×
Monday 9th of December 2024

அருள்மிகு கூடலழகர் பெருமாள் கோவில், மதுரை


Madurai Koodal Azhagar Temple History in Tamil

திருத்தலம் அருள்மிகு கூடலழகர் திருக்கோவில்
மூலவர் கூடலழகர்
உற்சவர் வியூகசுந்தரராஜர்
அம்மன் மதுரவல்லி, மரகதவல்லி, வகுளவல்லி, வர குணவல்லி
தல விருட்சம் கதலி
தீர்த்தம் ஹேமபுஷ்கரிணி.
புராண பெயர் திருக்கூடல்
ஊர் மதுரை

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் வரலாறு

மதுரையின் பெருமை: மதுரை, கோவில்கள் மற்றும் திருவிழாக்களின் நகரமாகும். இந்நகரம் கூடல் மற்றும் ஆலவாய் என அழைக்கப்படுகிறது. தமிழ் புலவர்களால் மூன்றாம் மற்றும் கடைசி சங்கம் நிறுவி தமிழாய்ந்த இடமாகும். பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகும், வைணவம் மற்றும் சைவம் தலைத்தோங்கிய நகரமாக மதுரை திகழ்கிறது. உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோவில்களிலும் அதிகாலையில் பாடப்படும் “பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு” என்ற திருப்பல்லாண்டு பாடல் இயற்றப்பட்ட தலம் மதுரை.

🛕 சைவத்திற்கு அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவிலும், வைணவத்திற்கு அருள்மிகு கூடலழகர் திருக்கோவிலும் சிறப்புற்று விளங்குகிறது. அருள்மிகு கூடலழகர் பெருமாள் திருக்கோவில், வைணவ பாடல் பெற்ற தலங்களான 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பெரியாழ்வாரால் பல்லாண்டு பாடப்பெற்ற தலமாகும், திருமங்கையாழ்வார் மற்றும் திருமழிசைபிரான் ஆகியோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.

madurai koodal azhagar urchavar

🛕 பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார். பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டை செய்தார். அவரே கூடலழகர் எனப்பட்டார். இத்தலம் கிருதயுகத்திலேயே அமைக்கப்பட்டுவிட்டது. கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம், கலியுகம் என நான்கு யுகங்களிலும் சிறப்புற்று விளங்குகிறது. எனவே இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள் எனப்படுகிறார்.

🛕 வல்லப தேவ பல்லவர் ஆட்சிக் காலத்தில் பெரியாழ்வாரால் அரசவையில் “ஸ்ரீமன் நாராயணனே பரம்பொருள்” என மெய்பித்த சிறப்புமிக்க தலமாகும். பெரியாழ்வார் ஸ்ரீ நாராயணனே பரம்பொருள் என மெய்ப்பித்த பரத்துவ நிர்ணயத்தை பாராட்டி அரசன் பெரியாழ்வாரை பட்டத்து யானை மீதேற்றி வீதிவலம் வரும்போது; கூடலழகர் கருட வாகனத்தில் காட்சி தந்தபோது, பெருமாளை தரிசித்த பெரியாழ்வார் பெருமாள் அழகுக்கு பல்லாண்டு பாடினார். இச்சிறப்பு மிக்க வைபவம் இன்றும் இத்திருக்கோவிலில் பிரதி மார்கழி மாதம் பரத்துவ நிர்ணயம் என்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

🛕 ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவே, மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். தங்களை மழையிலிருந்து காத்தருளும்படி பெருமாளை வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று கூடி, மழையிலிருந்து மக்களை காத்தது. இவ்வாறு, நான்கு மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலம், நான்மாடக்கூடல் என்றும், கூடல் மாநகர் என்றும் பெயர் பெற்றது.

🛕 சோமசுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் சோமசுந்தர பாண்டியனுடய திருமகளாக அவதரித்த உமாபதிக்கு செளந்திரபாண்டிய அரசனாக அவதரித்த சிவபெமானுக்கு கூடலழகரே திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது.

madurai koodal azhagar temple ashtanga vimanam

கூடலழகர் கோவில் அமைப்பு

🛕 பஞ்சபூத தத்துவங்களை உணர்த்தும் வகையில் ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜ கோபுரம், எட்டெழுத்து மந்திரத்தை உணர்த்தும் வகையில் எட்டு பிரகாரங்களுடன் அமைந்துள்ளது.  இதில் ஒவ்வொரு நிலையிலும் மகாபாரத, ராமாயணம் தொடர்பான சுதைச் சிற்பங்கள் காணப்படுகிறது. இத்திருக்கோவில் பழமையும் தொன்மையும் வாய்ந்ததாகும் இத்திருக்கோவில் கல்லால் ஆன கட்டடமாகும் சிறப்புமிக்க அஷ்டாங்க விமானத்தை கொண்டதாகும். திருக்கோவில் மூலவர் கூடலழகர், உற்சவர் வியூக சுந்தர்ராஜர். மூலவர் சன்னதிக்கு தென்புறம் மதுரவல்லிதாயார், வடபுறத்தில் ஆண்டாள் சன்னதி மற்றும் நவக்கிரக சன்னதி உள்ளது. தாயார் சன்னதியில் சக்கரத்தாழ்வார், ஆழ்வார் ஆச்சார்யார்கள் சன்னதி உள்ளது. நவக்கிரக சன்னதி அமையப்பெற்ற வைணவ திருக்கோவிலாகும்.

🛕 இத்திருக்கோவில் அஷ்டாங்க விமானத்தில் மேல் தளத்தின் இரண்டு நிலைகளில் நான்கு சுவர்களிலும் பண்டைய காலத்து மூலிகை வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளது, இதில் அட்டதிக் பாலர்கள் (அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன், இந்திரன்), ஐந்து பஞ்சாயுதங்கள் (சங்கு, சக்கரம், கதை, வில்அம்பு, வாள்) பட்சிகள், சிவன், ஆஞ்சநேயர், கண்ணன், கன்னிகைகள் ஆகிய உருவங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளது.

madurai koodal azhagar with sridevi bhudevi

🛕 இங்குள்ள உற்சவர் வியூக சுந்தரராஜன் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

🛕 இத்திருக்கோவிலுக்குச் சொந்தமான பெருமாள் தெப்பக்குளம், மதுரை டவுன்கால்ரோட்டில் உள்ளது. கோவிலிலிருந்து அரை கி.மீ. தொலையில் உள்ளது. பிரதி வருடம், மாசி மாதம் மக நட்சத்திரத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும்.

பிரார்த்தனை: திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள்

நேர்த்திக்கடன்: இங்கு தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

திருவிழா: வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி.

koodal azhagar perumal sayana kolam

Koodal Azhagar Temple Timings

நடை திறக்கும் நேரம்: காலை 5:30 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 4:00 மணி முதல் இரவு 9::00 மணி வரை திறந்திருக்கும்.

Koodal Azhagar Temple Pooja Timings

பூஜை பெயர் பூஜை நேரம்
திருக்காப்பு (திறப்பு) 5:30 AM
விஸ்வரூப பூஜை 6:00 AM to 6:30 AM
காலசந்தி பூஜை 8:00 AM to 8:30 AM
உச்சிக்கால பூஜை 12:00 PM
சாயரட்சை பூஜை 5:00 PM to 5:30 PM
அர்த்தஜாம பூஜை 9:00 PM
திருக்காப்பு (நிறைவு) 9:00 PM

koodal azhagar perumal nindra kolam

Also, read

Koodal Azhagar Temple Address

🛕 Koodalalagar Perumal Koil Street, Near Periyar Bus Stand, Madurai – 625001.

Koodal Azhagar Temple Contact Number: +914522338542

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்