×
Wednesday 11th of December 2024

ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (கபீர்தாஸர்)


Vishnu Bhagavata Kabirdas History in Tamil

ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் எனப்படுபவர், பகவான் விஷ்ணுவையும் அவரின் அவதாரங்களையும் வழிபடுபவர்கள் ஆவர். இங்கே ஸ்ரீ கபீர்தாஸர் பற்றிய வரலாற்றை பார்க்கலாம்:

ஸ்ரீ கபீர்தாஸர்

கபீர்தாசர் என்னும் பெயரை எண்ணும் பொழுதே இறைவன் ஸ்ரீ ராமபிரானது உருவம் நம் கண் முன்னே தோன்றுகிறது. கபீர்தாஸருடைய கவிதைகள் பாரத நாடு முழுவதும் பரவியிருப்பதைக் காணலாம். இவரது மதத்தை சூஃபி தத்துவத்தை தம்முட்க்கொண்டது என்றும் கூறுவர். இவர் பிறவியிலே முஸல்மான் தெய்வ பக்தியிலே இவருக்கு இணை இவர் தாம். இவர் கவிதைகளை கேட்போர் மெய்மறக்கச் செய்யும் மந்திர சக்தி வாய்ந்தவை.

இராமன் என்று வேண்டுமானாலும் சொல் ரஹீம் என்று வேண்டுமானாலும் சொல் இறைவன் ஒருவனே என்பதே இவர் கொள்கை. இவரது மதத்தை கபீர் பந்த் என்றே வழங்குகிறார்கள். இன்றும் பல்லாயிரக்கணக்கான மெய்யடியார் இவரது மார்க்கத்தை கடைப்பிடித்து பக்தி செய்து பேரின்பப் பெருவீட்டை அடைய காத்து நிற்பதைக் காண்கிறோம். பஜனை சம்பிரதாயத்திலும் ஹரிகதா காலக்ஷேபங்களிலும் கபீர்தாஸருடைய பாடல்களே நிறைந்து நிற்கும். இத்தகைய மகானது வரலாறு இம்மைக்கும் மறுமைக்கும் வழிகாட்டியாகும்.

வாரணாசி என்னும் கசியம்பதியிலே தமால் என்னும் பெயர் பூண்ட முஸ்லீம் பெரியவர் வாழ்ந்து வந்தார். அவர் குற்றமற்ற தொழிலாகிய நெசவுத் தொழிலைச் செய்துவந்தார். அவர் மிகுந்த தெய்வபக்தியுள்ளவர். அவர் மனைவியார் ஜிஜ்ஜா பீபீ என்பவர் கணவருக்கேற்ற மனைவியார். கிடைத்ததிலே திருப்தி கொள்ளும் மனமுடையவர் வறுமையிலும் செம்மையான வாழ்வுடையவர் நாள்தோறும் பக்கிரிகளுக்கு அன்னமிடாமல் உண்ணாதவர்.

நெடுநாட்கள் வரை அந்த வீட்டிலே மைந்தன் இல்லை, தம்பதியர் இருவரும் முதுமையை அடையும் சமயம் ஒரு நாள் விருந்தினராக வந்த ஒரு பெரியவர் இந்த விருந்தோம்பலை உங்களோடு நிறுத்தி விட இறைவன் விரும்ப மாட்டார். இந்த மாபெரும் கைங்கர்யத்தை தொடர்ந்து நடத்த உங்கள் மகன் வருவான் என்று ஆசி கூறிச் சென்றார். ஜிஜ்ஜா பீபியின் மனம் நிறைந்தது, ஆனால் தமாலோ பரிசாகமாக நகைத்து மைந்தனா இந்த முதுமையிலா என்றார்.

பெரியோர் ஆசி பலிக்கும் என்று நீங்கள் பலமுறை சொன்னதுண்டல்லவா அதுபோலவே இதுவும் பலியாதா என்றார் ஜிஜ்ஜா பீபீ.

தமால் மனம் நொந்தவராய் நெய்வதற்கு உரிய நூல்களை அலசும் பொருட்டு கங்கைக்குச் சென்றார். அங்கேயும் பலர் மக்களை வேண்டி வழிபடுவதுகண்டு அவருக்குக் கோபம் வந்தது. காசிக்கு வந்தும் கர்மம் தொலையவில்லையே மக்கள் மக்கள் என்ன உலக ஆசை என்று நினைத்து சற்றே நின்றார். அப்பொழுது தண்ணீரில் விழுந்த நூல் சுருளைக் கங்கை இழுத்து போய் விட்டது.

தமால் அடடா இந்த வேண்டாத எண்ணங்களால் அருமையான பட்டுநூல் ஆற்றோடு போயிற்றே! இது இருந்தால் ஐம்பது பக்கிரிகளுக்கு ஆகாரமாகுமே என்று வருந்தி, அந்த நூல் சுருளைத் தொடர்ந்து கரை ஓரமாகவே ஓட்டமும் நடையுமாய் விரைந்தார். நூல் சுருள் கண்ணுக்கெட்டாதபடி மறைந்தே போயிற்று! அவர் மனத்திலே ஏக்கமும் விரக்தியும் எழுந்தன அவர் ஓடி நின்ற இடம் அரண்யத்தின் ஒரு பகுதி. அங்கே ஓர் அழகிய பர்ணசாலை இருந்தது வீடு திரும்பி என்ன பயன் இங்கேயே தங்கி இறைவனை வழிபடுவோம் என்று நினைத்தார். அந்த குடிலின் அருகே அமர்ந்து தியானத்திலே ஆழ்ந்தார்.

தான்தோன்றியாகவே இரு தமால் கங்கை கரையிலே தியானம் செய்கிறார் அங்கே கிட என்றார்.

அவ்வளவுதான் கங்கைக்கரையிலே தியானத்திலே அமர்ந்த தமால் திடுக்கிட்டு கண் விழித்தார், குவா! குவா! இளங்குழந்தையின் குரல் கேட்க ஓடி எடுத்தார். வீட்டை நோக்கி திரும்பினார் வாயிலிலே காத்திருந்த ஜிஜ்ஜா பீபி குழந்தையைக் கண்டு உள்ளம் பூரித்தாள். கண்டெடுத்த கண்மணி என்று அகமகிழ்ந்தாள் குழந்தையின் மலர்முகத்தையும் பட்டுப்போன்ற கைகால்களையும் தொட்டுதொட்டுப் பார்த்து இன்புற்றாள். அவள் தெய்வம் தந்தது என்று அவள் மனம் பூரித்தது குழந்தைக்கு கபீர் என்று பெயரிட்டனர்.

குழந்தை கபீரின் விளையாடல்களிலேயே தெய்வமணம் கமழ்ந்தது. குழந்தை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான், தவழ்ந்தான், தளிர்நடை நடந்தான் கல்வியும் பயின்றான் தறியிலே நூலிடவும் சுருளிடவும் கற்றான். எந்த வேலையிலே ஈடுபட்டாலும் அவன் நா தெய்வத்தின் பெயரையே உச்சரிக்கும் இப்படி நாட்கள் செல்ல சின்னஞ்சிறு வயதிலேயே கபீருக்கு மனம் முடிக்க விரும்பிய பெற்றோர் பெண்ணைத் தேடலாயினர்.

முன்பு ஒரு காலத்தில் சுகப்ப்ரஹ்மத்தை மயக்க முயன்ற ரம்பை இப்பொழுது அவர் பூவுலகில் வந்தது தெரிந்து தானும் பூவுலகிற்கு வந்து அவரது உறவினரிலேயே சுந்தரா என்ற ஒரு பெண்ணாகப் பிறந்து வளர்ந்து வந்தாள் கபீரது தாய்தந்தையர் அந்த பெண்ணின் அழகைக் கண்டு பெண்பேசி மகனுக்கு மணம்முடிக்க நிச்சயித்தனர்.

இதன் முன்பு தங்கள் மத வழக்கப்படி சுன்னத்துச்செய்ய நினைத்து அதற்குரிய ஏற்பாடுகளைச்செய்ய கபீரானவர் அவர்களுடன் வாது செய்து வாதத்திலே வென்று தாம் அதை ஏற்க முடியாது என்று நிரூபித்தார் சீறி எழுந்த அவர்கள் இவன் மதச்சடங்கை அவமாடிக்கிறான் இவனை வீட்டை விட்டு துரத்த வேண்டுமென தாய்தந்தையர் மனம் நொந்தனர் கபீரும் வீட்டை துறந்து ஓட முற்பட்டார் தமால் வேறு வகையின்றி அவரைத் தடுத்து தம்முடன் வீட்டிலேயே தங்கித் தறி நெய்யும்படி சொல்ல அன்று முதல் கபீர் நெசவுத் தொழிலைச் செய்து வந்தார்.

அந்தணருக்கு ஆடை அளித்தது

கமாலின் வீட்டு முற்றத்திலே கைத்தறியின் ஓசை இரவும் பகலும் கேட்டவண்ணம் இருக்கும் ஆனால் கபீரது மனமும் நாவும் இறைவனது புகழையே பாடிக்கொண்டிருக்கும் அவர் சிற்சில சமயங்களில் மெய்மறந்து நின்றுவிடுவார் தறியின் ஓசையும் நிற்கும் ஆனால் அவர் கைகள் அசையாமலே தறி தானாகவே நகர்ந்து நகர்ந்து நெய்யும் இறைவன் அன்பானது கை நோகுமோ என்று தாமே அமர்ந்து தறியை இழுப்பார்.

என்னுயி ரனையாய் நீ இளவல் உன் இளையான் இந் நன்னுத லவள் நின்கேள் நளிர்க்கடல் நிலமெல்லாம் உன்னுடையது நான் உன் தொழில் உரி மையினுள்ளேன்

என்று சொல்லி குகப்பெருமானது படகோட்டும் துடுப்பையும் செங்கோல் பற்றும் தன் கைகள் பற்றும் என்று சொன்னானல்லவா இராமபிரான் அதுபோல இங்கே தோன்றாத் துணையாய் இறைவன் தறி நெய்கிறான் ஒரு முழம் நெய்தபோது தியானத்திலே அமர்ந்தார் கபீர் இறைவன் இன்னொரு முழம் நெய்தான் அந்த சமயம் அங்கு வந்து நின்றார் தாயார்.

அவருக்குத் தந்தையார் கோபிப்பாரே என்ற ஏக்கம் பயம் அடே சோம்பேறி கபீர் இன்று முழுவதும் இந்த இரண்டே முழம் தானா நெய்தாய் இதை விற்று பணம்வந்தாலொழிய உனக்குச் சோறு கிடையாது என்று கோபித்து கூறினார் ஜிஜாபீபீ.

தறியிலிருந்து எடுத்துக் கொண்டு கடைத்தெருவை நாடிச் சென்றார் கபீர் அந்த அழகிய துண்டு சிலருக்கு மிகவும் அற்பமாகவும் சிலருக்கு மிகவும் உயர்வாகவும் தோன்ற ஒருவரும் வாங்குவாரில்லை கபீர் மனம்தளர்ந்து போனார்.

சரி இன்று விற்பனை இல்லை என்று நினைத்து அந்த வஸ்திரத்தை மடித்து மறைத்துக்கொண்டு வீடு திரும்பினார். வழியிலே ஓர் அந்தணர் திடீரென்று தோன்றி அதைப் பறித்துக்கொண்டு ஓட, கபீர் அவரைப் பின்தொடர்ந்து ஓடி மறித்து அந்த வஸ்திரத்தைப் பிடித்து இழுத்தார். கூட்டம் கூடி விட்டது இந்த மனிதர் விட்டுக்கொடாமல் சுற்றிலும் கூடிய மக்களிடம் ஜனங்களே! இந்த வைகுண்ட சல்லா பெரிய பீதாம்பரமாம் விலை பேச வந்தானாம் கடைக்கு என்று சொல்லி, அந்தப் புதிய துணியை இரண்டாகக் கிழித்தார். கபீரது முகத்திலே கோபக்கனல் வீசியது.

சீ! அற்பனே, ஊரார் உடமைக்கு ஏன் பேயாய் பறக்கிறாய் என்று தாமும் பிடித்து இழுக்க அடடா, பார்த்தீர்களா இந்தக்கந்தை பீதாம்பரமாம் என்று இகழ்ந்தார். அந்தணர் கோபம் கொண்ட கபீர் கிழிந்தாலும் அது பட்டுதான் எம்பெருமானுக்கு உகந்ததுதான் என்று தமது துணியை சுருட்டி எடுத்துக்கொண்டு நடக்கலானார். அப்பொழுது அந்த அந்தணர் விடாமல் நான் கிழித்ததை நானே எடுத்துக்கொள்கிறேன், விலை சொல்லடா என்று அதட்டினார். நாலு பேர் சொல்லுவதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றார் கபீர் மக்களை விலை சொல்லும்படி அந்தணர் கோர ஒருவர் ஒரு வராகன் என, ஒருவர் பத்து பணம் என, அந்த அந்தணர் போம் ஐயா இவர்கள் உம்மை பரிகசிக்கிறார்கள். இந்த கந்தை இவ்வளவு தான் பெறும் என்று சில சோழிகளைக் கொடுத்தார். அக்காலத்தில் சோழிகள் சிறு நாணயமாகக் கருதப்பட்டது. கோபம் கொண்ட கபீர் அந்தச் சோழிகளை வீசி எறிந்தார்.

இதில் இனிமேல் ஒன்றுமில்லை என்று வேடிக்கை பார்த்து நின்ற கூட்டம் கலைந்தது. அந்த அந்தணரோ என்னிடம் வேறு ஒன்றுமேயில்லை இதை நீ இனமாகவே கொடுத்தால் பிரிந்தவனம் போகிறேன் அங்கே கண்ணனுக்கு சாத்தி மகிழ்வேன் என்றார்.

கபீர் சற்றே யோசித்தார் இதை நான் விற்று செல்லாவிட்டால் என் பெற்றோர் தண்டனை கிடைக்கும். ஆகவே கொடுக்க முடியாது என்றார், அந்தணரோ தானத்தினால் வரும் பயனைப் பற்றி ஒரு பிரசங்கமே செய்தார். கபீரது மனம் சற்று மாறத் தொடங்கியது, அந்தணர் கர்ணனையும் மாவலியையும் உவமை கூறி பேசியது அவர் நெஞ்சைத் தொட்டது, கொடுத்து விடலாமா என்று தயங்கினார்.

கபீரது தயக்கத்தை கண்ட அந்தணர் கபீர் இறைவனை உருவத்தோடு வழிபடுவதும் உருவமற்றவனாக வழிபடுவதும் வெவ்வேறுவகை. இந்த கலியுகத்திற்கு சகுன உபாசனை தானே ஏற்றது இறைவனது திருநாமங்களும் மிகமிகச் சிறந்தது இராமநாமம். இராமன் சக்கரவர்த்தி திருமகன் அவன் மக்கள் வாழ வேண்டியதைச் செயலாலே தானே நடந்து காட்டினான். அந்த தாரக நாமம் உயர்வு என்று இறைவன் விசுவநாதன் இங்கே மரிப்பவருக்கு உரைக்கிறாராம் அதனாலே தான் காசியிலே இறக்க முக்தி என்கிறார்கள். நீயும் ஏதோ கொஞ்சம் தெரிந்தவனாகக் காணப்படுகிறாய் ஆகவே இடைவிடாமல் ராமநாமத்தையே கூறு மற்றும் ப்ரஹ்மஞானத்தை அடைய முயற்சி செய் என்று சொல்லி அந்தப் புத்தம் புது துணியை வாங்கிக் கொண்டு மறைந்து போனார்.

கபீரது மனம் குழம்பியது நான் தியானத்தை பற்றி அறிய நினைத்தேன் இவரோ ஞானத்தை அடை என்கிறார் சதகுருவின்றி ஞானம் எப்படிக் கிடைக்கும் எதற்கும் இவர் சொன்ன ராமநாமத்தையே துணை கொள்வோம் என்று முடிவு செய்து வீட்டை நோக்கி நடந்தார் தன் கையிலிருந்த ஒரு முழத்துண்டை மீண்டும் ஒரு முறை பார்த்து மடித்தார்.

கையிலே பாதியாய் கிழிந்த துண்டுள்ளது. பசியோ காதை அடைத்தது. செய்வது இன்னதென்று அறியாது தளர் நடை நடந்து வீடு நோக்கி நடந்த கபீர் தம் எதிரே ஒரு பகீர் வருவதைக்கண்டார். பகீர் அவரை நெருங்கி ஐயா புண்ணியவானே நீர் சாதுக்களுக்கு தானதருமம் அளிப்பவர் என்று கேள்விப்பட்டேன் குளிர் மிகுதியான இந்த நாளிலே ஒரு முழத்துண்டு கிடைத்தாலும் போதும் தலையிலே கட்டிக் கொள்வேன் என்று இறைஞ்சி அழுதார் பகீர்.

இல்லை என்று சொல்ல மனம் வராத கபீர் சற்றுமுன் அந்தணர் சொன்ன கருத்தை நினைத்து ஜெய் சீதாராம் என்று சொல்லி அந்தத் துண்டை பகீரின் கையில் அளிக்க அவர் வாங்க மறுத்து அட நீ என்ன காபீர் ஆக இருக்கின்றாயே இறைவன் அல்லாவின் திருநாமம் இருக்க எவனோ ஒரு மனிதனின் பெயரைச் சொல்லி கொடுக்கின்றாயே முஸல்மானாக இருப்பதால் உன்னைக் கேட்டேன் காபீர் கைம்பொருள் நமக்கு வேண்டா என்றார்.

கபீரோ பல நியாயங்களை எடுத்துக்காட்டி இறைவன் ஒருவனே என்றும் சொல்லி அந்தத் துணியைக் கொடுக்க அவர் மறுத்து அடே கபீர் நீ புரட்சிக்காரன் நீ முஸ்லீம் மதத்துக்கே துரோகி உன் கொள்கைகளையெல்லாம் உன் பெற்றோரிடம் சொல்லித் தண்டிக்கவேண்டும் என்று சொல்லி நடந்தார்.

கபீரோ இதேது பெரிய வம்பாகிவிட்டது இந்தப் பக்கிரி என்னென்ன கோள் முடிவானோ என்று பயந்து ஓர் பாழ் வீட்டிலே பதுங்கிக் கொண்டார் துணியைப் பெற்றுக்கொண்ட பகீர் ஜிஜாபாயிடம் சென்று அம்மா உன் மகன் குலத்தைக்கெடுக்கும் கோடரிக்காம்பாய் திரிகிறான் காலையில் ஓர் அழகான துணியை யாரோ ஓர் அந்தணருக்கு வற்புறுத்திக் கொடுக்கப் போனான் நான் வழிமறித்து எனக்கு கொடு என்றேன் அதை இரண்டாகக் கிழித்து தலைக்கு பாதியாக்க நான் வேண்டாம் என்றேன் என் தாயாரிடம் போய் கேள் பெரிய வஸ்திரம் கொடுப்பார் நான் கொடுத்ததைச் சொல்லாதே என்று வீட்டையும் காட்டி இந்த வீட்டில் ஒளிந்துக்கொண்டான் என்று அவரை அழைத்து வந்து நான் பின்புறம் போகிறேன் நீங்கள் வாயிற்புறம் வந்து பிடித்துக்கொள்ளுங்கள் என இருவரும் பாழ்வீட்டை அடைந்தனர் ஜிஜ்ஜா பிபிஐக்கு கோபம் ஒரு புறம் துணியைவிற்றுப் பணம் வரும் என்றிருந்தவருக்கு ஏமாற்றம் ஒரு புறம் ஆகவே பக்கீரைத் தொடர்ந்து வந்து கபீரைப் பிடித்து இழுத்து பக்கிரியின் கைபிரம்பினால் பளீர் பளீர் என்று இரண்டு அடிகள் அடித்தார்.

ஹரே ராம் ஹரே ராம் என்ற ஓலம் பெருங்குரலிற் கிளம்பியது அந்த அடிகள் இறைவனது முதுகிலும் வீழ்ந்தன. உலகிலுள்ள எல்லா உயிர்களின் உடம்பின் மீதும் விழுந்தன அந்தநாளில் பிட்டுக்கு மண் சுமந்த சொக்கலிங்கப் பெருமானைப் பாண்டியன் பிரம்பாலடித்தபொழுது அந்த அடி சகல சராசரங்களின் மீதும் பட்டது போல கபீரின் மீது பட்ட அடி உலகம் எல்லாம் பட்டது. ஜிஜ்ஜா பீபியின் முதுகிலும் சுரீர் சுரீர் என்று விழுந்தது ஐயோ என்று துடித்துப் போனார் அவர் இந்த அடிகள் இறைவனது முதுகிலும் பட்டன அங்கேயே தனது சுய உருவுடன் கபீரைத் தழுவிக்கொண்டான் எம்பெருமான்.

சங்கு சக்ர கதாதரனாய் சிரத்திலே அழகிய பொன்முடி விளங்க மலர் முகத்திலே இன்முறுவல் துலங்க இரு செவிகளிலும் பொற்குண்டலம் இலங்க சாந்தமும் கருணையும் பொழிகின்ற மலர் விழிகள் கபீரின் முதுகையே நோக்க நின்றான் இறைவன் கபீர் நீதான் மெய்த்தொண்டன் கொடுப்பது என்பது தவத்தால் வாராது அது பிறவிக்குணம் இந்த வறுமை நிலையிலும் நீ கொடுக்க முன் வந்தாய் என்று அடிப்பட்ட முதுகைத் தடவினான் இறைவன்.

ஜிஜா பீபிக்கு இன்னது செய்வதென்பது விளங்கவில்லை ஆ இறைவனே உன்னையே நாடித் தவம் இருப்பவரையெல்லாம் விட்டு விட்டு இந்தப் போதைக்கு காட்சியளித்தாயே கபீர் கபீர் உன்னை உண்மை அறியாமல் அடித்து விட்டேனே என்று ஏங்கிப் பின் துதிக்கலானார்.

பகவான் அம்மா நீ பரம பாக்கியவதி நீ அவனை அடித்தது அவன் முதுகில் படவில்லை என் முதுகைப் பார் என்று தன் முதுகைக் காட்டினான் அடித்தழும்புகள் இறைவனது முதுகிலே தெரிந்தன இறைவன் மேலும் இந்தக் கபீர் ஞானி சிறந்த பக்தன் இனிமையான பாமாலைகளினால் உலகத்தாருக்கு உபதேசம் செய்வான் என்னையும் வழிபடுவான் என்றான் இறைவனது முதுகிலே அடிகளின் தழும்பைக் கண்ட பீபி துடிதுடித்து ஐயோ எத்தகைய பெருந்தவறு செய்து விட்டோம் என்று அலறி மூர்ச்சித்து விழுந்தார்.

இறைவன் தானே தன் திருக்கரங்களினால் அவரைத் தெளிவித்து எழுப்பினான் பின்பு கபீரை நோக்கி கபீர் உலகிலே சிலருக்கு ஞானமார்க்கம் சுலபம் பக்தியும் சிரத்தையும் உள்ளவர்களுக்கே ப்ரஹ்மஞானம் கிட்டும் நீயோ இளம்பிள்ளை பக்திமார்க்கமே உன்னால் பின்பற்றத்தக்கது ஆகவே சதகுருவைத் தேடி அடைவாய் என்று கூறி மறைந்தான் தாயாரும் மைந்தரும் ஆனந்த மிகுதியினால் நிறைந்த மனதுடன் அங்கிருந்து வீடு திரும்பினர்.

வாரணாசியில் இராமானந்தர் என்ற ஒரு பெரியார் பலரையும் நல்வழிப்படுத்தி வந்தார் அவரையே குருவாக நினைத்துக் கபீர் பல நாள் மாலை வேலையிற் காண முடியாமல் திரும்பினார் ஒரு நாள் அதிகாலை அவர் தங்கியிருந்த மடத்திற்குச் சென்றார்.

அங்கிருந்த ராமனந்தரின் சீடர்கள் இவன் துருக்கன் திருடவே வந்தான் என்றெண்ணி விரட்ட கபீர் தாம் ராமானந்தரைப் பார்க்க வந்ததாகச் சொல்லியும் நம்பாமல் தடிகளால் அடித்துப் பிடித்துத் தள்ள கபீர் அடிகளையும் பொறுத்துக் கொண்டு அங்கேயே உட்கார்ந்து விட்டார் அவர்கள் மேலும் அடிக்க கபீர் அலறத்தொடங்கினார் அலறும் குரல் கேட்டு ராமானந்த ஸ்வாமிகள் எழுந்து வெளியே வந்தார் கபீரைப் பார்த்ததும் அவர் மனம் இறங்கியது.

அங்கிருந்த ஒருவர் ஸ்வாமி திருடத்தான் வந்தான் அகப்பட்டுக்கொள்ளவே பொய்ச்சொல்கிறான் என்றார்.

ஸ்வாமிகள் அதை உண்மையென்று கொண்டாரோ சோதிக்க விரும்பினாரோ தெரியாது இவனை வெளியே துரத்துங்கள் என்று சொல்லிவிட்டு மீண்டும் உள்ளே போய் விட்டார் கபீர் மேலும் முயன்று அடியும் பட்டு வீடு நோக்கித் திரும்பினார்.

உடலெல்லாம் அடிபட்டுக் கன்றிக் கிடந்தது கண்டு பெற்றோர் வருந்தி ராமனந்தரையும் அவர் சீடர்களையும் திட்டத் தொடங்கினர் அனால் கபீரோ மீண்டும் ஒரு முறை அடிபட்டு வந்து சேர்ந்தார்.

இடையில் கபீருக்கு ஒரு நல்ல யோசனை உதித்தது ராமானந்தரோ விடியற்காலையில் கங்கையில் நீராட வருகிறார் அந்தப் படியிலே நாம் படுத்திருந்தால் இருளிலே மிதித்து விடுவார் பெரியோர்கள் தவறு செய்தாலும் நன்மை வந்தாலும் இறைவனுடைய திருநாமத்தையே சொல்லுவார்கள் அதையே நாம் உபதேசமாகவும் திருவடி தீட்சையாகவும் கொள்வோம் என்று எண்ணி கங்கையின் படிக்கட்டிலே சென்று படுத்துக் கொண்டார் கபீர்.

எதிர்பார்த்தபடியே ராமனந்தர் கங்கையின் படிகளிலே இறங்கிய பொழுது கபீரை மிதித்து விட்டார் உடனே வழக்கப்படி ராம் ராம் என்று உச்சரித்த வண்ணம் இறங்கி நீராடித் திரும்பினார் ஸ்வாமிகளின் பாதத்துளி தம் மேல் பட்டதைப் பெரும் பேறாகக் கருதினார் கபீர் வீட்டிற்கு வந்து நெற்றியில் திலகம் அணிந்தார் துளசி மாலையை அணிந்தார் பூஜைக்கு உரிய பொருள்களுடன் மடத்தில் சென்று தாமும் மற்றவருடன் அமர்ந்து ராம நாம ஜெபம் செய்யத் தொடங்கினார்.

சீடர்கள் அவரை ராமனந்தரிடம் அழைத்துச் செல்ல அவர் கோபித்து பாதுகையை வீச அது அவர் நெற்றியிலே பட்டது பின் மறைமுகமாக உபதேசித்து நீ வஞ்சனையினால் உபதேசம் பெற்றாய் ஆதலால் மடத்திலே சேரத் தகுதியற்றவன் என்றாலும் ராமநாமத்தை செபித்து வா என்று சொல்லி அனுப்பினார் இவ்வளவு கிடைத்ததே மஹா பாக்கியம் என்று நினைத்த கபீர் மனநிறைவுடன் வீடு திரும்பினார்.

இடையில் முகம்மதியர் கபீரை வாதிலே வெல்ல முயன்றனர் ஆனால் கபீர் ராமும் ரஹீமும் ஒன்றே என்ற தத்துவத்தை உணர்த்தினார் இறைவன் ஒருவனே என்பதை அவர்களும் ஒப்ப வேண்டி வந்தது.

அக்காலத்தில் மச்சேந்திரநாதர் என்ற பெரியவர் ஒருவர் இருந்தார் அவருடைய மாணவர் கோரக்கநாதர் என்பவர் அவர் எட்டு வகையான சித்திகளையும் கைவரப் பெற்றவர் கர்வம் கொண்டவர் அவர் எல்லோரையும் வாதிலே வெல்ல விரும்பி ஊர் ஊராக வந்துக்கொண்டிருந்தார் அவர் காசிநகருக்கு வந்து ராமானந்தராது மடத்திற்கு வந்தார் ஸ்வாமிகளின் சீடர்களுக்கு கோரக்கரைப் பற்றித் தெரியும் அவர்கள் கலங்கினார்கள் கோரக்கர் ஸ்வாமிகளின் சீடர்களை நோக்கி ராமனந்தர் எங்கே என்று இடிக்குரலில் கேட்டார்.

சீடர்கள் நடுநடுங்கி உள்ளே சென்று ராமானந்தரிடம் ஸ்வாமி நாம் அந்த ராக்ஷஸனோடு வாதிட்டு வெல்வது முடியாது அவனோ அஷ்டமாசித்தி பெற்றவன் பரமதுஷ்டன் ஆகவே நாம் இங்கிருப்பது தகாது என்றார்கள் மிகவும் சாந்த சீலரும் பெரியவருமான ராமானந்தர் செய்வதறியாது திகைக்க குருவை விட்டுவிட்டு சீடர்கள் ஓடி ஒளிந்தார்கள் ராமனந்தர் மட்டும் தனியே தியானத்தில் ஆழ்ந்திருந்தார்.

கோரக்கரது வருகையும் சீடர்களின் ஓட்டத்தைப் பற்றிக் கேள்வியுற்ற கபீர் உடனே மடத்திற்கு ஓடி வந்தார் இந்த நெருக்கடியான சமயத்திலே வந்த அவரைப் பார்த்த ராமானந்தருக்கு கோபம் ஏற்பட்டது கபீர் மிகவும் பணிவுடன் ஸ்வாமி கோரக்கருடன் வாது புரிய என்னை அனுமதிக்க வேண்டும் என்றார்.

அதற்கு ஸ்வாமிகள் அடே என்ன சிறுபிள்ளைத்தனமாகப் பேசுகிறாய் புலியைப் பூனை வெல்லுமா நீ போய் தோல்வியுற்றால் நான் தான் உன்னை அனுப்பி வைத்தேன் என்று என்னையும் அவன் பீடிப்பான் ஆகவே நீ வந்த வழியே போ ஏன் இந்த வீண் விவகாரம் என்றார்.

கபீர் அதை ஏற்காதவராய் ராமனந்தரின் திருவடிகளில் வணங்கி எழுந்து வீதியிலே அட்டகாசம் செய்து நிற்கும் கோரக்கரே எதிரே வந்து கோரக்கரே என் குருநாதரது வல்லமை உமக்குத் தெரியாது வாதிலும் சரி ப்ரஹ்மஞானத்திலும் சரி அவரை வெல்ல உனக்கு என்ன தகுதி இருக்கிறது எழுந்து மரியாதையாய் நடவும் என்றார்.

கடகடவென்று இடிமுழக்கம் போலச்சிரித்தார் கோரக்கர் அடே சிறுபயலே நீ யார் உன்னை என்ன செய்கிறேன் பார் என்று எழுந்தார்.

இந்த சொல்லக் கேட்டு ராமனந்தர் அவன் இந்தச் சிறுவனை என்ன செய்வானோ என்று எழுந்து வந்து கோரக்கரை வணங்க முற்பட கபீர் அவரைத் தடுத்து இதோ நான் இவரை வெல்கிறேன் என்று சொல்லி தன் கையிலிருந்த பட்டு நூல் கண்டு ஒன்றை நுனி பூமியிலே நிற்க ஆகாயத்தை நோக்கி வீசினார் அந்த நூல் இழை மரம் போல் நின்றது அவர் அதன் மேல் மளமளவென்று ஏறி உச்சியிலே அமர்ந்து சித்த புருஷரே நீரும் இங்கே வாரும் வான வெளியிலே வாது செய்வோம் என்றார்.

கபீர்தாசரது இந்தச் செயல்கண்டு கோரக்கர் திகைத்தார் ஆனாலும் திகைப்பை வெளிக்காட்டாமல் கபீர் உன் மயவித்தையைக் கண்டு நான் மயங்கி விட மாட்டேன் இறங்கி வந்து எதிர் நின்று பேசு என்று சொல்லி ராமனந்தரது உருவில் நின்றார் கபீர் யார் உண்மையான ராமனந்தர் என்பது விளங்காமையால் சற்றே திகைக்க உண்மை ராமனந்தர் இறைவனை நோக்கி ஐயனே என் சீடனைக் காப்பாற்று என்று வேண்டினார் கபீரது மனதிலே புதியதோர் உற்சாகம் பிறந்தது அவர் கோரக்கரை அடக்க தாம் மச்சேந்திரநாதராகி நின்றார் உடனே கோரக்கர் மகா விஷ்ணுவானார் கபீர் சரப மூர்த்தியானார் இப்படி கோரக்கர் எதைச் செய்தாலும் அதற்கு மேலே விளங்கினார் கபீர் கோரக்கர் கர்வம் ஒடுங்கியது இப்படிப்பட்ட சீடனைப் பெற்ற ராமனந்தர் பாக்கியசாலி என்று அகங்குளிரை அவர் தாள்களில் விழுந்து வணங்கினார் மேலும் கபீரை நோக்கி அப்பனே உன் குருபக்தி மெச்சத்தக்கது நீ இந்த இளம் பருவத்திலே இறைவனை அடையும் ப்ரஹ்மஞானத்தை பெற்று விட்டாய் நீ நீடுழி வாழ வேண்டும் என்று வாயார வாழ்த்தினார் இதன்பின் கோரக்கர் அவரிடமிருந்து பல அறிய விஷயங்களை அறிந்துக் கொண்டு வியந்தார் காசி நகரம் முழுவதும் ராமனந்தரையும் கபீரையும் போற்றிப் புகழ்ந்தது.

மகனுக்கு விவாகம் செய்து விடவேண்டுமென்ற கவலை பெற்றோருக்கு இருப்பது இயல்பேயல்லவா முன்பே நிச்சயம் செய்த சுந்தராவென்னும் பெண்ணை மணம் பேசப்போக அவர்கள் சுன்னத்துச் செய்து கொள்ளாத ப்ரஷ்டனுக்கு பெண் கொடோம் என்றார்கள் வந்தவர் திரும்பினர்.

சுந்தராவின் தந்தை கனவிலே ஒரு பகீர் வந்து உன் மகளைக் கபீருக்கே மணம் புரிக என்று சொல்லியும் அவர் மணம் துணியவில்லை சுந்தராவோ அப்பா ஏற்கனவே நீங்கள் அவருக்கு வாக்களித்தது முதல் நான் அவரையே மணாளனாக வரித்துவிட்டேன் இனிப் பிறரைச் சிந்தையாலும் தொடேன் என்றாள்.

பெற்றோருக்கு சினம் பொங்கி எழுந்தது கபீர் ஏதேனும் மாயமந்திரம் செய்ந்திருப்பானோ என்ற எண்ணமும் எழுந்தது ஆகவே அவளை வீட்டிலேயே காவல் வைத்தனர் இறைவன் இத்திருமணத்தை முடிக்க திருவுள்ளங் கொண்டான் அவன் ஒரு பகீர் வேடம் பூண்டு மாணவர் புடைசூழச் சுந்தராவின் பெற்றோரிடம் வந்து சேர்ந்தான்.

வந்தவன் கபீர் முன்பே சுன்னத்துச் செய்துகொண்டு முஸ்லீம் பழக்க வழக்கங்களுடன் வாழ்வதாகவும், அவருக்கே பெண்ணை கொடுக்கலாம் என்றும் சிபாரிசு செய்தான். அதோடு நில்லாமல் தாமே முன்னின்று ஒவ்வொருவருக்கும் சமாதானம் சொல்லி விவாகம் செய்வித்தான் விவாகம் முடிந்தது மணமகள் வீட்டிற்கு வந்ததும் ஸ்ரீ ராமனந்தரைக் கண்டு வணங்கவேண்டுமென்ற தன் விருப்பத்தை தெரிவித்தாள் முஸ்லீம் மகள் தம்மை விரும்பி மணந்ததோடு தமது பக்திக்கும் உறுதுணையாக நிற்பாள் என்பதை அறிந்த கபீர் மனம் பெருமகிழ்ச்சியினால் பூரித்தது.

கபீர்தாசரது இல்வாழ்க்கை அன்பும் அறமும் உடையதாய்த் திகழ்ந்தது நெசவுத்தொழிலையும் இறைவரது திருநாமத்தையும் கைவிடாத அவர் எப்பொழுதும் இறைவனோ தொண்டர் உள்ளத்தொடுக்கம் என்று சாதுக்களை அழைத்து உபசரிப்பதையே தமது வாழ்கை லட்சியமாகக் கொண்டு இல்லறத்தை நடத்தினர்.

பெரும்பான்மையான பொழுது இறைவழிபாட்டிலே செல்ல நெசவு குறைந்தது வறுமையும் வந்தது என்றாலும் அவர்கள் இரந்தோர்க்கு ஈவதைக் குறைக்கவில்லை தங்கள் உணவினை வரும் விருந்தினர்களுக்கு அளித்து வந்தார்கள்.

இந்த நிலையிலே பக்ரீத் பண்டிகையும் வந்தது கபீர் பசுக்கன்றை வதைப்பது கொடிய பாவம் என்பதை வற்புறுத்தி முஸ்லிம்களின் மனத்தை மாற்றினார் இந்த சமயம் பகவான் அவரை மீண்டும் சோதிக்க எண்ணினான்.

ஒருநாள் பிற்பகல் நூறு சாதுக்கள் பின்தொடர இறைவன் கபீரின் வீட்டை அடைந்து இன்று முழுவதும் பட்டினி நீ தான் உதவ வேண்டும் என்று கெஞ்சினான் வீட்டிலோ ஒரு தானிய மணியும் இல்லை கபீரும் அவர் மனைவியுமே பட்டினி இந்நிலையிலே நூறு அததிகளை ஏற்பது எப்படி தவியாய்த் தவித்துப் போனார் கபீர்.

உள்ளே சென்று ஏதேனும் நகைகளோ துணிமணியோ அடகு வைக்க இருக்கிறதா என்றார் அங்கே ஏதேனும் இருந்தால் தானே திடிரென்று சுந்தரவிற்கு ஒரு யோசனை தோன்றியது. அவள் கபீரிடம் நெருங்கி கடைத்தெருவிலே ஒரு சௌகார் நெடுநாளாய் என் மீது கண் வைத்திருக்கிறான் ஒரு நாள் என் மீது கற்களை எறிந்து நான் திரும்பிப் பார்த்த பொழுது தகாத வார்த்தைகள் சொன்னான் ஒரு முறை நான் அவன் விருப்பத்திற்கு இணங்கினால் பெரும் பொருள் தருவதாக ஆசை வார்த்தைகளையும் சொன்னான் இந்த இக்கட்டான சந்தர்ப்பத்திலே அவனிடம் சென்றால் பணம் கிட்டும் அதிதிகளைப் பட்டினிப் போடுவதைவிட என் உடலை நான் விற்பது பாபம் ஆகாதென்று தோன்றுகிறது அவனிடம் கேட்டுச் சாமான் வாங்கி வாருங்கள் என்றாள்.

கபீர் சற்றே சிந்தித்தார். பிறகு அவளை நோக்கி உன் யோசனை நல்லதுதான் அவன் யாரென்பதை நான் அறியேன் நீயே என்னை அழைத்துச் செல் என்றார் அவள் புறப்பட்டாள் இருவரும் வியாபாரியின் வீட்டை அடைந்தனர் கபீர் வியாபாரியை நோக்கி நூறு சாதுக்களுக்கு வேண்டிய உணவு வகைகளை அளிப்பதற்கு விலையாக இவளை உனக்கு அளிக்கிறேன் அவர்களுக்கு அன்னமிட்டபிறகு நானே இவளை அழைத்து வந்து விடுகிறேன் என்றார்.

மதிமயங்கி நின்ற அந்த வியாபாரி இதற்கு இணங்கி நூறு பேர்களுக்கு வேண்டிய பண்டங்களைக் கொடுத்தான் இருவரும் சுமக்கமாட்டாமல் சுமந்து வீடு வந்தனர் உரிய காலத்தில் சமையல் செய்து நூறு சாதுக்களுக்கும் உணவளித்தனர்.

பிறகு கபீர் வாக்களித்தபடி சுந்தராவை அந்த வியாபாரியின் வீட்டிற்கு அழைத்துத் சென்றார் வழியிலே தூற்றல் தொடங்க அவளைத் தனது தோளில் சுமந்துத் சென்றார் என்றும் சொல்லப்படுகிறது வியாபாரி வழிமேல் விழி வைத்துக்காத்திருந்தான்.

அவளை வேற்றுடைகள் அணியச் சொல்லித் தன் அந்தரங்க அறைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தான் சற்று நேரம் குறுக்கும் நெடுக்குமாய் நடக்க வீதியிலே யாரோ தடதடவென்று கதவைத் தட்டுவது கேட்டது அடடா இதென்ன கரடி என்று கதவைத் திறக்க அவ்வூர்க் கொத்தவால் உன் வீட்டிலே களவுப்பொருள் இருக்கிறது சோதனை செய்வேன் என்று நேரில் அவனது அந்தரங்க அறைக்குள் புகுந்து கபீர் மனைவியாரல்லவா இவர் மகா உத்தமியாயிற்றே என்று சொல்லி சுந்தரவின் கரங்களை பற்றி இழுத்துக்கொண்டு வெளியேறி அவளை அவளுடைய வீட்டிலே விட்டுச் சென்றான்.

திரும்பி வந்த அவள் சொன்ன செய்தி கேட்ட கபீர் என் மனைவியைக் கண்டிக்க இவன் யார் என்று சினம் கொண்டு கொத்தவாலின் வீடு தேடித் போய் கதவைத் தட்ட கொத்தவால் தனக்கு ஒன்றுமே தெரியாது என்றான் செய்ததையும் செய்து விட்டு பொய்யும் பேசுகிறாயா என்று கபீர் கோபத்துடன் அவனை அடிக்க கையை ஓங்கவே பகவான் தோன்றி கபீர் வியாபாரியை அடித்து உன் மனைவியை மீட்டவன் நானே ஆகையால் என்னை அடி என்றான் கபீர் மெய்சிலிர்த்தார் இறைவன் திருவடிகளில் வீழ்ந்து ஐயனே உன் செயல்களை யார் அறிவர் என்று பலவாறு பாடித் துதித்தார் பின்னர் தமாலம் ஜிஜாபீபியும் தம் மைந்தனது பொறுமையை எண்ணி எண்ணி மகிழ்ந்து இறைவனை வழிபட்டு வந்தனர் உரிய காலத்தில் அவர்களுக்கு முக்தியும் கிடைத்தது என்பதைச் சொல்லவும் வேண்டுமோ.

இதன்பிறகு கபீருக்கு இரு கண்மணிகள் தோன்றினார்கள். புதல்வர் பெயர் கமால் அவர் இளமையிலே கேள்விகளிலே சிறந்து விளங்கினார் அவர் ஏழு வயதிலே தீர்த்த யாத்திரை செய்ய விரும்பினார் முதலில் மறுத்த கபீர் பிறகு இணங்கினார். யாத்திரை சென்ற இடங்களில் எல்லாம் இறைவனது திருப்புகழைப் பரப்புவதே பணியாகச் செய்து கொண்டிருந்த கமாலை, மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கண்டார்கள் கமாலை கண்ணபிரானது அம்சம் என்றே கருதினார்கள்.

ஒரு நகரிலேயே ரத்னவியாபாரம் செய்யும் ஒருவர் இல்லத்திலே கமாலைப் பற்றி இகழ்ந்து பேசிக்கொண்டிருந்தனர் வியாபாரிக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்தது இந்த நோயை கமலால் தீர்த்து வைக்கமுடியும் என்றால் அவன் ஒரு பக்தன் என்று நம்பலாம் என்றார்கள்.

மறுநாட்காலை வியாபாரி வயிற்று வலியினால் துடித்த போது முந்தினம் கமாலைப் பற்றிப் பேசியது நினைவில் எழுந்தது கமாலைப் பற்றிப் பேசிய உடனேயே வயிற்றுவலி நின்று போயிற்று உடனே அவன் கமாலை தன் வீட்டிற்கு அழைத்து வணங்கி வழிபட்டு பொற்காசுகள் நிறைந்த ஒரு பையை அளிக்க நானோ சிறுவன் என்னால் இந்த பொருளை ஏற்றுக் காத்து வீடு போய் சேர முடியாது என்று மறுத்து விட்டார் எனினும் அந்த வியாபாரி அவருக்குத் தெரியாமல் அவருடைய உத்தரீயத்திலே விலையுயர்ந்த மரகதம் ஒன்றை முடித்து வைத்தான்.

கமால் வீடு சென்று பெற்றோரை வணங்கும் பொழுது தான் அந்த மரகதம் முடிந்திருப்பது அவருக்குத் தெரிந்தது அவர்களைச் சோதிக்க கருதி ஸ்ரீராமபிரான் ஒரு அந்தணனாக அங்கு வந்து இந்தப் பச்சைக்கல் என்னுடையது இவன் திருடி விட்டான் என்று பேச கபீர் தம் மைந்தரை அடிக்க கை ஒங்க இறைவர் சீதா லக்ஷ்மண பரத சத்ருகன சமேதராக காட்சி தர அதே சமயம் அங்கு வந்த ராமானந்தர் கபீர் கபீர் உன்னால் எனக்கும் இந்த அற்புதக் காட்சி கிடைத்தது என்று மெய்மறந்து கண்பனிசோர நாக்குழற துடித்து நின்றார்.

பின்பு ஒரு சமயம் சாதுக்களுக்கு உணவளிக்க வீட்டிலே ஒன்றும் இல்லை நூற்றுக்கணக்கான சாதுக்கள் கால் நடையால் களைத்து இரவின் முதல் சாமத்தில் வந்து சேர்ந்தார்கள் வேறு வழியின்றி தந்தையரும் மகனும் மாளிகைக் கடையில் புகுந்தனர்.

கமால் ரொட்டியிற்கு நெய் முதலியவற்றை திருடி சுவரைத் தாண்டி கபீரிடம் கொடுத்து விடுவது என்றும் கபீர் அவற்றை வாங்கிக் கொண்ட பின் கமால் சுவற்றின் உள்ள பிளவின் வழியே குடித்து ஓடி வந்து விடுவது என்றும் தீர்மானித்து கமால் உள்ளே சென்று மாவு நெய் முதலியவற்றை எடுத்து கபீரிடம் கொடுத்து விட்டார் அவர் கொடுப்பதற்குள் பின்னே வந்த கடைக்காரன் சுவற்றின் வழியே வெளிவந்த கமாலின் காலைப் பிடித்து விட்டான் தறி வேலை செய்யும் கத்தி கபீரின் இடையில் இருந்ததைக் கண்ட கமால் அப்பா என் தலையை வெட்டிக் கொண்டு போய் விடுங்கள் மகேசுர பூஜை நடைபெறட்டும் என்னை தலையினால் தானே அடையாளம் தெரியும் தலையில்லாத உடலை யாரும் கண்டுக்கொள்ள மாட்டார்கள் எனவே கபீர் மிகவும் தயங்கித் தலையை வெட்டி எடுத்துக் போய் விட்டார் கடைக்காரன் கமாலின் உடலை மட்டும் கொத்தவாலிடம் ஒப்படைத்தான் திருடர்களுக்கு ஒரு படிப்பினையாக ஊர்பொதுச் சாவடியில் கொத்தவால் அந்த உடலைத் தொங்க விட்டான்.

அங்கே மறுநாள் சாதுக்கள் கோஷ்டி பஜனை செய்த வண்ணம் வர தலையற்ற அந்த உடல் அவர்களைக்கண்டு கரங்குவித்தது. சாதுக்கள் திகைக்க இறைவன் அசரீரியாக கபீர் உலகிலிலேயே வாத்சல்யங்களுள் சிறந்தது புத்ர வாத்சல்யம் மனைவியின் மீது உள்ள பாசம் புத்ர பாசம் ஆகிய இரண்டையுமே நீ வென்று விட்டாய் உன் விருந்தோம்பலும் பக்தியும் மெச்சத்தக்கது மகனைக் கொன்றெனும் அன்னமிட முயன்ற உன் ஒப்பற்ற தியாகத்தின் முன் உலகமே தலை வணங்கும் கமால் எழுந்திரு எழுந்திரு என்றான் சாதுகளோடிருந்த கபீரிடம் இருந்த தலை உடலோடு பொருந்த கமால் சிரித்தவண்ணம் வந்து ஹரிநாராயண ஹரிநாராயண என்று கோஷிக்க தொடங்கினர் அடடா அற்புதம் அற்புதம் என்று வியந்தன ஊரார் உள்ளங்கள்.

இதன் பின் கபீர் மீண்டும் ஒரு முறை கோரக்கரை வென்றார் என்றும் தன் வாழ்நாள் முழுவதும் பக்திப் பிரச்சாரம் செய்வதிலேயே கழித்தார் என்றும் சரித்திரம் பேசுகிறது.

இவர் நானக்ஷா என்பவருக்கு ஹிந்து மத தத்துவங்களை போதித்ததும் ரோகிதாசர் என்ற சக்கிலியருடன் ராமன் பரதெய்வமா கிருஷ்ணன் பரதெய்வமா என்று விவாதித்ததும் மிகச் சுவையுள்ள விஷயங்கள் இதன் பின் இவர் பல முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கு இணங்கி மெக்காவிற்கு யாத்திரை செய்ததும் அங்கும் ராமநாமத்தைப் பரவச் செய்ததும் பிறகு அங்கேயே மஹாசமாதியடைந்ததையும் எல்லோரும் அறிவர் அங்கே அடக்கம் செய்தபின் மலர்களை வாரி இறைக்க அவை ஒரு பகுதி முழுவதும் மலர்களாகவும் மற்றொரு பகுதி துளசி தளங்களாகவும் இருந்தனவாம் இப்பொழுதும் மெக்காவிற்குச் செல்வோர் இவரது சமாதியைக் கண்டு தொழுது வருவதாகச் சொல்லப்படுகிறது.

இவரது பாமாலைகள் மிகமிகச் சிறந்தவைகள் என்று போற்றிக் கொண்டாடப்படுகின்றது. தமிழ் நாட்டிலே எவ்வாறு தேவார திருவாசகங்களும் போற்றிக் கொண்டாடப்படுகின்றதோ, அவ்வாறே கபீர் தாசரது பதாவளிகள் பாராட்டிப் போற்றப்படுகின்றன. நெஞ்சை அள்ளும் அக்கவிதைகளையும் அவற்றில் பொதிந்துள்ள மிகமிக உயர்ந்த கருத்துகளையும் தமிழ் மக்களும் கற்றுப் பயனடையவேண்டும் மூலத்தையே படித்துப் பயன் பெறத் தகுதி உள்ளவர்களாகத் தம்மை ஆக்கிக் கொள்ளவும் வேண்டும்.

கபீர்தாசர் விரதங்கள் இருந்து, உடலை வருத்தி இறைவனை வழிப்படக்கூடாது என்ற நோக்கம் உடையவர் அதை இவரது உபதேசங்களில் அங்கங்கே காணலாம் உடலும் மனமும் நல்ல நிலையில் இருந்தால் தான் பக்தி செய்ய முடியும் என்பதை பூகே பக்த நஹோயி குஸாயி என்கிறார் மேலும் பஜனைக் கீர்தனைகளிலே இவரது அற்புதமான கருத்துகள் பொதிந்துக் கிடக்கின்றன.

பஜனை சம்பிரதாயத்திலே அடியார்களின் வரிசையிலே இவரது பாடல்கள் வரும்பொழுது பக்தி என்பதே அறியாத பாமரர் நெஞ்சிலும் உணர்ச்சிகள் பொங்கி எழும். அவர்கள் இறைவனது இசை வடிவிலே மனம் ஊன்றி மெய்சிலிர்ப்பார்கள்.

* கபீர்தாஸ் மஹாப்ரபு கீ ஜெய் *

எழுதியவர்: ரா. ஹரி ஷங்கர்

Also, read ஸ்ரீ விஷ்ணு தாசர்கள்:



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • ஆகஸ்ட் 20, 2024
ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி [கோகுலாஷ்டமி]
  • ஆகஸ்ட் 3, 2024
வெங்கடேஸ்வர சுவாமியின் தாடையில் கற்பூரம் பூசுவது ஏன்?