×
Sunday 1st of December 2024

திருக்குறள்: 1 – 620 [புலியூர்க் கேசிகன் உரை]


Featured Image

Thirukkural in Tamil

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறள்

அறத்துப்பால்

பாயிரவியல்

1. கடவுள் வாழ்த்து

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு. 1

அகர ஒலியே எல்லா எழுத்துகளுக்கும் முதல்; அதுபோல், ஆதிபகவன் உலகிலுள்ள உயிர்கள் எல்லாவற்றிற்கும் முதல்வனாக இருக்கின்றான்.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின். 2

தூய அறிவு வடிவமான இறைவனின் நன்மை தரும் திருவடிகளைத் தொழாதவர் என்றால், அவர் கற்றதனால் உண்டான பயன் யாதுமில்லை.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார். 3

அன்பர் நெஞ்சமாகிய மலரின்மேல் சென்று வீற்றிருப்பவனது சிறந்த திருவடிகளைச் சேர்ந்தவர்களே, உலகில் நிலையாக வாழ்வார்கள்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 4

விருப்பும் வெறுப்பும் இல்லாதவனாகிய இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களுக்கு, எவ்விடத்திலும், எக்காலத்திலும் துன்பம் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. 5

இறைவனின் மெய்மையோடு சேர்ந்த புகழையே விரும்பினவரிடத்து, அறியாமை என்னும் இருளைச் சார்ந்த இருவகை வினைகளும் வந்து சேரா.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார். 6

ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனின் பொய்ம்மை இல்லாத ஒழுக்க நெறியில் நின்றவரே நிலையான வாழ்வினர் ஆவர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது. 7

தனக்கு யாதொன்றும் ஒப்புமை இல்லாதவனின் திருவடிகளைச் சேர்ந்தார்க்கு அல்லாமல், பிறர்க்கு, மனக்கவலையை மாற்றுதல் அரிதாகும்.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது. 8

அறக் கடலான அந்தணனின் திருவடிகளைச் சேர்ந்தவர்க்கு அல்லாமல், பிறர்க்கு இன்பமும் பொருளும் ஆகிய கடல்களைக் கடத்தல் இயலாது.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. 9

எண் வகைக் குணங்களில் உருவான இறைவன் திருவடிகளை வணங்காத தலை, கேளாக் காதும் காணாக் கண்ணும் போலப் பயனில்லாதது.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார். 10

இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள்; சேராதவர்களால் கடக்க இயலாது.


2. வான் சிறப்பு

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று. 11

மழை பெய்வதனாலேதான் உலக உயிர்கள் வாழ்கின்றன; ஆதலால், மழையே உயிர்களுக்கு ‘அமிழ்தம்’ என்று உணரத்தகும்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய து¡உம் மழை. 12

உண்பவர்க்குத் தகுந்த பொருள்களை விளை வித்துத் தந்து அவற்றைப் பருகுவார்க்குத் தானும் ஓர் உணவாக (பருகும் நீராக) விளங்குவதும் மழையே ஆகும்.

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி. 13

மழை காலத்தால் பெய்யாது, பொய்க்குமானால், கடலால் சூழப்பட்டுள்ள இப்பரந்த உலகினுள் பசி நிலைபெற்று உயிர்களை வாட்டும்.

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால். 14

‘மழை’ என்னும் வருவாயின் வளம் குறைந்ததனால், பயிர் செய்யும் உழவரும் (விளை பொருள்களை விளைவிக்க) ஏரால் உழுதலைச் செய்யமாட்டார்கள்.

கெடுப்பது¡உம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பது¡உம் எல்லாம் மழை. 15

காலத்தால் பெய்யாது உலகில் வாழும் உயிர்களைக் கெடுப்பதும் மழை; அப்படி கெட்டவற்றைப் பெய்து வாழச் செய்வதும் மழையே ஆகும்.

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது. 16

வானிலிருந்து மழைத்துளி வீழ்ந்தால் அல்லாமல், உலகில், பசும்புல்லின் தலையைக் காண்பதுங் கூட அருமையாகி விடும்.

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின். 17

மேகமானது கடல் நீரை முகந்து சென்று மீண்டும், மழையாகப் பெய்யாவிட்டால் அப்பெரிய கடலும் தன் வளமையில் குறைந்து போகும்.

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. 18

மழையானது முறையாகப் பெய்யாவிட்டால், உலகத்திலே, வானோர்க்காக நடத்தப்படும் திருவிழாக்களும், பூசனைகளும் நடைபெறமாட்டா.

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின். 19

மழை பெய்து உதவாவிட்டால், இந்தப் பரந்த உலகத்திலே பிறருக்காகச் செய்யப்படும் தானமும், தனக்காக மேற்கொள்ளும் தவமும் இரண்டுமே நிலையாமற் போய்விடும்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு. 20

நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.


3. நீத்தார் பெருமை

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 21

ஒழுக்கத்தில் நிலையாக நின்று, பற்றுகளை விட்டவர்களின் பெருமையைப் போற்றிச் சிறப்பித்துச் சொல்வதே நூல்களின் துணிபு.

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 22

பற்றுகளை விட்டவரின் பெருமையைஅளந்து சொல்வதானால் உலகில் இதுவரை இறந்தவர்களைக் கணக்கெடுத்தாற் போன்றதாகும்.

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்
பெருமை பிறங்கிற்று உலகு. 23

இம்மை மறுமை என்னும் இரண்டின் கூறுகளைத் தெரிந்து இவ்வுலகில் அறநெறியை மேற்கொண்டவரின் பெருமையே உயர்ந்ததாகும்.

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 24

அறிவு என்னும் அங்குசத்தால் ஐம்பொறிகளாகிய யானைகளை அடக்கிக் காப்பவன் எவனோ, அவனே மேலான வீட்டுலகிற்கு ஒரு வித்து ஆவான்.

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி. 25

ஐம்பொறி வழியாக எழுகின்ற ஆசைகளை அவித்தவனுடைய வலிமைக்கு அகன்ற வானுலகோர் கோமானாகிய இந்திரனே போதிய சான்று.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 26

செய்வதற்கு அருமையானவற்றைச் செய்பவர் பெரியோர்; சிறியோர், செய்வதற்கு அரியவற்றைச் செய்யமாட்டாதவர் ஆவர்.

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 27

சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படுகின்ற ஐந்தின் வகைகளையும் தெரிந்து நடப்பவனிடமே உலகம் உள்ளது.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 28

நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது. 29

நல்ல குணம் என்கின்ற குன்றின்மேல் ஏறி நின்ற சான்றோரால், சினத்தை ஒரு கணமேனும் பேணிக் காத்தல் அருமையாகும்.

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 30

எவ்வகைப்பட்ட உயிருக்கும் செவ்வையான அருளை மேற்கொண்டு நடப்பதனால், அந்தணர் எனப்படுவோரே அறவோர் ஆவர்.


4. அறன்வலியுறுத்தல்

சிறப்பு ஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. 31

அறமானது சிறப்பைத் தரும்; செல்வத்தையும் தரும்; அதனால் அறத்தை விட உயிருக்கு ஆக்கம் தருவது வேறு யாதுமில்லை.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு. 32

அறநெறியோடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை; அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல். 33

நம்மாலே முடிந்த வகைகளில் எல்லாம், முடியக்கூடிய வழிகளில் எல்லாம், அறச் செயல்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வருதல் வேண்டும்.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற. 34

தன் மனத்திடத்துக் குற்றம் இல்லாதவனாகுதல் என்னும் அவ்வளவே அறம் எனப்படும்; பிற ஆரவாரத் தன்மை கொண்டவை.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். 35

பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் என்னும் நான்கிற்கும் ஒரு சிறிதும் இடம் தராமல் ஒழுகி வருவதே அறம் ஆகும்.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை. 36

‘பின் காலத்தில் பார்ப்போம்’ என்று தள்ளி வைக்காமல், அறத்தை அன்றே செய்க; அது இறக்கும் காலத்திலே அழியாத துணையாகும்.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை. 37

சிவிகையைச் (பல்லக்கு) சுமப்பவனோடு, அதனில் அமர்ந்து செல்பவன் ஆகியவரிடையே, ‘அறத்தின் வழி இதுதான்’ என்று கூற வேண்டாம்.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல். 38

செய்யத் தவறிய நாள் என்றில்லாமல் ஒருவன் அறம் செய்வானானால், அதுவே வாழ்நாள் முடியும் வழியை அடைக்கும் கல்லாகும்.

அறத்தான் வருவதே இன்பம் மற் றெல்லாம்
புறத்த புகழும் இல. 39

அற வாழ்வில் வாழ்வதனால் வருவதே இன்பமாகும்; மற்றைப் பொருளும் இன்பமும் இன்பமாகா; அவற்றால் புகழும் இல்லை.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி. 40

ஒருவன் தன் வாழ்நாளில் செய்ய வேண்டியது எல்லாம் அறமே; அவன் செய்யாமல் காக்க வேண்டியது எல்லாம் பழிச்செயலே.


இல்லறவியல்

5. இல்வாழ்க்கை

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை. 41

இல்லறத்தில் வாழ்பவன் என்பவன், பிற அற இயல்பையுடைய முத்திறத்தார்க்கும் நல்வழியில் நிலையான துணையாவான்.

துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை. 42

துறவியர்க்கும், வறுமைப்பட்டோர்க்கும், தனக்குத் தொடர்புடைய இறந்தவர்கட்கும் இல்வாழ்வினனே துணையாவான்.

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை. 43

தென்புலத்தார், தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தன் குடும்பம் என்னும் ஐந்திடத்தும் பேணுதல் இல்வாழ்பவனுக்குச் சிறப்பாகும்.

பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல். 44

பழிக்குப் பயமும், உள்ளதைப் பிறர்க்குப் பகுத்துக் கொடுத்து உண்ணும் இயல்பும் உடையதானால், வாழ்க்கை வழிக்கு எப்போதுமே குறைவு இல்லை.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது. 45

கணவன் மனைவியருக்குள் அன்புப் பிணைப்பும், அறநெறிப்படியே நிகழ்ந்து வருவதும் உடையதானால், இல்வாழ்க்கையில் பண்பும் பயனும் அந்த வாழ்வே ஆகும்.

அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்? 46

அறநெறிப்படியே இல்வாழ்க்கையை ஒருவன் நடத்தி வருவானானால், அவன் வேறு நெறியிலே போய்ப் பெறுவது என்ன?

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை. 47

அறநெறியின் தன்மையோடு இல்வாழ்க்கை வாழ்பவனே வாழ்வு முயற்சியில் ஈடுபடுவாருள் எல்லாம் தலைசிறந்தவன் ஆவான்.

ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ் க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து. 48

பிறரையும் அறநெறிப்படி நடக்கச் செய்து, தானும் அறம் தவறாத இல்வாழ்க்கை வாழ்வதானது, தவசியரின் நோன்பை விட வலிமையானது ஆகும்.

அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று. 49

அறம் என்று சான்றோரால் சொல்லப்பட்டது யாதெனில், இல்வாழ்க்கையே; அதுவும் பிறன் பழித்துப் பேசுவதில்லையானால் சிறப்பாகும்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும்
தெய்வத்துள் வைக்கப் படும். 50

உலகத்துள் வாழும் நெறிப்படியே வாழ்பவன், வானகத்தே வாழும் தெய்வத்துள் ஒருவனாகக் கருதி நன்கு மதிக்கப்படுவான்.


6. வாழ்க்கைத் துணைநலம்

மனைக்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. 51

இல்வாழ்வுக்குத் தகுந்த சிறந்த பண்பு உடையவளாகித் தன்னை மணந்தவனின் வளமைக்குத் தகுந்தபடி நடப்பவளே, சிறந்த வாழ்க்கைத் துணைவியாவாள்.

மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல். 52

இல்வாழ்வுக்கான சிறப்புகள் அனைத்தும் மனைவியிடம் இல்லையானால், அந்த இல்வாழ்க்கையில் எவ்வளவு சிறப்பிருந்தாலும் அது வாழ்வு ஆகாது.

இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை? 53

இல்லாள் சிறந்தவளானால் இல்லாதது என்பது என்ன? இல்லவள் சிறந்தவள் அல்லாதபோது உள்ளதுதான் என்ன?

பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின். 54

கற்பு என்னும் மனவுறுதி, இல்லாளிடம் உண்டாயிருந்தால், அந்தப் பெண்ணை விடப் பெருமை மிக்கவை உலகில் யாவை உள்? ஒன்றுமில்லை.

தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை. 55

தெய்வம் தொழாதவளாய்த் தன் கொழுநனையே தொழுது துயிலெழுகின்ற கற்புடையவள் ‘பெய்’ என்றால், மழையும் பெய்யும்.

தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண். 56

தன் கற்பு வழுவாமல் காத்துத் தன் கணவனையும் பேணித் தகுதியமைந்த புகழையும் காத்துச் சோர்வு அடையாதவளே பெண்.

சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை. 57

சிறை வைத்துக் காக்கின்ற காவல் என்ன பயனைச் செய்து விடும்? மகளிர், ‘நிறை’ என்னும் பண்பைக் காப்பதே சிறப்பானதாகும்.

பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு. 58

பெண்கள் கணவரைப் போற்றித் தம் கடமைகளையும் செய்வாரானால், பெரும் சிறப்புடைய புத்தேளிர் வாழும் உலகினைப் பெறுவார்கள்.

புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை. 59

புகழைக் காப்பாற்ற விரும்பும் மனைவி இல்லாதவருக்கு, இகழ்ச்சியாகப் பேசுபவர் முன்னே ஏறுபோல் நடக்கும் பெருமித நடையும் இல்லை.

மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு. 60

மனைவியின் சிறந்த பண்பே இல்வாழ்வுக்கு மங்கலம்; நல்ல மக்கட்பேறும் உடையதாய் இருத்தல், அதற்கு நல்ல அணிகலன் ஆகும்.


7. மக்கட்பேறு

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற. 61

பெறுகின்ற செல்வங்களாகிய அவற்றுள், அறிவறிந்த மக்களைப் பெறுவதைக் காட்டிலும் சிறந்ததாக, பிற எதனையும் யாம் கருதுவதில்லை.

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின். 62

பழிச்சொல் ஏற்படாத நற்பண்புடைய மக்களைப் பெற்றிருந்தால், ஒருவனுக்கு ஏழு பிறப்பிலும் தீவினைப்பயன்களாகிய துன்பங்கள் அணுகா.

தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும். 63

‘தம் பொருள்’ என்று போற்றுதற்கு உரியவர் தம் மக்களேயாவர்; மக்களாகிய அவர்தம் பொருள்கள் எல்லாம் அவரவர் வினைப்பயனால் வந்தடையும்.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். 64

தம்முடைய மக்களின் சின்னஞ்சிறு கைகளாலே அளாவப் பெற்றது, மிகவும் எளிமையுடைய கூழேயானாலும், அது பெற்றோருக்கு அமிழ்தினும் இனிமையானதாயிருக்கும்.

மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று அவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. 65

தம் மக்களின் உடம்பைத் தொடுதல் உலகுக்கு இன்பமாகும். அவர்களின் மழலைச் சொற்களைக் கேட்டல் செவிக்கு மிகுந்த இன்பமாகும்.

குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். 66

தம் மக்களின் மழலைப் பேச்சைக் கேட்டு இன்புறாதவர்களே, ‘குழலிசை இனியது’, ‘யாழிசை இனியது’ என்று புகழ்ந்து கூறுவார்கள்.

தந்தை மகற்காற்று நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல். 67

ஒரு தந்தை தன் மகனுக்குச் செய்யும் நல்ல உதவி, அவனைக் கற்றோர் அவையிலே முதன்மை பெற்றவனாக இருக்கச் செய்தலே ஆகும்.

தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது. 68

தம்மைக் காட்டினும், தம் மக்கள் அறிவுடையவராக விளக்கம் பெறுதல், பெற்றோருக்கு மட்டுமல்லாமல், பெரிய உலகிலுள்ள உயிர்களுக்கெல்லாம் இனிமையானது ஆகும்.

ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய். 69

தன் மகனைச் சான்றாளன் என்று பலரும் போற்றுவதைக் கேள்வியுற்ற தாய், அவனைப் பெற்றபொழுதிலும் பெரிதாக மகிழ்வாள்.

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல். 70

மகன், தந்தைக்குச் செய்யும் உதவி ‘இவன் தந்தை இவனை மகனாகப் பெற என்ன நோன்பு செய்தானோ’ என்னும் புகழ்ச் சொல்லே ஆகும்.


8. அன்புடைமை

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும். 71

அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் எதுவும் உண்டோ? அன்புடையாரின் சிறு கண்ணீரே அவர் அன்பினைப் பலர் அறிய வெளிப்படுத்திவிடும்.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு. 72

அன்பில்லாதவர் எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பர்; அன்பு உடையவரோ தம் எலும்பையும் பிறருக்கு உரியதாக்கி மகிழ்வர்.

அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. 73

அருமையான உயிருக்கு உடம்போடு பொருந்திய தொடர்பானது, அன்போடு பொருந்தி வாழும் வாழ்க்கைக்காகவே என்பர் சான்றோர்.

அன்பு ஈனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நண்பு என்னும் நாடாச் சிறப்பு. 74

அன்பானது பிறர்பால் ஆர்வம் உடையவராகும் பண்பைத் தரும். அந்தப் பண்பானது நட்பு என்கின்ற அளவற்ற மேன்மையைத் தரும்.

அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு. 75

இவ்வுலகத்திலே இன்பம் அடைந்தவர் அடையும் சிறப்பு, அவர் அன்புடையவராகப் பொருந்தி வாழ்ந்த வாழ்க்கையின் பயனே என்பர்.

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை. 76

அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர்; ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையாயிருக்கும்.

என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம். 77

எலும்பில்லாத புழுப்பூச்சிகளை வெயில் காய்ந்து வருத்துவது போல, அன்பில்லாதவனை அறமானது காய்ந்து வருந்தச் செய்யும்.

அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று. 78

உள்ளத்திலே அன்பு இல்லாதவருடைய இல்வாழ்க்கையானது, வன்மையான பாலை நிலத்திலே காய்ந்த மரம் தளிர்த்தாற் போல நிலையற்றதாம்.

புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு. 79

உள்ளத்தின் அகத்து உறுப்பாகிய அன்பு இல்லாதவருக்கு, கண்ணுக்குத் தெரியும் உடம்பின் பிற உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்?

அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு. 80

உயிர்நிலை என்பது அன்பின் வழியாக அமைந்ததே; அஃது இல்லாதவருக்கு எலும்பைத் தோலால் போர்த்த உடம்பு மட்டுமேயாகும்.


9. விருந்தோம்பல்

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு. 81

இவ்வுலகில் இருந்து, பொருளைப் பேணி, இல்வாழ்க்கை நடத்துவதெல்லாம் விருந்தினரைப் போற்றி உதவுதலின் பொருட்டே ஆகும்.

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. 82

விருந்தாக வந்தவர் வெளியே சென்றிருக்க, தான் மட்டும் உண்ணுதல், சாவா மருந்தாகிய அமிழ்தமே என்றாலும் விரும்பத் தக்கது அன்று.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று. 83

நாள்தோறும் தன்னை நாடி வரும் விருந்தினரைப் போற்றுகிறவனுடைய இல்வாழ்க்கை துன்பத்தால் பாழ்படுதல் என்றும் இல்லையாகும்.

அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல். 84

முகமலர்ச்சியோடு நன்முறையில் விருந்தினரைப் பேணுகிறவன் வீட்டிலே, உளமலர்ச்சியோடு திருமகள் அகலாது தங்கியிருப்பாள்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம். 85

விருந்தினரைப் போற்றியபின், எஞ்சியதைத் தான் உண்ணுகிறவனுடைய நிலத்தில், விதையும் விதைக்க வேண்டுமோ?

செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்வருந்து வானத் தவர்க்கு. 86

செல்லும் விருந்தினரையும் போற்றி, வரும் விருந்தையும் எதிர்பார்த்திருப்பவன், வானத்துத் தேவர்க்கு நல்ல விருந்தினன் ஆவான்.

இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன். 87

விருந்தோம்பலாகிய வேள்வியின் பயன் இன்ன அளவினது என்று கூறத்தக்கது அன்று; அது விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினது ஆகும்.

பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார். 88

பொருளை வருத்தத்தோடு காத்து, அது போய்விட்டபோது ‘தாம் பற்றில்லாதவர்’ என்பவர்கள், விருந்தைப் பேணி அந்த வேள்வியில் ஈடுபடாதவரே யாவர்!

உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு. 89

பொருள் உடைமையுள்ளும் ‘இல்லாமை’ என்பது, விருந்தோம்பலைப் பேணாத மடமையே; அஃது அறிவற்றவரிடமே உளதாகும்.

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குநழ்யும் விருந்து. 90

அனிச்ச மலர் மோந்தவுடனே வாடிவிடும்; முகம் மாறுபட்டு நோக்கிய உடனே விருந்தினரும் உள்ளம் வாடி விடுவார்கள்.


10. இனியவை கூறல்

இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல். 91

செம்மையான பொருளை அறிந்தவர்களின் வாய்ச் சொற்கள், இனிய சொற்களாய், அன்பு கலந்ததாய், வஞ்சம் இல்லாததாய் இருக்கும்.

அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின். 92

முகமலர்ச்சியோடு இனிதாகச் சொல்லும் இயல்பும் பெற்றவனானால், அது, அவன் மனமகிழ்ச்சியோடு கொடுக்கும் பொருளை விட நல்லதாகும்.

முகத்தான் அமர்ந் துஇனிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம். 93

முகத்தோற்றத்தால் விருப்பத்தோடு இனிமையாகப் பார்த்து, உள்ளத்திலிருந்து வரும் இனிய சொற்களையும் சொல்லும் அதுவே, அறமாகும்.

துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு. 94

எவரிடத்தும் இன்பம் உண்டாகத் தகுந்த இன்சொல்லைப் பேசுபவர்க்கு, துன்பத்தை மிகுதியாக்கும் வறுமையும் இல்லாமற் போகும்.

பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற. 95

பணிவு உடையவனாகவும், இனிதாகச் சொல்பவனாகவும் ஆகுதல், ஒருவனுக்கு அணிகலனாகும்; பிறவெல்லாம் அணிகலன்கள் ஆகா.

அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி இனிய சொலின். 96

நன்மையானவைகளையே விரும்பி, இனிய சொற்களையும், சொல்லி வந்தால், அதனால் பாவங்கள் தேய்ந்து போக, அறம் வளர்ந்து பெருகும்.

நயன் ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல். 97

பிறர்க்கு நல்ல பயனைத் தந்து, நல்ல பண்பிலிருந்து ஒரு சிறிதும் விலகாத சொற்கள், சொல்வானுக்கும், நன்மை தந்து உபகாரம் செய்யும்.

சிறுமையுவு நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும் இன்பம் தரும். 98

சிறுமையான எண்ணங்களில்லாத இனிய சொற்கள், மறுமையிலும் இம்மையிலும் ஒருவனுக்கு இன்பத்தைத் தரும்.

இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல் வழங்கு வது? 99

இனிய சொற்கள் தனக்கு மிகுந்த இன்பத்தைத் தருவதனைக் காண்பவன், வன்சொற்களை வழங்குவது எந்தக் காரணத்தாலோ?

இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக் காய்கவர்ந் தற்று. 100

இனிய சொற்கள் இருக்கின்ற போது ஒருவன் இன்னாத சொற்களைக் கூறுதல், இனிய கனி இருக்கவும், காயைத் தின்பது போன்றதே!


11. செய்ந்நன்றி அறிதல்

செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது. 101

தான் எதுவுமே செய்யாதிருக்கவும், பிறன் தனக்குச் செய்த உதவிக்கு, இவ்வுலகமும் வானுலகமும் ஈடாக முடியாது.

காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது. 102

காலத்தோடு செய்த உதவியானது அளவால் சிறிதே என்றாலும், அதன் பெருமையோ உலகத்தை விடப் பெரியதாகும்.

பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை கடலின் பெரிது. 103

பயனைக் கருதாதவர் செய்த உதவியின் நன்மையினை ஆராய்ந்தால், அதன் நன்மை கடலையும் விட அளவினால் மிகப் பெரியதாகும்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார். 104

உதவியின் பயனைத் தெரிந்தவர்கள், தினையளவே ஒருவன் நன்மை செய்தாலும், அதனைப் பனையளவாக உளங் கொண்டு போற்றுவார்கள்.

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து. 105

உதவியானது அதன் அளவையே எல்லையாக உடையது அன்று; அது, உதவி செய்யப்பட்டவரின் பண்பையே தனக்கு அளவாக உடையதாகும்.

மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு. 106

மனமாசு இல்லாதவரின் நட்பினை ஒரு போதும் மறக்கலாகாது; துன்பக் காலத்தில் உறுதுணையாக உதவியவரின் நட்பையும் விடலாகாது.

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு. 107

தம்முடைய துன்பத்தை ஒழித்தவரின் நட்பினை, ஏழேழ் பிறப்பினும் மறவாது நினைந்து போற்றுவர், நன்றியுடையோர்.

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று. 108

ஒருவர் செய்த நன்மையை மறப்பது நல்ல பண்பு ஆகாது; ஆனால், அவர் செய்த தீமையை அன்றைக்கே மறந்து விடுவது மிகவும் நல்லது.

கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன்று உள்ளக் கெடும். 109

ஒருவர் நம்மைக் கொன்றாற் போன்றதொரு துன்பத்தைச் செய்தாலும், அவர் முன்பு செய்த நன்மை ஒன்றை நினைத்தாலும் அத் துன்பம் கெடும்.

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு. 110

எந்த நன்மையை அழித்தவர்க்கும் தப்புதற்கு வழி உண்டாகும்; ஆயின், ஒருவர் செய்த உதவியை மறந்து அழித்தவனுக்கு உய்வே கிடையாது.


12. நடுவு நிலைமை

தகுதி எனவொன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின். 111

ஒவ்வொரு பகுதிதோறும் முறையோடு பொருந்தி நடைபெறுமானால், ‘தகுதி’ என்று கூறப்படும் நடுவுநிலைமையும் நல்லதே ஆகும்.

செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற் கேமாப்பு உடைத்து. 112

செம்மை உடையவனின் பொருள் வளமையானது இடையிலே அழிந்து போகாமல், அவன் வழியினர்க்கும் உறுதியாக நன்மை தரும்.

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல். 113

நன்மையே தருவது என்றாலும், நடுவுநிலைமை தவறுதலால் வருகின்ற வளத்தை, அப்போதே உள்ளத்திலிருந்து போக்கி விட வேண்டும்.

தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தாற் காணப்ப படும். 114

ஒருவர் தகுதியாளர், மற்றவர் தகுதியற்றவர் என்று உரைப்பது எல்லாம், அவரவரது எஞ்சி நிற்கும் புகழும் பழியும் என்பனவற்றால் காணப்படும்.

கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை சான்றோர்க் கணி. 115

பொருள் கேடும், பொருள் பெருக்கமும் வாழ்வில் இல்லாதன அல்ல; நெஞ்சத்தில் என்றும் நடுவுநிலைமை கோணாதிருப்பதே சான்றோர்க்கு அழகாகும்.

கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ அல்ல செயின். 116

தன் நெஞ்சமானது நடுவுநிலைமையிலிருந்து விலகி, தவறு செய்பவன், ‘யான் இதனால் கெடுவேன்’ என்பதனையும் அறிந்து கொள்வானாக!

கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு. 117

நடுவுநிலைமையோடு நன்மையான செயல்களிலே நிலைத்திருப்பவனின் தாழ்ச்சியையும் கேடு என்று உலகம் ஒரு போதும் கொள்ளாது.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி. 118

தன்னைச் சமனாகச் செய்து கொண்டு, பொருளைச் சீர்தூக்கிக் காட்டும் துலாக்கோல் போல அமைந்து, ஒரு பக்கம் சாயாதிருத்தல் சான்றோர்க்கு அழகாகும்.

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின். 119

உள்ளத்திலே கோணுதலற்ற பண்பை முடிவாகப் பெற்றிருந்தால், சொற்களில் கோணுதல் இல்லாதிருத்தலும் செப்பமாக உணரப்படும்.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின். 120

பிறர் பொருளையும் தமதேபோலக் கருதிக் கொண்டு ஒழுகுதல், வாணிகத்தைச் செய்வார்க்குரிய நல்ல வாணிக மரபாகும்.


13. அடக்கம் உடைமை

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும். 121

அடக்கமானது அதனை உடையவனை அமரருள் சேர்த்து வைக்கும்; அடங்காமையோ பேரிருள் ஆகிய நரகிற் சேர்த்துவிடும்.

காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு. 122

அடக்கத்தைச் செல்வமாகப் பேணிக் காத்து வருக; உயிருக்கு ஆக்கந் தருவது அதனினும் மேம்பட்ட செல்வம் பிற யாதுமில்லை.

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின். 123

அறிய வேண்டுவன அறிந்து நல்வழியிலே அடக்கத்தோடு நடக்கும் பண்பைப் பெற்றால், அதன் செறிவை அறிந்து மேன்மையும் உண்டாகும்.

நிலையின் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது. 124

தன் நிலையிலிருந்து திரிந்து போகாமல் அடங்கி இருப்பவனின் தோற்றமானது, மலையைக் காட்டிலும் மிகப் பெரிதான உயர்வு உள்ளதாகும்.

எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து. 125

பணிவாக நடத்தல் என்பது எல்லார்க்கும் நன்மையானதாகும். அவருள்ளும் செல்வர்க்கு அதுவும் ஒரு செல்வத்தைப் போன்ற சிறப்பினதே யாகும்.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து. 126

ஆமையைப் போல, ஐம்பொறிகளையும் இந்த ஒரு பிறப்பிலே அடக்கிக் கொள்ளுதலில் வல்லவனானால், அதனால் எழுமையும் பாதுகாப்பு உண்டு.

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு. 127

எவற்றைக் காத்தவராயினும் தன் நாவைத் தவறாமல் காக்க வேண்டும்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்பம் அடைவர்.

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும். 128

தீய சொற்களாலே வந்தடைந்த பொருளாகிய நன்மை ஒன்றாயினும் ஒருவனிடம் இருந்தாலும், அதனால் எல்லா நன்மையும் இல்லாமற் போய்விடும்.

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு. 129

தீயினாலே சுடப்பட்ட புண் உள்ளே ஆறிவிடும்; ஆனால், நாவினால் சுட்ட வடுவானது உள்ளத்தில் ஒரு போதும் மறையவே மறையாது.

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து. 130

சினத்தைக் காத்து, கல்வி கற்று, அடங்கி வாழ்தலையும் மேற்கொள்பவனின் செவ்வியை, அவன் வழியில் சென்று அறமானது பார்த்திருக்கும்.


14. ஒழுக்கமுடைமை

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும். 131

ஒழுக்கம் எப்போதும் மேன்மையைத் தருவதனால், அந்த ஒழுக்கமே உயிரினும் மேலானதாகச் சான்றோரால் காக்கப்படும்.

பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை. 132

வருந்தியேனும் ஒழுக்கத்தைப் போற்றிக் காக்க வேண்டும்; பலவும் ஆராய்ந்து கைக்கொண்டு தெளிந்தாலும், ஒழுக்கமே உயிருக்குத் துணையாகும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும். 133

ஒழுக்கம் உடையவராக இருப்பதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மை; ஒழுக்கம் கெடுதல் இழிந்த பிறப்பின் தன்மையாகி விடும்.

மறப்பினும் ஓத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங் குன்றக் கெடும். 134

கற்றதை மறந்தாலும் மீண்டும் ஓதிக் கற்றுக் கொள்ளலாம்; ஆனால், வேதமோதுவான் பிறப்பால் வந்த உயர்வு, அவன் ஒழுக்கம் குன்றினால் கெடும்.

அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன்று இல்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு. 135

பொறாமை உடையவனிடத்திலே ஆக்கம் அமையாதது போல, ஒழுக்கம் இல்லாதவன் வாழ்க்கையிலும் உயர்வு இல்லை!

ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம் படுபாக் கறிந்து. 136

மன வலிமை உடையவர், ஒழுக்கம் குன்றுதலால் குற்றம் நேரிடுதலை அறிந்து, ஒழுக்கத்திலிருந்து ஒரு போதுமே, பிறழ மாட்டார்கள்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப் பழி. 137

ஒழுக்கத்தால் எல்லாரும் மேன்மை அடைவார்கள்; ஒழுக்கக் கேட்டால் அடையத் தகாத பழியை அடைவார்கள்.

நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும். 138

நல்ல ஒழுக்கமானது இன்பமான நல்வாழ்வுக்கு வித்தாக இருக்கும்; தீய ஒழுக்கமோ எக்காலத்தும் துன்பத்தையே தரும்.

ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயாற் சொலல். 139

தீய சொற்களைத் தவறியும் தம் வாயினாற் சொல்லும் குற்றம், நல்ல ஒழுக்கம் உடையவர்களுக்கு ஒரு போதும் பொருந்தாத பண்பாகும்.

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார். 140

உலகத்தாரோடு பொருந்தி ஒழுகும் தன்மையை அறியாதவர், பல நூல்களைக் கற்றிருந்தாலும் அறிவில்லாதவரே ஆவர்.


15. பிறனில் விழையாமை

பிறன்பொருளாள் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்து
அறம்பொருள் கண்டார்கண் இல். 141

பிறனுக்கு உரியவளான ஒருத்தியை விரும்பி நடக்கும் அறியாமை, உலகத்து அறமும் பொருளும் ஆராய்ந்தவரிடத்து இருப்பது இல்லை.

அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
நின்றாரின் பேதையார் இல். 142

நல்ல அறநெறியை மறந்து கீழான வழியிலே சென்றவர் எல்லாரினும், பிறன்மனைவியை இச்சித்து, அவன் வீட்டு வாயிலில் நின்றவரைப் போல் அறிவிலிகள் இல்லை.

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்து ஒழுகு வார். 143

சந்தேகப்படாமல் தெளிந்து நம்பியர் வீட்டில் தீமையைச் செய்து நடப்பவர் செத்தவரைக் காட்டிலும் வேறுபட்டவர் அல்லர்.

எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல். 144

தினையளவேனும் தம் பிழையை ஆராயாமல் பிறன் இல்லத்தே செல்லுதல், எவ்வளவு சிறப்புடையவர் ஆயினும் என்னவாக முடியும்?

எளிதென இல்லிறப்பான் எய்துமெஞ் ஞான்றும்
விளியாது நிற்கும் பழி. 145

இது செய்வதற்கு எளிது எனக் கருதி பிறன் மனைவிபால் செல்கின்றவன், எக்காலத்தும் மறையாமல் நிலைத்து நிற்கும் பழியை அடைவான்.

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண். 146

பகை, பாவம், அச்சம், பழி என்னும் நான்கு தீமைகளும் பிறன் மனைவியை நாடிச் செல்பவனிடமிருந்து எப்போதும் நீங்காதனவாம்.

அறனியலான் இல்வாழ்வான் என்பான் பிறனியலாள்
பெண்மை நயவா தவன். 147

அறத்தின் இயல்போடு பொருந்தி இல்வாழ்விலே வாழ்பவன் என்பவன், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதவனே ஆவான்.

பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு. 148

பிறன் மனைவியை இச்சித்துப் பார்க்காத பேராண்மை, சான்றோர்க்கு அறன் மட்டுமன்று; நிரம்பிய ஒழுக்கமும் ஆகும்.

நலக்குரியார் யாரெனின் நாமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார். 149

அச்சந்தரும் கடல் சூழ்ந்த இவ்வுலகிலே ‘நன்மைக்கு உரியவர் யார்?’ என்றால், பிறருக்கு உரியவளின் தோளைத் தழுவாதவரே ஆவர்.

அறன்வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை நயவாமை நன்று. 150

அறத்தையே கருதாமல் ஒருவன் அறமல்லாதனவற்றையே செய்தாலும், பிறனுக்கு உரியவளின் பெண்மையை விரும்பாதிருத்தலே நல்லதாகும்.


16. பொறையுடைமை

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. 151

தன்னை அகழ்பவரையும் தாங்கும் நிலத்தைப் போல், தம்மை இகழ்வாரையும் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும்.

பொறுத்தல் இறப்பினை என்றும் அதனை
மறத்தல் அதனினும் நன்று. 152

அளவு கடந்து செய்த தீங்கையும் எப்போதும் பொறுத்துக் கொள்ள வேண்டும்; அதனை நினையாமலே மறந்து விடுதல் அதனிலும் நன்மையாகும்.

இன்மையுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை. 153

வறுமையுள்ளும் வறுமையாவது விருந்தைப் போற்றாமல் விடுதல்; வலிமையுள்ளும் வலிமையாவது அறிவிலார் செயலைப் பொறுத்தல் ஆகும்.

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி யொழுகப் படும். 154

நிறை உடையனாயிருக்கும் தன்மை தன்னை விட்டு நீங்காமலிருக்க வேண்டுமானால், அவன் பொறையுடைமையைப் போற்றிக் கைக்கொள்ள வேண்டும்.

ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து. 155

தமக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரை ஒரு பொருளாக எவரும் மதியார்; ஆனால், பொறுத்தவர்களைப் பொன்போற் பொதிந்து வைப்பார்கள்.

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ். 156

தீங்கு செய்தவர்களை தண்டித்தவர்களுக்கு அன்று ஒரு நாளைக்கே இன்பம்; ஆனால், பொறுத்தவர்க்கோ உலகம் அழியும் வரை புகழ் உண்டு.

திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்து
அறனல்ல செய்யாமை நன்று. 157

தகுதியில்லாதவற்றைப் பிறர் தனக்குச் செய்தாலும், அதனால் மிகவும் மனம் நொந்து அவருக்குத் தீமை செய்யாதிருத்தல் நல்லது.

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தம்
தகுதியான் வென்று விடல். 158

செருக்கு மிகுதியால் தீமை செய்தவர்களை தாம், தம்முடைய பொறுமை என்னும் தகுதியினால் வென்று விட வேண்டும்.

துறந்தாரின் தூய்மை உடையர் இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர். 159

எல்லை மீறி நடப்பவரின் வாயிற் பிறக்கும் கொடிய சொற்களைப் பொறுத்துக் கொள்பவர்கள், துறவியர் போலத் தூய்மையாளர் ஆவர்.

உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். 160

உணவு உண்ணாமல் நோன்பு கொள்பவர், பிறர் சொல்லும் கொடுஞ்சொற்களைப் பொறுப்பவர்க்கு அடுத்த நிலையிலே தான் பெரியவர் ஆவர்.


17. அழுக்காறாமை

ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்து
அழுக்காறு இலாத இயல்பு. 161

தன் நெஞ்சில் பொறாமை எண்ணம் இல்லாத தன்மையினையே, ஒருவன் தனக்கு உரிய வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ வேண்டும்.

விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின். 162

ஒருவன் எவரிடத்திலும் எப்போதும் பொறாமை இல்லாமல் இருக்கின்ற தன்மையைப் பெறுவானாயின், மேலான பேறுகளில் அதற்கு இணையாகச் சிறந்தது எதுவும் இல்லை.

அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான். 163

பிறனுடைய ஆக்கத்தைக் கண்டதும், அதனைப் பாராட்டாமல் பொறாமைப்படுகிறவன், தனக்கு அறனும் ஆக்கமும் சேர்வதை விரும்பாதவனே ஆவான்.

அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக்கு அறிந்து. 164

‘பொறாமை’ என்னும் தவறான எண்ணத்தால் துன்பமே உண்டாவதை அறிந்து, அறிவாளர், பொறாமையால் தீவினைகளைச் செய்ய மாட்டார்கள்.

அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்கியும் கேடீன் பது. 165

பொறாமை உடையவரைக் கெடுப்பதற்கு எந்தப் பகையும் வேண்டாம்; அதுவே போதும்; பகைவர் கேடு செய்யத் தவறினாலும், அது தவறாமல் கேட்டைத் தந்துவிடும்.

கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும். 166

இன்னொருவன் பிறனுக்குக் கொடுப்பதைப் பார்த்துப் பொறாமைப்படுகிறவனின் குடும்பம், உடுக்க உடையும், உண்ண உணவும் இல்லாமல் கெடும்.

அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும். 167

பொறாமை உடையவனைக் கண்டு திருமகள் வெறுத்து, அவனைத் தன் தமக்கையான மூதேவிக்குக் காட்டி, தான் அவனை விட்டு நீங்கிப் போய்விடுவாள்.

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும். 168

பொறாமை என்னும் ஒப்பற்ற கொடிய ‘பாவி’, ஒருவனது செல்வத்தையும் கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செலுத்திவிடும்.

அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும். 169

பொறாமை கொண்ட நெஞ்சத்தானின் ஆக்கமும், பொறாமையற்ற சிறந்தவனுடைய கேடும், மக்களால் எப்போதும் நினைக்கப்படும்.

அழுக்கற்று அகன்றாரும் இல்லை அஃதுஇல்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரும் இல். 170

உலகில் பொறாமையினால் மேன்மை அடைந்தாரும் இல்லை; பொறாமை இல்லாததால் பொருள் பெருக்கத்தில் குறைந்த வறுமையானவரும் இல்லை.


18. வெஃகாமை

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும். 171

நடுவுநிலைமை இல்லாமல், பிறரது நல்ல பொருளைக் கவர்வதற்கு நினைத்தால், அவன் குடும்பம் கெட்டுப் போவதுடன், அவனுக்கு என்றும் அழியாத குற்றமும் வந்து சேரும்.

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர். 172

நடுவுநிலைமை தவறுவதற்கு வெட்கப்படுகிறவர்கள், கவர்தலால் வந்தடையும் பயனை விரும்பிப் பழியான செயல்களைச் செய்யவோ மாட்டார்கள்.

சிற்றின்பம் வெஃகி அறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர். 173

நிலையான இன்பத்தை விரும்புகிறவர்கள், கவரும் பொருளால் வரும் சிறிய இன்பத்தை விரும்பி, அறன் அல்லாத செயல்களைச் செய்ய மனம் விரும்பமாட்டார்கள்.

இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர். 174

ஐம்புலன்களையும் வென்ற குறை இல்லாத அறிவாளர்கள், ‘யாம் பொருளில்லாதேம்’ என்ற வறுமை நிலையிலும் பிறர் பொருளைக் கவர விரும்பமாட்டார்கள்.

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின். 175

ஒருவன் எவரிடத்திலிருந்தும் பொருளைக் கவர நினைத்துப் பொருந்தாதவற்றைச் செய்தால், நுட்பமாகவும் விரிவானதாகவும் வளர்ந்த அவனது அறிவால் ஏதும் பயனில்லை.

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும். 176

அருளை விரும்பி நல்லொழுக்கத்திலே நிலைத்து நின்றவன், பிறர் பொருளை விரும்பிப் பொல்லாத செயல்களைச் செய்ய நினைத்தால், கெட்டுப் போய்விடுவான்.

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன். 177

பிறர் பொருளைக் கவர்ந்து கொள்வதால் வரும் ஆக்கத்தை எவருமே விரும்ப வேண்டாம்; செயல் அளவில் அதன் பயன் நன்மையாவது என்பது எப்போதும் அரிதாகும்.

அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள். 178

ஒருவனது செல்வ வளம் குறையாமல் இருப்பதற்குரிய வழி யாதென்றால், அவன் பிறன் பொருளைக் கவர விரும்பாதிருத்தலே ஆகும்.

அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்
திறன்அறிந் தாங்கே திரு. 179

அறத்தை அறிந்து, பிறன் பொருளைக் கவர விரும்பாத அறிவுடையாரை, திருமகள், தான் சேர்வதற்குரிய திறன் தெரிந்து சென்று அடைவாள்.

இறலீனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்
வேண்டாமை என்னுஞ் செருக்கு. 180

வரும் துன்பத்தை நினையாமல் பிறர் பொருளைக் கவர விரும்பினால், அது கெடுதலைத் தரும்; அதனை விரும்பாதிருத்தல் என்னும் பெருமையே வெற்றியைத் தரும்.


19. புறங்கூறாமை

அறங்கூறான் அல்ல செயினும் ஒருவன்
புறங்கூறான் என்றல் இனிது. 181

அறத்தைப் பற்றி வாயாலும் சொல்லாதவனாய், ஒருவன் தீய செயல்களையே செய்து வந்தாலும், ‘அவன் பிறனைப் பழித்துப் புறங்கூறாதவன்’ என்பது இனிதாகும்.

அறனழீஇ அல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை. 182

அறத்தையே அழித்துத் தீமைகளைச் செய்து வருவதைக் காட்டிலும், இல்லாதபோது ஒருவனைப் பழித்துப் பேசி, நேரில் பொய்யாகச் சிரிப்பது தீமையாகும்.

புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலின் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும். 183

பிறர் இல்லாத போது அவரைப் புறங்கூறிப் பொய்யாக நடந்து உயிர் வாழ்தலை விட, இறந்து போதல், அறநூல்கள் சொல்லும் ஆக்கத்தைத் தரும்.

கண்ணின்று கண்ணறச் சொல்லினும் சொல்லற்க
முன்னின்று பின்நோக்காச் சொல். 184

நேரில் நின்று இரக்கம் இல்லாமல் கடுமையாகப் பேசினாலும் பேசுக; நேரில் இல்லாத போது பின்விளைவைக் கருதாமல் எந்தப் பழியையும் எடுத்துச் சொல்லக் கூடாது.

அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும். 185

அறநூல்கள் கூறும் உள்ளமுள்ளவனாக ஒருவன் இல்லாத தன்மையினை, அவன் புறங்கூறுகின்றதான அந்த இழி செயலால் தெளிவாக அறியலாகும்.

பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளும்
திறன்தெரிந்து கூறப் படும். 186

பிறனைப் பின்னால் பழித்துப் பேசுபவன், அவனுடைய பழிச் செயல்களுள்ளும் இழிவானதைத் தெரிந்தெடுத்துக் கூறிப் பிறரால் மிகவும் பழிக்கப்படுவான்.

பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர். 187

‘மகிழ்ச்சியாகப் பேசி நட்புக் கொள்ளுதல் நன்மை’ என்று தெளியாதவரே, பிறர் தம்மைவிட்டு விலகுமாறு பழித்துப் பேசி, தமக்குள்ள நண்பரையும் பிரித்து விடுவர்.

துன்னியார் குற்றமும் தூற்றும் மரபினார்
என்னைகொல் ஏதிலார் மாட்டு. 188

நெருங்கிய நட்பினரின் குற்றத்தையும் புறத்தே பேசித் தூற்றும் இயல்பினர், அயலாரிடத்து எப்படி மோசமாக நடந்து கொள்வார்களோ?

அறன்நோக்கி ஆற்றுங்கொல் வையம் புறன்நோக்கிப்
புன்சொல் உரைப்பான் பொறை. 189

ஒருவன் இல்லாததைப் பார்த்து, அவனைப் பற்றி இழிவான சொற்களை உரைப்பவனையும், அறத்தைக் கருதியேதான் உலகம் தாங்கிக் கொண்டிருக்கின்றதோ?

ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு. 190

அயலாரின் குற்றங்களைக் காண்பது போலவே தம் குற்றங்களையும் காண்பாரானால், நிலைபெற்ற உயிர்கட்கு எத்தகைய தீமையும் உண்டாகுமோ?


20. பயனில சொல்லாமை

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். 191

பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவான்.

பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கண் செய்தலிற் றீது. 192

பலபேர் முன்பாகப் பயனற்ற பேச்சைப் பேசுதல், நன்மை அல்லாத செயலை நண்பர்களிடத்தில் செய்வதை விடத் தீமையானது ஆகும்.

நயனிலன் என்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை. 193

பயன் இல்லாத ஒன்றைப் பற்றியே விரிவாகப் பேசும் ஒருவனது பேச்சானது, ‘அவன் நல்ல பண்பில்லாதவன்’ என்பதை உலகுக்கு அறிவிக்கும்.

நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து. 194

பயனோடு சேராத பண்பற்ற சொற்களைப் பலரோடும் சொல்லுதல், எந்த நன்மையும் தராததோடு, உள்ள நன்மையையும் போக்கிவிடும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின். 195

நல்ல பண்பு உடையவர்களும், பயன் இல்லாத சொற்களைச் சொல்வார்களானால், அவர்களுடைய சிறந்த தன்மையும் சிறப்பும் நீங்கிப் போகும்.

பயனில் சொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி யெனல். 196

பயனில்லாத சொற்களையே விரும்பித் தொடர்ந்து பேசுபவனை, ‘மனிதன்’ என்றே சொல்லக் கூடாது; மக்களுள், ‘பதர்’ என்றே கொள்ளல் வேண்டும்.

நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று. 197

நன்மை இல்லாதவற்றைச் சொன்னாலும் சொல்லலாம், பயனில்லாத சொற்களை எப்போதுமே சான்றோர் சொல்லாமலிருத்தல் நல்லது.

அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். 198

அருமையான பயன்களை ஆராய்கின்ற அறிவாளர்கள், பெரும் பயன் இல்லாத சொற்களை ஒருபோதுமே சொல்ல மாட்டார்கள்.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர். 199

மனமயக்கம் நீங்கிய குற்றமற்ற அறிவை உடையவர்கள், பயனில்லாத சொற்களை மறந்தும் கூட ஒரு காலத்திலும் சொல்ல மாட்டார்கள்.

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல். 200

சொன்னால், பயன் தருகின்ற சொற்களையே யாவரும் சொல்லுக; பயனில்லாத சொற்களை ஒருபோதுமே எவரும் சொல்லாதிருக்க வேண்டும்.


21. தீவினை அச்சம்

தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை என்னும் செருக்கு. 201

தீய செயலைச் செய்தலாகிய இறுமாப்பைத் தீவினையாளர்கள் அஞ்சமாட்டார்கள்; ஆனால், மேலோர்கள் தீயவைகளைச் செய்வதற்கு அஞ்சுவார்கள்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும். 202

தீய செயல்கள் பிறர்க்கும் தமக்கும் தீமை விளைவித்தலால், தீயசெயல்களைத் தீயினும் கொடியதாகச் சான்றோர் நினைத்து அஞ்சுவார்கள்.

அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்கும் செய்யா விடல். 203

நமக்குத் தீமையைச் செய்தவருக்கும், தாம் பதிலுக்குத் தீமை செய்யாது மன்னித்து விடுவதை, அறிவினுள் எல்லாம் சிறந்த அறிவு என்பார்கள்.

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழும் சூழ்ந்தவன் கேடு. 204

பிறனுக்குக் கேடு செய்வதைப் பற்றி மறந்தும் நினைக்கக் கூடாது. நினைத்தால், அப்படி நினைத்தவனுக்குக் கேடு செய்ய அறமே நினைக்கும்.

இலன் என்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றும் பெயர்த்து. 205

‘இவன் துணையிலன்’ என்று ஒருவனுக்குத் தீமையைச் செய்யாதிருக்க வேண்டும்; செய்தால், மீண்டும் இவனே யாதும் துணை இல்லாதவன் ஆவான்.

தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான். 206

துன்பம் தருவனவான தீவினைகள் தன்னைத் தொடர்ந்து வருத்துதலை விரும்பாதவன், தீய செயல்களைத் தான் பிறரிடம் ஒரு போதும் செய்யாதிருப்பானாக.

எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென்று அடும். 207

எத்தகைய பகைமை உடையவரும் தப்பிப் பிழைப்பர்; தீவினையாகிய பகையோ, ஒருவனை விடாமல் பின்பற்றிச் சென்று துன்பத்தைச் செய்யும்.

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று. 208

தீய செயல்களைச் செய்தவர் கெடுதல் உறுதி என்பது, நிழல் தன்னை விடாமல் வந்து தன் காலடியிலேயே தங்கி இருத்தலைப் போன்றதாகும்.

தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும்
துன்னற்க தீவினைப் பால். 209

ஒருவன், தன்னைத் தான் விரும்பி வாழ்பவனானால், அவன் எத்தகையதொரு தீய செயல்களிலும் ஒருபோதுமே ஈடுபடாமல் இருப்பானாக!

அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின். 210

ஒருவன், தவறான வழியிலே சென்று தீய செயல்களைச் செய்யாதிருப்பானானால், அவன் கேடற்றவன் ஆவான் என்று தெளிவாக அறியலாம்.


22. ஒப்புரவு அறிதல்

கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட்டு
என் ஆற்றுங் கொல்லோ உலகு. 211

மழைக்கு இவ்வுலகம் என்ன கைம்மாறு செய்யக்கூடும்? உலக நன்மையைக் கருதிச் சான்றோர் செய்யும் கடமைகளும் அவ்வாறே, கைம்மாறு விரும்பாதவைகளே!

தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு
வேளாண்மை செய்தற் பொருட்டு. 212

தன் முயற்சியினாலே ஒருவன் சேர்த்த பொருள் எல்லாம் தக்கவர்களுக்கு உதவி செய்வதற்காகவே தன்னிடம் சேர்ந்தது என்று எண்ணல் வேண்டும்.

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புரவின் நல்ல பிற. 213

ஒப்புரவைப் போலப் பலருக்கும் நன்மையான வேறொரு பண்பை இவ்வுலகத்திலும், தேவர்களின் உலகத்திலும் பெறுவது அருமை ஆகும்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். 214

‘எவ்வுயிரும் ஒத்த தன்மையானது’ என்று அறிந்து உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்கின்றவன்; ஒப்புரவற்ற மற்றவன், செத்தவருள் வைத்துக் கருதப்படுவான்.

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 215

உலகினர் எல்லாரும் விரும்புமாறு, உதவி செய்து வாழும் பேரறிவாளனுடைய செல்வமானது, ஊருணியிலே நீர் நிரம்பினால் போலப் பலருக்கும் பயன்படுவதாகும்.

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். 216

செல்வம் நல்ல பண்பு உடையவனிட்ம சென்று சேர்தலானது, ஊருக்குள்ளே பழமரம் பழுத்திருப்பது போலப் பலருக்கும் பயன் தருவதாகும்.

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். 217

செல்வமானது பெருந்தகுதி உடையவனிடம் சேர்தல், பிணி தீர்க்கும் மருந்தாகிப் பயன் தரத் தவறாத மருந்துமரம் போல எப்போதும் பயன் தருவதாகும்.

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர். 218

ஒப்புரவு செய்தலாகிய கடமையை அறிந்த அறிவாளர்கள், அதற்கேற்ற பொருள்வசதி இல்லாத காலத்திலும் முடிந்தவரை உதவத் தளர மாட்டார்கள்.

நயனுடையான் நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யாது அமைகலா வாறு. 219

ஒப்புரவாகிய நல்ல பண்பை உடையவன் பொருளற்று வறுமை உடையவனாதல், செய்யத் தகுந்த உதவிகளைச் செய்யவியலாது வருந்துதலே ஆகும்.

ஒப்புரவி னால்வரும் கேடெனின் அ·தொருவன்
விற்றுக்கோள் தக்க துடைத்து. 220

ஒப்புரவினாலே கேடு வரும் என்றால், அந்தக் கேடானது தன்னை விற்றாவது ஒருவன் பெறுவதற்குத் தகுந்த சிறப்பை உடையதாகும்.


23. ஈகை

வறியார்க்கொன்று ஈவதே ஈகைமற் றெல்லாம்
குறியெதிர்ப்பை நீர துடைத்து. 221

வறுமையானவர்க்கு ஒரு பொருளைத் தந்து உதவுவதே ஈகை; பிறருக்குத் தருவது எல்லாம் எதிர்ப்பயனை எதிர்பார்த்துத் தருவது ஆகும்.

நல்லாறு எனினும் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும் ஈதலே நன்று. 222

‘நல்ல அறச்செயலுக்கே’ என்றாலும், பிறரிடம் இரந்து பெறுவது தீமையே; மேலுலகம் இல்லையானாலும் பிறருக்குக் கொடுத்து உதவுதலே நன்மையானது.

இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள. 223

ஒருவன் வந்து, ‘நான் யாதும் இல்லாதவன்’ என்று தன் துன்பத்தைச் சொல்லும் முன்பாகவே, அவனுக்கு உதவும் தன்மை உயர்ந்த குடிப்பிறப்பாளனிடம் உண்டு.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணும் அளவு. 224

உதவியை நாடி வந்து இரந்தவருடைய மகிழ்ச்சியான முகத்தைக் காணும் வரைக்கும், இரந்து கேட்கப்படுதலும் ஈகையாளனுக்குத் துன்பம் தருவதேயாகும்.

ஆற்றுவார் ஆற்றல் பசிஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின். 225

பசியைப் பொறுத்துக் கொள்பவரது ஆற்றலே சிறந்த ஆற்றலாகும்; அதுவும் அப்பசி நோயை உணவளித்து மாற்றுவாரின் ஈகைக்குப் பிற்பட்டதே ஆகும்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அ·தொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. 226

எதுவுமே இல்லாத ஏழையரின் கொடிய பசிநோயைப் போக்க வேண்டும்; அதுதான் பொருள்பெற்றவன் தன் பொருளைச் சேமித்து வைக்கும் இடமும் ஆகும்.

பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது. 227

பலரோடும் பகுத்து உண்ணுகின்ற பழக்கம் உடைய கொடையாளனைப் ‘பசி’ என்கின்ற தீய நோயானது சென்று தீண்டுதல் என்பதே அருமையாகும்.

ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர். 228

தாம் சேர்த்துள்ள செல்வத்தைக் காப்பாற்றி வைத்துப் பின் இழந்துவிடும் கல்நெஞ்சர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் இன்பத்தை அறியமாட்டார்களோ?

இரத்தலின் இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமியர் உணல். 229

தாம் முயன்று தேடி நிரப்பி வைத்துள்ளதைத் தாமே தனியாக உண்டு மகிழ்வது என்பது, வறுமையால் பிறரிடம் சென்று இரத்தலை விடத் துன்பம் தருவதாகும்.

சாதலின் இன்னாத தில்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை. 230

சாதலைக் காட்டிலும் துன்பமானது யாதுமே இல்லை; பிறருக்குக் கொடுத்து உதவ நினையாத கடைப்பட்டவனைப் பொறுத்தமட்டில் அப்படிச் சாதலும் இனியதே ஆகும்.


24. புகழ்

ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. 231

உள்ளதைப் பலருக்கும் பகுத்துக் கொடுத்துப் புகழோடு வாழவேண்டும்; அப்படிப்பட்ட வாழ்வு அல்லாமல் ‘உயிருக்கு ஊதியம்’ என்பது வேறு யாதும் இல்லை.

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். 232

புகழ்ச்சியாகப் பேசுகிறவர் பேசுகின்றவற்றுள் எல்லாம், இரப்பவர்க்கு ஒன்றைக் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழே எப்போதும் நிலையானது.

ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். 233

உயர்ந்த புகழ் அல்லாமல், உலகத்திலே ஒப்பற்ற ஒரு பொருளாக அழிவில்லாமல் நிலைத்து நிற்கக்கூடியது யாதுமே இல்லை.

நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. 234

உலகத்தின் எல்லைவரை பரவி நிற்கும் புகழுக்குரிய செயலை ஒருவன் செய்தால், வானுலகமும் தேவரைப் போற்றாது; அப் புகழாளனையே விரும்பிப் போற்றும்.

நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. 235

புகழால் மேன்மை பெறக்கூடிய கேடும், செத்தும் புகழால் வாழ்ந்திருக்கும் சாவும், அறிவிற் சிறந்தோருக்கு அல்லாமல், பிறருக்கு ஒரு போதுமே கிடையாது.

தோன்றின் புகழொடு தோன்றுக அ·திலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. 236

உலகத்தார் முன்பாக ஒருவன் தோன்றினால் புகழோடுதான் தோன்ற வேண்டும்; புகழ் இல்லாதவர் தோன்றுவதை விடத் தோன்றாமற் போவதே நல்லது.

புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன்? 237

தமக்குப் புகழ் உண்டாகும்படி வாழாதவர்கள், தம்மை நொந்து கொள்ளாமல், நம்மை இகழ்கின்ற உலகத்தாரை நொந்து கொள்வது எதற்காகவோ?

வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். 238

தமக்குப் பின்னரும் எஞ்சி நிற்கும் புகழைப் பெறாமல் விட்டு விட்டால், அதுவே உலகத்தார்க்கு எல்லாம் பெரிய வசையாகும் என்பார்கள்.

வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். 239

புகழ் இல்லாதவனுடைய உடம்பைத் தாங்கிக் கொண்டிருந்த பூமியுங் கூட, வசையில்லாத வளமான பயனைத் தருவதில் குறைபாடு அடையும்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். 240

வசை இல்லாமல் வாழ்கின்றவரே முறையாக வாழ்பவர் ஆவர்; புகழ் இல்லாமல் வாழ்கின்றவரே உயிரோடிருந்தும் உயிர் வாழாதவர் ஆவர்.


துறவறவியல்

25. அருள் உடைமை

அருட்செல்வம் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள. 241

அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்; பொருள்களாகிய பிற வகைச் செல்வங்கள் எல்லாம் இழிந்தவரிடத்திலும் உள்ளனவே!

நல்லாற்றால் நாடி அருளாள்க பல்லாற்றால்
தேரினும் அ·தே துணை. 242

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க; பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்.

அருள்சேர்ந்த நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம் புகல். 243

இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள்பொருந்திய நெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும்.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. 244

நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை!

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்
மல்லன்மா ஞாலங் கரி. 245

அருள் கொண்டவராக வாழ்பவர்களுக்கு எந்தத் துன்பமுமே இல்லை; காற்று உயிர் வழங்குதலால் வாழும் வளமான பெரிய உலகமே இதற்குச் சான்று.

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு வார். 246

அருள்தலிலே இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே, உறுதிப் பொருளை இழந்து தம் வாழ்க்கைக் குறிக்கோளையும் மறந்தவராவர்.

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு. 247

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழ்க்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லை யாகும்.

பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார்
அற்றார்மற் றாதல் அரிது. 248

பொருள் இழந்தவர்களும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள். அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே; மீண்டும் அடைதல் அரிது.

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான் செய்யும் அறம். 249

அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்ந்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே!

வலியார்முன் தன்னை நினைக்க தான் தன்னின்
மெலியார்மேல் செல்லு மிடத்து. 250

தன்னை விட மெலிவானவர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ள வேண்டும்.


26. புலால் மறுத்தல்

தன்னூன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுண்பான்
எங்ஙனம் ஆளும் அருள்? 251

தன் சதையைப் பெருக்குவதற்குத் தான் பிறிதோர் உயிரின் தசையைத் தின்கின்றவன், எப்படி உயிர்களுக்கு எல்லாம் அருள் செய்பவனாக இருக்க முடியும்?

பொருளாட்சி போற்றாதார்க்கு இல்லை அருளாட்சி
ஆங்கில்லை ஊன்தின் பவர்க்கு. 252

பொருள் உடையவராக இருக்கும் தகுதி அப்பொருளைக் காப்பாற்றாதவர்க்கு இல்லை; அவ்வாறே, அருள் உடையவர் ஆகும் தகுதி ஊனைத் தின்பவர்க்கும் இல்லை.

படைகொண்டார் நெஞ்சம்போல் நன்றூக்காது ஒன்றன்
உடல்சுவை உண்டார் மனம். 253

ஒன்றன் உடலைச் சுவையாக உண்டவரது மனம், கொலைக் கருவியை ஏந்தினவரது நெஞ்சத்தைப் போலப் பிறவுயிருக்கு அருள் செய்தலைப் பற்றியே நினையாது.

அருளல்லது யாதெனில் கொல்லாமை கோறல்
பொருளல்லது அவ்வூன் தினல். 254

கொல்லாமையே அருள் ஆகும்; ஓர் உயிரைக் கொல்லுதலோ அருளில்லாத தன்மை; அதன் ஊனைத் தின்னலோ சற்றும் முறையில்லாத செயல் ஆகும்.

உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல் செய்யாது அளறு. 255

உயிர்களின் நிலைத்த வாழ்வு ஊனுண்ணாத இயல்பில்தான் உள்ளது; ஊன் உண்டால், நரகம் அவனை வெளியே விட ஒரு போதும் தன்னுடைய கதவைத் திறவாது.

தினற்பொருட்டால் கொல்லாது உலகெனின் யாரும்
விலைப்பொருட்டால் ஊன்றருவா ரில். 256

புலாலைத் தின்னும் பொருட்டாக உயிர்களை உலகத்தார் கொல்லாதிருந்தால், எவரும் விலைப்படுத்தும் பொருட்டாக உயிரைக் கொன்று ஊனைத் தரமாட்டார்கள்.

உண்ணாமை வேண்டும் புலாஅல் பிறிதொன்றன்
புண்ணது உணர்வார்ப் பெறின். 257

புலால் பிறிதோர் உயிரின் புண் என்று உண்பவர், அதனைத் தாம் பெற்ற போதும் உண்ணாமல் இருக்கும் நல்ல ஒழுக்கம் உடைய இயல்பினராதல் வேண்டும்.

செயிரின் தலைப்பிரிந்த காட்சியார் உண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த ஊன். 258

பிறிதோர் உயிரின் உடலிடத்திலிருந்து பிரிந்து வந்த ஊனை, குற்றத்திலிருந்து விடுபட்ட அறிவாளர்கள் ஒரு போதும் உண்ணவே மாட்டார்கள்.

அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று. 259

அவியைச் சொரிந்து ஆயிரம் வேள்விகளைச் செய்தலைக் காட்டிலும், ஒன்றன் உயிரைக் கொன்று, அதன் உடலைத் தின்னாமலிருத்தல் மிகவும் நன்மையானதாகும்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந் தொழும். 260

கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் வாழும் உயர்ந்த பண்பாளனை, எல்லா உயிர்களும் கைதொழுது தெய்வமாக நினைத்துப் போற்றும்.


27. தவம்

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற் குரு. 261

தமக்கு வந்த துன்பத்தைப் பொறுத்தலும், பிறவுயிருக்குத் தாம் துன்பஞ் செய்யாமலிருத்தலும் ஆகிய அவ்வளவினதே தவத்திற்கு உள்ளதான வடிவம் ஆகும்.

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அதனை
அ·திலார் மேற்கொள் வது. 262

தவநெறிக்கு ஏற்ற மனவியல்பு கொண்டவர்க்கே தவமும் கைகூடும்; தவப்பயன் இல்லாதவர்கள் அதனைத் தாமும் மேற்கொள்வது வீணான முயற்சியே!

துறந்தார்க்குத் துப்புரவு வேண்டி மறந்தார்கொல்
மற்றை யவர்கள் தவம். 263

துறவியர்க்கு உணவு முதலாயின தந்து உதவுதலின் பொருட்டாகவே, இல்லறத்தார்கள் துறவுநெறியைத் தாம் மேற்கொள்ள மறந்தனர் போலும்!

ஒன்னார்த் தெறலும் உவந்தாரை ஆக்கலும்
எண்ணின் தவத்தான் வரும். 264

பொருந்தாத பகைவரைத் தண்டித்தலும், தம்மை விரும்பும் அன்புடையவரை உயர்த்துதலும் தவ வாழ்வினால் மிகவும் எளிதாக வந்து கைகூடும்.

வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும். 265

வேண்டிய பயன்களை வேண்டியபடியே பெறுகின்றதனால், செய்வதற்குரிய தவம் இவ்விடத்திலேயே விரைவாகச் செய்யப்படுவதற்கு உரியதாகும்.

தவஞ் செய்வார் தங்கருமஞ் செய்வார்மற் றல்லார்
அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு. 266

தம் உயிருக்கு நன்மை செய்பவர் தவம் செய்பவரே யாவர்; மற்றையோர், ஆசைகளுக்கு உட்பட்டுத் தம் உயிருக்குத் தீமைகளைச் செய்பவர்களே ஆவர்.

சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. 267

சுடச்சுட ஒளிவிடும் பொன்னே போல, துன்பம் சுட்டு வருத்த வருத்த, தவஞ்செய்பவருக்கும் உண்மையான அறிவுடைமையானது மேன்மேலும் ஒளிபெற்று வரும்.

தன்னுயிர் தான்அறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும். 268

‘தான்’ என்னும் செருக்கானது தன்னிடமிருந்து நீங்கிய தவவலிமை பெற்றவனை, உலகத்தில் செறிந்துள்ள உயிர்கள் எல்லாம் தொழுது போற்றும்.

கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு. 269

தவநெறியாலே ஆத்ம வலிமையைப் பெற்ற மகான்களுக்குத் தம்மிடத்தே வருகின்ற கூற்றத்தையும் எதிராக நின்று வெற்றி கொள்வதற்கு முடியும்.

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர். 270

உலகில் மெய்யறிவு அற்றவர்கள் பலராகியதன் காரணம், தவம் செய்பவர் சிலராகவும், தவம் செய்யாதவர் பலராகவும் இருப்பதுதான்.


28. கூடா ஒழுக்கம்

வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும். 271

வஞ்சக மனத்தினனது பொய்யான நடத்தையைக் கண்டு, அவனுடம்பாக அமைந்து விளங்கும் ஐந்து பூதங்களும் தம்முள்ளே சிரித்துக் கொண்டிருக்கும்.

வானுயர் தோற்றம் எவன்செய்யும் தன்னெஞ்சம்
தான்அறி குற்றப் படின். 272

தன் நெஞ்சம், தான் அறிந்து செய்யும் குற்றத்திலேயும் ஈடுபடுமானால், அத்தகையவனது வானளாவிய தவத்தோற்றமும் என்ன பயனைச் செய்யும்?

வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று. 273

மனவலிமை இல்லாதவன் மேற்கொள்ளும் வலிய தவத்தோற்றம், பசு, புலியின் தோலைப் போர்த்துச் சென்று பயிரை மேய்ந்தாற் போன்றதாகும்.

தவமறைந்து அல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன் புள்சிமிழ்த் தற்று. 274

தவக் கோலத்திலே மறைந்து கொண்டு தீயசெயல்களைச் செய்தல், கொலை குறித்த வேடன் புதரின் பின் மறைந்து நின்று பறவைகளை வலைவீசிப் பிடிப்பது போன்றதாகும்.

பற்றற்றேம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவுந் தரும். 275

பற்றுகளை விட்டேம் என்பவரது பொய்யான தீய ஒழுக்கம், ‘என்ன செய்தோம்?’ என்று வருந்தும்படியான பலவகைத் துன்பங்களையும் தரும்.

நெஞ்சில் துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின் வன்கணார் இல். 276

நெஞ்சிலே ஆசையை விடாதவர்களாய், வெளியே ஆசை அற்ற ஞானிகளைப் போலக் காட்டி மக்களை வஞ்சித்து வாழ்பவரினும் கொடியவர் எவருமே இலர்!

புறங்குன்றி கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியார் உடைத்து. 277

புறத்தோற்றத்திலே குன்றிமணியின் நிறம்போலச் செம்மையான தோற்றம் உடையவர் என்றாலும், உள்ளத்தில் குன்றிமணியின் மூக்குப்போலக் கரியவரும் உள்ளனர்.

மனத்தது மாசாக மாண்டார் நீராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர். 278

மனத்துள்ளே இருப்பது குற்றமாகவும், மாண்பு உடையவர் போல நீராடி, மறைவாக வாழ்வு நடத்தும் மாந்தர்களும் இந்த உலகிற் பலர் ஆவார்.

கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங் கன்ன
வினைபடு பாலால் கொளல். 279

நேரானாலும் அம்பு கொடுமை செய்வது; வளைவானாலும் யாழ்க்கோடு இன்னிசை தருவது; மனிதரையும் இப்படியே அவரவர் செயல்தன்மை நோக்கியே அறிதல் வேண்டும்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து விடின். 280

உலகம் பழித்த தீயசெயல்களை ஒழித்துவிட்டால் உயர்வுதானே வரும்; உயர்வு கருதி மயிரை மழித்துக் கொள்ளலும் நீள வளர்த்தலும் செய்ய வேண்டாம்.


29. கள்ளாமை

எள்ளாமை வேண்டுவான் என்பான் எனைத்தொன்றும்
கள்ளாமை காக்கதன் நெஞ்சு. 281

உலகினரால் இகழப்படாமல் வாழ விரும்புகின்றவன் எத்தகைய பொருளையும் களவாடிக் கொள்ள நினையாதபடி தன் மனத்தை முதலில் காத்தல் வேண்டும்.

உள்ளத்தால் உள்ளலும் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால் கள்வேம் எனல். 282

‘பிறன் பொருளைக் கள்ளமாகக் களவாடிக் கொள்வோம்’ என்று ஒருவன், தன் உள்ளத்தால் நினைத்தாலும் அந்த நினைவு கூடத் தீமையானதே.

களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும். 283

களவாலே வந்தடையும் செல்வமானது அளவு கடந்து பெருகுவது போலவே, எதிர்பாராமல், எல்லாம் வந்தது போல, விரைந்து ஒழிந்தும் போய்விடும்.

களவின்கண் கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமம் தரும். 284

களவு செய்வதிலே உண்டாகும் முதிர்ந்த விருப்பமானது, அதனால் வரும் விளைவுகளின் போது தீராத துன்பத்தைத் தருவதாகவே விளங்கும்.

அருள்கருதி அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப் பார்ப்பார்கண் இல். 285

பொருள் தேடுதலையே நினைத்துப் பிறர் சோர்ந்திருக்கும் காலத்தைப் பார்க்கும் கள்வரிடத்தே, அருளைக் கருதி அன்புடையவராதல், சான்றோரிடமும் இல்லை.

அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண்
கன்றிய காத லவர். 286

களவுநெறியின் கண் மிக முதிர்ந்த ஆசையுடையவர்கள் எல்லாரும், தம் வருவாயின் அளவுக்குத் தகுந்தபடி ஒழுக்கத்தோடு வாழ இயலாதவர்களே.

களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல். 287

‘களவு’ எனப்படும் இருள்படர்ந்த அறிவாண்மையானது, அளவறிந்து வாழும் ஆற்றலை விரும்பிய நன்மக்களிடத்திலே ஒருபோதும் இல்லை யாகும்.

அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும்
களவறிந்தார் நெஞ்சில் கரவு. 288

அளவறிந்து வாழ்தலை அறிந்தவரின் நெஞ்சத்திலே ‘அறம்’ நிற்பது போல, களவுத்தொழிலை அறிந்தவரின் நெஞ்சிலே ‘வஞ்சகம்’ எப்போதும் நிலைத்திருக்கும்.

அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா தவர். 289

களவு அல்லாத, பிற நல்ல முயற்சிகளைச் செய்து பொருள் தேடி வாழ்தலைத் தெளியாதவர்கள், அளவு கடந்த செலவுகளைச் செய்து அக்களவாலேயே அழிவர்.

கள்வார்க்குத் தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுளகு. 290

களவு செய்வார்க்கு, உடலில் உயிர் நிலைக்கும் காலமும் தவறிப் போகும்; களவு செய்யாதவர்க்குத் தேவருலகத்து வாழ்வும் தவறிப் போகாது.


30. வாய்மை

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 291

‘வாய்மை’ என்று சொல்லப்படுவது யாது என்றால், அது பிறருக்குத் தீமை இல்லாதபடி யாதொரு சொல்லையும் எப்போதும் சொல்லுதல் ஆகும்.

பொய்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கும் எனின். 292

குற்றமே இல்லாத நன்மையைத் தருவது என்றால், பொய்யான சொற்களும் கூட வாய்மையின் இடத்தில் வைத்துச் சிறப்பாகக் கருதத் தகுந்தவை ஆகும்.

தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே தன்னைச் சுடும். 293

ஒருவன், தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைப் பற்றிப் பொய்த்துப் பேசாதிருப்பானாக; அப்படி பொய்த்த பின்னர், அவன் நெஞ்சமே அவனைச் சுடும்.

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து ளெல்லாம் உளன். 294

உள்ளத்தால் பொய்யாது நடந்து வருவானாயின், அவன் உலகத்தார் உள்ளத்துள் எல்லாம் இருப்பவன் ஆகும் சிறந்த உயர்வைப் பெறுவான்.

மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு
தானஞ்செய் வாரின் தலை. 295

மனத்தோடு பொருந்திய வாய்மையையே ஒருவன் சொல்லி வருவானானால், அவன் தவத்தோடு தானமும் செய்பவரினும் மிகவும் சிறந்தவன் ஆவான்.

பொய்யாமை அன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந் தரும். 296

பொய்யாமை போலப் புகழ் தருவது ஏதும் இல்லை; அதில் தளராமல் உறுதியாயிருப்பது ஒருவனுக்கு எல்லா அறத்தின் சிறப்பையும் தரும்.

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை செய்யாமை நன்று. 297

பொய்யாமை என்னும் அறத்தையே பொய்யாகாது தொடர்ந்து செய்து வந்தால், பிற அறச்செயல்கள் ஏதும் செய்யாத போதிலும் கூட, அது நன்மையைத் தரும்.

புறள்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை
வாய்மையால் காணப் படும். 298

புறவுடலின் தூய்மை நீராலே ஏற்படும்; உள்ளத்தின் தூய்மையானது, ஒருவன் வாய் திறந்து சொல்லும் அவனது வாய்மையாலே அடையப்படும்.

எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு. 299

புறவிருளைப் போக்கும் எல்லா விளக்கும் சிறந்த விளக்கு ஆகாது; சான்றோர்க்குப் பொய்யாமையாகிய விளக்கே அவற்றினும் சிறந்த விளக்காகத் தோன்றும்.

யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை எனைத்தொன்றும்
வாய்மையின் நல்ல பிற. 300

யாம் மெய்ப்பொருளாக அறிந்தவற்றுள் எல்லாம், வாய்மையினும் எத்தன்மையாலும் சிறப்பான பொருள் இந்த உலகத்திலே வேறு எதுவும் இல்லை.


31. வெகுளாமை

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்? 301

தனக்குச் செல்லக்கூடிய இடத்திலும் சினத்தைக் காப்பவனே காப்பவன்; செல்லாத இடத்திலே காத்தால் என்ன? காவாதிருந்தால் என்ன?

செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற. 302

செல்லாத இடத்தில் சினம் கொள்வதனால் தீமை வரும். செல்லும் இடத்திலும் அதனிலும் தீமையானது வேறு ஏதும் இல்லை.

மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும். 303

எவரிடத்திலும் சினங்கொள்ளாமல், அவர் தீச்செயலை மறத்தலே நல்லது; தீமையான விளைவுகள் அச்சினத்தினாலே வந்து சேரும்.

நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற. 304

முகமலர்ச்சியான நகையையும், அகமலர்ச்சியான உவகையையும் கொல்லும் சினத்தினும், உயிருக்குப் பகையானவை வேறு உளவோ?

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம். 305

ஒருவன் தன்னைக் காக்க விரும்பினால் சினம் எழாமல் காத்துக் கொள்க; காவாதிருந்தால், அச் சினமானது அவனையே முடிவில் கொன்று விடும்.

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும். 306

சேர்ந்தவரைக் கொல்லும் இயல்புடைய சினமானது, ‘தன் இனத்தார்’ என்னும் பாதுகாவலான தெப்பத்தையும் சுட்டு எரித்துவிடும்.

சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று. 307

சினத்தையே செல்வம் என்று நினைத்து மேற்கொண்டவன் அதனாற் கெடுதல், நிலத்திலே அறைந்தவனின் கையானது நோவிலிருந்து தப்பாதது போல் உறுதியாகும்.

இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று. 308

பலமாகக் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பில் வீழ்ந்தாற் போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதும், கூடுமானால், அவன் பால் வெகுளாமையே நன்று.

உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின். 309

ஒருவன் உள்ளத்தாலும் சினத்தைப் பற்றி நினையாதவன் என்றால், அப்படிப்பட்டவன் நினைத்தது எல்லாம் உடனே அவனை வந்தடையும்.

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை. 310

அளவு கடந்து சினத்திலே ஈடுபட்டவர் இறந்தவரைப் போன்றவர்; சினத்தைக் கைவிட்டவரோ முற்றும் துறந்த மேலோருக்குச் சமமாவர்.


32. இன்னா செய்யாமை

சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்கு இன்னா
செய்யாமை மாசற்றார் கோள். 311

சிறப்பைத் தருகின்ற பெருஞ்செல்வமே பெற்றாலும், பிறருக்குத் துன்பம் செய்யாதிருத்தலே, குற்றமற்ற அறிவாளரின் கொள்கையாகும்.

கறுத்துஇன்னா செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள். 312

கறுவுகொண்டு ஒருவன் துன்பம் செய்தபோதும், திரும்ப அவனுக்குத் துன்பம் தருவனவற்றைச் செய்யாதிருத்தலே குற்றமற்ற அறிவாளரின் கொள்கை.

செய்யாமல் செற்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந் தரும். 313

ஏதும் செய்யாத போதிலேயே தீமை செய்தவருக்கும், பதிலுக்குத் துன்பத்தைச் செய்தால், அது பின்னர் மீளாத் துயரத்தையே தரும்.

இன்னாசெய் தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து விடல். 314

துன்பம் செய்தவரைத் தண்டித்தல், அவர் தம் செய்கையை நினைத்து வெட்கப்படும்படியாக அவருக்கு நன்மைகளைச் செய்துவிடுதல் ஆகும்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை. 315

பிறிதோர் உயிரின் துன்பத்தைத் தன் துன்பமே போலக் கொள்ளாத இடத்தில், அறிவினாலே ஆகும் பயன் தான் ஏதும் உளதாகுமோ?

இன்னா எனத்தான் உணர்ந்தவை துன்னாமை
வேண்டும் பிறன்கண் செயல். 316

துன்பம் தருவன எனத் தான் உணர்ந்த ஒரு செயலைப் பிறரிடத்தே செய்தலை ஒருவன் எப்போதும் செய்யாமல் தவிர்க்க வேண்டும்.

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணாசெய் யாமை தலை. 317

எவ்வளவினது ஆனாலும், எக்காலத்தில் ஆனாலும், எவருக்கும், மனத்தினாலும் பொருந்தாத துன்பங்களைச் செய்யாமலிருத்தலே சிறப்பு ஆகும்.

தன்னுயிர்ககு ஏன்னாமை தானறிவான் என்கொலோ
மன்னுயிர்க்கு இன்னா செயல். 318

தன் உயிருக்குத் துன்பமாதலைத் தான் அறிந்து வருந்தும் ஒருவன், மற்றைய உயிர்களுக்குத் துன்பத்தைச் செய்தல் என்பது, என்ன அறியாமையாலோ?

பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா
பிற்பகல் தாமே வரும். 319

முற்பகலில் பிறருக்குத் துன்பத்தைச் செய்தால், பிற்பகலில் தமக்குத் துன்பங்கள் தாமாகவே வந்து சேரும் என்பதை அறிதல் வேண்டும்.

நோயெல்லாம் நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார்
நோயின்மை வேண்டு பவர். 320

துன்பம் தருவன எல்லாம் துன்பம் செய்தவரின் மேல் சென்று சேர்வன; ஆகவே, துன்பப்படாமலிருப்பதை விரும்புகிறவர் பிறருக்குத் துன்பம் செய்யாதிருப்பர்.


33. கொல்லாமை

அறவினை யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந் தரும். 321

அறச்செயல் என்பது யாதென்றால் எந்த ஓர் உயிரையும் கொல்லாத செயலே; கொல்லும் செயல் பிற தீவினைகளை எல்லாம் கொண்டு வரும்.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாந் தலை. 322

உள்ள உணவையும் பலரோடும் பங்கிட்டுத் தான் உண்ணும் இயல்பினை மேற்கொள்ளுதல், அறநூலோர் தொகுத்துக் கூறிய அறங்களுள் எல்லாம் மிகச் சிறந்தது!

ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று. 323

ஒப்பற்ற நல்லறம் என்பது எந்த உயிரையும் கொல்லாமல் இருத்தலே ஆகும்; அதற்கு அடுத்ததாக நல்லறம் என்று கருதப்படுவது பொய்யாமை ஆகும்.

நல்லாறு எனப்படுவது யாதெனின் யாதொன்றும்
கொல்லாமை சூழும் நெறி. 324

நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமலிருத்தல் என்பதைக் கருதும் வாழ்க்கை நெறியே ஆகும்.

நிலைஅஞ்சி நீத்தாருள் எல்லாம் கொலைஅஞ்சிக்
கொல்லாமை சூழ்வான் தலை. 325

வாழ்வின் நிலையாமை கண்டு பற்றுவிட்டவருள் எல்லாம், கொலைப் பாவத்திற்குப் பயந்து, கொல்லாமை நெறியைப் போற்றுபவரே சிறந்தவர்கள்.

கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல்
செல்லாது உயிருண்ணுங் கூற்று. 326

கொல்லாமை ஆகிய அறத்தையே மேற்கொண்டு நடக்கிறவனுடைய வாழ்நாளின் மேல், உயிரைத் தின்னும் கூற்றமும் ஒரு போதும் செல்லாது.

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை. 327

தன்னுடைய உயிரையே விட்டுவிட நேர்வதானாலும் கூட, தான் மற்றொன்றினது இனிய உயிரைப் போக்கும் பாவச் செயலை எவரும் செய்யக் கூடாது.

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினும் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை. 328

கொலை செய்வதனாலே நன்மையாக வந்து சேரும் ஆக்கம் பெரிதானாலும், சான்றோருக்குக் கொன்று வரும் ஆக்கம் இழிவானதே யாகும்.

கொலைவினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து. 329

கொலையையே செய்தொழிலாக உடைய மக்கள், அதன் இழிவான தன்மையைத் தெரிந்தவரிடத்தில் தாழ்ந்த செயலினராகவே தோன்றுவர்.

உயிர் உடம்பின் நீக்கியார் என்ப செயிர் உடம்பின்
செல்லாத்தீ வாழ்க்கை யவர். 330

நோய் மிகுந்த உடலோடு உயிரும் போகாமல் வருந்தித் துன்புறுகின்ற வாழ்வை உடையவர், பிற உயிர்களை அவற்றின் உடலிலிருந்து போக்கியவரேயாவர்.


34. நிலையாமை

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை. 331

நிலைத்து நில்லாத பொருள்களை எல்லாம் நிலையானவை என்று எண்ணி மயங்குகின்ற இழிவான அறிவுடைமை மிகவும் தாழ்ந்ததாகும்.

கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று. 332

பெரும்பொருள் வந்தடைதல், கூத்தாடுமிடத்திலே கூட்டம் வந்து கூடுவதைப் போன்றதாகும்; அது போய்விடுவதும் அக்கூட்டம் கலைவதைப் போன்றதே.

அற்கா இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே செயல். 333

நிலைத்து இராத தன்மையுடையது செல்வம்; அதனை ஒருவன் அடைந்தால், அது நிலைப்பதற்கான அறமான செயல்களை அப்போதே செய்ய வேண்டும்.

நாளென ஒன்றுபோற் காட்டி உயிர் ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின். 334

வாழ்வை ஆராய்ந்து உண்மை உணர்பவரைப் பெற்றால், ‘நாள்’ என்பது ஒரு கால அளவு போலத் தன்னைக் காட்டி உயிரை அறுக்கும் வாள் என்பது விளங்கும்.

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும். 335

நாக்கு உள்ளே இழுத்துக் கொண்டு விக்குள் மேலாக எழுந்து வருவதற்கு முன்பாகவே, நல்ல செயல்களை விரைவாகச் செய்ய வேண்டும்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு. 336

‘நேற்று உள்ளவனாக இருந்த ஒருவன், இன்று இல்லை’ என்னும் நிலையாமையாகிய பெருமையை உடையது தான் இந்த உலகம் ஆகும்.

ஒருபொழுதும் வாழ்வது அறியார் கருதுப
கோடியும் அல்ல பல. 337

அடுத்த பொழுதில் உயிர் வாழும், வாழாது என்பதைத் தெரியாதவர்கள் நினைப்பது, கோடியும் அல்ல; அதன்மேலும் அளவற்ற பலவாகும்.

குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே
உடம்பொடு உயிரிடை நட்பு. 338

தான் இருந்த கூடானது தனித்துக் கிடக்கவும், பறவை பறந்து வெளியேறிப் போய்விட்டது போன்றதுதான் உடலோடு உயிருக்குள்ள தொடர்பு.

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு. 339

ஒருவன் செயலில்லாமல் தூங்குவதைப் போன்றது சாக்காடு; அவன் மீண்டும் உறக்கத்திலிருந்து விழித்துக் கொள்வது போல்வதே பிறப்பு.

புக்கில் அமைந்தின்று கொல்லோ உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு. 340

உடலினுள் ஒரு மூலையிலே குடியிருந்த உயிருக்கு, நிலையாக நுழைந்து தங்கியிருப்பதற்குரிய தகுதிவாய்ந்த ஓர் இடம் அமையவில்லை போலும்!


35. துறவு

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன். 341

எந்த எந்தப் பொருளில் ஆசை கொள்வதிலிருந்து ஒருவன் விடுபட்டவன் ஆகின்றானோ, அந்த அந்தப் பொருளைக் குறித்து அவன் துன்பம் அடைவதில்லை.

வேண்டின் உண் டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டுஇயற் பால பல. 342

துன்பம் இல்லாத வாழ்வை விரும்பினால், ஆசைகளை எல்லாம் விட்டுவிட வேண்டும்; அப்படி விட்டு விட்ட பின் இவ்வுலகில் அடையக்கூடிய இன்பம் பலவாகும்.

அடல்வேண்டும் ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம் ஒருங்கு. 343

ஐந்து வகையான புலன்களின் ஆசைகளையும் அடக்கி வெற்றி கொள்ள வேண்டும்; அதற்கு வேண்டிய பொருளாசைகளை ஒருசேர விட்டு விட வேண்டும்.

இயல்பாகும் நோன்பிற்கொன்று இன்மை உடைமை
மயலாகும் மற்றும் பெயர்த்து. 344

ஒரு பொருளின் மீதும் ஆசை இல்லாததே தவநெறியின் இயல்பாகும்; ஆசை உள்ளதானால் மீளவும் உலக போகத்தில் மயங்கியதே யாகும்.

மற்றும் தொடர்ப்பாடு எவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்கு உடம்பும் மிகை. 345

பிறவியாகிய துன்பத்தை ஒழிக்க முயல்பவருக்கு உடம்பும் மிகையான ஒரு பொருள்; ஆகவே, மற்றைய ஆசைத் தொடர்புகள் எல்லாம் எதற்காகவோ?

யான் எனது என்னும் செருக்கு அறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும். 346

உடலை ‘யான்’ எனவும், பொருள்களை ‘எனது’ எனவும் நினைக்கின்ற மயக்கத்தை அறுத்துவிடுகிறவன், வானோர்க்கும் உயர்ந்த உலகம் சேர்வான்.

பற்றி விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ தவர்க்கு. 347

பொருள்கள் மீதுள்ள பற்றுகளையே இறுகப் பற்றிக் கொண்டு ஆசையை விடாதவர்களுக்குத் துன்பங்களும் பற்றிக் கொண்டு விடாமல் இருக்கும்.

தலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார் மற்றை யவர். 348

அனைத்தையும் துறந்தவர்களே மேலான நிலையினர் ஆவர்; மற்றையோர் மயங்கி ஆசை வலையில் அகப்பட்டுக் கொண்டவர்களே ஆவர்.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். 349

பற்றுகள் அறுந்துபோன அப்பொழுதே பிறப்பாகிய பந்தமும் அறுந்து போகும்; மேலும், உலக நிலையாமையும் அப்போது காணப்படும்.

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு. 350

பற்று இல்லாதவனான இறைவனது பற்றினை மட்டுமே பற்றுக; உலகப் பற்றுகளை விடுவதற்காக, அதனையே எப்போதும் விடாமல் பற்றிக் கொள்க.


36. மெய் உணர்தல்

பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு. 351

உண்மையில் பொருளற்றவைகளைப் பொருளாகக் கருதி உணர்கின்ற மயக்கத்தினாலேயே, சிறப்பற்ற பலவகைப் பிறப்புக்களும் உண்டாகின்றன.

இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு. 352

மயக்கம் நீங்கிய குற்றமற்ற மெய்யறிவு உடையவர்களுக்கு அவ்வுணர்வு, இருளிலிருந்து விடுபட்டு அடைகின்றதான இன்பத்தையும் கொடுக்கும்.

ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வானம் நணிய துடைத்து. 353

ஐயத்திலிருந்து நீங்கித் தெளிவுபெற்ற மெய்யறிவாளருக்கு, இவ் வையகத்தினும், வானம் மிகவும் அண்மையானதும் உறுதியானதும் ஆகும்.

ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர்வு இல்லா தவர்க்கு. 354

மெய்யுணர்வு இல்லாதவர்களுக்கு, ஐம்புலன்களின் உணர்வுகளை எல்லாம் முறைப்படியே பெற்றுள்ள போதிலும் பயன் யாதும் இல்லை.

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு. 355

எப்பொருள் எத்தகைய தன்மையோடு தோன்றினாலும் மயங்காமல், அப்பொருளின் மெய்யான இயல்பைத் தெளிவாகக் காண்பதே அறிவாகும்.

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி. 356

கற்க வேண்டிய கல்வியைக் கற்று, மெய்ப்பொருளையும் அறிந்தவர், மீண்டும் இவ்வுலகில் பிறவிகளைத் தாம் எடுத்து வராத நெறியை மேற்கொள்வார்கள்.

ஓர்த்துள்ளம் உள்ளது உணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு. 357

என்றும் உளதான மெய்ப்பொருளை உள்ளம் ஆராய்ந்து அறிந்து விட்டதானால், மீளவும் தனக்குப் பிறப்பு உள்ளதென்று அவன் எண்ண வேண்டாம்.

பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும்
செம்பொருள் காண்பது அறிவு. 358

பிறப்புக்குக் காரணமான அறியாமைகள் நீங்குவதற்குச் சிறப்பான துணை எனப்படும் செம்பொருளை முயன்று காண்பதே மெய்யுணர்வு ஆகும்.

சார்புணர்ந்து சார்பு கெடஒழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய். 359

எல்லாப் பொருள்களுக்கும் சார்பான செம்பொருளை உணர்ந்து, பற்றுக் கெடுமாறு ஒழுகினால், சார்வதற்குரிய துன்பங்கள் திரும்பவும் வந்து சாரமாட்டா.

காமம் வெகுளி மயக்கம் இவ்முன்றன்
நாமம் கெடக்கெடும் நோய். 360

காமம், வெகுளி, மயக்கம் என்னும் இவை மூன்றின் பெயர்களைக் கூட உள்ளத்திலிருந்து அறவே நீக்கிவிட்டால், பிறவித் துன்பமும் கெடும்.


37. அவா அறுத்தல்

அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ் ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து. 361

எல்லா உயிருக்கும் எக்காலத்திலும் பிறவி என்னும் துன்பத்தைத் தருகின்றதான வித்து, ‘அவா’ என்பதுதான் என்று ஆன்றோர் கூறுவர்.

வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும். 362

ஒருவன் எதையேனும் விரும்புவதானால், பிறவாமை என்பதையே விரும்ப வேண்டும்; அந்த நிலை அவா இல்லாத நிலையை விரும்பினால் வரும்.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அ·தொப்பது இல். 363

அவாவற்ற தன்மைபோலச் சிறந்த செல்வம் இவ்வுலகில் யாதும் இல்லை; எவ்விடத்தும் அதற்கு இணையானதான செல்வமும் யாதும் இல்லை.

தூஉய்மை என்பது அவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும். 364

தூய்மையான நிலை என்பது அவாவில்லாத நிலையே ஆகும். அந்த நிலை, வாய்மையையே விரும்பி நடந்தால் தானாகவே நம்மை வந்து சேரும்.

அற்றவர் என்பார் அவாஅற்றார் மற்றையார்
அற்றாக அற்றது இலர். 365

பற்று அற்றவர் என்பவர்கள் அவா அற்றவரே; அவா அறாத மற்றையவர் எல்லாரும் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா. 366

ஒருவனை அவன் தளர்ச்சி கண்டு வஞ்சிப்பது அவா ஆகும்; அதனால், அவாவுக்குப் பயந்து ஒதுங்கி வாழ்வதே மேன்மையான அறநெறி ஆகும்.

அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும். 367

அவாவினை முழுவதும் அறுத்து விட்டால், கெடாமல் வாழ்வதற்கான நல்வினைகள், தான் விரும்பியபடியே வந்து ஒருவனுக்கு வாய்க்கும்.

அவாஇல்லார்க் கில்லாகுந் துன்பம் அ·துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும். 368

அவா இல்லாதவருக்குத் துன்பம் என்பதும் இல்லையாகும்; அவா உள்ளதானால் துன்பமும் ஒழியாமல் மேன்மேலும் வந்து கொண்டே இருக்கும்.

இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 369

அவா என்கின்ற துன்பத்தினுள் கொடிய துன்பமானது கெடுமானால், வாழ்வில், இன்பம் இடையறாமல் வந்து வாய்த்துக் கொண்டிருக்கும்.

ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும். 370

ஒருபோதும் நிரம்பாத அவாவினைக் கைவிட்டால், அந்தப் பொழுதிலேயே, பெரிதான இன்பவாழ்வை அந்நிலைமையானது தானாகவே தந்துவிடும்.


ஊழியல்

38. ஊழ்

ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி. 371

ஆவதற்குரிய ஊழ் வந்தால் சோர்வில்லாத முயற்சிகள் தோன்றும்; கைப்பொருள் போவதற்குரிய ஊழ் வந்தால் சோம்பல் தோன்றும்.

பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை. 372

இழப்பதற்கான ஊழ் ஒருவனைப் பேதையாக்கும்; ஆவதற்கான ஊழ் வந்தால் ஒருவனது அறிவை விரிவாக்கி அவனுக்குப் பல நன்மைகளைத் தரும்.

நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும். 373

நுண்மையான நூல்கள் பலவற்றை முயன்று கற்றாலும், ஊழின் நிலைமைக்குத் தகுந்தபடி உள்ளதாகும் அறிவே மேம்பட்டுத் தோன்றும்.

இருவேறு உலகத்து இயற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு. 374

ஊழின் காரணத்தால் உலகத்து இயற்கையானது இருவேறு வகைப்படும்; செல்வராதல் வேறு ஊழ்; தெளிவான அறிவினராதல் வேறு ஊழ் ஆகும்.

நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும்
நல்லவாம் செல்வம் செயற்கு. 375

செல்வம் தேடும் முயற்சிக்கு, நல்லூழால் தீயவும் நல்லவையாவதும், தீயூழால் நல்லவைகளும் தீயவை தருகின்ற தன்மையவாதலும் உண்டு.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம. 376

வருந்திக் காப்பாற்ற முயன்றாலும் நல்லூழ் இல்லாத போது எதுவுமே ஆகாது; கொண்டு போய் வெளியே சொரிந்தாலும் நல்லூழிருந்தால் தம் பொருள் போகாது.

வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. 377

ஊழை வகுத்தவன் வகுத்துவிட்ட வகைப்படி அல்லாமல் கோடியாகப் பொருள் தொகுத்தவர்க்கும் அவற்றைத் துய்த்தல் என்பது அரிதாகும்.

துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின். 378

வந்தடைவதான இன்பங்கள் வந்து சேராமற் போகுமானால் துய்க்கும் பொருள் இல்லாதவர்கள் தம்முடைய ஆசைகளைத் துறப்பார்கள்!

நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்? 379

ஊழால் நன்மைகள் விளையும்போது, அவற்றை நல்லவையாகக் காண்பவர்கள், அ·து இல்லாத கேடு காலத்தில் துன்பப்படுவதுதான் எதற்காக?

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும். 380

ஊழைக் காட்டிலும் பெரிதும் வலிமையானவை யாவை உள்ளன! மற்றொன்றை வலியது என்று கருதினாலும், அங்கும் ஊழே முன்வந்து நிற்கும்!


பொருட்பால்

அரசியல்

39. இறைமாட்சி

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு. 381

படை, குடி, விளைபொருள், அமைச்சர், நண்பர், அரண் என்னும் ஆறு உறுப்புக்களையும் சிறப்பாகப் பெற்றவன் அரசருள் சிங்க ஏறு ஆவான்.

அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. 382

அஞ்சாமை, எளியோர்க்குக் கொடுத்து உதவும் ஈகை, அறிவு, ஊக்கம், என்னும் நான்கும் குறைவில்லாமல் இருப்பது வேந்தருக்கு இயல்பு ஆதல் வேண்டும்.

தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும்
நீங்கா நிலனாள் பவர்க்கு. 383

நாடாளும் மன்னனுக்கு, விரைவாகச் செயலைச் செய்தலும், அதனை அறியும் அறிவும், செய்யும் துணிவும் என்னும் மூன்று திறனும் நீங்காமல் இருக்க வேண்டும்.

அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா
மானம் உடைய தரசு. 384

அரசநெறியிலிருந்தும் வழுவாமலும், நெறியல்லாதவைகளை நாட்டை விட்டு நீக்கியும், மறமாட்சியில் தாழ்ச்சியின்மை என்னும் மானமும் உடையவனே அரசன்.

இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு. 385

பொருள் வருவாய்க்கான வழிகளை உண்டாக்கலும், வரும் பொருளைச் சேமித்தலும், பாதுகாத்தலும், நாட்டின் நலத்துக்குத் தக்கபடி செலவிடுதலும் வல்லதே அரசு.

காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக்கூறும் மன்னன் நிலம். 386

தன்னைக் காண வருவார்க்குக் காட்சிக்குத் தான் எளியனாயும், கடுஞ்சொல் சொல்லாதவனாயும் அரசன் விளங்கினால், அவன் நாட்டை உலகமே உயர்வாகக் கூறும்.

இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால்
தான்கண் டனைத்திவ் வுலகு. 387

இனிமையான சொல்லோடு, துன்புறுவார்க்கு வேண்டியதைக் கொடுத்தும் காப்பாற்றவல்ல அரசன், தன் மனத்தில் கருதியவாறே உலகமும் அமையும்.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும். 388

முறைமையோடு ஆட்சி செய்து மக்களைக் காப்பாற்றும் மன்னவன், அம் மக்களுக்குத் தெய்வம் என்று சொல்லப்படும் உயர்நிலையிலே வைத்து மதிக்கப்படுவான்.

செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன்
கவிகைக்கீழ்த் தங்கும் உலகு. 389

சான்றோர்கள் கண்டித்துச் சொல்வது கேள்விக்கு வெறுப்பாயிருந்தாலும், பொறுத்து, அக்குறைகளை நீக்கும் பண்புள்ள வேந்தனின் குடைநிழலில், உலகம் தங்கும்.

கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும்
உடையானாம் வேந்தர்க் கொளி. 390

கொடையும், இரக்க குணமும், செங்கோன்மையும், குடி காத்தலும் என்னும் நான்கையும் சிறப்பாகப் பெற்றவன் வேந்தர்க்கு எல்லாம் ஒளிவிளக்கு ஆவான்.


40. கல்வி

கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக. 391

கற்பதற்குத் தகுதியான நூல்களைப் பழுதில்லாமல் கற்க வேண்டும்; கற்றதன் பின்னர் கற்ற அக்கல்வியின் தகுதிக்குத் தகுந்தபடி நடக்கவும் வேண்டும்.

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு. 392

‘எண்’ என்று சொல்லப்படுவதும், ‘எழுத்து’ என்று கூறப்படுவதும், என்னும் இவை இரண்டும், இவ்வுலகில் வாழும் உயிர்களுக்குக் ‘கண்’ என்பார்கள்.

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
புண்ணுடையர் கல்லா தவர். 393

‘கண்’ உடையவர் என்று உயர்வாகக் கூறப்படுவோர் கற்றவரே ஆவர்; கல்லாதவர்கள் தம் முகத்தில் இரண்டு புண் உடையவர்கள் ஆவர்.

உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில். 394

எல்லாரும் மகிழும் வகையிலே கூடியிருந்து, ‘இனி என்று மீளக் கூடுவோம்’ என்று எண்ணும்படியாகப் பிரிதல் கல்வியறிவினரது செயல் ஆகும்.

உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர். 395

செல்வர்களின் முன்னே உதவி கேட்கும் எளியவர் பணிவோடு நிற்பது போல, ஆசிரியரிடம் பணிந்து நின்று கற்றவரே சிறந்தவர்; கல்லாதவரோ கடையர்!

தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு. 396

மணலிலே தோண்டும் கிணற்றில், தோண்டிய அளவுக்கே நீர் ஊறும்; மாந்தருக்கும் அவரவர் முயன்று கற்றதன் அளவுக்கே அறிவும் ஊறிச் சுரக்கும்.

யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. 397

கற்றவனுக்கு எந்த நாடும் நாடாகும்; எந்த ஊரும் ஊராகும்; இதுவே உண்மையாக இருந்தும் ஒருவன் சாகும் வரைக்கும் கல்லாமலிருப்பது எதனால்?

ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து. 398

ஒரு பிறவியிலே தான் கற்ற கல்வியானது, ஒருவனுக்குத் தொடர்ந்து வரும் ஏழு பிறப்புக்களிலும் அவனைப் பாதுகாக்கும் சிறப்புடையது ஆகும்.

தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார். 399

தாம் இன்பம் அடைவதாகிய கல்வியினாலே உலகத்தாரும் இன்பம் அடைவதைக் கண்டு, கற்றறிந்தவர், மேன்மேலும் தாம் கற்பதையே விரும்புவார்கள்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை. 400

‘அழிவில்லாத சிறந்த செல்வம்’ என்பது கல்விச் செல்வமே; மற்றைய பொன் பொருள் மண் என்னும் செல்வங்கள் ஒருவனுக்குச் சிறந்த செல்வம் ஆகா.


41. கல்லாமை

அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல். 401

நிரம்பிய நூலறிவு இல்லாமல் கற்றவர் அவையிலே சென்று ஒருவன் பேசுதல், அரங்கம் இழைக்காமலே வட்டாடினால் போன்ற அறியாமையான செயல் ஆகும்.

கல்லாதான் சொற்கா முறுதல் முலையிரண்டும்
இல்லாதாள் பெண்காமுற் றற்று. 402

கல்லாதவன், தானும் அவையிற் பேசவேண்டும் என்று விரும்புதல், முலைகளிரண்டும் இல்லாதவளான பெண் பெண்மையை விரும்புதல் போன்ற அறியாமை ஆகும்.

கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முன்
சொல்லா திருக்கப் பெறின். 403

கற்றவர்களின் முன்பாகச் சென்று சொல்லாடாதிருந்தால், கல்லாதவர்களும், அந்த அளவுக்கு மிகவும் நல்லவர்களாகவே கற்றவரால் கருதப்படுவர்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார். 404

கல்லாதவனது அறிவு சில சமயங்களிலே மிகவும் நன்றாயிருந்தாலும், அறிவுடையவர்கள் அதனை நன்றென்று ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும். 405

கல்லாத ஒருவன், தன்னையும் கற்றவர் போல மதித்துக் கொண்டு சொல்லாடினால், அவனுக்கு இயல்பாக உள்ள மதிப்பும் கெட்டுப் போய்விடும்.

உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரனையர் கல்லா தவர். 406

‘உயிரோடு இருக்கின்றார்’ என்னும் அளவினரே அல்லாமல், எந்தப் பயனும் இல்லாத களர்நிலத்தைப் போன்றவர்களே கல்லாதவர் ஆவர்.

நுண்மாண் நுழைபுலம் இல்லான் எழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று. 407

நுட்பமாகவும் சிறப்பாகவும் நுழைந்து கற்ற அறிவுநலம் இல்லாதவனின் உடல் அழகு, மண்ணால் அழகாகச் செய்த ஒரு பாவையின் உடல் அழகு போன்றதே!

நல்லார்கண் பட்ட வறுமையின் இன்னாதே
கல்லார்கண் பட்ட திரு. 408

கல்வியறிவு உடைய நல்லவரிடம் உள்ளதான வறுமையை விடக் கல்லாதவரிடம் சேர்ந்த அளவற்ற செல்வமானது பெரிதும் துன்பம் தருவதாகும்.

மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
கற்றார் அனைத்திலர் பாடு. 409

மேலான குடியிலே பிறந்தவராயினும், கல்லாத மடமையாளர், தாழ்ந்த குடியிலே பிறந்தும் கற்றவரைப் போலப் பெருமை இல்லாதவர் ஆவர்.

விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனை யவர். 410

அறிவு விளங்கும் நூல்களைக் கல்லாதவர்கள், மக்களை நோக்க விலங்குகள் இழிந்தவை ஆவது போல, கற்றவரைக் கருதத் தாமும் இழிந்தவர் ஆவர்.


42. கேள்வி

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. 411

கேள்வியால் அடைகின்ற அறிவே செல்வங்களுள் சிறந்த செல்வம் ஆகும்; அந்தக் கேள்விச் செல்வம் பிற செல்வங்களுள் எல்லாம் முதன்மையானதும் ஆகும்.

செவுக்குண வில்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும். 412

செவிக்கு உணவான கேள்வி இல்லாதபொழுது, உடலைக் காப்பதன் பொருட்டாக வயிற்றுக்கும் சிறிதளவான உணவு அறிவுள்ளவரால் தரப்படும்.

செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து. 413

செவியுணவு ஆகிய கேள்வியை உடையவர், இவ்வுலகத்தில் இருப்பவரானாலும், அவியுணவை ஏற்றுக் கொள்ளும் வானுலகத்துத் தேவர்களோடு ஒப்பாவார்கள்.

கற்றில னாயினுங் கேட்க அ·தொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை. 414

தான் முயன்று கற்கவில்லை என்றாலும், கற்றவரிடம் கேட்டாவது அறிவு பெற வேண்டும்; அது ஒருவன் தளர்ச்சி அடையும்போது ஊன்றுகோல் போலத் துணையாகும்.

இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல். 415

நல்ல ஒழுக்கம் உடையவரது வாய்ச்சொற்கள், வழுக்கும் சேற்றில் வழுக்காமல் செல்ல உதவும் ஊன்றுகோல் போல ஒருவனுக்கு எப்போதும் உதவியாக விளங்கும்.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 416

எவ்வளவு சிறிது என்ற போதும் நல்ல பேச்சுக்களையே கேட்கவேண்டும்; அது அந்த அளவுக்கேனும் சிறந்த பெருமையைக் கேட்டவனுக்குத் தவறாமல் தரும்.

பிழைத் துணர்ந்தும் பேதைமை சொல்லா ரிழைத்துணர்ந்
தீண்டிய கேள்வி யவர். 417

நுட்பமாகக் கற்றுணர்ந்த அறிவோடு கேள்வியறிவும் உடையவர்கள், பிறழ ஒன்றை உணர்ந்தாலும், தமக்குப் பேதைமை தருகின்ற சொற்களைச் சொல்லமாட்டார்கள்.

கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியால்
தோட்கப் படாத செவி. 418

கேள்வியால் துளைக்கப்படாத செவிகள், பிற ஒலிகளை எல்லாம் கேட்குமாயினும், உண்மையில் செவிடான காதுகளே ஆகும்.

நுணங்கிய கேள்விய ரல்லார் வணங்கிய
வாயின ராதல் அரிது. 419

நுண்மையான கேள்வி அறிவைப் பெறாதவர்கள், தாம் வணக்கமாகப் பேசும் வாயினர் ஆகுதல் அருமையே! கேள்வியறிவு பெற்றவர்கள் பணிவாகவே பேசுவார்கள்.

செவியிற் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்
அவியினும் வாழினும் என்? 420

கேள்வியாகிய அறிவுச் சுமையை உணராது, வாயால் அறியும் நாக்கின் சுவையுணர்வு மட்டுமே கொண்டவர்கள் இறந்தாலும் வாழ்ந்தாலும் ஒன்றுதான்.


43. அறிவு உடைமை

அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண். 421

இறுதிக்காலம் வரையும் காப்பாற்றும் கருவி அறிவு ஆகும்; பகைவருக்கும் உட்புகுந்து அழிக்க இயலாத கோட்டையும் அந்த அறிவு ஆகும்.

சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்ப தறிவு. 422

மனத்தை அது சென்ற இடங்களிலேயே செல்லவிடாமல் தீமைகளிலிருந்து விலக்கி, நன்மையில் மட்டுமே செல்லவிடுவது அறிவு ஆகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு. 423

எந்தப் பொருளைப் பற்றியும், எவரெவரிடமிருந்து கேட்பதானாலும், அப் பொருளினது மெய்யான தன்மைகளைக் காண்பதுதான் அறிவு ஆகும்.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு. 424

கேட்பவருக்குப் புரியும்படி எளிமையாகத் தான் விளக்கிச் சொல்லியும், பிறரின் பேச்சுக்களில் உள்ள நுண்மையான பொருளைக் காண்பதும், அறிவு ஆகும்.

உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும்
கூம்பலும் இல்ல தறிவு. 425

உயர்ந்தவர்களைத் தன்னுடையவர்களாகச் செய்து கொள்வதே அறிவு; அத் தொடர்பிலே முதலில் மகிழ்தலும் பின்னர் குவிதலும் இல்லாததும் அறிவு ஆகும்.

எவ்வ துறைவது உலகம் உலகத்தோடு
அவ்வ துறைவ தறிவு. 426

உயர்ந்தோர் எவ்வாறு வாழ்கின்றார்களோ, அவ்வாறே, அந்த உயர்ந்தவர்களோடு தானும் அங்ஙனமே வாழ்வதுதான் அறிவுடைமை ஆகும்.

அறிவுடையார் ஆவ தறிவார் அறிவிலார்
அ·தறி கல்லா தவர். 427

பின்னே வரப்போவதை முன்னாலேயே அறிபவர்களே அறிவுடையவர்; அவ்வாறு அறிந்து நடப்பதற்குக் கல்லாதவர்களே அறிவில்லாதவர் ஆவர்.

அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். 428

அஞ்ச வேண்டியவைகளுக்கு அஞ்சாமல் நடப்பது அறிவில்லாத தன்மை ஆகும்; அஞ்ச வேண்டியதற்கு அஞ்சி விலகி நடப்பதே அறிவுடையவர் செயலாகும்.

எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை
அதிர வருவதோர் நோய். 429

பின்னர் வரப்போவதை முன்னதாகவே அறிந்து காக்கும் அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும்படியாக வருவதான ஒரு துன்பமும் இல்லை.

அறிவுடையார் எல்லா முடையார் அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர். 430

அறிவுடையோர் எல்லா நன்மையுமே உடையவர் ஆவர்; அறிவில்லாதவர் எதனை உடையவரானாலும் எந்த நன்மையும் இல்லாதவரே ஆவர்.


44. குற்றம் கடிதல்

செருக்குஞ் சினமும் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து. 431

செருக்கும், சினமும், சிறுமைக் குணமும் இல்லாதவருடைய பெருஞ் செல்வமானது சான்றோரால் மதிக்கப்படும் தன்மையை உடையது ஆகும்.

இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு. 432

ஈயாத உலோபமும், மாட்சியில்லாத மானவுணர்வும், தகுதியில்லாத உவகையும் தலைவனாக இருப்பவனுக்குக் கேடுதரும் குற்றங்கள் ஆகும்.

தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார். 433

பழிச்சொல்லுக்கு வெட்கப்படுகின்றவர்கள், தினை அளவான சிறு குற்றம் தம்மிடம் வந்தாலும், அதனைப் பனையளவு பெரிதாகக் கருதி வருந்துவார்கள்.

குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் த்ரூஉம் பகை. 434

தனக்கு முடிவைத் தருகின்ற கொடிய பகை குற்றமே; ஆகவே குற்றம் செய்யாதிருப்பதே பொருளாகத் தன்னை எப்போதும் காத்துக் கொள்க.

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 435

குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும்.

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு? 436

தன் குற்றத்தையும் வராமல் நீக்கிக் கொண்டு, பிறர் குற்றங்களையும் கண்டறிந்து நீக்குவானானால், அரசனுக்கு என்ன குற்றம் உண்டாகும்?

செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும். 437

செல்வம் பெற்ற போது அதனாலே செய்ய வேண்டிய செயல்களைச் செய்யாமல் தவறியவனுடைய செல்வமானது, நிலைக்கும் தன்மையற்று, அழியும்.

பற்றுள்ளம் என்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று. 438

செல்வத்தின் மேல் பற்றுக் கொண்ட உள்ளம் எனப்படும் கஞ்சத்தனம், எந்தக் குற்றங்களோடும் எண்ணப்படும் ஒன்றாக இல்லாமற், பெருங் குற்றமாகும்.

வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை. 439

எப்போதும் தன்னையே வியந்து பேசுதல் கூடாது; நன்மை பயவாத செயல்களையும் ஒருபோதும் செய்ய விரும்புதலும் செய்தலும் கூடாது.

காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல். 440

தன் விருப்பத்தைப் பிறர் அறியாதபடி நுகர வல்லவனானால், அவனைப் பகைத்தவர் செய்யும் சூழ்ச்சிகள் எல்லாம் பயனில்லாமல் அழிந்து போகும்.


45. பெரியாரைத் துணைக்கோடல்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல். 441

அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அறிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொள்ளல் வேண்டும்.

உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல். 442

நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டில் துன்பம் வராதபடி முற்படக் காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ளல் வேண்டும்.

அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல். 443

பெரியோரையே விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக் கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெரும்பேறு ஆகும்.

தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை. 444

தன்னினும் பெரியோராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்து வருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும்.

சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைக் சூழ்ந்து கொளல். 445

தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ளல் வேண்டும்.

தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில். 446

தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை.

இடிக்குந் துணையாரை யாள்வரை யாரே
கெடுக்குந் தகைமை யவர். 447

இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?

இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும். 448

இடித்துச் சொல்லித் திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாத போதும், தானாகவே கெடுவான்.

முதலிலார்க ஊதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. 449

முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை.

பல்லார் பகை கொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல். 450

பலரோடும் பகைத்துக் கொள்வதை விட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும்.


46. சிற்றினம் சேராமை

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும். 451

பெரியோர் சிற்றினத்தைக் காணின் அஞ்சி ஒதுங்குவார்கள்; சிறியாரோ அதுவே தம் சுற்றமாகக் கருதித் தம்முடன் சேர்த்துக் கொள்வார்கள்.

நிலத்தியல்பால் நீர்திரிந் தற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு. 452

நிலத்தின் தன்மையால், அதிற் சேர்ந்த நீரின் தன்மை மாறுபடும்; அவ்வாறே, மாந்தர்க்கும் அவரவர் சேர்ந்த இனத்தின் தன்மைப்படியே அறிவும் ஆகும்.

மனத்தானாம் மாந்தர்க் குணர்ச்சி இனத்தானாம்
இன்னான் எனப்படுஞ் சொல். 453

மாந்தர்க்கு உணர்ச்சி என்பது மனத்தின் தன்மையால் உண்டாவதாகும்; இவன் இன்னவன் எனப்படும் சொல்லானது அவனவன் சேர்ந்த இனத்தாலே உண்டாகும்.

மனத்து ளதுபோலக் காட்டி ஒருவற்கு
இனத்துள தாகும் அறிவு. 454

ஒருவனது மனத்தில் உள்ளதுபோலக் காட்டினாலும், ஒருவனுக்கு அவன் சேர்ந்த இனத்தை யொட்டியதாகவே அறிவு உண்டாகும்.

மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும். 455

மனம் தூய்மை யாதலும், செய்யும் தொழில் தூய்மை யாதலும் ஆகிய இரண்டும், தான் சேர்ந்த இனத்தின் தூய்மையை ஒட்டியே வரும்.

மனந்தூயார்க் கெச்சம்நன் றாகும் இனந்தூயார்க்கு
இல்லைநன் றாகா வினை. 456

மனத்திலே தூய்மை உடையவர்களுக்கு எஞ்சி நிற்பதான புகழ் முதலியவை நன்றாக ஆகும்; சேர்ந்த இனம் தூய்மையானவர்க்கு நன்மையாகாத செயல் யாதுமில்லை.

மனநலம் மன்னுயிர்க் காக்கம் இனநலம்
எல்லாப் புகழும் தரும். 457

மனத்தின் நல்ல நிலையே மன்னுயிர்க்கு ஆக்கம் தரும்; இனத்தின் நல்ல துணையோ எல்லாவகையான புகழையும் ஒருவனுக்குத் தருவதாகும்.

மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து. 458

சான்றோர் மனநலத்தினை நல்லபடியே உடையவரானாலும், அவருக்குத் தாம் சேர்ந்திருக்கும் இனத்தது நலமே எல்லாப் புகழையும் தரும்.

மனநலத்தின் ஆகும் மறுமைமற் ற·தும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து. 459

மனத்தின் செம்மையாலே மறுமை இன்பம் உண்டாகும்; மற்று அந்த மறுமையும், சேர்ந்த இனத்தின் செம்மையால் நல்ல பாதுகாப்புடன் இருக்கும்.

நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல். 460

நல்ல இனத்தைக் காட்டிலும் துணையாவது உலகத்தில் யாதுமில்லை; தீய இனத்தை விட அல்லல் படுத்துவதும் உலகத்தில் யாதுமில்லை.


47. தெரிந்து செயல்வகை

அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல். 461

ஒரு செயலைச் செய்வதற்கு முன்பாக, அதனால் முதலில் அழியக்கூடியதும், பின்னர் ஆகிவரக்கூடியதும், கிடைக்கும் மிச்சமும் கருதிய பின்னரே செய்ய வேண்டும்.

தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல். 462

தொழில் தெரிந்த நண்பர்களுடன் கலந்து எதையும் ஆராய்ந்து செய்பவருக்கு, முடிவதற்கு அரிய பொருள் என்று சொல்லக் கூடியது யாதொன்றுமே இல்லை.

ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார். 463

வரப்போவதாகக் கருதும் ஆக்கத்தை எண்ணி, செய்துள்ள முதலீட்டையும் இழக்கின்ற முயற்சியினை அறிவுடையவர்கள் ஒரு போதும் மேற்கொள்ள மாட்டார்கள்.

தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர். 464

தமக்கு இகழ்ச்சி தருவதான ஒரு குறைபாட்டுக்கு அஞ்சுகிறவர்கள், ஊதியம் வரும் என்று தெளிவில்லாத செயலை ஒரு போதும் தொடங்க மாட்டார்கள்.

வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
பாத்திப் படுப்பதோ ராறு. 465

ஒரு செயலைப் பற்றி எல்லாவகையிலும் முற்றவும் ஆராயாமல் செய்யத் தொடங்குதல், பகைவரை நல்ல பயிருள்ள பாத்தியுள் நிலைபெறுத்துவது போன்ற செயலாகும்.

செய்தக்க அல்ல செயக் கெடும் செய்தக்க
செய்யாமை யானுங் கெடும். 466

செய்யத் தகுந்தது அல்லாது ஒரு செயலைச் செய்தாலும் பொருள் கெடும்; செய்யத் தகுந்த செயலைச் செய்யாமையாலும் பொருள் கெடும்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு. 467

நன்றாக எண்ணிய பின்னரே ஒரு செயலைச் செய்யத் துணிய வேண்டும்; ‘துணிந்த பின்னர் எண்ணுவோம்’ என்று எதையும் நினைப்பது குற்றமாகும்.

ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும். 468

செய்வதற்கு உரிய வழிகளிலே முயன்று செய்யப்படாத தொழிலானது, பலர் துணை நின்று பின்னர்க் காத்தாலும் கெட்டுப் போய்விடும்.

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை. 469

அவரவரது இயல்புகளைத் தெரிந்து கொண்டு, அவரவர்க்குத் தகுந்தபடி செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் கூடக் குற்றம் உண்டாகிவிடும்.

எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மோடு
கொள்ளாத கொள்ளாது உலகு. 470

உயர்ந்தோர் இகழ்ச்சியாக நினையாத செயல்களையே ஆராய்ந்து செய்யவேண்டும்; உயர்ந்தோர் தம் தகுதியோடு பொருந்தாதவற்றை ஏற்கவே மாட்டார்கள்.


48. வலியறிதல்

வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
துணைவலியும் தூக்கிச் செயல். 471

செயலில் வலிமையும், தன் வலிமையும், மாற்றானது வலிமையும், துணைசெய்வாரின் வலிமையும் ஆராய்ந்தே செயலைச் செய்ய வேண்டும்.

ஒல்வ தறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல். 472

தன்னாலே முடியக்கூடியவனை ஆராய்ந்து அறிந்து, அச்செயலிலேயே நிலைத்து நின்று முயற்சி செய்பவர்களுக்கு முடியாத செயல் எதுவும் இல்லை.

உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர். 473

தம்மிடமுள்ள வலிமையை அறியாதவராய், மனவெழுச்சியினாலே தூண்டப்பட்டுச் செயலைத் தொடங்கிவிட்டு, இடையிலே முரிந்து போனவர்கள் உலகிற் பலராவர்.

அமைந்தாங் கொழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும். 474

மற்றவரோடு பொருந்தி நடக்காதவனாகித் தன் வலிமை அளவை அறியாதவனும் ஆகி, தன்னை வல்லவன் என்று வியந்து நடப்பவன் விரைவிற் கெடுவான்.

பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டஞ்
சால மிகுத்துப் பெயின். 475

மென்மையான மயிலிறகை ஏற்றியுள்ள வண்டியும், அம் மயிலிறகையே அளவுக்கு மிகுதியாக ஏற்றினால் அச்சு முரிந்து கெடும்.

நுனிக்கொம்பர் ஏறினார் அ·திறந் தூக்கின்
உயிர்க்கிறுதி ஆகி விடும். 476

மரத்தின் நுனிக்கொம்பு வரையும் ஏறிவிட்டவர்கள், அதனையும் கடந்து மேலே செல்வதற்கு முயன்றால் அது அவர்கள் உயிருக்கே இறுதியாகி விடும்.

ஆற்றின் அறவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கு நெறி. 477

தன்னிடமுள்ள பொருளின் அளவைத் தெரிந்து, அதற்குத் தகுந்த அளவே கொடுத்து உதவுக; அது பொருளைப் போற்றி வழங்குவதற்குரிய நெறியாகும்.

ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை. 478

வருமானம் வருகின்ற வழியானது சிறிதாக இருந்தாலும், அது செலவாகிப் போகும் வழியானது விரியாதிருந்தால், அவனுக்குக் கேடில்லை.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றாக் கெடும். 479

தன்னுடைய செல்வத்தின் அளவை அறிந்து அதற்கு ஏற்றபடி வாழாதவனுடைய வாழ்க்கை உள்ளது போலத் தோன்றினாலும் இல்லாததாய்க் கெடும்.

உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும். 480

தன்னுடைய செல்வத்தின் அளவை ஆராயாது அளவு கடந்து உதவி வந்தால், அவன் செல்வத்தின் அளவும் விரைவில் கெட்டுப் போகும்.


49. காலமறிதல்

பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது. 481

தன்னை விட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கு தகுந்த காலம் வேண்டும்.

பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்
தீராமை ஆர்க்குங் கயிறு. 482

காலத்தோடு பொருந்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மை விட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அறிந்து செயின். 483

ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

ஞாலம் கருதினுங் கைகூடுங் காலம்
கருதி இடத்தாற் செயின். 484

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.

காலம் கருதி இருப்பர் கலங்காது
ஞாலம் கருது பவர். 485

உலகை வெற்றி கொள்ளக் கருதுகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

ஊக்க முடையான் ஒடுக்கம் பொருதகர்
தாக்கற்குப் பேருந் தகைத்து. 486

ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர் மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக்கடா பகையைத் தாக்குவதற்குப் பின் வாங்கும் தன்மையது.

பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து
உள்வேர்ப்பர் ஒள்ளி யவர். 487

அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்ய அந்தக்கணமே தன் சினத்தை வெளியே காட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

செறுநரைக் காணின் சுமக்க இறுவரை
காணின் கிழக்காம் தலை. 488

தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவுகாலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.

எய்தற் கரியது இயைந்தக்கால் அந்நிலையே
செய்தற் கரிய செயல். 489

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்த போது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றி பெற வேண்டும்.

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்
குத்தொக்க சீர்த்த இடத்து. 490

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து; காலம் வாய்த்த போதில் கொக்கு மீனைக் குத்தினாற் போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.


50. இடன் அறிதல்

தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும்
இடங்கண்ட பின்அல் லது. 491

பகைவரை முற்றுவதற்குத் தகுதியான இடத்தைக் கண்டபின் அல்லாமல், எந்தச் செயலையும் செய்ய வேண்டாம்; அவர் வலிமையை இகழாமலும் இருக்க வேண்டாம்.

முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கும் அரண்சேர்ந்தாம்
ஆக்கம் பலவுந் தரும். 492

மாறுகொள்ள வல்லவரான வலிமையாளருக்கும், அரணைச் சேர்ந்திருத்தலினால் உண்டாகும் வெற்றியானது பலவகைப் பயன்களையும் தரும்.

ஆற்றாரும் ஆற்றி அடுப இடனறிந்து
போற்றார்கண் போற்றிச் செயின். 493

தகுந்த இடத்தை அறிந்து கொண்டு, பகைவர்களோடு போராடுதலைச் சிறப்பாகச் செய்தால், அவர்க்கு எதிர்நிற்க ஆற்றாதவரும், போரிட்டு அவரை அழிப்பர்.

எண்ணியார் எண்ணம் இழப்பர் இடனறிந்து
துன்னியார் துன்னிச் செயின். 494

தகுதியான இடத்தை ஆராய்ந்து பற்றிக் கொண்டவர்கள், போரையும் நெருங்கிச் செய்தாரானால், அவரை வெல்ல எண்ணியவர், தம் எண்ணம் இழப்பார்கள்.

நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற. 495

ஆழமான நீரினுள் மற்றைய உயிர்களை முதலை வெற்றி கொள்ளும்; நீரை விட்டு வெளியே வந்தால், முதலையை மற்றைய விலங்குகள் கொன்றுவிடும்.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. 496

நிலத்திலே ஓடுவதற்குரிய வலிய சக்கரங்களைக் கொண்ட தேர்கள் கடலில் ஓடா; கடலில் ஓடும் கப்பல்களும் நிலத்தில் ஓடமாட்டா.

அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின். 497

செய்ய வேண்டியவைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து தகுதியான இடத்திலும் செய்வாரானால், அவருக்கு மனவுறுதியைத் தவிரத் துணை எதுவும் வேண்டாம்.

சிறுபடையான் செல்லிடம் சேரின் உறுபடையான்
ஊக்கம் அழிந்து விடும். 498

சிறு படையினை உடையவனும், தன் வலிமையைச் செலுத்தக்கூடிய இடத்தில் சேர்ந்திருந்தால், பெரும்படை உடையவனும் தன் முயற்சியில் தோல்வி காண்பான்.

சிறைநலனும் சீரும் இலரெனினும் மாந்தர்
உறைநிலத்தோடு ஒட்டல் அரிது. 499

கடக்க முடியாத அரணும், பிற சிறப்புக்களும் இல்லாதவரானாலும், அவர்கள் வாழும் நாட்டினுள் சென்று தாக்கி அவரை வெற்றி பெறுதல் அரிதாகும்.

காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு. 500

போர்க்களத்தில் வேலேந்திய வீரரையும் கோத்து எடுத்த கொம்புடைய அஞ்சாத களிற்றையும், அதன் கால் ஆழ்கின்ற சேற்று நிலத்தில், சிறுநரிகள் கொன்றுவிடும்.


51. தெரிந்து தெளிதல்

அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின்
திறந்தெரிந்து தேறப் படும். 501

அறம், பொருள், இன்பம், தன் உயிருக்கு அச்சம் என்னும் நான்கினது வகையாலும் ஆராய்ந்தே, ஒருவன் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும்.

குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும்
நாணுடையான் சுட்டே தெளிவு. 502

நல்ல குடியிலே பிறந்து, குற்றங்கள் இல்லாதவனாய், பழிச் சொல் வரக்கூடாதென்று அஞ்சும் மனமுள்ளவனிடத்திலேயே நம்பிக்கை வைக்க வேண்டும்.

அரியகற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு. 503

அருமையான நூல்களைக் கற்று, குற்றங்கள் எதுவும் இல்லாதவரிடத்திலும், ஆராய்ந்தால் அறியாமை இல்லாமல் இருப்பது என்பது அருமையாகும்.

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல். 504

ஒருவனது குணங்களையும் குற்றங்களையும் ஆராய்ந்து, அவை இரண்டினுள் மிகுதியானவற்றைத் தெரிந்து, அதற்குத் தகுந்தபடியே அவனைக் கொள்ள வேண்டும்.

பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைக் கல். 505

ஒருவர் தாம் அடையும் பெருமைக்கும், மற்றொருவர் தாம் அடையும் சிறுமைக்கும், அவரவர்களின் செயல்களே தகுந்த உரைகல் ஆகும்.

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி. 506

உலகப்பற்று இல்லாதவரை நம்ப வேண்டாம்; அவர் பற்றில்லாதவர்; அதனால் பிறர் கூறும் பழிச் சொல்லுக்கு வெட்கப்பட மாட்டார்கள்.

காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல்
பேதைமை எல்லாந் தரும். 507

அறிய வேண்டியவைகளை அறியாத ஒருவரைத் துணையாக, அன்புடைமை காரணமாகத் தேர்ந்து கொண்டால் எல்லாவகையான அறியாமையையும் அது தரும்.

தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை
தீரா இடும்பை தரும். 508

தெளிவாக ஆராயாமல் ஒருவனைத் துணையாக நம்பியவனுக்கு அவனுக்கு மட்டுமின்றி அவன் வழிமுறையில் வருபவர்களுக்கும், தீராத துன்பம் உண்டாகும்.

தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின்
தேறுக தேறும் பொருள். 509

ஆராயாமல் யாரையுமே நம்புதல் வேண்டாம்; ஆராய்ந்து நம்பியதன் பின்னால், அவர் சொல்லும் பொருள்களை நல்லவையாகவே நம்புதல் வேண்டும்.

தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்
தீரா இடும்பை தரும். 510

ஒருவனைப் பற்றி ஆராயாமல் நம்புவதும், அப்படி ஆராய்ந்து நம்பியவனிடத்திலே சந்தேகம் கொள்ளுவதும் தீராத துன்பத்தையே தரும்.


52. தெரிந்து வினையாடல்

நன்மையும் தீமையும் நாடி நலம்புரிந்த
தன்மையான் ஆளப் படும். 511

ஒரு செயலால் வருகின்ற நன்மையையும் தீமையையும் ஆராய்ந்து, நல்லதைச் செய்யும் தன்மையுடையவனையே அந்தச் செயலுக்குப் பயன்படுத்த வேண்டும்.

வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை
ஆராய்வான் செய்க வினை. 512

செல்வம் வருவதற்குரிய வழிகளைப் பெருகச் செய்து, அதனால் தன்னை வளமைப்படுத்திக் கொண்டு, மேலும் தகுந்தவற்றை ஆராய்பவனே செயலைச் செய்வானாக.

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும்
நன்குடையான் கட்டே தெளிவு. 513

அன்பு, அறிவு, தெளிவு, பேராசை இல்லாமை என்னும் இந்நான்கு குணங்களும் நன்றாகக் கொண்டவனையே செயலுக்கு உரியவனாகத் தெளிய வேண்டும்.

எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர். 514

எல்லா வகையிலும் ஆராய்ந்து தெளிந்த போதும், செய்யும் செயலின் வகையினாலே பொருத்தமற்று வேறுபடும் மாந்தர்கள் உலகில் பலர் ஆவர்.

அறிந்தாற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தானென்று ஏவற்பாற் றன்று. 515

செய்யும் செயலைப் பற்றி நன்றாக அறிந்து, இடையில் வரும் துன்பங்களைத் தாங்கிச் செய்பவனை அல்லாமல், இவன் சிறந்தவன் என்று யாருக்கும் வேலை தரக்கூடாது.

செய்வானை நாடி வினைநாடிக் காலத்தோடு
எய்த உணர்ந்து செயல். 516

செய்பவனைப் பற்றி நன்கு ஆராய்ந்து, செய்யும் செயலையும் ஆராய்ந்து, செய்யத்தகுந்த காலத்தோடு பொருந்தவே செயலைச் செய்ய வேண்டும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல். 517

இந்தச் செயலை, இன்ன காரணத்தால், இவன் செய்து முடிப்பான் என்று ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே செய்யுமாறு விட்டு விடுதல் வேண்டும்.

வினைக் குரிமை நாடிய பின்றை அவனை
அதற்குரிய னாகச் செயல். 518

இந்த வேலைக்குத் தகுந்தவன் இவன் என்று ஆராய்ந்து கண்ட பின்னால், அவனையே அந்த வேலைக்கு உரியவனாகச் செய்ய வேண்டும்.

வினைக்கண் வினையுடையான் கேண்மைவே றாக
நினைப்பானை நீங்கும் திரு. 519

எப்போதும் தன் தொழிலிலே முயற்சி உடையவனது நட்பினைப் பாராட்டாமல், வேறாக நினைப்பவனை விட்டுச் செல்வம் தானும் நீங்கிவிடும்.

நாடோ றும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடா துலகு. 520

தொழிலைச் செய்பவன் தன் கடமையைக் கோணாமல் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் மன்னன் நாள்தோறும் அத்தகையவனையே செயலில் வைப்பானாக.


53. சுற்றந் தழால்

பற்றற்ற கண்ணும் பழைமைபா ராட்டுதல்
சுற்றத்தார் கண்ணே உள. 521

ஒருவன் வறுமையாளன் ஆகிய போதும், பழையபடியே அவனிடம் அன்பு பாராட்டுதல் என்பது சுற்றத்தார் இடம் மட்டுமே காணப்படும் தனி இயல்பாகும்.

விருப்பறாச் சுற்றம் இயையின் அருப்பறா
ஆக்கம் பலவும் தரும். 522

அன்பில் நீங்காத சுற்றத்தார் அமைந்தனரானால், அது குறைவில்லாமல் வளருகின்ற பல செல்வ நலங்களையும் ஒருவனுக்குக் கொடுப்பதாகும்.

அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று. 523

சுற்றத்தாரோடு மனங்கலந்து பழகாத ஒருவனுடைய வாழ்வானது, கரையில்லாத குளப்பரப்பிலே நீர் நிரம்பினாற் போலப் பயனற்றதாகும்.

சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன். 524

சுற்றத்தாரால் தான் சூழ்ந்திருக்கும்படியாக வாழ்தலே, ஒருவன் செல்வத்தைப் பெற்றதனாலே அடைந்த பயனாக இருக்க வேண்டும்.

கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும். 525

சுற்றத்தார்க்கு வேண்டிய பொருளைக் கொடுத்தாலும், அவரோடு இனிதாகப் பேசுதலும் செய்வானாயின், அவன் சுற்றத்தார் பலராலும் சூழப்படுவான்.

பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல். 526

மிகுதியாகக் கொடுக்கும் இயல்புள்ளவனாயும், சினத்தை விரும்பாதவனாயும் ஒருவன் இருந்தால், அவனைப் போல் சுற்றம் உடையவர் உலகில் யாரும் இல்லை.

காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள. 527

காக்கை உணவைக் கண்டதும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி உடனிருந்தே உண்ணும் அத்தகைய இயல்பினருக்கே சுற்றப் பெருக்கமும் உண்டாகும்.

பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர். 528

எல்லாரையும் ஒரே தன்மையாகப் பொதுப்பட நோக்காது. அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால், அச்சிறப்பைக் கருதிச் சுற்றத்தார் சூழ்வர்.

தமராகிக் தற்றுறந்தார் சுற்றம் அமராமைக்
காரணம் இன்றி வரும். 529

சுற்றத்தாராக இருந்து தன்னைப் பிரிந்தவர்கள், பிரிவதற்கு ஏற்பட்ட காரணத்தை நீக்கிவிட்டால், மீண்டும் அவர்களே வந்து சேர்ந்திருப்பார்கள்.

உழைப்பிரிந்து காரணத்தின் வந்தானை வேந்தன்
இழைத் திருந்து எண்ணிக் கொளல். 530

காரணம் இல்லாமல் தன்னிடமிருந்து பிரிந்து, பின் ஒரு காரணத்தால் தன்பால் வந்த உறவினனை, அரசன் அதனைச் செய்து அவனைத் தழுவிக் கொள்ளவேண்டும்.


54. பொச்சாவாமை

இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு. 531

சிறப்பான உவகையாலே மகிழ்ச்சியடைந்து, அதனால் கொள்ளும் மறதியானது, அளவுகடந்து கொள்ளும் சினத்தைக் காட்டிலும் தீமை தருவதாகும்.

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக் கொன் றாங்கு. 532

நாளுக்குநாள் பெருகும் வறுமைத் துயரமானது ஒருவனது அறிவைக் கெடுத்தலைப் போல, மறதியானது, ஒருவனது புகழையும் தவறாமல் கெடுத்து விடும்.

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு. 533

மறதி உடையவர்களுக்கு புகழ் உடைமை என்பது இல்லை. அது உலகத்திலுள்ள எத்தகைய நூலோர்க்கும் ஒத்ததாக விளங்கும் ஒரு முடிவு ஆகும்.

அச்ச முடையார்க்கு அரணில்லை ஆங்கில்லை
பொச்சாப் புடையார்க்கு நன்கு. 534

அச்சம் உடையவர்களுக்கு அரண்காவல் இருந்தும் பயனில்லை, அவ்வாறே மறதி உடையவர்களுக்கு நல்ல செல்வநலம் இருந்தாலும் அதனால் பயன் இல்லை.

முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும். 535

துன்பம் வருவதற்கு முன்னதாகவே தன்னைக் காத்துக் கொள்ளாமல் மறதியாக இருந்தவன், பின்னர்த் துன்பம் வந்த போது, தன்பிழையை நினைத்து வருந்துவான்.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை
வாயின் அதுவொப்பது இல். 536

மறதியில்லாத இயல்பு எவரிடத்தும் எக்காலத்தும் குறையாமல் இருந்தால், அதற்கு ஒப்பாக நன்மை தருவது வேறு எதுவும் இல்லை.

அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின். 537

மறவாமை என்னும் கருவியினாலே எதனையும் பேணிச் செய்தால், செய்வதற்கு அரியன என்று நினைத்துக் கைவிடும் செயல்களும் இல்லையாகும்.

புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல். 538

சான்றோர்கள் சிறந்தவையாகப் போற்றும் கடமைகளைப் போற்றிச் செய்தல் வேண்டும். அவ்வாறு செய்யாமல் மறந்தவருக்கு எழுமையும் நன்மை இல்லை.

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாந்தம்
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து. 539

தாம், தம்முடைய மகிழ்ச்சியினாலே செருக்கடையும் போது, முன்னர் அப்படிப்பட்ட மகிழ்ச்சியினாலே மறதியடைந்து கெட்டழிந்தவர்களை நினைத்துப் பார்க்க வேண்டும்.

உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின். 540

தான் அடையக் கருதியதை இடைவிடாமல் மறதியின்றி நினைக்கக் கூடுமானால், ஒருவன், தான் நினைத்ததை அடைதல் என்பது எளிதாயிருக்கும்.


55. செங்கோன்மை

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மாட்டும்
தேர்ந்துசெய் வ·தே முறை. 541

நடுநிலைமை தவறாமல், யாரிடத்தும் இரக்கம் காட்டாமல், குற்றத்தின் கடுமையை ஆராய்ந்து, அதற்குத் தகுந்த தண்டனை விதிப்பதே அரசனுக்கு முறையாகும்.

வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோல் நோக்கி வாழுங் குடி. 542

மழையின் செம்மையை எதிர்பார்த்து உலகத்து உயிர்கள் எல்லாம் வாழும்; மன்னவனின் செங்கோன்மையை எதிர்பார்த்துக் குடிகள் வாழ்வார்கள்.

அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல். 543

அந்தணரது நூல்களுக்கும், உலகில் அறம் நிலைப்பதற்கும் அடிப்படையாக நின்றது, மன்னவனது அறம் தவறாத செங்கோன்மையே ஆகும்.

குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு. 544

குடிகளை அணைத்துக் கொண்டு செங்கோல் செலுத்தும் மாநிலத்து வேந்தனின் அடிகளைத் தழுவி, இவ்வுலகத்து வாழ்வும் நிலைபெறுவதாகும்.

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு. 545

அரசனுக்குரிய இயல்போடு செங்கோல் செலுத்தும் மன்னவனின் நாட்டிலே, பருவமழையும், விளைபொருள்களும் ஒருங்கே மலிந்திருக்கும்.

வேலன்று வென்றி தருவது மன்னவன்
கோலதூஉங் கோடா தெனின். 546

மன்னவனுக்கு வெற்றியளிப்பது அவன் கையிலுள்ள வேல் அல்ல; அவன் செங்கோன்மை கோணாமல் இருந்தானால் அதுவே வெற்றி அளிப்பதாகும்.

இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின். 547

உலகத்தாரை எல்லாம் மன்னவன் காப்பாற்றி வருவான்; முறை தவறாமல் அவன் செங்கோல் செலுத்தி வந்தால், அது அவனைக் காப்பாற்றி நிற்கும்.

எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன்
தண்பதத்தான் தானே கெடும். 548

முறையிட வருபவரது காட்சிக்கு எளியவனாய், அவர்கள் குறைகளைக் கேட்டு ஆராய்ந்து முறைசெய்யாத மன்னவன், தாழ்ந்த நிலையிலே சென்று தானே கெடுவான்.

குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல்
வடுவன்று வேந்தன் தொழில். 549

குடிகளைப் பகைவரிடமிருந்து காத்தும், அவர்களுக்கு நன்மை செய்து பேணியும், குற்றங்களை நீக்கியும் முறை செய்தால் வேந்தனுக்குக் குற்றம் இல்லை; அதுவே அவன் தொழில்.

கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர். 550

கொடிய செய்வாரைக் கொலைத் தண்டனையால் தண்டித்தும் மற்றவர்களை அருளோடு காத்தும் முறைசெய்தல், பசும் பயிரில் களையெடுப்பது போன்ற சிறந்த செயலாகும்.


56. கொடுங்கோன்மை

கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து. 551

குடிகளை வருந்தச் செய்யும் செயல்களையே மேற்கொண்டு தீமை செய்து ஆட்சி நடத்துகிற வேந்தன், கொலையையே தொழிலாகக் கொண்டவரிலும் கொடியவனாவான்.

வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும்
கோலொடு நின்றான் இரவு. 552

அரசன் குடிகளிடம் முறை கடந்து பொருளைக் கேட்பது, கையிலே வேலோடு நிற்கும் கள்வன், ‘எல்லாவற்றையும் தந்துவிடு’ என்று கேட்பதைப் போன்றதாகும்.

நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும். 553

நாட்டிலே நாள்தோறும் ஏற்படும் நிலைமையை ஆராய்ந்து தகுந்தபடி முறைசெய்யாத மன்னவன், நாளுக்கு நாள் தன் நாட்டையும் கெடுத்துவிடுவான்.

கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு. 554

மேல் நடப்பதைப் பற்றி கருதாமல், முறை தவறி அரசாளுகின்ற மன்னவன், தன் பொருள் வளத்தையும், நாட்டு மக்களது அன்பையும், ஒருங்கே இழந்து விடுவான்.

அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை. 555

கொடுங்கோல் ஆட்சியால் அல்லல்பட்ட மக்கள், அதைப் பொறுக்கமாட்டாது அழுத கண்ணீரே, ஓர் அரசனின் செல்வத்தை அழிக்கும் படை ஆகும்.

மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அ·தின்றேல்
மன்னாவாம் மன்னர்க் கொளி. 556

செங்கோன்மையால் தான் மன்னர்க்குப் புகழ் நிலைக்கிறது; அந்தச் செங்கோன்மை இல்லை என்றால், பிறவற்றால் வரும் புகழ் எல்லாம் நிலை பெறாது.

துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு. 557

மழையில்லாத நிலைமை உலகத்துக்கு எத்தகைய துன்பம் தருமோ, அவ்வாறே அரசனின் அருளில்லாத தன்மை, அவன் நாட்டில் வாழ்பவருக்குத் துன்பம் தரும்.

இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா
மன்னவன் கோற்கீழ்ப் படின். 558

முறைப்படி ஆட்சி செய்யாத மன்னவனின் கொடுங்கோலின்கீழ் வாழ்ந்திருந்தால், ஏழ்மையைக் காட்டிலும், செல்வம் உடைமையே துன்பம் தரும்.

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல். 559

ஆட்சிமுறை கோணி மன்னவன் ஆட்சி செய்தால், பருவ மழையானது தவறிப் போக, மேகமும் வேண்டுங்காலத்து மழை பொழியாது ஒதுங்கிப் போகும்.

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின். 560

காவலன் முறையோடு நாட்டைக் காத்து வராவிட்டால், அந்நாட்டிலே பசுக்களும் பால்வளம் குன்றும்; அறு தொழிலோரும் மறைநூல்களை மறப்பார்கள்.


57. வெருவந்த செய்யாமை

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து. 561

ஒருவனுடைய குற்றத்தைத் தகுந்த வழிகளாலே ஆராய்ந்து, மீளவும் அதைச் செய்யாதபடி, குற்றத்திற்குத் தகுந்தபடி தண்டிப்பதே வேந்தன் கடமையாகும்.

கடிதோச்சி மெல்ல எறிக நெடிதாக்கம்
நீங்காமை வேண்டு பவர். 562

நெடுங்காலம் ஆக்கம் நீங்காமல் இருத்தலை விரும்புகிறவர்கள், குற்றஞ் செய்தவரைத் தண்டிக்கும் போது; கடுமையைக் காட்டினாலும் அளவோடு தண்டிப்பாராக.

வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும். 563

குடிகள் அச்சம் அடையும் செயல்களைச் செய்கின்ற கொடுங்கோல் அரசன், மிகவும் விரைவாகவே கெட்டுப் போய் அழிவை அடைவான்.

இறைகடியன் என்றுரைக்கும் இன்னாச்சொல் வேந்தன்
உறைகடுகி ஒல்லைக் கெடும். 564

‘எம் அரசன் கடுமையானவன்’ என்று மக்கள் சொல்லும் பழிச்சொல்லுக்கு ஆளாகிய வேந்தன், தன் ஆயுளும் விரைவில் கெட்டுப் போக, அழிவை அடைவான்.

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம்
பேஎய்கண் டன்னது உடைத்து. 565

எளிதாகக் காணமுடியாத தன்மையும், கடுமையான முகங்காட்டும் இயல்பும் உள்ளவனின் பெருஞ்செல்வம், பேயால் கவனித்துக் காக்கும் புதையல் போன்றதாகும்.

கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும். 566

கடுமையான பேச்சும், இரக்கமற்ற தன்மையும் உடையவனானால், அவ்வரசனது பெருஞ்செல்வமும் நீடித்திருக்காமல் தேய்ந்து அப்போதே கெடும்.

கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன்
அடுமுரண் தேய்க்கும் அரம். 567

கடுமையான சொல்லும், முறை கடந்த தண்டனையும், அவ்வரசனுடைய பகைவரை வெல்லும் வலிமையைத் தேய்த்து அழிக்கும் அரமாகும்.

இனத்தாற்றி எண்ணாத வேந்தன் சினத்தாற்றிச்
சீறிற் சிறுகும் திரு. 568

அமைச்சர் முதலானவரோடு கலந்து ஆராய்ந்து செய்யாமல், தன் சினத்தின் வழியிலேயே சென்று பிறரைச் சீறுவானானால், அவனுடைய செல்வம் சுருங்கும்.

செருவந்த போழ்திற் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும். 569

போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்.

கல்லார்ப் பிணிக்கும் கடுங்கோல் அதுவல்லது
இல்லை நிலக்குப் பொறை. 570

கொடுங்கோல் ஆட்சியானது மூடர்களையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும்; அந்த ஆட்சியை அல்லாமல் பூமிக்குப் பாரம் என்பது வேறு யாதும் இல்லை.


58. கண்ணோட்டம்

கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை
உண்மையான் உண்டிவ் வுலகு. 571

‘கண்ணோட்டம்’ என்று சொல்லப்படுகின்ற மிகப் பெரிய அழகு இருப்பதனாலேதான். இவ்வுலகமும் அழிவு அடையாமல் நிலைப்பெற்றிருக்கிறது.

கண்ணோட்டத் துள்ளது உலகியல் அ·திலார்
உண்மை நிலக்குப் பொறை. 572

உலக நடைமுறை என்பது கண்ணோட்டத்தினால் நடந்து வருவதே; ஆகவே, கண்ணோட்டம் இல்லாதவர்கள் இருப்பது உலகத்திற்கு வீண் சுமைதான்.

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண். 573

பொருளோடு பாடல் பொருந்தவில்லை என்றால் அந்த இசையினால் பயன் இல்லை; அது போலவே, கண்ணோட்டத்தோடு அமையாத கண்களாலும் பயன் இல்லை.

உளபோல் முகத்தெவன் செய்யும் அளவினால்
கண்ணோட்டம் இல்லாத கண். 574

தேவையான அளவுக்குக் கண்ணோட்டம் இல்லாத கண்ணானது, முகத்திலே இருப்பதுபோலத் தோன்றுவதைத் தவிர, உடையவனுக்கு என்ன நன்மையைத் தரும்?

கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அ·தின்றேல்
புண்ணென்று உணரப் படும். 575

கண்ணுக்கு அழகுதரும் ஆபரணம் கண்ணோட்டமே! அந்தக் கண்ணோட்டமாகிய ஆபரணம் இல்லையானால், அது ‘புண்’ என்றே சான்றோரால் கருதப்படும்.

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ
டியைந்துகண் ணோடா தவர். 576

கண்ணோடு பொருந்தியவராக இருந்தும், கண்ணோட்டம் ஆகிய செயலைச் செய்யாதவர்கள், மண்ணோடு பொருந்தியுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல். 577

கண்ணோட்டம் இல்லாதவர்கள், கண்கள் இருந்தாலும் குருடர்களே; கண்ணுடையவர்கள், கண்ணோட்டம் இல்லாமல் இருத்தல் என்பது பொருத்தமில்லை.

கருமம் சிதையாமல் கண்ணோட வல்லார்க்கு
உரிமை உடைத்திவ் வுலகு. 578

தொழிலே கெடுதல் ஏற்படாமல், எவரிடமும் கண்ணோட்டத்துடன் நடந்து கொள்ள வல்லவர்களுக்கு, இவ்வுலகமே உரிமை உடையதாகும்.

ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. 579

தம்மை வருத்தும் தன்மை உடையவரிடத்திலும், கண்ணோட்டம் உடையவராக, அவரது குற்றத்தையும் பொறுத்து நடக்கும் பண்பே சிறந்ததாகும்.

பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர். 580

விரும்பத்தகுந்த ‘கண்ணோட்டம்’ என்னும் நாகரிகத்தை விரும்பும் சான்றோர்கள், பழகியவர் நஞ்சைப் பெய்வதைக் கண்டாலும், அதனை உண்டு அமைவார்கள்.


59. ஒற்றாடல்

ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண். 581

ஒற்றர்களும், புகழ் அமைந்த அறநூலும் என்னும் இந்த இரண்டு பகுதியையுமே, ஒரு மன்னன் தனக்குரிய இரு கண்களாகக் கொள்ளல் வேண்டும்.

எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில். 582

எல்லாருக்கும் நிகழ்கின்ற எல்லாவற்றையும், எல்லாக் காலத்திலும், மிகவும் விரைவாக ஒற்றர்மூலம் அறிந்து கொள்ளுதல், வேந்தனுக்கு உரிய தொழிலாகும்.

ஒற்றினான் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல். 583

பகைநாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர்மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளையும் ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.

வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று. 584

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்கு உரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர், என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே, ஒற்றரின் கடமை.

கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று. 585

சந்தேகப்படாத மாற்றுருவுடன், எவருடைய பார்வைக்கும் அஞ்சாமல், அறிந்ததைத் தன் அரசனைத் தவிரப் பிறருக்கு வெளிப்படுத்தாமலிருக்க வல்லவே ஒற்றன்.

துறந்தார் படிவத்த ராகி இறந்தாராய்ந்து
என்செயினும் சோர்விலது ஒற்று. 586

புகமுடியாத இடங்களுக்கும், துறவியர் வேடத்தோடு சென்று, அனைத்தையும் ஆராய்ந்து, எவர் யாது செய்தாலும் அதனால் சோர்வடையாதவனே ஒற்றன்.

மறைந்தவை கேட்கவற் றாகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று. 587

மறைவான பேச்சுக்களையும் கேட்டு அறியக்கூடிய திறமை உள்ளவனாகி, தான் அறிந்தவற்றில் எவ்விதச் சந்தேகமும் இல்லாதவனே நல்ல ஒற்றன்.

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல். 588

ஓர் ஒற்றன் அறிந்து வந்து சொன்ன செய்தியையும், மற்றுமோர் ஒற்றனை ஏவி அறிந்து வருமாறு செய்து, உண்மையை ஒப்பிட்டு அறிதல் வேண்டும்.

ஒற்றெற் றுணராமை ஆள்க உடன்மூவர்
சொற்றொக்க தேறப் படும். 589

ஓர் ஒற்றன் மற்றோர் ஒற்றனை அறியாதபடி பார்த்துக் கொள்வதோடு, இப்படி மூன்று ஒற்றர் சொல்வதையும் ஒருங்கே ஆராய்ந்தே, உண்மை தெளியவேண்டும்.

சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின்
புறப்படுத்தான் ஆகும் மறை. 590

பிறர் அறியும்படியாக ஒற்றனுக்குச் சிறப்புக்களைச் செய்யக் கூடாது; செய்தால், மறைக்க வேண்டிய இரகசியத்தை அரசனே வெளிப்படுத்தினவன் ஆவான்.


60. ஊக்கம் உடைமை

உடையர் எனப்படுவது ஊக்கம் அ· தில்லார்
உடையது உடையரோ மற்று. 591

ஊக்கம் உடைமையே ‘உடையவர்’ என்று சொல்லப்படும் சிறப்புக்கு உரியது; ஊக்கம் இல்லாதவர் வேறு எதைப் பெற்றிருந்தாலும் உடையவர் அல்லர்.

உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை
நில்லாது நீங்கி விடும். 592

ஊக்கம் உடைமையே ஒருவனது நிலையான செல்வம் ஆகும்; மற்றைய செல்வங்கள் எல்லாம் நிலைத்திருக்காமல் ஒரு காலத்தில் நீங்கியும் போய்விடும்.

ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம்
ஒருவந்தம் கைத்துடை யார். 593

உறுதியான ஊக்கத்தையே தம்முடைய கைப்பொருளாகப் பெற்றவர்கள், தாம் செல்வம் இழந்தபோதும், இழந்தோமே என்று நினைத்து, வருந்த மாட்டார்கள்.

ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்க முடையா னுழை. 594

தளராத ஊக்கம் உடையவர்களிடத்திலே, ஆக்கம், தானே அவரிருக்கும் இடத்திற்கு வழிகேட்டுக் கொண்டு போய்ச் சென்று, அவரிடம் நிலையாகச் சேர்ந்திருக்கும்.

வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனையது உயர்வு. 595

நீர்ப்பூக்களினது தண்டின் நீளமானது நீரின் ஆழத்தின் அளவினது ஆகும்; அதுபோலவே, மக்களின் உயர்வும் அவர்களுடைய ஊக்கத்தின் அளவினதே ஆகும்.

உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல் மற்றது
தள்ளினுந் தள்ளாமை நீர்த்து. 596

உயர்ந்த நிலைகளையே நினைவில் எல்லாரும் நினைத்து வரவேண்டும்; அந்த நிலை கைகூடாத போதும், அப்படி நினைப்பதை மட்டும் கைவிடவே கூடாது.

சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதையம்பிற்
பட்டுப்பா டூன்றுங் களிறு. 597

தன்னுடம்பில் தைத்துள்ள அம்புகளாலே வேதனை அடைந்த போதும், களிறு, தன் பெருமையை நிலைநிறுத்தும்; அவ்வாறே ஊக்கமுள்ளவர் அழிவிலும் தளரமாட்டார்கள்.

உள்ளம் இலாதவர் எய்தார் உலகத்து
வள்ளியம் என்னுஞ் செருக்கு. 598

‘யாம் வள்ளன்மை உடையோம்’ என்னும் இறுமாந்த நிலையை, ஊக்கம் இல்லாதவர்கள், இவ்வுலகத்தில் ஒரு போதும் அடையவே மாட்டார்கள்.

பரியது கூர்ங்கோட்டது ஆயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின். 599

பெருத்த உடலும் கூர்மையான கொம்புகளும் இருந்தாலும், யானையானது, மனவூக்கமுள்ள புலி தன் மீது பாய்ந்தால், தான் அச்சம் கொள்ளும்.

உரமொருவற்கு உள்ள வெறுக்கைஅ· தில்லார்
மரம்மக்க ளாதலே வேறு. 600

ஒருவனுக்கு உள்ள செல்வம் என்பது ஊக்கமே! அந்த ஊக்கம் ஆகிய செல்வம் இல்லாதவர், உருவத்தால் மக்கள் போலத் தோன்றினாலும், மரங்களைப் போன்றவரே!


61. மடியின்மை

குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும்
மாசூர மாய்ந்து கெடும். 601

ஒருவன் வந்து பிறந்த குடியென்னும் அணையா விளக்கானது, சோம்பல் என்னும் மாசு படரப்பட, ஒளி மழுங்கி, முடிவில் அணைந்து போய்விடும்.

மடியை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர். 602

தாம் பிறந்த குடியை மேன்மேலும் உயர்ந்த குடியாக உயர்த்த விரும்புகிறவர்கள், சோம்பலை அறவே விலக்கி, முயற்சியாளராக விளங்க வேண்டும்.

மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த
குடிமடியும் தன்னினும் முந்து. 603

விலக்க வேண்டிய சோம்பலைத் தன்னிடத்தே கொண்டிருக்கும் அறிவற்றவன், பிறந்த குடியின் பெருமையானது, அவன் அறிவதற்கு முன்பாகவே அழிந்துவிடும்.

குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து
மாண்ட உஞற்றி லவர்க்கு. 604

சோம்பலிலே ஆழ்ந்துவிட்டுச் சிறந்த முயற்சிகளிலே ஈடுபடாமல் இருப்பவருடைய குடிப்பெருமையும் கெட்டு, குற்றமும் நாளுக்கு நாள் பெருகும்.

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமக் கலன். 605

சோம்பல், எதையும் தாமதமாகவே செய்தல், மறதி, தூக்கம் என்னும் நான்கும், தாம் அழிந்துவிடக் கருதும் தன்மை கொண்டவர்கள், விரும்பி ஏறும் கப்பல்களாம்.

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்
மாண்பயன் எய்தல் அரிது. 606

நாடாளும் தலைவருடைய தொடர்பு இயல்பாக வந்து கிடைத்த காலத்திலும், சோம்பல் உடையவர்கள், அதனால் எந்தவிதமான சிறந்த பயனையும் அடைவதில்லை.

இடிபுரிந்து எள்ளுஞ் சொல் கேட்பர் மடிபுரிந்து
மாண்ட உஞற்றி லவர். 607

சோம்பலை விரும்பி, நல்ல முயற்சிகளைக் கைவிடுகிறவர்கள், கடுமையாகப் பிறர் இகழ்ந்து பேசுகின்ற சொற்களைக் கேட்கின்ற நிலைமையை அடைவார்கள்.

மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
அடிமை புகுத்தி விடும். 608

நல்ல குடியிலே பிறந்தவனிடம், சோம்பல் என்பது சேர்ந்து விடுமானால், அது அவனை, அவன் எதிரிகளுக்கு விரைவில் அடிமைப்படுத்தி விடும்.

குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன்
மடியாண்மை மாற்றக் கெடும். 609

ஒருவன், தன்னிடமுள்ள சோம்பலை ஒழித்துவிட்டான் என்றால், அவன் தன் குடும்பத்தை நடத்துவதில் ஏற்பட்ட குற்றங்கள் எல்லாம் நீங்கிவிடும்.

மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு. 610

சோம்பல் இல்லாத அரசன், தன் அடியாலே உலகத்தை அளந்த திருமால் தாவிய நிலப்பரப்பு எல்லாம், தானும் தன் முயற்சியால் ஒருங்கே பெற்றுவிடுவான்.


62. ஆள்வினை உடைமை

அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும். 611

இச்செயலை நம்மாலே செய்ய முடியாதென்று தளர்ச்சி கொள்ளாமல் இருக்கவேண்டும்; இடைவிடாத முயற்சியானது அதனைச் செய்து முடிக்கும் வலிமையைத் தரும்.

வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு. 612

ஒரு செயலைச் செய்து முடிக்காமல் இடையிலே விட்டவரை உலகமும் கைவிடும்; ஆதலால், செய்யும் செயலிடத்திலே முயற்சியற்றிருப்பதை விட்டுவிட வேண்டும்.

தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே
வேளாண்மை என்னுஞ் செருக்கு. 613

‘எல்லாருக்கும் உதவி செய்தல்’ என்னும் செருக்கானது, விடாத முயற்சி உடையவர்கள் என்னும் பண்பிலேதான் நிலைத்திருப்பது ஆகும்.

தாளாண்மை இல்லாதான் வேளாண்மை பேடிகை
வாளாண்மை போலக் கெடும். 614

போருக்கு அஞ்சுகின்ற பேடியின் கையிலுள்ள வாளிடத்தில் ஆண்மைச் செயல் எதுவும் தோன்றாததுபோல, விடாமுயற்சி இல்லாதவன் உதவுகின்ற தன்மையும் கெட்டுப் போகும்.

இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண். 615

தன் இன்பத்தை விரும்பாமல், எடுத்த செயலை முடிப்பதையே விரும்புகின்றவன், தன் சுற்றத்தாரின் துன்பத்தைப் போக்கி அவர்களைத் தாங்கும் தூண் ஆவான்.

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும். 616

இடைவிடாத முயற்சியானது ஒருவனுடைய செல்வத்தைப் பெருகச் செய்யும்; முயற்சி இல்லாமையோ, அவனிடத்து இல்லாமையை உண்டாக்கும்.

மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாளுளான் தாமரையி னாள். 617

சோம்பல் இல்லாதவனின் முயற்சியிலே தாமரையாளான திருமகள் சென்று வாழ்வாள்; சோம்பலிலே கருநிறம் உடைய மூதேவிதான் சென்று வாழ்வாள்.

பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி. 618

நல்ல விதி இல்லாமலிருத்தல் என்பது குற்றம் ஆகாது; அறிய வேண்டியவைகளை அறிந்து முயற்சி செய்யாமல் இருப்பதே ஒருவனுக்குப் பழி ஆகும்.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும். 619

தெய்வத்தின் அருளாலே கைகூடாது போனாலும், ஒருவனுடைய முயற்சியானது, தன் உடல் வருத்தத்தின் கூலியைத் தப்பாமல் தந்துவிடும்.

ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர். 620

சோர்வு இல்லாமல் இடைவிடாது முயற்சிகளைச் செய்பவர்கள், கெடுதலான விதியையும் வென்று, புறங்காட்டி ஓடச் செய்பவர் ஆவார்கள்.