ரிஷபாந்திகர்
  • அரியர்த்த மூர்த்தி (சங்கர நாராயணர்)
  • வீரபத்திரர்கள்
  • மாணிக்கவாசகர் அமைச்சர் கோலம், துறவுக் கோலம்
  • அசுவநாதர் (குதிரைச்சாமி)
  • குறவன், குறத்தி
  • டுண்டி விநாயகர்
  • உடும்பும் குரங்கும்
  • கற்சங்கிலிகள்
  • இரண்டே தூணில் ஓராயிரம் கால்கள்
  • 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவி திருவுருவங்கள்
  • பல நாட்டுக் குதிரைச் சிற்பங்கள்
  • 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்
  • நடனக்கலை முத்திரை பேதங்கள்
  • சப்தஸ்வரக் கல்தூண்கள்
  • கூடல்வாய் நிழல் விழும் பகுதி (பசுமாட்டின் கழுத்து போல் இருப்பது).

Avudaiyarkoil Temple Festivals

திருவிழா: ஆனித் திருமஞ்சனம் – 10 நாட்கள் – 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். மார்கழி திருவாதிரை (திருவெம்பாவை உற்சவம் – 10 நாள் – 50 ஆயிரம் பக்தர்கள் கூடுவர். இந்த இரண்டு திருவிழாக்கள்தான் மிக முக்கியமானவை. இவற்றுள் ஆனிமாத உற்சவம் மகத்தானது. மாணிக்கவாசகரை முதன்மைப்படுத்தி இத்திருவிழாக்கள் நடைபெறும். சுவாமிக்கு உற்சவமில்லாதபடி மாணிக்கவாசகருக்கு நடப்பதால் இதனைப் பக்தோத்சவம் என்று நினைக்க கூடாது. மாணிக்கவாசகர் சிவமாகவே விளங்குவதால் இதனை பிரம்மோற்சவமாகவே கூறவேண்டும்.

🛕 திருவிழாக்காலங்களில் இடபம், திருத்தேர் முதலான வாகனங்களில் மாணிக்கவாசகர் திருவுலா வருகிறார். கார்த்திகை கடைசி சோமவாரம் (திங்கள் கிழமை) மிக மிக விஷேசம் ஆடிவெள்ளி விஷேசம் – தை வெள்ளி – ஆனி மகம் தேரோட்டம், சிவராத்திரி, பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை, நவராத்திரி, ஆவணிமூலம் முதலான நாட்களில் சுவாமிக்கு விசேச பூஜைகள் நடைபெறும்.

avudaiyarkoil-natiyapengal-rock-art

பிரார்த்தனை: இந்த சிவதலத்தில் வழிபடுவோர்க்கு குருபலன் கூடும். மாணிக்கவாசகருக்கு ஈசனே குருவாய் வந்து உபதேசித்த தலம் என்பதால் இந்த தலத்தில் வழிபடுவோர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதோடு சிறந்த ஞானம் பெற்றவராகத் திகழ்வர்.

🛕 தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு திருமணவரம், குழந்தை வரம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தித்துக் கொள்கின்றனர்.

நேர்த்திக்கடன்: புழுங்கல் அரிசி சாதம் வடித்து ஆவியுடன் சுவாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும்.அதை குழத்தேங்குழல், அதிரசம், அப்பம், வடை முதலானவற்றை வைத்து நிவேதனம் செய்து தீபாராதனைகள் முறைப்படி செய்யப்படும். இவை தவிர சுவாமி அம்பாளுக்கு வழக்கமான அபிசேக ஆராதனைகள் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். கோவில் திருப்பணிக்கு பொருளுதவி வழங்கலாம்.

Avudaiyarkoil Temple Timings

திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

ஆவுடையார் கோவிலுக்கு போவது எப்படி?

🛕 புதுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி சென்றால் அங்கிருந்து ஆவுடையார் கோவிலுக்கு பேருந்து போக்குவரத்து வசதி நிறைய உண்டு. முக்கிய ஊர்களிலிருந்து தூரம்: திருச்சியிலிருந்து – 100 கி.மீ. புதுக்கோட்டையிலிருந்து – 48 கி.மீ. அறந்தாங்கியிலிருந்து – 13 கி.மீ. தஞ்சையிலிருந்து – 102 கி.மீ.

avudaiyarkoil-rock-rings

Avudaiyarkoil Temple Address

ஆத்மநாதசாமி திருக்கோவில், ஆவுடையார்கோயில், திருப்பெருந்துறை.

Aathmanatha Swamy Temple,
Thiruperunthurai (Avudaiyarkoil),
Avudaiyarkoil-Mimisal Rd, Ambalpuram, Tamil Nadu 614618.



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்