- அக்டோபர் 20, 2024
உள்ளடக்கம்
🛕 நிலையாமை மட்டும்தான் இந்த உலகின் ஒரே நிலையான உண்மை. இந்த உண்மையை உணர்வதும், தெளிவதுமான அனுபவமே நமக்கு வாழ்க்கைப் பயணம் ஆகிறது. இந்தப் பயணத்தில் ஏதோ ஒரு கட்டத்தில் நாம் விரும்பியோ விரும்பாமலோ இந்த உண்மை நம்மை ஆட் கொள்கிறது. அதன் தாக்கத்தில், தீவிரத்தில் நாம் அனைவருமே செயல் இழந்து, நிதானம் தவறி மயங்கி நிற்கிறோம்.
🛕 இத்தகைய மயக்கநிலையை எதிர் கொள்ளவும் அதில் இருந்து மீளும் வழிவகைகளை நம் முன்னோர்கள் மிகத் தெளிவாகவே வரையறுத்து கூறியிருக்கின்றனர். அப்படி அவர்கள் அருளிய மெய்யுணர்வையும், மெய்யறிவையும் அறிந்து தெளிந்து அதன் வழி நிற்பவர்களின் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகவும், அனைவருக்கும் பயனுள்ளதாகவும் ஆகிறது.
🛕 வள்ளுவப் பெருந்தகை இந்த நிலையாமையை அதன் கூறுகளை தனியொரு அதிகாரமாகவே ஆக்கி அருளியிருக்கிறார்.
🛕 நேற்று நம்மிடையே இருந்தவன் இன்று இல்லாமல் இறந்து போகும் நிலையாமைதான் இந்த உலகின் பெருமை என்கிறார். மேலும் இதே அதிகாரத்தின் மற்றொரு குறளில்
🛕 நம்மை கடந்து போகும் ஒவ்வொரு நாளும் நம் உடலில் இருந்து உயிரை அறுத்தெடுக்கும் வாள் என்பதை உணர வேண்டுமென்கிறார்.
இதற்கு என்னதான் தீர்வு?
🛕 அதனையும் வள்ளுவப் பெருந்தகையே பின்வருமாறு அருளுகிறார்.
🛕 நிலையாமையை, அதன் குறுகிய கால அளவை உணர்ந்து நமக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பில் நம்மாலான நல்லவைகளை விரைந்து செய்வதே நமக்கான கடமையாக முன் வைக்கிறார். இதனை உணர்ந்து செயல்படுவோர் கடைத்தேறுகின்றனர்.
🛕 நமது இளமை, உடல், உயிர் ஆகியவை அழியக் கூடியவை. எந்த ஒரு உயிரும் மற்றொரு உயிருக்காக காத்திருப்பதில்லை, அதனதன் காலம் வரும்போது அவை அழிந்து போகின்றது. அற்புதமான அறிவும், ஆயிரம் சேனைகளும், அளவிட முடியாத செல்வம் என எத்தனை இருந்தாலும் அவை அழியும் இளமையையோ, உடலையோ, உயிரையோ ஒரு போதும் காக்க முடிவதில்லை.
🛕 எனவே வாழும் காலத்தே இந்த வாய்ப்பின் அருமையை உணர்ந்து செயல்பட வேண்டும். மாறாக சிற்றின்பங்களில் மூழ்கித் திளைத்து வாய்ப்பை வீணடிப்பதில் அர்த்தமில்லை. மேலும் பருவத்தே பயிர் செய்யாது கடைசி நேரத்தில் வருந்திப் பயனில்லை என்கிறார்கள் நம் சித்தர் பெருமக்கள். அதிலும் குறிப்பாக பட்டினத்தார் பாடல்களில் இந்த உண்மைகள் உரக்கச் சொல்லப் பட்டிருக்கின்றன.
🛕 நிலையில்லாதவைகளை நிலையானது என எண்ணி அதில் மனம் மயங்கி வாழ்க்கையை வீணடிக்காமல், நிலையான பேரருளை உணர்ந்து தெளிந்து அதன் வழி நிற்பதே சிறப்பு என்கிறார்.
நன்றி: http://www.siththarkal.com/2014/06/blog-post_23.htmlRead, also