×
Tuesday 3rd of December 2024

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்


Punnainallur Mariamman Temple History in Tamil

புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்

மூலவர் மாரியம்மன் (முத்துமாரி), துர்க்கை
தல விருட்சம் வேம்புமரம்
தீர்த்தம் வெல்லகுளம்
புராண பெயர் புன்னைவனம்
ஊர் புன்னைநல்லூர்
மாவட்டம் தஞ்சாவூர்

Punnainallur Mariamman History in Tamil

🛕  தல வரலாறு: கீர்த்தி சோழன் என்னும் அரசர் இவ்வம்பிகையின் அருளால் ஒரு ஆண்மகனைப் பெற்று அதற்கு தேவசோழன் என்னும் பெயரைச் சூட்டி அவன் பல ஆண்டுகள் சோழ சாம்ராஜ்யத்தை ஆண்டு வந்தான். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680 ல் திருத்தல யாத்திரை செய்யுங்கால் கண்ணபுரம் என்னும் சமயபுரத்தில் தங்கி வழிபாடு செய்தார். அன்றிரவு அம்பிகை அரசனின் கனவில் தோன்றி, தஞ்சைக்கு கிழக்கே 7 கி.மீ. தூரத்தில் உள்ள புன்னைக் காட்டில் புற்று உருவாய் உள்ள தன்னை வந்து சேவிக்கும்படி கூறவே, அவ்வரசன் தலைநகராகிய தஞ்சைக்கு வந்து புன்னைக் காட்டிற்கு வழியமைத்து, அம்பிகை இருப்பிடத்தைக் கண்டு சிறிய கூரையமைத்து, புன்னைநல்லூர் என்று பெயரிட்டு அக்கிராமத்தையும் ஆலயத்திற்கு வழங்கினார்.

🛕 1728 -1735 ல் தஞ்சையை ஆண்ட துளஜா ராஜாவின் புதல்வி வைசூரியால் கண் பாதிக்கப்பட்டு இந்த அம்பிகையை வழிபட்டு குணமானாள். அம்பிகையின் அருளை எண்ணி அவ்வரசன் அம்பிகைக்கு சிறிய கோவிலாக கட்டினார். காலப்போக்கில் இது இவ்வளவு பெரிய கோவிலாக மாறியது என்று வரலாறு கூறுகிறது.

🛕 தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத் திக்குகளிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தனர். தஞ்சைக்கு கிழக்காக அமையப்பெற்ற காவல் தெய்வமே புன்னைநல்லூர் மாரியம்மன் என்று சோழ சம்பு எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதினேழாம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகா ராஜாவால் இக்கோவில் உருவாக்கப்பட்டபோது, இப்பகுதி புன்னை வனக்காடாக இருந்துள்ளது. மேலும், சிவ பெருமானை வழிபட கோவிலிலிருந்து சற்றுத் தொலைவில் கைலாசநாதர் கோவிலையும் கட்டினார் மகா ராஜா.

Punnainallur Mariamman Temple Special

🛕  தலபெருமை: சுயம்பு அம்மன் – மூலஸ்தான மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது என்பது ஒரு தனிச் சிறப்பாகும். மூலவர் அம்மன் புற்று மண்ணால் ஆனதால் மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. தைலக் காப்பு சாற்றப்படுகிறது.

🛕 விஷ்ணு துர்க்கைக்கும் அம்பாள் உற்சவ மூர்த்திக்கும் நித்தியபடி அபிஷேகம் நடைபெறுகிறது. அம்பாளுக்கு 5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு மண்டலம் தைல காப்பு அபிஷேகம் நடைபெறும். அவ்வமயம் ஒரு மண்டலம் அம்பாளை ஒரு வெண் திரையில் வரைந்து ஆவாகனம் செய்து, அதற்குதான் அர்ச்சனை ஆராதனைகள் நடைபெறும். அப்போது மூலஸ்தான அம்பாளுக்கு 48 நாட்களிலும் தினமும் இரு வேளை சாம்பிராணி தைலம், புணுகு, அரகஜா, ஜவ்வாது ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெறும்.

🛕 தைலாபிஷேக நேரத்தில் அம்பாளின் தைலகாப்பின்போது உக்ரம் அதிகமாகும்.அதை தவிர்க்க அம்பாளுக்கு தயிர் பள்ளயம், இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். சுமார் 6 அடி உயரத்தில் பிரமாண்டமாக காட்சி தருகிறாள் அம்மன். அம்மை நோய் 2 அல்லது 3 தினங்களிலேயே இத்தலத்தில் வழிபடுவோர்க்கு குணமாகிவிடுகிறது.

🛕  உள்தொட்டி நிரப்புதல்:  அம்மன் சன்னதிக்கு அருகில் உள்ள தொட்டி உள்தொட்டி என்றும், பிரகாரத்தை சுற்றி உள்ள தொட்டி வெளித்தொட்டி என்றும் அழைக்கப்படுகிறது. அம்மை நோய்கண்டவர்கள் இந்த இரண்டு தொட்டிகளிலும் குடம் குடமாக தண்ணீர் ஊற்றுகின்றனர். இவ்வாறு செய்வதால் அம்பாளின் உஷ்ணம் தணிக்கப்படுகிறது.

🛕 ஒவ்வொரு வருடமும் கோடைநாட்களில் அம்பாளுக்கு முகத்திலும், சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்து தானாக மாறிவிடும் பழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே அன்னையை முத்து மாரி என்று அழைக்கின்றார்கள்.

🛕 குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி வார்க்கும் சமயத்தில் அம்மனுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எவ்வித சிரமமும் இன்றி குணமடைந்து வருவது இன்றுவரை கண்கூடாக உள்ளது. இங்கு உட்பிரகாரத்தில் எழுந்தருளியிருக்கும் பாடகச்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் பைரவ உபாசகராக இருந்து குறைவிலா அன்னதானம் செய்ததுடன் தனது சித்தியினால் அனைவருக்கும் திருநீறு அளித்து வந்து தீராத நோயெல்லாம் தீர்த்து வைத்திருக்கிறார். ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திர சுவாமிகளால் மாரியம்மன் யந்திர பிரஷ்டை செய்யப்பட்டதாகும். ஆகம விதிப்படி தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் கோவில் இது.

🛕 கடவுள் வாகனங்களில் இயற்கை வடிவான வாகனங்கள், பறவைகள், விலங்குகள், ஊர்வன வாகனங்கள், கலப்பு வடிவ வாகனங்கள், பூத கின்னர வாகனங்கள், அபூர்வ வகை வாகனங்கள் கூட்டு வாகனங்கள் எனப் பல வாகனங்கள் உள்ளன. இவையல்லாது, இறைவனும் இறைவியும் பல்லக்கில் பவனி வருவது என்பதும் காலங்காலமாக நடைபெற்று வருகிறது. இதர வாகனங்களைக் காட்டிலும், இறைவனோ இறைவியோ பல்லக்கில் பவனி வருகையில் அதிக அளவிலான அலங்காரங்களும், ஜொலிக்கும் மின் விளக்கு அலங்காரங்களும் பல்லக்கு வாகனத்தின் தனிச்சிறப்பு. அதிலும் இரவு நேரத்தில் மின்னொளிப் பாய்ச்சலுடன், இறைவனையோ, இறைவியையோ சுமந்து வரும் பல்லக்கினைக் காண குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் திரள்வது இன்றளவும் நடைபெற்று வருகிறது.

🛕 இந்து சமய அறநிலையை ஆட்சித்துறையின் கீழ் இயங்கி வரும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில், தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த எண்பத்தியெட்டு திருக்கோவில்களில் ஒன்று. தமிழகத்திலேயே மிகச் சிறப்பாக முத்துப்பல்லக்கு திருவிழா நடைபெற்று வருவது, இக்கோவிலில் மட்டும்தான். மற்ற கோவில்களில் பல்லக்கு உற்ஸவங்கள் நடைபெற்றாலும், அவையெல்லாம் சிறிய அளவிலான பல்லக்குகளாக அமைக்கப்பட்டிருக்கும், புன்னைநல்லூர் உற்ஸவர் மாரியம்மன் பவனி வரும் முத்துப்பலக்கு மிகப் பிரம்மாண்டமானதாகும்.

🛕  தல சிறப்பு: இத்தலத்தில் அம்மன் புற்று வடிவில் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்கு சதாசிவ பிரம்மேந்திரரால் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோவில் சோழர்களால் கட்டப்பட்டது.

🛕 பசுமையான வயல்களுக்கு மத்தியில் புன்னைநல்லூர் கோவில் அமைந்துள்ளது. கண்ணைக் கவரும் மராத்திய மன்னர்களது நிறைந்த வெளிமண்டபம் கோவிலுக்குள் நுழைந்தவுடன் காணப்படுகிறது. சரபோஜி மன்னர் தஞ்சையை ஆண்ட காலத்தில், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், கோபுரம் மற்றும் இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் கட்டி பெரும் திருப்பணி செய்யப்பட்டது.

🛕 மராட்டிய மன்னரான சிவாஜி இக்கோவிலுக்கு 3வது திருச்சுற்றும், ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் உணவுக் கூடம் மற்றும் வெளிமண்டபமும் கட்டி கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க தகவல்கள். சதாசிவ பிரம்மேந்திர சுவாமி புற்றுவடிவில் இருந்த அம்மனுக்கு மாரியம்மன் வடிவத்தைக் கொடுத்து, ஸ்ரீசக்ரமும் பிரதிஷ்டை செய்தார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், காத்தவராயன், மதுரைவீரன், லாடசன்னாசி, பேச்சியம்மன், அய்யனார் சன்னதிகள் உள்ளன. இத்திருக்கோவில் தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோவில்களில் ஒன்றாகும். புகழ் பெற்ற பிரார்த்தனை தலமான இக்கோவிலுக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் பெரும் எண்ணிக்கையில் பக்தர்கள் கூட்டம் குவிவது வழக்கம்.

🛕 ஆடி மாதம் நடைபெறுகின்ற முத்துப்பல்லக்குத் திருவிழாதான் இக்கோவிலின் மிகப்பெரிய திருவிழா. முத்துப்பல்லக்கு உருவாவதே பெரிய கலை. தஞ்சாவூர் கீழவாசல் அழகர்சாமி தலைமையில் இருபது பேர் கொண்ட குழுவினர், கடந்த முப்பது ஆண்டுகளாக இந்தப்பல்லக்கை உருவாக்கித் தருகின்றனர். இதனை உருவாக்கிட, அவர்களுக்கு ஏழெட்டு தினங்கள் ஆகின்றன. முழுமையான முத்துப்பல்லக்கின் நீளம் முப்பத்தைந்து அடி, அகலம் பன்னிரெண்டு அடி, உயரம் ஐம்பத்தைந்து அடி, இந்த நீள, அகல, உயர பிரம்மாண்டம்தான் புன்னைநல்லூர் மாரியம்மன் முத்துப் பல்லக்கினை நேரில் காண அனைவரையும் ஈர்க்கிறது. நான்கு சக்கர பட்டறை மீதாக இருபுறமும் நாற்பதடி நீள ஒரே ஒரு மர வாரினைக் கட்டுகிறார்கள். அதன் மீதுதான் முத்துப்பல்லக்கு முழு வடிவம் பெறுகிறது. முன்பாக, பல்லக்கை வடிவமைக்கும் இருபது கலைஞர்களும், மூங்கில் பிளாச்சுகளை அளவுகளுக்கு ஏற்றாற்போல் வெட்டி, அலங்கார வடிவங்களை உருவாக்குகின்றனர். ஜிகினாக்களை வெட்டி ஒட்டுகின்றனர். ஜொலிக்கும் முத்துக்களை (டூப்ளிகேட்) பதிக்கின்றனர். கீழே கைவேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற பின்னர் அவற்றை அந்தப் பட்டறை மீது ஏற்றி ஆங்காங்கே கட்டி, ஒட்டி மிகப் பிரம்மாண்ட முத்துப் பல்லக்கினை உருவாக்கி விடுகின்றனர். அதன் பிறகு முத்துப்பல்லக்கு மின் விளக்கு அலங்காரங்கள் பொருத்தப்படுகின்றன. பூச்சரங்கள் மற்றும் பூமாலைகள் அலங்காரத்துடன் முத்துப் பல்லக்கு மிகுந்த பேரழகுடன் தோற்றமளிக்கிறது.

Punnainallur Mariamman Temple Festivals

🛕  திருவிழா: ஆடி மாதம் – முத்துப்பல்லக்கு, ஆவணி மாதம் – கடைசி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் வெகு சிறப்பாக நடைபெறும். புரட்டாசி மாதம் – தெப்ப உற்சவம் மற்றும் நவராத்திரி திருவிழா தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் இத்திருக்கோவிலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் பல ஊர்களிலிருந்தும் வந்து அம்பாளை தரிசித்து பேரானந்தம் அடைவர். வருடத்தின் சிறப்பு நாட்களான விநாயகர் சதுர்த்தி, தீபாவளி, பொங்கல், தமிழ் & ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.

🛕 முத்துப்பலக்குப் பெருவிழா அன்று காலை ஊர் மக்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் கைலாசநாதர் கோவிலிலிருந்து பால் குடம் சுமந்து, பகல் 12 மணியளவில் மாரியம்மன் கோவிலுக்கு வந்து சேர்வார்கள். மதியம் 2 மணிக்கு உச்சிக்கால பூஜை. அதன் பின்பு மாலை 4 மணியிலிருந்து சுவாமி அலங்கார மண்டபத்தில், உற்ஸவர் மாரியம்மனுக்கு இரவு 7 மணி வரைக்கும் அலங்காரம் நடைபெறும். அலங்கார மண்டபம் எதிரே, இசைக்கலைஞர்கள் பலர் இசைக் கச்சேரி நிகழ்த்திக் கொண்டிருப்பர். இரவு 12 மணியளவில் மல்லாரி இசையினைக் கேட்டபடி, உற்ஸவர் மாரியம்மன் உள் பிராகாரம் வலம் வருவார். இரவு 1 மணியளவில் அம்பாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளியுவுடன் முத்துப்பலக்கு வீதியுலா தொடங்கி விடும். நான்கு ராஜ வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அம்பாள் திருக்கோவில் வந்து சேர, காலை 6:30 மணியாகி விடும். தொடர்ந்து 7 மணியளவில், மீண்டும் மல்லாரி இசை கேட்டபடி, மாரியம்மன் கருவறை முன்மண்டபம் வந்து சேர்வாள். புரட்டாசி மாதம் வசந்த உற்ஸவ தெப்பத் திருவிழா ஆகியவை இக்கோவிலின் சிறப்பு விழாக்கள்.

Punnainallur Mariamman Prarthanai & Nerthikadan

🛕  பிரார்த்தனை: அம்மை நோய் கண்டவர்கள் இத்தலத்துக்கு பெருமளவில் பிரார்த்தனை செய்து குணமடையப் பெறுவது இத்தலத்தின் மிகப் புகழ் பெற்ற பிரார்த்தனை ஆகும். இத்தலத்தில் தங்கி வழிப்பட்ட சில தினங்களில் அம்மை இறங்கி குணமாகி விடுகிறது.

🛕 தவிர தோல் வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள், கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள், உடம்பில் சொறி, சிரங்கு உள்ளவர்கள்,உடம்பில் கட்டிகள் ஏற்பட்டு தொல்லை உள்ளவர்கள், உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், மருத்துவரால் கூட கைவிடப்பட்டவர்கள் இத்தலத்தில் பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, பணியிடம் மாற்றம் ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் அம்மன் பக்தர்களது வேண்டுதல்களையும் நிறைவேற்றி கொடுக்கிறார்.

🛕  நேர்த்திக்கடன்: அம்மை நோய் கண்டவர்கள் அம்மை இறங்கியவுடன் அம்மனுக்கு மாவிளக்கு போடுகிறார்கள். குறிப்பாக கண் நோயால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் கண்ணில் மாவிளக்கு போடுகின்றனர். வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டு குணமானவர்கள் வயிற்றில் மாவிளக்கு போடுகின்றனர். உடம்பில் கட்டிகள் இருந்து குணமானவர்கள் வெல்லக்குளத்தில் வெல்லம் வாங்கிப் போடுகிறார்கள்.சொரி சிரங்கு இருந்தவர்கள் உப்பு வாங்கிப் போடுகின்றனர். ஆடு, மாடு, கோழி காணிக்கை தருகின்றனர். கணவருக்காக நேர்ந்து கொண்ட பெண்கள் திருமாங்கல்யம் சாத்துதலை நேர்த்திகடனாக செய்கின்றனர். முடிக்காணிக்கை, பால்குடம் எடுத்தல், பால்காவடி, அக்னி சட்டி எடுத்தல் போன்றவையும் இத்தலத்து முக்கிய நேர்த்திகடன்கள் ஆகும். தவிர திருமணம் வேண்டுவோர் அம்மனுக்கு நிலைமாலை சாத்துகிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம். தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம். வசதி படைத்தோர் கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யலாம்.

Punnainallur Mariamman Temple Timings

Monday to Saturday Worship Timing
05:30 AM to 09:00 PM
Sunday Worship Timing
04:30 PM to 10:30 PM

 திறக்கும் நேரம்: தரிசன நேரம்: திங்கள் முதல் சனி வரை காலை 5.30 மணி முதல் இரவு 9 வரை. ஞாயிறு மட்டும் காலை 4.30 மணி முதல் இரவு 10.30 வரை.

Punnainallur Mariamman Temple Address

Arulmolipet, Tamil Nadu 613501

 



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்