×
Wednesday 11th of December 2024

திருக்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்


Arthanareeswarar Temple Tiruchengode

அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்

மூலவர் அர்த்தநாரீஸ்வரர்
அம்மன்/தாயார் பாகம்பிரியாள்
தல விருட்சம் இலுப்பை
தீர்த்தம் தேவதீர்த்தம்
புராண பெயர் திருக்கொடிமாடச் செங்குன்றூர்
ஊர் திருச்செங்கோடு
மாவட்டம் நாமக்கல்

Arthanareeswarar Temple History in Tamil, Tiruchengode

திருத்தல அமைப்பு: கொடிமாடச் செங்குன்றத்தூர் என்னும் பெயருடைய திருச்செங்கோடு திருத்தலம், கொங்குநாட்டு பாடல் பெற்ற திருத்தலங்கள் ஏழில், மூன்றாவது திருத்தலமாக அமைந்துள்ளது. ஏறக்குறைய 2000 வருடங்களைத் தாண்டி இன்றும் செந்நிற மலை மேலே கம்பீரமாய் அமையப் பெற்றுள்ளது இத்தலம்.

இந்த திருச்செங்கோடு திருமலை சோணகிரி, இரத்தகிரி, சேடமலை, வாயுமலை, மேருமலை என பல்வேறு பெயர்களைக் கொண்டு விளங்குகிறது. ராசிபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக இத்திருத்தலத்தினை காணச் செல்லும்போது, சுமார் 15 km முன்பாகவே இந்த தெய்வீக மலையின் முழுத்தோற்றம் காணக் கிடைக்கிறது. ஆயிரக்கணக்கான தென்னை மரங்களைத் தாண்டி இந்த மலையின் தோற்றம் காணும்போதே சிலிர்க்க வைக்கும் காட்சி.

திருவண்ணாமலை போல மலையே தெய்வமாக அமைந்துள்ளது. திருவண்ணாமலை கிரிவலம் போல இங்கும், இந்த மலையை அமாவாசை தோறும் கிரிவலம் வந்து வணங்குகின்றனர் பக்தர்கள். இந்தப் பாதை 6 km தூரம் கொண்டது. இந்த மலையின் வடிவழகைக் காண்பதற்கே ஒருமுறையாவது எல்லோரும் திருச்செங்கோடு செல்ல வேண்டும். ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் பாதையில் ஊருக்குள் செல்வதற்கு முன்பாகவே இத்திருத்தலம் வந்து விடுகிறது.

மலையின் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 km தூரத்திற்கு மலையிலேயே சாலை அமைக்கப்பட்டுள்ளது. மலை ஏறும் போதே இந்த மலையைச் சுற்றி உள்ள சில மலைகளின் தரிசனமும் நமக்குக் கிடைக்கிறது. இந்த மலைச் சாலை திருக்கோவிலின் வாசல் வரை நம்மை அழைத்துச் செல்கிறது.

Tiruchengode Arthanareeswarar Temple Speciality

தல சிறப்பு: மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றும் சிறப்புடன் அமையப்பெற்ற திருத்தலம். சிவனும் சக்தியும், அம்மையும் அப்பனும் இணைந்து கலந்த நிலையில், அம்மையப்பன் எனும் தோற்றத்தில் இறைவன் எழுந்தருளி உள்ளது உலகிலேயே இத்தலத்தில் மட்டும்தான். இதுவே இத்திருக்கோவிலின் பெருஞ்சிறப்பு. தேவாரம், திருவாசகம், பெரியபுராணம், திருப்புகழ், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம் என பல்வேறு தெய்வீக நூல்களில் இத்திருக்கோவில் போற்றி பாடப்பட்டுள்ளது.

இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 208 வது தேவாரத்தலம் ஆகும்.

இத்திருக்கோவில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டுவேலன், ஆதி கேசவ பெருமாள் என மூன்று தெய்வங்களுக்கும் தனித்தனிச் சன்னதிகள், ஒவ்வொரு தெய்வங்களுக்கும் தனித்தனி பரிவார தெய்வங்கள் என மூன்று தனித்தனி கோவில் அமைப்புடன், ஒரே திருக்கோவிலாய் அமையப் பெற்ற திருத்தலம். ஒற்றுமையின் சின்னமாய் திகழ்கிறது இத்திருத்தல அமைப்பு. இந்த திருச்செங்கோடு மலைக் கோவிலை மலைத்தம்பிரான்என்றும் அழைக்கின்றனர்.

இந்த திருக்கோவிலுடன் இணைக்கப்பெற்ற திருக்கோவில்களும், துணைக் கோவில்களும் பல உள்ளன:

  1. அருள்மிகு கைலாசநாதர் திருக்கோவில்
  2. அருள்மிகு ஆறுமுகசுவாமி திருக்கோவில்
  3. அருள்மிகு ஆபத்துக்காத்த விநாயகர் திருக்கோவில்
  4. அருள்மிகு மலைக்காவலர் திருக்கோவில்
  5. அருள்மிகு பத்ரகாளியம்மன் திருக்கோவில்
  6. அருள்மிகு பெரியமாரியம்மன் திருக்கோவில்
  7. அருள்மிகு பாண்டீஸ்வரர் திருக்கோவில்

என இந்தக் கோவில் வரிசையில் முதல் ஆறு கோவில்கள் திருச்செங்கோடு நகருக்குள்ளேயும், பாண்டீஸ்வரர் திருக்கோவில் குமாரமங்கலத்திலும் அமைந்துள்ளன.

சாலைவழியாக மட்டுமல்லாது, சுமார் 1210 படிகளைக் கடந்தும் மலைக்கோவிலைச் சென்றடையலாம். நாமக்கல் செல்லும் பாதையில் சிறுது தூரம் சென்று மலையடிவாரத்தை அடைந்து படி வழியாகச் செல்லலாம். முதற்படியில் விநாயகப் பெருமானை வணங்கி நாம் படியேறத் தொடங்கலாம். அருகிலேயே ஆறுமுகப் பெருமானது கோவில் அமைந்துள்ளது. இந்த முருகன் திருக்கோவிலின் முன்பிருக்கும் கிணற்றில் இருந்தே மலைக்கோவிலுக்கு குழாய் மூலம் தண்ணீர் எடுத்துச் செல்லப்படுகிறது.

மேலே செல்லும் வழியில் செங்குந்தர் மண்டபம், காளத்தி சுவாமிகள் மடம், திருமுடியார் மண்டபம், தைலி மண்டபம் போன்றவை அமைந்துள்ளன. அதனை அடுத்து வீரபத்திர சுவாமி திருக்கோவில் உள்ளது. அதன் மேல்புறம் நந்தி கோவில் உள்ளது. இங்கு பால், பசுக்கள் சம்பந்தமாக அவற்றின் வளம் பெருகி குடும்பங்கள் செழித்து எல்லா நலன்களையும் பெற்று வாழ இங்குள்ள நந்தி பகவானுக்கு பொங்கலிட்டு, வெண்ணை சாற்றி வேண்டி வழிபடுவர்.

நந்தி கோவிலில் இருந்து சற்றே கீழிறங்கினால் நந்தி மலைக்கும், நாக மலைக்கும் இடையே ஒரு பள்ளம் அமைந்துள்ளது. அதுவே நாகர் பள்ளம் என அழைக்கப்படுகிறது.

இவ்விடத்தில் ஐந்து தலைகளுடன் ஆதிசேஷனின் முழு உருவமும் 60 அடி நீளத்தில் பார்ப்பதற்கே பிரம்மாண்டமான தோற்றத்தில் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. நாகரின் முழு உடலிலும் பக்தர்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கலந்து பூசி உள்ளனர். இவ்வாறு மஞ்சள் குங்குமம் தடவி வழிபடும்போது நாக தோஷம் நீங்குவதாக நம்பிக்கை. படமெடுத்த நிலையில் அமைந்துள்ள ஆதிசேஷன் லிங்க வடிவைத் தாங்கி நிற்பது சிறப்பு.

arthanareeswarar temple amman

பின் உயரே சென்றால் சிங்க மண்டபம் உள்ளது. இதற்கு அடுத்து அமைந்துள்ளது அறுபதாம்படி என்னும் சத்தியவாக்குப் படிகள். இந்தப் படிகளில் நின்று செய்யப்படும் சத்தியத்திற்கு அளவற்ற மதிப்பு என்பது நம்பிக்கை. இந்தப் படிகளின்மேல் நின்று யாரும் பொய்யாக சத்தியம் செய்யமுடியாது. பல்வேறு சண்டை சச்சரவுகள், வழக்குகள் இந்தப் படிகளின் மேல் செய்யப்படும் சத்தியத்தினால் முடிவுக்கு வருகின்றன என்று அங்கு ஈசனை காண வந்த பக்தர் சொல்லக் கேட்டோம். இதுபோன்ற ஐதீகங்களினால்தான் சத்தியங்களும், உண்மைகளும் ஓரளவேனும் உயிரோட்டத்துடன் இருக்கின்றன.

இந்த சத்தியவாக்குப் படிகளின் முடிவு சுப்ரமணியசுவாமி திருக்கோவிலின் ஆரம்பமாக உள்ளது. இந்த முருகன் கோவிலைக் கடந்தால் அறுபதாம்படி மண்டபம், இளைப்பாற்றிமண்டபம், கோபுரவாயில் மண்டபமும் மேலும் பல மண்டபங்களும் அமைந்துள்ளன.

இப்படியே பயணித்து திருக்கோவிலின் ராஜகோபுரத்தை அடைகிறோம். கோவிலின் உள்ளே நுழைந்த உடனே இடது புறத்தில் விநாயகப் பெருமானை வணங்கி அருள் பெறுகிறோம். பிள்ளையாரை வணங்கி பின்னர் செங்கோட்டு வேலவனின் சன்னதியை அடைகிறோம். இந்த அருள்மிகு செங்கோட்டு வேலவரது சன்னதியின் முன்னே அமைந்துள்ள மண்டபத்தை சிற்பங்கள் ஒட்டுமொத்தமாக குத்தகைக்கு எடுத்துள்ளன. இவ்விடத்தில் மட்டுமல்லாது, எல்லா சன்னதிகளின் முன்பாக உள்ள மண்டபங்களிலும் பல்வேறு விதமான சிற்பங்கள் அணிவகுக்கின்றன.

திருக்கோவில் முழுக்க உள்ள எல்லா தூண்களிலும் சிற்பக்கலையின் உன்னதம் உச்சத்தைப் பெறுகிறது. ஒவ்வொவொரு சிற்பங்களின் நுண்ணிய அழகிய வேலைப் பாட்டினையும், ஒவ்வொரு சிற்பத்திலும் காணப்படும் கற்பனை வளத்தினையும், இந்த சிற்பங்களை செதுக்கியவர்கள் எத்தனைப் பொறுமையாக, நிதானமாக, அறிவுக் கூர்மையுடன் இவற்றை செதுக்கி இருப்பார்கள் என்ற எண்ணத்துடனும், சிற்பங்களை ரசிப்பதிலேயே அதிக நேரம் செலவானது.

வாழ்க நமது திருக்கோவில்களும், அவற்றில் காணப்படும் எண்ணிலடங்கா சிற்பக் களஞ்சியங்களும் என்று மனதார வேண்டி அவற்றை செய்த சிற்பிகளை மனதார வணங்கி திருமுருகன், செங்கோட்டுவேலவனை வழிபடச் சென்றோம்.

arthanareeswarar temple tiruchengode sculptures

தனது வலக்கையில் வேலும், இடக்கையில் சேவலும் என ஏந்திக்கொண்டு, நின்ற கோலத்தில், செங்கோட்டு வேலவனாக காட்சி தரும் முருகப்பெருமானது தரிசனம் காணக்கிடைக்கப் பெற்ற நமக்கு, நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய முருகப்பெருமானது வடிவழகைக் காண இரண்டு கண்கள் கண்டிப்பாக போதாது. இவ்வாறாக பேரழகன் முருகனின் அழகில் மயங்கியவாறே, அம்மையும் அப்பனுமாக ஒருசேர விளங்கும், அர்த்தநாரீஸ்வர சன்னதியை அடைகிறோம். அங்கே சன்னதியின் கருவறையில் அர்த்தநாரீஸ்வரர் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

வெண்ணிற மேனியுடன் காட்சி தருகிறார். ஒரே உருவத்தில் இடது பக்கம் பெண்ணுருவாகவும், வலது பக்கம் ஆணின் உருவமாகவும் உமையொரு பாகனாய், ஈருடல் ஓருயிர் என்னும் சொலவடைக்கு உண்மையிலேயே சரியானதொரு வடிவத்தை அங்கு கண்டு, உடலும் உள்ளமும் சிலிர்த்து, அம்மையப்பனை கண்ணிமை மூடாது, சுற்றி என்ன நடக்கிறது, யார் இருக்கிறார்கள் என்ற எந்த ஸ்வதீனமும் இல்லாமல், இந்த தெய்வீக நிலையிலிருந்து விடுபட சற்றுநேரம் ஆனது.

வலது கையில் தண்டாயுதம் தாங்கிய வண்ணம் வீற்றிருக்கிறார் அம்மையப்பன். இந்த அர்த்தநாரீஸ்வரர் தோற்றத்தை மணிவாசகப் பெருமான், தொன்மைக்கோலம் என்று அழைக்கிறார். இங்கிருத்து நாகேஸ்வரர் சன்னதியை அடைந்த பின், ஸ்ரீதேவி தாயார், பூமா தேவி தாயார் உடனுறை ஆதிகேசவ பெருமாள், நின்ற கோலத்தில் அருள்பாலிப்பதை காணலாம். இதே மண்டபத்தின் தரையில் ஆமை மீது ஒரு மண்டபம் எழுப்பட்டுள்ளது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மேற்பகுதி மரத்தால செய்யப்பட்டது. திருவிழாக் காலங்களில் உற்சவ பெருமானை இந்த மண்டபத்தில் வைத்துதான் பூஜைகள் நடைபெறும்.

நாரி கணபதி சன்னதிக்கு அருகே தாண்டவப்பத்திரை விலாச மண்டபத்தில் ஊர்த்துவ தாண்டவ மூர்த்தியும், ஆலங்காட்டுக் காளியும் எதிர் எதிரே அமையப் பெற்றுள்ளன. இங்கு அமைந்துள்ள நடராஜர் சன்னதிக்கு அருகே தலவிருட்சமான இலுப்பை மரம் உள்ளது. பொதுவாக எல்லா ஆலயங்களிலும் சக்தி நிலைகள், மூலஸ்தான கருவறை, கொடிமரம் என இவற்றிற்கு அடுத்து தலவிருட்சம் மிக முக்கியமான ஒன்றாகும். இத்திருக்கோவிலில், நடராஜருக்கும், சஹஸ்ர லிங்கத்திற்கும் இடையே இக்கோவில் தல விருட்சமான இலுப்பை மரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு அமைப்பாகும். பக்தர்கள் தங்களது வாழ்வு வளம் பெற இந்த புனித மரத்தினையும் சுற்றிவந்து வழிபட்டு நலம் பெறுகின்றனர்.

இந்த இலுப்பை மரத்தை அடுத்து பஞ்ச லிங்கங்கள், விஸ்வநாதர், மல்லிகார்ஜுனர், தென்முகக் கடவுள், கொற்றவை, சூரிய பகவான், நாக ராஜா, பைரவ மூர்த்தி போன்ற பரிவார தெய்வங்களின் சந்நதிகளையும் வணங்கி நலம் பெறுவோம்.

இத்திருக்கோவிலின் கிழக்கு திசையில் சுமார் 350 அடி உயரம் ஏறிச் செல்ல, சிறு குன்றின் உச்சியில் பாண்டீஸ்வரர் திருக்கோவிலை அடையலாம். உச்சிப் பிள்ளையார் கோவில் எனவும் இக்கோவில் அழைக்கப்படுகிறது. வந்தியா பாடன சிகரம் என்றும் வேறொரு பெயர் உண்டு.

Arthanareeswarar Temple Prarthana & Nerthikadan

பிரார்த்தனை: கணவன் மனைவி ஒற்றுமைக்காகவும், நாகதோஷம், ராகு-தோஷம், காள சர்ப்ப தோஷம், களத்திர தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

Arthanareeswarar Temple Tiruchengode Timings

திருக்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் காலை 06:00 மணி முதல் மாலை 06:00 மணி வரை திறந்திருக்கும்.

Tiruchengode Arthanareeswarar Temple Festivals

திருவிழா: சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி உத்திரம்.

Tiruchengode Arthanareeswarar Temple Address

Arthanareeswarar Hill Temple Road, Tiruchengode, Tamil Nadu 637211

Tiruchengode Tirumala History in Tamil

திருச்செங்கோடு திருமலை உருவான வரலாறு: ஆதி காலத்திலே ஆதி சேஷனுக்கும், வாயு பகவானுக்கும் இடையே உண்டான சண்டையில் யார் பெரியவன், வலியவன் என்ற வாக்குவாதத்தில், இருவரும் போர் புரிந்து கொண்டனர். இப்போரினால் உலகமெங்கும் பேரழிவுகள் உண்டாயின. இது போதாதென்று மேரு மலையின் உச்சியை பலம் கொண்ட மட்டும் ஆதிசேஷன் அழுத்திப் பிடிக்க, வாயுதேவன் அந்தப் பிடியினை தளர்த்திட வேண்டும் என்பற்கு இருவருக்கும் ஏற்படத் ஒப்பந்தம்.

அவ்வாறு நடந்த வேளையில், இவர்களது சண்டையால் உலகம் அழிந்து விடப்போகிறது எனும் பயத்தில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து நாகரை வணங்கி இந்தப் போரை நிறுத்துமாறு வேண்டிக் கொண்டனர். அவர்களது பேச்சிற்கிணங்க ஆதிசேஷனும் தன பிடியினை சற்று தளர்த்த, இதுதான் சமயம் என்று வாயு அடித்த வேகத்தில் மேரு மலையின் ஒரு சிகரப் பகுதியும், ஆதிசேஷனின் ஒரு தலையும் பெயர்ந்து ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு தென்திசைப் பக்கமாக வந்து விழுந்தன.

இவ்வாறு ஆதிசேஷனின் தலையுடன் மோதிய வேகத்தில் அதன் இரத்தம் தோய்ந்து செந்நிற மலையாக மாறியது. இதுவே திருச்செங்கோடு மலையாக உள்ளது. இவ்வாறு பறந்து வந்து தென் திசையில் விழுந்த மேரு மலையானது, மூன்று பாகங்களாக சிதறி ஒன்று திருவண்ணாமலையாகவும், மற்றொன்று இலங்கையாகவும், இன்னொன்று திருசெங்கோடாகவும் உருமாறியது.

tiruchengode arthanareeswarar temple steps

Arthanareeswarar History in Tamil

உமையவள் இடப்பாகம் பெற்ற வரலாறு: கைலாசபுரியில் இருந்து தங்களை பிரிந்து சென்ற முருகப் பெருமானை நினைத்து உள்ளம் வருந்திய நிலையில் இருந்த சிவபிரான், தன் மனைவி பார்வதி தேவியை அழைத்துக் கொண்டு இயற்கையைக் கண் குளிரக் கண்டு, தன் மனதை ஆறுதல் படுத்திக் கொள்ள எண்ணினார். அவ்வாறு சென்று கொண்டிருக்கையில், தன் கணவருடன் உடன் செல்லும் களிப்பின் மிகுதியால், தன் திருக்கரங்களால், பெருமானது இரு கண்களையும் விளையாட்டுத் தனமாய் மூடி விட்டார். இதனால் சூரியன் ஒரு கண்ணும், சந்திரன் மறு கண்ணுமாய் விளங்கும் சிவபெருமானது கண்களை மூடியதன் பலனாய் உலகமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ட தேவர்கள், முக்கண்ணனை சந்தித்து இவ்வாறு பார்வதி தேவி தங்களது கண்களை மூடிய காரணத்தால் உலகில் பல்வேறு உயிரினங்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிய காரணத்தால், உனக்கு பாவம் சேர்ந்தது. அந்த பாவத்தை பூவுலகில் பிறந்து, கேதாரம், காசி, காஞ்சிபுரம் போன்ற க்ஷேத்திரங்களில் தவம் மேற்கொள்ள நான் உன்னை வந்து சந்தித்து என்னுடன் அழைத்துச் செல்வேன் என கூறியருளினார். இதனால் வருத்தமுற்ற பார்வதி தேவி தனித்தனி உருவாய் உள்ளதாலேயே இத்தனை கஷ்டங்களும், ஆகையால் இறைவன் சொல்லுக்கிணங்க கேதாரம், காசி, காஞ்சி சென்று எல்லா இடங்களிலும் தவம் புரிந்தார்.

இவ்வாறாக காஞ்சியில் மணலைக் கூட்டி சிவலிங்கள் செய்து அதையே சிவபிரானாக எண்ணி தவமியற்றும் வேளையில் பெரு வெள்ளம் வந்தது. எங்கே தன் மணல் லிங்கமும் தண்ணீரோடு சென்று விடுமோ என பயந்து அதனைக் கட்டி அணைத்துக் கொண்டார். இக்காட்சியைக் கண்ட சிவபிரான் மனமிரங்கி கருணையுடன் வேண்டும் வரம் கேள் என்றார் உமையிடம். உலக நாயகி, சிவபெருமானிடம் தங்களது திருமேனியில் இடப் பாகம் தந்தருள வேண்டும் என்று கேட்டார். அதற்கு, நீ எனது கண்களை மூடிய பாவத்தினை இந்த காஞ்சியில் தவம் புரிந்ததால் நீங்கப் பெற்றாய். திருவண்ணாமலைக்குச் சென்று அங்கு தவம் மேற்கொள்வாயாக எனக் கூறினார்.

அங்கு தவமிருந்த தேவியிடம், உனது எண்ணம் அறிந்தேன், ஆனாலும், நிறைவாக நீ செந்நிற மலையான திருச்செங்கோடு சென்று தவமியற்ற எனது இட பாகத்தை வழங்கி அருளுவேன் என்று கூறிச் சென்றார்.

இதனை நிறைவேற்ற திருச்செங்கோடு சென்று பல காய் கனிகளுடனும், பல்வேறு பூஜை பொருட்களுடனும் புரட்டாசி மாதம், வளர்பிறை, அஷ்டமி திதியில் கேதார கௌரி விரதம் தொடங்கினார் அன்னை. புரட்டாசி மாதம், தேய்பிறை சதுர்த்தியன்று தேவியின் முன்னே தோன்றி, அன்னையின் தவத்தை மெச்சி, தனது இடபாகத்தை பார்வதி தேவிக்கு கொடுத்தருளினார். இத்திருத்தலத்தில் கேதார கௌரி விரதம் 21 நாட்கள்கொண்டாடப்பட்டு, புரட்டாசி அமாவாசையன்று எழுந்திருத்தும் விழா வெகு சிறப்பாக நடைபெறும்.

பிருங்கி முனிவர் வழிபட்ட வரலாறு

ஒரு சமயம் திருக் கைலாயத்தில் பிரம்மன், விஷ்ணு, தேவர்கள் என அனைவரும் புடை சூழ, பரமசிவன் பார்வதி ஒன்றாய் வீற்றிருந்தனர். அனைவரும் சக்தி சிவன் என இருவரையும் வணங்கிய வேளையில் பிருங்கி முனிவர் மட்டும் சக்தியை விடுத்து சிவனை மட்டும் வணங்கிச் சென்றார். இதனைக் கண்டு மனம் வருந்திய உமையவள், தன் பதியிடம் தன் மன வருத்தத்தைக் கூறினார். பார்வதி தேவியின் மன வேதனையை புரிந்து கொண்ட சிவபெருமான், பிருங்கி முனிவரிடம் சக்தி இல்லையேல் சிவமில்லை, சிவமில்லையேல் சக்தி இல்லை என்ற உண்மையை பிருங்கி மகரிஷிக்கு எடுத்துரைத்தார். தன் தவறை உணர்ந்த மகரிஷி, அங்கேயே தங்கி அம்மையப்பனுக்கு சேவை செய்து கொண்டுள்ளார்.

தேர்க்கால் இடர் தவிர்த்து ஊமை பேசிய வரலாறு

பல காலங்கள் முன்பு கொங்கு நாட்டில் காடம்பாடி எனும் ஊரில் பாததூளி, சுந்தரம்தம்பதியர் சிவ பக்தகளாய் வாழ்ந்து வந்தனர். இவர்களிடத்தில் எல்லா செல்வங்களும் நிறைந்து காணப்பட்டாலும், பிள்ளைச் செல்வம் இல்லாத காரணத்தால் மிகவும் மன வருத்தத்துடன் இருந்தனர்.

பெரியவர்களின் ஆலோசனைப் படி இந்த திருச்செங்கோடு திருத்தலம் வந்து இத்தல இறைவனை வேண்டி வணங்கிட, இத்தம்பதியினருக்கு சந்தான பாக்கியம் உண்டானது. அந்தக் குழந்தைக்கு மூன்று வயது ஆகியும் பேசும் திறனற்று இருந்தது. இதனைக் கண்டு மனம் வெதும்பிய பெற்றோர், ஈசன் அருளால் கிடைத்த பிள்ளையை ஈசனிடமே விட்டு விடுவோம் என்றெண்ணி திருச்செங்கோடு திருத்தலம் வந்தடைந்தனர்.

இதனிடையே ஏமப்பள்ளி என்னும் ஊரில், எல்லா நற்குணங்களுடன் கூடிய துறவின் மேல் விருப்பமுள்ள, சிவ பக்தன் வேலப்பன் என்பவர் வாழ்ந்து வந்தார். வேலப்பனது கனவில் வந்த நமசிவாயம், தம்முடனே வந்திருந்து தமக்குப் பணிசெய்து வாழப் பணித்தார் சிவபிரான். அதனை ஏற்று சிவனடியாராகவே வாழ்ந்து கொண்டிருந்தார் வேலப்பன். இவர் பல தொண்டுகள் புரிந்தும், இறைவனுக்கு சாமரம் வீசி திருத்தொண்டு புரிந்து வந்தபடியால் அவருக்கு சாமர வேலைப்ப பூபதி என்ற பெயரும் உண்டானது.

இந்நிலையில், இத்திருத்தலம் வந்தடைந்த காடம்பாடி தம்பதியினர், தம் குழந்தையை இறைவனிடமே ஒப்படைக்க எண்ணியபடி, வைகாசி விசாகத்தன்று தேரோட்டம் நடக்கும் போது தேர் காலில் குழந்தையை வைத்து விட்டனர். தேரை இழுத்து வந்து கொண்டிருந்த வேலப்பன், இந்த தம்பதியினரின் செயலைக் கண்டு அதிர்ச்சியுற்று இக்குழந்தை மாய்ந்தால் என் உயிரும் சேர்ந்து போகட்டும் என்று வேண்ட, அதிசயிக்கத் தக்க வகையில் ஓடி வந்து கொண்டிருந்த தேர் சக்கரம் பாலகனின் தலையைத் தாண்டிச் சென்றது. பேசாத குழந்தையும் இதழ் விரித்து பேசத் தொடங்கியது.

Thiruneelakanda Pathigam in Tamil

திருஞானசம்பந்தர் அருளிய திருநீலகண்டப் பதிகம்: ஞானசம்பந்தர் பெருமான் திருச்செங்கோடு வந்து சில காலம் தங்கியிருந்து சிவதொண்டு புரிந்து கொண்டிருந்தார். அப்போது ஏற்பட்ட பருவ மாற்றத்தால், மக்களை குளிர் சுரம் பீடித்துக் கொண்டது. இதனைக் கண்டு மனம் வாடிய ஞான சம்பந்தர், இந்த சுரமென்னும் உடல் உபாதை நீங்கிட இத்தலத்திலேயே பெருமான் முன்பு பதிகம் பாடினார். இத்தலத்தில் ஞானசம்பந்தரால் பாடப்பட்ட இப்பதிகத்தை இறையன்புடன் ஓதி வந்தால் தீவினையால் வரும் நோய்கள் நம்மை பாதிக்காது என்பது தெய்வீக நம்பிக்கை.

அவ்வினைக் கிவ்வினையாம் என்று சொல்லும் அஃதறிவீர்
உய்வினை நாடாதிருப்பதும் உந்தமக்கு ஊனமன்றே
கைவினை செய்து எம்பிரான் கழல் போற்றுதும் நாமடியோம்
செய்வினை வந்தெனைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

காவினை இட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித்தீர் என்று இருபொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுதும் நாம் அடியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

முலைத்தடம்மூழ்கிய போகங்களும் மற்றெவையும் எல்லாம்
விலைத்தலை ஆவணம் கொண்டமை ஆண்ட விரிசடையீர்
இலைத்தலைச் சூலமும் தாண்டும் மழுவும் இவை உடையீர்
சிலைத்தெமைத் தீவினைத் தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

விண்ணுல காள்கின்ற விச்சாதாரர்களும் வேதியரும்
புண்ணியர் என்று இருபோதும் தொழுப்படும் புண்ணியரே
கண் இமையாதன மூன்றுடையீர் உம் கழலடைந்தோம்
திண்ணிய தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

மற்று இணை இல்லா மலை திரண்டன்ன திண்தோளுடையீர்
கிற்றெமை ஆட்கொண்டு கேளாதொழிவதும் தன்மை கொல்லோ
சொற்றுணை வாழ்க்கை துறந்த உம் திருவடி அடைந்தோம்
செற்றெமைத்தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

மறக்கும் மனத்தினை மாற்றிஎம் ஆவியை வற்புறுத்திப்
பிறப்பில் பெருமான் திருந்தடிக்கீழ் பிழையாத வண்ணம்
பறித்த மலர் கொடுவந்துமை ஏத்தும் பணியடியோம்
சிறப்பிலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

கருவைக் கழித்திட்டு வாழ்க்கை கடிந்தும் கழலடிக்கே
உருகிமலர் கொடு வந்துமை யேத்துதும் நாம் அடியோம்
செருவில் அரக்கனைச்சீரில் அடர்ந்து அருள் செய்தவரே
திருஇலித் தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

நாற்றமலர்மிசை நான்முகன் நாரணன் வாது செய்து
தோற்றமுடைய அடியும் முடியும் தொடர்வரியீர்
தோற்றினுந் தோற்றுந்தொழுது வணங்குதும் நாம் அடியோம்
சீற்றமதாம் வினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

சாக்கியப் பட்டும் சமண் உருவாகி உடை ஒழித்தும்
பாக்கியமின்றி இருதலைப்போகமும் பற்றும் விட்டார்
பூக்கமழ் கொன்றைப் புரிசடையீர் அடி போற்றுகின்றோம்
தீக்குழி தீவினை தீண்டப்பெறா திருநீலகண்டம்!!

பிறந்த பிறவியில் பேணிஎம் செல்வன் கழல் அடைவான்
இறந்த பிறவி உண்டாகில் இமையவர்கோன் அடிக்கண்
திறம்பயில் ஞானசம்பந்தன் செந்தமிழ் பத்தும் வல்லார்
நிறைந்த உலகினில் வானவர் கோனொடும் கூடுவரே!

திருச்சிற்றம்பலம்



One thought on "திருக்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்