×
Tuesday 10th of December 2024

கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர் திருக்கோவில் – திருக்கச்சூர்


Kachabeswarar Temple Kanchipuram History in Tamil

மூலவர் கச்சபேஸ்வரர், மருந்தீஸ்வரர்
உற்சவர் அமிர்த தியாகராஜர்
அம்மன் அஞ்சனாட்சியம்பாள், இருள்நீக்கியம்பாள்
தல விருட்சம் கல்லால மரம், வேர்ப்பலா
ஆகமம் காமீகம்
பழமை 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் நடனவினோதநல்லூர், ஆதிகாஞ்சி, திருக்கச்சூர், ஆலக்கோவில்
ஊர் திருக்கச்சூர்
மாவட்டம் காஞ்சிபுரம்

கச்சபேஸ்வரர் திருக்கோவில்

🛕 தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமுதம் எடுத்த போது மத்தாக பயன்பட்ட மந்திரமலை கடலில் அழுந்த துவங்கியது. கலங்கிய தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் வேண்ட, அவர் கச்சப (ஆமை) வடிவமெடுத்து மந்திரமலையை தாங்க எண்ணம் கொண்டார். அதற்காக அவர் ஆமை வடிவில் இத்தலத்திற்கு வந்து, தீர்த்தம் உண்டாக்கி அதில் நீராடி, சிவனை வேண்டி மலையை தாங்கும் ஆற்றல் பெற்றார். எனவே இத்தலத்து சிவனுக்கு, “கச்சபேஸ்வரர்” என்ற பெயரும், தலத்திற்கு “திருக்கச்சூர்” என்ற பெயரும் ஏற்பட்டது.

🛕 “கச்சபேஸ்வரர்” திருக்கோவில் அம்பாள் அஞ்சனாட்சி தெற்கு நோக்கியபடி தனிச்சன்னதியில் அருளுகிறாள். “அஞ்சனம்” என்றால் “கண்” என்று பொருள். இவள் மக்களை தன் கண்போல காப்பதால் இப்பெயர் பெற்றாளாம். அழகு மிகுந்தவளாக இருப்பதால் இவளுக்கு சுந்தரவல்லி என்றொரு பெயரும் உண்டு. இவளது சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தில் ஸ்ரீசக்கரம் உள்ளது. இங்கு பெண்கள் நெய்தீபம் ஏற்றி வழிபட்டால் குடும்பம் சிறப்பதாக நம்பிக்கை.

🛕 விஷ்ணுவுக்கு அருள் செய்த சிவன் அவருக்காக இத்தலத்தில், தியாகராஜராக, “அஜபா நடனம்” ஆடிக் காட்டியுள்ளார். எனவே, இத்தலம் “உபயவிட தலங்களில்” ஒன்றாகக் கருதப்படுகிறது. உற்சவராக ஒரு சிறு தொட்டிக்குள் அமர்ந்த கோலத்தில் இருக்கும் தியாகராஜருக்கே திருவிழாக்கள் நடப்பதும், அவரது பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுவதும் சிறப்பு.

🛕 அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இத்தலத்து முருகனை குறித்து பாடியுள்ளார். தலவிருட்சம் “கல்லால மரம்” என்பதால் இக்கோவிலுக்கு “ஆலக்கோவில்” என்றொரு பெயரும் உள்ளது. நவக்கிரக சன்னதி கிடையாது.

Marundeeswarar Temple History in Tamil

மருந்தீஸ்வரர் திருக்கோவில்

🛕 ஒரு சமயம் இந்திரன், தான் பெற்ற சாபத்தின் பலனால், நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்களான அசுவினி தேவர்கள் அவனுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்தும் நோயை குணப்படுத்த முடியவில்லை. எனவே நோயை குணப்படுத்தும் மூலிகையைத்தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை. அவர்கள் நாரதரிடம் ஆலோனை கேட்க, அவர் மருந்துமலை எனும் இம்மலையில் குடி கொண்டிருக்கும் சிவனையும், அம்பாளையும் வழிபட்டு வந்தால், அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார். அதன்படி இங்கு வந்த அசுவினி தேவர்கள் சுவாமியை வழிபட்டனர். அவர்களுக்கு இரங்கிய சிவன், மருந்து இருக்கும் இடத்தை காட்டி அருள்புரிந்தார். தேவர்கள் “பலா, அதிபலா” எனும் இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொண்டு தேவலோகம் சென்று இந்திரனின் நோயை குணப்படுத்தினர். இந்திரனுக்கு மருந்து கொடுத்தவர் என்பதால் சிவனுக்கு மருந்தீஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.

🛕 மருந்தீஸ்வரர் திருக்கோவில் அம்மனின் திருநாமம் இருள்நீக்கிய அம்பாள். சிவன், அசுவினி தேவர்களிடம் மருந்து இருந்த இடத்தை காட்டிய போதிலும், அவர்களால் எது சரியான மருந்து என கண்டுபிடிக்க முடியவில்லை. குழப்பத்தில் தவித்த அவர்களின் மனநிலையை கண்டு இரக்கம் கொண்ட அம்பாள், மூலிகையின் மீது ஒளியை பரப்பி, அதனைச் சூழ்ந்திருந்த இருளை அகற்றி, அருள்புரிந்தாள். இதனால் அம்பாளை இருள்நீக்கியம்பாள் என்றழைக்கின்றனர்.

🛕 பிரகாரத்தில் பைரவர், சண்டிகேஸ்வரர் சன்னதிகள் அடுத்தடுத்து இருக்கிறது. சண்டிகேஸ்வரர், “பிரம்ம சண்டிகேஸ்வரராக” நான்கு முகங்களுடன் காட்சி தருகிறார். இவருக்கு திங்கட்கிழமைகளில் தேன் அபிஷேகங்கள் செய்து வழிபடுவது சிறப்பு. சிறிய மலையின் மீது அமையப்பெற்ற கோவில் இது.

🛕 சுந்தரர் இத்தலத்து சிவனை, “மாலை மதியே! மலைமேல் மருந்தே” எனப் பாடியுள்ளார். கோவில் கொடிமரத்தின் அருகில் சிறிய மண் குழி ஒன்று உள்ளது. இம்மண்ணை மருந்து என்கிறார்கள். இதனை உட்கொள்ள நோய்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. பிரகாரத்தில் உள்ள மருந்து தீர்த்தக் கிணறு சற்று தூரம் நடந்து சென்று தீர்த்தம் எடுக்கும்படி கரையுடன் இருக்கிறது. மலை அடிவாரத்தில் தாலமூல விநாயகர் தனிச்சன்னதியில் இருக்கிறார். கலைஞர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால் புகழ் பெற்று சிறக்கலாம் என்பது நம்பிக்கை.

🛕 சிவ தலயாத்திரை சென்ற சுந்தரர், திருக்கழுக்குன்றம் சென்றுவிட்டு காஞ்சிபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் வந்தார். நீண்ட தூரம் வந்ததால் களைப்பாலும், பசியாலும் வாடிய சுந்தரர் கோவில் வளாகத்தில் அடியார்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தார். அவரது பசியை போக்குவதற்காக சிவன் முதியவர் வடிவில் சென்று, “பசியால் வாடியிருக்கும் உமக்கு நான் சோறு கொடுக்கிறேன். சற்று நேரம் இங்கேயே அமர்ந்து ஓய்வெடுங்கள்” என்று சொல்லிவிட்டுச் சென்றார். தன் மேல் அன்பு கொண்டிருந்த முதியவரின் பேச்சுக்கு மரியாதை கொடுத்த சுந்தரர் மறுக்காமல் அமர்ந்து கொண்டார். சிவன், கையில் ஒரு திருவோட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு வீடாக சென்று இரந்து (பிச்சை எடுத்து) உணவு கொண்டு வந்து விருந்து படைத்தார். சுந்தரரும், அவருடன் வந்த அடியார்களும் உணவை உண்டதும் சிவன் மறைந்தார். சிவனின் அருளை எண்ணி வியந்த சுந்தரர், “முதுவாய் ஓரி கதற” எனத் தொடங்கி பதிகம் பாடினார்.

🛕 சுந்தரருக்காக இரந்த சிவன், “இரந்தீஸ்வரர்” என்ற பெயரில் கோவிலுக்கு வெளியே சற்று தூரத்திலும், விருந்து படைத்த சிவன் “விருந்திட்டீஸ்வரர்” என்ற பெயரில் பிரகாரத்தில் தனிச்சன்னதியிலும் காட்சி தருகிறார்.

🛕 சுந்தரர் இவரையும், கச்சபேஸ்வரரையும் சேர்த்து ஒரே பாடலில் பதிகம் பாடியுள்ளார். இரு கோவில்களிலும் கருவறைக்கு நேரே வாயில்கள் இல்லை. மலையில் மருந்தீஸ்வரர், அடிவாரத்தில் இரந்தீஸ்வரர், விருந்தீஸ்வரர் என மூன்று கோலங்களில் சிவன் அருள் செய்யும் தலம் இது. சிவன் தனது மூன்று கண்களின் அம்சமாகவும், முக்காலத்தை உணர்த்துவதாகவும் இக்கோலத்தை சொல்கிறார்கள்.

🛕 காஞ்சிப்புராணத்தில் “ஆதி காஞ்சி” என்று இத்தலம் குறிப்பிடப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டிற்கு அருகில் உள்ள திருக்கச்சூரில் மலைமேல் ஒரு சிவனும், அடிவாரத்தில் ஒரு சிவனும் இருக்கின்றனர்.

தல விநாயகர்: மகாகணபதி, தாலமூல விநாயகர். மூலவரின் விமானம் கஜபிருஷ்டம் அமைப்பில் உள்ளது.

Kanchipuram Kachabeswarar Temple Festival

திருவிழா: கச்சபேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரையில் பிரம்மோற்ஸவம், சித்ரா பவுர்ணமி.

Thirukachur Marundeeswarar Temple Festival

திருவிழா: மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் மாசியில் பிரம்மோற்ஸவம், பவுர்ணமியில் கிரிவலம், சோமவாரங்களில் படிபூஜை, திருக்கார்த்திகை.

பிரார்த்தனை: சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் தீராத நோய்கள், துன்பங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் ஆணவம், கிரக தோஷங்கள் நீங்கும் என்பதும், மருந்தான மண்ணை விவசாய நிலங்களில் இட்டால் பயிர்கள் செழித்து வளரும் என்பதும் நம்பிக்கை. இங்கு வேண்டிக்கொள்ள என்றும் குறைவிலாத வாழ்வு கிடைக்கும். அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் கண் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கும் அம்மனுக்கும் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

Kachabeswarar Temple Kanchipuram Timings

🛕 கச்சபேஸ்வரர் திருக்கோவில் காலை 8 மணி முதல் 12 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Thirukachur Marundeeswarar Temple Timings

🛕 மருந்தீஸ்வரர் திருக்கோவில் காலை 7 – 9 மணி வரை மட்டும். பவுர்ணமியில் முழுநேர பூஜைகள் உண்டு.

Also, read

Sri Kachabeswarar Temple Address

Nellukara St, Periya, Kanchipuram, Tamil Nadu 631502

Kachabeswarar Temple Contact Number: +914427233384

Arulmigu Maruntheeswarar Temple Address

Bharathiya Street, Thirukkachur, Kattankulathur, Tamil Nadu 603204

Maruntheeswarar Temple Contact Number: +914427464325



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்