×
Monday 9th of December 2024

பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்


Pillayarpatti Pillayar Kovil History in Tamil

அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில், பிள்ளையார்பட்டி

மூலவர் கற்பக விநாயகர்
தல விருட்சம் மருதமரம்
ஊர் பிள்ளையார்பட்டி
மாவட்டம் சிவகங்கை

பிள்ளையார்பட்டி பெயர்க்காரணம்

🛕 பிள்ளையார்பட்டி எனப் பெயர் கொண்டு விளங்கும் இவ்வூர் தமிழ்நாடு மாநிலத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது. காரைக்குடியிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் குன்றக்குடிக்கு அடுத்து உள்ளது. இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்பதே இன்று நாடறிந்த பெயராயினும்,

  1. எருகாட்டூர் அல்லது எக்காட்டுர்
  2. மருதங்குடி
  3. திருவீங்கைகுடி
  4. திருவீங்கைச்வரம்
  5. இராசநாராயணபுரம்

🛕 என்று வேறு ஐந்து பெயர்கள் உண்டு. மருதங்கூர், தென்மருதூர், கணேசபுரம், கணேசமாநகரம், பிள்ளை நகர் போன்ற பெயர்கள் பிற்காலப் பெயர்கள் பிற்காலப் பாடல்களில் காணப்படுகின்றன.

🛕 இரண்டு இராஜகோபுரங்களுடன் கூடிய பெரிய திருக்கோவில். இக்கோவிலில் நான்கு முறையாகத் திருப்பணி நடந்திருப்பதாகத் தெரிகின்றது.

🛕 முதன்முதலாக நடந்த திருப்பணி இன்று காணப்பெறும் திருக்கோவிலின் தெற்கு புறத்தில் கீழ்மேலாக நீண்டு கிடக்கும் குன்றில் வடமுகமாக மலையைக் குடைந்து அமைக்கப் பெற்ற குடைவரைக் கோவிலாகும்.

🛕 இந்த குடைவரைக் கோவிலுக்குள் நாம் நுழைந்தால் முதலில் உள்ள கிழ்மேல் ஓடிய பகுதி காணப்படும். அதற்கு அடுத்து நான்கு தூண்களுக்கு இடையே தென்வடல் ஓடிய இரட்டைப் பகுதி மண்டபம் காணப்படும். அம்மண்டபத்தின் கீழ்புறத்தில் தென்புறம் மலை நெற்றியில் 6 அடி உயரம் உள்ள கம்பீர நிலையில் வடக்கு நோக்கி உள்ளார் கற்பக விநாயகர். இந்த மூர்த்தி தான் பிள்ளையார்பட்டியின் மூலவர் கற்பக விநாயகரான தேசிவிநாயகப் பிள்ளையார்.

🛕 அதற்கு மேற்கே அதே மலை நெற்றியில் தெற்கு நோக்கிய சங்கர நராயணர். உருநாட்டு சண்டீசன், கருடன் இருவரும் இருபுறம் நின்ற கோலத்தில் விளங்குகிறார்கள்.

🛕 அந்த மேல்புரத்தில் பத்தியின் நடுவே கிழக்கு பார்த்த திருவாயிலுடன் கூடிய மாடம் குடையப் பெற்றுள்ளது. அதன் நடுவிலே கடைந்த பெரிய மகாலிங்கம் உள்ளது. இந்த மூர்த்திதான் திருவீசர். இவர் திருவீங்கைக்குடி மகாதேவர்.

🛕 அங்கிருந்து சிறிது வடக்கே வந்து மேற்கே சென்று தெற்கு புறமாக பார்த்தோமானால் வடக்குப் பார்த்த லிங்கோத்பவர் மூர்த்தியை காணலாம். இந்த அளவில் உள்ள குடைவரைக் கோவில் தான் முதல்திருப்பணி ஆகும்.

 

Pillayarpatti Kalvettu

🛕 இக்குடைவரைக் கோவிலுக்குள் உள்ள கல்வெட்டுகள் நமக்கு சொல்லும் செய்திகள்:

🛕 முதன் முதலில் மருதங்குடி வயல்களை மருதங்குடி ஊராரிடம் பிள்ளையார்பட்டி கோவில் நகரத்தார் விலைக்கு வாங்கியிருக்கிறார்கள் பின்னர் சம்மந்தப்பட்ட அத்தனையூர் நாட்டவரிடமும், கீழ்குண்டாற்று நாட்டவரிடமும், அவர்களுக்கு உள்ள உரிமையை வாங்கி உள்ளனர். அதன் பிறகு அந்நாளில் பாண்டி மண்டலத்தை வென்று ஆட்சி செய்த (பரகேசி மூன்றாம் குலோத்துங்க சோழ தேவரான) கோனேரின்மை கொண்டானிடம் முழு உரிமையும் பெற்றுக் கொண்டிருக்கின்றார்கள். அவன் நகரத்தார்களுக்கு கொடுத்த திருமுகத்திலுருந்து மருதங்குடியில் இராசநாராயணபுரம் என்ற பெயருடன் ஒரு நகரம் அமைத்து அதில் குடியேறி வாழ்ந்துவர அனுமதித்திருக்கிற செய்தி நன்கு புலனாகிறது.

🛕 மருதங்குடியான இராசநாராயணபுரம் என்னும் பிள்ளையார்பட்டியும் கீழ்குண்டாற்று நாட்டில் அடங்கியதே. எனவே பிள்ளையார்பட்டியை “கேரள சிங்கவள நாட்டு கீழ்குண்டாற்று நாட்டில் மருதங்குடியான இராச நாராயணபுரத்து பிள்ளையார்பட்டி” என்றே குறிப்பிட வேண்டும்.

🛕 விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோவில். 1600 ஆண்டுகள் பழமையான இக்கோவில் மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. தற்போது நகரத்தார்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

🛕 பிள்ளையார் ஞானத்தின் நாயகன். ஓர்ந்து கவனிக்க அவரின் முகமே பிரணமாம் “ஓம்“.

Pillayarpatti Karpaga Vinayagar Specialities in Tamil

இங்குள்ள விநாயகரின் சிறப்பு:

  1. இங்கு பெருமானின் துதிக்கை வலம்சுழித்ததாக அமைந்திருப்பது.
  2. சாதாரணமாக மற்ற இடங்களில் இருப்பதைப்போல நான்கு கைகள் இல்லாமல் இரண்டு கரங்களை கொண்டு விளங்குவது.
  3. அங்குச பாசங்கள் இல்லாமல் விளங்குவது.
  4. வயிறு, ஆசனத்தில் படியாமல் கால்கள் மடித்திருக்க அமர்ந்திர்ப்பது.
  5. வலத்தந்தம் நீண்டும், இடத்தந்தம் குருகியும் காணப்படுவது.
  6. வலக்கரத்தில் மோதகம் தாங்கியருள்வது.

Pillayarpatti Ther Thiruvizha

🛕 தேர்த்திருவிழா: விநாயகருக்கு தேர்த்திருவிழா நடைபெறும் ஒருசில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. விநாயகருக்கும், சண்டிகேசுவரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். பிள்ளையார் தேரில் இரண்டு வடங்களில் ஒன்றை பெண்களும் மற்றொரு வடத்தை ஆண்களும் இழுத்துச் செல்வர். சண்டிகேசுவரருக்கான தேரை பெண்களும் குழந்தைகளும் மட்டுமே இழுத்துச் செல்வர். தேரோடும் வீதியில் வேண்டுதல் நிமித்தமாக பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்வர். இத்திருவிழா 9ம் நாள் நிகழ்ச்சியாக நடக்கும்.

🛕 9ம் நாள் விழாவான தேர்வலம் வரும் அதே நேரத்தில் மூலவருக்கு சுமார் 80 கிலோ சந்தனத்தால் காப்பு சாத்தப்படும். ஆண்டிற்கு ஒருமுறை மட்டுமே இந்த சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படுவதால் அக்காட்சியை காண பக்தர்கள் கூட்டம் அதிகமிருக்கும். மகா அபிடேகமும் நடத்தப்படும்.

Pillayarpatti Vinayagar Kolukattai

🛕 ராட்சத கொழுக்கட்டை: ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தியன்று உச்சிகால பூசையின் போது விநாயகருக்கு முக்குறுணி அரிசியால் செய்யப்பட்ட பெரிய அளவிலான ஒரே கொழுக்கட்டை தயாரித்து படைக்கப்படும். இது மிகவும் சிறப்பு பெற்றதாகும்.

🛕 18 படி அரிசியை மாவாக்கி, எள் 2 படி, கடலைப்பருப்பு 6 படி, தேங்காய் 50, பசுநெய் 1 படி, ஏலம் 100 கிராம், வெல்லம் 40 கிலோ ஆகியவற்றை சேர்த்து ஒரே கலவையாக்கி, உருண்டை சேர்த்து அதனை துணியால் கட்டி, மடப்பள்ளியில் அன்னக் கூடையில் வைத்து கட்டுவார்கள். தண்ணீர் நிரப்பப்பட்ட அண்டாவினுள் இறக்கி அதன் அடிப்பகுதியில் படாதவாறு தொங்கவிட்டு மடப்பள்ளி முகட்டில் கயிற்றால் கட்டி விடுவர்.

🛕 பின்னர் அது, அந்த பெரிய அளவிலான பாத்திரத்தில் 2 நாள் தொடர்ச்சியாக வேக வைக்கப்படும். பின்னர் இது உலக்கை போன்ற கம்பில் கட்டி பலர் சேர்ந்து காவடி போல தூக்கி வந்து மூலவருக்கு உச்சிகால பூசையில் படையல் செய்வர். மறுநாள் கொழுக்கட்டை சூடு ஆறிய பின்னர் நகரத்தார், ஊரார்கள் மற்றும் பணியாளர்களுக்கு பிரித்து உண்ணக்கொடுப்பர்கள்.

Pillayarpatti Temple Festival in Tamil

🛕 ஒவ்வொரு சதுர்த்தியன்றும் இரவு விநாயகப் பெருமான் வெள்ளி மூஞ்ஞூரு வாகனத்தில் எழுந்தருளி கோயில் உட்பிரகாரத்தில் வலம் வருவார். திருக்கார்த்திகை அன்று விநாயகப் பெருமானும், உமாதேவி உடனுறை சந்திரசேகரப் பெருமானும் திருவீதி உலா வருவார். பிள்ளையார், மருதங்குடி நாயனார் சன்னதிகளில் சொக்கப்பனை கொளுத்தப்படும். மார்கழி திருவாதிரை நாளன்று சிவகாம சுந்தரி உடனுறை நடராசப் பெருமான் திருவீதி உலா வருவார். ஆவணி மாதம் வரும் விநாயகர் சதுர்த்தியே இங்கு பெரிய திருவிழாவாகும். இது 10 நாள் திருவிழாவாக நடக்கும். பிள்ளையார் சதுர்த்திக்கு 9 நாட்களுக்கு முன்பு காப்புகட்டி, கொடியேற்றம் நடக்கும். 10ம் நாள் காலையில் தீர்த்தவாரி உற்சவமும், உச்சிகால பூசையின் போது ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியமும், இரவு ஐம்பெருங்கடவுளரும், தங்க, வெள்ளி வாகனங்களில் திருவீதி உலா வருவர்.

Pillayarpatti Temple Vishesham

🛕 திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

🛕 விநாயகருக்கு திருமுழுக்காட்டு செய்தும், புத்தாடை அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Pillayarpatti Temple Timings

🛕 காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

Morning Worship Timing
06:00 AM to 12:00 PM
Evening Worship Timing
04:00 PM to 08:00 PM

Also, read

Pillayarpatti Temple Address

P.K.NK.TRUST, Koil Road, Koothadipatti, Pillayarpatti, Tamil Nadu 630207

🛕 அருள்மிகு விநாயகர் திருக்கோவில், பிள்ளையார்பட்டி – 630207, திருப்புத்தூர் தாலுகா, சிவகங்கை மாவட்டம்.



2 thoughts on "பிள்ளையார்பட்டி அருள்மிகு கற்பக விநாயகர் திருக்கோவில்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்