- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
சிவஸ்தலம் பெயர்
திருக்காணப்பேர் (காளையார்கோவில்)
இறைவன் பெயர்
சொர்ணகாளீஸ்வரர் (சுவர்ணகாளீஸ்வரர்), சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர்
இறைவி பெயர்
சுவர்ணவல்லி, சௌந்தர நாயகி, மீனாட்சி
தல விருட்சம்
கொக்கு மந்தாரை
தீர்த்தம்
கஜபுஷ்கரணி (யானைமடு), சிவகங்கைக்காளி தீர்த்தம், விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌவுரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம்
ஊர்
காளையார் கோவில்
மாவட்டம்
சிவகங்கை
சொர்ணகாளீஸ்வரர் கோவில் வரலாறு: சண்டாசுரனைக் கொன்றதால் ஏற்பட்ட பாவம் நீங்க காளி இத்தலத்தை அடைந்து இங்குள்ள சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி சிவபெருமானை வழிபட்டாள். பின் காளி தனது கரிய உருவமும், அசுரனைக் கொன்ற பாவமும் நீங்கப்பெற்று சுவர்ணவல்லியாக உருமாறி காளீசுவரரை திருமணம் புரிந்து கொண்ட தலம் திருக்கானப்பேர் என்ற் காளையார்கோவில்.
கோவில் அமைப்பு: இவ்வாலயம் சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் 157 அடி உயரம் கொண்ட 9 நிலை இராஜகோபுரம், மற்றும் 5 நிலை கொண்ட மற்றொரு கோபுரம் ஆக இரண்டு கோபுரங்களுடன் கிழக்கு நோக்கி விளங்குகிறது. இவைகளில் சிறிய கோபுரம் முதலாம் சுந்தரபாண்டியனாலும், பெரிய இராஜகோபுரம் மருது சகோதரர்களாலும் கட்டப்படவையாகும். இரண்டு பிரகாரங்களைக் கொண்ட இக்கோவில் மூன்று இறைவன் சந்நிதிகளைக் கொண்டு தனித்தனியே விளங்குகிறது. மூன்று சந்நிதிகளில் நடுவே இருப்பவர் சுவர்ணகாளீசுவரர். இவரே இத்தலத்தின் தேவாரப் பாடல் பெற்ற மூர்த்தியாவார்.
வலது பக்கத்தில் இருப்பவர் சோமேசுவரர். இடது பக்கத்தில் இருப்பவர் சுந்தரேசர். கோவில் செத்துக்கள் யாவும் சுவர்ணகாளீசுவரர் பெயரில் தான் உள்ளன. விழாக்காலங்களில் சோமேசுவரர் கோவில் மூர்த்திகள் தான் வீதியுலா வருவர். படையல் நிவேதனம் முதலியவைகள் சுந்தரேசுவரருக்குத் தான் நடைபெறும். இவ்வாறு சுவர்ணகாளீஸ்வரர் கோயிலில் மூன்று சிவன், மூன்று அம்பாள் தனித்தனி சன்னதிகளில் அருள்பாலிக்கின்றனர். இறைவன் சந்நிதிகள் மூன்றும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன. இறைவி சுவர்ணவல்லி சந்நிதி சுந்தரேஸ்வரர் சந்நிதிக்கு இடதுபுறம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மற்ற இரண்டு அம்பாள் சந்நிதிகளும் தெற்கு நோக்கி அமைந்துள்ளன.
ஐராவதம் வழிபட்டது: இந்திரனின் வாகனமான ஐராவத யானை, மகரிஷி ஒருவரால் தரப்பட்ட பிரசாத மாலையைத் தரையில் வீசி எறிந்தது. இதனால் சாபம் பெற்ற அந்த யானை, சாப நிவர்த்திக்காக இத்தலத்திற்கு வந்து இறைவனை வழிபட்டது. தன் தந்தத்தால் பூமியைக் கீறி ஒரு பள்ளத்தை உண்டாக்கி தீர்த்தமெடுத்து இறைவனை வழிபட்டு தனது சாபம் நீங்கி தேவலோகம் சென்றது. யானை உண்டாக்கிய பள்ளத்தில் தண்ணீர் பெருகி, ஒரு தீர்த்தக்குளம் உண்டானது. இதற்கு யானை மடு (கஜபுஷ்கரணி) என்று பெயர்.
இத்தீர்த்தம் என்றும் வற்றாத நிலையில் இருக்கிறது. சதுர வடிவில் உள்ள இந்த தீர்த்தக்குளத்தின் நடுவில் அழகான நீராழி மண்டபம் அமைந்துள்ளது. இராமபிரான் ராவணனை அழித்த பிரம்மஹத்தி தோஷம் நீங்க இத்தீர்த்தத்தில் நீராடியதாக ஸ்கந்த புராணத்தில் உள்ளது. இந்த கஜபுஷ்கரணி தீர்த்தம் கோவிலுக்கு வெளியே கோபுரங்களுக்கு எதிரிலுள்ளது.
காளையார் கோவில் சிறப்பு: இத்தலத்திலுள்ள சிவகங்கை தீர்த்தம் காளி தனது வழிபாட்டிற்காக உருவாக்கியதாகும். மேலும் விஷ்ணு தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், கௌரி தீர்த்தம், ருத்ர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், சுதர்சன தீர்த்தம் முதலிய தீர்த்தங்களும் உள்ளன. தலவிருட்சமாக கொக்குமந்தாரை விளங்குகிறது.
இத்தலத்தில் பிறந்தாலும், இறந்தாலும் முக்தி என்று தலபுராணம் கூறுகிறது.. இத்தல இறைவனை வணங்கினால் பூர்வ ஜென்ம பாவம் விலகும். இந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தை போக்க பல சிவாலயங்களை தரிசித்து வந்தபோது இத்தலம் வந்தவுடன் ஆயிரம் சிவாலயங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைத்ததாக உணர்ந்தான். இதன் அடிப்படையிலேயே இங்கு சகஸ்ரலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது மற்றொரு சிறப்பம்சம்.
இத்தலத்திலுள்ள பெரிய இராஜகோபுரத்தைப் பற்றி ஒரு வரலாறு உண்டு. 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களுக்கும் மருதுபாண்டிய சகோதரர்களுக்கும் மூண்ட போரில் தப்பித்த மருது சகோதரர்கள் காட்டில் ஒளிந்து இருந்தனர். மருதுபாண்டிய சகோதரர்களைக் கைது செய்ய எண்ணிய ஆங்கிலேயர், அவர்கள் வந்து சரணடையாவிட்டால் இந்த பெரிய கோபுரத்தை இடித்துவிடப் போவதாகப் பறை சாற்றினர். காட்டில் திரிந்து வாழ்ந்து கொண்டிருந்த மருதுபாண்டியர் இதையறிந்து கோபுரத்தைக் காக்க விரும்பி தங்களது உயிரைப் பொருட்படுத்தாமல் வந்து சரணடைந்து, பின்னர் வெள்ளையரால் தூக்குத் தண்டனை விதிக்கப் பெற்றனர்.
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமானுடன் தலயாத்திரை செய்த போது திருச்சுழியல் தலத்திற்கு வந்தார். அங்கு இறைவனை வழிபட்டுவிட்டு இரவு தங்கினார். இரவில் அவர் கனவில் காளை வடிவம் தாங்கிக் கையில் பொற்செண்டு பிடித்துத் கொண்டு திருமுடியில் சுழியும் அணிந்து காட்சி தந்த இறைவன் “யாம் இருப்பது கானப்பேர்” எனக்கூறி மறைந்தார். கண் விழித்த சுந்தரர், சேரர் பெருமானுடன் இத்தலத்திற்கு வந்து பணிந்து பதிகம் பாடிப் பரவினார். கானப்பேர் திருத்தலத்தில் காளை வடிவில் குடியிருக்கும் இறைவனே என்று ஒவ்வொரு பாடலிலும் குறிப்பிடுகிறார்.
இப்பதிகம் 7-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது:
1. தொண்டர் அடித்தொழலும் சோதி இளம்பிறையும்
சூதன மென்முலையாள் பாகமும் ஆகிவரும்
புண்டரிகப் பரிசாம் மேனியும் வானவர்கள்
பூச லிடக்கடல்நஞ் சுண்ட கருத்தமரும்
கொண்ட லெனத்திகழுங் கண்டமு மெண்டோளுங்
கோல நறுஞ்சடைமேல் வண்ணமுங் கண்குளிரக்
கண்டு தொழப்பெறுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
2. கூத லிடுஞ்சடையும் கோளர வும்விரவுங்
கொக்கிற குங்குளிர்மா மத்தமும் ஒத்துனதாள்
ஓத லுணர்ந்தடியார் உன்பெரு மைக்குநினைந்
துள்ளுரு காவிரசும் மோசையைப் பாடலும்நீ
ஆத லுணர்ந்தவரோ டன்பு பெருத்தடியேன்
அங்கையின் மாமலர்கொண் டென்கண தல்லல்கெடக்
காத லுறத்தொழுவ தென்றுகொ லோஅடியேன்
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
3. நானுடை மாடெனவே நன்மை தரும்பரனை
நற்பத மென்றுணர்வார் சொற்பத மார்சிவனைத்
தேனிடை இன்னமுதை மற்றத னிற்றெளிவைத்
தேவர்கள் நாயகனைப் பூவுயர் சென்னியனை
வானிடை மாமதியை மாசறு சோதியனை
மாருத மும்மனலும் மண்டல மும்மாய
கானிடை மாநடனென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
4. செற்றவர் முப்புரமன் றட்ட சிலைத்தொழிலார்
சேவக முந்நினைவார் பாவக முந்நெறியும்
குற்றமில் தன்னடியார் கூறு மிசைப்பரிசும்
கோசிக மும்மரையிற் கோவண மும்மதளும்
மற்றிகழ் திண்புயமும் மார்பிடை நீறுதுதை
மாமலை மங்கையுமை சேர்சுவ டும்புகழக்
கற்றன வும்பரவிக் கைதொழ லென்று கொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
5. கொல்லை விடைக்குழகுங் கோல நறுஞ்சடையிற்
கொத்தல ரும்மிதழித் தொத்தும் அதனருகே
முல்லை படைத்தநகை மெல்லிய லாளொருபால்
மோக மிகுத்திலகுங் கூறுசெ யெப்பரிசும்
தில்லை நகர்ப்பொதுவுற் றாடிய சீர்நடமுந்
திண்மழு வுங்கைமிசைக் கூரெரி யும்மடியார்
கல்ல வடப்பரிசுங் காணுவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
6. பண்ணுத லைப்பயனார் பாடலும் நீடுதலும்
பங்கய மாதனையார் பத்தியு முத்தியளித்
தெண்ணுத லைப்பெருமான் என்றெழு வாரவர்தம்
மேசற வும்மிறையாம் எந்தையை யும்விரவி
நண்ணுத லைப்படுமா றெங்ஙன மென்றயலே
நையுறு மென்னைமதித் துய்யும்வ ணம்மருளுங்
கண்ணுத லைக்கனியைக் காண்பது மென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
7. மாவை யுரித்ததள்கொண் டங்க மணிந்தவனை
வஞ்சர் மனத்திறையும் நெஞ்சணு காதவனை
மூவ ருருத்தனதாம் மூல முதற்கருவை
மூசிடு மால்விடையின் பாகனை ஆகமுறப்
பாவக மின்றிமெய்யே பற்று மவர்க்கமுதைப்
பால்நறு நெய்தயிர்ஐந் தாடு பரம்பரனைக்
காவல் எனக்கிறையென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
8. தொண்டர் தமக்கெளிய சோதியை வேதியனைத்
தூய மறைப்பொருளாம் நீதியை வார்கடல்நஞ்
சுண்ட தனுக்கிறவா தென்று மிருந்தவனை
ஊழி படைத்தவனோ டொள்ளரி யும்முணரா
அண்டனை அண்டர்தமக் காகம நூல்மொழியும்
ஆதியை மேதகுசீ ரோதியை வானவர்தம்
கண்டனை யன்பொடுசென் றெய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
9. நாதனை நாதமிகுத் தோசைய தானவனை
ஞான விளக்கொளியாம் ஊனுயி ரைப்பயிரை
மாதனை மேதகுதன் பத்தர் மனத்திறையும்
பற்றுவி டாதவனைக் குற்றமில் கொள்கையனைத்
தூதனை யென்றனையாள் தோழனை நாயகனைத்
தாழ்மக ரக்குழையுந் தோடு மணிந்ததிருக்
காதனை நாயடியேன் எய்துவ தென்றுகொலோ
கார்வயல் சூழ்கானப் பேருறை காளையையே
10. கன்னலை இன்னமுதைக் கார்வயல் சூழ்கானப்
பேருறை காளையைஒண் சீருறை தண்டமிழால்
உன்னி மனத்தயரா உள்ளுரு கிப்பரவும்
ஒண்பொழில் நாவலர்கோ னாகிய ஆரூரன்
பன்னும் இசைக்கிளவி பத்திவை பாடவல்லார்
பத்தர் குணத்தினராய் எத்திசை யும்புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும்
மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே!
திருவிழா: தைப்பூசத்தில் சுவர்ண காளீஸ்வரருக்கும், வைகாசி விசாகத்தில் சோமேஸ்வரருக்கும், ஆடிப்பூரத்தில் சுவர்ணவல்லி அம்மனுக்கும் தேர்த்திருவிழா நடக்கிறது. 11ம் திருமுறையிலும் குறிப்பிடப்பட்ட தலம். மார்கழி பவுர்ணமி, நவராத்திரியில் சிறப்பு பூஜை உண்டு.
பிரார்த்தனை: சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
திறக்கும் நேரம்: காலை 05:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.
Also, read