- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
தலம்
சங்கரநயினார் கோவில்
மூலவர்
சங்கரலிங்கம், (சங்கர நாராயணர்)
அம்மன்/தாயார்
கோமதி
தல விருட்சம்
புன்னை
தீர்த்தம்
நாகசுனை தீர்த்தம்
ஆகமம்/பூஜை
காமீகம்
ஊர்
சங்கரன்கோவில்
மாவட்டம்
திருநெல்வேலி
தமிழ்நாடு, திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் அமைந்துள்ளது சங்கரநயினார் கோவில். இக்கோவிலின் இறைவன் சங்கரலிங்கசுவாமி; இறைவி கோமதி அம்மன் என்ற ஆவுடையம்மன். உக்கிரப் பாண்டியன் என்னும் மன்னனால் கட்டப்பட்ட இக்கோவிலின் தொன்மை கி.பி.1022. இக்கோவிலில் ஆடித்தபசு விழா ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ கோமதி அம்மன், சிவனை வேண்டி ஊசி முனை மேலிருந்து தவம் செய்யும் யோகினி. சங்கன், பதுமன் என்ற இரு நாக மன்னர்களிடையே சண்டை மூண்டது. சங்கன் தன் கடவுளான சிவனே அதிக ஆற்றல் உள்ளவர் என்றும் பதுமன் தன் விருப்பக் கடவுளான திருமாலே அதிக ஆற்றல் உடையவர் என்றும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இருவரும் அம்மனிடன் சென்று முறையிட்டனர். சங்கன், பதுமன் மட்டுமின்றி, இறைவனின் முழு வடிவத்தை உலக மக்கள் உணர வேண்டும் என அம்மன் சிவனிடம் வேண்ட, அம்மனின் வேண்டுகோளுக்கு இணங்க சிவன், சங்கரநாராயணராகக் (சங்கரன்-சிவன்; நாராயணன்-திருமால்) காட்சியளித்தார்கள்.
கடவுளர் இருவருமே சமம் என்றும், அன்பினாலும் தியாகத்தாலும் மட்டுமே இவர்களை அடைய முடியும் என்றும், சிவனும் திருமாலும் இணைந்த சங்கரநாராயணர் தோற்றத்தால் உணர்த்தப்பட்டது. நாகர் இருவரும் இறைவனை வழிபட்டு, கோமதி அம்மனுடன் தங்கினர். நாகங்கள் அம்மனுடன் குடியிருப்பதால், இந்தத் தேவியை வணங்குவதன் மூலம், பயத்தைப் போக்கலாம். இங்கு உள்ள புற்று மண் மிகவும் பிரசித்தி பெற்றது. புற்று மண்ணை நெற்றியில் திருநீராக எண்ணி பக்தியுடன் பக்தர்கள் இட்டுக்கொள்வார்கள். பாம்பாட்டி சித்தர் இவ்வூரிலே வாழ்ந்து, தேவியின் மகிமைகளை உலகறியச் செய்தார். இவரது சமாதியும் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது.
காவற் பறையன்: மணிக்ரீவன் என்ற தேவன் பார்வதி தேவியின் சாபத்தாற் பறையனாகிப் புன்னைவனக் காவலனாக இருந்தான். அதனால் அவன் காப்பறையன் என்றும், காவற் பறையன் என்றும் பெயர் பெற்றான்.
கரிவலம் வந்த நல்லூர்ப் பால்வண்ண நாதருக்குப் புன்னைவனத்திலே ஒரு பூந்தோட்டம் இருந்தது. அதற்கும் அவனே காவல்.
தோட்டத்தின் ஒரு பக்கம் புற்றொன்று வளர்ந்தது. அதை ஒரு நாள் அவன் வெட்ட அதிலிருந்த பாம்பின் வாலும் வெட்டுப்பட்டது. அப்போது அவன் புற்றின் பக்கத்தில் சிவலிங்கம் இருப்பதையும் கண்டான்.
அதே சமயத்தில் உக்கிரபாண்டியர் அடுத்த வனத்தில் வந்திருப்பதாக அறிந்து செய்தி தெரிவிக்க ஓடினான்.
திருநெல்வேலிக்கு மேலே பொருநையாற்றின் கரையிலுள்ள மணலூரில் அரசாண்டிருந்த உக்கிரபாண்டியர் அடிக்கடி மதுரை சென்று மீனாட்சியம்மையையும், சொக்கப்பெருமானையும் வழிபாடு செய்யும் வழக்கமுடையவர். காவற்பறையன் புற்றை வெட்டிச் சிவலிங்கத்தைக் கண்ட அன்று, பாண்டியருடைய யானை கொம்பினால் தரையைக் குத்திக் கீழே விழுந்து புரண்டது. பாண்டியர் ஒன்றும் செய்ய அறியாது திகைத்திருந்த போதுதான் காவற்பறையன் ஓடிவந்து அரசரிடம் செய்தி தெரிவித்து உடன் வர அழைத்தான். உக்கிரபாண்டியர் சென்று புற்றினையும் புற்றிடங் கொண்டாரையும், கூழைவாலினதாக்கிய பாம்பினையும் கண்டார். சங்கரனார் அசரீரியாக ஆனைதரப் பாண்டியர் காடு கெடுத்து நாடாக்கிக் கோவில் கட்டிச் சங்கரநயினார் கோவில் ஊரையும் தோற்றுவித்தார். கோவிலில் கோபுரத்தைத் தாண்டியதும் (கோவில் நிர்வாக அலுவலக இடப்புறத் தூணில்) காவற்பறையனுடைய திருவுருவத்தை இப்போதும் காணலாம்.
காவற்பறையனுக்கு ஊரில் தெற்கே ஒரு சிறு கோவில் இருக்கிரது. அது இருக்கும் தெரு காப்பறையந்தெரு என்று வழங்கிவந்தது. காப்பறையன் தெரு, தற்போது முத்துராமலிங்கம் தெருவென ஆகிவிட்டது. ஆனால், காவற்பறையன் கோவில் அதே தெருவில் இன்றும் உள்ளது. நித்திய பூஜைகளும் உண்டு. சித்திரைவிழா ஆரம்பமாகுமுன்பு, காவற்பறையனுக்குச் சிறப்பு வழிபாடு நடத்திய பின்னரே பெரிய கோவிலிலே கொடி ஏற்றம் நிகழும்.
சங்கரலிங்கப் பெருமான் திருச்சந்நிதியுட் செல்லும்போது பலிபீடம், கொடிமரம் இவற்றைத் தாண்டியவுடன் தூண்களில் உக்கிரபாண்டியனையும், உமாபதி சிவாச்சாரியாரையும் காணமுடியும். யானை தனது பெரிய கொம்பினால் குத்தியமையினாலே அவ்விடத்தில் உண்டாயிருக்கிர ஊர் பெருங்கோட்டூர் என்று பெயர் பெற்றது. (கோடு – கொம்பு) உக்கிரபாண்டியர் கோவிற் பூஜைக்கு மிகுந்த நிலங்களைக் கொடுத்து ஒரு சித்திரை மாதத்திலே யானை மேலேறிக்கொண்டு தாம் இறைவனைக் காணக் காரணமாயிருந்த இடமாகிய பெருங்கோட்டூருக்குப் போய் யானை பிடிமண் எடுத்துத்தரக் கொண்டுவந்து பெருந்திருவிழா நடத்தி மகிழ்ந்தார். இத்திருவிழா இன்றும் நடைபெறுகின்றதை நாம் காணலாம்.
கோவில் அமைப்பு: கோவிலின் தென்பகுதியில் சங்கரலிங்கப் பெருமான் சந்நிதி அமைந்துள்ளது. வட பகுதியில் கோமதி அம்பிகை சந்நிதி அமைந்துள்ளது. இவ்விரண்டு சந்நிதிகளுக்கும் தனித்தனிக் கர்ப்பக்கிரஹம், அர்த்த மண்டபம், அந்தராள மண்டபம், மணி மண்டபம், மா மண்டபம், பரிவார மண்டபம், சுற்று மண்டபங்கள் இருக்கின்றன. தென் பகுதியில் உள்ள சங்கரலிங்கப் பெருமான் சந்நிதியில் கொடிமரம், பலிபீடம், உத்திராட்சத் தொட்டில் (மேல் நோக்கிப் பார்த்தல் வேண்டும்) தாண்டி உள்ளே செல்ல முகப்பில் அதிகார நந்தியும் சுயஜா தேவியும் அமைந்திருக்கின்றன. கீழப் பிரகாரம் வலதுபுறத் தூணில் இக்கோவிலைக் கட்டிய உக்கிர பாண்டிய அரசன் உருவச் சிலையும் இடதுபுறத் தூணில் உமாபதி சிவமும் நின்று வணங்கும் கோலத்தில் தோற்றமளிக்கின்றனர்.
தெற்குப் பிரகாரத்தில் சைவ சமய குரவர், மாணிக்க வாசகர், திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி ஆகியோர் எழுந்தருளியுள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தொண்டர் புராணமியற்றிய சேக்கிழார் சுவாமிகள், மகா விஷ்ணு, அறுபத்து மூன்று நாயன்மார்கள், சுரதேவர், காந்தாரி, பிரம்ம சக்தி, ஈச சக்தி, குமார சக்தி, விஷ்ணு சக்தி, வரஹா சக்தி, இந்திர சக்தி, சாமுண்டி சக்தி எழுந்தருளியுள்ளனர். அடுத்து சுப்பிரமணியர் வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளி இருக்கின்றார். வடக்குப் பிரகாரம் தென்பக்கம் ஒரு புற்றில் வன்மீகநாதர் இருக்கின்றார். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் இங்கே உள்ளது. வடபக்கம் சனி பகவான், காசி விசுவநாதர், பைரவர், துர்கா தேவியைக் காணலாம். கீழ்ப் பிரகாரத்தில் சந்திர சூரியர்கள் உள்ளனர்.
தந்தையாகிய தட்சனால் அவமதிக்கப்பட்ட தாட்சாயிணி அந்த யாகம் அழியுமாறு சபித்து விட்டு, தட்சன் தந்த உடல் தனக்கு வேண்டாமென தட்சன் நடத்திய யாகத்தின் தீயிலேயே எரிந்து போகிறாள். சிவனால் படைக்கப்பட்ட வீரபத்திரர் அந்த யாகத்தை அழித்தார். மனைவி இறந்த வருத்தத்தில், சிவன் தன் மனைவி தாட்சாயிணியின் இறந்த உடலை எடுத்துக் கொண்டு ஊழித்தாண்டவம் ஆடினார்.
சிவனின் ஆட்டத்தை நிறுத்த விஷ்ணு தன் சக்ராயுதத்தால் தாட்சாயிணியின் உடலை 51 துண்டுகளாக வெட்டி வீழ்த்தினார். பிறகு சிவன் சாந்தமானார். சிதறிய தாட்சாயிணியின் உடல் பகுதிகள் விழுந்த 51 இடங்கள் பிரதான சக்தி பீடங்களாயின. அந்த உடல் பாகங்களில் இருந்து ரத்தம், சதை பாகங்கள் தெறித்து விழுந்த பகுதிகள் உப சக்தி பீடங்கள் ஆயின.
அந்த வகையில் அம்பிகையின் நெற்றியின் உள்பகுதி, அதாவது குண்டலினி எழும்பி பாம்பு போல் படம் விரித்து ஆடும் பகுதியான சஹஸ்ராரம் விழுந்த பகுதிதான் (உப ஷக்தி பீடம்) சங்கரன்கோவிலில் அமைத்துள்ள ஸ்ரீ கோமதி அம்மன் சன்னதி ஆகும்.
Also, read: 51 சக்தி பீடங்கள்
ஸ்ரீ கோமதி அம்மன் கோவில், சங்கரன்கோவில் ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி கோவிலில் உள்புறம் தனி தங்கக்கொடிமரத்துடன் தனி கோவிலாக கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. தனி நந்தி பலிபீடம் அமைத்துள்ளது. ஸ்ரீ கோமதி அம்மன் அழகே உருவானவளாக ஸ்ரீசக்ர பீட பஞ்ச பிரம்மாசனத்தின் மேல் வலது இடை நெளிந்து, வலது கையில் மலர்பாணம் மற்றும் பூச்செண்டு எந்தியவளாக, இடது கையை பூமியைநோக்கி தளரவிட்டவளாக இளமங்கை கோலத்தில் புன்னகை பூத்த முகத்துடன் சர்வாலங்கார பூசிதையாக கருணை பொங்க காட்சி தருகிறாள் .
மேலும் இது தசமஹா வித்யா பீடத்தில் சோடஷி பீடமாகும். அன்னை சோடஷி ரூபமாக ஸ்ரீ லலிதாமஹா திரிபுர சுந்தரியாக, கமேஸ்வரியாக காட்சி தருகிறாள். அன்னையின் நான்கு கரங்களில் பாசம் அங்குசம் வைத்துள்ள மேல் இரு கைகளும் மற்றும் கரும்பு வில்லும் இங்கு அரூபமாக உள்ளன. அவற்றை நாம் நம் கண்களால் காண முடியாது என்றும், தவ வலிமை பெற்ற யோகிகளால் மட்டுமே அவற்றை காண முடியும் என்றும், யாருக்கு அந்த தரிசனம் கிடைக்கபெறுகிறதோ அவர்களுக்கு அஷ்டமா சித்திகளும் வசப்படும் என்றும் கூறப்படுகிறது.
அன்னை பராசக்தி கோமதி அம்பிகை “ஹரியும் ஹரனும் ஒன்றே” என்ற தத்துவத்தை உணர்த்த, ஸ்ரீ சங்கர நாராயண கோலம் காண இந்த ஸ்தலத்தில் தவம் இயற்றினாள் . ஆடி பௌர்ணமி உத்தராட நக்ஷத்திர தினத்தில் ஸ்ரீ சங்கரநாராயண தரிஷனம் அன்னை கோமதிக்கு கிட்டியது. இதை உணர்த்தும் விதமாக இங்கே ஆடி தபசு பிரம்மோத்சவம் ஆடி மாதத்தில் கொண்டாடபடுகிறது. இவ்விழாவில் அன்னை கோமதிக்கு தங்ககொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாட்கள் அன்னையே காலையிலும் மாலையிலும் இரவிலும் வீதி உலா கண்டருள்கிறாள். 11ஆம் நாள் இறைவன், இறைவிக்கு சங்கரநாராயண கோலத்தில் காட்சியளிக்கிறார்.
மேலும் இது அன்னையின் சஹஸ்ராரம் விழுந்த ஸ்தலமாகையால் அன்னை இங்கே மஹா யோகிநியாக, தபஸ் ஸ்வரூபிணியாக காட்சியளிக்கிறாள். அம்பிகை சன்னதியின் முன்பு ஆக்ஞா சக்கரம் பதிக்கப்பட்டுள்ளது. இதில் அமர்ந்து பக்தர்கள் நினைத்த காரியம் நிறைவேற வேண்டிக்கொண்டு பயனடைகிறார்கள். மேலும் மனநிலை சரியில்லாதவர்கள், பேய் பிசாசு மற்றும் துர்சக்தியால் பீடிக்கப்பட்டவர்கள் இந்த சக்கரத்தின் மேல் அமர்ந்து குணமடைந்து செல்வது கண்கூடு. இங்கு அம்பிகையின் புற்றுமண் பிரசாதம் வெகுசிறப்பு. இதை உண்டால் வயிற்றுவலி மற்றும் உடல்வியாதிகள் தீரும் என்பது அனேக பக்தர்களின் நம்பிக்கை.
குழந்தை வரம் வேண்டியும் பிரார்த்தனைகள் நடக்கிறது. இங்கேதான் 18 சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி அமைத்துள்ளது.
பாம்பாட்டி சித்தர் கோமதி அம்மனை வாளைகுமாரியாகவும், குண்டலினி சக்தியாகவும், பாம்பு வடிவமாகவும் வழிபட்டிருக்கிறார். எனவே காளஹஸ்திக்கு அடுத்தபடியாக இது கால சர்ப்ப தோஷம் போக்கும் ஸ்தலமாகவும், ராகு கேது தோஷம் நீக்கும் ஸ்தலமாகவும் விளங்குகிறது. செவ்வாய் தோஷத்தை நீக்கி திருமணத்தடை அகற்றும் ஸ்தலமாகவும் சங்கரன்கோவில் விளங்குகிறது.
அன்னைக்கு பூஜைகள்: கோவிலில் ஆறு கால பூஜைகள் நடக்கிறது. சுவாமிக்கு நடக்கும் அத்தனை பூஜை உபசாரனைகளும் அம்பிகைக்கும் நடக்கிறது. அம்பிகை கோவிலில் தங்க ஊஞ்சல் உள்ள பள்ளியறை உள்ளது. பள்ளிஎழுச்சி பூஜை முடிந்த பின் முதல் பெரிய தீபாராதனை அம்பிகைக்கே முதலில் நடக்கிறது. ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும் கோமதி அம்பிகையின் தங்க ரத உலா நடக்கிறது. திங்கள் கிழமை மலர்ப்பாவாடையும், செவ்வாய்கிழமை வெள்ளிபாவாடையும், வெள்ளிகிழமை தங்க பாவாடையும் அம்பிகைக்கு சார்த்தபடுகிறது.
ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் அம்பிகைக்கு நவாவர்ண பூஜை நடைபெறுகிறது. தினமும் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் அர்ச்சனை நடக்கிறது. சிறுப்பு நாட்களில் அம்மனுக்கு சந்தனக்காப்பு நடக்கிறது . கோமதி அம்மனுக்கு தினமும் காலையிலும், உச்சி வேளையிலும், சாயங்கால பூஜையிலும், இரவு பள்ளியறை பூஜைக்கு முன்பும், 4 வேளைகள் அபிஷேகம் நடக்கிறது. இங்கு தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்துவதும், முடி காணிக்கையும், மாவிளக்கு போட்டு பிரார்த்தனை செய்வதும் பிரதானமாக உள்ளது.
ஆடித் தபசு: ஆடி மாதத்தின் உத்திராட நாளில் சங்கரநாராயணர் கோமதி அம்மனுக்கும், சங்கன், பதுமன் ஆகியோருக்கும் காட்சியளித்த நாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா ஆடி மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்பலவாணதேசிகர் ஓர் மந்திரச் சக்கரத்தைப் பதித்துள்ளார். அந்த சக்கர பீடத்தில், அம்மனுக்கு வழங்கப்படும் நைவேத்தியங்களில் மாவிளக்கு முக்கியத்துவம் பெறுகிறது. கோவிலுக்கு வருவோர், தங்கம், பித்தளை, வெண்கலச் சாமாங்கள், துணி, ஆடு, கோழி, உப்பு, மிளகாய், மிளகு, காய்கறிகள், பலவகைத் தானியங்கள் மற்றும் பாம்பு, தேள் ஆகியவற்றின் வெள்ளியால் செய்யப்பட்ட சிறு தகடுகளை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவை ஏலம் போடப்படும். உண்டியல்கள் மூலமாக ரொக்கப் பணமும் சாமான்களும் வரும்.
பிரார்த்தனை: ஒற்றுமை குணம் உண்டாக, தானே பெரியவன் என்ற எண்ணம் நீங்க இங்கு வேண்டிக் கொள்ளலாம்.
நேர்த்திக்கடன்: சுவாமி, அம்பாள், சங்கரநாராயணருக்கு அபிஷேகம் செய்வித்து, வஸ்திரம் அணிவித்து, நைவேத்யம் படைத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.
பூஜா விவரங்கள்
நேரம்
திருவனந்தல்
காலை 6.00 மணி
விளாபூசை
காலை 6.30 மணி
சிறு காலசந்தி
காலை 8.30 மணி
காலசந்தி
காலை 10.30 மணி
உச்சிகாலம்
பகல் 12.30 மணி
சாயரட்சை
மாலை 5.30 மணி
அர்த்தசாமம்
இரவு 9.00 மணி
திறக்கும் நேரம்: காலை 05:30 மணி முதல் 12:30 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 09:00 மணி வரை திறந்திருக்கும்.
Temple Road, Sankarankoil, Tamil Nadu 627756
Original Source: http://sankarankovil.com