×
Wednesday 27th of November 2024

பூவராக பெருமாள் கோவில் – ஸ்ரீமுஷ்ணம்


Bhu Varaha Swamy Temple History in Tamil

ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில்

மூலவர் ஸ்ரீ பூவராகன்
உற்சவர் ஸ்ரீயக்ஞவராகன்
அம்மன்/தாயார் அம்புஜவல்லி
தல விருட்சம் அரசமரம்
தீர்த்தம் நித்யபுஷ்கரணி
ஊர் ஸ்ரீமுஷ்ணம்
மாவட்டம் கடலூர்

Srimushnam Varaha Swamy Temple

🛕 திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு மிக்கது. இவரே பூவராக மூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருப்பதி – திருமலையில் ஏழுமலையானைத் தரிசிக்கும் முன்பு, அவருக்குக் கோவில் கொண்டு எழுந்தருள இடமளித்த சந்திர புஷ்கரணி என்னும் திருக்குளம் அருகில் தனிக் கோவிலில் நின்றருள் புரியும் ஆதிவராகப் பெருமாளைச் சேவிக்க வேண்டுமென்று சொல்வார்கள்.

🛕 வராக அவதாரத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது ஸ்ரீமுஷ்ணம் திருத்தலம். இந்த ஆலயம் திருமுட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் வட்டத்தில் அணைக்கரை – மீன்சுருட்டியில் இருந்து சேத்தியாத்தோப்பு வழியே வடலூர் செல்லும் சென்னை நெடுஞ்சாலையில் சோழதரம் என்றொரு ஊர் வரும். அங்கிருந்து சுமார் 12 கிலோமீட்டர் துரத்தில் விருத்தாசலம் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஊர் தான் ஸ்ரீ முஷ்ணம்.

பூவராகப் பெருமாள்

🛕 நெடிந்துயர்ந்து மேற்கு நோக்கிய ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் வண்ணமயமான ராஜகோபுரம் இந்த ஆலயத்தை அலங்கரிக்கிறது. அதனைக் கடந்து உள்ளே சென்றால் சிற்ப அழகு மிளிரும் கருங்கல் தூண்களுடன் பெரிய ஆயிரங்கால் மண்டபம் உள்ளது. அங்குள்ள கருடாழ்வாரை தரிசித்து விட்டு உள்ளே சென்றால், மூலவரின் கருவறையை தரிசனம் செய்யலாம். கருவறையின் முன்பாக ஜெய, விஜயர்கள், துவாரபாலகர்களாக வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். கருவறையின் உள்ளே பூவராக மூர்த்தி வீற்றிருந்து சேவை சாதிக்கிறார். இவர் வீற்றிருக்கும் விமானம், பாவன விமானம் என்று அழைக்கப்படுகிறது.

srimushnam bhuvaraha swamy

🛕 திருமலை, காஞ்சி, திருக்கோவிலூர், ஒப்பிலியப்பன் கோவில் போன்ற தலங்களில் நெடுமாலாகக் காட்சி தருபவர் இங்கே சிறிய மூர்த்தியாக அருள்கிறார். மூர்த்தி தான் சிறியது, ஆனால் கீர்த்தி மிகப்பெரியது.

🛕 அவரின் தோற்றம் கொள்ளை அழகு. மேற்கு நோக்கியபடி வராகரின் திருமேனி இருந்தாலும், அவரது முகம் தெற்கு பார்த்து இருக்கிறது. வழக்கமாகச் சங்கு, சக்கரம் ஏந்தி நான்கு திருக்கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு, இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி எழிலான தோற்றத்துடன் காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருப்பது மேலும் சிறப்பானதாகும். இங்குள்ள மூலவரின் திருமேனி, முழுவதும் சாளக் கிராமத்தினால் ஆனது. எனவே தினமும் திருமஞ்சனம் (அபிஷேகம்) செய்யப்படுகிறது.

🛕 பிரம்மன் யாகத்தில் இருந்து தோன்றியதால் யக்ஞவராகர் என்ற பெயருடன் உற்சவர் திகழ்கிறார். இவருடன் திரு மகள், நிலமகள் ஆகியோர் உடனிருந்து பேரருள் புரிகின்றனர்.

🛕 வட இந்தியாவில், சாளக்கிராமம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்திரிகாச்ரமம், தென்னகத்தில் திருவரங்கம், திருப்பதி, வானமாமலை போல் ஸ்ரீமுஷ்ணத்தில் மும்மூர்த்தியும் தானே என்ற நிலையில் சுயம்பு மூர்த்தியாக திகழ்ந்து பெருமை சேர்க்கிறார்.

பூமியை மீட்டவர்

🛕 மகாவிஷ்ணு, வராக (காட்டுப்பன்றி) அவதாரம் எடுத்து, இரண்யாட்சன் என்ற அசுரனிடமிருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை, தன்னுடைய இரண்டு கோரைப் பற்களில் தாங்கியபடி மேல் எழுந்து வந்து, மீண்டும் வான்வெளியில் நிலைபெறச் செய்தார் என்பது புராண வரலாறு.

🛕 தனது ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அரசமரம், இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே தலவிருட்சமாகவும் விளங்குகிறது. அங்கே பிரகன் நாயகி சமேத நித்தீஸ்வரர் வீற்றிருக்கும், பழங்கால சிவாலயம் ஒன்றும் இருக்கிறது.

srimushnam bhu varaha swamy temple sculpture

குழந்தை வரம்

🛕 பிள்ளைப்பேறு வேண்டுவோர் நித்ய புஷ்கரணியில் நீராடி, அரசமரத்தைச் சுற்றிவந்து, பூவராகரை உள்ளன்புடன் உருகி வழிபட வேண்டும். பின்னர் ஆலயத்தில் சந்தான கிருஷ்ண மூர்த்தத்தை, கைகளில் வாங்கி மடியில் வைத்து வணங்கினால், மழலை பாக்கியம் நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

🛕 பெருமாள் சன்னிதிக்கு வடக்குச் சுற்றில், பாவை பாடிய ஆண்டாள் சன்னிதியும், பரமபத வாசல் கோபுரம் அருகே மகேஸ்வரி, சாமுண்டி வராகி போன்ற சப்த மாதர்கள் கோவிலும் உள்ளன. இவர்களை வேண்டிக் கொண்டு அருகே இருக்கும் வேப்ப மரத்தடியில், குழந்தை அம்மன் சன்னிதியில் விளக்கேற்றி வழிபடுவோரும் உண்டு. உடையவர் சன்னிதி, சேனை முதலியார் சன்னிதி, வேதாந்த தேசிகர் சன்னிதி ஆகியவை திருச் சுற்றில் உள்ளன.

🛕 தெற்குப் பக்கத்தில் தனிச் சன்னிதியில் அம்புஜவல்லித் தாயார், கிழக்கு திசை நோக்கி அமர்ந்து அருள்பாலிக் கிறார். அருகே உள்ள வளையமாதேவி என்ற ஊரில் கார்த்திகாயினி முனிவரின் மகளாக அவதரித்து இத்தலப் பெருமாளைத் திருமணம் செய்து கொண்டவர்தான் அம்புஜவல்லித் தாயார். இத்தலத்து சுவாமியையும், தாயாரையும் வணங்கினால், திருமண வரம், குழந்தைப்பேறு கிடைக்கும். பகை அச்சம் விலகும். காரியத்தடைகள் நீங்கும் என்பது கண்கூடு. இந்த ஆலயத்தின் மகிமை பற்றி கந்தபுராணம், பிரமாண்ட புராணம், விஷ்ணு புராணம், ஸ்ரீமத் பாகவதம் ஆகிய நூல்களில் விவரிக்கப்பட்டுள்ளது.

srimushnam bhuvaraha swamy temple saptha matha

மத நல்லிணக்கம்

🛕 மற்ற தலங்களை விட இத்தலத்துக்கு என்று ஒரு பெரிய சிறப்பு உண்டு, ஆம் அது மத நல்லிணக்கத்தைக் காப்பது தான்.

🛕 15 தினங்கள் நடைபெறும் இக்கோவில் திருவிழாவின் போது மாசி மக நாளில், உற்சவர் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை என்ற கடலோர கிராமத்துக்கு எழுந்தருள்வார். அங்கே தர்காவின் எதிரே பெருமாள் வரும்போது இஸ்லாமியப் பெரியவர்கள், அரிசி, பூ, பழம் கொடுத்து மரியாதை செய்வார்கள். பிறகு புவனகிரி வந்து அங்குள்ள சவுராஷ்டிர சத்திரத்தில் சுவாமி தங்கியிருக்கும் போது மத வேறுபாடின்றி அனைவரும் இறைவனைச் சேவிப்பார்கள் என்ற செய்தி மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

நேர்த்திக்கடன்

🛕 தங்கள் பிரார்த்தனை நிறைவேறப்பெற்ற பக்தர்கள் பெருமாளுக்கு துளசி மாலை சாத்துகிறார்கள். நெய்தீபம் ஏற்றுகிறார்கள். இவை தவிர சுவாமிக்கு திருமஞ்சனம், உலர்ந்த தூய வெள்ளாடை சாத்துதல், அபிசேக ஆராதனைகள் செய்கிறார்கள். பிரசாதம் செய்து சுவாமிக்கு நைவேத்தியம் செய்து விட்டு பக்தர்களுக்கு தருகிறார்கள். வசதி படைத்தோர் அன்னதானம் செய்கிறார்கள்.

கோரைக்கிழங்கு பிரசாதம்

🛕 ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீ பூவராகசுவாமி கோவில் சிறப்பு முஸ்தா சூரணம் என்கிற கோரைக்கிழங்கு பிரசாதம்.

🛕 ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் பன்றி அவதாரம் எடுத்துள்ளார். இதன் காரணமாக அவரது அவதாரத்திற்கு கோரைக்கிழங்கு மிகவும் பிடித்தமான உணவு என்பதால் கோரைக்கிழங்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

Srimushnam Varaha Swamy Temple Timings

🛕 இந்த ஆலயம் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.

🛕 திருவிழாக் காலங்களில் நேரம் மாறுதலுக்குப்பட்டது. பக்தர்கள் தங்குவதற்கான விடுதி வசதியும், மதியம் இலவச அன்னதானமும் திருக்கோவில் சார்பில் செய்யப்படுகிறது.

srimushnam bhu varaha swamy temple inside view

Bhu Varaha Swamy Temple Address

🛕 அருள்மிகு பூவராக சுவாமி திருக்கோவில், ஸ்ரீமுஷ்ணம் – 608 703, கடலூர் மாவட்டம்.

Srimushnam Bhu Varaha Swamy Temple Contact Number: +91-4144245090



மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

you may also like

  • நவம்பர் 14, 2024
அருள்மிகு ஸ்ரீ கிருஷ்ணம்மாள், ஸ்ரீ துரையம்மாள் திருக்கோவில், கல்யாணபுரம்
  • அக்டோபர் 23, 2024
ஸ்ரீ விஷ்ணு தாசர்கள் (ஸ்ரீ போசல பாவா)
  • அக்டோபர் 20, 2024
அருள்மிகு வராகீஸ்வரர் திருக்கோவில், தாமல்