- நவம்பர் 24, 2024
உள்ளடக்கம்
தென்னிந்தியாவின் கும்பமேளா என்றழைக்கப்படும் மகாமகம் / மாசி மகத் திருவிழா மாசி மாதத்தில் பௌர்ணமியுடன் சேர்ந்து வரும் மகம் நட்சத்திரம் (குரு சிம்மராசியில் இருக்கும் போது) வரும் நாள் மகாமகம் அல்லது மாசிமகம் என்றழைக்கப்படுகிறது.
இந்த மாசிமகத் திருவிழா உலகில் வாழும் தமிழர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் கும்பேசுவரர் கோயிலில் ஆண்டுதோறும் பெரு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
வருடாவருடம் நடக்கும் மகாமகத் திருவிழாவில் – கும்பகோணத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். அதுவே பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மாசிமகத் திருவிழாவில் ஏறக்குறைய 20 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும். எல்லா மாதங்களிலும் மகம் நட்சத்திரம் வந்தாலும், மாசி மாதம் வரும் மகம் நட்சத்திரமே சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அன்றைய தினம் விரதம் இருந்தால் “மறுபிறவி கிடையாது” என்று புராணங்கள் கூறுகின்றன.
மாசி மகத்தின் போது கடலாடும் விழாவானது பெரும்பாலான பக்தர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அதாவது பிறவிப் பெருங்கடலில் வீழ்ந்த பக்தர்களின் ஆன்மாவை இறைவனின் அருட்கடலில் மூழ்கி திளைக்கச் செய்தலே கடலாடும் விழாவாகும். கடலாடும் விழா கடல்களிலும் புண்ணிய ஸ்தலங்களில் உள்ள தீர்த்தக் குளங்களிலும் பக்தர்கள் நீராடுவர். தீர்த்த கடலாடும் முடியாத பக்தர்கள் வீட்டிலேயே விரதமிருந்து அருகில் உள்ள கோவிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்வர்.
பித்ரு தோஷ நிவர்த்திக்கு அருமையான பரிகார தினம் மாசிமகம். இதனால், மாசிமகத் தீர்த்தவாரியின்போது நீராடினால் பலவித நன்மைகள் கிடைக்கும்.
மாசி மகத்தன்று பூமியில் காந்த சக்தி உண்டாவதால், நீர் நிலைகளில் புதிய ஊற்றுகள் உண்டாகி அதில் காந்த சக்தி கரையும். மாசிமகம் ஸ்நானம் செய்வோருக்கு சிவனும், விஷ்ணுவும் உரிய பலன் தருவார்கள். மாசிமக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசிமக புராணத்தை படிக்கலாம் அல்லது கேட்கலாம், அதுவும் புண்ணியமே.
நீராடும்போது ஒருமுறை நீராடி எழுந்தால் பாவங்கள் விலகும். இரண்டாம் முறை நீராடி எழுந்தால் தேவலோகத்தில் வீற்றிருக்கும் பெருமை கிடைக்கும். மூன்றாம் முறை நீராடி எழுந்தால் நீராடுபவர் செய்த புண்ணியத்திற்கு எல்லையே இல்லை. நீராடும் காலத்துச் சிவபுராணம் சொல்லுதல், மேலும் சிறப்புடையது.
பெண்களுக்குரிய விரத தினமாகவும் போற்றப்படுகிறது. சக்தி வழிபாட்டிற்குரிய நாளாகிறது. எல்லா தெய்வங்களையும் வழிபடுவதற்கான சிறப்பு நாளாக அமைகிறது மாசிமகம். இந்த நன்னாள் தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது.
மாசிமகத்தன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வதால் குலதெய்வம் மனம் மகிழ்ந்து நம் குலத்தைக் காக்கும், வாழ்வாங்கு வாழ வைக்கும், வம்சம் வாழையடி வாழையென தழைத்து வளர செய்யும். இந்நாளில் விரதம் இருந்து குலதெய்வம், இஷ்ட தெய்வங்களை வணங்கி பலவிதமான தானம் செய்யலாம். இவ்வாறு தானம் செய்வதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமையும், சகல தோஷங்களும் நீங்கும்.
ஒருமுறை பிரம்மஹத்தி தோஷம் வருண பகவானை பிடித்திருந்தது. அப்பொழுது அவரை பிரம்மகத்தி கடலுக்கடியில் ஒளித்து வைத்திருந்தது. இந்த சமயத்தில் வருண பகவான் சிவபெருமானை காப்பாற்றும்படி வேண்டினான்; சிவபெருமானும் வேண்டுதலுக்கிணங்க வருணனை காப்பாற்றினார். வருணபகவான் காப்பாற்றப்பட்ட நாளே மாசி மகம் என்றழைக்கப்படுகிறது.
கந்தபுராணத்தில் மகத்தைப் பற்றி விரிவாகக் கூறப்படுகிறது: சிவபெருமானின் திருவிளையாடல்களில் ஒன்றான சக்தி இல்லையேல் சிவமில்லை சிவமில்லையேல் சக்தியில்லை வாக்குவாதத்தினால் உலகம் இயக்கமின்றி போனது. பார்வதி தேவி, தான் செய்த தவறை உணர்ந்து யமுனை நதியில் வலம்புரிச் சங்கு வடிவில் தவம் மேற்கொண்டிருந்தார். ஒரு மாசி மாதத்தில் யமுனை ஆற்றுக்கு வந்த பிரஜாபதி, வேதவல்லி தம்பதியினர் தாமரை மீதுள்ள வலம்புரிச் சங்கினை கண்டெடுத்தனர். வலம்புரிச் சங்கினை எடுத்ததும் பெண் குழந்தையாக மாறிற்று.
“சிவபெருமானின் வரத்தினால் பார்வதிதேவியே பெண் குழந்தையாக பிறந்துள்ளார்” என்று அறிந்து கொண்ட வேதவல்லி அக்குழந்தையை தாட்சாயிணி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். “பார்வதிதேவி மாசி மக நட்சத்திரத்தில் பிறந்ததால் மாசி மகம்” மேலும் பெருமை கொள்கிறது. எனவே மாசி பௌர்ணமி அன்று அன்னையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட எடுத்த காரியங்களில் வெற்றி, வாழ்வில் இன்பம் ஆகியவற்றைப் பெறலாம்.
வள்ளலாளன் என்ற திருவண்ணாமலை அரசனுக்கு அண்ணாமலையார் அரசனின் வேண்டுகோளின்படி மாசி பௌர்ணமி அன்றுதான் நீத்தார் கடன் செய்தார். அதனால் “மாசி பௌர்ணமி அன்று பெரியோர்களுக்கு சிரார்த்தம் செய்யப்படுவது” இன்றும் வழக்கத்தில் உள்ளது. மாசி பௌர்ணமியில் தான் சிவபெருமானால் மன்மதன் எரிக்கப்பட்டான். இந்நிகழ்ச்சி காமதகனம் என்று அழைக்கப்படுகிறது.