×
Thursday 5th of December 2024

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருவட்டத்துறை


Theerthapureeswarar Temple Thiruvattathurai

சிவஸ்தலம் பெயர் தீர்த்தபுரீஸ்வரர் கோவில், திருவட்டத்துறை (திருநெல்வாயில் அரத்துறை)
மூலவர் தீர்த்தபுரீஸ்வரர், அரத்துறைநாதர், ஆனந்தீஸ்வரர்
அம்மன்/தாயார் ஆனந்தநாயகி, திரிபுரசுந்தரி, அரத்துறைநாயகி
தல விருட்சம் ஆலமரம்
தீர்த்தம் நீலமலர்ப்பொய்கை, வட வெள்ளாறு, நிவாநதி
புராண பெயர் திருநெல்வாயில் அரத்துறை, நெல்வாயில் அருத்துறை
ஊர் திருவட்டத்துறை
மாவட்டம் கடலூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

தீர்த்தபுரீஸ்வரர் கோவில் வரலாறு

Theerthapureeswarar Temple History in Tamil

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் கோவில் திருவரத்துறை என்றும் வழங்கப்படுகிறது. திருஞானசம்பந்தருக்கு அரத்துறைநாதர் முத்துச் சிவிகையும், முத்துக்குடையும், முத்துச் சின்னங்களையும் வழங்கி அருளிய தலம் இதுவாகும். திருஞானசம்பந்தர் சீர்காழியில் உமையம்மை கையால் ஞானப்பால் பெற்று பதிகம் பாடி சைவ சமயத்தை சிறப்பிக்க சிவபெருமான் குடி கொண்டிருக்கும் தலங்களுக்கெல்லாம் திருயாத்திரை தொடங்கினார்.

theerthapureeswarar temple kodimaram

சம்பந்தர் சிறு பாலகனாக இருந்ததால் அவருடைய தந்தையார் சம்பந்தரைத் தூக்கிக் கொண்டு செல்வது வழக்கமாக இருந்தது. திருதூங்காணைமாடம் சிவஸ்தலத்தை தரிசித்து திருநெல்வாயில் அரத்துறை நோக்கி செல்லும் போது தந்தை தோள்மீது எழுந்தருள்வதை விட்டு நடந்தே சென்றார். சம்பந்தர் தன் சிற்றடிகள் நோக நடந்து செல்வதைக் கண்டு யாவரும் வருந்தினர். திருநெல்வாயில் அரத்துறை செல்லும் வழியில் மாறன்பாடி என்ற இடத்தில் இரவு தன் அடியார்களுடன் சம்பந்தர் தங்கினார். அன்றிரவு திருநெல்வாயிலிலுள்ள அடியார்கள், மற்றும் கோவில் பணியாளர்கள் கனவில் இறைவன் தோன்றி சம்பந்தர் கால்கள் நோகாமல் இருக்க தான் முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் அளிப்பதாகவும் அவற்றை சம்பந்தரிடம் சேர்த்து அவரை ஆலயத்திற்கு அழைத்து வரும்படியும் ஆணையிட்டார். இதே போன்று சம்பந்தர் கனவிலும் தோன்றி இவ்விபரங்களைக் கூறி முத்துச் சிவிகையில் ஏறிக்கொண்டு தன்னை தரிசிக்க வருபடியும் ஆணையிட்டர்.

மறுநாள் காலை திருநெல்வாயில் அரத்துறை அடியார்கள், கோவில் பணியாளர்கள் ஆலயத்தை திறந்து பார்க்க அங்கு முத்துச் சிவிகை, முத்துக்குடை, முத்துச் சின்னங்கள் ஆகியவை இருக்கக் கண்டு இறைவனை கைகளைக் கூப்பி வணங்கினர். பின்னர் அவற்றை எடுத்துக் கொண்டு மாறன்பாடி சென்று சம்பந்தரிடம் கொடுத்து, அவரை முத்துச் சிவிகையில் உட்கார வைத்து, முத்துக்குடை நிழலில் அரத்துறைநாதர் ஆலயம் அழைத்து வந்தனர். சம்பந்தரும் ஆலயம் வந்து இறைவனைத் தொழுது பதிகம் பாடி வணங்கினார்.

theerthapureeswarar temple inside view

தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில் அமைப்பு

தீர்த்தபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கிய முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு வாயில் கடந்து உட்சென்றால் வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சமயக்குரவர்கள் நால்வர், வான்மீகிமுனிவர், சப்த கன்னியர்கள், பூத, பவிஷ்ய, வர்த்தமான லிங்கங்கள், மகாவிஷ்ணு, ஜோதிலிங்கம் முதலிய சந்நிதிகள் உள்ளன. அடுத்து அண்ணாமலை, ஆதிசேஷன், வள்ளி தெய்வயானை சமேத முருகன், தண்டாயுதபாணி சந்நிதிகளையும், சேர சோழ பாண்டிய மன்னர்கள் பெயரில் உள்ள இலிங்க மூர்த்திகளையும் தரிசிக்கலாம். காசி விசுவநாதரும் விசாலாட்சியுடன் காட்சி தருகிறார். கஜலட்சுமி, சந்தான குரவர்கள், பைரவர், சூரியசந்திரர் சந்நிதிகளும் அடுத்துள்ளன. கலைவாணி சரஸ்வதி இத்தலத்தில் கையில் வீணையுடன் காட்சி தருகிறாள். இங்கு ஆலமரம் தலவிருட்சமாகவும் வெள்ளாறும், நீலமலர்ப் பொய்கையும் தீர்த்தங்களாகவும் உள்ளன.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக கிழக்கு நோக்கிய சந்நிதியில் அருள்பாலிக்கிறார். கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா ஆகியோர் உள்ளனர். நடராசர் சிவகாமி தரிசனம், துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், சண்டேஸ்வரர், பைரவர் ஆகியோரின் மூர்த்தங்களைத் தரிசித்தபின் உள்ளே சென்றால் மூலவரைத் தரிசிக்கலாம். உள் சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சந்நிதி, சனிபகவானுக்கு தனி சந்நிதி உள்ளது. சுவாமிக்கும் அம்பாளுக்கும் தனித்தனியே கொடிமரமும் பலிபீடமும் நந்தியும் உள்ளன.

வெள்ளாறு நதியில் வெள்ளப்பெருக்கெடுத்த போது அதனால் சேதம் உண்டாகாதிருக்க நந்தி தலையை திருப்பி பார்க்க வெள்ளம் வடிந்தது என்றும், இதனால் இத்தலத்தில் நந்தியின் தலை சற்று திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. மகாவிஷ்ணு, ஆதிசேஷன், சனி, செவ்வாய், வால்மிகி முனிவர், சனகர், சேர, சோழ, பாண்டியர்கள் ஆகியோர் வழிபட்டதலம். வெள்ளாற்றின் கரையிலுள்ள புண்ணியத்துறைகளில் இத்தலமும் ஒன்றாகும். இத்தலம் நிவாநதியின் கரையின்மேல் இருப்பதாக ஞானசம்பந்தர் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பதிகத்தில் (திருமுறை 2, பதிகம் 90, பாடல் 1) கடும்புனல் நிவாமல்கு கரைமேல் அந்தண்சோலை நெல்வாயிலரத்துறை அடிகள் தம் அருளே என்று குறிப்பிடுகிறார். சம்பந்தர் குறிப்பிடும் நிவா நதி இன்றைய நாளில் வடவெள்ளாறு என்று அழைக்கப்படுகிறது.

thiruvattathurai theerthapureeswarar

மக்களின் பாவங்களை நீக்க இறைவன் இங்கு எழுந்தருளி அருள்பாலிப்பதாக கூறப்படுகிறது. செவ்வாயும், சனியும் தங்கள் தோஷம் நீங்க இத்தலத்தில் சிவ பூஜை செய்து வழிபட்டதால், சனி தோஷம், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்து தீர்த்தங்களில் நீராடி ஈசனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் விலகும் என்பது ஐதிகம். இத்தல விருட்சமான ஆலமரம் மக நட்சத்திரத்திற்குரிய மரமாகும், ஆகவே மக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இத்தல இறைவனை வழிபடுவது மிகவும் விசேஷமானதாகும். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.

திருப்புகழ் தலம்: அருணகிரிநாதர் இத்தலத்திலுள்ள முருகனை தனது திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தல முருகன் மீது ஒரு பாடல் உள்ளது. இத்தல முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு, இருதேவியருடன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி காட்சி தருகின்றார். மயில் பின்பறம் உள்ளது. தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில் திருப்புகழ் பாடல் பெற்றத் தலங்களில் ஒன்றாகும்.

Theerthapureeswarar Temple Festivals

திருவிழா: மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, பங்குனி உத்திரம்.

theerthapureeswarar temple amman thiripurasundari

Theerthapureeswarar Temple Timings

திறக்கும் நேரம்: தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில் காலை 06:00 மணி முதல் 11:00 மணி வரை, மாலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் கோவிலுக்கு எப்படி செல்வது?

விருத்தாசலம் – தொழுதூர் சாலையில் விருத்தாசலத்தில் இருந்து தென்மேற்கே 24 கீ.மீ. தொலைவில் கொடிகளம் என்ற இடத்தில் பிரியும் மண் சாலையில் 1 கி.மீ. சென்று இத்தலத்தை அடையலாம். மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலமான பெண்ணாகடத்தில் இருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் திருநெல்வாயில் அரத்துறை தலம் உள்ளது.

Theerthapureeswarar Temple Contact Number: +914143246467, +914143246303

theerthapureeswarar temple shivan parvathi

Theerthapureeswarar Temple Address

அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருவட்டுறை அஞ்சல், திட்டக்குடி வட்டம், கடலூர் மாவட்டம், 606111.



One thought on "அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோவில், திருவட்டத்துறை"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்