- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம் பெயர்
கருவூர் (கரூர்)
இறைவன் பெயர்
பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர்), ஆநிலையப்பர்
இறைவி பெயர்
சுந்தரவல்லி, அலங்காரவல்லி
தல விருட்சம்
வஞ்சி
தீர்த்தம்
தடாகைதீர்த்தம், ஆம்பிரவதி (அமராவதி) நதி
பதிகம்
திருஞானசம்பந்தர் – 1
ஊர், மாவட்டம்
கரூர்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
பசுபதிநாதர் வரலாறு: பிரம்மனுக்கு தன் படைப்புத் திறனால் ஏற்பட்ட கர்வத்தை அடக்க சிவபெருமான் காமதேனுவை கொண்டு திருவிளையாடல் நடத்தினார். அதன்படி காமதேனு, நாரதர் கூறியபடி பூமிக்கு வந்து, வஞ்சி வனமாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தது. அப்போது, “புற்று ஒன்றிற்குள் பாதாளத்தில் ஆதிலிங்கம் இருக்கும். அதை வழிபடு”, என்று அசரீரி கேட்டது. அதன்படி காமதேனுவும் தன் மடியிலிருந்த பாலை சொரிந்து தினமும் வழிபாடு செய்தது.
🛕 ஒரு நாள் இறைவன் திருமுடியில் காமதேனுவின் குளம்பு பட்டுவிடவே, லிங்கத்தில் ரத்தம் வந்தது. இதனால் காமதேனு மனம் வருந்தியது. இதனைக்கண்ட இறைவன், காமதேனுவிடம், “நீ என்னை வழிபட்ட காரணத்தினால் இந்த உலகம் என்னை பசுபதிநாதர் என்ற பெயரால் அழைக்கும். அத்துடன் நீயும் பிரம்மனைப்போல் படைப்பு தொழில் செய்வாய்”, என்று வரம் தந்தார். அதன்படி காமதேனுவும் படைப்பு தொழில் செய்ய பிரம்மன் கர்வம் நீங்கினான்.
🛕 இதையடுத்து இறைவன் படைப்புத் தொழிலை பிரம்மனிடம் ஒப்படைத்து விட்டு காமதேனுவை சொர்க்கத்துக்கு அழைத்துக் கொண்டார் என்று இத்தல வரலாறு கூறுகிறது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இதுவும் ஒன்றாகும்.
🛕 கொங்குநாட்டு சிவஸ்தலங்களில் கரூரில் உள்ள சிவாலயம் பெருமை மிக்கதும் பெரிய அளவில் அமைந்துள்ளதும் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூன்று சிறப்புக்களை உள்ளடக்கியது கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோவில். இந்த சிவஸ்தலம் கோவில் சுமார் 2.65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. கோவில் ராஜகோபுரம் ஏழு நிலைகளையும் ஏழு கலசங்களையும் கொண்டுள்ளது. கோபுரத்தில் திருவிளையாடல் புராணம், தசாவதாரம் ஆகியவை சுதைச் சிற்பங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன. உட்கோபுரம் ஐந்து நிலைகளைக் கொண்டது. இரு கோபுரங்களுக்கும் இடையே புகழ்ச்சோழர் மண்டபம் உள்ளது. புகழ்ச்சோழர் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் கருவூர்ப் பகுதியை ஆண்ட மன்னராவார். 63 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் பிறந்த தலம் என்ற பெருமையும் கருவூருக்கு உண்டு.
🛕 கோவில் நல்ல சுற்று மதிலோடு கூடியது. கிழக்கு மேற்காக 465 அடி நீளமும், தெற்கு வடக்காக 205 அடி நீளமும் உடையது. முன் கோபுரம் 120 அடி உயரம் உள்ளது. கோவிலுக்குள் 2 பிரகாரங்கள் உண்டு. கோவிலில் உள்ள நூற்றுக்கால் மண்டபம் காணவேண்டிய ஒன்றாகும். கிழக்கு நோக்கி உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் – பசுபதிநாதர், ஆநிலையப்பர் என்று வழங்கப்படும் மூலவர் ஒரு சுயம்பு லிங்கம் ஆகும். சுமார் இரண்டடி உயரம் உள்ள இந்த சிவலிங்கம் வடபுறமாகச் சற்றே சாய்ந்தாற்போலக் காட்சியளிக்கிறது. பங்குனி மாதம் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்கள் சூரியனின் ஒளி லிங்கத்தின் மீது படும்படியாக கோவில் அமைப்பு இருப்பது ஒரு சிறப்பம்சம் ஆகும்.
🛕 கீழ்ப்பகுதி பிரம்மபாகம். நடுப்பகுதி திருமால் பாகம். மேல்பகுதி உத்திர பாகம் என்று மும்மூர்த்திகளும் சேர்ந்த திருமூர்த்தியாக சிவலிங்கம் காட்சி தருகிறது. கோவிலில் லிங்கத்திற்கு எதிரில் கொடிமரமும், அடுத்து பலிபீடமும், நந்திகேஸ்வரரின் திருமேனியும் உள்ளன. உட்பிரகாரத்தில் தெற்குச்சுற்றில் 63 நாயன்மார்கள் எழுந்தருளியுள்ளனர். அவர்களில் எரிபத்த நாயனாருக்கு தனி சந்நிதி இருக்கிறது. மேற்குச் சுற்றில் விநாயகர், கஜலட்சுமி, ஆருமுகன் ஆகியோரின் திரு உருவங்கள் உள்ளன. வடக்குச் சுற்றில் பஞ்சலிங்க மூர்த்திகள் உள்ளனர்.
🛕 ஈசன் சந்நிதியில் இருந்து வடக்கு நோக்கிச் சென்று ஒரு வாயிலைக் கடந்தால் அம்மன் சுந்தரவல்லி சந்நிதி தெற்கு பார்த்தபடி அமைந்திருக்கிறது. இவள் கிரியா சக்தி வடிவானவள். இந்த சந்நிதியின் இடது புறம் கிழக்கு நோக்கி அலங்காரவல்லி என்ற அம்மனின் பழைய கோவில் இருக்கிறது. இவள் ஞான சக்தி வடிவானவள். பிரம்மா, காமதேனு ஆகியோர் இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டுள்ளனர். காமதேனு வழிபடும் போது ஏற்பட்ட குளம்பின் தழும்பு இப்போதும் சிவலிங்கத்தின் மீது காணலாம். கந்த புராண காலத்தில் வாழ்ந்ததாக கருதப்படும் முசுகுந்த சக்ரவர்த்தியால் திருப்பணி செய்யப்பட்டதாக பெருமை பெற்றது இந்த சிவஸ்தலம். பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கருவூர் சித்தர் வாழ்ந்து இக்கோவிலில் உள்ள சிவனுடன் ஐக்கியமானதால் அவருக்கு தெற்குப் பிரகாரத்தில் கன்னி மூலையில் கிழக்கு நோக்கி கருவூர் சித்தர் சந்நிதி உள்ளது.
🛕 கி.பி. 14ம் நூற்றாண்டில் கருவூருக்கு வந்த அருணகிரிநாதர் இக்கோவிலில் உள்ள முருகனை பற்றி தன்னுடைய திருப்புகழில் பாடியுள்ளார். திருப்புகழில் இத்தலத்து முருகன் மீது 7 பாடல்கள் உள்ளன. இத்தலத்தில் முருகப்பெருமான் ஆறு திருமுகங்களுடனும், 12 திருக்கரங்களுடனும் தனது தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி நினக கோலத்தில் காட்சி தருகிறார். மயில் பின்பக்கம் உள்ளது.
🛕 திருஞானசம்பந்தர் இத்தலத்து இறைவன் மேல் பாடியருளியுள்ள இப்பதிகம் 2-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது.
1. தொண்டு எலாம் மலர் தூவி ஏத்த நஞ்சு
உண்ட ஆர்உயிர் ஆய தன்மையர்
கண்டு அனார் கருவூருள் ஆன்நிலை
அண்டனார் அருள் ஈயும் அன்பரே.
2. நீதியார் நினைந்து ஆய நான்மறை
ஓதியாரொடுமு கூடலார் குழைக்
காதினார் கருவூருள் ஆன்நிலை
ஆதியாரர் அடியார் தம் அன்பரே.
3. விண்ணுலாமு மதி சூடி வேதமே
பண் உளார் பரமாய பண்பினர்
கண் உளார் கருவூருள் ஆன்நிலை
அண்ண லாரடி யார்க்கு நல்லரே.
4. முடியர் மும்மத யானை ஈர்உரி
பொடியர் பூங்கணை வேளைச் செற்றவர்
கடியுளார் கருவூருள் ஆன்நிலை
அடிகள் யாவையும் ஆய ஈசரே.
5. பங்கயம் மலர்ப்பாதர் பாதி ஓர்
மங்கையர் மணி நீலகண்டர் வான்
கங்கையர் கருவூருள் ஆன்நிலை
அங்கை ஆடு அரவத்து எம் அண்ணலே.
6. தேவர் திங்களும் பாம்பும் சென்னியில்
மேவர் மும்மதில் எய்த வில்லியர்
காவலர் கருவூருள் ஆன்நிலை
மூவர் ஆகிய மொய்ம்பர் அல்லரே.
7. பண்ணினார் படியேற்றர் நீற்றர் மெய்ப்
பெண்ணினார் பிறை தாங்கு நெற்றியர்
கண்ணினார் கருவூருள் ஆன்நிலை
நண்ணினார் நமை ஆளும் நாதரே.
8. கடுத்த வாள் அரக்கன் கயிலையை
எடுத்தவன் தலை தோளும் தாளினால்
அடர்த்தவன் கருவூருள் ஆன்நிலை
கொடுத்தவன் அருள் கூத்தன் நல்லனே.
9. உழுது மா நிலத்து ஏனமெ ஆகி மால்
தொழுது மாமலரோனும் காண்கிலார்
கழுதினான் கருவூருள் ஆன்நிலை
முழுதுன் ஆகிய மூர்த்தி பாதமே.
10. புத்தர் புன்சமண் ஆதர் பொய்யுரைப்
பித்தர் பேசிய பேச்சை விட்டு மெய்ப்
பத்தர் சேர் கருவூருள் ஆன்நிலை
அத்தர் பாதம் அடைந்து வாழ்மினே.
11. கந்தம் ஆர் பொழில் காழி ஞானசம்
பந்தன் சேர் கருவூருள் ஆன்நிலை
எந்தையைச் சொன்ன பத்தும் வல்லவர்
சிந்தையில் துயர் ஆய தீர்வரே.
திருவிழா: பங்குனி உத்திரத் திருவிழா 13 நாட்கள். மார்கழித் திருவிழா – ஆருத்ரா தரிசனம் 13 நாட்கள். பிரதோச காலங்கள், குருபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி மற்றும் பௌர்ணமி நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் பெருமளவில் இருக்கும்.
பிரார்த்தனை: ஆனிலையப்பரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம்.
🛕 இத்தலத்து ஈசனை வணங்குவோருக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு, தொழில் விருத்தி, உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.
நேர்த்திக்கடன்: அபிஷேகம், மற்றும் தாலி, ஆபரணங்கள் ஆகியவற்றை காணிக்கையாக பக்தர்கள் செலுத்துகிறார்கள், சுவாமிக்கு பால், தயிர், இளநீர், எண்ணெய் அபிஷேகம் செய்யலாம். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகியவற்றை செய்யலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.
🛕 ஆலயம் தினந்தோறும் காலை 6 மணி முதல் பகல் 12-30 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவிலுக்கு எப்படிப் போவது?
🛕 கரூர் நகரின் மத்தியில் கோவில் உள்ளது. கோயமுத்தூர், ஈரோடு, திருச்சியில் இருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன. கரூர் ரயில் நிலையம் திருச்சி – ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.
🛕 Sannathi Street, Karur, Tamil Nadu 639001