×
Tuesday 10th of December 2024

பெண்களுக்கு நலம் நல்கும் பேட்டவாய்த்தலை ஶ்ரீ பாலாம்பிகை ஆலயம்


Pettavaithalai Madhyarjuneshwarar & Balambikai Temple History

ஸ்ரீ பாலாம்பிகை – மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவில்

நம் நாட்டின் திருக்கோவில்கள் தவ வலிமை வாய்ந்த ஒப்பற்ற மாபெரும் சான்றோர்களால் நிறுவப்பெற்று இம்மையில் அறம், பொருள், இன்பத்தையும் மறுமையில் வீடு பேற்றையும் அருளும் தெய்வத் திருத்தலங்கள் ஆகும்.

இந்தத் தலங்களுக்குச் சென்று வழிபடும் அன்பர்களது குறைகளைக் களைவதுடன், அவர்களது பிறவிப் பிணியையும் போக்கும் இறையின் வல்லமை நமது அறிவுக்கு அப்பாற்பட்டது.

ஒரு மருத்துவருக்கே விளங்காத, மருத்துவ சக்திக்கு மீறிய எத்தனையோ அற்புதங்கள் மருத்துவ வரலாற்றில் நடப்பதுண்டு. நமக்கும் மேலான மருத்துவராய் நின்று, நம்மை எல்லாம் காப்பது, அந்த இறையும் இயற்கையுமன்றி வேறு யார்? இப்படி, அடியார்தம் உயிர்காக்கும் மருத்துவனாய், அவர்களது வாழ்வை வளமாக்கும் வள்ளலாய் இறைவன் அருளும் தலங்களில், முக்கியமான சில தலங்களை நாம் இந்தத் தொடரில் தரிசிப்போம்.

Balambigai Temple for Pregnant Ladies

உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் மூலம் ஒரு துளி சுக்கிலம். அதிலும் ஒரு சிறு துளியைத் தன்னுள் ஏற்று, கருவாக்கிக்காத்து, உயிர்களை ஜனிக்கவைக்கும் பெருமையும் பேறும் கொண்டது கருப்பை.

சும்மாவா சொன்னார்கள் ‘கர்ப்ப கிரகம்’ என்று? கர்ப்பத்தைத் தாங்கும் அந்தக் கிரகமே ஒரு கோவில்தானே! அந்தப் புனிதமான கருப்பைக்கு வரும் இயற்கைப் பிரச்னைகளும், கோளாறுகளும், வியாதிகளும் எத்தனை, எத்தனை? அவற்றை எல்லாம் தீர்த்துவைக்கும் ஒரே திருத்தலம், திருச்சிக்கு அருகே இருக்கும் பேட்டவாய்த்தலை.

தமிழகத்தின் பாடல்பெற்ற சிவத்தலங்களில் பெரும்பாலும் அய்யனே பிணி தீர்க்கும் பெரு மருத்துவராக விளங்க; சிற்சில கோவில்களில் அந்தப் பணியை ஏற்று, பிணியைத் தீர்க்கிறாள் அம்பிகை.

 

பேட்டவாய்த்தலை-ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வர சுவாமி திருக்கோவிலிலும், அன்னை பாலாம்பிகையே பெண்களின் கர்ப்பப்பை நோய்கள், மாதவிடாய் கோளாறுகள், குழந்தைப்பேறின்மை போன்ற பிரச்னைகளுக்கு அபயம் அளித்து, குணமாக்குகிறாள்.

கோவில் வரலாறு – Pettavaithalai Madhyarjuneshwarar Temple History

தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழனின் வழிவந்த, மூன்றாம் குலோத்துங்க சோழன் (கி.பி. 1178 – கி.பி. 1218) கட்டியதுதான் பேட்டவாய்த்தலை ஆலயம். இங்கே பிரதிஷ்டை செய்த சிவனுக்கு, தம் முன்னோர் திருவிடைமருதூரில் எழுப்பிய ஆலயத்தில் உறைந்துள்ள இறைவனின் திருப்பெயரான மத்யார்ஜுனேஸ்வரர் என்ற பெயரையே சூட்டி மகிழ்ந்தான். வடக்கே மல்லிகார்ஜுனம் (ஸ்ரீசைலம்), தெற்கே திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருப்புடார்ஜுனம் – இவற்றுக்கு இடையே இத்திருத்தலம் அமைந்திருப்பதால், இதை மத்யார்ஜுனம் என்று மன்னன் கருதியிருப்பான் போலும்!

பொங்கிவரும் காவிரியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த, உய்யக்கொண்டான் என்ற வாய்க்காலை வெட்டினான் மூன்றாம் குலோத்துங்கன். அதன் உற்பத்தி ஸ்தானத்தில் இருப்பதுதான் ஸ்ரீ பாலாம்பிகை உடனுறை மத்யார்ஜுனேஸ்வரர் திருக்கோவில். ஒரு புறம் காவிரி, மறுபுறம் அய்யன் வாய்க்கால் எனப்படும் உய்யக்கொண்டான் ஆறும் ஓடுவதால், இது தீவுக் கோவில் என்ற வரிசையிலும் அடங்கும். எத்தனை உக்கிரமாகச் சூரியனின் கதிர்கள் சுட்டெரித்த போதிலும், இங்கே வெம்மையே தெரியாது.

இந்தக் கோவிலை குலோத்துங்கன் கட்டியதற்குப் பின்னணியில் ஒரு வரலாறு இருக்கிறது. தோஷத்திலேயே மிகக் கொடிய தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தில் சிக்கித் தவித்தான் மூன்றாம் குலோத்துங்கன். இதற்குத் தீர்வு வேண்டி, திருவிடைமருதூர் இறைவனை வழிபட்டு வந்தான். ஒருநாள், ஓர் அசரீரி ஒலித்தது. ஓரிடத்தைக் குறிப்பிட்டு, ‘‘நதி ஒன்றை உருவாக்கி, அதன் கரையில் சிவாலயம் கட்டி, வழிபட்டால், அந்த இறைவனால் உன் தோஷம் நீங்கும்’’ என்றது அசரீரி.

அதன்படியே, காவிரியிலிருந்து ஒரு கிளை நதியை வெட்டி, அதன் தென் கரையில் இக்கோவிலை எழுப்பினான் என்கிறது வரலாறு. அதனால்தான் திருவிடைமருதூர் தெய்வத்தின் திருநாமத்தையே இங்குள்ள இறைவனுக்கும் சூட்டியுள்ளான். அதன்பிறகு, மன்னனின் தோஷம் நீங்கியதுடன், நீண்ட நாள்களாகக் குழந்தை இல்லாமலிருந்த அவனுக்குக் குழந்தை பாக்கியமும் கிடைத்தது.

பொற்றாளம் பூவாய் சித்தர் – Potralam Poovai Siddhar

potralam poovai siddhar

அந்தக் காலகட்டத்தில் மாதவிடாய் தொந்தரவுகளால் அவதிப்பட்ட பெண்களுக்கு பொற்றாளம் பூவாய் சித்தர் மருத்துவம் பார்த்திருக்கிறார். எனினும், அவருடைய வைத்தியத்துக்கு எந்தப் பலனும் இல்லாமல், பெண்கள் தொடர்ந்து வேதனையுறுவதைப் பார்த்துக் கலங்கிய பூவாய் சித்தர், ‘‘இந்தப் பெண்களின் பிரச்னையைத் தீர்க்க மாட்டாயா?’’ என்று பேட்டவாய்த்தலை பாலாம்பிகையிடம் முறையிட்டுள்ளார். அவரின் பிரார்த்தனைக்குச் செவிசாய்த்த அம்பாள், பூப்படையும் நாள் முதல், மாதவிலக்கு நிற்கும் காலம் வரை பெண்களுக்கு எந்தப் பிரச்னையும் வராமல் காத்து அருள்புரிகிறாள்.

திருக்கோவில் அமைப்பு

ஊருக்கு மேற்கே வாய்க்காலுக்கு அருகே அமைந்துள்ள சிறிய கோவில் இது. ஐந்து நிலைகளையுடைய ராஜகோபுரம் அழகே வரவேற்கிறது. அளவில் மிகச் சிறிதாக இருந்தாலும், இரு பிராகாரங்களுடன் திகழ்கிறது. வெளிப் பிராகாரத்தில், நர்த்தன விநாயகர், கன்னிமூல கணபதி, தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், கஜலட்சுமி, சண்டிகேசுவரர், துர்கை, பைரவர் ஆகியோருக்குச் சந்நிதிகள் அமைந்திருக்கின்றன. கோயிலைச் சுற்றிலும் வயல்களும் வாய்க்கால்களும் நிறைந்திருப்பதால், மழைக்காலங்களில் சுவாமி சந்நிதியின் ஊற்றுகளிலிருந்து நிலத்தடி நீர் மேலே வந்து, மத்யார்ஜுனேஸ்வர சுவாமியை, ஜலகண்டேசுவர சுவாமியோ என்று வியக்கும் வண்ணம் குளிர்ச்சியாக நீர் நிரம்பிக் காட்சி தருகிறது. கோயில் பற்றி பல கல்வெட்டுகளும் உள்ளன. சுவாமியின் மற்றொரு பெயர், மார்த்தாண்டேஸ்வரர் என்றும் கல்வெட்டு கூறுகிறது.

பிரார்த்தனை முறை

குழந்தைப்பேறு மற்றும் கருப்பை சம்பந்தமான பிரச்னைகளை உடைய பெண்கள், பாலாம்பிகை அம்மனையும் பூவாய் சித்தரையும் மனமுருக வேண்டி, தங்களின் வேண்டுதலை ஒரு சீட்டில் எழுதி, சித்தர் திருவுரு உறைந்திருக்கும் கல்தூணில் கட்டிவிட்டு, பிரார்த்திக்க வேண்டும். ஒவ்வொரு நாளும் அம்பாளிடம் அந்தப் பிரார்த்தனைகளைப் பூவாய் சித்தர் வாசித்துக் காட்டி, பக்தைகளின் பிணியை நிவர்த்திசெய்து அருள்புரிய வேண்டுகிறார் என்பது ஐதீகம்.

வெட்டை மேகநீரொடு வுதிரங்கொட்ட
கட்டியோடு வண்ணவாடை தழும்ப
வாடிய பிணி வாட்ட மறுப்பான்
பொன்தாள பூவான சித்தனன்றே

– என்று பாடியுள்ளார் காகபுஜண்ட முனிவர்.

கோவிலிலேயே பிரார்த்தனை சீட்டு விற்கப்படுகிறது. அதை வாங்கி, நமது மன, உடல் ரீதியான பிரச்னைகளை எழுதி, அந்தப் பிரார்த்தனையை நிறைவேற்றித் தருமாறு சுவாமி, அம்பாள் மற்றும் சித்தரை வேண்டி, பூவாய் சித்தர் தூணில் கட்டிவிட வேண்டும்.

பின்பு, கோவிலில் வழங்கப்படும் படத்தினை வீட்டில் பூஜையறையில் வைத்து, ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதமிருந்து, ஒரு டம்ளர் பாலை சுவாமி படத்தின் முன் வைத்து, கீழ்க்கண்ட ஸ்லோகத்தை 11 முறை சொல்லி, வழிபட வேண்டும். பிறகு நிவேதனம் செய்த பாலில், சிறிது விபூதி பிரசாதத்தைப் போட்டு, குடித்துவிட வேண்டும். இதுபோல தொடர்ந்து 11 வாரங்கள் செய்ய வேண்டும். இடையிலே ஒரு வாரம் தடைபட்டால்கூட, மறுவாரத்திலிருந்து தொடர்ந்து செய்யலாம். நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு கைமேல் பலன் நிச்சயம் உண்டு.

ஸ்லோகம்
பாலாம்பிகேச வைத்யேச பவரோக ஹரேதிச
ஜபேந் நாமத்ரயம் நித்யம் மஹாரோக நிவாரணம்.

பிரம்மஹத்தி வழிபாடு – Brahmahathi Dosham Valipadu

கோவில் மண்டபத்தின் தென்பகுதியில், ஒரு தூணில் பிரம்மஹத்தியின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அமாவாசை தினங்களில், பொழுது சாயும் வேளையில் மலர்கள் சார்த்தி, தீபதூபங்கள் காட்டி வழிபட்டால், பிரம்மஹத்தி தோஷம் மட்டுமல்லாது, இன்ன பிற தோஷங்களும் நிவர்த்தியாகும்.

பல தோஷங்களால் வாழ்வில் நிம்மதி கெட்டு, மனக்குழப்பமும் கவலையும் வறுமையும் அடைந்து வாடும் பக்தர்கள் பலர் இங்கு வந்து வணங்கி, வளம் பெறுகின்றனர். இதனால், ஸ்ரீமத்யார்ஜுனேஸ்வரரை மனநோய் தீர்க்கும் மத்யார்ஜுனர் என்றும் மக்கள் போற்றுகின்றனர்.

மனதில் கலக்கமும் கருப்பை செயல்பாடுகளில் சுணக்கமும் இருக்கும் பக்தர்கள் பேட்டவாய்த்தலை சென்று, ஸ்ரீமத்யார் ஜுனேஸ்வரர் – ஸ்ரீ பாலாம்பிகா மலரடியில் தஞ்சமடைந்தால் போதும்; பிணிகள் விலகும், தோஷம் அகலும், மனம் நிறையும்.

கோவில் இருப்பிடம் – Pettavaithalai Temple Address

திருச்சி – கரூர் வழித்தடத்தில், திருச்சியில் இருந்து 25 கி.மீ தொலைவிலும் கரூரில் இருந்து 51 கி.மீ தொலைவிலும் பேட்டவாய்த்தலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ தூரத்தில் உள்ளது தேவஸ்தானம். பேட்டவாய்த்தலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, ஆட்டோ மூலம் கோவிலை அடையலாம். திருச்சி – ஈரோடு ரயில் மார்க்கத்தில், பேட்டவாய்த்தலை ரயில் நிறுத்தத்தில் இறங்கியும் செல்லலாம்.

Pettavaithalai Temple Timings

காலை 6.45 மணி முதல் மதியம் 12.30 வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.

Madhyarjuneshwarar & Balambikai Temple Map


மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • டிசம்பர் 5, 2024
அன்னை அன்னபூர்ணா மரகத மணிமாலை
  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்