- நவம்பர் 7, 2024
உள்ளடக்கம்
முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். முருகப்பெருமானின் 16 வகையான திருக்கோலங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ஞானசக்திதரர்: திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், “ஞானசக்திதரர்” வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும்.
கந்தசாமி: பழனி மலை மீது இருந்து அருளும் பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் “கந்தசாமி” வடிவமாகும். இந்த உருவத்தை வழிபட்டு வேண்டிக்கொண்டால், சகல காரியங்களும் சித்தியாகும்.
ஆறுமுக தேவசேனாபதி: சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தின் கர்ப்பக்கிரக மாடம் ஒன்றில் “ஆறுமுக தேவசேனாபதி” வடிவத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டால் மங்கலகரமான வாழ்வு கிடைக்கும்.
சுப்பிரமணியர்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் “சுப்பிரமணியர்” ஆவார். இவர், தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தத்தை அளிக்கக் கூடியவர்.
கஜவாகனர்: திருமருகல், மேல்பாடி, சிதம்பரம் நடராஜர் கோவில் கீழைக்கோபுரத்தில், யானை மீது இருக்கும் முருகப்பெருமானை தரிசிக்கலாம். இவரை “கஜவாகனர்” என்கிறார்கள். இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகி ஓடும்.
சரவணபவர்: சென்னிமலை மற்றும் திருப்போரூர் கந்தசுவாமி திருத்தலங்களில் “சரவணபவர்” திருவுருவை காணலாம். இந்த வடிவத்தில் அருளும் முருகப்பெருமான், தன்னை வழிபடும் அடியவர்களுக்கு மங்கலம், ஒலி, கொடை, சாத்வீகம், வீரம் முதலிய குணங்களை அளிப்பவர்.
கார்த்திகேயர்: கும்பகோணத்தில் உள்ள கும்பேஸ்வரர் கோவிலிலும், தாராசுரம் ஐராவதீஸ்வரர் ஆலயத்திலும் “கார்த்திகேயர்” திருவுருவம் உள்ளது. இவரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். கார்த்திகை நட்சத்திர நாட்களில் இவரை வழிபடுவது விஷேசமான பலன்களைத் தரும்.
குமாரசாமி: கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள சிவன் கோவிலில், இவருக்குப் பஞ்சலோக விக்கிரகம் இருக்கிறது. இவரை வழிபட்டால் ஆணவம் அடியோடு நீங்கும். நாகர்கோவில் அருகில் இருக்கும் குமாரகோவிலிலும் இந்த “குமாரசாமி” திருவுருவைத் தரிசிக்க முடியும்.
சண்முகர்: திருச்செந்தூரில் உள்ள முருகன் அருட்கோலம் “சண்முகர்” திருவடிவமாகும். இவரை வழிபட்டால் சிவன் – சக்தியை வழிபட்ட பலன் கிடைக்கும்.
தாரகாரி: “தாரகாசுரன்” என்னும் அசுரனை அழித்ததால் முருகப்பெருமான் இந்தத் திருநாமத்தைப் பெற்றார். உலக மாயைகளில் இருந்து விடுபட வழிசெய்யும் திருக்கோலம் இது. விராலிமலையில் உள்ள முருகன் கோவிலில் “தாரகாரி” அருள்கிறார்.
சேனானி: தேவிகாபுரம் ஆலயத்தில் “சேனானி” திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் பகை அழியும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். பொறாமை நீங்கும்.
பிரம்மசாஸ்தா: காஞ்சீபுரத்தில் உள்ள குமரக்கோட்டம், ஆனூர், பாகசாலை, சிறுவாபுரி ஆகிய இடங்களில் “பிரம்மசாஸ்தா” திருக்கோலம் உள்ளது. இவரை வழிபட்டால் எல்லா வகை செயல்களிலும் தேர்ச்சி பெறலாம். கல்வியில் வெற்றி கிட்டும்.
வள்ளிகல்யாணசுந்தரர்: திருப்போரூர் முருகன் கோவில் தூண் ஒன்றில் இவரது திருவுருவம் இருக்கிறது. இவரை வழிபட்டால் திருமணத்தடைகள் விரைவில் அகலும்.
பாலசுவாமி: திருச்செந்தூர், திருக்கண்டியூர், ஆண்டாள் குப்பம் ஆகிய தலங்களில் “பாலசுவாமி” திருவுருவம் இருக்கிறது. இவர், அங்கக் குறைபாடுகளை அகற்றுபவராக இருக்கிறார். மேலும் நீண்டநாள் நோய் விலகும்.
சிரவுபஞ்சபேதனர்: திருநெல்லிக்கா, திருக்குறங்குடி, திருநனிபள்ளி ஆகிய இடங்களில் இவரது திருவுருவம் உள்ளன. இவரை வழிபட்டால் துன்பங்கள் விலகும். மனச்சஞ்சலம் அகலும்.
சிகிவாகனர்: மயில் மீது இருக்கும் முருகன் அருட்கோலம் இது. ஆலயம் பலவற்றில் அழகுற அமைந்திருக்கும் திருவடிவம். தன்னை வழிபடுபவர்களுக்கு இன்பமான வாழ்வு அளிப்பவர் இவர்.
Also, read
முருகனின் மயில் எட்டுதிசைக்கும் காவலாக உள்ள விபரமும்,அஷ்டதிக்கு பதில்களும்,அதன் விபரங்களையும் தயை கூர்ந்து வெளியிட வேண்டும் ஐயா. அதே போல் அஷ்டதிக்குக்கும் உள்ள முழு விபரங்களும் தயவு கூர்ந்து வெளியிட வேண்டும் ஐயா. இனிய காலை வணக்கங்களுடன்.. வள்ளிநாயகம்