- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
சிவஸ்தலம்
காஞ்சி கைலாசநாதர் கோவில்
மூலவர்
கைலாசநாதர், கயிலாயநாதர்
பழமை
1200 ஆண்டுகள் பழமையானது
புராணப்பெயர்
இராஜசிம்மேஸ்வரம்
ஊர்
காஞ்சிபுரம்
மாவட்டம்
காஞ்சிபுரம்
தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
பல்லவ மன்னன் மகேந்திவர்மன், பல திருப்பணிகளைச் செய்த போதிலும், அவனுக்கு தீராத ஓர் ஆசை இருந்தது. மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் ஏதுமின்றி ஓர் அற்புத ஆலயத்தை அமைத்திட வேண்டுமென்பதே அது! அதன் விளைவே, காஞ்சியில் எழுந்த கயிலாயநாதர் திருக்கோவில். காஞ்சி கைலாசநாதர் கோவில் இராஜசிம்மவர்ம பல்லவ மன்னனால் கி.பி.8-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சிற்பக் கருவூலமாய் விளங்கும் இக்கோவில் சிவபெருமானுக்காக எடுப்பிக்கப்பட்டது.
கோவில் கட்டமைப்பு: தென்திசைக் கைலாயம் என்றும் அழைக்கப்படுகின்ற இக்கோவில் சுமார் 1200 வருடங்களுக்கு முன்னர் பல்லவர்களால் கட்டப்பட்ட கோவிலாகும். இக்கோவிலின் அமைப்பு மாமல்லபுரத்தில் உள்ள சிற்பக் கோவில்களை ஒத்துள்ளது. மூன்று தளங்களைக் கொண்டு விளங்கும் இக்கோவில் திராவிட பாணியில் அமைந்துள்ளது. கட்டடக்கலையின் சிறப்புகள் கொண்ட இக்கோவிலில் தான் முதன் முதலாக கருவறையைச் சுற்றி வரும் பாதையான சாந்தார நாழிகை இடம் பெற்றுள்ளது. திருச்சுற்று மாளிகை முழுவதும் சுற்றிலும் நான்கு திசைகளிலும் 58 சிற்றாலயங்கள் காணப்படுகின்றன. இச்சிற்றாலயங்களின் உள்ளே சோமாஸ்கந்தர் சிற்பம் இடம் பெற்றுள்ளது. இது இராஜசிம்மனின் முன்னோர்களைக் குறிப்பதாக சொல்லப்படுகிறது.
நடுவில் கைலாயம் போன்று இறைவனுக்கு எடுப்பிக்கப்பட்ட கருவறை அமைந்திருக்க சுற்றிலும் அமைந்த 56 தேசங்களாய் இந்த சிற்றாலயங்கள் விளங்குகின்றன. சிற்றாலயத்தின் முகப்பில் அமைந்த நாற்கரக் கோட்டத்தில் சிவவடிவங்களும், விஷ்ணு வடிவங்களும் இடம் பெற்றுள்ளன. இரு சிற்றாலயங்களுக்கு இடைப்பட்ட வெளியில் தாய்த் தெய்வ உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தகு அமைப்பு சிறப்பு வாய்ந்தது.
கருவறை விமானத்தின் தேவக்கோட்டங்களில் மிகப்பெரிய அளவில் சிவவடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தெற்கில் தென்முகக் கடவுள், மேற்கில் கங்காளர், வடக்கில் கங்காதரர் ஆகிய சிற்பங்கள் குறிப்பிடத்தக்கவை. கங்காதரர், ஆடல்வல்லான் சிற்பங்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளன. விமான தாங்குதளத்தில் பூதகணங்கள் காட்டப்பட்டுள்ளன. மேலும் கருவறை விமானத்தைத் தாங்கியபடி அமர்ந்த யானைகள் காட்டப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
இங்கு அமைந்துள்ள கொற்றவை, துர்க்கை, மூத்ததேவி, யானைத் திருமகள், சப்தமாதர்கள் ஆகிய சிற்பங்கள் மிகவும் எழில் வாய்ந்தவை. நின்ற நிலையில் பாய்ந்தவாறு உள்ள யாளித்தூண்கள் வியப்பூட்டுபவை. இக்கோவில் முழுவதும் வண்ணங்களால் தீட்டப்பட்டிருந்தது. அதன் எச்சங்களை இப்போதும் பல சிற்பங்களில் காணலாம். இங்குள்ள கல்வெட்டுகள் பல்லவ கிரந்த எழுத்துகளில் மயில்தோகை போன்றும், அன்னப்பறவை இறகு போன்றும் அமைந்துள்ளன. இவ்வகை கிரந்த எழுத்துக்கள் காலத்தால் முந்தியவை. இவை பல்லவர்களின் கல்வெட்டு கலைத்திறனின் கைவண்ணத்தைக் காட்டுபவை.
காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பங்கள்: தட்சிணாமூர்த்தி, கங்காதரர், கங்காளர், பிட்சாடனர், காலாந்தகமூர்த்தி, திரிபுராந்தகர், கஜசம்ஹார மூர்த்தி, ஆடல்வல்லான், துர்க்கை, ஜேஷ்டாதேவி, முருகன், விஷ்ணு, நரசிம்மர், 64 சிவ வடிவங்கள், சப்தமாதர்கள், சோமாஸ்கந்தர், பன்னிரு ஆதித்தியர், ஏகாதச ருத்திரர், மகிஷாசுரமர்த்தினி, பெண் தெய்வங்கள், சிவனின் ஆடல் கோலங்கள், நந்தி, பூதகணங்கள், விநாயகர் போன்ற அதிகளவிலான சிற்பங்கள் காணப்படுகின்றன. நின்ற நிலை யாளித்தூண்கள் மிகவும் எழிலானவை. வரிசையாக அரைத்தூண்கள் போன்று அவை நிற்கின்றன.
மூலவர் லிங்கத்திற்குப் பின்புறச் சுவரில், எம்பிரான், ஏலவார் குழலியோடும், பாலன் குமாரனுடன் சோமாஸ்கந்தர் வடிவில் புடைப்புச் சிற்பமாகக் காட்சி தருகிறார். காஞ்சிபுரத்தில் உள்ள அத்தனை கோவில்களிலும் இது போன்ற அமைப்பினை நாம் காண்கிறோம். நாரத முனிவர் பூஜித்ததாகக் கூறப்படும் மூலவரின் சிவலிங்கத் திருமேனி 16 பட்டை கொண்ட ஷோடசலிங்கம், பளபளப்பான கறுப்புக்கல்லினாலான பெரிய திருமேனி.
கருவறையைச் சுற்றி அமைந்துள்ள குறுகிய திருச்சுற்று, புனர்ஜனனி என்று அழைக்கப்படுகிறது. அதன் உள், வெளி வாயில்கள் மிகவும் குறுகலாக இருந்து, தரையில் படுத்தபடியே ஊர்ந்து சென்று, மீளும்போது, புனர்ஜன்மம் எடுத்து வந்த உணர்வே மேலோங்கி வருகிறது. இதனைச் சுற்றி வந்தால் “மறுபிறவி இல்லை, பிறப்பறுத்து முக்தி கிடைக்கும்” என்பது ஐதீகம்.
திருவிழா: சிவராத்திரி, பிரதோஷம்.
பிரார்த்தனை: பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற இங்குள்ள கயிலாய நாதரை தரிசித்துச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்: வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள கைலாசநாதருக்கு புது வஸ்திரம் சார்த்தியும், பால் அபிஷேகம் செய்தும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
திறக்கும் நேரம்: காஞ்சி கைலாசநாதர் கோவில் காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
காஞ்சி கைலாசநாதர் கோவிலுக்கு அருகில் ஏகாம்பரேஸ்வரர் கோவில், காமாட்சி அம்மன் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், கச்சபேஸ்வரர் கோவில் போன்ற சிறப்புமிக்க கோவில்கள் உள்ளன.
காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 2 km தொலைவில் கைலாசநாதர் கோவில் அமைந்துள்ளது.
Pillaiyarpalayam, Kanchipuram, Tamil Nadu 631501