×
Monday 9th of December 2024

ஸ்ரீ காளஹஸ்தி காளத்தியப்பர் கோவில்


Sri Kalahasti Temple History in Tamil

அருள்மிகு காளத்தியப்பர் திருக்கோவில்

மூலவர் காளத்தியப்பர், காளத்தீசுவரர்
தாயார் ஞானப்பிரசுனாம்பிகை, ஞானப்பூங்கோதை, ஞானசுந்தரி, ஞானாம்பிகை
தல விருட்சம் மகிழம்
தீர்த்தம் பொன்முகலியாற்று தீர்த்தம், ஸ்வர்ணமுகி ஆறு
புராண பெயர் சீகாளத்தி, திருக்காளத்தி
ஊர் காளஹஸ்தி
மாவட்டம் சித்தூர்

Srikalahasti Kalathiappar Temple in Tamil

ஸ்ரீ காளஹஸ்தி கோவில் வரலாறு: முன்பொரு காலத்தில் ஆதிசேஷனுக்கும் வாயுதேவனுக்கும் ஒரு போட்டி வந்தது. தம்மில் யார் பெரியவன் என்ற போட்டி. ஆதிசேஷன் வாயுதேவனிடம் சொன்னான்: “வாயுதேவனே, நான் கயிலாய மலையை என்னுடைய உடம்பால் சுற்றி, இறுக்கி மூடிக்கொள்வேன். நீ உன்னுடைய பலத்தால் மலைச் சிகரங்களைப் பெயர்த்தெறிந்தால் நீ பெரியவன் என்பதை ஒப்புக்கொள்வேன்”. போட்டி தொடங்கியது. ஆதிசேஷன் தன் ஆயிரம் தலைகளாலும் உடம்பாலும் வாலாலும் கயிலை மலையை இறுக்கி மூடி, மலையே தெரியாதபடி மறைத்துவிட்டார்.

வாயுதேவன் பலம் கொண்ட மட்டும் காற்றை வீசிப்பார்த்தும்கூட அசைக்க முடியவில்லை. பல நூறு ஆண்டுகளான பின் ஆதிசேஷன் லேசாக அசையவே அந்த நேரம் பார்த்து வாயுதேவன் தன் பலத்தைக்காட்ட, கயிலையில் இருந்து மூன்று சிகரங்கள் பெயர்ந்து கொண்டு புறப்பட்டன. தெற்கே வந்து விழுந்தன. அந்த மூன்றில் ஒன்றுதான் திருக்காளத்தி மலை என்கிறது புராணங்கள்.

kalathiappar gnanambikai kalahasti temple

கோவில் அமைப்பு

கருவறையை அடுத்த மண்டபத்தில் கண்ணப்பர் சிலை உள்ளது. மூலவரின் எதிரில் வெள்ளைக்கல் நந்தியும், பித்தளை நந்தியுமாக இரு நந்திகள் உள்ளன. கருவறை அகழி போன்ற அமைப்பில் கட்டப்பட்டுள்ளது. கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை மூர்த்தங்கள் உள்ளன. கோவிலின் நுழைவுவாயிலின் எதிரில் கவசமிட்ட கொடிமரம் ஒன்றும், 60 அடி உயரமுடைய, ஒரே கல்லால் ஆன கொடிமரம் ஒன்றும் உள்ளது. இதன் அருகே பலிபீடமும், நந்தியும் உள்ளன.

Kalatheeswarar Temple Greatness in Tamil

தல சிறப்பு: இங்கு காளத்திநாதர் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இது வாயு(காற்று) தலம் என்பதால் மூலஸ்தானத்தில் இருக்கும் விளக்கு காற்றில் ஆடிக்கொண்டே இருக்கும். இறைவனுக்கு அணிவித்துள்ள தங்கக்கவசத்தை எடுத்துவிட்டு ஆரத்தி எடுக்கும்போது, லிங்கத்தின் அடிப்பாகத்தில் சிலந்தி வடிவத்தையும், நடுவில் நீண்டு கூடியனபோன்று உள்ள யானையின் இரு கொம்புகளையும், மேற்புறத்தில் – உச்சியில் ஐந்து தலைப் பாம்பு படம் எடுத்துள்ள வடிவத்தையும் வலப்புறத்தில் கண்ணப்பர் பெயர்த்து அப்பிய ஒரு கண்ணின் வடுவையும் காணலாம். அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது ஞான சக்தி பீடம் ஆகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 252 வது தேவாரத்தலம் ஆகும்.

தலபெருமை: கண்ணப்பர் வாய்கலசமாக முகலிநீர் கொண்டுவந்து காளத்தியப்பருக்கு அபிஷேகம் செய்ததால் இங்கு பக்தர்களுக்கு திருநீறு(விபூதி) வழங்கும் வழக்கம் இல்லை. பச்சைக் கற்பூரத்தை பன்னீர் விட்டு அரைத்து தீர்த்தத்தில் கலந்து சங்கு ஒன்றில் வைத்துக்கொண்டு அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக தருகின்றனர். பக்தர்கள் கொண்டுவரும் திருநீறு பொட்டலத்தை இறைவன் திருவடியில் வைத்து தீபம் காட்டி எடுத்து தருகிறார்கள். மூலவருக்கு பச்சைக்கற்பூர நீரே அபிஷேகம் செய்யப்படுகிறது. பிற பொருட்கள் கொண்டு செய்யப்படும் அபிஷேகங்கள் எல்லாம் மூலவர் உள்ள லிங்க பீடமான ஆவுடையாருக்கே செய்யப்படுகின்றன.

Sri Kalahasti Temple kodimaram

இது ராகு, கேது தலம் என்பதால் கோவிலை வலம் வருவதும் எதிர்வலமாகவே – அப்பிரதட்சிணமாகவே சுற்றி வர வேண்டும். பரத்வாஜர் இங்கு தவம் செய்து பேறு பெற்றுள்ளதால் பரத்வாஜ கோத்ரத்தைச் சேர்ந்தவர்களே இங்கு பூஜை செய்யும் உரிமை பெற்றுள்ளனர். இறைவனுக்கு அணிவிக்கப்படும் கவசத்தில் நவக்கிரகங்கள் இடம்பெற்றுள்ளன.

இத்தலம் கிரக தோஷ தலம் என்பதால் நவக்கிரகங்கள் இல்லை. விதிவிலக்காக சனீஸ்வரர் மட்டும் இடம்பெற்றுள்ளார். இறைவன் மேனியில் மாலை சாத்தப்படுவதில்லை. அங்கி அணிவிக்கப்பெற்ற பின்பு உள்ள திருமேனியிலேயே தும்பை மாலை சாத்துகிறார்கள். அம்மனின் இடுப்பில் அணிவிக்கப்படும் ஒட்டியானத்தில் கேது உருவம் காணப்படுகிறது.

கண்ணப்பர் மலைக்கு ஏறும் வழியில் உள்ள மலைச்சரிவு ஒன்றில் மணிகண்டேசுவரருக்கு ஒரு கோவில் உள்ளது. அதையடுத்து மலையை வெட்டி செதுக்கிய மண்டபம் ஒன்று உள்ளது. அதற்கு மணி கர்ணிகா கட்டம் என்று பெயர். இங்குதான் காசியில் உள்ள மணிகர்ணிகா கட்டத்தில் விசுவநாதர் அருளியதுபோல, பெண் ஒருத்திக்கு இறைவன் தாரக மந்திரத்தை வலக்காதில் ஓதி அருளினார் என்று ஒரு கதை வழங்கி வருகிறது.

அதனால் இன்றும் அந்திம திசையை நெருங்கிக் கொண்டிருப்பவர்களை இம்மண்டபத்திற்கு கொண்டுவந்து வலப்பக்கமாக ஒருக்களித்துச் சாய்த்துக் கிடத்தினால் சாகிறபொழுது உடல் திரும்பி வலக்காது வழியாகவே உயிர் பிரியும் என்று கூறுகிறார்கள்.

சுவாமி புறப்பாடு வடக்கு கோபுரவாயில் வழியாகவே நடைபெறும். முன்காலத்தில் ரிஷிகள் பொன்முகலி ஆற்றில் நீராடிவிட்டு கிழக்கு நோக்கி தரிசித்ததால் அவர்களுக்கு காட்சி தருவதற்காக இறைவன் மேற்கு நோக்கி உள்ளார்.

பிரார்த்தனை: ராகு, கேது சர்ப்பதோஷம் உள்ளவர்கள், திருமணம் ஆகாதவர்கள், நீண்ட கால பிரச்சனைகளில் அவதிப்படுபவர்கள், இத்தலத்திற்கு வந்து ராகு தோஷம் நீங்கவும், சர்ப்ப தோஷம் நீங்கவும் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர். இத்தலத்தில் உள்ள சரஸ்வதி தீர்த்தத்தில் நீராடி அருந்தினால் பேச்சு சரளமாக வராத குழந்தைகள் கூட நன்கு பேசும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும், இறைவனுக்கு வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பொருளுதவி செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Srikalahasti Kalathiappar Temple Kalathiappar Gnanambikai

Sri Kalahasti Temple Festival in Tamil

திருவிழா: மாசித்திருநாள், திருக்கார்த்திகை, வெள்ளிக்கிழமை தோறும் ஊஞ்சல் விழா, பொங்கல், மகா சிவராத்திரி 10-நாட்கள் உற்சவம். திருத்தேர் பவனி. சிவராத்திரி இரவு நந்திசேவை தரிசிக்க சிறப்பு, சிவராத்திரியில் மலை வலம் வரும் விழா.

Kalahasti Temple Opening Timings

காளஹஸ்தி கோவில் திறக்கும் நேரம்: காலை 05:00 முதல் 12:00 மணி, மாலை 05:00 முதல் 09:00 வரை, செவ்வாய், புதன் மற்றும் வியாழன் நாட்களில் காலை 06:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.

Kalahasti Temple Contact Number: +91 85782 22240

Also, read: Tirupati Temple History in Tamilதிருப்பதி ஏழுமலையான் கோவில் வரலாறு

Sri Kalahasti Temple Address

Srikalahasti, Andhra Pradesh 517644

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்