×
Tuesday 3rd of December 2024

ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு (திருவிண்ணகர்)


Oppiliappan Temple History in Tamil

அருள்மிகு வேங்கடாஜலபதி சுவாமி (ஒப்பிலியப்பன்), திருநாகேஸ்வரம்

திருத்தலம் திருவிண்ணகர் ஒப்பிலியப்பன் கோவில்
மூலவர் ஒப்பிலியப்பன் (திருவிண்ணகரப்பன்)
உற்சவர் பொன்னப்பன்
அம்மன் பூமாதேவி
தீர்த்தம் அஹோத்ரபுஷ்கரணி
ஆகமம்/பூஜை வைகானஸம்
புராண பெயர் திருவிண்ணகரம்
ஊர் திருநாகேஸ்வரம்
மாவட்டம் தஞ்சாவூர்

ஒப்பிலியப்பன் திருக்கோவில் வரலாறு

மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேயர், துளசி வனமான இத்தலத்தில் வசித்து வந்தார். அவருக்கு “லட்சுமி தேவியை தனது மகளாகவும் நாராயணரை மருமகனாகவும் அடைய வேண்டும்” என்ற ஆவல் ஏற்பட்டது. இதற்காக அவர் இங்கு ஒரு திருத்துழாய் செடியின் அடியில் அமர்ந்து கடும் தவம் இருந்தார். அவரது தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள் லட்சுமியை நோக்கி தேவி நீ சென்று மார்க்கண்டேயருக்கு மகளாக இரு, தக்க நேரத்தில் நான் வந்து உன்னுடன் உறைவேன் என்றார். அதன்படி லட்சுமிதேவி சிறு குழந்தையாக பூமிதேவியாக அவதரித்து துளசி வனத்தை அடைந்தாள். மார்க்கண்டேயர் மனம் மகிழ்ந்து அந்த குழந்தையை எடுத்து வளர்த்து வந்தார்.

சில ஆண்டுகள் சென்றதும் பூமிதேவி பருவ மங்கையாக திகழ்ந்தாள். எல்லா வகையிலும் ஒத்த மணமகனை தேடி நின்றார். இந்நிலையில் “திருமால் முதியவராக தோன்றி பூமிதேவியை திருமணம் செய்து தர மார்க்கண்டேயரை வேண்ட, என் மகள் சிறுமியாதலால் உணவிலும், காய்கறிகளிலும் உப்பு சேர்க்கக் கூட தெரியாது” என்றும், முதியவரான உங்களை மணம் செய்ய மறுக்கிறாள் என்று மார்க்கண்டேயர் கூறி செய்வதறியாது தியானத்தில் எம்பெருமானை வேண்டினார். கண் விழித்ததும் அலங்கார திருமேனியுடன் எம்பெருமான் காட்சியளித்து உமக்கு வேண்டிய வரங்களை கேள் என்று கூற, மார்க்கண்டேயர் மூன்று வரங்களை கேட்டார்.

  1. என் புதல்வி பூமிதேவியை மணந்து இத்தலத்திலேயே உறைய வேண்டும்.
  2. எல்லா நன்மைகளையும் அளிக்க வல்ல இத்தலம் என் பெயரால் அழைக்க வேண்டும்.
  3. உப்பு இல்லாமல் இங்கு சமைக்கப்படும் உன் தளிகைகள் அடியார்க்கு சுவையுடையதாக இருக்க வேண்டும்.

திருமாலும் இவ்வரங்களை அளித்து, வரும் அடியார்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

oppiliappan temple moolavar old image

மேலும் மகாவிஷ்ணு விண்ணுலகில் இருந்து இத்தலத்தை விரும்பி இங்கு வந்து தோன்றியதால் இத்தலம் திருவிண்ணகரம் என்றும், பூமிதேவி துளசிவனத்தில் அவதரித்ததால் துளசிவனம் என்றும், மார்க்கண்டேயர் தவம் இருந்து ஸ்ரீ பூமிதேவியை மகளாக பெற்று திருமாலுக்கு கன்னிகாதானம் செய்து வைத்ததால் மார்க்கண்டேயர் ஷேத்ரம் எனவும் போற்றப்படுகிறது.

ஒப்பிலியப்பன் கோவில் அமைப்பு

இத்திருக்கோவில் ராஜகோபுரம் (ஐந்து நிலை) கிழக்கு பார்த்தவாறு அமையப்பட்டுள்ளது. திருக்கோவில் உட்புறம் ஒரு பிரகாரம் மற்றும் திருக்கோவில் உட்புறம் மற்றொரு பிரகாரத்துடன் அமையப்பட்டுள்ளது. உள்ளே செல்லவும், வெளியே வருவதற்கும் ஒருவழி பாதையுடன் அமையப்பெற்றுள்ளது.

மூலஸ்தான விமானம் (ஸ்ரீ ஒப்பிலியப்பன், ஸ்ரீ பூமிதேவி, ஸ்ரீ மார்க்கண்டேயர்) கர்பகிரகத்தின் மேலே உள்ளது. இரண்டு துவாரபாலகர்கள் மூலவர் சந்நிதி அருகில் உள்ளது. ஸ்ரீ என்னப்பன் சன்னதி வெளி பிரகாரத்தில் தெற்குபுறத்தில் உள்ளது. ஸ்ரீ மணியப்பன் சன்னதி வெளி பிரகாரத்தில் வடக்கு பகுதியில் உள்ளது. ஸ்ரீ தேசிகர் சன்னதி அர்த்தமண்டபத்தின் முன்புறத்தில் உள்ளது. ஸ்ரீ ராமானுஜர் சன்னதி மகாமண்டபத்தில் உள்ளது. 12 ஆழ்வார்கள், ஆஞ்சநேயர், ஸ்ரீ ராமர் சன்னதி மகா மண்டபத்தில் உள்ளது. ஸ்ரீ கருடன் சன்னதி நடவான மண்டபத்தில் உள்ளது. திருக்கோவிலை சுற்றி நான்கு புறமும் மதில்சுவர் அமைக்கப்பட்டுள்ளது.

Oppiliappan Temple Speciality

அருள்மிகு ஒப்பிலியப்பன் (வேங்கடாசலபதி சுவாமி) திருக்கோவில், 108 திவ்யதேசத்தில் 16-வது திவ்யதேசமாகும்.

தலத்தின் பெயர்கள்: ஆகாச நகரம், வைகுண்ட நகரம், திருவிண்ணகர், ஒப்பிலியப்பன் ஸந்நிதி, உப்பிலியப்பன் ஸந்நிதி முதலிய பெயர்களால் வழங்கப்படுகிறது.

எம்பெருமான் திருநாமங்கள்: ஸ்ரீ வேங்கடாசலபதி, திருவிண்ணகரப்பன், தன்னொப்பாரில்லப்பன், ஒப்பிலியப்பன், உப்பிலியப்பன், ஸ்ரீநிவாசன் என்ற திருநாமங்கள் உள்ளன.

பிராட்டியின் திருநாமங்கள்: பூமிதேவி, பூதேவி, பூமிநாச்சியார், தரணிதேவி, வசுந்தரை என்ற திருநாமங்கள் உள்ளன.

பெருமாள் திரு அவதார தினம்: “எம்பெருமான் ஒரு பங்குனி மாதத்தில் ஏகாதசி கூடிய திருவோண நக்ஷத்திரத்தில் பகல் 12.00 மணிக்கு இத்தலத்தில் அவதரித்தான்”. இந்த அவதார தினத்தில் திருத்தேருடன் ஒன்பது நாள் ப்ரஹ்மோத்ஸவம் ஆண்டுதோறும் சிறப்பாய் நடக்கின்றது.

திருமணம் புரிந்த நாள்: எம்பெருமான் பூமிப்பிராட்டியை ஐப்பசி மாதத்தில் திருவோணத்தன்று மணந்து கொண்டான். ஆண்டுதோறும் ஐப்பசி திருவோணத்தில் திருக்கல்யாண உற்சவம் தொடங்கி, தற்கால முறைக்கு ஏற்ப பல்வகை இசை நிகழ்ச்சிகளுடன் 12 நாட்கள் நடந்து வருகிறது.

oppiliappan temple elephant and inside view

Oppiliappan Temple Pooja Timings in Tamil

பூஜைமுறை: ஸ்ரீவைகானஸ ஆகம முறைப்படி இவ்வாலயத்தில் பூஜைகளும், விசேஷ உற்சவங்களும் நடத்தப் பெறுகின்றன. தினந்தோறும் ஆறுகால பூஜை நடக்கின்றது.

பூஜை பெயர் பூஜை நேரம்
விஸ்வரூப பூஜை 05:40 AM to 06:00 AM
திருவானந்தல் பூஜை 07:00 AM to 07:30 AM
திருவாராதனம் பூஜை (மலர்) 08:00 AM to 08:15 AM
உச்சிக்கால பூஜை 12:00 PM to 12:15 PM
சாயரட்சை பூஜை 07:30 PM to 08:00 PM
திருவாராதனம் (இரவு பூஜை) 08:00 PM to 08:15 PM
அர்த்தஜாம பூஜை 09:00 PM to 09:15 PM

பிரசாத சிறப்பு (உப்பு இல்லாதது)

இத்திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள பெருமாள் ஸ்ரீஒப்பிலியப்பன், ஸ்ரீபூமிதேவியை மணக்க விரும்பி பெண் கேட்டு மார்க்கண்டேயர் முனிவரிடம் செல்லும் பொழுது, “மார்க்கண்டேயர் முனிவர் என் பெண்ணோ சின்ன குழந்தை, 5 வயது கூட நிரம்பாதவள், அவளுக்கு உப்பு போட்டு கூட சமைக்கத் தெரியாது” என கூற அதற்கு பெருமாள் ஸ்ரீஒப்பிலியப்பன், “தாங்கள் பெண் உப்பில்லாமல் சமைத்தாலும் அதனை அமிர்தம் போல் ஏற்றுக் கொள்வேன்” என கூறியதால் இன்றும் இக்கோவிலில் பெருமாளுக்கு உப்பு இல்லாமலே சகல நைவேத்தியங்களும் செய்யப்படுகின்றன.

உப்பையோ, அது கலந்த பொருளையோ கருடன் சந்நிதிக்கு அப்பால் எடுத்து செல்லக்கூடாது. அதைக் கொண்டு போவது பெருமாளுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத பெரிய அபசாரமாகும் (பாவம்). அதனாலேயே இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளுக்கு லவணவர்ஜித வெங்கடேசன் (உப்பை விலக்கியவன்), உப்பிலியப்பன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இந்த திருக்கோவிலில் தாயாருக்கு என தனி சந்நிதி கிடையாது. பெருமாளுக்குப் பக்கத்தில் பூமிநாச்சியார் மற்றும் மார்க்கண்டேயர் முனிவர் அருள்பாலிக்கும் ஒரே சன்னதி ஆகும். மேலும் பூமிநாச்சியாரைப் பிரிந்து பெருமாள் மட்டும் தனியாக எழுந்தருளுகின்ற வழக்கமே கிடையாது.

இக்கோவிலில் உள்ள பிரசாத விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களிலும் உப்பு சேர்ப்பதில்லை. மேலும் உப்பைத் தவிர ஏனைய பொருட்கள் பக்தர்களால் துலாபாரம் கொடுக்க அனுமதிக்கப்படுகிறது. உப்பிட்ட பொருட்களை கொடிமரத்தினை தாண்டி எடுத்துச் செல்ல அனுமதிப்பதில்லை.

மேலும் “இத்திருக்கோவிலில் உப்பு இல்லாமல் இறைவனுக்கு நைவேத்தியம் செய்யப்படும் பிரசாதங்களை கோவிலுக்குள்ளேயே சாப்பிட்டால் உப்பிட்டது போல் இருக்கும்”. அதே பிரசாதத்தினை கோவிலுக்கு வெளியே சென்று சாப்பிட்டால் உப்பு இல்லாமல் இருப்பது போல் இருக்கும் என்பதை பக்தர்கள் கண்கூடாக உணரலாம்.

சிரவண தீபம்

ஒவ்வொரு மாதம் வருகின்ற சிரவணத் திருநாட்களில் ஆயிரக்கணக்கான சேவார்த்திகள் வருகை தந்து பெருமாளின் அவதார நட்சத்திர நன்னாளில் பெருமாளைச் சேவித்து பகல் 11.00 மணியளவில் மூவகை தீபம் கொண்ட சிரவண தீபம் தரிசித்து செல்கின்றனர்.

திருக்கோவிலில் சிரவண தீபம் முடிந்து ஆலயத்திற்கு வந்தோ அல்லது அவரவர் இருக்குமிடத்திலோ உண்ணா நோன்பிருந்து இறுதியில் உப்பில்லாத உணவைப் பெருமாளுக்குப் படைத்து உண்டு விரதம் முடிப்பது சிரவண விரதமாகும்.

திருப்பதி வெங்கடாசலபதிக்கு உண்டானது போல் இப்பெருமானுக்கும்  தனி சுப்ரபாதம் உண்டு.

புஷ்கரிணி திருக்குளம்: இத்திருக்கோவிலின் உட்புறத்தில் திருக்குளம் ஒன்று உள்ளது. அதற்கு அஹோராத்ர புஷ்கரிணி (பகலிராப் பொய்கை) என்று பெயர். மற்ற தலத்து பொய்கைகளிற்போலன்றி இதில் காலவரையின்றி பகலும், இரவும் நீராடலாம் ஆதலின் இப்பெயர் பெற்றது. இந்த புஷ்கரிணி தற்போது திருக்கோவில் திறந்திருக்கும் போது மட்டும் நீராட அனுமதிக்கப்படுகின்றது. இத்திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை சிரவணத்தன்று தெப்ப உற்சவம் நடைபெறும்.

oppiliappan temple theertham

Oppiliappan Temple Festivals

திருவிழா: புரட்டாசி, ஐப்பசி, பங்குனியில் பிரம்மோற்ஸவம்.

ஸ்ரீராமநவமி: இத்திருக்கோவிலில் ஸ்ரீ ராமநவமி உத்ஸவம் 11 நாட்களுக்குக் கொண்டாடப்படுகிறது. அந்நாட்களில் ஸ்ரீராமன், சீதை, இலக்குவன், ஹனுமான் ஆகியோருக்குத் திருமஞ்சனமும், விசேஷ பூஜைகளும் நடைபெறும். அவ்வுற்சவத்தின் நிறைவு நாட்களில் மாப்பிள்ளை அழைப்பு, சீதா கல்யாணம் மற்றும் ஸ்ரீராமர் கனகாபிஷேகம், பட்டாபிஷேகம், அனுமன் கனகாபிஷேகம் முதலியன வெகு விமரிசையாய் நடைபெறும்.

பிரார்த்தனை: இங்கு வேண்டிக்கொள்ள தம்பதியர்களுக்குள் மன ஒற்றுமை அதிகரிக்கும், சகிப்புத்தன்மை கூடும் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: சுவாமிக்கு திருமஞ்சனம் செய்வித்து, நேர்த்திக்கடன் நிறைவேற்றுகிறார்கள்.

oppiliappan temple moolavar

Uppiliappan Temple Timings

கோவில் திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல்1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

Oppiliappan Temple Address in Kumbakonam

Oppiliyappan Koil N St, Thirunageswaram, Tamil Nadu 612204

Oppiliappan Temple Contact Number: +914352463385, +914352463685



One thought on "ஒப்பிலியப்பன் கோவில் வரலாறு (திருவிண்ணகர்)"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்