×
Sunday 1st of December 2024

சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்


Chennimalai Murugan Temple History in Tamil

திருத்தலம் சென்னிமலை சுப்பிரமணியசாமி கோவில்
மூலவர் சுப்ரமணியசுவாமி (தண்டாயுதபாணி)
அம்மன் அமிர்த வல்லி, சுந்தர வல்லி
தல விருட்சம் புளியமரம்
தீர்த்தம் மாமாங்கம்
ஆகமம் காரண, காமிக ஆகமம்
புராண பெயர் புஷ்பகிரி, கரைகிரி, மகுடகிரி
ஊர் சென்னிமலை
மாவட்டம் ஈரோடு

சென்னிமலை முருகன் திருக்கோவில் கடல் மட்டத்திலிருந்து 1749 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது. ஈரோடு மாவட்டத்திலிருந்து தாராபுரம் செல்லும் நெடுஞ்சாலையில் சுமார் 28 கிலோ மீட்டர் தொலைவில் சென்னிமலை திருத்தலம் அமைந்துள்ளது.

Sennimalai Murugan Kovil

chennimalai murugan temple entrance gopuram

சென்னிமலை சுப்பிரமணியசுவாமி கோவில் வரலாறு

தல புராணம்: முன்னொரு காலத்தில் அனந்தன் என்ற நாகர்ஜூனனுக்கும், வாயு தேவனுக்கும் பலப்பரிட்சை நடந்தது. அனந்தன் மகாமேரு பருவதத்தை சுற்றிப்பிடித்துக் கொள்ள வாயு தேவன் கடுமையாக வீசி அனந்தன் பிடியிலிருந்து மேரு மலையை விடுவிக்க முயன்றார். அப்போது மேருவின் சிகரப்பகுதி முறிந்து பறந்து சென்று பூந்துறை நாட்டில் விழுந்தது. அச்சிகரப்பகுதியே சிரகிரி, புஷ்பகிரி, மகுடகிரி, சென்னிமலை என்றும் வழங்கலாயின.

தல வரலாறு: சென்னிமலைக்கு சுமார் 3 மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் கொடுமணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெருநகரமாயும், ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் சொல்லுகிறார்கள். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அந்நகரில் பண்ணையக்காரர் ஒருவருடைய பெரும் பண்ணையில் நூற்றுக்கணக்கான பசுமாடுகள் இருந்து வந்திருக்கிறது. அதில் ஒரு வளம்மிக்க காராம்பசுவும் இருந்தது.

தினமும் பசுக்கள் மேய்ப்பவன் அடைத்து வைப்பது வழக்கம். சில நாட்களாக காராம் பசுவின் மடியில் பால் இல்லாமல் இருந்து வந்ததை வேலையாள் தன் பண்ணையாரிடம் தெரிவித்தான். பண்ணையாரும் பல நாட்கள் இதை கவனித்து வந்தபோது, தினசரி மாலையில் ஆவினங்கள் கூட்டமாக தொட்டிக்கு திரும்பி வரும்போது காராம் பசு மட்டும் பிரிந்து சற்று தூரத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தன் மடியில் உள்ள பால் முழுவதும் தானாகவே சொறியவிட்டு பின் மறுபடியும் மாடுகள் கூட்டத்தில் சேர்ந்து வருவதை சில நாட்கள் கவனித்து விட்டு, அந்த குறிப்பிட்ட இடத்தில் மண்ணை தோண்டி பார்க்கச் செய்தார்.

சுமார் 5 / 6 அடி ஆழம் தோண்டியதும், எல்லோரும் அதிசயிக்கத்தக்க பூர்ண முகப்பொழிவுடன் ஒரு கற்சிலை தென்பட்டது. பண்ணையார் புளங்காகிதம் அடைந்து தன்னை ஆட்கொண்ட இறைவனே வந்து விட்டதாகக் கூறிக்கொண்டு விக்ரஹத்தை எடுத்து அதன் முகப்பொழிவில் ஈடுபட்டு மெய்மறந்திருந்தார். பின் விக்ரஹத்தை ஆராய்ந்தபோது விக்ரஹத்தின் இடுப்புவரை நல்ல வேலைப்பாட்டுடன் முகம் அதி அற்புதப் பொழிவுடன் இருக்க, இடுப்புக்குகீழ் பாதம் வரை சரியாக வேலைப்பாடில்லாமல் கரடுமுரடாக இருப்பதை அவர் ஒரு குறையாக எண்ணி அந்த பாகத்தையும் சிறந்த சிற்பியைக் கொண்டு உளியினால் வேலை துவங்கும் சமயம் அந்த இடத்தில் இரத்தம் பீறிட்டது.

இதை கண்ணுற்ற எல்லோரும் பயந்து மேற்கொண்டு சுத்தம் செய்வதை நிறுத்திவிட்டார்கள். பண்ணையார் தன் அபசாரத்திற்கு வருந்தி ஆண்டவர் இப்படியே இருக்க பிரியப்படுகிறார் என்று மகிழ்ந்து பயபக்தியுடன் ஆராதனை செய்து பக்கத்திலுள்ள குன்றின்மேல் ஒரு சிறிய ஆலயம் எழுப்புவித்து இந்த சிலையை பிரதிஷ்டை செய்ததாயும், அதுவே சென்னிமலை மலையின் பேரில் தண்டாயுதபாணி மூர்த்தமாக ஆட்சிப் பீடத்தில் வீற்றிருப்பதாயும், சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனார்கள். அதன் சான்றாக அருள்மிகு தண்டாயுதபாணி மூர்த்தம் திருமுகம் பூரணப் பொழிவுடனும், இடுப்புக் கீழே வேலைப்பாடற்றும் இருப்பதை இன்றும் காணலாம்.

கோவில் அமைப்பு

பக்தர்கள் எளிதில் செல்ல 1320 திருப்படிகள் (Chennimalai Murugan Temple Steps: 1320) கொண்ட படிவழி பாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை ஒன்றும் உள்ளது. படிவழியில் ஆங்காங்கே நிழல்தரும் மண்டபங்களும், குடிநீர் வசதியும், இரவு நேரங்களில் பாதுகாப்பிற்காக படிவழியில் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது. மலைக்கோவிலில் மூலவர் சன்னதிக்கு பின்புறம் அருள்மிகு வள்ளி, தெய்வானை சன்னதி தனியாகவும், இதற்கு பின்புறம் பின்நாக்கு சித்தர் சன்னதி தனியாகவும் அமைந்துள்ளது. கடந்த 12.02.1984 அன்று இரட்டை மாடுகள் பூட்டிய வண்டி 1320 திருப்படிகள் வழியே மலைமேல் சென்று அதிசயம் நடைபெற்ற தலமாகும்.

irattai mattu vandi at chennimalai temple steps

ஒரு அர்த்த மண்டபம், ஒரு அந்தரலா, ஒரு முக மண்டபம் மற்றும் பின்னர் சேர்க்கப்பட்ட தூண் ஷோபன மண்டபம். கருவறையில் முருக பகவான் சிற்பம் நிற்கிறது. கருவறையின் உச்சவரம்பு மற்றும் சுவர்களில் சூட்டின் அடர்த்தியான வைப்புக்கள் காணப்படுகின்றன. அர்த்த மண்டபம் எளிது. சூட் வைப்பு இங்கே கவனிக்கப்படுகிறது. அர்த்த மண்டபத்தின் நுழைவாயில் பித்தளை தகடுகளால் மூடப்பட்டுள்ளது. மெருகூட்டப்பட்ட சிவப்பு கிரானைட் கற்கள் அந்தராலாவின் தரையையும் படிகளையும் அமைத்துள்ளன. அந்தராலாவில் வடக்கு மற்றும் தெற்கில் கதவு திறப்புகள் உள்ளன. படிகள் மற்றும் இந்த நுழைவாயில்களின் வெளிப்புறங்களில் இணைக்கப்பட்டுள்ள கணிப்புகள் போன்ற போர்டிகோ நவீனமானது.

Chennimalai Murugan Temple Speciality

கோவில் சிறப்புகள்: இத்திருக்கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமையான திருக்கோவிலாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்ட திருக்கோவிலாகும். சிவாலய சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேண்டி பல இடங்களுக்கு சென்று வந்த சமயம் இம்மலையினை கண்டு தனது பரிவாரங்களுடன் மலைக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தபோது முருகன் அர்ச்சகராக வந்து தன்னைத்தானே பூஜித்து சிவாலய சோழனின் பிரம்மஹத்தி தோஷத்தினை நீக்கி அருள் புரிந்தார். ஸ்ரீ அருணகிரிநாதரால் திருப்புகழில் சென்னிமலை முருகனை புகழ்ந்து 5 பாடல்கள் பாடி முருகப் பெருமானால் படிக்காசு பெற்றுள்ளார்.

கந்த சஷ்டி கவசம் அரங்கேற்றம் நடந்த தலம். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பொங்கும் மாமாங்க தீர்த்தம் இம்மலையின் தென்புறம் அமைந்துள்ளது, தினசரி மூலவர் அபிஷேகத்திற்கு எருதுகள் மூலம் படிவழியே திருமஞ்சனம் கொண்டு செல்லும் பழக்கம் தொன்றுதொட்டு நடைபெற்று வருகிறது. பக்தர்கள் தங்களது சுபகாரியங்களுக்காக மூலவர் சிரசுப்பூ வாக்கு கேட்டு அதன்படி செயல்படுவது வழக்கத்தில் உள்ளது. செங்கத்துறை பூசாரியார், வேட்டுவபாளையம் பூசாரியார் மற்றும் சரவண முனிவர் ஆகியோர் வாழ்ந்து இறை காட்சி பெற்று முக்தி அடைந்த திருத்தலமாகும். சென்னிமலை நகரினை சுற்றிலும் 24 புண்ணிய தீர்த்தங்கள் அமைந்துள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்த தயிர் புளிப்பதில்லை என்பது ஐதீகமாகும். மூலவர் விமானத்தின் மீது காக்கைகள் பறப்பதில்லை என்பது சான்றோர் வாக்கு.

chennimalai murugan temple steps image

ஐந்து நிலை இராஜ கோபுரம்

2005-ம் ஆண்டு புதிதாக ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி துவங்கப்பட்டு, 2013-ம் ஆண்டில் சுமார் 2 கோடி செலவில் உபயதாரர்கள் மூலம் பணி நிறைவு செய்யப்பட்டு, 07.07.2014 அன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. புதியதாக கட்டப்பட்டுள்ள ஐந்து நிலை இராஜ கோபுரத்தின் விதானத்தில் ஒரே கல்லினால் ஆன சங்கிலி வளையங்கள் பொருத்தப்பட்டுள்ளது தனிச்சிறப்பாகும்.

மார்கண்டேய தீர்த்தம்

“மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாய் வணங்கினோர்க்கு வார்த்தை சொல்ல சற்குருவும் வாய்க்கும் பராபரமே” என்பது தாயுமானவர் வாக்கு, அப்படி மூன்றும் அமைந்த திருத்தலம் இச்சென்னிமலை ஆகும்.

வினைகளை தீர்ப்பதாலே தீர்த்தம் என பெயர் பெற்றதாக வாரியார் சுவாமிகள் கூறுவார். தீர்த்தங்களை பகவத் சொரூபமாக வணங்குவது நமது முன்னோர் மரபு. ஆலயத்தில் உள்ள தெய்வத்திற்கு எந்தளவு சாந்நித்யம் உண்டோ! அதே அளவு தலத்திலுள்ள தீர்த்தத்திற்கும் உள்ளதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஒரு தலத்தில் இறைவன் விரும்பி உறைவதற்கு அங்குள்ள தீர்த்தங்கள் காரணமாக அமைகின்றன.

ஆகம விதிப்படியும், சிற்ப சாஸ்திர விதிப்படியும், திருக்கோவிலுக்கு ஈசான்ய திக்கில் திருக்குளம் அமைவது சிறப்பு. இத்தலத்தில் மாமாங்க தீர்த்தம் போன்ற சிறப்பு மிக்க காண்பதற்கரிய தீர்த்தங்கள் 24 உள்ளன. அத்துணை தீர்த்தங்களிலும் இம்மார்க்கண்டேய தீர்த்தம் ஈசான திக்கில் அமையப்பெற்று ஆண்டுதோறும் ஆண்டவன் உகந்து எழுந்தருளி விழா முடிவில் தெப்போற்சவம் கண்டு பக்தர்களுக்கு அருள்புரிகின்றான். இத்தீர்த்தம் தல புராணத்திலும் வரலாற்றிலும் சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது.

chennimalai murugan temple theertham

24 Theertham in Chennimalai

1) அக்னி தீர்த்தம், 2) அகத்திய தீர்த்தம், 3) இந்திர தீர்த்தம், 4) இமய தீர்த்தம், 5) ஈசான தீர்த்தம், 6) காசி தீர்த்தம், 7) காளி தீர்த்தம், 8) கிருத்திகா தீர்த்தம், 9) குபேர தீர்த்தம், 10) சஷ்டி தீர்த்தம், 11) சாமுண்டி தீர்த்தம், 12) சாரதாம்பிகை தீர்த்தம், 13) சுப்ரமண்ய நெடுமால் தீர்த்தம், 14) தேவி தீர்த்தம், 15) நவவீர தீர்த்தம், 16) நிருதி தீர்த்தம், 17) நெடுமால் தீர்த்தம், 18) பட்சி தீர்த்தம், 19) பிரம்ம தீர்த்தம், 20) மாமாங்க தீர்த்தம், 21) மார்க்கண்டேய தீர்த்தம், 22) வரடி தீர்த்தம், 23) வருணை தீர்த்தம், 24) வாயு தீர்த்தம். முதலிய தீர்த்தங்கள் இத்தல வரலாற்றில் சிறப்பாக சொல்லப்பட்டாலும் இம்மார்க்கண்டேய தீர்த்தமே நம் முன்னோர்களால் தெப்பக்குளமாக சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது.

தல விருட்சம்

இத்திருக்கோவிலின் ஸ்தல விருட்சம் திந்துருணி (புளியமரம்) ஆகும். திருமணம் நடைபெற்ற புதுமணத் தம்பதியர்கள் புளிய மரத்தின் அடியில் பச்சரிசி மாவிடித்து வள்ளி, தெய்வானை அம்மனுக்கு வழிபாடு செய்யும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது. இம்மரத்தில் சந்தான கரணி என்னும் மூலிகை உள்ளதாக நம்பப்படுகிறது.

chennimalai murugan temple sthala vriksham

பிரார்த்தனை

பக்தர்கள் தங்களது தொழில் மேன்மையடையவும், திருமண காரியம் கைகூடவும், குழந்தை வரம் வேண்டியும், குழந்தைகள் கல்வி மேன்மையடையவும், வியாதிகள் தீரவும், கடன் தொல்லைகள் அகலவும், வாழ்க்கையில் எல்லா நலங்களும் பெற்று சுபிட்ஷமாக வாழவும் பிரார்த்தனை செய்து, நிறைவேறிய பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதும், தேர்உலா நடத்துவதும், மூலவலருக்கு அபிஷேகம் செய்து மனைநிறைவு கொள்வதுமாக வழக்கத்தில் இருந்து வருகிறது.

நேர்த்திக்கடன்

முருகனுக்கு பால், தயிர் அபிஷேகம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யும் தயிர் புளிப்பதில்லை. தவிர காவடிஎடுத்தல், முடிக்காணிக்கை முதலியன, கிருத்திகை அன்னதானம், காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், முடி இறக்கி காது குத்தல் சஷ்டி விரதம் இருத்தல். தவிர சண்முகார்ச்சனை, முருக வேள்வி ஆகியவை செய்கிறார்கள். கார்த்திகை விரதம் இருத்தல். ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல், திருப்பணிக்கு பொருளுதவி செய்தல் ஆகியவை இத்தலத்துக்கு வருபவர்கள் முருகனுக்காக செய்யலாம்.

chennimalai murugan with valli deivanai

சென்னிமலையில் உள்ள பிற கோவில்கள்

அருள்மிகு கைலாசநாதர் (ஈஸ்வரன் கோவில்)

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு இத்திருக்கோவிலில் கட்டப்பட்டிருக்க வேண்டுமென அறிய வருகிறது. இத்திருக்கோவில் கட்டியவர் விவரம் அறிய இயலவில்லை. கி.பி.18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பல்லடம் வட்டத்தைச் சேர்ந்த வேளாளர் குலத்தில் பிறந்த செங்கத்துறை பூசாரி என்பவர் சென்னிமலை கைலாசநாதர் திருக்கோவிலின் வெளிமண்டபம், உள்மண்டபம், கோபுரம், திருமதில் ஆகிய திருப்பணிகளைச் செய்தார்.

சென்னிமலை அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மலைக்கோவிலாக உள்ளதால், அனைத்து உற்சவங்களும், தைப்பூச திருவிழா புறப்பாடுகளும் இத்திருக்கோவிலில் நடைபெற்று வருகிறது. இங்குள்ள நடராஜர் சன்னதியில் (கனக சபை) 63 நாயன்மார்கள் ஒரே பீடத்தில் ஒவ்வொன்றும் சுமார் 14 செ.மீ. உயரத்தில் அமையப்பெற்றுள்ளது. அனைத்து உலோக விக்ரகங்களும் இங்குதான் உள்ளது.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்

இத்திருக்கோவில் 10௦ ஆண்டுகளுக்கு உட்பட்ட சென்னிமலை நகரில் அமைந்துள்ள கிராமக்கோவிலாகும். ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் முதல் புதன் கிழமை பூச்சாட்டுதலுடன் துவங்கி 15-ம் நாள் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது.

திருமுகமலர்ந்த நாதர் (பிடாரியூர் ஈஸ்வரன் கோவில்)

இத்திருக்கோவில்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு மேற்பட்டவையாக தெரிய வருகிறது. இவ்விரு திருக்கோவில்களுக்கும் 1863-ம் ஆண்டில் ஸ்ரீரங்கபட்டினம் ஹைதர் அலி நவாப் 53 ஏக்கர் இனாம் பூமி வழங்கப்பட்டுள்ளதை உறுதி செய்துள்ளார்.

Chennimalai Murugan Temple Timings

சென்னிமலை முருகன் கோவில் திறக்கும் நேரம்: தினசரி காலை 05:45 மணிக்கு கோ-பூஜை நடைபெற்ற பின்னர் காலை 06:00 மணிக்கு சன்னதி நடை திறக்கப்பட்டு பகல் வேளையில் நடை சாத்தப்படாமல் தங்குதடையின்றி இரவு 08:00 மணி வரை திறந்து வைக்கப்பட்டு 08:15 மணிக்கு நடை சாத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரம் செவ்வாய்கிழமை நாட்களிலும், திருமணம் நடைபெறும் நாட்களிலும் அதிகாலை 04:45 மணிக்கு கோ-பூஜை நடத்தப்பட்டு சன்னதி நடை காலை 05:00 மணிக்கு திறக்கப்பட்டு வருகிறது.

Chennimalai Murugan Temple Pooja Timings

சென்னிமலை முருகன் கோவில் பூஜை விபரம்

பூஜை பெயர் பூஜை நேரம்
விளா பூஜை 06:40 AM to 07:00 AM IST
காலசந்தி பூஜை 07:40 AM to 08:00 AM IST
உச்சிக்கால பூஜை 11:40 AM to 12:00 PM IST
சாயரட்சை பூஜை 04:40 PM to 05:00 PM IST
இராக்கால பூஜை 06:40 PM to 07:00 PM IST
அர்த்தஜாம பூஜை 07:40 PM to 08:00 PM IST

chennimalai murugan temple steps

How to reach Chennimalai Murugan Temple in Tamil?

சென்னிமலை முருகன் கோவிலுக்கு எப்படி செல்வது?

ஈரோடு – பெருந்துறை சாலையில் அமைந்த இக்கோவில், ஈரோட்டிலிருந்து 30 கி மீ தொலைவிலும், பெருந்துறையிலிருந்து 13 கி மீ தொலைவிலும், ஈங்கூர் தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி மீ தொலைவிலும் உள்ள சென்னிமலை அருகே உள்ள இச்சிப்பாளையத்தின் மலைக் குன்றின் மீது அமைந்துள்ளது. சென்னிமலை முருகன் கோவிலானது மலைக்கோவிலாகும். பக்தர்கள் எளிதில் செல்ல ஏதுவாக 1320 திருப்படிகள் கொண்ட படிவழிபாதையும், வாகனங்கள் மூலம் செல்ல 4 கிலோ மீட்டர் தூரமுள்ள தார்சாலை வசதியும் உள்ளது. பக்தர்கள் அடிவாரத்திலிருந்து மலைக்கோவிலுக்கு செல்ல திருக்கோவில் மூலம் 2 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Chennimalai Murugan Temple Contact Number: +91 4294250223 / +91 4294292263 / +91 4294292595

Chennimalai Murugan Temple Address

45, Telephone Exchange Street, Kumarapuri, Chennimalai, Tamil Nadu 638051



3 thoughts on "சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில்"

  1. போன் நம்பர் வேலை செய்யவில்லை இது போன்ற பழைய அவுட் ஆஃப் ஆர்டர் அல்லது நாட் ஒர்க்கிங் போன் நம்பர்ஸ் கொடுப்பதை தவிர்க்கவும் ஆபீஸில் வேலை செய்யும் எத்தனையோ பேர் மொபைல் போன் வச்சி இருக்க மாட்டாங்களா அந்த மாதிரி அலுவலர்களோட போன் நம்பர்ஸ் மொபைல் நம்பர்ஸ் ஷேர் பண்ணினாள் நன்றாக இருக்கும்… பயனற்ற தகவல்களை பதிவேற்ற வேண்டாம்… கோவிலுக்கு சென்று வந்த பின்னர் நானே சரியான மொபைல் நம்பர்ஸ் உங்களுக்கு கொடுக்கிறேன்…

  2. நல்ல பயனுள்ள தகவல்களை பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி..
    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
    சென்னிமலை முருகனுக்கு அரோகரா

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • நவம்பர் 7, 2024
முருகனின் ஆசிர்வாதத்துடன் எதிலும் வெற்றி பெறுவோம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை