×
Tuesday 10th of December 2024

மதுரை அழகர் கோவில் (கள்ளழகர்)


Read Kallazhagar Temple History in English

Azhagar Kovil

மதுரை கள்ளழகர் திருக்கோவில்

மூலவர் பரமஸ்வாமி
உற்சவர் சுந்தர்ராஜப் பெருமாள் ( ரிஷபத்ரிநாதர்), கல்யாணசுந்தர வல்லி
அம்மன்/தாயார் ஸ்ரீதேவி, பூதேவி
தல விருட்சம் ஜோதி விருட்சம், சந்தனமரம்.
தீர்த்தம் நூபுர கங்கை
புராண பெயர் திருமாலிருஞ்சோலை
ஊர் அழகர்கோவில்
மாவட்டம் மதுரை

Alagar Kovil Madurai

அழகர் திருக்கோவில் மதுரையிலிருந்து 21 கி.மீ. தொலைவில் இருக்கும் அழகர் மலையில் அமைந்துள்ள திருமால் கோவிலாகும். இக்கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் (பாடப்பெற்ற) செய்யப்பட்ட 108 வைணவ திவ்யதேசங்களுள் ஒன்றாகும். இனி இந்த கோவிலின் சிறப்புகளைப் பார்க்கலாம்:

இந்த மலையில் திருமால், “அழகர்”ன்ற பெயரில் கோவில் கொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று சொல்லப்படுகிறது. இதற்குத் திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்திரி அல்லது இடபகரி முதலிய பல பெயர்கள் உண்டு.

இது கிழக்கு மேற்காக 18 கி.மீ நீளமும் 320 மீட்டர் உயரமும் உடையது. அதிலிருந்து பல சிறிய மலைகள், நாலா பக்கமும் பிரிந்து போகின்றன. இதன் தென்புறம் அடிவாரத்தில் தான் அழகர் கோவில் இருக்கிறது. இம்மலையில் பலவகை மரங்களும், செடிகொடிகளும் பச்சைப்பசேலெனக் காட்சியளிக்கின்றன. இதில் இயற்கையாகவே பல சோலைகள் அமைந்திருப்பதால் இதைச் சோலைமலை, திருமாலிருஞ்சோலை, வனகிரி, எனச் சொல்லப்படுகிறது.

இந்த கோவிலை சுற்றி நிறைய வளர்ச்சிப்பணிகள், மாற்றங்கள் எல்லாம் நடந்ததிருக்கு. இந்த கோவிலின் காலம் சரியாக தெரியவில்லை என்றாலும் இந்த திருக்கோவிலை பாண்டிய மன்னர்கள் கட்டியதாகச் சொல்லப்படுகிறது. கி.பி 1251 முதல் 1563 வரை இந்தத் திருக்கோவில் பாண்டிய மன்னர்களின் வசம் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் காலக் கட்டத்தில்தான் இந்தத் திருக்கோவிலை குலசேகர பாண்டியனின் மைந்தனான மலையத்துவஜா பாண்டியன் புதுப்பித்தாக வரலாற்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. அதன்பிறகு கி.பி1251 முதல் 1270 வரை மதுரையை ஆண்ட ஜடாவர்மன் சுந்தர பாண்டியன், கோவிலுக்கு பொன்னாலான விமானத்தை அமைத்தாராம். அதன்பின்னர் விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மதுரை வந்தபோது, கிருஷ்ணதேவராயர் இந்த கோவிலில் பல புணரமைப்பு பணிகள் செய்து, ஆண்டுதோறும் திருவிழாக்கள் நடத்த ஏற்பாடு செய்தாராம்.

அதன்பின் ஆட்சி செய்த நாயக்கர்கள் அழகர் கோவிலை பாண்டிய, விஜயநகர மன்னர்களைப் போல நன்றாக பராமரித்தார்கள். அதன்பிறகு கிபி 1558 முதல் 1563 வரை ஆண்ட விஷ்வநாத நாயக்க மன்னன் இந்தக் கோவிலில் பல திருப்பணிகளை செய்தாராம். சங்க சிறப்புப் பெற்ற இத்தலத்தைப் பற்றி ஆழ்வார்கள் தங்கள் பாடலில் குறிப்பிட்டுள்ளனர். நக்கீரர் உள்பட பல புலவர்கள் அழகர் கோவிலைப் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர்.

எப்பொழுது தோன்றியது என்ற சொல்ல முடியாத பழமை உடையது இக்கோவில். மிகவும் பழைய தமிழ் நூல்களிலும், வடமொழிப் புராணங்களிலும் கூட இதன் பெருமை சொல்லப்பட்டு இருக்கு. இங்கே உள்ள மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகியவை பற்றிய வராக புராணம், பிரம்மாண்டமான புராணம், வாமன புராணம், ஆக் நேய புராணம் முதலியவற்றிலும் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவற்றை தொகுத்து ஒன்று சேர்த்து “விருஷ பாத்திரி மகாத்மியம்” என்ற ஸ்தல புராணத்தில் இத்தலத்தின் புராணப் பெருமைகளை விரிவாக எடுத்து சொல்லப்பட்டு இருக்கு. இங்குக் கோவில் கொண்டு உறைகின்ற இறைவன் அழகர் என்று சொல்லபடுகிறார். இவரே வடமொழியில் சுந்தர ராஜன் என்று அழைக்கப்படுகிறார்.

இந்த திருத்தலம் இரண்டு கோட்டைகளால் சூழப்பட்டு இருக்கு. கோவில் அமைந்துள்ள உட்கோட்டை இரணியங் கோட்டை எனவும், வெளிக்கோட்டை அழகாபுரிக் கோட்டை எனவும் சொல்லப்படுகிறது. நாட்டுப்புறப் பாடல்களில் உட்கோட்டையை நலமகராசன் கோட்டை என்று இத்தலத்தினைப் பெரியாழ்வார் பாடுவதால் அவர் காலத்திலேயே இக்கோவிலைச் சுற்றி ஒரு மதில் இருந்திருக்க வேண்டுமென தோன்றுகிறது. இங்குள்ள வெளிக்கோட்டை கி.பி. 14 – ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை அரசாண்ட வானாதிராயர்களால் கட்டப்பட்டது.

பெரியாழ்வார் குறிப்பிடும் மதில்  இரணியம் கோட்டை  எனப்படும் உட்கோட்டை மதிலாகும். இதற்குள் பண்டைக்காலத்தில் பிள்ளைப் பல்லவராயன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட அக்கிரஹாரம் ஒன்று இருந்தததாம். அது சமாந்தநாராயண சதுர்வேதமங்கலம் என்ற பெயருடன் அழைக்கப்பட்டதாம். வெளிக்கோட்டைப் பகுதியில் தேர் மண்டபம் இருக்கு.

Alagar Kovil Gopuram

தேர் மண்டபத்தைத் தாண்டிச் சென்றால் உட் கோட்டையின் தெற்கு வாசலான இரணியம் வாசலை அடையலாம். இவ்வாசலை தாண்டி உள்ளே நுழைந்தால் இடப்புறம் இருப்பது யானை வாகன மண்டபம். இந்த மண்டபத்தின் வடக்கே கோபுரம் அமைந்திருக்கிறது. இந்த கோபுரவாசலில் உள்ள கல்வெட்டுகளில் கி.பி. 1513 – ல் ஆண்ட விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவ மகாராஜாவின் கல்வெட்டே முக்கியமானதாகும். எனவே இக்கோபுரம் 16 – ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் கட்டப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இக்கோபுர வாசலை மக்கள் பயன்படுத்த முடியாது. எப்போதும் அடைத்தேக் கிடக்கும். இதற்கு முன்னர் பக்கச் சுவர்களோடு கூடிய இரட்டைக் கதவுகள் உள்ளன. இவையே பதினெட்டாம் படிக் கருப்பணசாமியாக வழிப்படப்படுகிறது.

இதன் எதிரில் உள்ள பதினாறு கால் மண்டபம் ஆண்டாள் மண்டபம், அல்லது சமய மண்டபம் எனப்படுது. ஆடி, சித்திரை, திருவிழாக்களில் இக்கோவில் ஆச்சாரியர்களான ஆண்டாள் இம்மண்டபத்தில் வீற்றிருப்பார். இதற்கு வடப்புறத்தில் உள்ளது கொண்டப்பநாயக்கர் மண்டபமாகும். இதற்கு வடப்புறம் சென்று மேற்கே திரும்பினால் வண்டிவாசல் என்ற வாசல் காணப்படுகிறது . இதன் வழியாக நுழைந்து மேற்கு நோக்கி சென்றால் எதிராசன் திருமுற்றம் என்று வழங்கப்படும் பரந்த வெளியை அடையலாம்.

Kallalagar Temple

இங்கே பெருமாள், சுந்தரராஜராக அருள் பாலிக்கிறார். இந்தக் கோவிலின் முக்கிய தெய்வமாகக் கருதப்படும் பரமஸ்வாமி சிலையும், சுந்தரராஜ பெருமாளான கள்ளழகர் சிலையும் தங்கத்தினால் ஆனதாகும். பெருமாளுக்கு வலப்புறமாக கல்யாண சுந்தரவல்லியும், இடப்புறமாக ஆண்டாளும் காட்சி தருகிறார்கள். ஆண்டாள் ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து தன் தந்தை பெரியாழ்வாருடன் இத்தலத்திற்கு வந்து பெருமானை தரிசித்ததாக புராணங்களில் சொல்லப்படுகின்றது. இக்கோவிலில், சுதர்சனனார், யோக நரசிம்மர், கருப்பசாமி ஆகியோருக்கு தனித்தனி கருவறைகள் இருப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். கடைசியாக பெருமான் சந்நதி உள்ளது.

அடுத்து வருவது எதிராசன் திருமுற்றம். இம்முற்றம் ஸ்ரீ ராமானுஜர் பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த முற்றத்தின் நடுவில் திருக்கல்யாணமண்டபம் உள்ளது. பங்குனி உத்திரத்தில் இங்குதான் திருக்கல்யாண உற்சவம் நடைப்பெறுகிறது. இம்மண்டபத்தை விஜயநகர மன்னர் காலச்சிற்பங்கள் அழகாக செதுக்கப்பட்டு பார்ப்பதற்கு கலைநயத்தோடு இருக்கிறது . இத்திருமுற்றத்தில் பல மடங்கள் சமயப் பணியாற்றின. அதில் முக்கியமானது இராமானுஜர் காலத்தில் ஏற்படுத்தப்பட்ட திருமாலிருஞ்சோலை ஜூயர் மடம் இந்த நூற்றாண்டின் முற்பகுதி வரை தொடர்ந்து பல ஜீயர்கள் இங்கே தொண்டாற்றினார்களாம்.

திருக்கல்யாண மண்டபத்தை அடுத்துள்ள தொண்டைமான் கோபுரம், செல்வத்தூர் காதியந்தர் மகனான தொண்டைமான் என்பவரால் கட்டப்பட்டுள்ளன என்பதற்கு கல்வெட்டு குறிப்புகள் இருக்கு. இந்த கோபுரவாசலை அடுத்து உள்ளே காணப்படும் மண்டபத்தை சுந்தரபாண்டியன் கட்டினான் என்றும், அதனால் இவருக்கு பொன் மேய்ந்த பெருமாள் என்றும் அழைக்கபட்டாராம்.

கொடிக்கம்பத்தை அடுத்து இருக்கும் கருடமண்டபம், ஆரியன் மண்டபம் என்றழைக்கப்படுகிறது. இதற்கு படியேற்ற மண்டபம் என்றும் பெயர் உண்டு. இந்த மண்டபத்தை தோமராச அய்யன் மகனான ராகவராஜா என்பவர் கட்டி முடித்தாராம். படியேற்ற மண்டபத்தை அடுத்துள்ளது முனைய தரையன் திருமண மண்டபமாகும். இதற்கு அலங்கார திருமண மண்டபம் என்றும் ஒரு பெயர் வழங்கப்படுகிறது. இம்மண்டபத்தைக் கட்டியவன் ”மிழலைக் கூற்றது நடுவிற் கூறு புள்ளுர்க் குடி முனையதரையனான பொன் பற்றுடையான் மொன்னப் பிரான் விரதம் முடித்தப் பெருமான்” என்று கல்வெட்டுக்கள் மூலம் சொல்லப்பட்டு இருக்கிறது.

Alagar Kovil Special

மூலவர் தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் இங்கு அமர்ந்தக் கோலத்தில் காட்சித் தருகிறார். பஞ்சாயுதம் (சங்கு, சக்கரம், கதை, வில், வாள்) தாங்கிய நிலையில் நின்ற திருக்கோலத்தில் பெருமாள் காட்சி தருகிறார். பெருமாள் சப்தரிஷிகள், சப்த கன்னிகள், பிரம்மா, விகனேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார். 6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம். சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார்.

மதுரையில் நடக்கும் சித்திரை திருவிழாவில் முக்கியமானது மீனாட்சிக்கு திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் வைபவமும் ஆகும். அழகர் ஆற்றில் இறங்கும் விழா என்பது மகாவிஷ்ணு இந்த உலகை அளக்க தனது திருவடியை தூக்கினார். அப்போது பிரம்மன், திருமாலின் தூக்கிய திருவடியை கழுவி பூஜை செய்தார். அப்படி கழுவிய போது மகாவிஷ்ணுவின் கால்சிலம்பு (நூபுரம்) அசைந்து அதிலிருந்து நீர்த்துளி தெளித்து அழகர்மலை மீது விழுந்தது. கங்கையை விட புனிதமான இந்த தீர்த்தமே, இந்த தீர்த்தத்தில் அமர்ந்து தான் சுதபஸ் என்ற மகரிஷி பெருமாளை நினைத்து தியானத்தில் இருந்தார்.

Alagar Aatril Iranguthal

அப்போது மகரிஷியை காண துர்வாச முனிவர் வந்தார். பெருமாளின் நினைப்பில் இருந்ததால், துர்வாசரை சரியாக உபசரிக்கவில்லை. கோபமடைந்த துர்வாசரோ, “மண்டூக பவ” அதாவது “மண்டூகமான நீ மண்டூகமாகவே (தவளை) போ” என சாபமிட்டார். சாபம் பெற்ற சுதபஸ், “துர்வாசரே! பெருமாளின் நினைப்பில் இருந்ததால் தங்களை கவனிக்க வில்லை. எனக்கு சாப விமோசனம் தந்தருள வேண்டும்”, என வேண்டினார். அதற்கு துர்வாசர், வேதவதி என்கிற வைகை ஆற்றில் தவம் செய். அழகர்கோவிலில் இருந்து பெருமாள் வருவார்.

அப்போது உனக்கு சாப விமோசனம் கிடைக்கும், என்றார். அழகர் கோவிலிலிருந்து பெருமாள் கிளம்பி மதுரை தல்லாகுளத்தில் ஆண்டாள் தொடுத்த மாலையை சூட்டிக் கொண்டு குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்குகிறார். சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு காட்சி தந்து சாபவிமோசனம் தருகிறார். அழகர் கோவிலிலிருந்து மதுரை வந்து, மீண்டும் கோவில் திரும்பி செல்லும் வரை அழகர் சுமார் 7 வாகனங்கள் மாறுகிறார்.

Alagar Kovil Festival

மண்டூக மகரிஷிக்கு காட்சி கொடுப்பதற்காக அழகர் கோவிலிலிருந்து பெருமாள் தேனூர் மண்டபத்தில், சித்ரா பவுர்ணமிக்கு மறுநாள் காட்சிதரும் சித்திரை திருவிழா ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. அதே போல் மீனாட்சி திருக்கல்யாணம் திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு வரை மாசிப்பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வந்தது. சைவத்திற்கு தனிவிழா, வைணவத்திற்கு தனிவிழா என கொண்டாடப்பட்டு வந்தது. திருமலை நாயக்கர் இரண்டு விழாவையும் ஒன்றாக்கி, சைவ, வைணவ ஒற்றுமை திருவிழா ஆக்கிவிட்டார். அழகர்கோவிலில் தான் லட்சுமி, பெருமாளைக் கைப்பிடித்தாள். அன்று முதல் கல்யாண சுந்தரவல்லி என்னும் பெயர்பெற்றாள் அன்னை. இந்தத் திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக் கொண்டது. மக்கள் மனதை கொள்ளையிட்டதால் இவர் “கள்ளழகர்” ஆனார்.

Madurai Alagar History Tamil

அழகரின் அபூர்வ வரலாறாக சொல்லப்படுவது, ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும்போது, அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார். இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது. அதை பாதுகாப்பது உன் பொறுப்பு. எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு, பற்கள் வெளியே தெரியும்படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார். இதைக்கண்ட உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன. நல்லது செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன்.

சரி! நமது உருவம் தான் இப்படி ஆகி விட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாகவது மிகவும் அழகாக இருக்க வேண்டும் என இந்த அழகர்கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு, இவனுக்கு காட்சி கொடுத்து “வேண்டியதை கேள்” என்று கூறினார். அதற்கு தர்மதேவன், நான் இந்த மலையில் தவம் செய்தபோது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருளவேண்டும். அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை எனக்குத் தரவேண்டும் என்றான்.

தர்மதேவனின் வேண்டுக்கோளின்படி மகாவிஷ்ணு சுந்தரராஜப்பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார். சுந்தரம் என்றால் “அழகு”. எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர் மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

Alagar Kovil Karuppasamy

அழகர் கோவிலின் சிறப்பம்சம் கருப்பண்ணசுவாமி இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்கும் கருப்பண்ணசுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம் படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். இப்பகுதி விவசாயிகள் அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

வசந்த மண்டபத்திற்கு கிழக்கே சற்றுத் தொலைவில் கட்டி முடிக்கப்படாமல் அரை குறையாக ஒரு கோபுரம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. இதிலுள்ள ஒரு கல்வெட்டு விசய நகர மன்னர்களின் வம்சத்து அரசர்களைக் குறிப்பிடுகிறது. இதன் காலம் கி.பி. 1646 ஆகும். எனவே கி.பி. 16 – ஆம் நூற்றாண்டு தொடங்கப் பெற்று பாதியிலேயே நின்று விட்டது என்று அறியலாம். இதனை இராய கோபுரம் என்று மக்கள் வழங்குவர்.

நேர்த்திக்கடன்: தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடு்த்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திகடனாக முடி காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு. பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள், துளசி தளங்கள், பூக்கள் பூ‌மாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

Azhagar Temple Timings

கள்ளழகர் காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.

 

Also, read

Alagar Kovil Map & Address

63 Staff Qtrs, Alagar Kovil Main Rd, Madurai, Tamil Nadu 618301

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்