×
Wednesday 11th of December 2024

மலேசியா பத்துமலை முருகன் கோவில்


Batu Caves Murugan Temple in Tamil

திருத்தலம் பத்துமலைக் குகை முருகன் கோவில்
மூலவர் பத்துமலை முருகன்
அம்மன்/தாயார் வள்ளி தெய்வயானை
ஊர் கோலாலம்பூர்
நாடு மலேசியா

Malaysia Pathu Malai Murugan Temple

malaysia pathu malai murugan temple entrance steps

பத்துமலைக் குகை முருகன் கோவில், மலேசியா

மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோவில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோவில். இந்தக் கோவில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோவிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோவிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

malaysia pathu malai murugan statue back view

Malaysia Murugan Temple History in Tamil

பத்துமலை முருகன் கோவில் வரலாறு

மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் “வேல் மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள்”. தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர், தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோவில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.

malaysia pathu malai murugan temple gopuram

இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோவில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோவில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோவில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

Batu Caves Murugan Temple Structure

பத்துமலைக் குகை முருகன் கோவில் அமைப்பு

இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோவில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோவிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.

Malaysia Murugan Statue Height: 140.09 feet.

மிகப் பெரிய முருகன் சிலை

தற்போது இந்தக் கோவிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோவிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

மலாய்க்காரர்கள் எனப்படும் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை என்றாலும் இக்கோவிலையும், இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிலையையும் சுற்றுலாவாக வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.

malaysia pathu malai murugan moolavar

பத்துமலை முருகன் கோவில் சிறப்பு

பல்வேறு வழிகளில் கொண்டு வரப்படும் பால் அனைத்தும் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது என்பது இங்கு மட்டுமே நடைபெறும் நிகழ்வு. தமிழகத்தில் உள்ள கோயில்களில் இவ்வாறு செய்யப்படுவதில்லை. மூன்று நாட்கள் இடைவெளியே இல்லாமல் இரவு பகல் என அனைத்து நேரங்களில் தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருப்பது இத்தலத்தின் பெருமைக்குரிய சிறப்பு.

Malaysia Pathu Malai Murugan Temple Festivals

சிறப்பு விழாக்கள்: முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, தமிழ்நாட்டில் முருகன் கோவில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது. ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.

malaysia pathu malai murugan statue

பயண வசதிகள்: மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.

Batu Caves Temple Timings

திறக்கும் நேரம்: பத்துமலைக் குகை முருகன் கோவில் மலேசியா நேரப்படி, காலை 08:00 மணி முதல் 01:00 மணி வரை, மாலை 03.30 மணி முதல் இரவு 08.30 மணி வரை திறந்திருக்கும்.

malaysia pathu malai murugan statue night view

Malaysia Pathu Malai Murugan Temple Contact Number: +60 361896284, +60 320785323

Malaysia Pathu Malai Murugan Temple Address

Gombak, 68100 Batu Caves, Selangor, Malaysia



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • நவம்பர் 7, 2024
முருகனின் ஆசிர்வாதத்துடன் எதிலும் வெற்றி பெறுவோம்
  • அக்டோபர் 22, 2024
அறுபடை முருகன் அருட்பாமாலை