×
Wednesday 11th of December 2024

திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில்


Tirumalpur Manikandeswarar Temple in Tamil

திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் கோவில்

சிவஸ்தலம் பெயர் திருமால்பூர் அருள்மிகு மணிகண்டீஸ்வரர் கோவில்
மூலவர் மணிகண்டேஸ்வரர், தயாநிதீஸ்வரர், பிரவாளேஸ்வரர், சாதரூபர், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், மால்வணங்கீசர்
அம்மன் அஞ்சனாட்சி அம்மை, கருணை நாயகி.
தல விருக்ஷம் வில்வம்
தீர்த்தம் சக்கர தீர்த்தம், பாலாறு
புராண பெயர் திருமாற்பேறு, ஹரிசக்ரபுரம், வில்வாரண்யம், உத்தர காஞ்சி.
ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது.
வழிபட்டோர் சம்பந்தர், அப்பர், பட்டினத்துப் பிள்ளையார்,சேக்கிழார், திருமால், சந்திரன்
தொன்மை சுமார் 1000 வருடங்கள் பழைமை வாய்ந்த திருத்தலம்.
ஊர் திருமால்பூர்
மாவட்டம் வேலூர்

தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

Tirumalpur Temple History in Tamil

திருமால்பூர் கோவில் வரலாறு

ஹரியாகிய திருமாலும், ஹரனாகிய சிவனும் அற்புதம் நிகழ்த்திய திருத்தலம் திருமால்பேறு என்னும் திருமால்பூர் என்னும் திருநாமத்துடன் சிறப்புற்று விளங்குகிறது.

மனக்கவலை போக்கும் மகேசன், இங்கு மணிகண்டீஸ்வரர் என்ற பெயரில் கோவில் கொண்டருள்கிறார். ஹரிசக்ரபுரம், வில்வாரண்யம், உத்திர காஞ்சி என்றெல்லாம் போற்றப்பட்ட இத்தலத்தில் பழம்பாலாறு என்னும் விருத்தக்ஷீர நதிக்கரையில் அன்னை பார்வதிதேவி செம்மண்ணால் லிங்கம் பிடித்து வழிபட்டு வந்தாள். ஒரு சமயம்  நதியில் வௌ்ளம் பெருக்கெடுக்க, அம்பாள் லிங்கமூர்த்தியை ஆலிங்கனம் செய்தாள். அப்போது அம்பாளின் முத்துமணி மாலை ஐயனின் கழுத்தில் அழுத்த, மணி பதிந்த கண்டம் (கழுத்து) உடையவர் மணிகண்டீஸ்வரர் ஆனார்.

ஹரியும் ஹரனும் ஒன்றே. (அதனால்தான் சிவஸ்ய ஹ்ருதயம் விஷ்ணுஹு, விஷ்ணுஸ்ச ஹ்ருதயம் சிவஹ என்பர்). அவர்களது லீலைகளையும் திருவிளையாடல்களையும் பாமரர்களான நம்மால் புரிந்துகொள்வது கடினம்.

ஆதியில் காஞ்சி மாநகரை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த மன்னன் குபனும், முனிவரில் சிறந்தவரான வஜ்ஜிர தேகம் கொண்ட ததீசி முனிவரும்  நீண்ட நாட்களாக நட்புடன்  இருந்து வந்தனர். ஒரு சமயம் மன்னன் குபனுக்கும் (பிருகு முனிவர் குலத்துள் தோன்றி விளங்கிய சிறப்பினையுடைய)  ததீசி முனிவருக்கும் ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.

(அரசனோடு நீங்கற்கரிய நட்புப்பூண்டு மிக்குக் கலந்து பொருந்தியிருக்கும் காலத்தோர் நாளில் இருவரும் இன்பப் பொழுது போக்கில் இவ்வாறு கூறுவர். அந்தணர் பெரியரோ? அரசர் பெரியரோ என்னும் வினாவை எழுப்பிய பொழுது அந்தணர் அரசரினும் சிறந்தோரென்று ததீசி முனிவர் கூறக் கேட்ட அரசன் அரசரே சிறந்தோர் என்று கூறினன். இம்முறையில் இருவருக்கும் மனக்காழ்ப்பு உண்டாகிப் பெரும்போர் மூண்டது. முனிவன் நெருப்புப்போலச் சினங்கொண்டு அடித்தனன்; அடித்த அளவிலே மென்மை பெற்ற வண்டுகள் ஒலிக்கின்ற மாலையை அணிந்த குபன் வச்சிராயுதத்தைச் சுழற்றி வீசிப் பழைய மறைகளை உணர்ந்த முனிவரன் உடம்பை இரு துண்டுபட வெட்டி வீழ்த்த அம்முனிவன் உரிமை பூண்ட சுக்கிரனை நினைந்து கீழே நிலத்தில் வீழ்ந்தனன். சுக்கிரன் முனிவர் நினைவை உணர்ந்து வந்து துணிபட்ட உடம்பைப் பொருத்திச் சேர்த்து அப்பொழுதே ததீசி முனிவரை உயிர்பெறச் செய்தார்).

tirumalpur temple perumal statue

மன்னன் குபனுக்கும் வாக்குவாதத்தினால் எதிர்ப்பு உண்டாகி, அது போராக மாறியது. குபன் தன்னால் இயன்றவரை ததீசியிடம் போரிட்டு, கடைசியில் பலம் குறைந்தான். குபன் தனது உற்ற தெய்வமான ஸ்ரீமந்நாராயணரை வேண்டினான். திருமால் அவன் சார்பாக போர்க்களம் புகுந்து, ததீசியின் மேல் சக்கராயுதத்தை ஏவினார். ஆனால் ததீசியின் உடல் வஜ்ஜிரத் தன்மைக் கொண்டதால் மகாவிஷ்ணு ஏவிய சக்கரம் அவனுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. மாறாக அது சிதைந்து போனது.

இதனால் திடுக்கிட்ட  திருமால், தேவர்களைக் கூப்பிட்டு ஆலோசித்தபோது சிவபெருமான் ஜலந்தர அசுரனை வதைக்க சுதர்சன சக்கரம் ஏற்படுத்தியதை அறிந்தார். உடன் பூவுலகு வந்தார். குரு தட்சிணாமூர்த்திக்கு உகந்த தலமான கோவிந்தவாடி அகரம் வந்து, சைவராய் மாறி, சிவதீட்சை பெறுகிறார். பின் பாலாற்றங்கரையில் தென்பால் அம்பிகை செம்மண்ணால் பிடித்து வழிபட்ட லிங்கத்தை செந்தாமரை மலர்களால் ஒரு திருநாமத்திற்கு ஒரு மலரென ஆயிரம் திருநாமங்களுக்கு ஆயிரம் மலர்களால் நித்தமும் பூசனைப் புரிந்தார் புருஷோத்தமர்.

ஒருநாள் அர்ச்சனையின் முடிவியல் ஒரு செந்தாமரை மலரை மறைத்தருளினார் மகேசன். 999 நாமங்களுக்கு 999 மலர்களை சமர்ப்பித்த கோவிந்தன், ஒரு மலரினைக் காணாமல் திடுக்கிட்டார். ‘அர்ச்சனையை முடித்தாக வேண்டும் என்ன செய்வது?’ என்று திகைத்த அடுத்த கணம் தனது வலது கண்ணையே பெயர்த்து மலராக பாவித்து, ஈசனது திருப்பாதங்களில் சமர்ப்பித்தார். அதனால் கண்ணப்பருக்கும் முன்னவர் ஆனார் திருமால்.

தாமதிக்காத ஈசன், நீண்ட செம்மேனியராய், பேரொளிப் பிரகாசமாய் திருமாலுக்குக் காட்சி தந்து, சுதர்சனமென்னும் அற்புத சக்கரத்தை திருமாலுக்கு அருளினார். (இந்த சுதர்சன சக்ரமே திருமாலின் பஞ்சாயுதங்களில் முதன்மையானது ‘சுதர்சன சக்ரம்’.  இந்த சக்ராயுதத்தைக் கொண்டே பரந்தாமன், கஜேந்திரன் என்னும் யானை, மன்னன் அம்பரீக்ஷன் ஆகியோரைக் காத்தருளினான்).  அதோடு, இழந்த கண்ணையும் வழங்கி, ‘இது முதல் நீர் செந்தாமரைக் கண்ணன் (பத்மாக்ஷன்) என்று போற்றப்படுவாய் நீர் மெய்யன்போடு வழிபட்ட இந்தப் பதி ‘திருமாற்பேறு‘ என்று வழங்கப்படும். இத்தலத்தில் ஒரு நொடிப் பொழுது தங்கியவருக்கும் எல்லா நலன்களும் கிட்டும்‘ எனக் கூறி, மூன்று உலகங்களை காத்து ரட்சிக்கும் வரத்தையும், அத்துடன் இத்தலத்தில் ஒரு நொடிப் பொழுது தங்கியவருக்கு காஞ்சிபுரத்தில் உள்ள அனைத்து சிவதலங்களையும் தரிசித்த புண்ணியத்தையும் அவருக்கு வழங்கி அருள்புரிந்தார் அரனார். அது முதல் இவ்வூர் திருமாற்பேறு என்று போற்றப்படுகிறது.

மேலும் அவர் திருமாலிடம், “நீ கூறி வழிபட்ட ஆயிரம் திரு நாமங்களால் என்னை பூசிப்பவர்களுக்கு முக்தியைக் கொடுப்பேன். அதைச் சொல்ல இயலாதவர்கள் என்னை, தீண்டச்சிவந்தார், சாதரூபர், மணிகண்டர், தயாநிதியார், பவளமலையார், வாட்டந்தவிர்த்தார், சாகிசனர் ஆகிய திருநாமங்கள் சொல்லி பூஜித்தால் வேண்டிய வரம் தருவேன்” என்று கூறி அருளினார்.

திருமால்பூர் கோவிலின் மற்றுமொரு வரலாறு

ஒருமுறை சிவனுக்கும் பார்வதிக்கும் தமக்குள் யார் பெரியவர் என்ற விவாதம் ஏற்பட்டது. அப்போது திடீரென பார்வதிதேவி, பரமேஸ்வரனின் கண்களை தன் கரங்களால் மூடினார். அது ஒரு கண நேரம்தான் என்றாலும், மற்ற உலகங்களில் அது பல யுகங்களாக நீடித்தது. சிவனின் கண்களாக அறியப்படும் சூரியன், சந்திரன், அக்னி ஆகிய முக்கண்களும் மூடப்பட்டதால், உலக உயிர்கள் அனைத்தும் வதைபட்டன. உலகம் அழியும் நிலைக்குத் தள்ளப்பட்டது. தன் விளையாட்டு வினையாகி விட்டதை உணர்ந்த பார்வதிதேவி, தன்னால் உலகம் சந்தித்த விளைவை எண்ணி வருந்தினார். தன் தவறுக்கு பரிகாரம் வேண்டினார். உடனே சிவபெருமான், “நீ பூலோகம் சென்று தவம் செய்” என்றார். அதை ஏற்று பூலோகம் வந்த பார்வதி, பாலாற்றின் கரையிலிருந்த வில்வ மரத்தடியில் மணல் லிங்கம் அமைத்து வழிபட்டதோடு, 32 தருமங்களையும் வளர்த்தார்.

தேவியின் தவத்தில் மனம் குளிர்ந்த ஈசன், அவரைத் தேடிவந்து “பார்வதி” என்று அழைத்தார். சிவ சிந்தனையில் ஆழ்ந்திருந்ததால், ஈசனின் குரல் பார்வதி தேவியின் மனதிற்குள் நுழையவில்லை. தன்னை அலட்சியம் செய்வதாக எண்ணிய இறைவன், பார்வதியின் தவத்தை கலைப்பதற்காக, தம் தலையில் இருந்த கங்கையை தூக்கி பாலாற்றில் விட்டார். இதனால் பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் தேவியின் தவம் கலைந்தது. திடீரென்று வந்த வெள்ளத்தில் மணல் லிங்கம் அடித்துச் சென்றுவிடாமல் இருக்க, அதை இறுக்கமாக தழுவியபடி இருந்தார், பார்வதிதேவி. மேலும் தனக்கு உதவும்படி தன் அண்ணனை அழைத்தார்.

தங்கையின் குரல் கேட்டு அங்கு வந்த பெருமாள், ஆற்றின் குறுக்காக சயனக் கோலத்தில் படுத்து, பாலாற்றை தெற்கு நோக்கி பாயச் செய்தார். அதன் பின் சிவ பூஜையை நிறைவு செய்தார் பார்வதி. இதையடுத்து பார்வதிக்கு காட்சி தந்து, அவரை ஏற்று கயிலை திரும்பினார் சிவபெருமான்.

‘துணி வண்ணச்சுடர் ஆழிகொள்ள வானெண்ணி
அணிவண்ணந்தலர் கொண்டாடி யர்ச்சித்த
மணி வண்ணற்கருள் செய்தவன் மாற்பேறு
பணி வண்ணத்தவர்க் கில்லையாம் பாவமே’

– என அப்பர் பெருமான் இத்தல நிகழ்வை அற்புதமாகப் பதித்துள்ளார் தனது தேவாரத்தில்!

ஞான சம்பந்தரும் இங்கே…

‘ஊறியார் தரு நஞ்சினை உண்டுமை
நீறுசேர் திரு மேனியர்
சேறுசேர் வயல் தென் திருமாற்பேற்றின்
மாறிலா மணிகண்டரே’

எனப் பாடிப் பரவியுள்ளார்.

வள்ளல் ராமலிங்கரும் பட்டினத்தடிகளும் கூட இத்தலத்தைப் புகழ்ந்து பாடியுள்ளனர்.

tirumalpur manikandeswarar temple history

திருமால்பூர் கோவிலின் அமைப்பு

ஊரின் மையத்தில்  சுமார் 1.20 ஏக்கர் அளவில் நாற்புறமும் உயர்ந்த சுற்று மதில்கள் சூழ, அதன் நடுவே கிழக்கு வாயில் கொண்ட ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களுடன் கோவில் அமைந்துள்ளது.

இந்த ஆலயத்தில் கருவறை முன் வல்லபை விநாயகர் பத்து கரங்களுடன் அருள்புரிகின்றார்.

கருவறை, அதனுள் ருத்திராட்ச பந்தலின் கீழே, கிழக்கே திருமுகம் கொண்டு, அம்பிகை தன் கரங்களால் பிடித்த செம்மண் லிங்கமாய் தரிசனமளிக்கின்றார். பார்வதிதேவியால் விருத்தக்ஷீர நதிக்கரையில் மணலால் அமைக்கப்பட்ட இலிங்கம் இங்கு மூலவராக உள்ளது. அது கரைந்து விடாமல் இருக்க இலிங்கத்தின் மீது, குவளை (செம்பால் செய்யப்பட்ட கவசம்) சாத்தியே அபிஷேகம் செய்யப்படுகிறது. சிவபெருமானை மூலஸ்தானம் அருகே திருமால் கைகூப்பி வணங்கிய நிலையில் “செந்தாமரைக் கண்ணப்பெருமாள்” என்ற நாமத்துடன் உள்ளார். மூலவரின் அருகே அதிகார நந்தி நின்ற நிலையில் உள்ளார்.

வலப்புறம் சக்கர தீர்த்தக் குளம் உள்ளே விசாலமான வெளிப் பிராகாரம்.  வலப்பக்கம் இறைவி அஞ்சனாட்சியின் தனிச்சன்னதி. உள்ளே யோகமுடி தரித்து நின்ற கோலத்தில், நான்கு கரங்களுடன் புன்னகை சிந்தும் அம்பிகையின் திருக்கோலம். எட்டு லட்சுமிகள், எட்டு யானைகள், எட்டு நாகங்கள், எட்டு சிங்கங்கள் புடைசூழ நடுவில் மகாமேரு இப்படியான பஞ்சாம்ச பீடத்தின் மீது நின்று அபயமளிக்கிறாள் அன்னை அபூர்வ அமைப்பு.

ராஜ கோபுரத்திற்கு நேராக உயரமான மேடையமைப்பு நேராக பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்திதேவர். மேலே தகரக் கொட்டகை!

இரண்டாம் வாயிலுள் நுழையும் முன் கணபதி மற்றும் சுப்ரமண்யரை தரிசனம் செய்யலாம். வாயிலின் உள்ளே இடப்புறம் நின்ற நிலையில் கரம் குவித்து வணங்கும் அதிகார நந்தி, துவாரபாலகர்கள் மூன்றாம் வாயிலுக்கு வெளியே காவல் புரிகின்றனர்.

சில படிகள் ஏறி, வாயில் கடந்து உள்செல்ல மகாமண்டபத்தில் பிரதோஷ நந்திக்கு முன் மகாவிஷ்ணு சங்கு சக்கரதாரியாய் இரு கரங்களையும் கூப்பி ஈசனை வணங்கும் நிலையில் அருட்தரிசனம் அளிக்கின்றார்.

வலப்புறம் உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. அவற்றுள் திருமால் தனது வலக்கரத்தில் கண்ணுடனும், இடக்கரத்தில் செந்தாமரை மலரும் ஏந்தியபடி அற்புதக் காட்சி தருகின்றார்.

உட்பிராகார வலம் வருகையில் அழகிய கல் கட்டிடத்தின் நேர்த்தியான அமைப்பு நம்மை வசீகரம் செய்கிறது.

tirumalpur temple anjanatchi amman

முதலில் சூரியன். அருகே சோழர்கள் இந்த ஆலயத்தைக் கட்டினார்கள் என்பதற்குச் சான்றாக பராந்தக சோழன் நினைவாக அமைக்கப்பட்ட சோளீஸ்வரர் மேற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார். பின்னர் நால்வரது திவ்யமான தரிசனம். தென்புறத்தில் சப்த மாதர்கள், தென்மேற்கில் பாலகணபதி மற்றும் உச்சிஷ்ட கணபதி என இரட்டை பிள்ளையார்கள் கொலு வீற்றுள்ளனர். அடுத்ததாக வள்ளி தெய்வானை உடனுறை சுப்ரமண்யர், கஜ லட்சுமி, சோமாஸ்கந்தர் என வரிசையாக அருள்பாலிக்கின்றனர்.

அதேபோல்  தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, துர்க்கை இங்கு எட்டுக் கரங்களுடன் அஷ்டபுஜ துர்க்கையாக அருட்காட்சியளிக்கிறாள். (துர்க்கையின் திருமேனி மிகவும் அழகு வாய்ந்தது – அஷ்டபுஜங்களுடன் சங்கு சக்கரம் ஏந்தி அழகாக காட்சித் தருகின்ற திருமேனி). சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர்.  வடகிழக்கு மூலையில் பள்ளியறையுள்ளது.

தலவிருட்சமாக வில்வமும், தீர்த்தங்களாக ஆலயத்தின் எதிரில் இருக்கும் சக்கர தீர்த்தமும், ஊரின் வடக்கே பாயும் பழம்பாலாறும் விளங்குகின்றன.

பராந்தகச் சோழனால் கி.பி. 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இவ்வாலயம் சோழர்கால கல்வெட்டுகள் பலவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் உள்ள காமக் கோட்டத்தின் வட பகுதியான வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு என்று, ராஜகேசரிவர்மன் தரிபுவன சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன் காலத்தில் சோழன் காலத்தில் குறிக்கப்பட்டுள்ளது. அதில் இறைவன் பெயர், திருமாற்பேறுடையார், அவிமுக்தீஸ்வரமுடையார் எனப் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குரங்கு முகத்துடன் நந்தி

ஒருமுறை ராவணன் தன் புஷ்பக விமானத்தில் வடதிசை நோக்கிப் பறந்து கொண்டிருந்தான் திடீரென பறக்க முடியாமல் விமானம் நின்றுவிட்டது.

அதற்கான காரணத்தைத் தெரிந்துகொள்ள ராவணன் புஷ்பக விமானத்தை விட்டு  கீழே இறங்கினான். அப்போது அவன் முன் அப்போது  நந்தியெம்பெருமான் தோன்றி, ராவணா, நீ நின்று கொண்டிருப்பது சிவபெருமான் வாழும் கயிலாய மலைப் பகுதி. சிவபெருமான் தவத்தில் உள்ளார். நீ அவருக்கு இடையூறு செய்யாதே. உன்போல் ஆணவம் கொண்டவர்களால் இந்த மலையைக் கடந்து செல்ல இயலாது. எனவே, நீ மலையைச் சுற்றிக்கொண்டு பறந்து போ என்றார்.

அதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராவணன், “குரங்கு போன்ற தோற்றம் கொண்ட நீயா என்னைத் திரும்பிப் போகச் சொல்கிறாய்? என் பராக்கிரமத்தை நினைத்துப் பார்க்காமல் என்னை இழித்துப்பேசிய நீ யார்?” என்று கேட்டான்.

ராவணன் அப்படி கேட்டதும், நந்தியின் முகம் குரங்காக மாறியது இதைக் கண்ட நந்தி “ராவணா என்னை குரங்கு என்று நீ இகழ்ந்து பேசியதால், நீயும் உன் இலங்கை நகரமும் ஒரு குரங்கால் அழிந்து போகும்” என்று சபித்தார். அதைக்கேட்டு ராவணனின் கோபம் மேலும் அதிகரித்தது. “இந்த மலையை கிள்ளி எறிந்துவிடுகிறேன் பார்” என்று சூளுரைத்தவாறு,  கயிலைமலையை அடியோடு பெயர்க்கத் தொடங்கினான், ராவணன்.

இதைக் கண்ட சிவபெருமான், மலையின் அடியில் ராவணனை சிக்கவைத்து, தன் கால் கட்டை விரலால் மலையை அழுத்திக் கொண்டார்.

பல்லாயிரம் ஆண்டுகளாக அதில் இருந்து ராவணனால் மீள முடியவில்லை. தவற்றை உணர்ந்த அவன் தன் தலையைக் கிள்ளி குடமாக்கி, ஒரு கையை தண்டமாக்கி, நரம்புகளால் தந்தி செய்து ஒரு வீணையை உருவாக்கினான். அதன் மூலம் சாம கானம் இசைத்தான். இதில் மனம் கரைந்த சிவன், ராவணனை விடுவித்தார். இருப்பினும், நந்தி கொடுத்த சாபம் ராவணனைத் தொடர்ந்து அதனால்தான் ஆஞ்சநேயரால், இலங்கை நகரம் தீக்கிரையாக்கப்பட்டது.

இந்த ஆலயத்தில் குரங்கு முகம் கொண்ட அதிகார நந்தியை நாம் தரிசிக்கலாம். “இவரை தரிசித்த பிறகே, மூலவரை வழிபடச் செல்ல வேண்டும் என்ற வழிபாட்டு நியதியும்” இங்கே உள்ளது.

tirumalpur manikandeswarar temple speciality

திருமால்பூர் கோவில் சிறப்புகள்

  • இத்தல மகிமைகளை விஷ்ணு மற்றும் காஞ்சி புராணங்கள் விரிவாக எடுத்துரைக்கி்னறன.
  • சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் தொண்டை நாட்டு திருத்தலங்களில் இது 11வது திருத்தலமாகும்.
  • மூர்த்தி, தலம், தீர்த்தம் போன்ற பெருமைகளைக் கொண்ட இத்தலம் திருமால் பூஜித்த காரணத்தால் இங்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாற்றப்படுகிறது.
  • அத்தோடு மூவருக்கு தீபாராதனை காட்டியபின், எதிரில் இருக்கும் திருமாலுக்கும் தீபாராதனை காட்டப்படுவது சிறப்பு.
  • சிவன் கோவில் என்றாலும், பெருமாள் அருள் பெற்ற தலம் என்பதால் பிரம்மோற்ஸவ காலத்தில் கருடசேவை இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரே சிவதலம் என்பது வியப்புக்குரியதாகும்.
  • உலகில் முக்கிய எட்டு அதிகார நந்திகளுள் இத்தல நந்தியும் ஒன்றாகத் திகழ்கிறது.
  • கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக மாசிமகம் நடக்கும் புராணபெருமை பெற்றது இச்சிவ திருத்தலம்.
  • பௌர்ணமி தோறும் அம்பாளுக்கு ஊஞ்சல் சேவை நடக்கிறது.

கல்வெட்டு சான்று

ஜயங்கொண்ட சோழமண்டலத்திலுள்ள காமக்கோட்டத்தின் பகுதியான் வல்ல நாட்டிலுள்ள திருமாற்பேறு (271 ஒஃப் 1906) என்று இராஜகேசரி வர்மன் திரிபுவனச் சக்ரவர்த்தி குலோத்துங்க சோழன்காலத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

இறைவன் பெயர் கல்வெட்டுக்களில் திருமாற் பேறுடையார், ஆளுடையார், உத்தம சோழீசுவரமுடையார், அவிமுக்தீசுவரமுடையார் என்று வழங்கப்படுகின்றன. இத்தலத்தில் அக்கினீசுவரர் கோவில் ஒன்று தனியே இருந்திருக்க வேண்டும். இக்கோவிலுக்குக் கண்டராதித்தனால் ஐம்பெருங்குழு ஏற்படுத்தி நிலங்களைக் கவனிக்கவும், படையல் உக்கு நெல் கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன (283 ஒஃப்1906).

இங்குள்ள விஷ்ணு கோவிலிலுள்ள இறைவன் பெயர் கோவிந்தபதியில் நின்றருளிய பெருமானடிகள் என்பது (303 ஒஃப் 1906). இது தண்டக நாட்டின் மாவட்டமான தர்மக்கோட்டத்தின் பிரிவான வல்ல நாட்டில் கோவிந்தபதியிலுள்ள கோவிலுள்ள நின்றருளிய பெருமான் ஆகும் (314 ஒஃப் 1906). மாற்பேறுடையார் கோவிலைக் கட்டவும், சுற்று மண்டபத்தை முற்றுப் பெறச் செய்யவும் விராட அரசன் அனையமான் எங்கிற மண்டலாதித்யனால் தானம் கொடுக்கப்பட்டது (267 ஒஃப் 1906).

உத்தம சோழீசுவரமுடையார் உருவம் தயார் செய்ய சேதிராயன் என்பவனால் நிலம் தானம் செய்யப்பட்டது (277 ஒஃப் 1906), உமாபத்தராகியார் (அதிசுந்தர தேவதேவியார்) உருவம் தயார் செய்ய சோழன் இராஜகேசரி வர்மனால் நிலம் தானம் செய்யப்பட்டுள்ளது (284ஒஃப்1906). மணவாளப் பெருமாள் உருவம் செய்யவும், ஆபரணம் தயார் செய்யவும், பரகேசரிவர்மன் இராஜேந்திர சோழன் ஆட்சியில் ஆவன செய்ததைத் தெரிவிக்கின்றது(321ஒஃப்1906). கோவிலில் அனையமான் பரமண்டலாதித்தன் ஒரு மண்டபம் கட்டியுள்ளான்(323ஒஃப்1906).

நம்மாழ்வார் திருவாய்மொழியின் வரிகள் கருப்பக்கிரகத்தின் மேற்குச் சுவரில் காணப்படுகின்றன (326ஒஃப் 1906). மணவில் கோட்டத்தின் பகுதியான் மேல்பழுங்கூர் நாட்டில் சிறியரூரில் கோவிந்தபதி ஆழ்வார் கோவில் ஒன்று உள்ளது(326ஒஃப்1906). தோழனார் தந்தையால் கோவிந்தபதி ஆழ்வார்மீது ஒரு திருப்பதிகம் பாடப்பட்டுள்ளது(333 ஒஃப் 1906).

சோழன் இராஜகேசரிவர்மன் காலத்தில் வைஷ்ணவர்களில் 18 நாடு குறிப்பிடுகின்றது. மேலும் வண்டல் படிந்த நிலங்களைப் பற்றியும் பாலாற்றில் வெள்ளம் வந்ததைப் பற்றியும், இதற்குச் செப்பனிட 1000 கூலிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொருவருக்கும் 12கோல் நிலம் கொடுக்கப்பட்டது பற்றியும் அறிவிக்கப்பெறுகின்றன(322ஒஃப்1906). மற்றைய கல்வெட்டுகள், விளக்கிற்கு, பிராம்மண உணபவிற்கு, அபிடேகத்திற்குப் பொன், நிலம், பசுக்கள், குடங்கள் முதலியன கொடுக்கப்பட்டதைத் தெரிவிக்கின்றன.

thirumalpur manikandeeswarar

பிரார்த்தனை: பெருமாள் வணங்கி, சக்கரம் பெற்ற தலமாதலால், இங்கு வழிபடுவோருக்கு எதிரி பயம் இருக்காது. வழக்குகளில் வெற்றி பெறலாம் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்: வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்கு திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தினசரி மூன்று கால பூஜைகள் நடந்திடும் இவ்வாலயம், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. அனைத்து சிவாலய விசேஷங்களும் இங்கு சிறப்புற அனுசரிக்கப்படுகின்றன.

Tirumalpur Temple Festivals in Tamil

திருவிழா: மாசி மாதம் நடக்கும் 10 நாள் பிரமோத்ஸவத்தில் மகம் நட்சத்திரத்தன்று தீர்த்தவாரி நடக்கும். இந்த திருவிழாவில் தான் பெருமாளுக்குரிய கருட சேவையும் நடக்கிறது. ஆடி வெள்ளி, ஆடிப் பூரம், ஆனித் திருமஞ்சனம், திருக்கார்த்திகை, மார்கழி திருவாதிரையும் இங்கு விசேஷம். தமிழ்ப் புத்தாண்டு, ஆனி உத்திரம், விநாயக சதுர்த்தி, நவராத்திரி, வைகுண்ட ஏகாதசி, திருவாதிரை ஆருத்ரா தரிசனம் என பல பண்டிகைகள் இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன்.

Tirumalpur Temple Timings

கோவில் தரிசன நேரம்: திருமால்பூர் கோவில் காலை 07:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை, மாலை 05:00 மணி முதல் இரவு 08:30 மணி வரை திறந்திருக்கும்.

tirumalpur temple timings

Tirumalpur Temple Contact Number: 8754840649, +91 4177 248 220, 9345449339

திருமால்பூர் கோவிலுக்கு எப்படி செல்வது?

சென்னையிலிருந்து இத்தலத்திற்கு நேரடி பேருந்து வசதியுள்ளது; ஆனால் அடிக்கடி இல்லை. காஞ்சிபுரத்திலிருந்து அடிக்கடி இத்தலத்திற்கு பேருந்து உள்ளது. அரக்கோணம் – காஞ்சிபுரம் இருப்புப் பாதையில் இத்தலம் உள்ளது. இந்நிலையத்திலிருந்து 5-கி. மீ. உள்ளே சென்றால் திருமால்பூர்  கோவிலை அடையலாம்.

Thirumalpur Temple Address

Sri Manikandeswarar Temple, Tirumalpur (Tirumarperu), Vellore District.

WJPR+XF6, Thirumalpur, Tamil Nadu 631051



2 thoughts on "திருமால்பூர் (திருமாற்பேறு) மணிகண்டீஸ்வரர் கோவில்"

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்