×
Monday 9th of December 2024

உத்தமர்சீலி ஸ்ரீ கைலாச நாதர் கோவில்


Uthamarseeli Sri Kailasa Nathar Temple History in Tamil

உத்தமர் சீலி ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ கைலாச நாதர் ஆலயம்

சத்திய சீலமே உத்தம சீலம்

திருச்சியிலிருந்து காவிரி வடகரை வழியாக கல்லணை செல்லும் மார்கத்தில் உள்ளதே உத்தமர்சீலி என்னும் இயற்கை எழில் சூழ்ந்த திருத்தலமாகும். இங்கு உறையும் இறைவன் ஸ்ரீகைலாச நாதர், இறைவி ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை, தல விருட்சம் வில்வம் (தற்போது மறைந்துள்ளது), தீர்த்தம் உத்தாமரை சீலம் (தற்போது மறைந்துள்ளது). இங்கு நிலவும் பனை மரம் அற்புத நோய் நிவாரண சக்திகளும் வாஸ்து சக்திகளும் நிரம்பப் பெற்றது. கண் நோய்களையும், தீரா நோய்களைத் தீர்க்கும் வல்லமையையும் உடையது.

தெய்வீக நிகழ்ச்சிகளிலும் புராண சம்பவங்களிலும் சிறப்பான ஒரு வைபவத்தைக் கூற வேண்டுமானால் அது பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணமே ஆகும். அது போல் அனைவர் மனதில் என்றும் நிறைந்து நீங்காத இடத்தைப் பெற்றிருப்பது ஸ்ரீராமர் பட்டாபிஷேக கோலாகலக் காட்சியாகும்.

ஒவ்வொரு மனிதனும் தான் மன்னனாக ஆக வேண்டும் என்ற பேர் அவாவை, அளவில்லாத ஆசையை நிறைவேற்றியதே ராமர் பட்டாபிஷேகம் ஆகும்.

நாம் அனைவரும் மன்னர்களே

இந்த ஒப்பற்ற அதிசயம், ஆச்சரியமான சந்தோஷத்தைத்தான், ஆனந்தைத்தான் ஒவ்வொரு மனிதனும் பூலோக வாசியும் ராமர் பட்டாபிஷேகத்தின்போது பெற்றார்கள்.
எனவே ராமர் பட்டாபிஷேகத்தின்போது எங்கும் நிகழாத அதிசயமாக மக்கள் ஒவ்வொருவரும் தாங்கள் பட்டாபிஷேகத்தில் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பட்டதாக உணர்ந்தார்கள் என்றால் இதைவிடச் சிறந்த ஓர் அற்புத தெய்வீக நிகழ்ச்சியைப் பூலோகத்தில் எங்காவது காண முடியுமா ?

இதுமே ராமர் பட்டாபிஷேகத்தின் பின்னணியில் அமைந்த தெய்வீக உண்மை.
வசிஷ்டர், வாம தேவர் போன்ற எட்டு மகரிஷிகளால் ராமர் பட்டாபிஷேகம் நிறைவேற்றப்பட்டதாக ராம இதிகாசத்தில் கூறப்பட்டாலும் அவர்கள் ஸ்ரீராமருக்குத்தான் மணி முடியை அணிவித்தார்கள் என்று வெளிப்படையாகக் கூறவில்லை. இதிலிருந்து என்ன தெரிகிறது ? அயோத்தியில் ராமர் அணிந்து மணிமகுடம் தனிப்பட்ட மனிதன் ஒருவன் தலையில் வைக்கப்பட்ட ராஜ கிரீடம் அன்று.

இந்த பாரெங்கும். அகில உலகம் எங்கும் பரந்து விரிந்திருந்த ராம ராஜ்யத்தின் பிரதிநிதியாகவே ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி அந்த மணி மகுடத்தை தலையில் தாங்கி உலக மக்களுக்கெல்லாம் சக்கரவர்த்தி என்ற உன்னத உயர் நிலையைப் பெற்றுத் தந்தார். எனவே ராமபிரான் சக்கரவர்த்தி என்று பட்டாபிஷேகம் செய்யப்பட்டபோது ஒவ்வொரு தனி மனிதனும் தானே சக்கரவர்த்தி ஆனதாக உணர்ந்தான் என்றால் இந்த எல்லையற்ற சந்தோஷத்தை ராமபிரானைத் தவிர வேறு யாரால் அளிக்க முடியும்.
மனித கற்பனைக்கு எட்டாத இந்த எல்லையற்ற இறை சேவையால்தான் இன்றளவும் ராமர் பட்டாபிஷேக மங்கள நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து சந்தோஷம் பெறுகிறோம், ஆனந்தக் கூத்தாடுகிறோம்.

அந்த அற்புத ராமர் பட்டாபிஷேக மணி முடியை வசிஷ்டரே ராமருக்கு அணிவித்தார் என்று கம்பர் வர்ணிக்கிறார். வசிட்டனே சூட்டினான் மௌலி என்று கம்ப நாடர் வர்ணிப்பதன் காரணம் யாதோ?

ஒருமுறை வசிஷ்டருக்கும் விஸ்வாமித்திரருக்கும் நடந்த போட்டியின் விளைவாக உண்மையைத் தவிர வேறு எதையும் பேசி அறியாத ஹரிச்சந்திர மகாராஜாவை எப்படியாவது பொய் சொல்ல வைத்து விட வேண்டும் என்று விஸ்வாமித்திரர் எவ்வளவோ முயன்றும் அது முடியாமல் போய் இறுதியில் சத்திய வெற்றிக் கொடி நாட்டிய ஹரிச்சந்திர மகாராஜாவைப் பற்றி நாம் அறிவோம்.

uthamarseeli kailasanathar

வசிட்டனே புனைந்தான் மௌலி

அவ்வாறு உண்மையைப் பேசி வெற்றி பெற்ற ஹரிச்சந்திர மகாராஜா அயோத்தியில் மீண்டும் மகாராஜாவாக பட்டம் சூடியபோது அதை மனமார வரவேற்று ஆசி வழங்கியவரே வசிஷ்ட மகரிஷி ஆவார். இவ்வாறு உண்மையின் காவலானாக சத்தியத்தின் மெய்க்காப்பாளனாக விளங்கிய அதே வசிட்டன்தான் இப்போது மீண்டும் அயோத்தியில் ராமச் சந்திர மூர்த்திக்கு பட்டம் சூட்டினான் என்று ராம காவியம் வர்ணிக்கின்றது. அந்த அற்புதமான பட்டாபிஷேகம் எப்படி நிறைவேறியது? “அனுமன் அரியணை தாங்க அங்கதன் உடைவாள் ஏந்த…” கோலாகலமாக ஸ்ரீராமர் பட்டாபிஷேம் நிறைவேறியது.

இவ்வாறு ராமச் சந்திர மூர்த்தியே தன்னுடைய உடைவாளை வாலியின் மைந்தன் அங்கதனுக்கு அளித்து தன்னுடைய வாரிசாக கௌரவித்தார் என்றால் அங்கதன் எத்தகைய சிறப்பியல்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வாலிக்கு குழந்தை பேறு பெற்றுத் தந்த தலம்

அங்கதன் புஜபலம் மிக்க பராக்கிரமசாலி. தோள் பலத்துடன் நுண்ணறிவும் கூடியவன். அதனால்தான் அவன் ராம தூதுவனாக இலங்கைக்கு அனுப்பப்பட்டான். அங்கதனுடைய பராகிரமத்தை கண்ணால் கண்ட இரவாணன் தான் ராமனிடம் தோல்வி அடைவது நிச்சயம் என்பதை அப்போதே உணர்ந்து கொண்டானாம். அங்கதனுடைய தோள் வலிமை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியதே இதற்குக் காரணம். அங்கதனுடைய தோள் வலிமையைக் கௌரவிப்பதற்காகவே ராம பிரான் பட்டாபிஷேகத்தின்போது பொன் தோள் வளையல்களை அங்கதனுக்கு அளித்து அவன் சேவையைப் பாராட்டினார். அங்கதனுக்கு இத்தகைய தோள் வலிமையும் உலகோர் வியக்கும் நுண்ணறிவும் எவ்வாறு கிட்டியது ? மாதா பிதா செய்தது மக்களுக்கு. எனவே அங்கதனின் தந்தையான வாலியின் தேவ பலமும் தாய் தாரையின் நுண்ணறிவு பலமுமே அங்கதனுக்கு இந்தப் புகழைத் தேடித் தந்தது. வாலியும் தாரையும் இந்த தெய்வீக பலங்களை எவ்வாறு பெற்றார்கள் ?

வாலி, தாரா தம்பதிக்கு அருள்புரிந்த மார்க்கண்டேய மகரிஷி

வாலி தாரா தம்பதிகள் நீண்ட நாட்கள் குழந்தைப் பெறு இல்லாமல் வாடினார்கள். குழந்தைப் பேற்றிற்காக தம்பதி சகிதமாக பல திருத்தலங்களுக்கும் யாத்திரை செய்து வந்தான் வாலி. அப்போது உத்தமர்சீலி திருத்தலத்தை அடைந்தபோது மார்கண்டேயரை தரிசனம் செய்யும் வாய்ப்பு கிட்டவே அவரிடம் தன்னுடைய மனக் குறையை எடுத்துரைத்தான்.

சிரஞ்சீவியான மார்கண்டேயர் வரப்போகும் ராமாயண புராண சம்பவங்கள் பற்றியும் அதில் வாலியின் மைந்தன் அங்கதன் ஆற்றப்போகும் அற்புத ராம சேவை பற்றியும் நன்கு உணர்ந்திருந்தார். இருந்தாலும் அதை வெளிக்காட்டாது வாலியிடம் அவன் எத்தகைய குழந்தையை தன்னுடைய வாரிசாக எதிர்பார்க்கிறான் என்று கேட்டபோது தன்னை ஒத்த குழந்தையே தனக்கு வாரிசாக அமைய வேண்டும் என்று தன்னுடைய விருப்பத்தை தெரிவித்தான் வாலி.

ஸ்ரீஅகத்திய முனியும் இவ்வாறு தன்னை ஒத்த தனயனைத்தானே வாரிசாகப் பெற விழைந்தார். இத்தகைய விருப்பதற்குக் காரணம் என்ன? ஒரு வகையில் இது சுயநலமான பிரார்த்தனை போல் தோன்றினாலும், ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால்தான் இந்த விருப்பம் எத்தகைய தியாகத்தின் அடைப்படையில் அமைந்தது என்று தெரிய வரும்.

மகான்கள், மகரிஷிகள், ஞானிகள், யோகிகள் என இறைவனை உணர்ந்த அனைவருமே தங்கள் ஒவ்வொரு செய்கையையும் மக்களின் நலனுக்காக இறை சேவைக்காக அர்ப்பணித்து வருபவர்களே. எனவே ஒரு திறமையான விவசாயி ஏதோ ஒரு குழந்தையை விவசாயியாக உருவாக்குவதை விட தன்னுடைய குழந்தை தன் இயல்புகளைப் பெற்றிருந்தால் அது பிறக்கும்போதே பயிர் நுணுக்கங்கள் பற்றிய அறிவுடன் பிறப்பதால் அதை ஒரு சிறந்த விவசாயியாக மாற்றுவது எளிதுதானே? இதன் அடிப்படையில் அமைந்ததுதான் குலக்கல்வி என்று நம் முன்னோர்கள் காட்டிய அற்புத தர்ம வழியாகும்.

மார்கண்டேயரின் மகத்தான பணி

இப்போது மார்கண்டேயரைப் பற்றிய சில ஆன்மீக ரகசியங்களை அறிவோம். மார்கண்டேயர் சிரஞ்சீவி பட்டம் பெற்று மரணமில்லா பெருவாழ்வைப் பெற்றவர். உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களும் பிரளயத்தில் மழை, அக்னியால் அழிந்தாலும் அவர் மறையாமல் என்றும் நிலைத்து வாழ்பவர். அவருடைய உயரம் எட்டுப் பனைமரம் உயரம் உடையது. ஏன் மகரிஷிகள் அவரை எட்டுப் பனை மரம் உயரம் உடையவர் என்று கூறுகிறார்கள். பொதுவாக மனிதனின் உயரம் ஆறு அடி, எட்டு அடி என்றுதானே கூறுவார்கள். இதுவே இறைவனின் அற்புத லீலை. பனை மரத்தின் உயரம் எவ்வளவு என்பதை யாராலும் கூற முடியுமா ? நிச்சயமாக சாத்தியமில்லை. ஒரு பனைமரம் பத்தடி உயரம் இருக்கும். மற்றோர் பனைமரம் முப்பதடி உயரம் இருக்கும். எனவே எந்த பனை மரத்தின் உயரத்தை நாம் எடுத்துக் கொள்ள முடியும் ?

uthamarseeli kailasanathar temple ganesha

உத்தமர் சீலி திருத்தலத்தின் அற்புத ரகசியங்களை உலகுக்கு காட்டிய மகான்

இந்த அற்புத இரகசியத்தை வெளிப்படுத்தியவரே நம் குருமங்கள கந்தவர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள். ஒரு குறித்த யுகத்தில் உத்தமர்சீலி சிவத்தலத்தில் பொலியும் பனைமரம் எவ்வளவு உயரம் உள்ளதோ அது போல் அந்த யுகத்தில் எட்டுப் பனை மர உயரம் கொண்டிருப்பார் மார்கண்டேய மகரிஷி என்பதே சித்தர்களின் விளக்கம். இதிலிருந்து என்ன தெரிகிறது. மார்கண்டேய மகரிஷியின் உயரமானது ஒவ்வொரு யுகத்திற்கும் மாறும் உத்தமர்சீலியின் பனைமரத்தின் உயரத்தைப் பொறுத்தது என்பதும் யுகங்கள் மாறினாலும் பிரளயமே வந்தாலும் உத்தமர்சீலி பனை மரம் மறையாது என்பதும் உத்தமர்சீலி சிவத்தலம் பிரளயத்தையும் விஞ்சி நிற்பது என்பதும் புலனாகின்றதே.

எண் சாண் உடம்பு தத்துவம்

இப்போது உங்களுக்கு வரக் கூடிய அடுத்த கேள்வி எதற்காக மார்கண்டேயரின் உருவம் எட்டுப் பனைமர உயரத்தைக் கொண்டுள்ளது என்பதே. இதன் பின்னால் ஆயிரமாயிரம் காரணங்கள் உண்டு. அதில் ஒன்று ஒவ்வொரு பனை மரமும் வாஸ்து தத்துவத்தில் ஒரு கூறாய் அமைந்து மனிதனின் எண் சாண் உடம்பிற்கு உள்ள வாஸ்து தத்துவத்தைப் பிரதிபலிக்கிறது என்பது நீங்கள் இதுவரை அறியாத ஆன்மீக ரகசியமாகும்.

இவ்வாறு நமது உடம்பில் உள்ள அவயவங்கள் ஒவ்வொன்றிற்கும் உரித்தான நீள அகல விதிகள் உண்டு. இவை அனைத்தும் அவரவரின் விரல் நீள அகலங்களைப் பொறுத்தே அமையுமே தவிர அடி, அங்குளம் என்ற அளவுகளைப் பொறுத்து கிடையாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

உதாரணமாக, ஒரு மனிதனின் கையின் நீளம் அவனுடைய விரல்களால் அளக்கப்படும் மூன்று சாண் நீளத்தைக் கொண்டிருக்கும். மனிதனுடைய தொப்புள் பாதத்திலிருந்து ஐந்து சாண் தூர இடைவெளியில் அமைந்திருக்கும். அதனால்தான் ஒருவர் வீடு கட்டும்போது அவர் கட்டும் வீட்டின் தளத்தின் உயரம் அவ்வீடு அமைந்துள்ள சாலை தளத்திலிருந்து ஐந்து சாண் உயரத்தில் அமைய வேண்டும் என்கிறோம். இந்த ஐந்து சாண் உயரம் என்பது அவருடைய தொப்புளுக்கும் அவர் பாதத்திற்கும் இடைப்பட்ட தூரம். படுக்கை அறை போன்றவை எத்தனை அடியில் அங்குலத்தில் இருக்க வேண்டும் என்பது அந்த வீட்டுச் சொந்தக்காரரின் உடல் அவயவங்கள் எத்தனை சாண் அளவுகளில் அமைந்துள்ளன என்பதைப் பொறுத்தே அமையும் என்று அறிவதே உண்மையான வாஸ்து சாஸ்திர நியதிகளாகும் இந்த அடிப்படைய வாஸ்து சாஸ்திர நியதிகளைப் புரிந்து கொள்ளாமல் கட்டும் வீடுகளால் எந்த வித வாஸ்து லட்சணங்களும் கிட்டாது என்பது தெளிவாகின்றது அல்லவா? இந்த சாஸ்திரங்கள் மனிதனுக்கு மட்டும் உரித்தானவை அல்ல. விலங்குகளுக்கும், புழு பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் பாம்புகளுக்கும் கூட உரித்தானவையே.

தூக்கணாங் குருவியின் துரீய நிலை

எப்போதும் பூமி அந்தர வாஸ்து சுந்தர நிலை என்ற உயர்ந்த ஆன்மீக நிலையில் இருந்து கொண்டு தரையில் கால் படாது காற்றில் அந்தரத்தில் பறந்த வண்ணமே தன்னுடைய கூடுகளைக் கட்டும் தூக்கணாங் குருவிகளே வாஸ்து நியதிகளை முழுமையாக உணர்ந்து தங்கள் கூடுகளை அமைத்துக் கொள்வதால் தூக்கணாங் குருவிக் கூடு தரிசனம் மிகச் சிறந்த வாஸ்து தரிசனமாக புகழப்படுகிறது. எனவே புது வீடுகளைக் கட்டும் முன் ஒருதடைவையாவது தூக்கணாங் குருவிக் கூடுகளை தரிசனம் செய்து பறவைகளின் வாஸ்து குருவாக போற்றப்படும் கருடாழ்வாரை தரிசனம் செய்வதால் அற்புத பலன்களைப் பெறலாம்.

இவ்வாறு எண் சாண் அளவில் அமைந்துள்ள மனிதனின் உடலில் உள்ள மற்றோர் அம்சம் மனித மனம் எட்டு திசைகளில் இருந்து வரும் எண்ணங்களால் பாதிக்கப்படுகிறது என்பதாகும். இறைவன், பக்தி, தியாகம் என்று உயர்ந்த எண்ணங்களில் சஞ்சரிக்கும் மனித மனமானது திடீரென்று கீழ்த்தரமான கேவலமான எண்ணங்களில் உழல்வதற்குக் காரணம் இவ்வாறு பல திசைகளில் இருந்து வரும் நல்ல எண்ணங்களுக்கும் தீய எண்ணங்களுக்கும் ஆட்படுவதுதான்.

எந்த திசையிலிருந்து எந்த எண்ணம் வருகிறது என்பதை மனிதன் புரிந்து கொண்டால் அதைக் கொண்டே ஆன்மீகத்தில் எதை வேண்டுமானாலும் சாதித்து விடலாம். இவ்வாறு எண் சாண் உடம்பைக் கொண்டு எண் திசைகளில் வரும் எண்ணங்களைப் புரிந்து கொள்ள உதவி அற்புத இறைசேவை புரிந்து வந்ததால்தான் மார்கண்டேய மகரிஷியின் உயரம் எட்டு பனை மர உயரத்தைக் கொண்டிருந்தது என்ற அற்புத தெய்வீக ரகசியம் இப்போது புலனாகின்றது அல்லவா ?

வாலி மார்கண்டேய மகரிஷியைச் சரணடைந்து உத்தம குழந்தை வரம் வேண்டியபோது அவனை திருஅண்ணாமலையை கிரிவலம் வந்து எட்டு திசைகளில் அமைந்துள்ள இந்திர லிங்கம் முதலான எட்டு லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்து வழிபடுமாறு நல்வழி காட்டினார்.

uthamarseeli shivan temple dakshinamurthy

நித்திய வாஸ்து முகூர்த்தம்

இந்த அதியற்புத முகூர்த்த நேரத்தில் வாலியின் மனைவியான தாரா தேவி அற்புத வாஸ்து சக்திகள் நிறைந்த உத்தமர்சீலி சிவத்தல பனை மரத்தை வலம் வந்து வணங்கி வழிபாடுகளை மேற்கொண்டாள். சுத்தமான மஞ்சளை தன் கையால் அரைத்து பனை மரத்திற்குப் பூசி குங்குமப் பொட்டுகள் இட்டு அலங்கரித்து தலத்தை அடிப் பிரதட்சணம் வந்து தொடர்ந்து வழிபாடுகள் இயற்றி வந்தாள்.

வாலி திருஅண்ணாமலை கிரிவலம் முடித்து உத்தமர்சீலி திருத்தலத்தை அடைந்த பின் தாரையுடன் சேர்ந்து இருவரும் அத்தல இறை மூர்த்திகளையும் பனை மரத்தையும் வலம் வந்து வணங்கி வழிபடுவதை தங்கள் நித்திய தினசரி வழிபாடாக மேற்கொண்டிருந்தனர். இதுவே மார்கண்டேய மகரிஷி அத்தம்பதிகளுக்கு அருளிய வழிபாடாகும்.

கேட்பதற்கு இது மிகவும் சாதாண வழிபாடுபோல் தோன்றினாலும் இந்த வழிபாட்டின் பின்னணியில் அமைந்த இறை ரகசியங்களை உணர்ந்தால்தான் இந்த வழிபாட்டின் மகத்துவம் புரியவரும்.

கற்பனைக்கெட்டா கருணை வேந்தன்

சாதாரண மனிதர்களைப் பொறுத்தவரை திருஅண்ணாமலையின் சுற்றளவு சுமார் 12 மைல்கள். திருஅண்ணாமலையின் உயரம் 1500 அடிகள். ஆனால், திருஅண்ணாமலையின் சுற்றளவும் உயரமும் எவருமே அதாவது ராமர், கிருஷ்ணர் என்ற அவதார மூர்த்திகளால் கூட புரிந்து கொள்ள முடியாத அளவு உடையது என்பதே சித்தர்கள் புகட்டும் பாடமாகும்.

உதாரணமாக, எறும்புகளுக்கு திருஅண்ணாலையின் சுற்றளவு 30 அடியே, உயரம் ஒன்றரை அடியே. மலைப் பாம்புகளுக்கு திருஅண்ணாமலையின் சுற்றளவு 60 அடியே, உயரம் 6 அடியே. ஆனால், ஒரு மலைப் பாம்பு இந்த 60 அடி தூரத்தைக் கடந்து ஊர்ந்து செல்ல அதற்கு ஆறு மாத காலங்கள் ஆகும் என்பது வியப்பளிக்கும் ஆன்மீக இரகசியமே.

கிரிவலம் செல்லும் அந்த ஆறுமாத காலத்தில் அது எந்த உணவையும் ஏற்காது என்பது மற்றுமோர் ஆன்மீக விந்தையாகும். அவ்வாறு கிரிவலம் செல்லும் மலைப் பாம்பின் மேல் ஆடு, முயல் என எந்த விலங்குகள் ஏறிச் சென்றாலும் கூட அவைகளைச் சற்றும் சட்டை செய்யாது, அவைகளைத் துன்புறுத்தாது தன்னுடைய கிரிவலத்தை நிறைவேற்றுவதிலேயே குறியாக இருக்கும் மலைப் பாம்பு.

இதுவே ஜடபரதர் என்ற பிரம்மரிஷி மலைப் பாம்பிடம் கற்றுக் கொண்ட அஜகர விருத்தி பாடமாகும். அஜகர விருத்தி என்றால் மலைப் பாம்பு போல உணவைத் தேடிச் சென்று உண்ணாது உணவே தன்னைத் தேடி தன்னுடைய அருகில் வந்தால்தான் ஏற்றுக் கொள்வது என்று மட்டும் பொருள் கிடையாது. கிரிவலம் போன்ற இறை காரியங்களை ஏற்று செயல்படுத்தும்போது உணவு, தாகம் என்ற சிந்தனையை அறவே மறந்து இறை நினைவிலேயே முழுக்க முழுக்க ஊறி நிறைவேற்றுவதும் உண்மையான அஜகர விருத்தி தத்துவமாகும்.

மனித மனம் இந்த ஆன்மீக உண்மைகளை எல்லாம் ஏற்றுக் கொள்ளாது என்பதால் மகான்கள் இந்த விஷயங்களைப் பற்றி அந்த அளவிற்கு தீர்கமாக ஆராய்வதில்லை.
அதுபோல வாலி வலம் வந்த திருஅண்ணாமலையின் சுற்றளவு சுமார் 80 லட்சம் மைல்கள். இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம் என எட்டு திசைகளில் அமைந்த லிங்கங்கள் ஒவ்வொன்றிற்கும் உள்ள தூரம் சுமார் பத்து லட்சும் மைல்கள். இந்த எட்டு லிங்கங்களையும் வாலி அடிப் பிரதட்சிணமாக வலம் வந்து இரண்டு மணி நேரத்தில் நிறைவேற்றினான் என்பதை உணர்ந்தால்தான் வாலியின் தவ சக்தியும் ஆன்மீக பலமும் நமக்கு ஓரளவாவது புரியவரும்.

பிரம்ம முகூர்த்தத்தில் திருவண்ணாமலையை கிரிவலம் வருவதன் பலன்

மார்கண்டேய மகரிஷி அருளிய முறையில் நித்திய வாஸ்து நேரமான விடியற்காலை 4.30 மணி முதல் 6.30 மணிக்குள் திருஅண்ணாமலையில் அமைந்துள்ள எட்டு லிங்க மூர்த்திகளையும் தரிசனம் செய்து உரிய தான தர்மங்களுடன் நிறைவேற்றினால் எத்தகைய கடுமையான வாஸ்து தோஷங்களும் நீங்கும். கடுமையான நாட்பட்ட நோய்களும் எளிதில் குணமடையும். எத்தகைய திருமண தோஷங்களும் நீங்கி, தடைபட்ட திருமணங்களும் எளிதில் நிறைவேறும்.

அதேபோல நித்திய பிரம்ம முகூர்த்த வாஸ்து நேரமான காலை 4.30 முதல் 5.30 மணிக்குள் திருஅண்ணாமலையை வலம் வந்து எட்டு திசையிலும் உள்ள லிங்க மூர்த்திகளை வணங்கி வழிபடுவதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளை வர்ணிக்க இயலாது. இன்று ஒலிம்பிக் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெறும் போட்டியாளர்கள் எந்த நாட்டவரைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்கள் ஏதாவது ஒரு பிறவியில் ஒரு முறையாவது திருஅண்ணாமலையை மேற்கூறிய பிரம்ம முகூர்த்த நேரத்தில் கிரிவலம் வந்து வழிபட்டிருந்தால்தான் இத்தகைய உலகளவிலான சாதனையை நிகழ்த்த முடியும் என்று சித்தர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

uthamarseeli shivan temple navagraha

ஓடி ஓடியே உயர்ந்த உத்தமர்

இதே சாதனைகள் மக்களின் நலனுக்காக சமுதாய சேவையாக நிறைவேற்றப்படும்போது அவர்கள் மகான்களாக உயர்கிறார்கள். நாம் நன்கு அறிந்த சேஷாத்ரி சுவாமிகள் தினமும் மேற்கூறிய முறையில் திருஅண்ணாமலை கிரிவலத்தை நிகழ்த்தி தம்முடைய வாழ்நாளில் 12000 முறைக்கு மேல் இத்தகைய பிரம்ம முகூர்த்த அற்புத திருஅண்ணாமலை கிரிவலத்தை நிகழ்த்தி உன்னத சாக்த நிலையை அடைந்தார் என்பது நீங்கள் இதுவரை அறியாத தெய்வீக ரகசியமாகும்.

இந்த பிரம்ம வாஸ்து நேரத்தில் உத்தமர்சீலி, திருமழபாடி, பனங்காட்டூர் போன்று பனைமரத்தை தலவிருட்சமாக உடைய கோவில்களில் வழிபாடுகளை இயற்றி வர வாஸ்து தோஷங்கள் விலகுவதுடன் கடுமையான நோய்களும் நிவாரணம் பெறும்.

ஆனால், திருஅண்ணாமலையிலும் உத்தமர்சீலியிலும் வாலி, தாரை தம்பதிகள் இயற்றிய முறையில் வழிபாடுகளை கலியுகத் தம்பதிகளால் இயற்ற முடியாது என்பதால் சித்தர்கள் ஒரு எளிய முறையிலான நித்திய பிரம்ம வாஸ்து வழிபாட்டு முறையை அருளியுள்ளார்கள்.

இந்த எளிய முறையின்படி தம்பதியர் விடியற்காலை பிரம்ம முகூர்த்த வாஸ்து நேரமான 4.30 மணி அளவில் திருஅண்ணாமலையில் கிரிவலத்தை ஆரம்பித்து அன்று மாலை சூரிய அஸ்தமனத்திற்குள் எட்டு திசைகளிலும் உள்ள அஷ்ட திக்கு லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்து அடுத்த நாள் காலை பிரம்ம வாஸ்து நேரமான 4.30 மணி அளவில் உத்தமர்சீலி திருத்தலத்தில் ஈசனை வணங்கி அடிப் பிரதட்சணம் செய்து வழிபட்டு பனை மரத்தை வழிபடுவதால் உத்தம குழந்தைகளை வரமாகப் பெறுவார்கள். கர்ப்பப்பை கோளாறுகள் நீங்கும். கடுமையான நோய்களுக்கு நிவாரணம் கிட்டும்.

இவ்வாறு மார்கண்டேய மகரிஷி அருளிய வழிபாட்டை முறையாக நிறைவேற்றி அதன் பலனாக அங்கதனை வாரிசாகப் பெற்றான் வாலி. அங்கதன் என்றால் தோள் பலம் உடையவன் என்றும், அங்கம் தன், அதாவது தன்னை ஒத்தவன் என்றும் பொருள் படும். எனவே வாலியின் தோள் பலத்துடன் தன் தாய் தாரையைப் போல் எட்டு திசைகளிலிருந்து வரும் எண்ணங்களின் இரகசியங்களைக் கிரகிக்கும் ஆற்றலையும் கைவரப் பெற்றான் அங்கதன்.

அவனுடைய இந்த அற்புத தெய்வீக சக்திக்கு உறுதுணையாக நின்றதே வாலி நிறைவேற்றிய திருஅண்ணாமலையில் விளங்கும் எட்டு லிங்கங்களின் வழிபாடும், சுயம்பு விருட்சமான உத்தமர்சீலி பனை மரத்தை வணங்கி தாரா தேவி இயற்றிய வழிபாடும் என்பதே உங்களுக்குச் சொல்லாமலே விளங்கும். இத்தகைய அற்புத தெய்வீக ஆற்றல்களுக்கு சிகரம் வைத்தாற்போல் அங்கதனிடம் அமைந்த மற்றோர் தெய்வீக அம்சம் ஒன்றும் உண்டு. அதுவே சத்திய சீலம் என்பதாகும். எந்நிலையிலும் சத்தியத்திலிருந்து சற்றும் பிசமாக சத்திய சந்தனாய் விளங்கியதே அங்கதனின் அற்புத குணாதிசயமாகும்.

இந்த அற்புத தெய்வீக குணாதிசயத்தையும் அவன் தன் தந்தை வாலியிடம் இருந்தே பெற்றான்.

பிரம்மனின் சாபம் நீங்கிய திருத்தலம்

இப்பிரபஞ்சத்தில் யார் எங்கு தவறு செய்தாலும் அதற்கு எம்பெருமான்தானே பிராயசித்தம் அளிக்க முடியும். எனவே இத்தகைய பொய் கூறிய தவறுக்கு பிராயசித்தம் பெறும் பொருட்டு பிரம்ம மூர்த்தி உத்தமர்சீலி தலத்தை அடைந்து பன்னெடுங்காலம் உத்தாமரை சீலம் என்ற சத்திய சக்திகள் செறிந்த தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட தன்னிலையை உணர்ந்தார், தான் உண்மையில் சத்திய சீலனான திருமாளின் திருஉந்தியில் உதித்தவரே என்ற பேருண்மையை உணர்ந்தார் பிரம்ம மூர்த்தி.

தன்னிலையை உணர்ந்து கொண்டதால் பிரம்ம மூர்த்திக்கு அற்புதம் வரம் ஒன்றை அளித்தார் எம்பெருமான். அது என்ன?

இறைவனிடமே பொய் கூறியதால் பிரம்ம மூர்த்திக்கு கோவில் கிடையாது என்ற சாபத்தைப் பெற்றிருந்தார் அல்லவா பிரம்ம மூர்த்தி. அவர் அதற்காக பிராயசித்தங்களை நிறைவேற்றி தன்னிலையைத் தான் அடைந்து இறைவனின் அன்புக்கு பாத்திரமான போது பிரம்ம மூர்த்தியானவர் சிவத்தலங்களில் உள்ள அனைத்து கோமுக நீர்த்தாரைகளில் அமர்ந்து அருள்புரியும் வரத்தை அளித்து அந்த வரத்தை விருத்தி செய்யும் முகமாக அவருக்கு சதுராங்க சக்தி என்ற அற்புத சக்தி ஒன்றையும் அளித்தான் ஈசன்.

இதுவே சிவத் தலங்களில் கோமுகம் என்னும் அபிஷேக நீர்த்தாரை வழியும் தீர்த்த வழியின் மேற்பாகத்தில் பிரம்ம மூர்த்தி உறைவதற்கான ஆன்மீக காரணமாகும். சிவபெருமான் அளித்த சதுராங்க சக்தி என்பவை நான்கு பிரிவுகளாக பிரிந்து பிரம்ம மூர்த்தியின் நான்கு தலைகளிலும் நிலவி நின்றன. சிவத்தலங்கள் அனைத்திலும் அபிஷேகம் நிறைவேற்றும்போது அந்த அபிஷேகத் தீர்த்தம் கோமுகம் வழியாக வெளியேறும்போது பிரம்ம மூர்த்தியின் நான்கு தலைகளில் நிலவும் இந்த சதுராங்க சக்திகள் தீர்த்த நீரை அடைந்து சிவ பிரம்ம பிரசாதமாக பக்தர்களுக்கு அருளை வாரி வழங்குகின்றன. இதுவே எம்பெருமான் அளித்த பேறாகும்.

சாதனை படைத்த சதுராங்கம்

சிவத்தலங்களில் கோமுகத்திற்கு மேற்புறத்தில் பிரம்ம மூர்த்தியின் திருவுருவம் அமைந்திருப்பதன் ஆன்மீக இரகசியம் இதுவே ஆகும். சில சிவத்தலங்களில் பிரம்ம மூர்த்தியின் சிலா ரூபங்கள் நம்முடைய கண்களுக்குத் தெரியாமலும் இருக்கலாம். அத்தகைய தலங்களிலும் பிரம்ம மூர்த்தியின் சதுராங்க சக்திகள் நிச்சயமாக செறிந்து பொலியும் என்பதில் எவ்வித ஐயமும் வேண்டாம்.

கோமுகங்களில் பொலியும் சதுராங்க சக்திகளின் மகிமையைப் பற்றிய ஒரு உண்மை நிகழ்ச்சியை ஆன்மீக அன்பர்களுக்கு விளக்குகிறோம்:

நமது குருமங்கள கந்தர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் திருச்சி சென்னை போன்ற பல இடங்களிலும் தம்முடைய அடியார்கள் மூலமாக கோவில்களை நீர் விட்டு அலம்பும் உழவாரத் திருப்பணிகளை பல ஆண்டுகளாக நிறைவேற்றி வந்துள்ளார்கள்.
ஒரு முறை கோடை விடுமுறை நாட்களில் 1995ம் வருடம் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் உழவாரத் திருப்பணியை மேற்கொண்டிருந்தார் ஸ்ரீவெங்கடராம சுவாமிகள். மூலத் தானங்களில், சன்னதிகளில் இருக்கும் எண்ணெய் கசடுகளையும், மற்ற அழுக்குகளையும் நீக்குவதற்காக சோப்புப் பவுடர்களைத் தெளித்து செங்கற்களைக் கொண்டு தேய்த்து அந்த விடாப்பிடியான எண்ணெய்க் கசடுகளை நீக்குவது வழக்கம்.

வயலூர் முருகன் கோவிலில் மூலத்தானத்தை அதாவது முருகப் பெருமானின் திருச்சன்னதியை இவ்வாறு நீர் ஊற்றி சோப்புப் போட்டு சுத்தம் செய்து கொண்டிருந்தபோது எண்ணெய்க் கசடு, சோப்பு நீர், செங்கற்பொடி, தேங்காய் நார் போன்ற இதர அழுக்குகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கோமுகம் வழியாக வெளியே வழியத் தொடங்கின.

எப்போதும் எந்த வித ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாது மிகவும் அமைதியாக உழவாரத் திருப்பணியை ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் நிறைவேற்றி வந்ததால் அக்கோவிலில் உழவாரத் திருப்பணி நடக்கிறது என்ற விவரம் பொது மக்களுக்குத் தெரியவில்லை.

எனவே கோமுகம் வழியாக தீர்த்தம் பெருகி வருவதைப் பார்த்த மக்கள் பலரும் அது முருகப் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகம் என்று நினைத்து அந்த கோமுக நீரை முருகப் பெருமானின் அபிஷேகத் தீர்த்த பிரசாதமாக ஏற்று கை கையாக எடுத்து பருக ஆரம்பித்து விட்டனர். தாங்கள் அருந்தியதோடு மட்டுமல்லாமல் தங்களுடைன் வந்திருந்த மற்ற நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து அந்த தீர்த்த பிரசாதத்தை அளித்து மகிழ்ந்தனர்.

இதைக் கண்ட நம் அடியார்களுக்கு ஒரு புறம் ஆச்சரியம், மறு புறம் பயம். அழுக்கு நீரை அருந்தி அதனால் அவர்களுக்கு ஏதாவது வயிற்று உபாதை அதற்கு என்ன செய்வது என்பதே அடியார்களின் பயத்திற்குக் காரணம். உழவாரப் பணியைப் பற்றி அறிந்த அடியார்களைப் பொறுத்தவரை கோமுகம் வழியாக வந்தது சோப்பு நீர், எண்ணெய்க் கசடு, அசுத்தமான நீர். ஆனால், உழவாரத்தைப் பற்றி அறியாத அன்பர்களுக்கு அது முருகப் பிரசாதம். எனவேஎன்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த அடியார்கள் எவருக்கும் இதுபற்றி ஏதும் கூறாது தங்கள் பணியைத் தொடர ஆரம்பித்தனர்.

முருகப் பெருமானா முருகப் பெருமாளா?

உழவாரத் திருப்பணி நிறைவேறிய பின்னர் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம் இந்நிகழ்ச்சி பற்றி கூறியபோது அவர் சிரித்துக் கொண்டே, “நீங்கள் எத்தனையோ பேர் அடியேனுடன் திருப்பணி செய்தீர்கள். ஆனால், ஒரு சிலரே முருகப் பெருமாளின் பிரசாதத்தைப் பெறும் பாக்யத்தைப் பெற்றார்கள்,” என்றார்.

இப்போது சொல்லுங்கள் இந்த லீலையைப் புரிந்தவர் முருகப் பெருமானா இல்லை முருகப் பெருமாளா ? ஏதோ புரிந்தது போல் இருக்கிறதா, புரியாதது போலும் இருக்கிறதா ?

எது எப்படி இருந்தாலும் இது வாத்யாரின் (ஸ்ரீவெங்கடராம சுவாமிகள்) லீலை என்பது மட்டும் சந்தேகம் இல்லாமல் புரிகிறது அல்லவா ? அது போதும் இப்போதைக்கு.
இவ்வாறு தன்னிலையைத் தான் உணர்ந்து பிரம்ம மூர்த்தி பெற்ற அனுகிரகத்தைக் கண்டோம். சிவன் என்றால் சக்தி இல்லாமலா. பிரம்மனின் சக்தியான சரஸ்வதி தேவிக்கு இதில் என்ன பங்கு ?

பிரம்ம மூர்த்தி உத்தாமரை திருக்குளத்தில் நீராடி தவமியற்றி அத்தல ஈசனுக்கு தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட்டார் அல்லவா ? தன்னுடைய பிரானின் தவம் சிறப்பாக நிறைவேற வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் சரஸ்வதி தேவியானவள் உத்தமர்சீலி தலத்தில் தட்சிணா மூர்த்தி எதிரே அமர்ந்தவாறே தொடர்ந்து பஞ்சாட்சரத்தை பக்தியுடன் ஜபித்துக் கொண்டே இருந்தாள். பிரம்ம மூர்த்தியின் தவம் கனியும் காலம் முழுவதும் ஊண் உறக்கம் என்பது சிறிதும் இன்றி சரஸ்வதி தேவி ஜபித்த பஞ்சாட்சர சக்திகளே பிரம்ம மூர்த்தியின் தவம் இனிதே நிறைவேறி அவர் சதுராங்க தேவ சக்திகளைப் பெற பெரிதும் உதவின.

எனவே தட்சிணா மூர்த்தி மகிழ்ந்து சரஸ்வதி தேவிக்கு வசுந்தரா வம்சாதினி என்ற ஒரு அற்புத வீணையை பரிசாக அளித்தார். இறைப் பிரசாதமான அந்த வீணையைப் பெற்றுக் கொண்டவுடன் ஈசன் சரஸ்வதிக்கு ஒரு இறைப் பொறுப்பையும் அளித்தார்.
சிவ பஞ்சாட்சரத்தையே ஜபித்து தன்னுடைய தவத்திற்கு உறுதுணையாக சரஸ்வதி தேவி இருந்ததால் இந்த பிரபஞ்சத்தில் “உ” என்னும் சப்தத்தை ஆதியாக உடையாக எழுத்துக்களை எழுப்பும் பணியை சரஸ்வதிக்கு அளித்தார் ஈசன்.

uthamarseeli kailasanathar temple bhairava

தேவி மகிழ்ந்து வீணையை மீட்டினாள். அப்போது பிறந்ததே ”உத்தமர்” என்ற ஐந்து உத்தம எழுத்துக்கள், சிவ பஞ்சாட்சர அட்சரங்கள்.

எனவே தட்சிணா மூர்த்தியின் சிவப் பிரசாதமான வசுந்தரா வம்சாதினி வீணையில் தோன்றிய முதல் வார்த்தையே ”உத்தமர்” என்பதாகும். அந்த உத்தம ஐந்து எழுத்துக்கள் தோன்றிய திருத்தலமே உத்தமர்சீலி சிவத்தலமாகும்.

இதையே அகத்திய கிரந்தங்கள்,

ஐந்துடன் ஐந்திணைய
ஐந்தையோதி ஐந்தவள்
ஐங்கரன் அருகமர்ந்தாள்

என்ற அற்புத நாடிச் சுடர்களாய் அருளியுள்ளன. சரஸ்வதியின் திருநாமமோ வம்சீதரி என்பதாகும்.

இப்போது இந்த நாடியை நாடிப் பாருங்கள். சிவ சக்தியான வம்சாதினி என்னும் ஐந்தெழுத்துடன் சக்தி அம்சமான வசுந்தரா சக்திகள் இணைய, உத்தமர் என்ற ஐந்து எழுத்துக்களை ஓதி, வம்சீதரி என்ற ஐந்தெழுத்துகளை உடையவள் ஆனந்த கணபதி என்ற கணபதி மூர்த்தியின் அருகே அமர்ந்தாள் என்பது இந்த அகத்திய நாடியின் ஒரு பொருளாகும்.

ஐந்தெழுத்தின் அருட் கடாட்சம்

சரஸ்வதி என்பது ஒரு பதவி. வம்சீதரி என்பது அந்த பதவியை அலங்கரிக்கும் தேவியின் திருநாமம். குருமகா சன்னிதானம் என்பது ஒரு பதவி. ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் என்பது அந்தப் பதவியை அலங்கரிக்கும் உத்தமரின் திருநாமம். ஐந்துடன் ஐந்திணைய என்றால் சரஸ்வதி என்ற பதவியுடன் வம்சீதரி என்ற திருநாமமும் இணைதல் என்ற பொருளும் உண்டே.

இவ்வாறு மேற்கூறிய அகத்திய நாடியில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட ஆன்மீக ரகசியங்கள் விளங்குவதால் இந்த உத்தம பஞ்சாட்சர துதியை ஓதி அன்பர்கள் அளவற்ற பயன்களைப் பெற்று வாழுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

உத்தமர்சீலி சிவத்தலத்தில் வம்சீதரி சரஸ்வதி எப்போதும் தட்சிணா மூர்த்தி எதிரே அமர்ந்து வீணை மீட்டும் வரத்தைப் பெற்றுள்ளமையால் படிப்பில், உயர் கல்வியில் ஞானத்தில் உன்னத நிலையை அடைய விரும்புபவர்கள் தட்சிணா மூர்த்திக்கும் ஆனந்த கணபதியின் அருகே அமர்ந்து அருள்பாலிக்கும் சரஸ்வதிக்கும் குறுக்கே செல்லாமல் ஆனந்த கணபதி சன்னதியுடன் அடிப் பிரதட்சிணமாக ஒன்பது முறை ஆலயத்தை வலம் வந்து பின்னர் தட்சிணா மூர்த்தியை வணங்கி வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபடுதலால் சிறப்பான பலன்களைப் பெறலாம்.

நவமி திதிகளில் இத்தகைய வழிபாடுகளை இயற்றி வந்தால் திருமணத் தடங்கல்கள் நீங்கும். பஞ்சமி திதிகளில் இயற்றப்படும் வழிபாடுகளால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும்.

கோவில்களில் நந்திக்கும் சிவனுக்கும் குறுக்கேயும், தம்பதிகளின் குறுக்கேயும், உத்தம நண்பர்களின் குறுக்கேயும், குரு சீடர்களின் குறுக்கேயும் செல்லக் கூடாது என்பது நியதி. உத்தமர்சீலி சிவத்தலத்தில் சரஸ்வதி தேவி தட்சிணா மூர்த்திக்கு எதிரே அமர்ந்து சதா சர்வ காலமும் வீணையை மீட்டிக் கொண்டிருப்பதால் குறைந்தது ஒன்பது முறை பிரதட்சிணமாக ஆனந்த கணபதி சன்னதியைக் கடந்து ஆலயத்தை வலம் வந்த பின்னரே தட்சிணா மூர்த்தியை வணங்க வேண்டும் என்பது இத்தல நியதியாகும்.

முந்தைய யுகங்களில் தட்சிணா மூர்த்தி சன்னதிக்கு எதிரே ஆனந்த கணபதி சன்னதியும் அதன் கோபுர விதானத்தில் சரஸ்வதி தேவியின் பிரதிஷ்டையும் அமைந்திருந்தது. அதனால் சரஸ்வதி தட்சிணா மூர்த்திகளின் குறுக்கே செல்ல வேண்டிய நிலை ஏற்படாமல் இருந்தது.

தற்போது பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆசிரியர்களுக்கு பட்டப் பெயர் வைத்து கேலி செய்யும் வழக்கம் நிலவி வருகிறது. இது மிகவும் தவறான வழக்கமாகும். இதனால் விளையும் துன்பங்கள் ஏராளம்.

பட்டப் பெயர் படைக்காதீர்

அதே போல எவரையுமே பட்டப் பெயர் வைத்து அழைப்பது கொடிய தோஷங்களை விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். உதாரணமாக, வாசுதேவன் என்ற இனிய நாமத்தை கேலி செய்கிறோம் என்ற எண்ணத்தில் ”வாத்து” என்று பட்டப் பெயர் சூட்டி அழைத்தால் ஒவ்வொரு முறை பட்டப் பெயர் சொல்லி அழைக்கும்போதும் இறை நாமத்தைக் கேலி செய்த குற்றமும் வாத்து என்று இனத்தை கேலி செய்த குற்றமும் வந்து சேரும் என்பதை நினைவில் கொள்ளவும்.

இதனால் வாயில்லா ஜீவன் என்று சொல்லக் கூடிய பிறவிகளும் வாயிருந்தும் பேச முடியாத ஊமைப் பிறவிகளும் அமையும் என்று சித்தர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். எனவே இவ்விஷயத்தை இறை அடியார்கள் கவனித்து செயல்படவும்.

இவ்வாறு அறிந்தோ அறியாமலோ பிறருக்கு பட்டப் பெயர் வைத்து அழைத்தவர்கள் தங்கள் தவறை உணர்ந்து வருந்தி இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டு தட்சிணா மூர்த்தியையும் ஆனந்த கணபதி மூர்த்தியையும் ஒன்பது முறை அடிப் பிரதட்சணம் வந்து வணங்கி தக்க பிராய சித்தங்களை பெற்று வாழுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

சரஸ்வதி தேவி, தட்சிணா மூர்த்தி, ஆஞ்சநேயர் போன்ற பல இறை மூர்த்திகளும் கையில் வீணையுடன் திகழ்வதைப் பார்க்கிறோம். இது வெறும் அழகிற்காக அந்த இறை மூர்த்திகள் கையில் வைத்திருப்பதாக பொருள் கொள்ளக் கூடாது. இறை மூர்த்திகள் அனைவருமே ஒரு விநாடி கூட ஓய்வு என்பதில்லாமல் இரவு பகல் என எந்நேரத்திலும் தங்கள் வீணையை மீட்டிக் கொண்டே இருக்கிறார்கள் என்பதே இறை மூர்த்திகள் வீணையை ஏந்தி இருப்பதன் தெய்வீக விளக்கமும், இரகசியமும் ஆகும்.

ஏற்கனவே கூறியது போல் உத்தமர் சீலி தலத்தில் உறையும் சரஸ்வதி தேவி “உ” என்ற அட்சரத்தில், ஸ்வரத்தில் ஒலிக்கும் ஒலியை மட்டும் சதா சர்வ காலமும் மீட்டி வருகிறாள். இதை மேலும் சற்று விளக்கினால், சில வருடங்களுக்கு முன்னால் தோன்றியது செல் போன் என்ற வார்த்தை, சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னால் தோன்றிய வார்த்தை போன் என்ற வார்த்தை, அதற்கு முன்னால் தோன்றிய வார்த்தை செய்தி என்பது. இவ்வாறு காலம் செல்லச் செல்ல புதுப் புது வார்த்தைகள் தோன்றிக் கொண்டே இருக்கின்றன.

மேலும் நாம் வாழும் பூமியைப் போல கோடிக் கணக்கான பூலோகங்கள் உண்டு. அந்த லோகங்களிலும் புதுப் புது வார்த்தைகள் ஒவ்வொரு விநாடியும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. எனவே இவ்வாரு ஒருவர் ஒரு வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்றால் அதற்கு உரித்தான சரஸ்வதி தேவியின் அனுகிரகம் இருந்தால்தான் அந்த வார்த்தையைச் சொல்ல முடியும்.

uthamarseeli shivan temple nandi

வீணை கானத்தில் பொலியும் வேத கானம்

உதாரணமாக, உண்மை என்ற வார்த்தையை சனி கிரகத்தில் உள்ள ஒரு ஜீவன் சொல்ல வேண்டுமானால் அந்த நேரத்தில் உத்தமர்சீலி தலத்தில் உள்ள வம்சீதரி சரஸ்வதி தேவி தன் வீணையை மீட்டினால்தான் அந்த சனி கிரக ஜீவன் உண்மை என்ற வார்த்தையைச் சொல்ல முடியும். இதைத்தான் நம் பெரியோர்கள் இறைவன் கருணையால்தான் நாம் ஒவ்வொரு விநாடியும் வாழ்கிறோம் என்று கூறினார்கள். இதன் உண்மைப் பொருள் இதுதான். அப்படியானால் இந்தக் கோடி கோடி வார்த்தைகளைக் கூற எத்தனை கோடி கோடி சரஸ்வதிகள் இருக்க வேண்டும். இதுதான் இறைவனின் பிரம்மாண்ட சிருஷ்டி இரகசியம்.

இந்த வீணை மீட்டும் வைபவத்தில் மற்றோர் ஆன்மீக விந்தையும் உண்டு. அதாவது மேற்கூறிய துதியில் ஐந்தையோதி சரஸ்வதி வீணையை மீட்டுகிறாள் என்று கூறும்போது உண்மையில் சரஸ்வதி தேவியானவள் உத்தமர் என்ற வார்த்தையைக் கூற உத்தமர் என்ற ஐந்து அட்சரங்களை மீட்டுவது கிடையாது. சரஸ்வதி மீட்டுவதோ சிவனின் பஞ்சாட்சர எழுத்துக்களைத்தான். அவ்வெழுத்துக்களை உத்தமர் என்ற ஐந்தெழுத்துகளாகவோ, உண்மை என்ற அட்சரங்களாகவோ உயிர் என்ற வார்த்தையாகவோ மாற்றுவது இறைவனின் சக்தியே, தட்சிணா மூர்த்தியின் அருட் கடாட்சமே.

இவ்வாறு தட்சிணா மூர்த்தியின் அருட்கடாட்சத்தைப் பெறுவதற்காகத்தான் சநகாதி முனிவர்களும் சதாசர்வ காலமும் தட்சிணா மூர்த்தியின் கல்லால நிழலில் அமர்ந்துள்ளார்கள். இந்த ஆன்மீக இரகசியத்தை உணர்த்த மனிதப் பிறவி எடுத்து வந்த பெருந்தகையே ஆனாய நாயனார் ஆவார். அவர் சாதித்ததே அஞ்செழுத்தை புல்லாங்குழலில் இசைத்த வித்தை.

அடுத்து ராமர் பட்டாபிஷேகத்தில் முக்கிய பங்கு பெற்ற சீதா தேவியைப் பற்றிய சில ஆன்மீக இரகசியங்களை அறிந்து கொள்வோமா ?

பட்டாபிஷேகம் என்பது ராமருக்குத்தானே ? இதில் சீதையின் பங்கு என்பது ஒரு அலங்காரம் என்றே நினைக்கத் தோன்றும். உண்மையில் ராமருக்கு இணையான பங்கை ஏற்று நிர்வகித்தவளே சீதை என்பதை நாம் உணர்ந்தால்தான் ராமர் பட்டாபிஷேகத்தின் மகத்துவத்தை நாம் முழுமையாக உணர முடியும்.

பட்டாபிஷேக வைபவத்தின்போது நாட்டிலுள்ள கங்கை, காவிரி போன்ற அனைத்து புண்ணிய நதிகளிலிருந்தும் காசி, ராமேஸ்வரம், கும்பகோணம் போன்ற திருத்தலங்களிலிருந்தும், குற்றாலம், நூபுர கங்கை போன்ற நீர்வீழ்ச்சிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தம் வரவழைக்கப்பட்டு ராம பிரானுக்கும் சீதா தேவிக்கும் அத்தீர்த்தங்களால் அபிஷேகம் நிறைவேற்றப்பட்டு அற்புத வாசனைகள் நிறைந்த மலர்களாலும் நறுமணப் பொருட்களாலும் அலங்கரிக்கப்பட்டனர்.

இதன் காரணம் என்ன ? இறைவனுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்படும்போது இறைத் திருமேனி தூய்மை அடைகிறது. அதன் பின்னர் இறைத் திருமேனியை மலர்களால் அலங்கரிக்கும்போது இறை மூர்த்திகளின் சக்தி உலகத்தவருக்கு, இறை அடியார்களுக்கு இறைப் பிரசாதமாக அளிக்கப்படுகின்றது.

ஓங்கி உலகளந்த உத்தமி

இவ்வகையில் ராமச்சந்திர மூர்த்தியையும் சீதா தேவியையும் அபிஷேகித்து அலங்கரித்தபோது இறை சக்திகள் பூர்ணமாகப் பொங்கி பொலிந்தன. அந்த உத்தமர் ராம பிரானின் சக்திகளை உலகத்தவர் பெறும் வண்ணம் மாற்றி அளிக்கக் கூடிய சக்தியைப் பெற்றவர் யார் ? இதில் என்ன சந்தேகம். சீதா பிராட்டியைத் தவிர அண்டசராசரத்தில் ராம பிரானின் சக்திகளைக் கிரகிக்கும் தெய்வீக ஆற்றல் வேறு எவருக்கும் கிடையாது.

இதைத்தான் ”ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி” என்று ஆண்டாள் பாசுரம் பறைசாற்றுகிறது. எதற்காக ஓங்கி அளக்க வேண்டும். சும்மா அளந்தால் போதாதா என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா ?

யார், எப்போது, எதை அளந்தார்கள் ? விஷ்ணு அவதாரமான வாமன மூர்த்தி மகாபலிச் சக்கரவர்த்தியிடன் மூன்றடி மண் கேட்டு யாசித்த புராண வரலாற்றையே ஆண்டாள் இவ்வாறு வர்ணிக்கின்றார். அவ்வாறு பெருமாள் கேட்ட மூன்றடி மண் நிலத்தைத் தர மகாபலிச் சக்கரவர்த்தி ஒத்துக் கொண்டபோது குள்ள வடிவமுடைய வாமன மூர்த்தி விண்ணுக்கும் மண்ணுக்குமாக வளர்ந்து ஓங்கி உயர்ந்து நின்றார்.

அவ்வாறு உயர்ந்து நின்று தன்னுடைய திவ்விய திருவடிகளால் இந்த பூமியை ஒரு அடியாகவும் வானத்தை இரண்டாவது அடியாகவும் அளந்தார். அதனால் என்ன ஏற்பட்டது. இந்த பூமியில் உள்ள அனைத்தும் வானத்தில் உள்ள அனைத்துமே பெருமாளின் திருவடி தீட்சையால் புனிதம் பெற்றன.

பெருமாளுக்கு அப்படி என்ன மகிமை ? பெருமாள் உத்தமர் என்பதே பெருமாள் மூர்த்தியின் மிகப் பெரிய மகிமையாகும். இதைத்தான் ஓங்கி உலகளந்த உத்தமர் என்ற சொற்றொடர்கள் வர்ணிக்கின்றன. எனவே உத்தமர் எதையும் புனிதப் பெறச் செய்யக் கூடியவர் என்பதைத்தான் கோதை நாச்சியார் வலியுறுத்துகின்றார்.
இங்கு மற்றுமோர் அற்புத இரகசியமும் உண்டு. ஓங்கி என்ற வார்த்தை ஓம் என்ற பதத்தில் விளைவது. ஓம் என்பதை மகா ம்ருத்யு மந்திரம் என்று அழைப்பதுண்டு. ம்ருத்யு என்றால் மரணம் என்று பொருள். எனவே மகா ம்ருத்யும் என்றால் மிகப் பெரிய மரண மந்திரம் ஓங்காரம் என்றாகும்.

அதாவது ஓங்காரத்தை ஜபிப்பவன் இறந்து விடுகிறான் என்பது இதன் மேலோட்டமான பொருள். நன்கு ஆழமாக சிந்தித்தால்தான் இதன் உண்மைப் பொருள் விளங்கும். “நான் ஓங்கார மந்திரத்தை கூறுகிறேன்,” என்ற நினைவு இருக்கும்வரை அவன் ஓங்காரத்தை முழுமையாக ஜபிக்க முடியாது. எப்போது ஒருவனுக்கு நான் என்ற நினைவு முற்றிலுமாக மறைந்து விடுகிறதோ அப்போது அங்கு அவன் இல்லை, ஓங்காரம் மட்டுமே இருக்கிறது.

இதுவே உத்தம நிலை. அந்நிலையை அடைந்தவர்களே உத்தமர்கள். இதைத்தான் இரண்டில் ஒன்று இரண்டும் ஒன்று என்று பரிபாஷையில் சித்தர்கள் கூறுகின்றனர்.

நான் என்ற ஒன்றும் ஓம் என்ற ஒன்றும் சேர்ந்து இருக்க முடியாது. ஏதாவது ஒன்றுதான் ஒரு சமயத்தில் இருக்க முடியும். நான் என்ற நினைவு இருந்தால் அங்கு ஓங்கார மந்திரம் இருக்க முடியாது. ஓங்கார மந்திரம் நிலைத்து விட்டால் அந்நிலையில் நான் என்ற நிலை மறைந்து விடும்.

ஆனால், இந்த நான் என்ற நினைவுதான் ஓங்காரமாக ஒலிக்கிறது. ஓங்காரம் நான் என்ற நினைவில்தான் லயப்படுகிறது. இதுவே இரண்டும் ஒன்று என்பதன் உட்பொருள்.
இதையே நம் குரு மங்கள கந்தவர்வா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் எளிமையாக, ”நினைவில் நான் எனும் நீ தோன்றியே நின்றாடுவாய்,” என்று உத்தமரின் உத்தம நிலையை வர்ணிக்கின்றார்.

இவ்வாறு பெருமாள் ஓங்கி உலகளந்தபோது அங்கு சிறிதளவும் நான் இல்லை. ஓம் மட்டுமே இருந்தது. இதுவே ஓங்கி உலகளப்பது. அதனாலேயே உத்தமராக போற்றப்பட்டார். உலகனைத்தும் புனிதம் பெற்றன.

இவ்வாறு ஓங்கி உலகளப்பதற்கு மற்றோர் காரணமும் உண்டு. கடற்கரை ஓரத்தில் உள்ள மணலை அளக்க வேண்டுமானால் ஒரு அணில் சிறிதளவே அள்ள முடியும். உயரமான யானையோ மிகப் பெரிய அளவிலான மணல் குன்றை அளக்க முடியும்.
அது போல இறைவனின் சக்தி எல்லையற்றது. எனவே எந்த அளவிற்கு ஒரு பொருள் உயரமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அது எல்லையற்ற இறைவனின் அருட் சக்தியை கிரகிக்க முடியும். இந்த உலகத்தில் உள்ள மிக உயர்ந்த மலை இமயமலை. எனவே அதுவே எம்பெருமானின் சக்திகளை ஒரு சிறிதளவேனும் ஈர்க்கக் கூடிய நிலையில் இருப்பதால் இறைவனின் வாசமாக அதை நாம் ஏற்று வழிபாடுகளை இயற்றுகிறோம்.

அது போலவே திருஅண்ணாமலை, வெள்ளியங்கிரி என மலைத் தலங்களையே இறைவனின் சக்திகளை கிரகிக்கும் கேந்திரங்களாக கொண்டு நாம் இறை அருளைப் பெற்று வாழ மகான்கள் வழிகாட்டுகின்றனர். இதுவும் ஓங்கி உலகளக்கும் தத்துவ விளக்கமாகும்.

இவ்வாறு பட்டாபிஷேக வைபவத்தில் பொலிந்த ராமபிரானின் அருள் சக்திகளை ஈர்க்கும் தன்மையைப் பெற்றவள் சீதை மட்டுமே என்பதால்தான் சீதாபிராட்டி அந்த இறை சக்திகளை ஈர்ப்பதற்காக மண மலர்களால் சீதையை அலங்கரித்தனர்.

நாம் ஏற்கனவே விவரித்தது போல் மலர்களுக்கு பலவிதமான பண்புகள் உண்டு. கொன்றை மலர் சத்தியத்தை குறிப்பதால் சிவ பெருமான் அதைச் சூடி உள்ளார். அதுபோல ராமர் பட்டாபிஷேகத்தின்போது சீதா பிராட்டியார் மணம் நிறைந்த மல்லிகை மலர்களைச் சூடி இருந்தாள். மல்லிகைக்கு மங்கள சக்திகளை, மாங்கல்ய சக்திகளை, சுமங்கலி சக்திகளை ஈர்த்து விருத்தி செய்யும் அற்புத சக்திகள் உண்டு.

இந்த மங்கள சக்திகள் அனைத்தும் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காகவே மலர் மணத்தில் கமழ்ந்தாள் தேவி. மேலும் சீதா தேவி மங்களம் ஓங்கிய நிலையில் விளங்கினாள் என்பதை, ”விரைசெறி குழலி ஓங்க” என்று ராமாயண சுடர்கள் இயம்புகின்றன. எனவே நாம் ஏற்கனவே விளக்கியதைப் போல அங்கு சீதை இல்லை, சுமங்கல, மங்கள, மாங்கல்ய சக்திகள் மட்டுமே பூரணமாய்ப் பொங்கி பொலிந்தன.

இவ்வாறு ஓங்கி உலகளந்த உத்தமரின் தர்ம பத்தினியும் ஓங்கி நின்றதில் வியப்பென்ன?

அடுத்து ராமர் பட்டாபிஷேகத்தில் பங்கேற்ற அவதார மூர்த்திகள் இலட்சுமணனும், சத்ருக்கனனும். இவர்கள் இருவரும். ராம பிரானுக்கும் சீதா தேவிக்கும் அருகில் நின்ற வண்ணம் அவர்களுக்கு வெண்சாமரம் வீசிக் கொண்டிருந்தார்கள்.

uthamarseeli kailasanathar temple anandavalli

வியனுலகை ஆளும் வெண்சாமரம்

வெண்சாமரம் என்றால் என்ன ? மயில் தோகைகளால் பின்னி அமைக்கப்பட்ட பெரிய விசிறியையே வெண் சாமரம் என்று அழைப்பதுண்டு.

காஞ்சி வரதராஜப் பெருமாள் கோவிலில் உள்ள பெருமாளைத் தினமும் சென்று தரிசித்து அவருடன் தினமும் சாதாரண மனிதர்களிடம் பேசுவதுபோல் பேசக் கூடிய தெய்வீக சக்திகள் பெற்றவரே ராமானுஜர் ஆவார். ராமாநுஜருடைய இந்த இறை பக்தி உலகம் அறிந்த ஒன்று.

அவ்வாறு பெருமாளுடன் உரையாடும்போது எம்பெருமானுக்கு வெண்சாமரம் வீசும் கைங்கர்யத்தையும் அன்புடன் நிறைவேற்றி வந்தார் ராமானுஜர். பெருமாள் கோவிலுக்கு மலர் மாலைகள் கட்டி அளிக்கும் ஒரு தோட்டக் காரன் இருந்தான். பெருமாளிடமும் ராமானுஜரிடமும் மிகவும் அன்பு கொண்டிருந்தான்.

பெருமாளிடம் நேருக்கு நேர் பேசக் கூடியவர் ராமானுஜர் என்று அவரைப் பற்றி அறிந்திருந்ததால் ஒரு நாள் அவரிடம், ”சுவாமி, நானும் நீண்ட நாட்களாக பெருமாளிடம் அன்பு கொண்டு அவருக்கு சேவை செய்து வருகிறேன். அடியேனுக்கு எப்போது அவருடைய பரமபதம் கிடைக்கும் என்று கேட்டுச் சொல்கிறீர்களா ?” என்று மிகவும் வினயத்துடன் கேட்டான்.

ராமானுஜரும், ”இதுபற்றி பெருமாளிடம் இன்று கேட்டு வந்து உன்னிடம் நாளை தெரிவிக்கிறேன்,” என்று சொல்லி விட்டு பெருமாளைத் தரிசிக்க சென்று விட்டார். அந்த தோட்டக்காரனும் தன்னுடைய பணி முடிந்து வீட்டிற்குச் சென்று விட்டான்.
மாலையில் பெருமாளைச் சந்தித்த ராமானுஜர், ”இந்தக் கோவிலில் கைங்கர்யம் செய்யும் தோட்டக்காரன் தனக்கு எப்போது முக்தி கிடைக்கும் என்று தங்களிடம் என்னை கேட்டு வரும்படிக் கூறினான்,” என்று கூறவே, பெருமாளும், ”அப்படியா, முக்திதானே. நாளைக்கே கொடுத்து விட்டால் போகிறது, ” என்றார்.

ராமானுஜருக்கோ ஒரே ஆச்சரியம். ”ஆஹா, பெருமாள்தான் எத்தகைய கருணா மூர்த்தி. முக்தி என்று கேட்ட மறு விநாடியே அதைத் தந்து விட்டாரே. சரி நாளை உடனே அந்த தோட்டக்காரனிடம் சொன்னால் எவ்வளவு சந்தோஷப்படுவான்,” என்று நினைத்துக் கொண்டே இல்லம் திரும்பினார்.

ஆனால், மறுநாள் விடியற்காலையிலேயே அந்த தோட்டக்காரன் இறந்து விட்டதாக செய்தி அறிந்த ராமானுஜர் தான் அந்தத் தோட்டக்காரனிடம் அவன் முக்தி அடையப் போகிறான் என்பதை சொல்லாமல் போய் விட்டோமே என்று முதலில் வருத்தம் அடைந்தாலும் பின்னர் எப்படியோ அவன் முக்தி நிலை அடைந்தது கண்டு ஆனந்தமே அடைந்தார்.

மாலை வழக்கம்போல் வரதராஜ பெருமாளை தரிசனம் செய்வதற்காக சென்ற ராமானுஜருக்கு ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

பெருமாளின் அருகில் அந்த தோட்டக்காரன் நின்று கொண்டு ஆனந்தமாக பெருமாளுக்கு சாமரம் வீசிக் கொண்டு இருந்தான். பேச்சிழந்தார் ராமானுஜர். ஒருவாராக மனதைத் தேற்றிக் கொண்டு, ”சுவாமி, நேற்று உங்களிடம் இந்த தோட்டக்காரனுக்கு முக்தியைப் பற்றி கேட்டபோது அதை உடனே அளித்து விட்டீர்கள். அது போல எனக்கும் எப்போதும் முக்தி கிட்டும் என்பதை அறிந்து கொள்ளலாமா ?” என்று தயங்கி தயங்கி கேட்டார்.

முக்தியைத் தர மறுத்த மூலபிரான்

பெருமாள் ஒரு குறும்பு புன்னகையுடன் ராமானுரைப் பார்த்து, ”முக்தியா, அது பெரிய விஷயம் ஆயிற்றே, ராமானுஜா. அதைக் கொடுப்பதெல்லாம் என் கையில் இல்லையே. இருந்தாலும் திருக்கோஷ்டியூர் நம்பியைப் போய்ப் பார். அவன் மனது வைத்தால்தான் உண்டு,” என்றார்.

நிலைகுலைந்து போனார் ராமானுஜர். பின்னர் அவர் தன் குருவான திருக்கோஷ்டியூர் நம்பியைச் சரணடைந்து பெருமாள் திருவடியைச் சேர்ந்த வரலாறு நீங்கள் அறிந்ததே.

இவ்வாறு உத்தம நிலைகளை அடைந்த இறையடியார்களே பெருமாளுக்கு வெண்சாமரம் புரியும் கைங்கர்யத்தை ஏற்றி தொண்டாற்றுகின்றார்கள். இந்த கவரி சேவையின் பின்னணியில் பொதிந்துள்ள ஆன்மீக இரகசியம் என்ன ?

கவரிகள், சாமரங்கள் மான் உரோமம், மயில் இறகு போன்றவற்றால் ஆனவையே. மயில் இறகிற்கு வேத சக்திகளை கிரகிக்கும் ஆற்றல் இயற்கையாகவே உண்டு. வேதத்தை சதா சர்வ காலமும் பெருமாள் மூர்த்தி போன்ற தெய்வ மூர்த்திகள் ஓதிக் கொண்டே இருப்பர். அவர்கள் வேத ரூபிகள், மந்திர ஸ்வரூபிகள். தேவதை, தெய்வங்களின் உடலிலிருந்து சதா சர்வ காலமும் வேத அட்சர சக்திகள் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.

தெய்வ மூர்த்திகளின் இந்த வேத சக்திகளை மனிதர்களாலும் விலங்குகள் தாவரங்கள் போன்ற சாதாரண ஜீவன்களாலும் இந்த வேத சக்திகளை ஈர்த்துப் பயன் பெற முடியாது என்பதால் ராமானுஜர் போன்ற மகான்கள் இறை மூர்த்திகளுக்கு சாமரம் கொண்டு வீசும்போது அந்த வெண்சாமரத்தில் உள்ள மயில் இறகுகள் மூலம் அந்த வேத சக்திகளை ஈர்த்து அந்த வேத சக்திகளை தங்களுடைய புண்ணிய சக்தியால் ஜீவன்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு மென்மையாக்கி அளிக்கிறார்கள். இதுவே மகான்களின் அற்புத சேவை.

இது போலவே ஸ்ரீராம பட்டாபிஷேக வைபவத்தின்போது ராமச்சந்திர மூர்த்தியும் சீதா பிராட்டியும் மாணிக்கங்கள் பதித்த சிம்மாசனத்தில் அமர்ந்தபோது பல அற்புத ஜோதி சக்திகள் அவர்கள் சங்கமத்தில் தோன்றின. அவற்றில் ஒன்று ஆனந்த வெண்சாமர ஜோதி என்ற மங்கள, மாங்கல்ய சக்திகளாகும். இது ஒரு வித வேத சக்தியாகும். எம்பெருமான் முக்கண் ஜோதியை ஆதாரமாகக் கொண்டது.

இந்த ஆனந்த வெண்சாமர ஜோதியை உலகத்தவர்க்கெல்லாம் அவரவர் நிலையில் அளித்து அருந்தொண்டாற்றவே லட்சுமண சுவாமியும் சத்ருக்கன்னும் சீதா ராமருக்கு வெண் சாமரம் வீசி இந்த ஆனந்த வெண் சாமர அருட் சக்திகளை உலகத்தவர்க்கு எல்லாம், அனைத்து ஜீவ ராசிகளுக்கும் வாரி வழங்கினர்.

இப்பூவுலகில், ஏன் இந்தப் பிரபஞ்சம் முழுவதிலும் ஆனந்த வெண் சாமர சக்திகளை அளிக்க்க் கூடியவரே உத்தமர்சீலி திருத்தலத்தில் அருள் பாலிக்கும் ஆனந்த வெண்சாமர கணபதி ஆவார். எவ்வாறு இத்தல சரஸ்வதி தேவி சதா சர்வ காலமும் வசுந்தரா வம்சாதினி வீணையை மீட்டி மக்களுக்கு அருட் சக்தியை அளித்து வருகிறாளோ அது போல ஆனந்த வெண்சாமர கணபதி மூர்த்தியும் சதா சர்வ காலமும் ஆனந்த வெண்சாமர மங்கள சக்திகளை உலகத்தவர்க்கு கணபதி பிரசாதமாக, முக்கண்ணனின் அனுகிரகமாக வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்.

இந்த அற்புத வெண்சாமர சக்திகளை யுகங்கள் தோறும் தோன்றும் மகான்கள் தங்களுடைய தபோ பலத்தால் ஈர்த்து அந்தந்த காலத்தில் தோன்றும் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்கிறார்கள்.

அடியவரின் அருட்கொடை

இவ்வகையில் சமீப காலத்தில் வெண்சாமர சக்திகளை ஈர்த்து மக்களுக்கு அருட்கொடையாக வழங்கிய பெருமானே திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் ஆவார். பல திருத்தலங்களுக்கும் பாத யாத்திரை சென்ற சம்பந்தர் இத்தலத்திலும் எழுந்தருளி இறைவனைத் துதித்து ஆனந்த வெண்சாமரப் பதிகத்தைப் பாடினார். பிள்ளையாரின் அவதாரமாகத் தோன்றிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் வெண்சாமர கணபதியை ஏத்தியது பொருத்தம்தானே.

கணபதி மூர்த்திக்கு உரிய சதுர்த்தசி திதியும் மங்கள, மாங்கல்ய சக்திகள் விருத்தியாகும் பூராட நட்சத்திரமும் இணைந்த ஒரு முகூர்த்த நாளில் திருஞான சம்பந்த மூர்த்தி இத்தலத்தில் ஆனந்த வெண்சாமர பதிகத்தை ஓதினார். இதன் பலனாய் உலக மக்களுக்கெல்லாம் ஆனந்த வெண்சாமர சக்திகள் சிவ பிரசாதமாகப் பொலிந்தன என சொல்லவும் வேண்டுமோ ?

இந்த ஆனந்த வெண்சாமர பதிகத்தைப் பாடி எந்த திருத்தலத்தில் வேள்வியை நிகழ்த்தினாலும் அங்கு ஆனந்த வெண்சாமர ஜோதி தோன்றும் என்பது திருஞான சம்பந்த மூர்த்தியின் அருளாணை. அந்த ஜோதி ஒருவரை நேரே திருக்கயிலாய மலைக்கு இட்டுச் செல்லும் தெய்வீக அருள் சக்திகளை உடையது.

ஆம் இதுவே ஆனந்த வெண்சாமர சக்திகளின் மகத்துவம். மனிதர்கள், விலங்குகள், புழு, பூச்சிகள் என எந்த உயிர் இந்த ஆனந்த வெண்சாமர ஜோதிக்குள் பிரவேசித்தாலும் அது நேரிடையாக அடுத்து விநாடி எம்பெருமானின் திருக்கையலாயத்தை அடைந்து விடும். என்ன அற்புத தெய்வீக லீலை. கற்பனைக்கு எட்டாத முக்கண் சேவை.

எனவே திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரின் திருமணம் ஆச்சாள்புரத்தில் நிறைவேறியபோது அங்கு நிகழ்த்திய வேள்வியில் தோன்றிய ஆனந்த வெண்சாமர ஜோதியில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனாரும் மணப் பெண்ணான தோத்திர பூர்ணாம்பிகை என்ற தேவியும் ஒன்றாக இணைந்து திருக்கைலாயத்தை அடைந்தனர். தான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்பதாக அந்த தெய்வீக திருமணத்தில் பங்கு பெற்ற அனைத்து இறை பக்தர்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு வெண்சாமர ஜோதி வழியாக திருக்கைலாயத்தை அடைந்தார் ஆனந்த வெண்சாமர கணபதி அவதாரத் தோன்றலான திருஞான சம்பந்த மூர்த்தி பெருமான்.

தோத்தரிப்போம் தோத்திர பூர்ணாம்பிகையை

ஆனந்த வெண்சாமர பதிகத்தை எங்கு பாடினாலும் அங்கு தோன்றும் ஆனந்த வெண்சாமர ஜோதியின் மூலம் திருக்கைலாயத்தை அடைந்து விடலாம் என்றால் தகுதி இல்லவாதவர்களும் ஈசன் உறையும் திருக்கைலாயம் அடைந்து விடுவார்கள் அல்லவா? அதனால் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடிய ஆனந்த வெண்சாமர பதிகம் இறையருளால் தற்போது மறைக்கப்பட்டு விட்டது. ”தோத்திரம் …” என்று தொடங்கும் வெண்சாமர பதிகத்தில் தோத்தி என்பது வெண்சாமர சக்திகளை உருவாக்கும் தெய்வீக சக்திகளை உடைய அக்னியாகும்.

எனவேதான் தோத்தி என்ற மூன்று எழுத்துக்களைப் பெற்று தோத்திரம் என்ற அஞ்செழுத்தால் அலங்கரிக்கப்பட்ட தோத்திரப் பூர்ணாம்பிகையை தன்னுடைய தர்ம பத்தினியாக ஏற்றுக் கொண்டார் சம்பந்தர். எனவே மகான்களின் ஒவ்வொரு விரல் அசைவிலும் ஆயிரமாயிரம் தெய்வீக இரகசியங்கள் இருக்கும் என்று சொல்வது இக்காரணம் பற்றியே.

மகான்களின் கருணை கற்பனைக்கு எட்டாதது என்பதற்கு ஒரு உதாரணத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஸ்ரீஅகத்திய தேவாரத் திரட்டு என்று 32 தேவாரப் பதிகங்களை மக்களின் நல்வாழ்விற்காக அர்ப்பிணித்துள்ளார்கள் உள்ளவா. அதில் திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய திருக்ஷேத்திரக் கோவை பதிகமும் உண்டு. அப்பதிகத்தில் உள்ள சில பாடல்கள் காலப் போக்கில் மறைந்து விட்டன. எனவே யாருக்கும் அந்தப் பாடல்கள் என்ன என்ற விவரம் தெரியாது.

காணாமல் போன அந்த தேவாரப் பாடல் வரிகள் தற்போது கிடைத்தால் இந்த பதிகத்தின் பூரண பலனை அனைவருக்கும் அளிக்கலாமே என்ற எண்ணத்தில் ஸ்ரீவெங்கடராம சுவாமிகளிடம் காணாமல் போன இந்த தேவார வரிகளைப் பெற்றுத் தர முடியுமா என்று கேட்டபோது உடனே அவர் அடியார்களின் வேண்டுகோளுக்கு இசைந்து காணாமல் போன அந்த வரிகளைச் சொல்லவே உடனிருந்த ஒரு அடியார் அந்த வரிகளை எழுதி வைத்துக் கொண்டார்.

இதற்கிடையே கோவில் உழவாரத் திருப்பணிகள் போன்ற தெய்வீக காரியங்கள் நடைபெறவே அந்த தேவாரப் பதிகத்தைப் பற்றிய சிந்தனை அடியார்களுக்கு தோன்றவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து எழுதி வைத்த அந்த தேவாரப் பாடல் வரிகளைத் தேடிய போது அவை கிடைக்கவில்லை. எவ்வளவு தேடியும் அந்த பாடல்களை மீண்டும் பெறவே முடியவில்லை.

மிகவும் வருத்தத்துடன் இந்த விஷயத்தை ஸ்ரீசுவாமிகளிடம் தெரிவித்தபோது அவர் மென்மையான புன்னகையை வெளியிட்டார். அவ்வளவே. இது குரு லீலையா இறை லீலையா ?

இவ்வாறு ஆனந்த வெண்சாமர சக்திகள் பூரிக்கும் தேவாரப் பதிகம் நமக்கு கிடைக்காவிட்டாலும் அதன் தெய்வீக சக்திகளை இறை அடியார்களுக்கு மகான்கள் வாரி வழங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

திருக்கைலாயத்தின் சொர்க்க வாசல்

இங்கு ஒரு சுவையான விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். திருஞானசம்பந்த மூர்த்தி திருநல்லூர் பெருமணத்தில் வேள்வியை நிகழ்த்தி அந்த ஜோதிக்குள் புகுந்து திருக்கைலாயத்தை அடைய அனைவரையும் அழைத்தார். ஆனால், பெரும்பாலானோர் ஜோதிக்குள் நுழைய மறுத்து விட்டனர்.

எல்லோருக்கும் சிவ ஐக்கியத்தை தருவதற்காக நந்தி எம்பெருமானும் எவ்வளவோ தூரம் ஓடி ஓடி அனைவரையும் அழைத்தார். ஆனால் என்ன பயன் ? என்னதான் திருக்கைலாயத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் எத்தனை பேர் அதை வரவேற்பார்கள்.

இறை பக்தி மிகுந்த அடியார்களே சிவ ஜோதியில் ஐக்கியம் அடைய விரும்புவார்கள். அத்தகையோரை விரல் விட்டு எண்ணி விடலாம். பெரும்பாலும் இந்த பூலோகத் துன்பங்களில் உழன்று கொண்டே வாழ்நாளைக் கடத்துவதைத்தான் விரும்புவார்கள்.
அதே சமயத்தில் இங்கு இருக்கும் காலம் வரைக்கும் வாழ்க்கையை சுகமாக அனுபவித்து விட்டு இறுதியில் சிவனுடன் ஐக்கியம் ஆகலாம், திருக்கைலாயம் செல்லலாம் என்றால் அதற்கு அனைவரும் தயாராக இருப்பார்கள்.

இவ்வாறு மனித மனம் ஏற்றுக் கொள்ளக் கூடிய அனுகிரக சக்திகளை வாரி வழங்கிய பெருந்தகையே ஸ்ரீவெங்கடராம சுவாமிகள் ஆவார்கள். இந்த திருப்பணியை அவர்கள் மிகவும் சுவையாகவே நிறைவேற்றினார்கள்.

திருஅண்ணாமலை ஆஸ்ரமத்தில் கிரிவலம் வரும் லட்சக் கணக்கான அடியார்களுக்கு இறை பிரசாதத்தை அளித்து அற்புத சேவையை ஆற்றி வந்தார்கள் அல்லவா ஸ்ரீவெங்கடராம சுவாமிகள். அவ்வாறு அன்னதான கைங்கர்யத்திற்கு முன்னேற்பாடாக அடுப்பு பூஜை என்ற அக்னி பூஜையை நிறைவேற்றும்போது அடியார்கள் அனைவரையும் அழைத்து சமையல் கூடத்தில் திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் அருளிய “மறையுடையாய் ..” என்று தொடங்கும் பதிகத்தையும், “மந்திரமாவது நீறு ..” என்று தொடங்கும் பதிகத்தையும் “வாசி தீரவே …” என்று தொடங்கும் இம்மூன்று பதிகங்களையும் பாடித்தான் அடுப்பு பூஜையை நிறைவேற்றுவார்கள்.

இவ்வாறு இந்த மூன்று பதிகங்களையும் ஓதும்போது ருத்ரானந்தம் என்ற அற்புத ருத்ராக்னி சக்திகள் தோன்றுகின்றன. இந்த ருத்ரானந்த சக்திகளின் தன்மை என்னவென்றால் அவை இறைபிரசாதம் பெறும் அடியார்களுக்கு இங்குள்ள நாட்களில் அனைத்து நலன்களையும் அளித்து இறுதியில் அவர்களை சிவ ஜோதியில் ஐக்யம் பெறச் செய்யும். எனவே மேற்கூறிய திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பாடல்களைப் பாடிய அனைவரும், அந்த பிரசாதத்தை சமைக்கும் பணியில் ஈடுபட்ட அடியார்களும், அந்த ருத்ரானந்த சக்திகள் செறிந்த பிரசாதத்தை அன்னதானமாகப் பெற்ற அடியார்களும், பள்ளிக் குழந்தைகளும், தரையில் சிந்திய அன்னதான பிரசாதத்தைப் பெற்ற நாய், பூனை, புழு, பூச்சி போன்றவைகளுக்கும் நல்வாழ்வும் சிவஜோதி ஐக்யபாக்யமும் கிட்டும் என்றால் எத்தனை கோடி ஜீவன்கள் இந்த அற்புத அன்னதான சேவையால் பலனடைந்திருப்பார்கள் என்று கணக்கிட முடியுமா?

ஓம் ஸ்ரீசர்வ ஸ்ரீசாக்த பிரம்ம ஸ்ரீதேவி பக்தாய ஸ்ரீவெங்கடராம சித்த ஈச மகராஜ் கீ ஜெய்
என்று சுவாமிகளை வாழ்த்துவதைத் தவிர நம்மால் அவருக்கு எதை காணிக்கையாக அளிக்க முடியும்.

அத்தோடு நின்றதா சுவாமிகளின் கருணை ஊற்று. இல்லவே, இல்லை.
சுவாமிகள் முதன் முதலில் அங்காளிக்குப் படைத்த பாமாலையே திருஅங்காள பரமேஸ்வரி அந்தாதி. அதன் முதல் பாடல் வரிகள் இதோ:

முருகனுக்கு மூத்தோனாய் முழு முதற் சுழியாய் வைத்தென்றும்
பெருகி வளர் சோதியா யெங்கும் பரவி அருளென்னும்
அருகுபுல் சாத்திய ஆனந்தகணபதி யருளால் அங்களாம்பிகை அந்தாதி
உருகியாவ ருள்ளத்திலுள்ளே ஊடுருவக் கண்டு

இந்த பாடல் வரிகளைச் சிந்தித்தால் பல அற்புத உண்மைகள் விளங்கும்.
நாம் ஏற்கனவே கூறியுள்ளது போல வெண்சாமர சோதி என்ற சிவ ஜோதியானது எம்பெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய ஜோதி அம்சங்களுள் ஒரு அணு அளவே ஆகும்.

திருஅண்ணாமலை கார்த்திகை தீபத்தின்போது திருஅண்ணாமலை உச்சியில் ஒரே ஒரு தீபம் பிரகாசிப்பதுபோல் மானிட கண்களுக்குத் தென்படும். ஆனால், உண்மையில் அந்த ஒரு ஜோதி சுடரொளியில் கோடி கோடியான ஜோதிப் பரல்கள், பிழம்புகள், அக்னி சக்திகள் உண்டு.

அது போல் நெற்றிக் கண் சுடரில் எழும் ஒரு வகை ஆனந்த வெண்சாமர ஜோதி சிவ ஜோதியின் ஒரு அம்சமே ஆகும். இந்த வெண்சாமர ஜோதி மூத்த சிவ ஜோதி ஆகும். முருகப் பெருமானைத் தோற்றுவித்த சரவண ஜோதிக்கும் முந்தையதே இந்த ஆனந்த வெண் சாமர ஜோதியாகும்.

இதையே நம் குருமங்கள கந்தவர்வா அவர்கள் ”முருகனுக்கு மூத்தோனாய் முழு முதற் சுழியாய் …” என்று அழைக்கிறார். இத்துதியில் போற்றப்படும் ஆனந்த கணபதி எழுந்தருளி உள்ள உத்தமர்சீலி சிவத்தலத்தில் அங்காள பரமேஸ்வரி அந்தாதி பாடல்களைப் பாடி ஆனந்த வெண்சாமர கணபதி மூர்த்தியை வணங்குவதால் கிட்டும் பலன்களை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது.

உத்தமர்சீலியில் அருள்புரியும் அம்பிகை பல யுகங்களில் பல திருநாமத்துடன் அருள்புரிந்து வருகின்றாள். ஸ்ரீவசுந்தரா தேவி என்பது முந்தைய யுகங்களில் நிலவிய பெயர். தற்போது இத்தல அம்பிகையின் திருநாமம் ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகை என்பது.
அம்பிகையின் திருநாமம் என்னவாக இருந்தாலும் அம்பிகையின் கருணை கடாட்சத்தை, உயிர்கள் மேல் அவள் கொண்டுள்ள பேரன்பை வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. ஸ்ரீஆனந்தவல்லி அம்பிகையைப் பற்றி அகத்திய கிரந்தங்கள் சிறப்பித்து வர்ணிக்கின்றன.

உத்தம நிலைகள் உருவகித்து வந்த காலையிலே
நித்தியமாய் நிமலனாய் நிறைவாழ்வு வாழ்ந்திடவே
பத்திக்கு விளைநிலமாய் பாவையவள் பரிதவித்து
எத்திக்கும் ஏங்கி நின்றாள் எம்மீசன் பதம்பாடி

உலகத்து உயிரினங்கள் எல்லாம் நிறை வாழ்வு வாழ்ந்து ஈசனின் பரம பதத்தை அடைய வேண்டும் என்று அன்பால் உருகி ஆனந்தக் கண்ணீர் சொரிந்து அதற்காக அல்லும் பகலும் ஏங்கி இறைவன் திருப்பாதங்களில் தன்னுடைய மனதை இருத்தி வேண்டிக் கொள்கிறாளாம்.

அம்பிகை பிரார்த்தனையில் நாமும் சேர்ந்து கொண்டால் இதை விடச் சிறந்த பேறு எது..!

Uthamarseeli Sivan Temple Address

Original Source: https://kulaluravuthiagi.in/uthamar.htm



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்
  • செப்டம்பர் 24, 2024
குடிமல்லம் ஸ்ரீ பரசுராமேஸ்வரர் திருக்கோவில்