- நவம்பர் 14, 2024
உள்ளடக்கம்
மூலவர்
நீர்வண்ணர், ரங்கநாதர், உலகளந்த பெருமாள், பாலநரசிம்மர்
அம்மன்/தாயார்
அணிமாமலர்மங்கை, ரங்கநாயகி
தல விருட்சம்
வெப்பால மரம்
தீர்த்தம்
சித்த, சொர்ண, காருண்ய தீர்த்தம், சீர புஷ்கரிணி
ஆகமம்/பூஜை
வைகானஸம்
புராண பெயர்
நீர்மலை, தோயாத்ரிகிரி
ஊர்
திருநீர்மலை
மாவட்டம்
காஞ்சிபுரம்
சென்னை பல்லாவரதிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் மேற்கே உள்ளது. மாமலையாவது திருநீர்மலையே என்று திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற பெருமாள் திருக்கோவில் இது. பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று.
தல வரலாறு: ஸ்ரீரங்கத்தில் மகாவிஷ்ணுவை சயனக்கோலத்தில் தரிசித்த பிருகு முனிவர், மார்க்கண்டேய மகரிஷி இருவரும் தங்கள் இருப்பிடம் நோக்கி இவ்வழியே சென்றனர். அவர்களுக்கு பெருமாளின் சயனக்கோலம் கண்களை விட்டு அகலவே இல்லை. மீண்டும் ஒருமுறை அந்த தரிசனம் கிடைக்க வேண்டுமென விரும்பினர். எனவே, இத்தலத்தில் தங்களுக்கு அந்த திருக்கோலத்தைக் காட்ட வேண்டும் என உருக்கமாக பெருமாளை வேண்டினர். அப்போது சுவாமி “போக சயனத்தில்” அரங்கநாதராக இங்குள்ள மலையில் காட்சி கொடுத்தார். இவரே இங்கு மலைக்கோவில் மூர்த்தியாக அருளுகிறார். அருகில் பிருகு, மார்க்கண்டேயர் இருவரும் இருக்கின்றனர்.
இத்தலத்துள்ள பெருமாளைத் தரிசிக்க திருமங்கையாழ்வார் வந்தபோது, மலையைச் சுற்றிலும் நீர் நிறைந்திருந்தது. அவரால் நீரைக் கடந்து சென்று சுவாமியை தரிசிக்க முடியவில்லை. ஆனாலும், அவர் காத்திருந்து சுவாமியை தரிசித்துவிட்டுச் செல்வதென முடிவெடுத்தார். கோவில் எதிரேயுள்ள மற்றொரு மலையில் தங்கினார். நாட்கள் நகர்ந்ததே தவிர, தண்ணீர் குறைந்தபாடில்லை. ஆனாலும் பெருமாளை தரிசிக்க வேண்டுமென்பதில் தீர்க்கமாக இருந்த திருமங்கையாழ்வார், தண்ணீர் வடியும் வரை காத்திருந்து, சுவாமியை தரிசிக்கச் சென்றார்.
தன் மீது பாசம் கொண்ட பக்தனுக்காக பெருமாள் நின்ற கோலத்தில் நீர்வண்ணப்பெருமாள், இருந்த கோலத்தில் நரசிம்மர், சயன கோலத்தில் அரங்கநாதர், நடந்த கோலத்தில் உலகளந்த பெருமாள் என நான்கு கோலங்களையும் காட்டியருளினார். இந்த நால்வரையும் இத்தலத்தில் தரிசிக்கலாம். நீர்வண்ணப்பெருமாள் மலையடிவாரத்திலுள்ள கோவிலிலும், அரங்கநாதர், நரசிம்மர், உலகளந்த பெருமாள் ஆகியோர் மலைக்கோவிலிலும் அருள்கின்றனர்.
பாரதப்போர் முடிஞ்சு ஏகப்பட்ட உயிர்களை ‘மேலே’ அனுப்பிய பாவம் போக்க, அர்ஜுனன் தவம் செய்ய வந்த இடம் இது. வரும்போதும் காண்டீபத்தைத் தூக்கி வந்துருப்பான் போல! காண்டீபன் வந்த அடையாளமா இதுக்கு காண்டீப வனம் என்ற பெயர் வந்துருக்கு. இங்கே இருக்கும் மலைதான் தோதாத்ரி. தோதா + அத்ரி. இந்த தோதா என்பது தோயா என்பதன் மரூவு. தோயா என்றால் தண்ணீர். அத்ரி என்றால் மலை. தண்ணீர் சூழ்ந்த மலை(ப்பகுதி). நீர்மலை!
மூன்று யுகங்களில் தேவர்களும் ரிஷிகளும் செய்த யாகங்களால் அக்னிபகவானுக்கு ஆஹுதி கூடிப்போய் வயிறு மந்தமாகிப் போனது. பெருமாளிடம் போய் முறையிட்டார். அவர் காண்டீபவனத்தில் போய் பச்சிலை மூலிகைகள் எடுத்து சாப்பிட்டால் வயிறு சரியாகுமென்று கூறி அனுப்பினார். சீக்கிரம் உடம்பு குணமாக வேண்டுமே என்று ஒரு இலைவிடாமல் பிடுங்கித் தின்றார் அக்னி பகவான். இதனால் அந்த இடம் பொட்டல் காடானது. வெப்பாலை மரங்கள் மட்டுமே மீதம் இருந்தது. இதுதான் இங்கே ஸ்தல விருட்சமும் கூட. சளி காய்ச்சலுக்கு நல்ல மருந்து இது! மரங்கள் இல்லாததால் வனத்தில் உஷ்ணம் தகிக்க ஆரம்பித்தது. அங்கே தவமிருந்த ரிஷி முனிவர்களால் தாங்க முடியவில்லை. அவர்களும் நாராயணனிடத்தில் சென்று முறையீடு செய்தார்கம்ள். பெருமாள் வருண பகவானை அழைத்து அங்கே மழை பொழியச் சொன்னார். வருண பகவான் மழையை பொழிந்து தள்ளினார். மலையே மூழ்கும் அளவுக்கு மழை!
கோவில் அமைப்பு: காண்டவ வனத்தில் தோயாத்ரி மலைவாசல்னு அலங்கார நுழைவு வாசல் உள்ளது. நல்ல அகலமான படிக்கட்டுகள், ஒரே சீரான உயரமுடைய 200 படிகள் உள்ளன. பாதி தூரத்தில் வலப்பக்கம் பிரியும் இடத்தில் நான்கு படி இறங்கி எட்டிப்பார்த்தால் சிறியதாக ஆஞ்சநேயர் சந்நிதி ஒன்று உள்ளது.
கோவில் முகப்பில் மூன்று நிலைக் கோபுரத்தின் முன் நான்கு தூண் கொண்ட மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி மற்றும் ‘கல்கி’ சதாசிவம் தம்பதியர் கட்டிய மண்டபம். அவர்களின் திருமணம் இந்தக் கோவிலில் தான் நடந்தது.
உள்ளே நுழைந்தால் வெளிப்பிரகாரத்தில் இடதுபக்கம் ஆதிசேஷனுக்குத் தனிச்சந்நிதி உள்ளது. வலதுபக்கம் கொடிமரம் கடந்து ஒரு பத்துப் படிக்கட்டுகள் ஏறிப்போனால் படியின் முடிவில் பெரியதிருவடி சிறியதாக நிற்கும் சந்நிதி உள்ளது. அவருக்கு நேர் எதிரே கருவறையில் ரங்கநாதர் தெற்கு நோக்கி பள்ளிகொண்டுள்ளார். கருவறைப் படிக்கட்டின் இரண்டு பக்கமும் பாவை விளக்கேந்தும் பழங்காலப் பெண்டிர் சிலைகள் உள்ளன.
பெருமாள் இங்கே சுயம்புவாக தோன்றியார். இது எட்டு சுயம்பு க்ஷேத்ரங்களில் ஒன்றாகும். மற்ற ஏழு சுயம்பு க்ஷேத்ரங்கள் ஸ்ரீரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருப்பதி, ஸாளக்ராமம், நைமிசாரண்யம், புஷ்கரம், பத்ரி. சுயம்பு மூர்த்தி என்பதால் இங்கே மூலவருக்கு அபிஷேகம் இல்லை. கார்த்திகை மாதம் பௌர்ணமி தினத்தில் மட்டும் தைலக்காப்பு உண்டு. சாம்பிராணித் தைலம் மட்டும் பூசப்படுகிறது.
பெருமாளின் பலவித சயனக்கோலங்களில் இங்கே மாணிக்க சயனம்.
1. ஜல சயனம் – திருப்பாற்கடல்
2. தல சயனம் – மல்லை
3. புஜங்க சயனம் (சேஷசயனம்) – திருவரங்கம்
4. உத்தியோக / உத்தான சயனம் – திருக்குடந்தை
5. வீர சயனம் – திருஎவ்வுள்ளூர்
6. போக சயனம் – திருச்சித்ரகூடம் (சிதம்பரம்)
7. தர்ப்ப சயனம் – திருப்புல்லாணி
8. பத்ர சயனம் (பத்ர எனில் ஆலமரத்து இலை) – ஸ்ரீவில்லிபுத்தூர்
9. மாணிக்க சயனம் – திருநீர்மலை.
தனிச்சந்நிதியில் தாயார் ரங்கநாயகி உள்ளார். உட்பிரகாரத்தில் பால நரசிம்மர் சந்நிதி உள்ளது. இவரைச் சாந்த நரசிம்மர் என்றும் சொல்கிறார்கள். ஹிரண்யவதம் முடிந்ததும் கோபம் அடங்காமல் சிலிர்த்த உடலோடு நின்ற சிம்ஹத்தைக் கண்டு ப்ரஹலாதனுக்கு உள்ளூர நடுக்கம் ஏற்பட்டது. பாலகன் முகத்தில் பயத்தைப் பார்த்ததும் ‘ஐயோ! குழந்தையைப் பயப்பட வச்சுட்டேனே’ என்று இரக்கம் தோன்ற, அவனுக்குச் சமமாக, அவனுக்கேற்ற உருவத்தில் தானும் குழந்தையாக மாறி இரண்டு கைகளுடன் இங்கே வீற்றிருக்கிறார்.
இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார். இடக்கை ஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரைத் தரிசிக்கலாம்.
கிழக்கே உலகளந்தப் பெருமாள் சந்நிதி உள்ளது. கருவறையின் வெளிப்புறச் சுவரை ஒட்டி த்ரிவிக்ரமன் உள்ளார். மகாபலியின் தலையில் மூன்றாவது அடி வைத்தவர். வைகாசி மாதம் திருவோண நக்ஷத்திர தினத்தில் இவருக்குத் தனி உற்சவம் நடத்தப்படுகிறது.
இக்கோவிலில் மூலவர் அரங்கநாதர் மலைக்கோவிலிலும், உற்சவர் அழகியமணவாளர் அடிவாரத்திலுள்ள கோவிலிலும் காட்சி தருகின்றனர். சுயம்புவுக்கு அபிஷேகம் இல்லாததால் அபிஷேகம், திருமஞ்சனமெல்லாம் உற்சவருக்குத்தான். கூடவே ஸ்ரீதேவி, பூதேவியர். ஆண்டாளம்மாவும் கூடவே இருப்பது விசேஷம். சித்திரை பிரம்மோத்சவ கொடியேற்றம் மற்றும் கொடி இறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும் திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர் மலைக்கோவிலுக்கு எழுந்தருளுவார். அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
கீழே உள்ள கோவிலில் நீர்வண்ணப் பெருமாள் சந்நிதிக்கு முன் அழகான அஞ்சுநிலைக் கோபுரத்துடன் கூடிய முன்வாசல் உள்ளது.
வால்மீகி முனிவர் ராமாயணம் எழுதி முடித்த பின் இங்கே வந்து ராமனை மனம் உருகப் பிரார்த்தனை செய்து ராமனின் கல்யாண உருவத்தைக் காட்ட வேண்ட அப்படியே எழுந்தருளினாராம் இறைவன். ராமர் சீதை, லக்ஷ்மண, பரத சத்ருக்கனர் மட்டுமே உள்ள சந்நிதி இது. கல்யாணத்தின் போது அனுமன் இல்லையென்பதால் அனுமனுக்கு தனியாக மண்டபத்தில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்.
உள்ளே நுழைந்ததும் ப்ரகாரத்தின் வலதுபக்கம் நீர்வண்ணனின் சந்நிதி. திருமங்கைஆழ்வார் மங்கள சாஸனம் செய்துள்ளார். அந்த பத்தொன்பது பாசுரங்கள் சுவற்றில் பொறிக்கப்பட்டுள்ளது. பூதத்தாழ்வாரும் பாடி மங்களசாஸனம் செய்திருக்கிறார். ரங்கநாதர் சந்நிதி ஒன்றும் உள்ளது. தாயார் பெயர் அணிமாமலர் மங்கை. ஒரு விஸ்தாரமான மண்டபத்தில் ஆண்டாள் சந்நிதி உள்ளது.
பங்குனி மற்றும் சித்திரை என வருடத்திற்கு இரண்டு தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மலைக்கோவிலில் உள்ள அரங்கநாதருக்கு சித்திரையிலும், அடிவாரத்திலுள்ள நீர்வண்ணப்பெருமாளுக்கு பங்குனியிலும் பிரம்மோத்சவம் நடக்கிறது. வைகுண்ட ஏகாதசியின்போது அழகிய மணவாளர் சொர்க்கவாசல் கடக்கிறார். இவரே மாசி மகத்தன்று கருடசேவை சாதிக்கிறார். நரசிம்மருக்கு ஆனியிலும், உலகளந்த பெருமாளுக்கு ஆடியிலும் ஒருநாள் விழா நடக்கிறது. அப்போது இவ்விருவரும் அடிவாரக் கோவிலுக்கு எழுந்தருளி கருடசேவை சாதிக்கின்றனர். சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர்மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் அரங்கநாதர், அரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கிறது.
கோவில்களில் விழாக்காலங்களில் சுவாமி ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளுவார். ஆனால், இக்கோவிலில் அரங்கநாதர், ஒரே நாளில் ஏழு வாகனங்களில் பவனி வருவார். தைமாத ரதசப்தமியன்று இந்த அற்புத தரிசனத்தைக் காணலாம். அன்று காலை சூரிய உதயத்திற்கு முன்பு அரங்கநாதர் சூரியபிரபை வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி சுற்றி தீர்த்தக்கரைக்கு எழுந்தருளுகிறார். சூரிய உதய வேளையில், பெருமாளின் பாதத்திலிருந்து முகம் வரையில் படிப்படியாகத் தீபாராதனை செய்வர். இதனை பெருமாளுக்கு சூரியனே செய்யும் பூஜையாக கருதுவதுண்டு. பின்னர், அனுமந்த வாகனம், கருடன், சேஷன், குதிரை, சிம்மம், சந்திரபிரபை ஆகிய வாகனங்களில் சுவாமி உலா வருவார்.
இந்தக் கோவிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில் (குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம், க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன. சித்திரை மற்றும் பங்குனியில் நடக்கும் பிரம்மோற்ஸவத்தின் 9ம் நாள், வைகுண்ட ஏகாதசிக்கு மறுநாள் ஆகிய மூன்று நாட்களில் இங்கு தீர்த்தவாரி விழா நடக்கும். துவாதசி திதி நாட்களில் தீர்த்தவாரி நடப்பதால் இந்த நிகழ்ச்சியை, முக்கோட்டி துவாதசி என்று அழைக்கிறார்கள். கோவில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் இராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும். ஆனால், இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகித் தனியே உள்ளது.
இத்தலத்தின் குளத்தில் நீராடி, பெருமாளை வழிபட்டால் நோய் விலகி நலம் உண்டாகும். அத்துடன் சித்தம் தெளிந்து சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள மரத்தில் தொட்டில் கட்டியும், திருமணத்தடை நீங்க பெண்கள் கிரிவலம் செய்தும் வழிபடுகின்றனர்.
சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து, வஸ்திரம் அணிவித்து விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இங்கே ஒவ்வொரு பௌர்ணமிக்கும் கிரிவலம் நடைபெறுகிறது.
காலை 08:00 மணி முதல் 12:00 மணி வரை, மாலை 04:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும்.
சென்னை தாம்பரத்தில் இருந்து 10 கி.மீ., தூரத்தில் திருநீர்மலை உள்ளது. பல்லாவரம் சென்று, அங்கிருந்து திருநீர்மலை வழியாக செல்லும் பஸ்களில் 5 கி.மீ., சென்றால் இக்கோவிலை அடையலாம்.
அருள்மிகு நீர்வண்ணப்பெருமாள் திருக்கோவில்,
திருநீர்மலை – 600 044.
காஞ்சிபுரம் மாவட்டம்.
பேசி: +91-4422385484, 9840595374, 9444020820