- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் பெயர்
அவிநாசி (திருப்புக்கொளியூர்)
மூலவர்
அவிநாசியப்பர் (அவிநாசிநாதர், பெருங்கேடிலியப்பர்), அவிநாசி லிங்கேஸ்வரர்
அம்மன்/தாயார்
கருணாம்பிகை, பெருங்கருணை நாயகி
தல விருட்சம்
பாதிரிமரம்
தீர்த்தம்
காசிக்கிணறு, நாககன்னிகைத் தீர்த்தம், ஐராவதத் தீர்த்தம்.
புராண பெயர்
திருப்புக்கொளியூர் அவிநாசி, திருஅவிநாசி
பதிகம்
சுந்தரர் – 1
ஊர்
அவிநாசி
மாவட்டம்
திருப்பூர்
🛕 தல புராண வரலாறு: சுந்தரர் இத்தலத்திற்கு வருகை தந்த போது எதிரும் புதிருமாக இருந்த இரு வீடுகளில் ஒன்றில் மங்கல ஒலியும், மற்றொன்றில் அமங்கல ஒலியும் எழ அதன் காரணத்தைக் கேட்டார். ஐந்து வயதுள்ள இரு அந்தணச் சிறுவர்கள் மடுவில் குளிக்கச் சென்றதாகவும், அவர்களில் ஒருவனை மடுவில் இருந்த முதலை விழுங்கி விட்டதாகவும் கூறினர். மேலும் தப்பிப் பிழைத்த சிறுவன் வீட்டில் அவனுக்கு உபனயனம் நடக்கும் விழா ஒலி என்றும், இறந்த சிறுவனின் வீட்டில் சோகத்தால் அழும் ஒலி என்றும் கூறினர். இறந்த சிறுவனின் பெற்றோர் சுந்தரர் வந்திருப்பதை அறிந்து அவரின் உதவியை நாடினர். மடு இருக்குமிடம் கேட்டு அங்கு சென்று முதலையை அழைக்கும் எண்ணத்துடன் சுந்தரர் எற்றான் மறக்கேன் என்று தொடங்கும் பதிகம் பாடினார். பிறகு 4வது பாடலாக
உரைப்பார் உரை உகந்து உள்கவல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
🛕 என்று இறைவனுக்கு கட்டளை இடும் வகையில் பாடும் போது சிவபெருமான் அருளினால் நீரில்லா மடுவில் நீர் நிறைந்திட முதலை அதனூடே வந்து சுந்தரரிடம் ஐந்து வயது பாலகனாக உண்ட சிறுவனை இப்போது பத்து வயதுப் பையனாகவே உயிருடன் உமிழ்ந்துவிட்டுச் சென்றது. இத்தகைய அற்புதம் நிகழ்ந்த சிவஸ்தலம் தான் அவிநாசி என்று அழைக்கப்படும் திருப்புக்கொளியூர். சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
🛕 கோவில் அமைப்பு: தேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் திருப்புக்கொளியூர் என்று வழங்கப்பட்ட இந்த சிவஸ்தலம் தற்போது அவிநாசி என்று கூறப்படுகிறது. இக்கோவில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு திசையில் 7 நிலை ராஜ கோபுரத்துடன் நம்மை வரவேற்கிறது. கோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் உள்ளன. ராஜ கோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் உள்ளன. உள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் காணப்படுகின்றன. மண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தால் மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருக்கிறது.
🛕 மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். மூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் முருகன் சந்நிதியும், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதியும் அமைந்துள்ளன. மேலும் உள் பிரகாரத்தில் 63 நாயன்மார்கள் சிற்பங்களும் வைக்கப்பட்டு இருக்கின்றன. ஸ்ரீ காலபைரவர் சந்நிதியும் இத்தலத்தில் சிறப்பிற்குரியது. நடராஜர் மண்டபத்திலுள்ள ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனி எல்லோரையும் கவர்ந்து இழுக்கும். இத்தலத்தில் பிரம்மா 100 ஆண்டுகளும், இந்திரனுடைய ஐராவதம் என்னும் யானை 12 ஆண்டுகளும், தாடகை 3 ஆண்டுகளும், நாகக் கன்னி 21 மாதங்களும் வழிபாடு செய்ததாக ஐதீகம்.
🛕 இறைவி கருணாம்பிகை சந்நிதி மூலவர் அவிநாசியப்பர் சந்நிதியின் வலதுபுறம் அமைந்துள்ளது. இங்கே அழகு கொஞ்சும் திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு கருணாம்பிகை காட்சி தருகிறாள். அம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபடுகின்றனர், அப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாம்; விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
🛕 அவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் ½ கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது. அந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோவில் உள்ளது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும். முதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு உள்ளது.
🛕 பங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகமும், 63 மூவர் விழாவும் மற்ற சிறப்பான விழாக்களாகும்.
🛕 சுந்தரர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
1. எற்றான் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்றாக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே.
2. வழிபோவார் தம்மோடும் வந்து உடன் கூடிய மாணி நீ
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே
பொழில் ஆரும் சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
இழியாக் குளித்த மாணி என்னைக் கிறி செய்ததே.
3. எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்தக்கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறலைப்பார் இலை
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
எம் கோனே உனை வேண்டிக் கொள்வேன் பிறவாமையே.
4. உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார் தங்கள் உச்சியாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரைக்காடு சோலைப் புக்கொளியூர் அவிநாசியே
கரைக்கால் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே.
5. அரங்கு ஆவது எல்லாமாய் இடுகாடு அது அன்றியும்
சரம் கோலை வாங்கி வரிசிலை நாணியில் சந்தித்துப்
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே
குரங்காடு சோலைக் கோயில்கொண்ட குழைக் காதனே.
6. நாத்தானும் உனைப் பாடல் அன்றி நவிலாது எனாச்
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தரச் சோதியாய்
பூத் தாழ்சடையாய் புக்கொளியூர் அவிநாசியே
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே.
7. மந்தி கடுவனுக்கு உண்பழம் நாடி மலைப்புறம்
சந்திகள் தோறும் சலபுட்பம் இட்டு வழிபடப்
புந்தி உறைவாய் புக்கொளி யூரவி நாசியே
நந்தி உனைவேண்டிக் கொள்வேன் நரகம் புகாமையே.
8. பேணா தொழிந்தேன் உன்னைய லாற்பிற தேவரைக்
காணா தொழிந்தேன் காட்டுதி யேலின்னங் காண்பன்நான்
பூணாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே
காணாத கண்கள் காட்ட வல்ல கறைக்கண்டனே.
9. நள்ளாறு தெள்ளாறு அரத்துறைவாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள் ஏறு சோலைப் புக்கொளியூரில் குளத்திடை
உள்ளாடப் புக்க மாணி என்னைக் கிறி செய்ததே.
10. நீர் ஏற ஏறு நிமிர் புன்சடை நின்மல மூர்த்தியைப்
போர் ஏறு அது ஏறியைப் புக்கொளியூர் அவிநாசியைக்
கார் ஏறு கண்டனைத் தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே.
🛕 கோயமுத்தூரில் இருந்து சுமார் 43km தொலைவிலும், திருப்பூரில் இருந்து சுமார் 14km தொலைவிலும் அவிநாசி உள்ளது. அருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் 8km கோயமுத்தூர் – ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
Mangalam Rd, Avinashi, Tamil Nadu 641654