×
Wednesday 27th of November 2024

திருக்குறள்: 621 – 1330 [புலியூர்க் கேசிகன் உரை]


பொருட்பால்

அரசியல்

 

63. இடுக்கண் அழியாமை

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அ·தொப்ப தில். 621

துன்பங்கள் வரும் போது, மனம் தளராமல், நகைத்து ஒதுக்குக; துன்பங்களைக் கடப்பதற்கு அதனை விடச் சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.

வெள்ளத் தனைய இடும்பை அறிவுடையான்
உள்ளத்தின் உள்ளக் கெடும். 622

வெள்ளமாகப் பெருகிவருகின்ற துன்பங்களும், அறிவு உடையவன் தன் உள்ளத்திலே நினைத்த போது, அவனை விட்டு மறைந்து போய்விடும்.

இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படாஅ தவர். 623

இடையூறுகள் வந்த போது அதற்காக வருந்தாத மனத்தெளிவு உள்ளவர்கள், துன்பத்துக்குத் துன்பம் உண்டாக்கி அதனைப் போக்கி விடுவார்கள்.

மடுத்தவா யெல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து. 624

தடைப்படும் இடங்களில் எல்லாம், தளர்ந்து விடாமல் வண்டியை இழுத்துச் செல்லும் எருதைப் போன்ற ஊக்கம் உடையனுக்கு நேரிடும் துன்பங்களே துன்பம் அடையும்.

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற
இடுக்கண் இடுக்கட் படும். 625

மேன்மேலும் துன்பங்கள் வந்தாலும், நெஞ்சம் கலங்காதவனுக்கு நேர்ந்த துன்பமானது, தானே துன்பப்பட்டு அவனிடமிருந்து விலகிப் போகும்.

அற்றேமென்று அல்லற் படுபவோ பெற்றேமென்று
ஓம்புதல் தேற்றா தவர். 626

‘பொருள் அடைந்தோம்’ என்று அதனைப் போற்றிக் காப்பதற்கு அறியாதவர்கள், வறுமைக் காலத்தில் ‘பொருளை இழந்தோம்’ என்று துன்பம் அடைவாரோ?

இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
கையாறாக் கொள்ளாதாம் மேல். 627

இவ்வுடலானது துன்பங்களுக்கு இலக்கானது என்று அறிந்து அதற்கு வரும் துன்பங்களுக்கு உள்ளம் கலங்காமல் இருப்பவர்களே மேலோர்கள்.

இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான்
துன்பம் உறுதல் இலன். 628

இன்பம் உண்டாகிய போது அதனை விரும்பாதவனாக, துன்பம் வருதலும் இயல்பு என்று உணர்பவன், எந்தக் காலத்திலும் துன்பம் அடைய மாட்டான்.

இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன். 629

இன்பமான காலத்திலும் இன்பத்தை நுகர விரும்பாதவன் எவனோ, அவன், துன்பமான காலத்திலும் எத்தகைய ஒரு துன்பமும் அடைய மாட்டான்.

இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு. 630

துன்பமே தனக்கு இன்பமானது என்று கருதித் தொழிலைச் செய்பவன், அவன் எதிரிகளும் அவன் முயற்சியை விரும்பும் சிறந்த நிலைமையை அடைவான்.


அங்கவியல்

64. அமைச்சு

கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு. 631

ஒரு செயலைச் செய்வதற்கு வேண்டிய கருவிகளையும், ஏற்ற காலத்தையும், செய்யும் வகையையும், செயலின் அருமையையும் நன்கு சிந்திப்பவனே, நல்ல அமைச்சன்.

வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு
ஐந்துடன் மாண்டது அமைச்சு. 632

மனவலிமையும், குடிகளைக் காத்தலும், அறநூல்களைக் கற்று அறிந்திருத்தலும், விடாமுயற்சியும், ஐம்புலன்களின் தூய்மையும் சிறந்திருப்பவனே, அமைச்சன்.

பிரித்தலும் பேணிக் கொளலும் பிரிந்தார்ப்
பொருத்தலும் வல்ல தமைச்சு. 633

பகைவரோடு சேர்ந்துள்ளவரைப் பிரித்தலும், தம்மவரைப் பிரிந்து போகாமல் காத்தலும், பிரிந்து போயினவரை முயன்று மீண்டும் சேர்த்தலும் வல்லவனே, அமைச்சன்.

தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு. 634

எதனையும் நன்கு ஆராய்ந்து அறிதலும், ஆராய்ந்த பின்பே செய்தலும், எதனையும் சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லுதலும் வல்லவனே, நல்ல அமைச்சன்.

அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான்எஞ் ஞான்றுந்
திறனறிந்தான் தேர்ச்சித் துணை. 635

நீதி நெறிகளைத் தெரிந்து, பொருள் நிரம்பிய சொல்லை உடையவனாய், எப்போதும் செயலாற்றும் திறனை நன்கு அறிந்தவனாய், இருப்பவனே, நல்ல அமைச்சன்.

மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம்
யாவுள முன்நிற் பவை. 636

இயல்பான நுண்ணறிவும், அதனோடு சேர்ந்த நூலறிவும் உடையவரான அமைச்சர்களின் எதிராக, எந்த நுட்பமான சூழ்ச்சிகளும் நிற்கமுடியாமல் போய்விடும்.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல். 637

செயலைச் செய்யும் முறைகளை நூலறிவால் அறிந்திருந்த போதும், அதனை உலகத்தின் இயற்கையையும் அறிந்து அதற்கேற்றபடியே முறையாகச் செய்ய வேண்டும்.

அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன். 638

அறிந்து சொல்பவரின் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளாமல், தானும் அறிவில்லாதவனான அரசனானாலும், அவனுக்கும் உறுதி கூறுதல் அமைச்சரது கடமையாகும்.

பழுதெண்ணும் மந்திரியின் பக்கததுள் தெவ்வோர்
எழுபது கோடி உறும். 639

அருகில் இருந்தவாறே தன் அரசனுக்குப் பழுதினைக் கருதும் மந்திரியை விட, எழுபது கோடிப் பகைவர் ஏற்படுவதையும் அந்த அரசன் பொறுத்துக் கொள்ளலாம்.

முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர்
திறப்பாடு இலாஅ தவர். 640

முறையாக ஆராய்ந்து அறிந்து உணர்ந்த போதிலும் செயல் திறமை இல்லாதவரான அமைச்சர்கள், முடிவில்லாத செயல்களையே செய்வார்கள்.


65. சொல்வன்மை

நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று. 641

நாவன்மை என்னும் சிறப்பைப் பெற்றிருப்பது ஒரு தனிச் சிறப்பாகும். அந்தச் சிறப்பு மற்றெந்தச் சிறப்பினுள்ளும் அடங்காத ஒரு சிறந்த சிறப்புமாகும்.

ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு. 642

மேன்மையும் கெடுதியும் பேச்சினாலேயே வருவதனால் சொல்லிலே சோர்வு உண்டாகாதபடி எப்போதும் ஒருவன் தன்னைக் காத்துப் பேணி வருதல் வேண்டும்.

கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல். 643

கேட்பவர் உள்ளத்தைப் பிணிக்கும் தன்மை உடையவாயும், பகைவரும் கேட்பதற்கு விருப்பப்படும் வகையிலும் சொல்லப்படுவதே சிறந்த சொல்வன்மை ஆகும்.

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். 644

கேட்பவரது மனப்பான்மையை அறிந்தே எந்தச் சொல்லையும் சொல்லவேண்டும்; அப்படிச் சொல்வதை விட மேலான அறமும் பொருளும் யாதும் இல்லை.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. 645

தாம் சொல்ல நினைத்த சொல்லை வெல்லக்கூடிய மற்றொரு சொல் இல்லை என்பதை நன்றாக அறிந்த பின்பே, அந்தச் சொல்லை யாவரும் சொல்ல வேண்டும்.

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்
மாட்சியின் மாசற்றார் கோள். 646

தாம் சொல்லும் போது பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லும் போது அதன் பயனை அறிந்து ஏற்றுக் கொள்ளுதலே மேன்மையில் குற்றமற்றவரது கொள்கை.

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை
இகல்வெல்லல் யார்க்கும் அரிது. 647

சொல்வன்மை உடையவன், சொற்சோர்வு இல்லாதவன், சபைக்கு அஞ்சாதவன், ஆகிய ஒருவனைப் பேச்சில் வெல்லுவது என்பது, எவருக்குமே அருமையாகும்.

விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது
சொல்லுதல் வல்லார்ப் பெறின். 648

கருத்தை நிரல்படக் கோத்து, இனிய முறையில் சொல்வதற்கு வல்லவர்களைப் பெற்றால், இவ்வுலகம் அவர்கள் ஏவியதைக் கேட்டு, விரைந்து தொழில் செய்யும்.

பலசொல்லக் காமுறுவர் மன்றமா சற்ற
சிலசொல்லல் தேற்றா தவர். 649

குறையில்லாத சில சொற்களாலே தம் கருத்தை விளக்கிச் சொல்வதற்கு அறியாதவர்களே, பல சொற்களைச் சொல்வதற்கு எப்போதும் விரும்புவார்கள்.

இணர்ஊழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். 650

தாம் கற்றவைகளைப் பிறரும் அறியும்படியாக விளக்கிச் சொல்லத் தெரியாதவர், கொத்தாக மலர்ந்திருந்தும் மணம் வீசாத மலரைப் போன்றவர்கள் ஆவர்.


66. வினைத்தூய்மை

துணைநலம் ஆக்கம் தரூஉம் வினைநலம்
வேண்டிய எல்லாந் தரும். 651

துணைவர்களால் உண்டாகும் நன்மை செல்வத்தை மட்டுமே தரும்; செய்யும் செயலின் செம்மையோ ஒருவன் விரும்பிய எல்லாவற்றையுமே தரும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை. 652

புகழுடன் கூடியதாகவும் நன்மை தருவதாகவும் அமையாத செயல்களை, எந்தக் காலத்திலும், ஒருவன் செய்யாமல் நீக்கி விட வேண்டும்.

ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர். 653

மேலாக உயர்வதற்கு நினைக்கின்றவர்கள், தங்களுடைய மதிப்பைக் கெடுக்கும் எந்த ஒரு செயலையும் எப்போதும் செய்யாமல் இருக்க வேண்டும்.

இடுக்கண் படினும் இளிவந்த செய்யார்
நடுக்கற்ற காட்சி யவர். 654

கலக்கம் இல்லாத அறிவை உடையவர்கள், தாம் இடையூறுகளுக்கு உட்பட நேர்ந்த காலத்திலும், இழிவான செயல்கள் எதையுமே செய்ய மாட்டார்கள்.

எற்றென்று இரங்குவ செய்யற்க செய்வானேல்
மற்றன்ன செய்யாமை நன்று. 655

‘என்ன செய்தோம்’ என்று பின்னர் வருந்தக் கூடியதான செயல்களைச் செய்யவே கூடாது; செய்துவிட்டால், பின்னர் அதைப்பற்றி வருந்தாமலிருப்பது நன்று.

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை. 656

தன்னைப் பெற்ற தாயின் பசித் துன்பத்தைக் கண்ணால் கண்ட போதிலும், மேலோர்கள் பழிக்கும் செயல்களை ஒருவன் செய்யவே கூடாது.

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. 657

பழிகளைச் செய்து, அதனாலே வந்தடைந்த செல்வப் பெருக்கத்தை காட்டிலும், சான்றோர்களது வறுமையின் மிகுதியே மிகவும் சிறந்ததாகும்.

கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும். 658

செய்யத் தகாதவை என்று சான்றோரால் விலக்கப்பட்ட செயல்களைக் கடிந்து ஒதுக்காமல் செய்தவர்களுக்கு, அவை நன்மையாக முடிந்தாலும், துன்பத்தையே தரும்.

அழக் கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்
பிற்பயக்கும் நற்பா லவை. 659

பிறர் அழும்படியாகச் செய்து பெற்றுக் கொண்ட செல்வம் எல்லாம், நாம் அழும்படியாக அகன்று போகும்; நல்ல வழியில் வந்தவற்றை இழந்தாலும் பின்னர் பயன் தரும்.

சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று. 660

தீய வழிகளாலே பொருளைச் சேர்த்து ஒருவனைக் காப்பாற்றுதல் என்பது, பசுமண் கலத்தினுள் நீரைப்பெய்து அதைக் கசியாமல் காப்பாற்றுவது போன்றதாகும்.


67. வினைத்திட்பம்

வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. 661

மேற்கொண்ட செயலைச் செம்மையாக முடிக்கும் திறமை என்பது, ஒருவனது மனவலிமையே; பிற வலிமைகள் எல்லாம் சிறந்த வலிமைகள் ஆகா.

ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். 662

ஆராய்ந்து அறிந்தவர்களின் கொள்கையானது, இடையூறு வரும் முன்பாகவே விலக்கிக் கொள்ளுதலும், வந்தால் மனம் தளராமையும் ஆகிய, இரண்டு வழிகளே ஆகும்.

கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். 663

செயலில் ஆண்மையாவது, முடிந்தபின் வெளியே புலப்படுமாறு அதுவரை மறைத்துச் செய்வதாம்; இடையில் வெளிப்பட்டால், அது தீராத துன்பத்தையே தரும்.

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். 664

‘இதனை இப்படி யிப்படிச் செய்வோம்’ என்று சொல்லுதல் எல்லாருக்கும் எளிதாகும்; சொல்லியபடி செய்து முடித்தலோ, மிகவும் அருமையாக இருக்கும்.

வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். 665

எண்ணத்தாலே சிறந்த மனவுறுதி கொண்டவர்களது தொழில் திறமையானது, மன்னன் மனத்திலும் சென்று பதிவதனால், பலராலும் நன்கு மதிக்கப்படும்.

எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். 666

ஒரு செயலைச் செய்வதற்கு நினைத்தவர்கள், தாம் எண்ணிய எண்ணத்திலே உறுதி உடையவர்களானால், நினைத்ததை நினைத்தபடியே செய்து, வெற்றி அடைவார்கள்.

உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. 667

உருளுகின்ற பெரிய தேருக்கு அச்சாணிபோல நின்று காப்பவரையும் உலகம் உடையது; அதனால் ஒருவரது சிறிதான உருவத்தைப் பார்த்து இகழக் கூடாது.

கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். 668

மனம் கலங்காமல் தெளிவோடு மேற்கொண்ட செயலில், இடையிலே சோர்வில்லாமலும், காலம் கடத்தாமலும் ஈடுபட்டு விரைவாகவே செய்ய வேண்டும்.

துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. 669

முதலிலே வருகின்ற துன்பங்களால் வருத்தம் அடைய நேர்ந்தாலும், முடிவிலே இன்பம் தருகின்ற செயல்களை மனத்துணிவுடனே செய்து முடிக்க வேண்டும்.

எனைத்திட்பம் எய் தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. 670

எந்த வகையிலே உறுதி உடையவரானாலும், செய்யும் செயலிலே மனவுறுதி இல்லாதவர்களை உலகம் மதியாது; சிறந்தோராகவும் ஏற்றுக் கொள்ளாது.


68. வினை செயல்வகை

சூழ்ச்சி முடிவு துணிவெய்தல் அத்துணிவு
தாழ்ச்சியுள் தங்குதல் தீது. 671

ஒரு செயலைப் பற்றிய ஆராய்ச்சியின் முடிவு, மனத்தில் துணிவு பெறுவதே ஆகும்; அவ்வாறு துணிவு கொண்ட பின், அதனைச் செய்யாமல் காலம் கடத்துதல் தீமையாகும்.

தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை. 672

காலம் கடந்து செய்வதற்கு உரிய செயல்களைக் காலம் தாழ்த்தியே செய்ய வேண்டும்; கடத்தாமல் செய்வதற்குரிய செயல்களை விரைந்து செய்ய வேண்டும்.

ஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல். 673

செய்யக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்வது நன்மையே; செய்ய இயலாத போது, அதை முடிப்பதற்கேற்ற வழிகளை ஆராய்ந்த பின்பே செய்தல் வேண்டும்.

வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும். 674

செய்யும் செயலையும், ஒழிக்கும் பகையையும், குறைவிடாமல் செய்துவிட வேண்டும்; அவற்றின் மிச்சம் தீயின் ஒழிவைப் போலப் பெருகிப் பெருங்கேடு உண்டாக்கிவிடும்.

பொருள்கருவி காலம் வினையிடனொடு ஐந்தும்
இருள்தீர எண்ணிச் செயல். 675

வேண்டிய பொருள், கருவிகள், தக்க காலம், செயலறிவு, உரிய இடம் என்னும் ஐந்தையும் மயக்கமில்லாமல் ஆராய்ந்து கொண்ட பின்னரே, செய்தல் வேண்டும்.

முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல். 676

செயலின் முடிவைப் பற்றியும், இடையில் வரும் இடையூறுகளைப் பற்றியும், முடித்த பின் அடையும் பெரும்பயனையும் ஆராய்ந்தே ஒரு செயலைச் செய்தல் வேண்டும்.

செய்வினை செய்வான் செயன்முறை அவ்வினை
உள்ளறிவான் உள்ளம் கொளல். 677

ஒரு செயலைச் செய்வதற்குரிய செயல்முறையாவது, அதனை முன்பே செய்து முடித்துத் தெளிந்தவனிடம் கேட்டறிந்து, அவைகளைத் தாமும் மேற்கொள்ளுதல் ஆகும்.

வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று. 678

மதநீரால் கன்னம் நனையும் யானையைக் கொண்டு, வேறான யானையைக் கட்டுவதைப் போல, பழகிய செயலின் அறிவைக் கொண்டே பிற செயல்களையும் செய்தல் வேண்டும்.

நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல். 679

மாறுபட்டவரையும் தம்முடன் பொருந்துமாறு செய்து செயலிலே ஈடுபடுதல், நண்பருக்கு நல்லவை செய்வதிலும் மிகவும் விரைவாகச் செய்வதற்கு உரியதாகும்.

உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து. 680

ஒன்றைச் செய்யும் வல்லமை இல்லாதவருள், பயந்து இடையில் குறைப்பட்டவர்கள், பெரியோரைப் பணிந்து கேட்டு, அவர் கூறியபடி நடந்து கொள்ள வேண்டும்.


69. தூது

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம்
பண்புடைமை தூதுரைப்பான் பண்பு. 681

தன் நாட்டின் மீது அன்பும், உயர்ந்த குடிப்பிறப்பும், வேந்தன் விரும்புகின்ற உயர்ந்த பண்புகள் அமைதலும் தூது உரைப்பவனுக்கு வேண்டிய பண்புகள்.

அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று. 682

தன் நாட்டிடத்திலே அன்பும், தெளிவான அறிவும், எதையும் ஆராய்ந்து பேசும் சொல்வன்மையும், தூது உரைப்பவனுக்கு இன்றியமையாத மூன்று தகுதிகள்.

நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள்
வென்றி வினையுரைப்பான் பண்பு. 683

அரசியல் நூல்கள் அறிந்தவருள் தான் வல்லவனாதலும், வேல் வீரர்களுள் வெற்றித்திறனைக் கொண்டவனாக இருத்தலும், தூது உடையவனுக்கு வேண்டிய சிறந்த தகுதிகள்.

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்
செறிவுடையான் செல்க வினைக்கு. 684

இயல்பாகவே அமைந்த நுண்ணறிவும், தோற்றக் கவர்ச்சியும், ஆராய்ந்து பெற்ற கல்வியறிவும் என்னும் இம்மூன்றின் செறிவை உடையவனே தூது உரைப்பவன் ஆவான்.

தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச்சொல்லி
நன்றி பயப்பதாந் தூது. 685

விரிக்காமல் தொகுத்துச் சொல்லியும், இன்னாச் சொற்களை நீக்கியும், கேட்கும் மாற்றார் மகிழுமாறு சுவைபடச் சொல்லியும், தன் நாட்டிற்கு நன்மை விளைவிப்பவனே தூதன்.

கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது. 686

கற்பன கற்றறிந்து, அவரது கடும்பார்வைக்கு அஞ்சாமல், சொல்வதை அவர்கள் மனத்திற் பதியும்படி சொல்லிக் காலத்தோடு பொருந்துவதை அறிபவனே தூதன்.

கடனறிந்து காலங் கருதி இடனறிந்து
எண்ணி உரைப்பான் தலை. 687

தன் கடமையை அறிந்து, நிறைவேற்றும் காலத்தையும் கருத்திற் கொண்டு, ஏற்ற இடத்தையும் தெரிந்து, நன்றாகச் சிந்தித்துச் சொல்பவனே சிறந்த தூதன்.

தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழியுரைப்பான் பண்பு. 688

நடத்தையிலே தூய்மையும், தக்க துணைவரை உடைமையும், மனத்திலே துணிவு உடைமையும் ஆகிய இம்மூன்றினையும் வாய்த்திருப்பவனாக விளங்குதலே தூதனின் பண்பு.

விடுமாற்றம் வேந்தர்க்கு உரைப்பான் வடுமாற்றம்
வாய்சேரா வன்கணவன். 689

தன் அரசன் சொல்லியனுப்பியதைப் பிற வேந்தரிடம் சென்று உரைப்பவனாகிய தூதன், வடுப்படும் சொல்லை வாய் சோர்ந்தும் சொல்லாத திறன் உடையவனாக இருக்க வேண்டும்.

இறுதி பயப்பினும் எஞ்சாது இறைவற்கு
உறுதி பயப்பதாம் தூது. 690

தன் உயிருக்கே முடிவைத் தந்தாலும், அதற்கு அஞ்சித் தன் கடமையிலே குறைவுபடாது; தன் வேந்தனுக்கு நன்மை தரும் உறுதிப்பாட்டை செய்து முடிப்பவனே தூதன்.


70. மன்னரைச் சேர்ந்தொழுகல்

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார். 691

மாறுபடும் வேந்தரைச் சேர்ந்து வாழ்கின்றவர்கள், அவரை விட்டு மிகவும் நீங்காமலும், மிகவும் நெருங்காமலும், தீயில் குளிர்காய்பவரைப் போலப் பழகிவர வேண்டும்.

மன்னர் விழைப விழையாமை மன்னரால்
மன்னிய ஆக்கந் தரும். 692

மன்னர் விரும்புகின்ற பொருள்களைத் தானும் விரும்பாதிருக்கும் தன்மையானது, அம்மன்னராலே நிலைத்திருக்கும் செல்வங்களை ஒருவனுக்குத் தருவதாக விளங்கும்.

போற்றின் அரியவை போற்றல் கடுத்தபின்
தேற்றுதல் யார்க்கும் அரிது. 693

அரசன் சினம் கொண்டால் அவனைத் தெளிவித்தல் அரிதானதால், அரசனைச் சார்ந்திருப்பவர், பொறுத்தற்கரிய பிழைகள் தம்மிடம் நேராமல் காத்துக் கொள்ள வேண்டும்.

செவிச்சொல்லும் சேர்ந்த நகையும் அவித்தொழுகல்
ஆன்ற பெரியா ரகத்து. 694

அறிவாற்றலில் சிறந்த பெரியவர்கள் கூடியுள்ள அரசவையில் இருக்கும் போது, காதோடு காதாகப் பேசுவதையும், பிறரோடு சேர்ந்து சிரிப்பதையும், நீக்கிவிட வேண்டும்.

எப்பொருளும் ஓரார் தொடரார்மற் றப்பொருளை
விட்டக்கால் கேட்க மறை. 695

அரசனின் மறைவான பேச்சுக்களைக் கேளாமலும், அதன் தொடர்பாக எதுவும் சொல்லாமலும் இருந்து, அவனாகச் சொன்னால் மட்டுமே கேட்டல் வேண்டும்.

குறிப்பறிந்து காலங் கருதி வெறுப்பில
வேண்டுப வேட்பச் சொலல். 696

அரசனது உள்ளக்குறிப்பை அறிந்து, காலத்தையும் கருத்திற் கொண்டு, அரசனுக்கு வெறுப்புத்தராத சொற்களை, அவன் விரும்பிக் கேட்கும்படி சொல்ல வேண்டும்.

வேட்பன சொல்லி வினையில எஞ்ஞான்றும்
கேட்பினும் சொல்லா விடல். 697

அரசன் விரும்புகிற செய்திகளை மட்டும் அவனிடம் சொல்லியும், அவனுக்குரியவை அல்லாதன பற்றி அரசனிடம் சொல்லாமற் கைவிடுதலும் வேண்டும்.

இளையர் இனமுறையர் என்றிகழார் நின்ற
ஒளியோடு ஒழுகப் படும். 698

‘இளையவர்’ என்று கருதியோ, ‘இனமுறை’ என்று கருதியோ இகழாமல், நிலைபெற்ற அறிவுடன் அரசனிடம் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

கொளப்பட்டேம் என்றெண்ணிக் கொள்ளாத செய்யார்
துளக்கற்ற காட்சி யவர். 699

‘தாம் அரசராலே மதித்துக் கொள்ளப்பட்டோம்’ என்றும், அவர் ஏற்றுக் கொள்ளாத செயல்களைக் குற்றம் இல்லாத அறிவுடையவர்கள் செய்ய மாட்டார்கள்.

பழையம் எனக்கருதிப் பண்பல்ல செய்யும்
கெழுதகைமை கேடு தரும். 700

‘மிகப் பழைய காலத் தொடர்புடையோர்’ என்று நினைத்துப் பண்பில்லாத செயல்களைச் செய்பவனின் நெருக்கமான உரிமை, அவனுக்கே கெடுதல் தரும்.


71. குறிப்பறிதல்

கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக் கணி. 701

ஒருவன் சொல்வதன் முன்பாகவே, குறிப்பால் அவன் கருத்தை அறியக் கூடியவன், வற்றாத கடலால் சூழப் பெற்றுள்ள உலகத்துக்கே அணிகலன் ஆவான்.

ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
தெய்வத்தோ டொப்பக் கொளல். 702

கொஞ்சமும் ஐயப்படாத வகையிலே, பிறர் உள்ளத்திலுள்ள எண்ணங்களை உணர்ந்து கொள்ளக் கூடியவனைத் தெய்வத்தோடு சமமாகக் கொள்ளுதல் வேண்டும்.

குறிப்பிற் குறிப்புணர் வாரை உறுப்பினுள்
யாது கொடுத்தும் கொளல். 703

ஒருவரது முகக்குறிப்பினாலேயே, அவரது கருத்துக்களை உணர்கின்றவரை, உறுப்பினுள் எதனைக் கொடுத்தேனும் துணையாக்கிக் கொள்ளல் வேண்டும்.

குறித்தது கூறாமைக் கொள்வாரோ டேனை
உறுப்போ ரனையரால் வேறு. 704

தாம் செய்வதற்குக் குறித்த ஒரு செயலைச் சொல்வதற்கு முன்பாகவே குறிப்பால் அறிந்து செய்பவர்களோடு, பிறர் நிலையால் ஒத்தாலும் பயனால் ஒப்பாகார்.

குறிப்பிற் குறிப்புணரா வாயின் உறுப்பினுள்
என்ன பயத்தவோ கண்? 705

ஒருவர் தம் கருத்தைக் குறிப்பால் காட்டிய போது, அதனை உணராமலிருந்தால், உடலுறுப்புக்களுள் கண் என்பது என்ன பயனைச் செய்வதாகுமோ?

அடுத்தது காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்
கடுத்தது காட்டும் முகம். 706

தன்னை அடுத்திருக்கும் ஓர் உருவத்தைத் தன்னிடத்தே காட்டும் பளிங்கைப் போல, ஒருவர் நெஞ்சம் கடுத்ததனை அவரது முகமும் தெளிவாகக் காட்டிவிடும்.

முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான்முந் துறும். 707

முகத்தைக் காட்டிலும் அறிவால் மிக்கது வேறு யாதும் உண்டோ? உள்ளம் மகிழ்ந்தாலும் சினந்தாலும், தான் முந்திக் கொண்டு அதனை வெளியே காட்டிவிடும்.

முகம்நோக்கி நிற்க அமையும் அகம்நோக்கி
உற்ற துணர்வார்ப் பெறின். 708

முகத் தோற்றத்தால் ஒருவருக்கு நேர்ந்த துயரத்தை உணர்பவரைத் துணையாக அடைந்தால், அவர் எதிரே நின்றாலே போதும், எதுவுமே சொல்ல வேண்டாம்.

பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
வகைமை உணர்வார்ப் பெறின். 709

கண் பார்வையால் கருத்தை வகைப்படுத்தி உணர்பவரைத் துணையாகப் பெற்றால், ஒருவரது பகைமையையும், நட்பையும் அவரது கண்களே நமக்குச் சொல்லிவிடும்.

நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால்
கண்ணல்லது இல்லை பிற. 710

நுண்ணறிவு உடையோம் என்பவர் பிறரை அளந்தறியும் அளவுகோல் யாதென ஆராயுங்காலத்து, அப் பிறரது கண் அல்லாமல் பிற உறுப்புக்கள் யாதும் இல்லை.


72. அவை அறிதல்

அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். 711

சொல்லின் தொகையை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, தாம் சொல்லப் போவதையும் நன்றாக ஆராய்ந்தே, எதனையும் சொல்ல வேண்டும்.

இடைதெரிந்து நன்குணர்ந்து சொல்லுக சொல்லின்
நடைதெரிந்த நன்மை யவர். 712

சொல்லின் நடையை அறிந்த நல்லறிவை உடையவர்கள், தாமிருக்கும் அவையின் தன்மையைத் தெரிந்து, சொல்ல வேண்டியவற்றை உணர்ந்தே, சொல்ல வேண்டும்.

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்
வகையறியார் வல்லதூஉம் இல். 713

தாமிருக்கும் அவையின் தன்மையை அறியாதவர்களாக, ஒன்றைச் சொல்பவர்கள் சொல்லின் வகையை அறியாதவர்கள்; அவர்களால் எதையுமே சாதிக்க முடியாது.

ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல். 714

அறிவினாலே ஒளியுடையவர் முன்பாகத் தாமும் அறிவொளியினர் ஆக வேண்டும்; அறிவிலாதவர் முன்பாக, சுண்ணாம்பு வண்ணங் கொள்ளுதல் போல ஆகிவிட வேண்டும்.

நன்றென்ற வற்றுள்ளும் நன்றே முதுவருள்
முந்து கிளவாச் செறிவு. 715

அறிவால் முதிர்ந்தவர் அவையிலே, அவர்கள் கருத்துக்களைக் கேட்டறியும் முன்பாக எதையும் சொல்லாத அடக்கமானது, சிறந்த நன்மை தருவதாகும்.

ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு. 716

விரிந்த அறிவு நுட்பங்களை அறிந்தவர் முன் சென்று பேசிக் குற்றப்படுதல், ஆற்று வெள்ளத்தில் நீந்துபவன், இடையிலே நிலை தளர்ந்தால் போன்றதாம்.

கற்றறிந்தார் கல்வி விளங்கும் கசடறச்
சொல்தெரிதல் வல்லார் அகத்து. 717

குற்றம் இல்லாமல் சொற்களின் பொருள்களைத் தெரிவதற்கு வல்லமை உடையவர்களிடையே, கற்றறிந்த கல்வியறிவு மேலும் விளக்கம் பெற்றுத் தோன்றும்.

உணர்வ துடையார்முன் சொல்லல் வளர்வதன்
பாத்தியுள் நீர்சொரிந் தற்று. 718

சொல்லின் பயனை உணர்கின்றவர்களின் முன்பாக ஒன்றைச் சொல்லுதல், நல்ல பயிர் வளருகின்ற பாத்தியினுள்ளே, நீர் சொரிந்தாற் போலப் பெரும்பயன் தருவதாகும்.

புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்
நன்குசலச் சொல்லு வார். 719

நல்ல அறிவாளர்கள் கூடியுள்ள அவையிலே, அவர்களுக்கு நன்றாகப் பதியுமாறு சொல்லுகிறவர்கள், புல்லறிவினர் கூட்டத்திலே, மறந்தும் பேசாதிருக்க வேண்டும்.

அங்கணத்துள் உக்க அமிழ்தற்றால் தங்கணத்தார்
அல்லார்முன் கோட்டி கொளல். 720

தம் போன்ற அறிவுடையவர்கள் அல்லாதவரின் முன்பாக ஒன்றைப் பற்றி விரிவாகப் பேசுதல் அங்கணத்துள்ளே அமுதத்தைக் கொட்டியது போலப் பாழாகிவிடும்.


73. அவை அஞ்சாமை

வகையறிந்து வல்லவை வாய்சோரார் சொல்லின்
தொகையறிந்த தூய்மை யவர். 721

சொற்களின் தொகை அறிந்த தூய அறிவாளர்கள், அவையின் தன்மையை அறிந்து, வலியவர் அவையிலே வாய்சோர்ந்து எதனையும் பேசமாட்டார்கள்.

கற்றாருள் கற்றார் எனப்படுவர் கற்றார்முன்
கற்ற செலச்சொல்லு வார். 722

‘கற்றவர்களுள் கற்றவர்’ என்று புகழப்படுகின்றவர்கள், கற்றவர் அவையின் முன், தாம் கற்றதை அவர்கள் ஏற்றுக் கொள்ளுமாறு எடுத்துச் சொல்லக் கூடியவர்களே ஆவர்.

பகையகத்துச் சாவார் எளியர் அரியர்
அவையகத்து அஞ்சா தவர். 723

போர்க்களத்தின் நடுவே அஞ்சாமல் சென்று சாவையும் ஏற்பவர்கள் பலர்; ஆனால், கற்றோர் அவையிலே சென்று பேசக் கூடிய அஞ்சாமை உடையவர்கள் மிகமிகச் சிலரே!

கற்றார்முன் கற்ற செலச்சொல்லித் தாம்கற்ற
மிக்காருள் மிக்க கொளல். 724

தாம் கற்றவைகளைக் கற்றோர்கள் மனங்கொள்ளும்படியாகச் சொல்லி, தம்மிலும் மிகுதியாகக் கற்றவர்களிடம், தாமும் எஞ்சிய மிகுதியைக் கேட்டுக் கொள்ளல் வேண்டும்.

ஆற்றின் அளவறிந்து கற்க அவையஞ்சா
மாற்றங் கொடுத்தற் பொருட்டு. 725

அவையினருக்கு அஞ்சாமல், அங்கே எழும் கேள்விகளுக்கு விடை சொல்லும் பொருட்டு, அதற்கு வேண்டிய நூல்களைப் பொருள்நயம் அறிந்து கற்றுக் கொள்ளல் வேண்டும்.

வாளொடென் வன்கண்ணர் அல்லார்க்கு நூலொடென்
நுண்ணவை அஞ்சு பவர்க்கு. 726

அஞ்சாமை இல்லாதவர்க்கு அவர் ஏந்தியுள்ள வாளினால் என்ன பயன்? நுட்பமான அறிவையுடையவர் அவையிலே பேச அஞ்சுபவர்க்கு நூலறிவாலும் பயன் இல்லை.

பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து
அஞ்சு மவன்கற்ற நூல். 727

பகைவர் நடுவே புகுந்த, பேடியின் கையிலேயுள்ள கூர்மையான வாள் பயன்படாததைப் போல, அவையில் பேசுவதற்கு அஞ்சுகிறவன் நூலறிவும் பயன்படாது.

பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள்
நன்கு செலச்சொல்லா தார். 728

நல்லவர்கள் அவையிலே, அவர்கள் ஏற்றுக் கொள்ளும்படி நல்ல பொருள்பற்றிப் பேசத் தெரியாதவர்கள் பலவகையான நூல்களைக் கற்றவரானாலும் பயன் இல்லாதவரே!

கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும்
நல்லா ரவையஞ்சு வார். 729

தாம் பல நூல்களைக் கற்று அறிந்திருந்தாலும், நல்லறிவு உடையவர் அவையிலே பேசுவதற்கு அஞ்சுகிறவர்கள் கல்லாதவரினும் கடைப்பட்டவர்கள் ஆவர்.

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்
கற்ற செலச்சொல்லா தார். 730

அவைக்கு அச்சமடைந்து, தாம் கற்றவற்றை அவையினர் ஏற்கும் வண்ணம் சொல்ல முடியாதவர்கள், அறிவுள்ளவரே என்றாலும், அறிவற்றவர்களுக்கே சமமாவார்கள்.


74. நாடு

தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு. 731

நாட்டு மக்களின் தேவைக்குக் குறையாத விளைபொருளும், தகுதியுடைய சான்றோர்களும், தாழ்வில்லாத செல்வத்தை உடையவரும் ஒன்று சேர்ந்திருப்பதே, நல்ல நாடாகும்.

பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டால்
ஆற்ற விளைவது நாடு. 732

பெரும் பொருள் பெருக்கத்தால் அனைவராலும் விரும்பத் தகுந்ததாகியும், கேடுகள் இல்லாததாகியும், மிகுதியான விளைச்சலை உடையதாகியும் விளங்குவதே, நல்ல நாடு.

பொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு. 733

வேற்று நாட்டாரையும் தாங்குவதற்கான நிலையில், அவரைத் தாங்கிக் காத்தும், தம் அரசனுக்குரிய இறைப்பொருளை முழுவதும் கொடுத்தும் காப்பதே, நல்ல நாடாகும்.

உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு. 734

நீங்காத பசித்துன்பமும், தீராத நோய்களும், மேல்வந்து தாக்கும் பகைவர்களும் தன்னைச் சேராமல், வலிமையோடும் வளமோடும் விளங்குவதே, நல்ல நாடாகும்.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு. 735

பலவாகப் பிரிந்து இயங்கும் கூட்டங்களும், நாட்டைப் பாழாக்கும் உட்பகையும், வேந்தனைத் துன்புறுத்தும் கொலை வெறியுள்ள குறுநில மன்னரும், இல்லாதது நாடு.

கேடறியாக் கெட்ட இடத்தும் வளங்குன்றா
நாடென்ப நாட்டின் தலை. 736

பகைவராலே கெடுதல்களை அறியாததாய், இயற்கையின் மாறுபாடுகளால் கெட்டவிடத்திலும் வளம் குன்றாமலிருக்கும் நாடு தான், நாடுகளுள் சிறந்த நாடாகும்.

இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு. 737

கீழ்நீரும் மேல்நீரும் என்னும் இருநீர் வளமும், வளம் வாய்ந்த மலைகளும், ஆறுகளும், வலிமையான அரண்களும், ஒரு நாட்டிற்கு வேண்டிய உறுப்புக்களாம்.

பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து. 738

மக்கள் நோயில்லாமலிருத்தல், செல்வம் உடைமை, விளைபொருள் பெருக்கம், இன்பந்தரும் கவின்கலைகள், நல்ல காவல் என்னும் இவ் ஐந்துமே, நாட்டிற்கு அழகு!

நாடென்ப நாடா வளத்தன நாடல்ல
நாட வளந்தரு நாடு. 739

வேற்று நாடுகளை எதற்கும் வேண்டாதபடி, எல்லா வளமும் கொண்டதே நல்ல நாடு என்பர்; பிறர் உதவியை நாடி அதனால் வளமை வரும் நாடு, நாடே ஆகாது.

ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு. 740

மேற்சொல்லியவை எல்லாம் சிறப்பாகவே அமையப் பெற்றிருந்தாலும், ஆட்சி நடத்தும் வேந்தன் பொருத்தமில்லாமலிருக்கும் நாடு, பயனற்ற நாடு ஆகும்.


75. அரண்

ஆற்று பவர்க்கும் அரண்பொருள் அஞ்சித்தற்
போற்று பவர்க்கும் பொருள். 741

பகைவருக்கு அஞ்சாமல் மேற்சென்று போரிட வல்லவர்களுக்கும் அரண் செல்வம்; அஞ்சி உள்ளேயிருந்து தம்மைக் காத்துக் கொள்ள நினைப்பவருக்கும் அரண் செல்வம்.

மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடைய தரண். 742

நீலமணி போன்ற நீரினையுடைய அகழியும், வெளியான நிலப்பரப்பும், உயரமான மலையும், மரநிழலாற் செறிந்த காடும் கொண்டுள்ளதே, பாதுகாப்பான நல்ல அரண்!

உயர்வகலம் திண்மை அருமைஇந் நான்கின்
அமைவரண் என்றுரைக்கும் நூல். 743

‘உயரமும், அகலமும், உறுதியும், பகைவரால் நெருங்குவதற்கு அருமையும் என்னும் நான்கும், சிறப்பாக அமைந்ததே அரண்’ என்று போரியல் நூல்கள் கூறும்.

சிறுகாப்பிற் பேரிடத்த தாகி உறுபகை
ஊக்கம் அழிப்ப தரண். 744

காக்க வேண்டும் இடத்தினால் சிறிதானதாகவும், உள்ளே பெரிதான பரப்பை உடையதாகவும், பகைவரது மன ஊக்கத்தை முற்றும் அழிக்க வல்லதே நல்ல அரண் ஆகும்.

கொளற்கரிதாய்க் கொண்டகூழ்த் தாகி அகத்தார்
நிலைக்கெளிதாம் நீரது அரண். 745

பகைவராலே கைப்பற்றுவதற்கு அரியதாயும், தன்னிடத்தே கொண்டுள்ள உணவுப் பொருள்களை உடையதாயும், அகத்தாரது போர்நிலைக்கு எளியதாயும் அமைந்ததே அரண்.

எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்
நல்லாள் உடையது அரண். 746

அகத்தாருக்குத் தேவையான எல்லாம் பொருள்களையும் உடையதாய், அழிவிடத்து உதவிக்காக்கும் நல்ல காவல் மறவர்களையும் கொண்டதாய், விளங்குவதே அரண்.

முற்றியும் முற்றா தெறிந்தும் அறைப்படுத்தும்
பற்றற் கரியது அரண். 747

சூழ்ந்து முற்றியும், திடீரெனத் தாக்கியும், வஞ்சனைகளாலே உள்ளிருப்போரை வசப்படுத்தியும், பகைவரால் கைப்பற்றுவதற்கு இயலாத அருமையுடையதே அரண்!

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வது அரண். 748

வந்து சூழ்ந்துள்ள பகைவரது பெரும்படையையும், உள்ளிருப்போர் இடம்விட்டுப் பெயராமல் நிலைத்து நின்றபடியே வெல்லும் அமைப்பை உடையதே, அரண்.

முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண். 749

முற்றுகையிட்ட பகைவர்கள் போர்முனையின் முகப்பிலேயே அழிந்து போகுமாறு, போர்த்தொழிலில் வீறுபெற்றுச் சிறந்த காவல் மறவர்களையும் கொண்டதே அரண்!

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
இல்லார்கண் இல்லது அரண். 750

எத்தகைய பாதுகாவலை உடையதாய் இருந்தாலும், அரண்காக்கும் மறவர்கள் போர்வினைச் சிறப்பு இல்லாதவரானால், அந்த அரணும் பயனற்று அழிந்து போகும்.


76. பொருள் செயல்வகை

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள். 751

ஒரு பொருளாக மதிப்பதற்குத் தகுதியில்லாதவரையும், பிறர் மதிக்கும்படியாகச் செய்யக் கூடிய பொருளை அல்லாமல் உலக வாழ்வுக்குச் சிறந்த பொருளாவது யாதும் இல்லை.

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு. 752

பொருள் இல்லாத வறியவரை எல்லாருமே இகழ்ச்சியாகப் பேசுவார்கள்; செல்வம் உடையவரையோ எல்லாரும் சிறப்புச் செய்து போற்றுவார்கள்.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும்
எண்ணிய தேயத்துச் சென்று. 753

‘பொருள்’ என்னும் நந்தா விளக்கமானது, தன்னை உடையவர் எண்ணிய தேயங்களுக்கும் சென்று, அவர் பகையாகிய இருளைப் போக்கும் வல்லமை உடையதாகும்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். 754

தீய வழிகளால் அல்லாமல், பொருள் தேடும் திறனை அறிந்து தேடியதனால் வந்தடைந்த செல்வமானது, அறவாழ்க்கையையும், இன்பத்தையும் ஒருங்கே கொடுப்பது ஆகும்.

அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல். 755

‘அருள்’ என்னும் இயல்போடும், மக்களின் அன்போடும் பொருந்திவாராத பொருட் பெருக்கத்தைத் தீயவர் புரள்வதற்கு விலக்கி விட்டுவிட வேண்டும்.

உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள். 756

உடையவர் இல்லாததாலே வந்து சேர்ந்த செல்வமும், சுங்க வரியாக வந்த பொருளும், பகைவரை வென்று பெற்ற திறைப் பொருளும், வேந்தனின் உரிமைப் பொருளாகும்.

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு. 757

‘அன்பு’ என்னும் தாய் பெற்றெடுத்த ‘அருள்’ என்னும் குழந்தையானது. ‘பொருள்’ என்கின்ற செல்வம் படைத்த செவிலித்தாயால் வளர்க்கப்பட வேண்டும்.

குன்றேறி யானைப் போர் கண்டற்றால் தன்கைத்தொன்று
உண்டாகச் செய்வான் வினை. 758

தன் கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்யத் தொடங்குவதானது, குன்றின்மேல் ஏறி நின்று யானைப் போரைக் கண்டாற் போல், துன்பமின்றி இன்பம் தருவதாகும்.

செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும்
எ·கதனிற் கூரிய தில். 759

பகைவரின் மனச் செருக்கை அழித்து வெற்றிபெரும் ஆயுதம், பொருளைக் காட்டிலும் கூர்மையானது வேறில்லை. ஆதலால், பொருளை எப்போதும் தேடிக் கொள்ள வேண்டும்.

ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள்
ஏனை இரண்டும் ஒருங்கு. 760

சிறந்த வழியோடு வந்த பொருளை மிகுதியாகத் தேடிக் கொண்டவர்களுக்கு, எண்ணப்படும் மற்றையவாகிய அறமும் இன்பமும் ஒருங்கே வந்து வாய்க்கும் பொருள்களாகும்.


77. படை மாட்சி

உறுப்பமைந்து ஊறஞ்சா வெல்படை வேந்தன்
வெறுக்கையுள் எல்லாம் தலை. 761

நால்வகை உறுப்புக்களாலும் முறையாக அமைந்து, களத்திற்படும் துன்பங்கட்கு அஞ்சாமல் பகைவரை வெல்லும் படையே, செல்வங்களுள் சிறந்த செல்வம்.

உலைவிடத்து ஊறஞ்சா வன்கண் தொலைவிடத்துத்
தொல்படைக் கல்லால் அரிது. 762

போரில் நேரிட்ட அழிவுக்கு அஞ்சாமல் பகைவர் மேற் செல்லும் ஆண்மை, வழிவழிப் புகழோடு விளங்கும் தொல்படைக்கே இயல்வதாகும்.

ஒலித்தக்கால் என்னாம் உவரி எலிப்பகை
நாகம் உயிர்ப்பக் கெடும். 763

பகைப்படைகள் எலிகளைப் போலக் கடலாகத் திரண்டு வந்து ஆரவாரித்தாலும், சிறிய தொல்படை நாகத்தைப் போல மூச்சுவிட்டதும், அது முற்றவும் அழிந்துபோம்.

அழிவின்றி அறைபோகா தாகி வழிவந்த
வன்க ணதுவே படை. 764

மனத்தின் உறுதியிலே அழிவற்றதாய், பகைவரது வஞ்சனைகளுக்கு உட்படாததாய், வழிவழித் தொடர்ந்து வந்த வன்கண்மை உடையதாய் விளங்குவதே, சிறந்த படை.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை. 765

கூற்றம் சினங்கொண்டு தன்மேல் எதிர்த்து வந்தாலும், அதனோடும் சென்று பொருந்தி, எதிர்த்துப் போரிட்டு வெல்லும் ஆற்றல் உடையதே, சிறந்த படை ஆகும்.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு. 766

மறப்பண்பும், மானவுணர்வும், நன்னெறியே பற்றிச் செல்லுதலும், மன்னனால் தெளியப்பட்ட சிறப்பும் என்னும் நான்கும், படைக்குச் சிறந்த பாதுகாப்பு ஆகும்.

தார்தாங்கிச் செல்வது தானை தலைவந்த
போர்தாங்கும் தன்மை அறிந்து. 767

மேல்வந்த போரைத் தாங்கிநின்று, பகைவரை மேற்சென்று வெல்லும் வகைகளை ஆராய்ந்து, அவர்களின் தூசிப்படையைத் தாக்கி அழித்து மேற்செல்வதே, படை ஆகும்.

அடல்தகையும் ஆற்றலும் இல்லெனினும் தானை
படைத்தகையால் பாடு பெறும். 768

போரிடுகின்ற தறுகண்மையும், அதற்கு வேண்டிய ஆற்றலும் இல்லாதிருந்தாலும், ஒரு படை தனது அணிவகுப்பினாலேயே பகைவரை வெற்றி அடைந்துவிடும்.

சிறுமையும் செல்லாத் துனியும் வறுமையும்
இல்லாயின் வெல்லும் படை. 769

தேய்ந்து சிறுகுதலும், மனம்நீங்காத வெறுப்பும், பொருளில்லாத வறுமையும் இல்லாமலிருந்தால், அந்தப் படை தவறாமல் எந்தப் பகையையும் வெற்றி கொள்ளும்!

நிலைமக்கள் சால உடைத்தெனினும் தானை
தலைமக்கள் இல்வழி இல். 770

நிலையான மறவர்களை மிகுதியாக உடையதானாலும், ஒரு படையானது, தன் தலைவர்கள் திறமையில்லாதவர்களாக இருந்தால், பயனற்று அழிந்துவிடும்.


78. படைச் செருக்கு

என்னைமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்நின்று கல்நின் றவர். 771

பகைவரே! என் தலைவனின் முன்னே எதிர்த்து வந்து நில்லாதீர்; அவன் முன்னர் எதிர்த்து வந்து நின்று, களத்தில் வீழ்ந்துபட்டு, நடுகற்களாக நிற்பவர் மிகப் பலர்.

கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 772

காட்டு முயலைக் குறிதவறாமல் எய்து வீழ்த்திக் கொன்ற அம்பினைக் காட்டிலும், யானைமேல் எறிந்து குறிதவறிய வேலினைத் தாங்குதலே படைமறவருக்கு இனிதாகும்.

பேராண்மை என்ப தறுகண்ஒன் றுற்றக்கால்
ஊராண்மை மற்றதன் எ·கு. 773

‘பேராண்மை’ என்பது பகைவர்க்கு அஞ்சாமல் எதிர் நின்று போரிடும் ஆண்மையே; அவருக்கு ஒரு கேடு வந்தவிடத்து உதவிநிற்கும் ஆண்மையோ, அதனிலும் சிறந்ததாகும்.

கைவேல் களிற்றொடு போக்கி வருபவன்
மெய்வேல் பறியா நகும். 774

தன் கைவேலினைக் களிற்றின் மீது எறிந்துவிட்டுப் படைக்கலமின்றி வருபவன், தன்னுடம்பில் தைத்திருந்த பகைவரின் வேலைப் பறித்து மகிழ்ச்சி அடைவான்!

விழித்தகண் வேல்கொண டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு. 775

பகைவர் மீது சினந்து பார்த்த கண்கள், அவர் தம் கைவேலை எறிந்த காலத்தினும், வெகுட்சியை மாற்றி இமைக்குமானால் மறவருக்கு இழிவுதரும் அல்லவோ!

விழுப்புண் படாதநாள் எல்லாம் வழுக்கினுள்
வைக்கும்தன் நாளை எடுத்து. 776

கழிந்து போன தன் வாழ்நாட்களைக் கணக்கிட்டுப் பார்த்து, விழுப்புண் படாத நாட்களை எல்லாம், தான் தவறவிட்ட நாட்களுள் சேர்ப்பவனே படை மறவனாவான்.

சுழலும் இசைவேண்டி வேண்டா உயிரார்
கழல்யாப்புக் காரிகை நீர்த்து. 777

உலகைச் சூழ்ந்து பரவும் புகழையே விரும்பி, உயிரை வெறுத்துப் போரிடும் ஆண்மையுள்ள மறவரின் காலிலே, விளங்கும் கழல்களே அழகு உடையவாகும்.

உறின்உயிர் அஞ்சா மறவர் இறைவன்
செறினும் சீர்குன்றல் இலர். 778

போர்க்களத்திலே தம் உயிருக்கும் அஞ்சாமல் போரிடும் படை மறவர்கள், தம் அரசனே தடுத்தாலும், தம் மனவூக்கத்தில் சிறிதும் குறைய மாட்டார்கள்.

இழைத்தது இகவாமைச் சாவாரை யாரே
பிழைத்தது ஒறுக்கிற் பவர். 779

தாம் உரைத்த சூளுரையிலிருந்து தப்பாமல் போரினைச் செய்து, அதனிடத்தில் சாகிறவரை, எவர்தாம் சூளுரை பிழைத்ததற்காகத் தண்டிப்பவர்கள்!

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு
இரந்துகோள் தக்கது உடைத்து. 780

தம்மைப் பேணியவரின் கண்கள் நீர் சிந்தும்படியாகக் களத்தில் சாவைத் தழுவினால், அத்தகைய சாவு ஒருவன் இரந்தும் கொள்ளத்தகுந்த சிறப்பினை உடையதாகும்.


79. நட்பு

செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு. 781

நட்பைப் போல் ஒருவன் செய்து கொள்வதற்கு அருமையான செயல் எதுவுமே இல்லை; நட்பைப் போலச் செயல்களுக்கு அருமையான பாதுகாப்பும் எதுவுமில்லை.

நிறைநீர நீரவர் கேண்மை பிறைமதிப்
பின்னீர பேதையார் நட்பு. 782

நல்ல தன்மையுள்ளவரோடு கொண்ட நட்பானது, வளர்பிறை போல நாளுக்குநாள் வளரும்; பேதைகளின் நட்பு, தேய்பிறைபோல நாளுக்குநாள் தேய்ந்து போகும்.

நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும்
பண்புடை யாளர் தொடர்பு. 783

நல்ல பண்பு உடையவர்களின் தொடர்பானது, படிக்கப் படிக்க நூலின் நயம் மேன்மேலும் இனிமை தருவது போல், பழகப் பழக மேன்மேலும் இன்பம் தருவதாகும்.

நகுதற் பொருட்டன்று நட்டல் மிகுதிக்கண்
மேற்செனறு இடித்தற் பொருட்டு. 784

நட்புச் செய்து கொள்வது நண்பரோடு சிரித்து மகிழ்வதற்காக மட்டும் அன்று; அவர் மிகுதியாகத் தவறு செய்யும் போது, அவரைக் கடிந்து திருத்துவதற்கே ஆகும்.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும். 785

நட்புச் செய்வதற்கு ஒருவரோடு ஒருவர் கலந்து பேசிப் பழகுதல் வேண்டியதில்லை; இருவரிடமும் உள்ள ஒத்த உணர்ச்சிகளே, நட்பு என்னும் உரிமையைத் தந்துவிடும்.

முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு. 786

உள்ளம் கலக்காமல், முகத்தோற்றத்தில் மகிழ்ச்சி காட்டி நட்புச் செய்வது நல்ல நட்பு ஆகாது; நெஞ்சத்தின் உள்ளேயும் மகிழ்ச்சியோடு நட்பு செய்வதுதான் நல்ல நட்பு.

அழிவி னவைநீக்கி ஆறுய்த்து அழிவின்கண்
அல்லல் உழப்பதாம் நட்பு. 787

நண்பனுக்கு அழிவு வரும்போது அதை விலக்கி, அவனை நிலைபெறச் செய்து, தன்னையும் மீறிய அழிவின் போது தானும் அவனோடு துயரப்படுவதே நல்ல நட்பாகும்.

உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு. 788

ஆற்று வெள்ளத்தில் உடையை இழந்தவனது மானத்தை மறைக்க, அவன் கை உடனே உதவுவது போல, நண்பன் துன்பத்தை விரைந்து நீக்குவதுதான் நல்ல நட்பு.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. 789

‘நட்பு என்பது நிலையாகத் தங்கியிருக்கும் இடம் யாது?’ என்றால், மனவேறுபாடு இல்லாமல், முடிந்த இடமெல்லாம், இணைந்து நின்று காத்து பேணும் நிலையாகும்.

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு. 790

‘இவர் எமக்கு இப்படிப்பட்டவர்’, ‘யாம் இவருக்கு இத்தன்மைவர்’ என்று, நட்பின் அளவைச் சொன்னாலும், அந்த நட்பு தன் சிறப்பை இழந்து போகும்.


80. நட்பாராய்தல்

நாடாது நட் டலிற் கேடில்லை நட்டபின்
வீடில்லை நட்பாள் பவர்க்கு. 791

நன்றாக ஆராயாமல் நட்புச் செய்வதைவிடக் கெடுதி எதுவும் இல்லை; அப்படி நட்புச் செய்தபின் கைவிடுதல், நட்பை விரும்புவோரால் முடிவதும் இல்லை.

ஆய்ந்தாய்ந்து கொள்ளாதான் கேண்மை கடைமுறை
தான்சாம் துயரம் தரும். 792

பலப்பல வகையாலும் ஒருவனைப் பற்றி ஆராய்ந்து தெளிந்த பின் கொள்ளாத நட்பானது, தானே முடிவில் சாக வேண்டிய அளவுக்குப் பெரும் துயரத்தைத் தந்துவிடும்.

குணமும் குடிமையும் குற்றமும் குன்றா
இனனும் அறிந்தியாக்க நட்பு. 793

ஒருவன் குணத்தையும், அவன் பிறந்த குடியின் சிறப்பையும், அவன் குற்றங்குறைகளையும், நிலையாக அவனோடு இருக்கும் தோழர்களையும் அறிந்தே, நட்புச் செய்ய வேண்டும்.

குடிப்பிறந்து தன்கண் பழிநாணு வானைக்
கொடுத்தும் கொளல்வேண்டும் நட்பு. 794

உயர்ந்த குடியிலே பிறந்தவனும், பழிச்சொற்களுக்கு வெட்கப்படுகிறவனும் ஆகிய ஒருவனை, எந்தப் பொருளைக் கொடுத்தானாலும் நட்பாக்கிக் கொள்ள வேண்டும்.

அழச்சொல்லி அல்லது இடித்து வழக்கறிய
வல்லார்நடபு ஆய்ந்து கொளல். 795

நாம் தவறு செய்யும் பொழுது கடுமையாகப் பேசியும், மேலும் செய்யாதபடி தடுத்தும், உலக நடையை அறிவதற்கு வல்லவரின் நட்பினையே கொள்ள வேண்டும்.

கேட்டினும் உண்டோ ர் உறுதி கிளைஞரை
நீட்டி அளப்பதோர் கோல். 796

ஒருவனுக்கு கெடுதல் உண்டாவதாலும் ஒருவகை நன்மை உண்டு; அது, நண்பரின் உறவை அளந்து அறியும் அளவுகோலாக அது விளங்குவதுதான்.

ஊதியம் என்பது ஒருவற்குப் பேதையார்
கேண்மை ஒரீஇ விடல். 797

ஒருவனுக்கு ஊதியமாவது யாதென்றால், அறிவற்றவர்களோடு அறியாமல் கொண்ட நட்பினை, அவரைப்பற்றித் தெரிந்த அப்பொழுதிலேயே விட்டுவிடுதல் ஆகும்.

உள்ளற்க உள்ளம் சிறுகுவ கொள்ளற்க
அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு. 798

உள்ளம் சிறுமை கொள்ளும்படி எதனையுமே நண்பனைக் குறித்து எண்ணக்கூடாது; அல்லல் காலத்திலே கைவிட்டுப் போனவர் நட்பையும் விட்டுவிட வேண்டும்.

கெடுங்காலைக் கைவிடுவார் கேண்மை அடுங்காலை
உள்ளினும் உள்ளஞ் சுடும். 799

நாம் கெட்டுப் போன காலத்திலே, நம்மைக் கைவிட்டு விலகிப் போனவரின் நட்பைப் பற்றிச் சாகிற காலத்திலே நினைத்தாலும், நம் உள்ளம் வேதனையால் எரியும்.

மருவுக மாசற்றார் கேண்மைஒன் றீத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு. 800

குற்றம் இல்லாத நல்லோர்களின் நட்பையே கொள்ளவேண்டும்; தகுதியில்லாத கீழோரின் நட்பினை, ஒன்றைக் கொடுத்தாவது விட்டுவிடுதல் வேண்டும்.


81. பழைமை

பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்
கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. 801

‘பழமை என்னும் தொடர்பின் தன்மை யாது?’ என்றால், அது, உண்டாகிய உரிமைத் தொடர்பை எதுவும் சிதைத்து விடாமல் காத்துவரும் நல்ல நட்பு ஆகும்.

நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு
உப்பாதல் சான்றோர் கடன். 802

நட்புக்கு உறுப்பாவது நெருக்கமாகப் பொருந்தும் உரிமைத் தன்மை ஆகும்; அப்படிப்பட்ட உரிமைத் தன்மைக்கு இலக்கணமாக நடத்தல் சான்றோரது கடமை.

பழகிய நட்பெவன் செய்யுங் கெழுதகைமை
செய்தாங்கு அமையாக் கடை. 803

தாம் கொண்ட நெருக்கமான உறவுத் தன்மையானது, தன் நண்பரிடத்திலும் அமைந்திராவிட்டால், அவரோடு நெடுங்காலம் பழகிய நட்பும் என்ன பயனைச் செய்யும்?

விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின். 804

தம்மோடு கொண்ட நெருக்கமான நட்புரிமை காரணமாக, ஒரு செயலைச் செய்துவிட்டாலும், அதனைத் தாமும் விரும்பினவரைப் போல் இருப்பவரே, நல்ல நண்பர்கள்.

பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின். 805

நட்பாகக் கொண்டவர் நாம் மனம் விரும்பாத ஒரு செயலைச் செய்தாரென்றால், அதனை அறியாமை என்று நினைக்கக் கூடாது; நட்புரிமை என்றே நினைக்க வேண்டும்.

எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும்
தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. 806

அறிவுடையவர், தமது தொல்லைகளின் போது உதவியாக நின்றவரின் தொடர்பை, அவர் தொலைவான இடங்களுக்குப் போனாலும் கூடக் கைவிட மாட்டார்கள்.

அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின்
வழிவந்த கேண்மை யவர். 807

அன்பாலே பொருந்திய நட்பை உடையவர்கள், அழிவு வரக்கூடிய ஒரு செயலைச் செய்தாலும், அவர் மீது நாம் கொண்டிருந்த அன்பு அறுந்து போகாது.

கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு
நாளிழுக்கம் நட்டார் செயின். 808

நண்பரின் குற்றங்குறைகளைப் பிறர் சொன்னாலும் கேளாத நட்புரிமை வல்லவர்களுக்கு, நண்பர் குற்றம் செய்தால், அது அந்நாளின் குறையாகவே தோன்றும்.

கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு. 809

கெடுதல் இல்லாத வழியோடு தொடர்ந்து பழகி வந்த நட்பினை எதனாலும் கைவிடாத பண்பினரை, உலகத்தார் எல்லாருமே நண்பராகக் கொள்ள விரும்புவார்கள்.

விழையார் விழையப் படுப பழையார்கண்
பண்பின் தலைப்பிரியா தார். 810

பழமையான நண்பர்களிடத்திலும், சற்றும் விலகாமல் நடந்து கொள்ளும் பண்பினர், தம் பகைவராலும் விரும்பி நட்பாக்கிக் கொள்ளப் படுவார்கள்.


82. தீ நட்பு

பருகுவார் போலினும் பண்பிலார் கேண்மை
பெருகலிற் குன்றல் இனிது. 811

நம்மை அள்ளிப் பருகுவர்போல அன்பு காட்டினாலும், நல்ல பண்பில்லாத தீயோரது நட்பானது, நாளுக்குநாள் பெருகுவதை விடக் குறைந்து போவதே இனியது.

உறின்நட்டு அறின்ஙருஉம் ஒப்பிலார் கேண்மை
பெறினும் இழப்பினும் என்? 812

செல்வம் உண்டானால் நட்புச் செய்தும், அது போனால் விலகியும் போகின்ற, ஒத்த தன்மையில்லாத தீயோரின் நட்பினைப் பெற்றாலும், இழந்தாலும் ஒன்றுதான்.

உறுவது சீர்தூக்கும் நட்பும் பெறுவது
கொள்வாரும் கள்வரும் நேர். 813

தாம் அடைவதையே சீர்தூக்கிப் பார்த்திருக்கும் நட்பும், தாம் பெறுவதைக் கொள்ளும் விலைமகளிரும், நம் பொருளைக் களவாடும் கள்வரும், ஒரே தன்மையினரே!

அமரகத்து ஆற்றறுக்கும் கல்லாமா அன்னார்
தமரின் தனிமை தலை. 814

போர்க்களத்தின் இடையில் நண்பரை விட்டுவிட்டுத் தாம் ஓடிப்போய்விடும், கல்லாத விலங்கு போன்றவரின் நட்பை விடத் தனிமையே மிகவும் சிறந்தது.

செய்தேமஞ் சாராச் சிறியவர் புன்கேண்மை
எய்தலின் எய்தாமை நன்று. 815

நமக்குத் துன்பம் வந்த போது உதவி செய்து காப்பாற்றுவதற்கு வராத சிறுமையாளரது புன்மையான நட்பை அடைதலைவிட, அடையாததே நன்மையாகும்.

பேதை பெருங்கெழீஇ நட்பின் அறிவுடையார்
ஏதின்மை கோடி உறும். 816

பேதையாளனது மிகவும் செறிவான நட்பைக் காட்டிலும் அறிவுடையவர்களின் தொடர்பு இல்லாமல் இருப்பது, ஒருவனுக்கு கோடி நன்மை தருவதாக விளங்கும்.

நகைவகைய ராகிய நட்பின் பகைவரால்
பத்தடுத்த கோடி உறும். 817

வெற்றுரை பேசிச் சிரித்து மகிழ்வதற்கு மட்டுமே பயன்படும் தீயோரின் நட்பைக் காட்டிலும், பகைவராலே, பத்துக் கோடிக்கும் மேலான நன்மை நமக்குக் கிடைக்கும்.

ஒல்லும் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல். 818

நம்மாலே செய்து முடிக்கக் கூடிய செயலையும் செய்யவிடாமல், வீண்பொழுது போக்குபவரது நட்பு உறவை, அவரோடு பேசுவதைக் கைவிட்டு, நீக்கிவிட வேண்டும்.

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு. 819

தம் செயல்கள் வேறாகவும், தம் பேச்சுக்கள் வேறாகவும் நடப்பவரின் தொடர்பானது, நனவில் மட்டுமே அல்லாமல், கனவிலும் கூடத் துன்பமானதாகும்.

எனைத்தும் குறுகுதல் ஓம்பல் மனைக்கெழீஇ
மன்றில் பழிப்பார் தொடர்பு. 820

வீட்டிலுள்ள போது நட்புரிமை பேசிவிட்டு, பொதுமன்றிலே பழித்துப் பேசுபவரின் தொடர்பு, எந்தச் சிறிய அளவுக்கேனும், நம்மை அடையாதபடி காத்தல் வேண்டும்.


83. கூடா நட்பு

சீரிடம் காணின் எறிதற்குப் பட்டடை
நேரா நிரந்தவர் நட்பு. 821

உள்ளத்தால் நெருக்கமில்லாமல் பழகுகிறவரது நட்பானது, நம்மை அழிப்பதற்கான இடம் கண்டால், எறிவதற்கு மறைந்துள்ள பட்டடை போன்றது ஆகும்.

இனம்போன்று இனமல்லார் கேண்மை மகளிர்
மனம்போல வேறு படும். 822

நம் இனத்தார் போலவே உறவுகாட்டி, உள்ளத்திலே நம் இனம் அல்லாத கீழோரின் நட்பானது, விலைமகளிர் மனம் போலப் பெறுகிற பயனுக்குத் தகுந்தபடி மாறிவிடும்.

பலநல்ல கற்றக் கடைத்து மனநல்லர்
ஆகுதல் மாணார்க் கரிது. 823

பலவான நல்ல அறநூல்களை எல்லாம் கற்றிருந்தாலும், தம் மனத்திலே நல்ல பண்பினர் ஆகுதல் என்பது, பெருந்தன்மைப் பண்பு இல்லாதவருக்கு அரிய செயலாகும்.

முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா
வஞ்சரை அஞ்சப் படும். 824

முகத்திலே இனிமை தோன்றச் சிரித்துப் பேசினபோதும் அகத்திலே துன்பத்தையே நினைக்கும் வஞ்சகரின் உறவினை, விளையும் தீமைக்கு அஞ்சி, விட்டு விட வேண்டும்.

மனத்தின் அமையா தவரை எனைத்தொன்றும்
சொல்லினால் தேறற்பாற்று அன்று. 825

மனத்தாலே நம்மோடு நெருக்கம் கொள்ளாதவரை, எந்த ஒருவகையாலும், அவர் சொல்லினால் மட்டுமே நல்ல நண்பராகத் தெளிந்து கொள்ளக் கூடாது.

நட்டார்போல் நல்லவை சொல்லினும் ஒட்டார்சொல்
ஒல்லை உணரப் படும். 826

நம்மிடம் பேசும் போது நமக்கு நண்பரைப் போலவே நல்ல பேச்சுகளைச் சொன்னாலும், நம்மோடு ஒட்டாதவரின் வஞ்சகத்தை விரைவிலேயே அறிந்துவிடலாம்.

சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க வில்வணக்கம்
தீங்கு குறித்தமை யான். 827

வில்லின் விளைவு தீமையைக் குறியாகக் கொண்டதே; இவ்வாறே பகைவரிடத்திலிருந்து வரும் வணக்கமான பேச்சையும் தீமைதரும் என்று தள்ளிவிட வேண்டும்.

தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து. 828

நம்மைத் தொழும்போது கூடப் பகைவரது கையினுள் கொல்வதற்கான படை மறைக்கப்பட்டிருக்கும்; பகைவர் அழுதுவடிக்கும் கண்ணீரும் அந்தத் தன்மையதே!

மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுள் சாப்புல்லற் பாற்று. 829

வெளிப்பட மிகுதியாக நட்புச்செய்து, உள்ளத்திலே நம்மை இகழுகிறவர்களை, நாமும் மகிழ்ச்சியடையச் செய்து, நம் உள்ளத்தில் அந்த நட்பை அழித்துவிடல் வேண்டும்.

பகைநட்பாம் காலம் வருங்கால் முகநட்டு
அகநட்பு ஒரீஇ விடல். 830

பகைவரும் நட்பாகப் பழகுவதற்கு ஏற்ற காலம் வருங்காலத்திலே, அவருடன் முகத்தளவால் நட்புச் செய்து, உள்ளத்தில் போற்றாது நீக்கிவிடுதல் வேண்டும்.


84. பேதைமை

பேதைமை என்பதொன்று யாதெனின் ஏதங்கொண்டு
ஊதியம் போக விடல். 831

‘பேதைமை’ என்பதன் தன்மை யாது?’ என்றால், ஒன்றைச் செய்யும் போது வரும் துன்பத்தை ஏற்றுக் கொண்டு, அதனால் வரும் ஊதியத்தை விட்டுவிடுதல் ஆகும்.

பேதைமையுள் எல்லாம் பேதைமை காதன்மை
கையல்ல தன்கட் செயல். 832

பேதைமை என்பவற்றுள் எல்லாம் பெரிய பேதைமையாவது, விரும்பத்தகாத ஒரு செயலைச் செய்யத் தொடங்கி, அதையும் பொருத்தமற்ற வகையில் செய்தல் ஆகும்.

நாணாமை நாடாமை நாரின்மை யாதொன்றும்
பேணாமை பேதை தொழில். 833

பழிக்கு வெட்கப்படாமையும், நன்மைகளை விரும்பாதிருத்தலும், அன்பரிடம் அன்புகொள்ளாமையும், எதனையும் பேணிக் காவாமையும், பேதையரது தொழிலாகும்.

ஓதி உணர்ந்தும் பிறர் க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல். 834

நூல்களை முறையாக ஓதி உணர்ந்தும், பிறருக்குச் சொல்லி வந்தும், தான் அடக்கத்தைக் கொள்ளாத பேதையிலும், பெரிய பேதையர் உலகில் எவரும் இலர்.

ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான்புக் கழுந்தும் அளறு. 835

இந்தப் பிறப்பில் பேதைமைச் செயல்களையே செய்துவரும் பேதை. தொடர்ந்து வரும் ஏழு பிறப்பினையும், தான் புகுந்து அழுந்தும் நரகங்களாகவே காண்பான்.

பொய்படும் ஒன்றோ புனைபூணும் கையறியாப்
பேதை வினைமேற் கொளின். 836

ஒன்றின் செய்வகை அறியாத பேதை அதனைச் செய்வதற்கு முற்படுவதால், அது பொய்யாகிப் போவதுடன், அவனும் தளைபூண்கின்ற துயரத்தை அடைவான்.

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை. 837

பேதை, தன் முன்வினைப் பயனால் பெருஞ்செல்வத்தை அடைந்த காலத்தில், தொடர்பில்லாத பலரும் நன்றாக அனுபவிக்க, அவன் சுற்றத்தார் பசியால் வாடுவர்.

மையல் ஒருவன் களித்தற்றால் பேதைதன்
கையொன்று உடைமை பெறின். 838

பேதை ஒரு பொருளைத் தனது உடைமையாகப் பெற்றால், மயங்கிய ஒருவன் மேன்மேலும் கள்ளைப் பருகியது போல நிலைமாறி வழிதவறி நடப்பான்.

பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில். 839

ஒருவகையில், பேதையோடு கொள்ளும் தொடர்பும் இனிமை தருவதேயாகும்; அதுதான், அவனைப் பிரிந்த விடத்துத் துன்பம் தரும் தன்மை இல்லாததால்.

கழாஅக்கால் பள்ளியுள் வைத்தற்றால் சான்றோர்
குழாஅத்துப் பேதை புகல். 840

சான்றோர்களின் கூட்டத்தில் ஒரு பேதை புகுதலானது, மாசுபடிந்த காலைக் கழுவாமல், தொழுகைக்குரிய பள்ளியினுள்ளே எடுத்து வைப்பது போன்றதாகும்.


85. புல்லறிவாண்மை

அறிவின்மை இன்மையுள் இன்மை பிறிதின்மை
இன்மையா வையா துலகு. 841

அறிவில்லாத தன்மையே, வறுமையுள் கொடிய வறுமை; பிற, பொருள் இல்லாத வறுமையை உலகம் நிலையான வறுமையாக ஒருபோதும் கருதாது.

அறிவிலான் நெஞ்சுவந்து ஈதல் பிறிதியாதும்
இல்லை பெறுவான் தவம். 842

அறிவில்லாத ஒருவன், மனமகிழ்ச்சியோடு ஒரு பொருளை ஒருவனுக்குத் தருவதென்பது, பெறுவானது தவத்தின் பயனே அல்லாமல், வேறு எதனாலும் இல்லை.

அறிவிலார் தாந்தம்மைப் பீழிக்கும் பீழை
செறுவார்க்கும் செய்தல் அரிது. 843

அறிவில்லாதவர், தமக்குத் தாமே செய்து கொள்ளும் வருத்தம் தரக்கூடிய துன்பங்கள், அவரது பகைவராலும் அவருக்குச் செய்ய முடியாதவையாக இருக்கும்.

வெண்மை எனப்படுவ தியாதெனின் ஒண்மை
உடையம்யாம் என்னும் செருக்கு. 844

‘அறியாமை என்று சொல்லப்படுவது யாது?’ என்றால், அ·து, அறிவில்லாதவனும், ‘தான் அறிவுடையவன்’ என்று நினைத்துச் செருக்கு அடைதலாகும்!

கல்லாத மேற்கொண் டொழுகல் கசடற
வல்லதூஉம் ஐயம் தரும். 845

தான் கல்லாத ஒரு செயலையும், அறிவில்லாததால் துணிந்து செய்யத் தொடங்குதல், எதையும் குறையில்லாமல் செய்யவல்ல செயல்களிலும், ஐயத்தைத் தரும்.

அற்றம் மறைத்தலோ புல்லறிவு தம்வயின்
குற்றம் மறையா வழி. 846

தம்மிடத்திலே உள்ள குற்றங்கள் மறையாதபோது, உடல் முழுவதும் ஆடைகளாலே மறைத்துக் கொண்டு, நல்லவர் போலத் திரிதல், அறிவற்ற தன்மை ஆகும்.

அருமறை சோரும் அறிவிலான் செய்யும்
பெருமிறை தானே தனக்கு. 847

அரியவான மறைகளைக் கற்றும், உண்மைப் பொருளை அறியாமல் சோர்வு அடைகின்ற அறிவில்லாதவன், தனக்குத்தானே பெரிய தீமைகளைச் செய்து கொள்வான்.

ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்
போஒம் அளவுமோர் நோய். 848

அறிவுடையோர் ‘இன்னின்னபடி செய்க’ என்று ஏவிய போதும், அதன்படி செய்யமாட்டாதவன், தானும் தெளியாதவன், உயிர் போகுமளவும் துன்பம் அடைவான்.

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு. 849

தன் அறியாமையால், தான் கண்டபடியே பிறருக்குக் காட்டுபவன், தானும் உண்மை காணாதவன், என்றுமே தான் கண்டபடி காண்பவனாகவே விளங்குவான்.

உலகத்தார் உண்டென்பது இல்லென்பான் வையத்து
அலகையா வைக்கப் படும். 850

உலகத்தார் ‘உண்டு’ என்னும் ஒரு பொருளை, தன்னுடைய அறியாமையாலே ‘இல்லை’ என்று சொல்லுபவன், உலகத்தாரால் பேயாகக் கருதி ஒதுக்கி வைக்கப்படுவான்.


86. இகல்

இகலென்ப எல்லா உயிர்க்கும் பகலென்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய். 851

எல்லா உயிர்களுக்கும், பிற உயிர்களோடு கூடாமை என்னும் தீய குணத்தை வளர்க்கும் குற்றம், ‘இகல்’ என்று பெரியோர்கள் சொல்லியுள்ளார்கள்.

பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை. 852

தம்முடன் கூடாமையை நினைத்து, ஒருவன் வெறுக்கக் கூடியன செய்தானானாலும், அவனோடு மாறுபடுதலைக் குறித்து, அவனுக்குத் துன்பம் செய்யாதிருப்பதே உயர்ந்தது!

இகலென்னும் எவ்வநோய் நீக்கின் தவலில்லாத்
தாவில் விளக்கம் தரும். 853

‘மாறுபாடு’ என்னும் துன்பம் செய்யும் நோயை மனத்தில் இருந்தே நீக்கி விட்டால், அவனுக்கு எந்தக் காலத்திலும் உள்ளவனாகின்ற நிலையான புகழை, அதுவே தரும்.

இன்பத்துள் இன்பம் பயக்கும் இகலென்னும்
துன்பத்துள் துன்பங் கெடின். 854

‘மாறுபாடு’ என்னும் துன்பங்களுள் பெரிதான துன்பம் இல்லையானால், அவ்வின்மையே ஒருவனுக்கு இன்பங்களுள் எல்லாம் சிறந்த இன்பத்தைத் தரும்.

இகலெதிர் சாய்ந்தொழுக வல்லாரை யாரே
மிக்லூக்கும் தன்மை யவர். 855

தம் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய பொழுது, அதனை ஏற்றுக் கொள்ளாமல் சாய்ந்து ஒழுகவல்லவரை வெல்லக் கருதும் தன்மை உடையவர், எவருமே இலர்.

இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து. 856

‘பிறரோடு அவரினும் மிகுதியாக மாறுபடுதல் எனக்கு இனிது’ என்று, அதனைச் செய்பவனது உயிர்வாழ்க்கை, சிறுபொழுதிற்குள் பிழைத்தலும் கெடுதலும் ஆகிவிடும்.

மிகல்மேவல் மெய்ப்பொருள் காணார் இகல்மேவல்
இன்னா அறிவி னவர். 857

இகலோடு பொருந்தும் தீய அறிவினைக் கொண்டவர், வெற்றி பொருந்துதலை உடைய நீதி நூற்களின் பொருள்களை ஒருபோதுமே உணர்ந்து அறிய மாட்டார்கள்.

இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம் அதனை
மிக்லூக்கின் ஊக்குமாம் கேடு. 858

தன் உள்ளத்திலே மாறுபாடு தோன்றிய போது, அதனை எழாமல் தடுத்துக் கொள்ளுதலே ஆக்கம் தருவதாகும்; அதனை மிகுத்துக் கொண்டால் அவனுக்குக் கேடு வரும்.

இகல்காணான் ஆக்கம் வருங்கால் அதனை
மிகல்காணும் கேடு தரற்கு. 859

தனக்கு நல்ல காலம் வரும் போது, காரணமிருந்தாலும் ஒருவன் இகலைப் பற்றி நினைக்க மாட்டான்; தனக்குக் கேடு காலம் வரும் போது பெரிதாக மாறுபடுதலை நினைப்பான்.

இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு. 860

‘மாறுபாடு’ என்னும் ஒன்றினால் ஒருவனுக்கு எல்லாத் துன்பங்களும் உண்டாகும்; நட்புச் செயலினாலோ, நல்ல நீதியாகிய பெருமிதநிலை உண்டாகும்.


87. பகைமாட்சி

வலியார்க்கு மாறேற்றல் ஓம்புக ஓம்பா
மெலியார்மேல் மேக பகை. 861

தம்மை விட வலியவருக்குப் பகையாகி அவரை எதிர்த்தலைக் கைவிடல் வேண்டும்; தம்மினும் மெலியவருக்குப் பகையாவதை விடாமல் கொள்வதற்கு விரும்ப வேண்டும்.

அன்பிலன் ஆன்ற துணையிலன் தான்துவ்வான்
என்பரியும் ஏதிலான் துப்பு. 862

தன் சுற்றத்தாரிடம் அன்பில்லாதவன், வலிய துணையில்லாதவன், தானும் வலிமையற்றவன், பகைவரது வலிமையை எவ்வாறு, எதனால் போக்க முடியும்?

அஞ்சும் அறியான் அமைவிலன் ஈகலான்
தஞ்சம் எளியன் பகைக்கு. 863

அஞ்சுபவன், அறியவேண்டுவதை அறியாதவன், பிறருடன் பொருந்தாதவன், எவருக்கும் கொடுத்து உதவாதவன், பகைவருக்கு அழிப்பதற்கு எளியவனாவான்.

நீங்கான் வெகுளி நிறையிலன் எஞ்ஞான்றும்
யாங்கணும் யார்க்கும் எளிது. 864

நீங்காத சினத்தை உடையவன், நிறைவான மனவலிமை இல்லாதவன் ஆகிய ஒருவன் மீது பகைத்து வெற்றியடைதல், எக்காலத்திலும் எவர்க்கும் எளிதாகும்.

வழிநோக்கான் வாய்ப்பன செய்யான் பழிநோக்கான்
பண்பிலன் பற்றார்க்கு இனிது. 865

நீதி நூல்களைக் கல்லாதவன், அவை விதித்த செயல்களைச் செய்யாதவன், தனக்கு வரும் பழியைப் பாராதவன், பண்பற்றவன், ஆகியவனைப் பகைத்தலும் இனிதாகும்.

காணாச் சினத்தான் கழிபெருங் காமத்தான்
பேணாமை பேணப் படும். 866

தன்னையும் பிறரையும் அறியாமைக்கு காரணமான சினம் கொண்டவன், மேன்மேலும் பெருகும் காமத்தான் பகைமை, பிறரால் விரும்பி ஏற்றுக் கொள்ளப்படும்.

கொடுத்தும் கொளல்வேண்டும் மன்ற அடுத்திருந்து
மாணாத செய்வான் பகை. 867

தொடங்கும்போது உடனிருந்து, பின் கேடுகளைச் செய்பவன் பகைமையை, சில பொருள்களை அழியும்படி கொடுத்தாவது உறுதியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும்.

குணனிலனாய்க் குற்றம் பலவாயின் மாற்றார்க்கு
இனனிலனாம் ஏமாப் புடைத்து. 868

நல்ல குணம் எதுவும் இல்லாதவனாய், குற்றங்களும் பலவாக உள்ளவன், எவ்வகைத் துணையுமே இல்லாதவன் ஆவான்; அப்படி இல்லாததே அவன் பகைவருக்குத் துணையாகும்.

செறுவார்க்குச் சேணிகவா இன்பம் அறிவிலா
அஞ்சும் பகைவர்ப் பெறின். 869

நீதியை அறிதல் இல்லாதவரும் அஞ்சுபவரும் ஆகியவரைப் பெற்றால், அவரைப் பகைத்தவர்க்கு, உயர்ந்த இன்பங்கள் எல்லாம் சென்று நீங்காமல் பொருந்தியிருக்கும்.

கல்லான் வெகுளும் சிறுபொருள் எஞ்ஞான்றும்
ஒல்லானை ஒல்லா தொளி. 870

நீதி நூலைக் கல்லாதவனோடு பகை கொண்டு அழிப்பதனால் வரும் சிறுபொருளை, எப்போதும் தான் அடைவதற்கு நினையாதவனை, வெற்றிப் புகழும் சேர்ந்திருக்காது.


88. பகைத்திறம் தெரிதல்

பகைஎன்னும் பண்பி லதனை ஒருவன்
நகையேயும் வேண்டற்பாற்று அன்று. 871

‘பகை’ என்று கூறப்படும் தீமை தருவதனை, ஒருவன், விளையாட்டிடத்தில் என்றாலும் விரும்புதல் நன்மையாகாது; இதுவே நீதி நூல்களில் முடிந்த முடிப்பாகும்.

வில்லேர் உழவர் பகைகொளினும் கொள்ளற்க
சொல்லேர் உழவர் பகை. 872

வில்லை ஏராகவுடைய உழவரான மறவரோடு பகை கொண்டாலும், சொல்லை ஏராகவுடைய உழவரான நுண்ணறிவை உடையவரோடு பகை கொள்ளக் கூடாது.

ஏமுற் றவரினும் ஏழை தமியனாய்ப்
பல்லார் பகைகொள் பவன். 873

தான் துணைவலிமை இல்லாமல் தனியனாய் இருப்பதறிந்தும், பலருடன் பகைகொண்டு வாழும் அறிவற்றவன், பித்துற்ற மக்களிலும் அறிவிழந்தவன் ஆவான்.

பகைநட்பாக் கொண்டொழுகும் பண்புடை யாளன்
தகைமைக்கண் தங்கிற்று உலகு. 874

தான் வேண்டும் போது, தன் பகைவருள் சிலரைப் பிரித்து நண்பராக்கிக் கொள்ளும் சூழ்ச்சித்திறனுடைய அரசனது பெருமையினுள்ளே, இவ்வுலகமே அடைங்கிவிடும்.

தன்துணை இன்றால் பகையிரண்டால் தான்ஒருவன்
இன்துணையாக் கொள்கவற்றின் ஒன்று. 875

‘தனக்கு ஒரு துணை இல்லை; பகையோ எனில் இரண்டு’ என்னும் போது, அதனுள் ஒன்றை அப்போதைக்குத் தனக்கு இனிய துணையாகுமாறு செய்து கொள்ளல் வேண்டும்.

தேறினும் தேறா விடினும் அழிவின்கண்
தேறான் பகாஅன் விடல். 876

பகைவனை முன்பே தெளிந்தாலும் தெளியாவிட்டாலும், தனக்கு மற்றொரு செயலினாலே தாழ்வு வந்தவிடத்து, அவரைக் கூடாதும் நீக்காதும், விட்டு வைக்க வேண்டும்.

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க
மென்மை பகைவர் அகத்து. 877

தான் நொந்ததைத் தாமாகவே அறியாத நண்பருக்குச் சொல்ல வேண்டாம்; வலியிழந்த நேரத்தை எதிர்பார்க்கும் பகைவரிடம் தன் மெலிவையும் புலப்படுத்த வேண்டாம்.

வகையறிந்து தற்செய்து தற்காப்ப மாயும்
பகைவர்கண் பட்ட செருக்கு. 878

தான் செய்யும் செயலின் வகையை அறிந்து, அது முடிவதற்கு ஏற்றபடி தன்னைப் பெருக்கிச் சோம்பல் புகாமல் காக்கவே, பகைவரிடம் உள்ள செருக்குத் தானே தேய்ந்துவிடும்.

இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
கைகொல்லும் காழ்த்த இடத்து. 879

களைய வேண்டிய முள்மரத்தை அது இளைதான பொழுதே களைந்து விடுக; முதிர்ந்த பின் அதைக் களைதலைச் செய்தால், அது களைபவர் கையினைத் தான் களைந்துவிடும்.

உயிர்ப்ப உளரல்லர் மன்ற செயிர்ப்பவர்
செம்மல் சிதைக்கலா தார். 880

பகைவரின் செருக்கைக் கெடுக்கும் வாய்ப்பு வந்த போதும், அவர் மீதுள்ள இகழ்ச்சியால் அதனைச் செய்யாத அரசர், பின்னர், உயிரோடு இருப்பதற்கு உரியவர் ஆகார்.


89. உட்பகை

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்
இன்னாவாம் இன்னா செயின். 881

நிழலும் நீரும் நுகரும் காலத்தில் இன்பமானாலும், பின்னர் நோய் செய்யும்; தழுவவேண்டும் சுற்றத்தாரின் இயல்புகளும் முதலில் இனியவாயினும், பின்னர் இன்னாதனவாகும்.

வாள்போல பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு. 882

வாளைப் போல வெளிப்பட்டு நிற்கும் பகைவர்க்கு அஞ்ச வேண்டாம்; சுற்றத்தார் போல அன்புகாட்டி உள்ளத்தில் பகைமறைத்து நிற்பவருக்கே, அஞ்ச வேண்டும்.

உட்பகை அஞ்சித்தற் காக்க உலைவிடத்து
மட்பகையின் மாணத் தெறும். 883

உட்பகையாக விளங்குபவருக்கு அஞ்சித் தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும்; அங்ஙனம் காவாதிருப்பின், தனக்குத் தளர்ச்சி வந்த போது, அவர்கள் கெடுதல் செய்வார்கள்.

மனமாணா உட்பகை தோன்றின் இனமாணா
ஏதம் பலவும் தரும். 884

உள்ளத்தில் திருந்தாத உட்பகை தோன்றினால், அரசன் அதனை அப்போதே ஒழிக்க வேண்டும்; இல்லையானால், அ·து சுற்றம் வசமாகாதபடி குற்றங்களைத் தந்துவிடும்.

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும். 885

புறத்தே உறவு முறைத் தன்மையோடு பழகுவாரிடம் உட்பகை தோன்றினால், அ·து, அவனுக்கு இறத்தல் முறைமையோடு கூடிய பல குற்றங்களையும் தரும்.

ஒன்றாமை ஒன்றியார் கட்படின் எஞ்ஞான்றும்
பொன்றாமை ஒன்றல் அரிது. 886

தனக்கு உட்பட்டவர் இடத்திலேயே பகைமை தோன்றினால், தனக்குச் சாவாதிருப்பது கைகூடுவது என்பதும் எக்காலத்திலும் அரியதாகும்.

செப்பின் புணர்ச்சிபோல் கூடினும் கூடாதே
உட்பகை உற்ற குடி. 887

செப்பின் புணர்ச்சி போல வெளிப்பார்வைக்குப் பொருந்தினவர் ஆயினும், உட்பகை உண்டாகிய குடியிலுள்ளவர்கள் தம் உள்ளத்தினாலே ஒன்று கூட மாட்டார்கள்.

அரம்பொருத பொன்போலத் தேயும் உரம்பொருது
உட்பகை உற்ற குடி. 888

முன் உயர்ந்து வளர்ந்ததே என்றாலும், உட்பகையுள்ள குடியானது, அரத்தினால் அராவப்பட்ட இரும்பைப் போல் நாளுக்கு நாள் தேய்ந்து அழிந்து போகும்.

எட்பக வன்ன சிறுமைத்தே ஆயினும்
உட்பகை உள்ளதாங் கேடு. 889

ஒருவனது உட்பகை, அவன் பெருமையை நோக்க, எள்ளின் பிளவு போன்று சிறிதானது என்றாலும், அதனாலும், அவன் பெருமை எல்லாம் பின் காலத்தில் கெட்டுவிடும்.

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று. 890

மனம் பொருந்தாதவரோடு கூடியிருந்து வாழும் வாழ்க்கை ஒரு குடிசையுள்ளே பாம்போடு கூடத் தங்கியிருந்து வருந்துவதைப் போன்றதாகும்.


90. பெரியாரைப் பிழையாமை

ஆற்றுவார் ஆற்றல் இகழாமை போற்றுவார்
போற்றலுள் எல்லாம் தலை. 891

மேற்கொண்ட செயல்களை முடிக்கவல்லவரின் ஆற்றல்களை ஒதுக்கக் கூடாது; அதுவே தீங்கு வராமல் காப்பவரின் காவல்களுள் எல்லாம், மிகச் சிறந்தது ஆகும்.

பெரியாரைப் பேணாது ஒழுகிற் பெரியாரால்
பேரா இடும்பை தரும். 892

பெரியோர்களை நன்கு மதிக்காமல் நடந்தால், அப்பெரியோரால் அவருக்கு எவ்விடத்தும் நீங்காத துன்பங்களை அது கொடுத்துவிடும்.

கெடல்வேண்டின் கேளாது செய்க அடல்வேண்டின்
ஆற்று பவர்கண் இழுக்கு. 893

தான் விரும்பிய பொழுதிலேயே பகையரசரைக் கொல்லவல்ல வேந்தரிடத்தே, தான் கெடுதலை வேண்டுபவன், நீதி நூலைக் கடந்து பிழைகளைச் செய்வானாக!

கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். 894

மூவகை ஆற்றலும் உள்ளவருக்கு, அவை இல்லாதவர் துன்பத்தைச் செய்தல், தானே வரக்கூடிய கூற்றுவனை முற்பட வருமாறு, கைகாட்டி அழைப்பதைப் போலாகும்.

யாண்டுச் சென்று யாண்டும் உளராகார் வெந்துப்பின்
வேந்து செறப்பட் டவர். 895

பகைவருக்கு வெய்யதான வலி மிகுந்த, வேந்தனால் தாக்கப்பட்ட அரசர், தப்பிப் பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர்பிழைத்திருக்கவே மாட்டார்கள்.

எரியால் சுடப்படினும் உய்வுண்டாம் உய்யார்
பெரியார்ப் பிழைத்தொழுகு வார். 896

காட்டினுள் சென்றவன், காட்டுத் தீயால் சுடப்பட்டாலும், ஒருவழியாக உயிர்பிழைத்து எவ்விடத்துச் சென்றாலும், எங்கும் உயிர் பிழைத்திருக்கவே மாட்டார்கள்.

வகைமாண்ட வாழ்க்கையும் வான்பொருளும் என்னாம்
தகைமாண்ட தக்கார் செறின். 897

சாபமிடுதலும் அருள்செய்தலும் ஆகிய தகுதிகளால் சிறந்த தவத்தோர் சினங்கொண்டால், பலவகையாலும் சிறந்த வாழ்க்கையும், பெரும்பொருளும் அழிந்து விடும்.

குன்றன்னார் குன்ற மதிப்பின் குடியொடு
நின்றன்னார் மாய்வர் நிலத்து. 898

குன்றுபோலத் தவநெறியால் உயர்ந்தவர்கள் கெடவேண்டும் என்று நினைப்பார்களானால், தம் குடியோடு நிலைபெற்றார் போன்ற பெருஞ்செல்வரும், மாய்வார்கள்.

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும். 899

உயர்ந்த விரத வாழ்வைக் கொண்டவர்கள் சீற்றம் அடைந்தால், இந்திரன் போன்ற வாழ்க்கையுடையவனும், அப்போதே அழிந்து போய்விடுவான்.

இறந்தமைந்த சார்புடையர் ஆயினும் உய்யார்
சிறந்தமைந்த சீரார் செறின். 900

மிகவும் பெரிய தவத்தை உடையவர் சினங்கொண்டாரானால், மிகப்பெரிய சார்பு உடையவரானாலும் உய்ய மாட்டார்கள்; அப்போதே அழிவார்கள்.


91. பெண்வழிச் சேறல்

மனைவிழைவார் மாண்பயன் எய்தார் வினைவிழையார்
வேண்டாப் பொருளும் அது. 901

தன் மனையாள் விரும்புகிறபடியே வாழ்கின்றவர், சிறந்த அறப்பயன்களையும் அடையார்; பொருள் செய்தலுக்கு முற்படுகின்றவர் இகழ்ந்து ஒதுங்கும் பொருளும் அதுவே.

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும். 902

தன் ஆண்மையைப் பேணாது, மனையாளது பெண்மையையே விரும்புகிறவன் செல்வம், இவ்வுலகத்து ஆண்பாலர்க்குப் பெரியதோர் நாணமாக வெட்கம் தரும்.

இல்லாள்கண் தாழ்ந்த இயல்பின்மை எஞ்ஞான்றும்
நல்லாருள் நாணுத் தரும். 903

தன் இல்லாளிடத்தே தாழ்ந்து போவதற்கு ஏதுவான ஒருவனது அச்சம், அ·து இல்லாத நல்லோர்களிடையே செல்லும் காலத்தில், எப்போதும் நாணத்தையே தரும்.

மனையாளை அஞ்சும் மறுமையி லாளன்
வினையாண்மை வீறெய்த லின்று. 904

தன் மனையாளுக்கு அஞ்சி வாழும் மறுமைப்பயனை இல்லாத ஒருவனுக்கு, செயலைச் செய்யும் செயலாண்மை இருந்த போதிலும், அது நல்லோரால் மதிக்கப் படாது.

இல்லாளை அஞ்சுவான் அஞ்சுமற் றெஞ்ஞான்றும்
நல்லார்க்கு நல்ல செயல். 905

தன் மனையாளுக்கு எப்போதும் அஞ்சுகின்றவன், தான் தேடிய பொருளேயானாலும், அதனால் நல்லவர்களுக்கு நல்ல செயல் செய்வதற்கும் அச்சங் கொள்வான்.

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர். 906

தன் இல்லாளின் மூங்கில் போன்ற தோளைக் கண்டதும் அஞ்சுகிறவர்கள், வீரத்தால் சுவர்க்கம் பெற்ற அமரரைப் போல வாழ்ந்தாரானாலும், ஆண்மையற்றவரே.

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து. 907

தன் இல்லாள் ஏவியபடியே செய்து திரிகின்ற ஒருவனது ஆண் தன்மையைக் காட்டிலும், நாணத்தையுடைய அவளது பெண் தன்மையே மேலானதாகும்.

நட்டார் குறைமுடியார் நன்றாற்றார் நன்னுதலாள்
பெட் டாங்கு ஒழுகு பவர். 908

தம் மனையாள் விரும்பிய படியே நடப்பவர்கள், தம்முடைய நண்பர்களின் குறைகளைத் தீர்க்கமாட்டார்கள்; மறுமைக்கு உதவும் எந்த அறத்தையுமே செய்ய மாட்டார்கள்.

அறவினையும் ஆன்ற பொருளும் பிறவினையும்
பெண்ஏவல் செய்வார்கண் இல். 909

அறச்செயலும், அது முடிப்பதற்கு ஏதுவான பொருளைச் செய்தலும், பிறவான இன்பச் செயல்களும், தம் மனையாள் ஏவலைச் செய்வாரிடத்தில் உள்ளனவாகா.

எண்சேர்ந்த நெஞ்சத் திடனுடையார்க்கு எஞ்ஞான்றும்
பெண்சேர்ந்தாம் பேதைமை இல். 910

கருமச் சூழ்ச்சிக்கண் சென்ற நெஞ்சமும், அதனால் ஆகிய செல்வமும் உடைய வேந்தர்க்கு, மனையாளைச் சேர்ந்து நடப்பதனால் உண்டாகும் பேதைமை உண்டாகாது.


92. வரைவின் மகளிர்

அன்பின் விழையார் பொருள்விழையும் ஆய்தொடியார்
இன்சொல் இழுக்குத் தரும். 911

அன்பால் விரும்பாமல், அவன் தரும் பொருளையே விரும்பும் மகளிரது, அவனையே அன்பால் விரும்பியது போலப் பேசும் பேச்சும், அவனுக்குப் பின்னர்த் துன்பம் தரும்.

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல். 912

ஒருவனிடமுள்ள பொருளின் அளவை அறிந்து, அதனை அடையும் வரை பண்பைப் பற்றிப் பேசும் பண்பில்லாத மகளிரது நடத்தையை, ஆராய்ந்து விட்டு விடுக.

பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
ஏதில் பிணந்தழீஇ அற்று. 913

கொடுக்கும் பொருளையே விரும்பும் பொது மகளிரது பொய்யான முயக்கமானது, பிணம் எடுப்பவர் இருட்டறையில் முன் அறியாத பிணத்தைத் தழுவியது போலாகும்.

பொருட்பொருளார் புன்னலந் தோயார் அருட்பொருள்
ஆயும் அறிவி னவர். 914

இன்பமாகிய பொருளை இகழ்ந்து, பொருளையே விரும்பும் பொதுமகளிரது இழிந்த இன்பத்தை, அருளோடு கூடிய பொருளை ஆராய்ந்து செய்யும் அறிவாளர் விரும்பார்.

பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
மாண்ட அறிவி னவர். 915

இயற்கையான மதிநலத்தால் மாட்சிமைப்பட்ட அறிவினை உடையவர்கள், பொருள் தருவார்க்கெல்லாம் பொதுவான ஆசைகாட்டும் மகளிரது இழிவான நலத்தைத் தீண்டார்.

தந்நலம் பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள். 916

தம் அழகால் செருக்கடைந்து, தம் புன்மையான நலத்தை, விலை தருவாரிடம் எல்லாம் பரப்பும் பொது மகளிர் தோளினை, தம் புகழை நினைக்கும் உயர்ந்தோர் தீண்டமாட்டார்.

நிறைநெஞ்சம் இல்லவர் தோய்வார் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள். 917

நெஞ்சிலே பொருள் மேல் ஆசைகொண்டு, அதைப் பெறக் கருதிப் பொருள் தருபவரோடு உடலால் கூடியிருக்கும் மகளிரது தோள்களை, நெஞ்சமில்லாதவர்களே சேர்வர்.

ஆயும் அறிவினர் அல்லார்க்கு அணங்கென்ப
மாய மகளிர் முயக்கு. 918

வஞ்சித்தலில் வல்ல மகளிரது முயக்கத்தை, அவ் வஞ்சனையை ஆராய்ந்து அறியும் அறிவுடையவர் அல்லாத பிறருக்கு, ‘அணங்குத் தாக்கு’ என்று சொல்வார்கள்.

வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு. 919

உயர்ந்தோர் இழிந்தோர் என்னும் எவரையும், விலை தந்தால் தழுவுகிற மகளிரது மெல்லிய தோள்கள், அறிவில்லாத கீழ்மக்கள் புகுந்து அழுந்தும் நரகம் ஆகும்.

இருமனப் பெண்டிரும் கள்ளும் கவறும்
திருநீக்கப் பட்டார் தொடர்பு. 920

எப்போதும் கவர்த்த மனத்தையுடைய மகளிரும், கள்ளும், சூதும், என்னும் மூன்று தொடர்புகளும், திருமகளால் கைவிடப்பட்டவருக்கு நெருங்கிய நட்பு ஆகும்.


93. கள்ளுண்ணாமை

உட்கப் படாஅர் ஒளியிழப்பர் எஞ்ஞான்றும்
கட்காதல் கொண்டொழுகு வார். 921

கள்ளின் மேல் ஆசை கொண்ட அரசர்கள், எக்காலத்திலும் பகைவரால் அஞ்சப்படார்; தம் முன்னோரால் அடைந்திருந்த புகழ் என்னும் ஒளியையும் இழந்து விடுவார்கள்.

உண்ணற்க கள்ளை உணில்உண்க சான்றோரான்
எண்ணப் படவேண்டா தார். 922

அறிவை மயக்கும் கள்ளை அறிவுடையோர் உண்ணாது விடுவாராக; நல்லவரால் எண்ணப்படுதலை வேண்டாதவர் மட்டுமே விரும்பினால் கள்ளை உண்பாராக!

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி. 923

எது செய்தாலும் உவப்படையும் தாயின் முன்பும் கள்ளுண்டு களித்தல் இன்னாததாகும்; அவ்வாறானால், குற்றம் எதனையுமே பொறாத சான்றோர்களின் முன் என்னவாகும்.

நாண்என்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ளென்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு. 924

‘கள்’ என்னும் யாவரும் இகழும் பெருங்குற்றத்தை உடையவரை, ‘நாண்’ என்று சொல்லப்படுகின்ற உயர்ந்தவள், பார்ப்பதற்கும் அஞ்சி முகத்தைத் திருப்பிக் கொள்வாள்.

கையறி யாமை உடைத்தே பொருள்கொடுத்து
மெய்யறி யாமை கொளல். 925

தன் கைப்பொருளைக் கொடுத்துத் தன்னுடலை மறக்கும் அறியாமையைக் கொள்ளுதல், அவன் பழவினைப் பயனையே தனக்குக் காரணமாக உடையதாகும்.

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர். 926

உறங்கினவர், அறிவிழந்திருப்பதால் செத்தாரினும் வேறானவர் அல்லர்; அவ்வாறே கள்ளுண்பவரும் எப்போதும் நஞ்சு உண்டவரின் வேறானவர் அல்லர்.

உள்ளொற்றி உள்ளூர் நகப்படுவர் எஞ்ஞான்றும்
கள்ளொற்றிக் கண்சாய் பவர். 927

கள்ளை மறைவாக உண்டு, அதன் களிப்பினாலே தம் அறிவை இழந்தவர்கள், உள்ளூரில் வாழ்பவரால், அவர் மறைவை அறிந்து எள்ளி நகையாடப் படுவர்.

களித்தறியேன் என்பது கைவிடுக நெஞ்சத்து
ஒளித்ததூஉம் ஆங்கே மிகும். 928

கள்ளை உண்டபொழுதே, முன் ஒளித்த குற்றம் மிகுதியாக வெளிப்படுமாதலால், மறைவாகக் கள்ளை உண்டு, ‘யான் உண்டு அறியேன்’ என்று பொய் கூறுவதைக் கைவிடுக.

களித்தானைக் காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று. 929

கள்ளுண்டு களித்தவனைக் காட்டி ‘இ·து நினைக்கும் ஆகாது’ என்று கூறித் தெளிவித்தல், நீரினுள் மூழ்கினான் ஒருவனை விளக்கினால் தேடுவதைப் போல் முடியாத செயலாகும்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு. 930

கள்ளுண்பவன், தானுண்ணாதபோது, உண்டு களித்த பிறனைக் காண்பான் அல்லவோ! அப்படிக் காணும் போது, தன் நிலையும் இப்படித்தான் என்று நினைக்க மாட்டானோ?


94. சூது

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம்
தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று. 931

தான் வெல்பவன் ஆனாலும் சூதாடலை விரும்ப வேண்டாம். அவ் வெற்றியால் வரும் பொருளும், தூண்டில் இரும்பினை இரையென்று நினைத்து மீன் விழுங்கினாற் போன்றதே.

ஒன்றெய்தி நூறிழக்கும் சூதர்க்கும் உண்டாங்கொல்
நன்றெய்தி வாழ்வதோர் ஆறு. 932

பெறுவோம் என்னும் ஆசையால் நூற்றுக்கணக்காக இழந்து வறியவராகும் சூதருக்கும், பொருளால் நன்மைகளை அடைந்து வாழ்கின்ற நெறியும் ஒன்று உளதாகுமோ?

உருளாயம் ஓவாது கூறின் பொருளாயம்
போஒய்ப் புறமே படும். 933

உருளும் சுவற்றின் மீது கட்டப்படும் பந்தயப் பொருளை இடைவிடாது சொல்லிச் சூதாடுமாயின், ஈட்டிய பொருளும், வருவாயும் எல்லாம் எதிரிகளிடம் போய்ச் சேர்ந்துவிடும்.

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல். 934

தன்னை விரும்பியவருக்குப் பலவகைத் துன்பங்களையும் செய்து அவரிடமுள்ள புகழையும் கெடுக்கும் சூதைப் போல், வறுமையைத் தரக்கூடியது வேறு எதுவும் இல்லை.

கவறும் கழகமும் கையும் தருக்கி
இவறியார் இல்லாகி யார். 935

முன்காலத்திலே செல்வம் உடையவராயிருந்தும், தற்போது இல்லாதவரானவர்கள், சுவற்றினையும், அ·தாடும் களத்தினையும், கைத்திறனையும், மேற்கொண்டு விடாதவரே.

அகடாரார் அல்லல் உழப்பர்சூ தென்னும்
முகடியான் மூடப்பட் டார். 936

சூதென்னும் முகடியினாலே விழுங்கப்பட்டவர்கள், இம்மையிலே வயிறார உணவைப் பெறுவதுடன், மறுமையில் நரகத் துன்பத்திலும் சிக்கி வருந்துவார்கள்.

பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும்
கழகத்துக் காலை புகின். 937

நல்லது செய்வதற்கு என்னும் காலமானது சூதாடு களத்தில் கழியுமானால், அது, தொன்று தொட்டு வந்த அவன் செல்வத்தையும் நல்ல பண்புகளையும் கெடுத்துவிடும்.

பொருள் கெடுத்துப் பொய்மேற் கொளீஇ அருள்கெடுத்து
அல்லல் உழப்பிக்கும் சூது. 938

பொருளையும் கெடுத்து, பொய்யை மேற்கொள்ளச் செய்து, அருளையும் கெடுத்து, சூதானது, ஒருவனை இருமையும் துன்பத்திலே ஆழ்த்தி விடும்.

உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின். 939

சூதாடலை வேடிக்கை என்று கருதிச் செய்வானானாலும், ஒளியும் கல்வியும் செல்வமும் ஊணும் உடையும் என்னும் இவை ஐந்துமே, அவனை அடையாமற் போய்விடும்.

இழத்தொறூஉம் காதலிக்கும் சூதேபோல் துன்பம்
உழத்தொறூஉம் காதற்று உயிர். 940

இழக்கும் போதெல்லாம், மேன்மேலும் விருப்பங் கொள்ளுகின்ற சூதனைப் போல், உடம்பும் துன்பத்தால் வருந்த வருந்த மேன்மேலும் அதனை விரும்பும்.


95. மருந்து

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று. 941

ஒருவனுடைய உணவும் செயல்களும் அளவுக்கு மேல் கூடினாலும், குறைந்தாலும், மருத்துவ நூலோர் வாதம் முதலாக எண்ணி வகுத்த மூன்றும் நோயைச் செய்யும்.

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின். 942

முன் உண்டது செரித்ததைத் தெளிவாக அறிந்து, அதன் பின்னரே உண்பானானால், அவனுடைய உடலுக்கு ‘மருந்து’ என்னும் எதுவுமே வேண்டாம்.

அற்றால் அறவறிந்து உண்க அ·துடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு. 943

முன்னுண்டது அற்றபின், உண்பதனையும் அளவாக உண்ண வேண்டும்; அதுவே பெறுவதற்கரியதான இந்த மானிட யாக்கையை நெடுங்காலத்திற்குக் காப்பாற்றும் வழி.

அற்றது அறிந்து கடைப்பிடித்து மாறல்ல
துய்க்க துவரப் பசித்து. 944

முன்னுண்டது அற்றதை அறிந்து, மிகவும் பசித்து, உடலிலே மாறுபாட்டைச் செய்யாத உனவுகளைத் தெரிந்தெடுத்து, உண்டு வருதல் வேண்டும்.

மாறுபாடு இல்லாத உண்டி மறுத்துண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு. 945

உடலுக்கு மாறுபாட்டைச் செய்யாத உணவையும், தன் மனம் விரும்பியபடி அல்லாமல் நோய் வராத அளவினாலே உண்பானானால், அவனுக்குப் பிணிகளால் துன்பமில்லை.

இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய். 946

அளவுக்குச் சிறிது குறைவாகவே உண்பவனிடம் இன்பம் நீங்காமல் நிற்பது போல, அளவுக்கு மிகுதியாக உண்பவனிடம் நோயும் நிலைத்து நிற்கும்.

தீயள வன்றித் தெரியான் பெரிதுண்ணின்
நோயள வின்றிப் படும். 947

பசித் தீயின் அளவாலே அல்லாமல், காலமும் அளவும் அறியாதபடி பெருமளவு உண்டானானால், அவனிடத்திலே எல்லையில்லாமல் நோய்களும் வளரும்.

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல். 948

குணங்குறிகளால் நோயைத் துணிந்து, அதன் காரணத்தையும் தெளிந்து, தீர்க்கும் வழியையும் அறிந்து, செய்வகை பிழையாமல் மருத்துவம் செய்ய வேண்டும்.

உற்றான் அளவும் பிணியளவும் காலமும்
கற்றான் கருதிச் செயல். 949

மருத்துவத்தைக் கற்றறிந்தவன், நோயாளியின் சக்தியையும், நோயின் தன்மையையும், காலத்தின் இயல்பையும், நன்கு கருதிப் பார்த்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வானென்று
அப்பால் நாற் கூற்றே மருந்து. 950

பிணிக்கு மருந்தாவது, பிணியுற்றவன், அதனைத் தீர்க்கும் மருத்துவன், அவனுக்கு உதவும் மருந்துகள், அதனை இயற்றுபவன் என்னும் நான்கு பாகுபாடு உடையதாம்.


ஒழிபியல்

96. குடிமை

இற்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு. 951

செம்மையும் நாணமும் ஒன்று சேர்ந்து பொருந்தி விளங்குதல் என்பது, நல்லகுடியிற் பிறந்தவரிடம் இல்லாமல் பிறரிடத்தில் அவரது இயற்கையாக அமைந்திருப்பதில்லை.

ஒழுக்கமும் வாய்மையும் நாணும் இம் மூன்றும்
இழுக்கார் குடிப்பிறந் தார். 952

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிக்கு உரிய நல்ல ஒழுக்கங்கள், வாய்மை காத்தல், பழிக்கு அஞ்சி நாணுதல் என்னும் மூன்றிலும், ஒரு போதுமே தவறமாட்டார்கள்.

நகைஈகை இன்சொல் இகழாமை நான்கும்
வகையென்ப வாய்மைக் குடிக்கு. 953

எக்காலமும் திரிபில்லாத குடியில் பிறந்தவர்களுக்கு வறியவரிடம் முகமலர்ச்சியும், உவப்போடு தருதலும், இன்சொல் உரைத்தலும், இகழாமையும் உரியவாம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர். 954

பலவாக அடுக்கிய கோடி அளவுக்குப் பொருள் பெற்றாலும், நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் குடிப்பெருமைக்குக் குறைவான எதனையும் செய்ய மாட்டார்கள்.

வழங்குவ துள்வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
பண்பில் தலைப்பிரிதல் இன்று. 955

தொன்றுதொட்டே வருகின்ற பழங்குடியிலே பிறந்தவர்கள், தாம் கொடுத்து உதவும் பொருள் சுருங்கிய போதும், தம் பண்பிலே குறைய மாட்டார்கள்.

சலம்பற்றிச் சால்பில செய்யார்மா சற்ற
குலம்பற்றி வாழ்துமென் பார். 956

‘வசையில்லாமல் வருகின்ற நம் குடி மரபினோடு ஒத்து வாழக் கடவோம்’ என்று கருதி வாழ்பவர்கள், வறுமையிலும் தகுதி குறைந்ததைச் செய்ய மாட்டார்கள்.

குடிப்பிறந்தார் கண்விளங்கும் குற்றம் விசும்பின்
மதிக்கண் மறுப்போல் உயர்ந்து. 957

உயர் குடியிலே பிறந்தவர்களிடம் தோன்றும் குற்றம், அளவால் சிறிதானாலும், விசும்பிடத்து மதியிலே தோன்றும் மறுவைப் போல உலகத்தாரால் அறியப்படும்.

நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும். 958

குடிச்சிறப்போடு வருகின்றவனிடத்தே அருளில்லாத தன்மை தோன்றிற்றானால், அவனை அக் குடிப்பிறப்பு உடையவன் தானோ என்று கருதி உலகம் ஐயப்படும்.

நிலத்தில் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்தில் பிறந்தார்வாய்ச் சொல். 959

நிலத்தின் இயல்பினை அதனிடம் முளைத்த முளை காட்டும்; அவ்வாறே, நல்ல குலத்தில் பிறந்தவர்களது இயல்பினை அவர் வாய்ச்சொற்கள் எடுத்துக் காட்டும்.

நலம்வேண்டின் நாணுடைமை வேண்டும் குலம்வேண்டின்
வேண்டுக யார்க்கும் பணிவு. 960

ஒருவன், தனக்கு நன்மைகளை விரும்பினால் பழிக்கு நாணம் உடையவனாதலை விரும்ப வேண்டும்; குலனுடைமையை விரும்பினால், பணிவோடு நடத்தல் வேண்டும்.


97. மானம்

இன்றி அமையாச் சிறப்பின ஆயினும்
குன்ற வருப விடல். 961

மிகவும் இன்றியமையாத சிறப்புக்களை உடையவாயினும், உயர்குடியில் பிறந்தவர், தாழ்ச்சி வரும்படியான செயல்களைச் செய்யாமல் விட வேண்டும்.

சீரினும் சீரல்ல செய்யாரே சீரொடு
பேராண்மை வேண்டு பவர். 962

தமக்குச் சிறப்பையே தருமானாலும், தம் குடியின் சிறப்புக்குப் பொருந்தாத செயல்களை, புகழும் மானமும் நிலைப்பதை விரும்புகிறவர்கள் செய்ய மாட்டார்கள்.

பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
சுருக்கத்து வேண்டும் உயர்வு. 963

உயர் குடியிலே பிறந்தவர்களுக்கு, நிறைந்த செல்வம் உண்டானபோது, பணிவுடைமை வேண்டும்; செல்வம் சுருங்கி வறுமை உண்டாகும்போது உயர்வு வேண்டும்.

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை. 964

நல்ல குடியிலே பிறந்தவர்கள், தம் உயர்வான நிலையை விட்டுத் தாழ்ந்த விடத்து, தலையைவிட்டு அகன்று விழுந்த மயிரைப் போல இழிவு அடைவார்கள்.

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி அனைய செயின். 965

குடிப்பிறப்பாலே குன்று போல உயர்ந்த பெருமையை அடைந்தவர்களும், குன்றியளவு தகுதியற்ற செயல்களைச் செய்தாரானால் தாழ்ச்சி அடைவார்கள்.

புகழ்இன்றால் புத்தேள்நாட்டு உய்யாதால் என்மற்று
இகழ்வார்பின் சென்று நிலை. 966

தன்னை இகழ்பவர்களின் முன்பாக மானமிழந்து நிற்கும் நிலைமை புகழையும் தராது. மற்றும் புத்தேளிர் நாட்டிலும் கொண்டுபோய்ச் சேராது; அதனால் என்ன பயன்?

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று. 967

தன்னை இகழ்பவரின் பின்னே சென்று பொருள் பெற்று, அதனால் உயிர்வாழ்தலைவிட, இறந்தவன் என்று சொல்லப் படுதலே ஒருவனுக்கு நன்மை ஆகும்.

மருந்தோமற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து. 968

தம் குடிக்குரிய பெருந்தன்மை அழியும் நிலையில், தான் இறந்து போகாமல், மானம்விட்டு உடம்பைக் காப்பது பிறவிப் பிணிக்கு ஏற்ற மருந்தாகுமோ?

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின். 969

தன் ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமானைப் போன்றவர்கள், மானம் இழந்து உயிரைக் காக்கும் நிலைமை வந்தால், அப்போதே உயிரை விட்டுவிடுவார்கள்.

இளிவரின் வாழாத மானம் உடையார்
ஒளிதொழுது ஏத்தும் உலகு. 970

தமக்கு ஓர் இழிவு வந்த போது உயிரை விட்டு விட்ட மானமுள்ளவரது புகழ்வடிவினை, எக்காலத்திலும் உலகத்தார் கைதொழுது போற்றித் துதிப்பார்கள்.


98. பெருமை

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அ·திறந்து வாழ்தும் எனல். 971

ஒருவனுக்குப் பெருமை, ‘பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்’ என்னும் மனவூக்கமே; இழிவாவது, ‘அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்’ என்று நினைப்பதாகும்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 972

எல்லா மக்களுயிர்க்கும் பிறப்பியல்பு சமமானதே; தொழில் வேறுபாட்டால் பெருமை சிறுமை என்னும் சிறப்பியல்புகள் தாம் ஒரு போதும் ஒத்திருப்பதில்லை.

மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர் கீழிருந்தும்
கீழல்லார் கீழல் லவர். 973

செயற்கரிய செய்யாத சிறியவர் உயர்ந்த ஆசனங்களிலே வீற்றிருந்தாலும் பெரியவர் ஆகார்; அச்செயல்களைச் செய்த பெருமையினர் தரையில் நின்றாலும் சிறியவராகார்.

ஒருமை மகளிரே போலப் பெருமையும்
தன்னைத்தான் கொண்டொழுகின் உண்டு. 974

கவராத மனத்தையுடைய மகளிர், நிறையிலே வழுவாமல் தம்மைத் தாமே காத்து ஒழுகுதலைப் போல, பெருமையும், தன்னைத்தான் காப்பவனிடமே உளதாகும்.

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை உடைய செயல். 975

பெருமை உடையவர்கள், தாம் வறுமையான போதும், பிறரால் செய்வதற்கு அருமையான தம் செயல்களை விடாமல் செய்து முடிக்கும் வலிமை கொண்டவராவர்.

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப்
பேணிக் கொள் வேம் என்னும் நோக்கு. 976

‘இத்தகையவரான பெரியோரை வழிபட்டு அவரியல்பை நாமும் அடைவோம்’ என்னும் நல்ல நோக்கம், மற்றைச் சிறியார் மனத்தில் ஒரு போதும் உண்டாகாது.

இறப்பே புரிந்த தொழிற்றாம் சிறப்புந்தான்
சீரல் லவர்கண் படின். 977

தகுதியான பெரியாரிடம் அமைந்திருக்கும் சிறப்பு, பொருந்தாத சிரியவர்களிடத்தேயும் சேருமானால், தகுதியை விட்டுத் தருக்கினிடத்தே அவரைச் செல்லச் செய்யும்.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து. 978

பெருமை உடையவர் தருக்கியிராமல் பணிவாகவே நடந்து வருவார்கள்; மற்றைச் சிறுமை உடையவரோ எப்போது தம்மை வியந்து புனைந்து பேசி வருவார்கள்.

பெருமை பெருமிதம் இன்மை சிறுமை
பெருமிதம் ஊர்ந்து விடல். 979

பெருமை குணம் ஆவது, காரணம் உள்ள போதும் தருக்கின்றி அமைந்திருத்தல்; சிறுமைக்குணமாவது பெருமை அற்ற போதும் தருக்கி, முடிவில் நின்றுவிடலாகும்.

அற்றம் மறைக்கும் பெருமை சிறுமைதான்
குற்றமே கூறி விடும். 980

பெருமை உடையவர், பிறரது மானத்தைப் பேசி, அவமானத்தை மறைப்பார்கள்; சிறுமை உடையவரோ, பிறரது குணத்தை மறைத்து, குற்றத்தையே கூறுவார்கள்.


99. சான்றாண்மை

கடன்என்ப நல்லவை எல்லாம் கடன்அறிந்து
சான்றாண்மை மேற்கொள் பவர்க்கு. 981

‘நமக்கு இது தகுவது’ என்று அறிந்து, சான்றாண்மை மேற்கொண்டு ஒழுகுபவர்க்கு, நல்ல குணங்கள் எல்லாம் அவருடைய இயல்பாகவேயிருக்கும் என்பார்கள்.

குணநலம் சான்றோர் நலனே பிறநலம்
எந்நலத்து உள்ளதூஉம் அன்று. 982

சான்றோர்களின் சிறப்பாவது, அவர் குணநலங்களால் வந்த சிறப்பே; அ·து ஒழிந்த பிற நலன்கள் எல்லாம், எந்நலத்தினும் சேர்வதான ஒரு நலனே ஆகாது.

அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு
ஐந்துசால் ஊன்றிய தூண். 983

அன்பும், நாணமும், யாவரிடத்தும் ஒப்புரவு செய்தலும், கண்ணோட்டமும், வாய்மையும், சால்பென்னும் பாரத்தைத் தாங்கும் ஐந்து தூண்கள் ஆகும்.

கொல்லா நலத்தது நோன்மை பிறர்தீமை
சொல்லா நலத்தது சால்பு. 984

‘தவம்’ ஓர் உயிரையும் கொல்லாத அறத்தினிடத்தது; சால்பு, பிறரது குற்றத்தை அறிந்தாலும், வெளியே சொல்லித் திரியாத நல்ல குணத்தினிடத்து.

ஆற்றுவார் ஆற்றல் பணிதல் அதுசான்றோர்
மாற்றாரை மாற்றும் படை. 985

ஒரு செயலை முடிப்பவரது ஆற்றலாவது, துணையாகுபவரைப் பணிமொழியால் தாழ்ந்தும் கூட்டிக் கொள்ளுதல்; சால்புடையார் தம் பகைவரை ஒழிக்கும் படையும் அதுவே.

சால்பிற்குக் கட்டளை யாதெனின் தோல்வி
துலையல்லார் கண்ணும் கொளல். 986

சால்பாகிய பொன்னின் தரத்தை அறிவதற்கான உரைகல், தம்மினும் உயர்ந்தாரிடம் ஏற்கும் தோல்வியை, இழிந்தவரிடமும் ஏற்றுக் கொள்ளுதல் ஆகும்.

இன்னாசெய் தார்க்கும் இனியவே செய்யாக்கால்
என்ன பயத்ததோ சால்பு. 987

தமக்குத் தீமை செய்தவர்களுக்கும் இனிய செயல்களைச் செய்யாதவரானால், ‘சால்பு’ என்று சிறப்பாகக் கொள்ளப்படுவது தான், என்ன பயனை உடையதாகுமோ?

இன்மை ஒருவற்கு இளிவன்று சால்பென்னும்
திண்மை உண் டாகப் பெறின். 988

‘சால்பு உடைமை’ என்னும் பண்பு ஒருவனிடம் உறுதி பெற்றிருந்தால், அவனுக்கு வரும் வறுமைத் துன்பங்களும், அவனுக்கு இழிவான நிலைமையைத் தந்துவிடாது.

ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு
ஆழி எனப்படு வார். 989

சால்புடைமை என்னும் கடலுக்குக் கரை என்று சொல்லப்படும் பெரியோர்கள், ஏனைய கடல்களும் கரையுள் நில்லாமல் காலம் திரிந்த போதும், தாம் நிலைதிரிய மாட்டார்கள்.

சான்றவர் சான்றாண்மை குன்றின் இருநிலந்தான்
தாங்காது மன்னோ பொறை. 990

பல குணங்களாலும் நிறைந்தவரும் தம் தன்மைகளில் குன்றுவார்களானால், இந்தப் பெரிய பூமி தானும் தன் பாரத்தைத் தாங்காததாய் அழிந்து போகும்.


100. பண்புடைமை

எண்பதத்தால் எய்தல் எளிதென்ப யார்மாட்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. 991

எல்லாரிடத்தும் எளிய செவ்வியராதல் உடையவருக்கு பண்புடைமை என்னும் நன்னெறியினை அடைந்து சிறப்படைதலும், எளிதென்று சொல்லுவார்கள்.

அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு. 992

பிறர்மேல் அன்புடைமையும், உலகத்தோடு அமைந்த குடியிலே பிறத்தலும், ஆகிய இவ்விரண்டும் ஒத்து வருதல் பண்புடைமையால் என்று உலகத்தார் சொல்லுவர்.

உறுப்பொத்தல் மக்களொப்பு அன்றால் வெறுத்தக்க
பண்பொத்தல் ஒப்பதாம் ஒப்பு. 993

உடம்பால் ஒருவரோடு ஒருவர் ஒத்திருத்தல், ஒருவனுக்கு நல்லவரோடு சமநிலையைத் தந்துவிடாது; செறியத் தகுந்த பண்பால் ஒத்திருத்தலே சமநிலை தரும்.

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்
பண்புபா ராட்டும் உலகு. 994

நீதியையும் அறத்தையும் விரும்புதலால், பிறருக்கும் தமக்கும் பயன்படுதலை உடையவரது பண்பினை, உலகத்தார் அனைவரும் போற்றிக் கொண்டாடிப் புகழ்வார்கள்.

நகையுள்ளும் இன்னா திகழ்ச்சி பகையுள்ளும்
பண்புள பாடறிவார் மாட்டு. 995

தன்னை இகழ்தல் விளையாட்டின் போதும் துன்பமானது. ஆகவே, பாடு அறிவாரிடத்து, பகைமை உள்ளவிடத்திலும் இகழ்தல் இன்றி, இனிய பண்புகளே நிறைந்திடும்.

பண்புடையார்ப் பட்டுண்டு உலகம் அதுஇன்றேல்
மண்புக்கு மாய்வது மன். 996

பண்புடையாரிடத்தே படுதலால் உலகியல் எப்போதும் உளதானதாய் வந்து கொண்டிருக்கின்றது; அங்ஙனம் இல்லையானால், அது மண்ணினுட் புகுந்து மாய்ந்து விடும்.

அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்
மக்கட்பண்பு இல்லா தவர். 997

நன்மக்களுக்கு உரிய பண்பு இல்லாதவர்கள், அரத்தைப் போலக் கூர்மை உடையவர் என்றாலும், ஓரறிவேயுள்ள மரத்தைப் போன்றவர்கள் ஆவர்.

நண்பாற்றார் ஆகி நயமில செய்வார்க்கும்
பண்பாற்றார் ஆதல் கடை. 998

தம்மோடும் நட்பினைச் செய்யாதவராகப் பகைமையையே செய்து நடப்பவரிடத்தும், தாம் பண்புடையவராக உதவி புரியாதிருத்தல், சான்றோருக்குக் குற்றமாகும்.

நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன்று இருள். 999

பண்பில்லாமையாலே ஒருவரோடு கலந்து பேசி உள்ளம் மகிழ மாட்டாதவர்களுக்கு, மிகவும் பெரிய இந்த உலகமானது பகற்பொழுதிலும் இருண்டு கிடப்பதாகும்.

பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால்
கலந்தீமை யால்திரிந் தற்று. 1000

பண்பில்லாதவன் முன்னை நல்வினையாலே பெற்ற பெருஞ் செல்வமானது, நல்ல ஆவின்பால் கலத்தின் குற்றத்தால் திரிதல் போல, ஒருவருக்கும் பயன்படாமல் போகும்.


101. நன்றியில் செல்வம்

வைத்தான்வாய் சான்ற பெரும்பொருள் அ·துண்ணான்
செத்தான் செயக்கிடந்தது இல். 1001

வீடு நிறையப் பொருளைச் சேர்த்து வைத்தும், உலோபத்தால் தானேயும் உண்ணாதவன், அப்பொருளின் உரிமையால் ஏதும் செய்யாததனால், செத்தவனுக்கே சமமாவான்.

பொருளானாம் எல்லாமென்று ஈயாது இவறும்
மருளானாம் மாணாப் பிறப்பு. 1002

‘பொருளினால் எல்லாமே உண்டாகும்’ என்று அறிந்து, அதனை எவருக்கும் கொடாமல், அதன் மீது மயக்கத்தை உடையவனுக்குப் பேய்ப் பிறவிதான் ஏற்படும்.

ஈட்டம் இவறி இசைவேண்டா ஆடவர்
தோற்றம் நிலக்குப் பொறை. 1003

மேன்மேலும் பொருளைத் தேடுவதையே விரும்பி, அதன் பயனாக வரும் புகழை விரும்பாத மக்கட் பிறவியானது, இப் பூமிக்கு ஒரு சுமையே அல்லாமல் வேறில்லை.

எச்சமென்று என்எண்ணுங் கொல்லோ ஒருவரால்
நச்சப் படாஅ தவன். 1004

ஒரு பொருளும் கொடுத்தறியாததால் எவராலும் விரும்பி வரப்படாதவன், தான் இறந்ததன் பின்னர், இவ்வுலகிலே எஞ்சி நிற்பதற்கென்று எதை நினைப்பானோ?

கொடுப்பதூஉம் துய்ப்பதூஉம் இல்லார்க்கு அடுக்கிய
கோடியுண் டாயினும் இல். 1005

இரப்போருக்குக் கொடுப்பதும், தாம் நுகர்வதுமாகிய செல்வத்தின் பயனை இழந்தவர்களுக்குக் கோடி கோடியான செல்வம் இருந்தாலும், அதனால் யாதும் பயன் இல்லை.

ஏதம் பெருஞ்செல்வம் தான்துவ்வான் தக்கார்க்கொன்று
ஈதல் இயல்பிலா தான். 1006

தானும் நுகராமலும், தகுதியானவருக்கு எதையும் கொடுத்து உதவாமலும் இருப்பவன், தான் பெற்ற பெருஞ் செல்வத்துக்கே ஒரு நோய் போன்றவன் ஆவான்.

அற்றார்க்கொன்று ஆற்றாதான் செல்வம் மிகநலம்
பெற்றாள் தமியள்மூத் தற்று. 1007

ஏதும் இல்லாதவருக்கு எதுவும் கொடுத்து உதவாதவனது செல்வம், மிகவும் அழகிய பெண் திருமணப் பயனில்லாமல், தனியாகவே கிழவியானதைப் போன்றதாம்.

நச்சப் படாதவன் செல்வம் நடுவூருள்
நச்சு மரம்பழுத் தற்று. 1008

வறியவராலே விரும்பி வரப்படாத உலோபியின் செல்வம், ஊரின் இடையே நிற்கின்ற ஓர் நச்சுமரமானது, நிறையப் பழம் பழுத்து விளங்குவதைப் போன்றதாகும்.

அன்பொரீஇத் தற்செற்று அறநோக்காது ஈட்டிய
ஒண்பொருள் கொள்வார் பிறர். 1009

உறவினரிடம் அன்பு செய்தலை விட்டு, நுகராமல் தன்னையும் வருத்திக் கொண்டு, அறத்தையும் பாராது, ஒருவன் தேடிய பெரும்பொருளைப் பிறர் தாம் கொண்டு போவார்கள்.

சீருடைச் செல்வர் சிறுதுனி மாரி
வறங்கூர்ந் தனையது உடைத்து. 1010

புகழ்பெற்ற செல்வம் உடையவரது சிறிது காலத்திய வறுமை, மேகம் சிறிது காலம் வறுமை மிகுந்தாற் போன்ற இடைக்காலத் தன்மையை உடையதே.


102. நாணுடைமை

கருமத்தால் நாணுதல் நாணுந் திருநுதல்
நல்லவர் நாணுப் பிற. 1011

இழிந்த செயல் காரணமாக நாணுதலே நன்மக்களது நாணம்; பிற மன மொழி மெய் ஒடுக்கங்களால் வரும் நாணம், குலமகளிரது நாணம் ஆகும்.

ஊணுடை எச்சம் உயிர்க்கெல்லாம் வேறல்ல
நாணுடைமை மாந்தர் சிறப்பு. 1012

ஊணும் உடையும் அவையொழிந்த பிறவும் உலகத்து மக்கள் உயிர்க்கு எல்லாம் பொதுவானவை. நன்மக்களுக்குச் சிறப்பாக அமைவது ‘நாணம்’ ஆகும்.

ஊனைக் குறித்த உயிரெல்லாம் நாண்என்னும்
நன்மை குறித்தது சால்பு. 1013

உயிர்கள் எல்லாம் தம் இருப்பிடமான உடம்பை ஒரு போதும் விடமாட்டா; அவ்வாறே ‘நாணம்’ என்னும் குணத்தையும் ‘சால்பு’ ஒரு போதும் விட்டுவிடாது.

அணிஅன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அ·தின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை. 1014

நாணம் உடைமை சான்றோர்களுக்கு ஓர் ஆபரணம் ஆகும். அந்த நாணம் என்னும் ஆபரணம் இல்லையானால், அவரது பெருமித நடை கண்டவர்க்கு நோயாகிவிடும்.

பிறர்பழியும் தம்பழியும் நாணுவார் நாணுக்கு
உறைபதி என்னும் உலகு. 1015

பிறரது பழியையும் தம்முடைய பழியையும் சமமாக மதித்து நாணுபவரை, உலகத்தார், ‘நாணத்திற்கே உறைவிடம் இவர் தாம்’ என்று சிறப்பித்துச் சொல்வார்கள்.

நாண்வேலி கொள்ளாது மன்னோ வியன்ஞாலம்
பேணலர் மேலா யவர். 1016

உயர்ந்தோர், தமக்கு வேலியாக நாணத்தைக் கொள்வார்களே அல்லாமல், அகன்ற இவ்வுலகத்தைத் தமக்கு வேலியாகக் கொள்வதை விரும்ப மாட்டார்கள்.

நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாணாள் பவர். 1017

நாணத்தையும் உயிரையும் ஒருங்கே காப்பாற்ற முடியாத போது, சான்றோர்கள் உயிரை விட்டு விடுவார்கள்; உயிரைக் காப்பதற்கு நாணத்தை விட மாட்டார்கள்.

பிறர்நாணத் தக்கது தான்நாணா னாயின்
அறம்நாணத் தக்கது உடைத்து. 1018

கேட்டவரும் கண்டவரும் நாணமின்றிப் பழிக்கத் தான் நாணாதவன் ஆனால், அந் நாணானது, அவனை விட்டு அறம் நீங்கி போகத் தகுந்த குற்றத்தை உண்டாக்கிவிடும்.

குலஞ்சுடும் கொள்கை பிழைப்பின் நலஞ்சுடும்
நாணின்மை நின்றக் கடை. 1019

ஒருவனது ஒழுக்கத் தவறினால், அவன் குடிப்பெருமை ஒன்றே கெட்டுவிடும்; ஒருவனிடம் நாணமில்லாத தன்மை நின்றபோது, அது அவன் நலத்தை எல்லாமே சுடும்.

நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று. 1020

தன் மனத்திலே நாணமில்லாத மக்களின் இயக்கம், மரப்பாவை யந்திரக் கயிற்றாலாகிய தன் இயக்கத்தால் உயிருள்ளது போல் மயக்குவது போன்றதாகும்.


103. குடிசெயல்வகை

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல். 1021

‘என் குடியை உயரச் செய்வதற்கான செயல்களைச் செய்வதில் ஒருபோதும் கை ஓயமாட்டேன்’ என்னும் பெருமையைப் போல, ஒருவனுக்கு சிறந்த பெருமை தருவது வேறில்லை.

ஆள்வினையும் ஆன்ற அறிவும் எனஇரண்டின்
நீள்வினையால் நீளும் குடி. 1022

‘முயற்சியும், நிறைந்த அறிவும்’ என்று சொல்லப்பட்ட இரண்டினையும் உடைய, இடைவிடாத கருமச் செயலால், ஒருவனது குடிப்பெருமை தானே உயர்வு அடையும்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும். 1023

‘என் குடியைப் புகழால் உயரச் செய்வேன்’ என்று அதற்கேற்ற செயல்களிலே ஈடுபடும் ஒருவனுக்கு, தெய்வமும் மடியை உதறிக் கொண்டு முன் வந்து உதவி நிற்கும்.

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத்
தாழாது உஞற்று பவர்க்கு. 1024

தம் குடியை உயர்த்துவதற்கு இடைவிடாமல் முயல்கிறவர்களுக்கு, அதன் வழிபற்றி அவர் ஆராயும் முன்பே, தெய்வ உதவியால், அது தானாகவே முடிந்துவிடும்.

குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு. 1025

குற்றமாகிய செயல்களைச் செய்யாமல், தன் குடியை உயரச் செய்து நடக்கிறவனின் சுற்றமாக விரும்பி, உலகத்தார் எல்லாருமே சென்று அவனைச் சூழ்வார்கள்.

நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்லாண்மை ஆக்கிக் கொளல். 1026

‘ஒருவனுடைய நல்லாண்மை’ என்பது, தான் பிறந்த குடியினை ஆளும் தன்மையை, அவன், தன்னிடம் உளதாக ஆக்கிக் கொள்ளுதலே ஆகும்.

அமரகத்து வன்கண்ணர் போலத் தமரகத்தும்
ஆற்றுவார் மேற்றே பொறை. 1027

அமரகத்தில் வன்கண்மை உடையவரே போரைத் தாங்குவார்; அதுபோலக் குடியிற் பிறந்தவர் பலரானாலும், வல்லமை உடையவரே அதனைத் தாங்கிக் காப்பவர்.

குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து
மானங் கருதக் கெடும். 1028

தம் குடியினை உயரச் செய்பவர் அதனையே கருதவேண்டும்; மற்றுக் காலத்தைப் பார்த்து, மானத்தையும் கருதினால், குடி கெடும்; ஆகவே அவருக்குக் காலநியதி இல்லை.

இடும்பைக்கே கொள்கலம் கொல்லோ குடும்பத்தைக்
குற்ற மறைப்பான் உடம்பு. 1029

தன் குடி குற்றம் அடையாமல் காக்க முயல்பவனின் உடம்பு, அம்முயற்சித் துன்பத்திற்கே ஓர் கொள்கலமோ? அ·து ஒழிந்து, அது இன்பத்திற்கும் கொள்கலம் ஆகாதோ?

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி. 1030

துன்பம் வரும்போது, அதனைத் தாங்கிக் காக்கவல்ல நல்ல ஆண்மகன் பிறவாத குடியானது, துன்பமாகிய நவியம்புகுந்ததனால் வீழ்கின்ற மரம்போலத் தானும் வீழ்ந்து படும்.


104. உழவு

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. 1031

உழவின் வருத்தத்தைக் கண்டு, பிற தொழில்களைச் செய்து திரிந்தாலும், முடிவில் ஏருடையவரையே உலகம் உணவுக்கு எதிர்பார்த்தலால், உழவே மிகவும் சிறந்தது.

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅ· தாற்றாது
எழுவாரை எல்லாம் பொறுத்து. 1032

உழவை விட்டுப் பிற தொழில்களைச் செய்வாருக்கும் உணவுப் பொருள்களைத் தந்து தாங்குவதனால், உழுதொழில் செய்வாரே உலகத்தாருக்கு அச்சாணி ஆவார்.

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். 1033

யாவரும் உண்ணுவதற்கு உணவைத் தந்து, தாமும் உண்டு வாழ்பவரே உரிமை வாழ்வினர்; மற்றையவர் பிறரைத் தொழுது உண்டு, அவர் பின் செல்கின்றவரே யாவர்.

பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்
அலகுடை நீழ லவர். 1034

உழுதலால் நெல்லுடையவரான கருணையாளர், பலவேந்தர் குடைநிழலது ஆகிய உலகம் முழுவதையும், தம் அரசனின் குடைக்கீழ் வந்து சேரக் காணும் சக்தியுடையவர் ஆவர்.

இரவார் இரப்பார்க்கொன்று ஈவர் கரவாது
கைசெய்தூண் மாலை யவர். 1035

உழவரான முயற்சியைச் செய்து உண்பதனையே இயல்பாக உடையவர், பிறரைத் தாம் இரவார்; தம்பால் வந்து இரப்பவர்க்கும் அவர் வேண்டியதைத் தருவார்கள்.

உழவினார் கைம்மடங்கின் இல்லை விழைவதூஉம்
விட்டேம்என் பார்க்கும் நிலை. 1036

உழவர்களின் கை உழாது மடங்கிவிடுமானால், ‘யாவரும் விரும்பும் உண்வையும் கைவிட்டோம்’ என்று துறந்தவர்க்கும், அவ்வறத்தில் நிலைத்து நிற்க முடியாது.

தொடிப்புழுதி க·சா உணக்கின் பிடித்தெருவும்
வேண்டாது சாலப் படும். 1037

ஒரு பலப் புழுதியானது காற்பலமாக ஆகும்படி உழுது காய விடுவானானால், அதனிடம் செய்த பயிர், ஒரு பிடி எருவு இடுதலையும் வேண்டாமலே நன்றாக விளையும்.

ஏரினும் நன்றால் எருவிடுதல் கட்டபின்
நீரினும் நன்றதன் காப்பு. 1038

பலகால் உழுதலினும், எருப்பெய்து வளப்படுத்துதல் சிறந்தது; இவ்விரண்டும் செய்து களையும் எடுத்தபின், பயிரைக் காத்தல், நீர் பாய்ச்சுவதிலும் நல்லதாகும்.

செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து
இல்லாளின் ஊடி விடும். 1039

நிலத்துக்கு உரியவன் நாள்தோறும் சென்று பார்த்து, வேண்டியவை செய்யாது சோம்பினால், அந்த நிலமும், அவன் மனைவியைப் போல, அவனோடு பிணங்கி விடும்.

இலமென்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலமென்னும் நல்லாள் நகும். 1040

‘யாம் வறியோம்’ என்று சொல்லிச் சோம்பியிருப்பவரைக் கண்டால், நிலமகள் என்று உயர்த்திப் பேசப்படும் நல்லாள் தன்னுள்ளே சிரித்துக் கொள்வாள்.


105. நல்குரவு

இன்மையின் இன்னாதது யாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது. 1041

ஒருவனுக்கு வறுமையைப் போலத் துன்பம் தருவது யாதென்றால், அந்த வறுமையைப் போலத் துன்பந்தருவது, அந்த வறுமையேயன்றி, யாதுமில்லை.

இன்மை எனவொரு பாவி மறுமையும்
இம்மையும் இன்றி வரும். 1042

வறுமை என்னும் ஒரு பாவி ஒருவனிடம் வந்துவிட்டால், அவனுக்கு இம்மையிலுள்ள உலகவின்பமும், மறுமையின் சுவர்க்க இன்பமும் இல்லாமல் போய்விடும்.

தொல்வரவும் தோலும் கெடுக்கும் தொகையாக
நல்குரவு என்னும் நசை. 1043

வறுமை எனப்படும் கேடானது, ஒருவனுடைய பழைய குடும்பச் செல்வத்தையும், அதன்மேல் அக்குடும்பத்திற்கு உண்டான பெரும்புகழையும் கெடுத்துவிடும்.

இற்பிறந்தார் கண்ணேயும் இன்மை இளிவந்த
சொற்பிறக்கும் சோர்வு தரும். 1044

இழிவான செயல் பிறவாத குடும்பத்தாரிடமும், அது பிறப்பதற்கு ஏதுவான சோர்வு என்னும் நிலைமையானது வறுமையை உண்டாக்கிவிடும்.

நல்குரவு என்னும் இடும்பையுள் பல்குரைத்
துன்பங்கள் சென்று படும். 1045

வறுமை எனப்படும் துன்பம் ஒன்றின் உள்ளாகவே, உலகத்தாரால் சொல்லப்படும் பலவகைப்பட்ட துன்பங்கள் எல்லாம் சென்று அடங்கிவிடும்.

நற்பொருள் நன்குணர்ந்து சொல்லினும் நல்கூர்ந்தார்
சொற்பொருள் சோர்வு படும். 1046

நல்லவான பொருள்களைத் தெளிவாக அறிந்து சொன்னார் ஆனாலும், வறுமைப்பட்டவர் சொல்லும் சொற்கள், பொருள் பயவாதவாய்ச் சோர்வு பட்டுவிடும்.

அறஞ்சாரா நல்குரவு ஈன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும். 1047

அறத்தோடு பொருந்தாத வறுமையை உடையவன், தன்னைப் பெற்ற தாயாராலுங்கூட, ஓர் அயலானைப் போலக் கருதிப் பார்க்கப் படுவான்.

இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு. 1048

நேற்றுக் கொன்றது போலத் துன்பஞ் செய்த வறுமையானது, இன்றும் என்னிடத்தே வந்துவிடுமோ? வந்தால், இனி யான் யாது செய்வேனோ?

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள்
யாதொன்றும் கண்பாடு அரிது. 1049

மந்திரமும் மருந்தும் முதலியவற்றின் உதவியாலே நெருப்பிற் கிடந்தும் உறங்கலாம்; ஆனால் வறுமை வந்த போது, எதன் உதவியாலும் உறக்கம் வருவதில்லை.

துப்புர வில்லார் துவரத் துறவாமை
உப்பிற்கும் காடிக்கும் கூற்று. 1050

பொருளில்லாத வறுமையாளர் செய்யக்கூடியது முற்றத்துறத்தலே; அதனைச் செய்யாதிருப்பது, பிறர் வீட்டு உப்புக்கும் காடிக்கும் தாம் எமனாவதே யாகும்.


106. இரவு

இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின்
அவர்பழி தம்பழி அன்று. 1051

தகுதியுள்ளவரைக் கண்டால், அவர்பால் இரந்து கேட்கலாம்; அவர் தம்மிடம் ஏதும் இல்லையென்று ஒளிப்பாரானால், அவருக்குப் பழியேயன்றிக் கேட்பவருக்குப் பழியில்லை.

இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை
துன்பம் உறாஅ வரின். 1052

ஈவாரது நல்லுணர்வால் இரந்த பொருள்கள் துன்பமின்றி வருமானால், அவ்வாறு இரந்து நின்றதும், ஒருவனுக்கு உலகில் இன்பம் தருவதாகும்.

கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று
இரப்புமோ ரேஎர் உடைத்து. 1053

ஒளிப்பதறியாத நெஞ்சமுடைய மானம் அறிபவரின் முன்னே போய் நின்று, அவரிடம் ஒரு பொருளை இரந்தாலும், அப்படி இரப்பதும் வறியவர்க்கு ஓர் அழகு ஆகும்.

இரத்தலும் ஈதலே போலும் கரத்தல்
கனவிலும் தேற்றாதார் மாட்டு. 1054

தமக்கு உள்ளதைக் கனவிலும் ஒளிப்பதற்கு அறியாதவரிடம் சென்று, ஒரு பொருளை வறியவர் இரந்து கேட்பதும், ஈதலைப் போலவே சிறந்ததாகும்.

கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று
இரப்பவர் மேற்கொள் வது. 1055

முன்னால் நின்ற போதே அருளோடு அவருக்கு உதவுகிறவரும் இருப்பதனாலேதான், உயிரைக் காக்கும் பொருட்டாக இரக்கும் சிலரும் உலகில் உள்ளனர்.

கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை
எல்லாம் ஒருங்கு கெடும். 1056

உள்ளதை ஒளிக்கும் மனநோய் இல்லாதவரைக் கண்டால், மானம் விடாமல் இரப்பவருக்கு, அவர் வறுமைத் துன்பங்கள் எல்லாம் ஒருங்கே அவரை விட்டுப் போய்விடும்.

இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம்
உள்ளுள் உவப்பது உடைத்து. 1057

தம்மை அவமதித்து இழிவாய்ப் பேசாமல் பொருள் தருவாரைக் கண்டால், இரப்பவரது நெஞ்சமும் மகிழ்ந்து, உள்ளுக்கு உள்ளாகவே உவப்பது உண்டு.

இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம்
மரப்பாவை சென்றுவந் தற்று. 1058

வறுமையால் இரப்பவர் இல்லையானால், குளிர்ந்த இடத்தையுடைய பெரிய உலகினரின் போக்கும் வரவும், மரப்பாவை இயந்திரக் கயிற்றால் சென்றுவந்தாற் போன்றதாகும்.

ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள்
மேவார் இலாஅக் கடை. 1059

தம்மிடம் வந்து ஒரு பொருளை இரந்து கொள்பவர் எவரும் இல்லாத போது, கொடுப்பதற்கு விரும்புகிறவர்களுக்கும், இவ்வுலகத்திலே என்ன புகழ்தான் உண்டாகும்!

இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்பிடும்பை
தானேயும் சாலும் கரி. 1060

இரப்பவன் ஒரு போதும் தனக்குத் தராதவனை வெகுளாமல் இருக்க வேண்டும்; பொருள் வேண்டிய பொழுது வந்து உதவது என்பதற்கு அவன் வறுமையே சான்றாகும்.


107. இரவச்சம்

கரவாது உவந்தீயும் கண்ணன்னார் கண்ணும்
இரவாமை கோடி உறும். 1061

தம்மிடம் உள்ள பொருளை ஒளிக்காமல் உவப்போடு கொடுத்துதவும் கண்போன்றவரிடமும் சென்று இரந்து நிற்காமல், வறுமையைத் தாங்குதல் கோடி நன்மை தருவதாகும்.

இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து
கெடுக உலகியற்றி யான். 1062

முயற்சி செய்து உயிர் வாழ்தல் என்றில்லாமல், இரந்தும் ஒருவன் உயிர் வாழ்தலை, இவ்வுலகைப் படித்தவன் விதித்திருப்பானானால், அவனும் எங்கும் அலைந்து கெடுவானாக!

இன்மை இடும்பை இரந்துதீர் வாமென்னும்
வன்மையின் வன்பாட்ட தில். 1063

வறுமைத் துன்பத்தை முயற்சிகளால் நீக்கக்கடவோம் என்று நினையாமல், இரந்து நீக்க நினைக்கும் வன்மையைப் போல வன்மையுள்ளது பிறிது யாதும் இல்லை.

இடமெல்லாம் கொள்ளாத் தகைத்தே இடமில்லாக்
காலும் இரவொல்லாச் சால்பு. 1064

நுகர் பொருள் இல்லாமல் வறுமைப்பட்டபோதும், பிறர்பால் சென்று இரத்தலுக்கு உடன்படாத மனவமைதி, உலகமெல்லாம் சேர்ந்தாலும் ஈடாகாத பெருமையது.

தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்கினிய தில். 1065

நெறியோடு கூடிய முயற்சியாலே கொண்டு வந்தது, தெளிந்த நீரைப் போலத் தோன்றும் புல்லரிசிக் கஞ்சியே யானாலும், அதனை உண்பதை விட இனியது வேறு யாதும் இல்லை.

ஆவிற்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்த தில். 1066

வேட்கை மிகுதியாலே சாகும் பசுவுக்கு இரக்கங்கொண்டு ‘நீர் தருவீராக’ என்று இரந்தாலும், அதனைப் போல நாவிற்கு இழிவான ஒரு செயல் யாதும் இல்லை.

இரப்பன் இரப்பாரை எல்லாம் இரப்பின்
கரப்பார் இரவன்மின் என்று. 1067

‘உமக்கு இரக்க வேண்டுமானால், உள்ளதை ஒளிக்காமல் மறைப்பவரிடம் சென்று இரக்காதீர்கள்’ என்று இரப்பவரை எல்லாம் யான் இரந்து வேண்டுகின்றேன்.

இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
பார்தாக்கப் பக்கு விடும். 1068

வறுமைக் கடலைக் கடப்பதற்குக் கொண்ட இரத்தல் என்னும் தோணியானது செல்லும் போது, இடையிலே கரத்தல் என்னும் பார் தாக்கினால் உடைந்து போய்விடும்.

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள
உள்ளதூஉம் இன்றிக் கெடும். 1069

இரந்து நிற்பதன் கொடுமையை நினைத்தால், எம் உள்ளம் கரைந்து உருகும்; அவர்க்கு இல்லை என்றவர் தன்மையை நினைத்தால், அந்த உருக்கமும் காய்ந்து போகும்.

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர்
சொல்லாடப் போஒம் உயிர். 1070

ஒளிப்பவர் ‘இல்லை’ என்று சொன்னதுமே, இரப்பவர் உயிர் போய்விடுகின்றது; ஒளிப்பவர் உயிர் பின்னும் நிற்றலால் அது எங்கே புகுந்து ஒளிந்திருக்குமோ!


108. கயமை

மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில். 1071

வடிவமைப்பால் கீழ்மக்களும் மக்களைப் போன்றிருப்பார்கள்; அவரைப் போல ஒப்புமையான ஒன்றை வேறிரண்டு சாதிக் கண் யாம் எங்கும் கண்டதில்லை.

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத்து அவலம் இலர். 1072

தமக்கு உறுதியானவை இவை என்று அறிவாரை விட, அவை அறியாத கீழ்மக்கள் நன்மையுடையவர்; அவர் போல, இவர் தம் நெஞ்சத்தில் கவலையில்லாதவர் ஆதலால்.

தேவர் அனையர் கயவர் அவருந்தாம்
மேவன செய்தொழுக லான். 1073

தேவரைப் போலவே, தம்மை நியமிப்பவர் இல்லாமல், தாம் விரும்புவன செய்து ஒழுகுதலால், கயவரும் தேவரும் ஒரே தன்மையுடையவர் ஆவர்.

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவரின்
மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ். 1074

கீழ்மக்கள் தம்மிலும் கீழாக நடப்பவரைக் கண்டால், அந்தக் கீழ்மையில் தாம் அவருக்கு மேம்பட்டிருப்பதைக் காட்டித் தமக்குள் இறுமாப்பு அடைவர்.

அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது. 1075

‘அரசரால் துன்பம் வரும்’ என்னும் அச்சமும் கீழ்மக்களது ஆசாரத்துக்குக் காரணம்; அ·து ஒழிந்தால், விரும்பப்படும் பொருள் வரும் போது, சிறிது உண்டாகும்.

அறைபறை அன்னர் கயவர்தாம் கேட்ட
மறைபிறர்க்கு உய்த்துரைக்க லான். 1076

கேட்ட மறைவான செய்திகளைப் பிறரிடம் தாங்கிக் கொண்டு போய்ச் சொல்வதனால், கீழ்மக்கள் செய்தியறிவிக்க அறையப்படும் பறை போன்றவர்கள் ஆவர்.

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிறுடைக்கும்
கூன்கையர் அல்லா தவர்க்கு. 1077

தம் கன்னத்தை நெரிப்பதாக வளைந்த கையினர் அல்லாதவருக்கு, கீழ்மக்கள், தாமுண்டு கழுவிய ஈரக்கையைக் கூட உதறமாட்டார்கள்.

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ். 1078

குறையைச் சொன்னதும் இரக்கங்கொண்டு உதவுவதற்கு மேலோர் பயன்படுவார்கள்; கரும்பைப்போல் வலியவர் நெருக்கிப் பிழிந்தால் கயவர் அவருக்குப் பயன்படுவர்.

உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர்மேல்
வடுக்காண வற்றாகும் கீழ். 1079

பிறர் நன்றாக உடுப்பதையும் சுவையோடு உண்பதையும் கீழ்மகன் கண்டால், அவற்றைப் பொறாமல், அவர் மேல் வடு உண்டாக்கவும் முயல்வான்.

எற்றிற் குரியர் கயவரொன்று உற்றக்கால்
விற்றற்கு உரியர் விரைந்து. 1080

ஒரு துன்பம் வந்துவிட்டால், அதுவே காரணமாகத் தம்மை விரைவில் பிறருக்கு விற்பதற்குக் கயவர் உரியவராவர்; அதுவன்றி வேறு எத்தொழிலுக்கும் உரியராகார்.


காமத்துப்பால்

களவியல்

109. தகையணங்குறுத்தல்

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும் என் நெஞ்சு. 1081

இவ் வடிவம் தேவமகளோ? சிறந்த அழகு மயிலோ? அல்லது, கனவிய குழையையுடைய ஒரு மானுடப் பெண் தானோ! புரியாமல் என் நெஞ்சம் மயங்குகின்றதே!

நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு
தானைக்கொண் டன்ன துடைத்து. 1082

என்னை அவள் நோக்கினாள். என் பார்வைக்கு எதிராகவும் பார்த்தாள்! அந்தப் பார்வை, தானே தாக்கி வருத்தும் அணங்கு, தானையையும் கொண்டது போல் உள்ளதே.

பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. 1083

‘கூற்று’ என்பதனை இதன்முன்னர் அறியேன்; இப்போது அறிந்துவிட்டேன்; அது, அழகிய பெண்ணின் வடிவோடு பெரியவாய் அமர்த்த கண்களையும் உடையது.

கண்டார் உயிருண்ணும் தோற்றத்தால் பெண்டகைப்
பேதைக்கு அமர்த்தன கண். 1084

தன்னைக் கண்டவரின் உயிரை உண்ணுகின்ற தோற்றத்தோடு, பெண்களில் சிறந்தவளான இந்தப் பேதைக்குக் கண்களும் அமர்த்தனவாக அமைந்து உள்ளனவே!

கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கமிம் மூன்றும் உடைத்து. 1085

இளமைப் பருவத்தவளான இவளது பார்வை, வருத்தும் கூற்றமோ! பிறழும் கண்ணோ! மருளும் பிணையோ! இம்மூன்று தன்மையையும் தன்பால் கொண்டிருக்கிறதே!

கொடும்புருவம் கோடா மறைப்பின் நடுங்கஞர்
செய்யல மன்இவள் கண். 1086

விளைவான இவள் புருவங்கள் செம்மையாயிருந்து விலக்கினவானால், அவற்றைக் கடந்து, இவள் கண்களும் நாம் நடுங்கும் துயரைச் செய்ய மாட்டாவே!

கடாஅக் களிற்றின்மேற் கட்படாம் மாதர்
படாஅ முலைமேல் துகில். 1087

இந்த மாதின், சாயாத முலைகளின் மேலாக இடப்பட்டுள்ள துகில், அவையும் என்னைக் கொல்லாதபடி காத்தலால், மதகளிற்றின் முகபடாத்தைப் போன்றதாகும்.

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள்
நண்ணாரும் உட்குமென் பீடு. 1088

போர்க்களத்துக்கு வராதவரும், பிறருக்கு நேர்ந்ததைக் கேட்டு அஞ்சுவதற்கு ஏதுவான என் வலிமையெல்லாம், இவளின் ஒளிவீசும் நெற்றிக்கே உடைந்து போயிற்றே!

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு
அணியெவனோ ஏதில தந்து. 1089

மானின் பிணைபோன்ற மடநோக்கினையும், உள்ளத்தே நாணத்தையும் உடையவளான இவளுக்கு, இவையே சிறந்த அழகாக, வேறும் அணிபூட்டி அழகுபடுத்தல் ஏனோ?

உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல்
கண்டார் மகிழ்செய்தல் இன்று. 1090

தன்னை உண்டவருக்கு மகிழ்ச்சியைச் செய்வதல்லாமல், அடப்பட்ட தவறானது, காமத்தைப் போலக் கண்டவருக்கு மகிழ்வைச் செய்யும் ஆற்றலுடையது இல்லையே!


110. குறிப்பறிதல்

இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கொன் றந்நோய் மருந்து. 1091

இவள் மையுண்ணும் கண்களில் இருவகைப் பார்வைகள் உள்ளன; ஒன்று என்னிடத்து நோய்செய்யும் பார்வை; மற்றொன்று அந் நோய்க்கு மருந்தாகும் பார்வை.

கண்களவு கொள்ளும் சிறுநோக்கம் காமத்தில்
செம்பாகம் அன்று பெரிது. 1092

என்னை அறியாமல் என் மேல் நோக்குகின்ற இவள் அருகிய நோக்கமானது, காம உறவிலே சரிபாகம் ஆவதன்று; அதனிலும் மிகுதியானது ஆகும்.

நோக்கினாள் நோக்கி இறைஞ்சினாள் அ·தவள்
யாப்பினுள் அட்டிய நீர். 1093

அன்போடு என்னை நோக்கினாள்; பின் எதனையோ நினைத்தாள் போல நாணித் தலைகவிழ்ந்தாள்; அக்குறிப்பு, எங்களின் அன்புப்பயிருக்கு வார்த்த நீராயிற்று.

யான்நோக்கும் காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும். 1094

யான் தன்னைப் பாராத போது என்னை நோக்கி அவள் மெல்ல நகுவாள்; யான் பார்க்கும் பொழுதோ எனக்கு எதிராகப் பாராள்; தலைகவிழ்ந்து நிலத்தையே பார்ப்பாள்!

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண்
சிறக்கணித்தாள் போல நகும். 1095

என்னையே குறிப்பாக கொண்டு பார்த்தல் அல்லாமலும், தான் ஒரு கண்ணை, ஒரு பக்கமாகச் சாய்த்தாள் போலவும் நோக்கி, தன்னுள்ளாகவே அவள் நகுவாள்!

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல்
ஒல்லை உணரப் படும். 1096

புறத்தே நம்மை விரும்பாதவரைப் போலச் சொன்னாரானாலும், தம் உள்ளத்தில் நம்மைச் சினவாதவரின் சொற்கள் பயனாகுதல், விரைவில் உணரப்படும்.

செறாஅச் சிறுசொல்லும் செற்றார்போல் நோக்கும்
உறாஅர்போன்று உற்றார் குறிப்பு. 1097

நம்மை உள்ளத்திலே சினவாதவரின் சொல்லும், சினந்தார் போலப் பார்க்கும் பார்வையும், அயலார்போல் உள்ளத்திலுள்ள ஒரு குறிப்பாலே வருவன.

அசையியற்கு உண்டாண்டோர் ஏர்யான் நோக்கப்
பசையினள் பைய நகும். 1098

அவளை இரப்பது போல யான் பார்த்த போது, அதனால் நெகிழ்ந்தவளாய் மெல்ல நகைத்தாள்; அதனால் அசையும் இயல்பு உடையவளுக்கு நன்மைக் குறிப்பும் உண்டு.

ஏதிலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்
காதலார் கண்ணே உள. 1099

முன் அறியாதவரைப் போலத் தம்முள் பொது நோக்காகவே ஒருவரையொருவர் பார்த்தலும், தம் உள்ளத்திலே காதல் உடையவரிடம் காணப்படும் தன்மை ஆகும்.

கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
என்ன பயனும் இல. 1100

காமத்திற்கு உரிய இருவருள், ஒருவர் கண்ணோடு மற்றவர் கண்ணும் தம் நோக்கத்தால் ஒத்ததானால், அவர் வாய்ச் சொற்களால் எந்தப் பயனுமில்லை.


111. புணர்ச்சி மகிழ்தல்

கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. 1101

கண்டும் கேட்டும் உண்டும் மோந்தும் தீண்டியும் அறிகின்ற ஐம்புல இன்பங்களும், ஒளிவீசும் வளையல் அணிந்த இவள் ஒருத்தியிடத்திலேயே அமைந்துள்ளனவே!

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன்நோய்க்குத் தானே மருந்து. 1102

நோய்க்கு மருந்தாக அமைவன வேறான பொருள்கள்; அவ்வாறு இல்லாமல், அணிபுனைந்த இவளால் நமக்கு வந்த நோய்க்கு, இவள், தானே மருந்தும் ஆயினளே!

தாம்வீழ்வார் மென்றோள் துயிலின் இனிதுகொல்
தாமரைக் கண்ணான் உலகு. 1103

தாம் விரும்பும் மகளிரின் மென்மையான தோள்மேல் துயிலும் இன்பத்தைப் போலத் தாமரைக் கண்ணானின் போக உலகத்து இன்பமும் இனிதாக இருக்குமோ?

நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்? 1104

தன்னை விட்டு விலகிச் சென்றால் சுடுதலும், அருகில் நெருங்கினால் குளிர்தலுமாகிய நெருப்பை, இவள் தான், எவ்விடத்திலிருந்து பெற்றுள்ளாளோ?

வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள். 1105

விரும்பியபொழுது அவையவை தரும் இன்பத்தைப் போல இன்பம் தருவன, மலரணிந்த கூந்தலை உடையவளான இவள் தோள்கள் தருகின்ற இன்பம்!

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள். 1106

அணைக்கும் போதெல்லாம், வாடிய என்னுயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால், இப் பேதையின் தோள்கள் அமிழ்தத்தால் அமைந்தவை போலும்!

தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு. 1107

தம் வீட்டிலிருந்து, தமக்குள்ள பகுதியை உண்ணும் இனிமை போன்றது, அழகிய மாமை நிறம் உடையவளான இவளைத் தழுவிப் பெறுகின்ற இன்பம்!

வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை
போழப் படாஅ முயக்கு. 1108

காற்றும் இடையிலே புகுந்து பிளந்துவிடாத இறுக்கமான தழுவுதல், விரும்பிக் கூடும் இருவருக்கும் இனிமைதரும் நல்ல இன்ப உறவாகும்!

ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம்
கூடியார் பெற்ற பயன். 1109

ஊடலும், அதனை அளவோடு அறிந்து தெளிவித்தலும், பின்னர்க் கூடுதலும், என்னும் இவை எல்லாம், காமம் பொருந்தியவர் தமக்குள் பெற்ற பயன்களாகும்.

அறிதோறு அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு. 1110

ஒன்றை அறியும் போது, முன்னிருந்த அறியாமையைக் கண்டாற் போல, செறிவான சிவந்த அணிகளை உடையவளைச் சேருந்தோறும், காம இன்பமும் உண்டாகின்றது!


112. நலம் புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். 1111

அனிச்ச மலரே! நீதான் நல்ல சிறப்பை உடையாய்! நீ வாழ்க! எம்மால் விரும்பப்படுகின்றவளோ நின்னைக் காட்டிலும் மிகவும் மென்மையான தன்மையினள்!

மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. 1112

‘இவள் கண்களும் பலராலும் காணப்படும் இக்குவளைப் பூவைப் போன்றதாகுமோ’ என்று, இக் குவளை மலரைக் கண்டால், நெஞ்சே, நீயும் மயங்குகின்றாயே!

முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. 1113

அவளுக்கு, மேனியோ தளிர் வண்ணம்; பல்லோ முத்து; இயல்பான மணமோ நறுமணம்; மையுண்ட கண்கள் வேல் போன்றவை; தோள்களோ மூங்கில் போன்றவை!

காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. 1114

குவளை மலர்கள், இவளைக் கண்டால், ‘இம் மாணிழை கண்களுக்கு யாம் ஒப்பாக மாட்டோம்’ என்று தலையைக் கவிழ்த்து நிலத்தை நோக்குமே!

அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. 1115

தன் இடையின் நுண்மையை நினையாதவளாய், அனிச்ச மலரைக் காம்பு களையாமல் கூந்தலிலே சூடியுள்ளாளே! இவள் இடைக்கு இனி நல்ல பறைகள் ஒலிக்கமாட்டா!

மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். 1116

மதிதான் யாதென்றும், இம் மடந்தையது முகந்தான் யாதென்றும் வேறுபாடு அறியாமையால், வானத்து மீன்கள் தம் நிலையில் நில்லாது கலங்கிப் போயினவே!

அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. 1117

அவை கலங்குவதுதாம் ஏனோ? தேய்ந்து, பின்னர் வளர்ந்து நிறைவாகும் ஒளியுள்ள மதிக்கு உள்ளது போல, இவள் முகத்திலும் களங்கம் யாதும் உண்டோ?

மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மதி. 1118

மதியமே! இப் பெண்ணின் நல்லாளின் முகத்தைப் போல நீயும் ஒளிவிடுவதற்கு வல்லமை உடையையானால், நீயும் என்னால் காதலிக்கப்படுவாய்! நீதான் வாழ்க!

மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. 1119

மதியமே! மலர்போன்ற கண்களையுடைய இவளின் முகத்திற்கு நீயும் ஒத்திருப்பாய் ஆயின், பலரும் காணுமாறு இனி வானத்தில் தோன்றாதிருப்பாயாக!

அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். 1120

மிகமிக மென்மையான அனிச்ச மலர்களும், அன்னப் பறவைகளின் மெல்லிய இறகுகளும், இம் மாதின் அடிக்கு நெருஞ்சிப் பழம்போலத் துன்பத்தைச் செய்யுமே!


113. காதற் சிறப்புரைத்தல்

பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி
வாலெயிறு ஊறிய நீர். 1121

பணிவோடு பேசுகின்ற இவளது, வெண்மையான பற்களிடையே ஊறிவந்த நீரானது, பாலோடு தேனும் கலந்தாற் போல மிகுந்த சுவையினை உடையதாகும்!

உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொடு எம்மிடை நட்பு. 1122

இம் மடந்தைக்கும் எமக்கும் இடையிலுள்ள நட்பினது நெருக்கம், உடம்போடு உயிருக்கும் இடையேயுள்ள நட்பினது நெருக்கம் போன்றது ஆகும்.

கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம். 1123

கண்ணின் கருமணியில் உள்ள பாவையே! நீயும் போய் விடுவாயாக! யாம் விரும்புகின்ற அழகிய நுதலை உடையாளுக்கு இருப்பதற்கான இடம் வேறு இல்லை.

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல்
அதற்கன்னள் நீங்கும் இடத்து. 1124

இந்த ஆயிழையாள் என்னுடன் இருக்கும் போது, என் உயிருக்கு வாழ்வைத் தருகின்றாள்; நீங்கும் போதோ அவ்வுயிருக்குச் சாதலையே தருகின்றாள்!

உள்ளுவன் மன்யான் மறப்பின் மறப்பறியேன்
ஒள்ளமர்க் கண்ணாள் குணம். 1125

ஒள்ளியவாய் அமர்ந்த கண்களை உடையவளின் குணங்களை மறப்பதற்கே அறியேன்; அதனால், யான் அதை எப்போதாயினும் நினைப்பதும் செய்வேனோ!

கண்ணுள்ளின் போகார் இமைப்பின் பருகுவரா
நுண்ணியர்எம் காத லவர். 1126

எம் காதலுக்கு உரியவர் எம் கண்களிலிருந்து ஒரு போதுமே நீங்கார்; எம் கண்களை இமைத்தாலும் வருந்தார்; அவ்வளவு நுண்ணியவர் அவர்.

கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேம் கரப்பாக்கு அறிந்து. 1127

காதலுக்கு உரியவரான அவர் என் கண்ணிலேயே உள்ளனர்; ஆதலினாலே, அவர் மறைவாரோ என்று நினைத்து, என் கண்களுக்கு நான் மையும் எழுத மாட்டேன்.

நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து. 1128

காதலர் என் நெஞ்சத்தில் நிறைந்திருக்கின்றார்; அதனால், அவருக்குச் சூடு உண்டாவதை நினைத்து, யாம் சூடாக எதனையும் உண்பதற்கும் அஞ்சுவோம்!

இமைப்பின் கரப்பாக்கு அறிவல் அனைத்திற்கே
ஏதிலர் என்னுமிவ் வூர். 1129

‘இமைப்பின் அவர் மறைவார்’ என்று, கண்களை மூடாமலே துயிலொழித்துக் கிடப்போம்; அவ்வளவிற்கே, இவ்வூர் அவரை அன்பற்றவர் என்கின்றதே!

உவந்துறைவர் உள்ளத்துள் என்றும் இகந்துறைவர்
ஏதிலர் என்னுமிவ் வூர். 1130

எம் உள்ளத்துள்ளே அவர் உவப்போடு உள்ளார்; இருந்தும், ‘பிரிந்து போய்விட்டார்; அதனால் அன்பில்லாதவர்’ என்று இவ்வூர் அவர் மேல் பழி கூறுகின்றதே!


114. நாணுத் துறவுரைத்தல்

காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம்
மடலல்லது இல்லை வலி. 1131

காம நோயால் துன்புற்று, தம் காதலியின் அன்பைப் பெறாமல் வருந்தியவருக்கு வலிமையான பாதுகாப்பு, ‘மடலேறுதல்’ அல்லாமல், வேறு யாதும் இல்லை.

நோனா உடம்பும் உயிரும் மடலேறும்
நாணினை நீக்கி நிறுத்து. 1132

காதலியின் அன்பைப் பெறாத துயரத்தைத் தாங்கமுடியாத என் உடம்பும் உயிரும், நாணத்தை என்னிடமிருந்து நீக்கி நிறுத்திவிட்டு, மடலூரத் துணிந்துவிட்டன.

நாணொடு நல்லாண்மை பண்டுடையேன் இன்றுடையேன்
காமுற்றார் ஏறும் மடல். 1133

நாணத்தையும் நல்ல ஆண்மையையும் முன்னர்ப் பெற்றிருந்தேன்; இப்பொழுதோ பிரிவுத் துயரால் காமநோய் மிகுந்தவர் ஏறும் மடலையே பெற்றுள்ளேன்.

காமக் கடும்புனல் உய்க்கும் நாணொடு
நல்லாண்மை என்னும் புணை. 1134

நாணத்தோடு நல்லாண்மையும் ஆகிய தோணிகளைக் காமநோய் என்கின்ற கடுமையான வெள்ளம் அடித்துக் கொண்டு போகின்றதே! என்ன செய்வேன்!

தொடலைக் குறுந்தொடி தந்தாள் மடலொடு
மாலை உழக்கும் துயர். 1135

தொடர்பான குறுவளையல்களை அணிந்த இவள் தான், மாலைப் பொழுதிலே வருந்தும் துயரத்தையும், மடலேறும் நிலைமையையும் எனக்கு தந்துவிட்டாளே!

மடலூர்தல் யாமத்தும் உள்ளுவேன் மன்ற
படல்ஒல்லா பேதைக்கென் கண். 1136

அப் பேதையின் பொருட்டாக என் கண்கள் ஒரு போதும் மூடுதலைச் செய்யமாட்டா; அதனால், இரவின் நடுச்சாம வேளையிலும் மடலேறுதலையே நான் நினைத்திருப்பேன்!

கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப்
பெண்ணின் பெருந்தக்க தில். 1137

கடலைப் போன்ற காம நோயால் வருத்தமடைந்த போதும், மடலேறாமல், தன் துயரத்தைப் பொறுத்திருக்கும் பெண்ணைப் போன்ற பெருந்தகுதி ஆணுக்கு இல்லை.

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம்
மறையிறந்து மன்று படும். 1138

‘நிறை இல்லாதவர் இவர்’ என்றும், ‘இரங்கத்தவர் இவர்’ என்றும் பாராது, காமநோயானது, மறைப்பைக் கடந்து, மன்றத்தில் தானாக வெளிப்படுகின்றதே!

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம்
மறுகின் மறுகும் மருண்டு. 1139

பொறுத்திருந்ததனாலே எல்லாரும் அறிந்தாரில்லை என்று நினைத்தே, என் காமநோயானது, இவ்வாறு தெருவிலே பலரும் அறியுமாறு மயங்கித் திருகின்றது போலும்!

யாம்கண்ணின் காண நகுப அறிவில்லார்
யாம்பட்ட தாம்படா ஆறு. 1140

யாம் பட்ட இந்தப் பிரிவுத் துன்பத்தை அவர்களும் அடையாததாலேதான், அறிவில்லாதவர், யாம் கண்ணாற் காணும்படியாக எம் எதிரே நின்று சிரிக்கின்றனர்.


115. அலர் அறிவுறுத்தல்

அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால். 1141

ஊரிலே பழிச்சொல் எழுந்தும் என் உயிர் இன்னும் போகாது நிற்கின்றது; அ·து என் நல்வினையின் பயனால்தான் என்பதைப் பலரும் அறிய மாட்டார்கள்.

மலரன்ன கண்ணாள் அருமை அறியாது
அலரெமக்கு ஈந்ததிவ் வூர். 1142

குவளை மலரைப் போன்ற கண்களை உடையவளான இவளின் அருமையைப் பற்றி அறியாமல், இவளை எளியவளாகக் கருதி, இவ்வூரவர் அலரினைத் தந்தார்களே!

உறாஅதோ ஊரறிந்த கெளவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து. 1143

ஊர் அனைத்தும் அறிந்த இப் பழிச்சொற்கள் அவனையும் சென்று சேராதோ! சேருமாதலால், அதனைப் பெறாததைப் பெற்றாற் போன்றதாகவே யானும் கொள்வேன்.

கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து. 1144

ஊரார் உரைக்கும் பழிச்சொற்களாலே காமநோயும் நன்றாக மலர்கின்றது! அதுவும் இல்லையானால், என் ஆசையும் தன் மலர்ச்சியில்லாமல் சுருங்கிப் போய்விடுமே!

களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம்
வெளிப்படுந் தோறும் இனிது. 1145

களிக்குந்தோறும் களிக்குந்தோறும் மேன்மேலும் கள்ளுண்டலை விரும்பினாற் போல, காமமும், அலரால் வெளிப்பட வெளிப்பட மேலும் இனிமையாகின்றது.

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும்
திங்களைப் பாம்புகொண் டற்று. 1146

அவரைக் கண்டது எல்லாம் ஒரே ஒரு நாள் தான்; திங்களைப் பாம்பு கொண்டது எங்கும் பரவினாற் போல, ஊரலரும் அதற்குள் எங்கும் வெளிப்பட்டுப் பரவிவிட்டதே.

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல்
நீராக நீளும்இந் நோய். 1147

இக் காமநோயானது, ஊரவர் சொல்லும் பழிச் சொற்களை எருவாகவும், அது கேட்டு அன்னை சொல்லும் கடுஞ்சொல்லை நீராகவும் கொண்டு வளர்கின்றது.

நெய்யால் எரிநுதுப்பேம் என்றற்றால் கெளவையால்
காமம் நுதுப்பேம் எனல். 1148

‘பழிச்சொல்லால் காமத்தைத் தணித்துவிடுவோம்’ என்று முயலுதல், ‘நெய்யால் நெருப்பை அவிப்போம்’ என்பது போன்ற அறியாமைச் செயலாகும்.

அலர்நாண ஒல்வதோ அஞ்சலோம்பு என்றார்
பலர்நாண நீத்தக் கடை. 1149

‘அஞ்சாதே! பிரியேன்’ என்று என்னைத் தெளிவித்துக் கூடியவர், இந்நாள் பலரும் நாண நம்மைக் கைவிட்டுப் போனபோது, அவருக்கு நாணவும் நம்மால் இயலுமோ!

தாம்வேண்டின் நல்குவர் காதலர் யாம்வேண்டும்
கெளவை எடுக்கும்இவ் வூர். 1150

யாம் விரும்புகின்ற அலரினை இவ்வூரவரும் எடுத்துக் கூறுகின்றனர்; அதனால், எம் காதலரும் தாம் எம் உறவை விரும்பி வந்து எமக்கு அருளினைச் செய்வார்.


கற்பியல்

116. பிரிவாற்றாமை

செல்லாமை உண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை. 1151

பிரிந்து செல்லாமை உண்டானால் எனக்குச் சொல்வாயாக; பிரிந்து போய் விரைந்து திரும்பி வருவது பற்றியானால், அது வரையிலும் வாழ்ந்திருப்பவருக்குச் சொல்வாயாக.

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும்
புன்கண் உடைத்தால் புணர்வு. 1152

அவர் அன்பான பார்வையும் முன்னர் இனிதாய் இருந்தது; இப்பொழுதோ, பிரிவை நினைத்து அஞ்சுகின்ற துன்பத்தால், அவர் கூடுதலும் துன்பமாகத் தோன்றுகின்றது.

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும்
பிரிவோ ரிடத்துண்மை யான். 1153

அறிவு உடையவரிடமும், தாம் காதலித்தவரைப் பிரிவது ஒரு சமயத்தில் உள்ளதனால், அவர், ‘பிரியேன்’ என்று சொன்ன சொல்லையும் என்னால் நம்ப முடியவில்லை!

அளித்தஞ்சல் என்றவர் நீப்பின் தெளித்தசொல்
தேறியார்க்கு உண்டோ தவறு. 1154

அருள் செய்த காலத்தில், ‘அஞ்சாதே’ என்று கூறி, என் அச்சத்தைப் போக்கியவரே, இப்போது விட்டுப் பிரிவாரானால், அவரை நம்பிய நமக்கும் குற்றம் ஆகுமோ?

ஓம்பின் அமைந்தார் பிரிவோம்பல் மற்றவர்
நீங்கின் அரிதால் புணர்வு. 1155

என்னைக் காப்பதானால், காதலர் பிரியாதபடி தடுத்துக் காப்பாயாக; அவர் பிரிந்து போய்விட்டார் என்றால், மீண்டும் அவரைக் கூடுதல் என்பது நமக்கு அரிதாகும்.

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர்
நல்குவர் என்னும் நசை. 1156

‘பிரிவைப் பற்றிச் சொல்லும் கொடியவர் அவரானால்’, அவர் மீண்டும் திரும்பி வந்து நமக்கு இன்பம் தருவார் என்னும் நம் ஆசையும், பயன் இல்லாததே!

துறைவன் துறந்தமை தூற்றாகொல் முன்கை
இறைஇறவா நின்ற வளை. 1157

நம்மைத் தலைவன் பிரிந்து போயினான் என்பதை, மெலிந்த நம் முன்கையிலிருந்து கழலும் வளைகள், ஊரறிய எடுத்துக் காட்டித் தூற்ற மாட்டவோ?

இன்னாது இனன்இல்ஊர் வாழ்தல் அதனினும்
இன்னாது இனியார்ப் பிரிவு. 1158

தோழியவர் எவருமே இல்லாத ஊரில் குடியிருப்பது மிகத் துன்பமானது; இனிய காதலரைப் பிரிந்து தனித்திருப்பது, அதை விட மிகவும் துன்பமானது.

தொடிற்சுடின் அல்லது காமநோய் போல
விடிற்சுடல் ஆற்றுமோ தீ. 1159

தன்னைத் தொட்டால் சுடுவதல்லாமல், காமநோயைப் போலத் தன்னை அகன்று தொலைவில் விலகினால் சுடுவதற்குத் தீயும் ஆற்றல் உடையது ஆகுமோ!

அரிதாற்றி அல்லல்நோய் நீக்கிப் பிரிவாற்றிப்
பின்இருந்து வாழ்வார் பலர். 1160

காதலர் பிரிவைப் பொறுத்து, அதனால் வரும் நலிவையும் விலக்கி, பிரிவுத் துயரையும் தாங்கி, அதன் பின்னரும் உயிரோடு இருக்கும் மகளிர் உலகத்தில் பலர்!


117. படர்மெலிந்து இரங்கல்

மறைப்பேன்மன் யானி·தோ நோயை இறைப்பவர்க்கு
ஊற்றுநீர் போல மிகும். 1161

பிரிவுத் துன்பமான இந்த நோயை, பிறர் அறியாதபடி மறைப்பேன்; ஆனால், அ·து ஊற்று நீரைப் போல மேன்மேலும் சுரந்து சுரந்து பெருகுகின்றதே.

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு
உரைத்தலும் நாணுத் தரும். 1162

காமநோயை முழுவதும் மூடி மறைக்கவும் முடியவில்லை; நோயைச் செய்த காதலருக்குத் தூது அனுப்புவதும் என் பெண்ணைக்கு நாணம் தருகின்றதே!

காமமும் நாணும் உயிர்காவாத் தூங்கும்என்
நோனா உடம்பின் அகத்து. 1163

பிரிவுத் துயராலே நலியும் என் உயிரையே காவடித் தண்டாகக் கொண்டு, காமமும் நாணமும் இருபாலும் சம எடையாகத் தூங்குகின்றனவே?

காமக் கடல்மன்னும் உண்டே அதுநீந்தும்
ஏமப் புணைமன்னும் இல். 1164

காமமாகிய நோயும் கடலைப் போலப் பெருகியுள்ளது; அதைக் கடக்கும் தோணியாகிய காதலர்தாம் இப்போது நம்மோடு உடனில்லாமற் போயினர்!

துப்பின் எவனாவர் மன்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர். 1165

இனிமையான நட்புடைய நம்மிடையே துன்பத்தைச் செய்யும் நம் காதலர், பகையை வெல்வதற்கான வலிமை வேண்டும் போது என்னதான் செய்வாரோ?

இன்பம் கடல்மற்றுக் காமம் அ·தடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது. 1166

காம இன்பமானது அநுபவிக்கும் போது கடலளவு பெரிதாயுள்ளது; ஆனால், பிரிவுத் துன்பத்தால் வருத்தும் போது, அவ்வருத்தம் கடலை விடப் பெரிதாக உள்ளதே!

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாணேன்
யாமத்தும் யானே உளேன். 1167

காமமாகிய கடும்புனலை நீந்தி நீந்திக் கரை காணாமல் தவிக்கின்றேன்; இந்த நள்ளிரவிலும், யான் ஒருத்தியே தூங்காமல் வருந்தியபடி உள்ளேன்!

மன்னுயிர் எல்லாம் துயிற்றி அளித்திரா
என்னல்லது இல்லை துணை. 1168

இந்த இராக்காலமும், எல்லா உயிர்களையும் உறங்கச் செய்துவிட்டு, என்னையன்றி யாரையும் இந்நள்ளிரவில் தனக்குத் துணையில்லாமல் உள்ளதே!

கொடியார் கொடுமையின் தாம்கொடிய இந்நாள்
நெடிய கழியும் இரா. 1169

பிரிவுத் துயராலே வருந்தும் போது மிக நீண்டது போலக் கழிகின்ற இரவுப் பொழுதானது, நம்மைப் பிரிந்து போன காதலரினும் மிகமிகக் கொடுமையானது.

உள்ளம்போன்று உள்வழிச் செல்கிற்பின் வெள்ளநீர்
நீந்தல மன்னோஎன் கண். 1170

என் உள்ளத்தைப் போலவே, உடலும், அவர் இருக்கும் இடத்திற்கே இப்போதே செல்ல முடிந்ததானால், என் கண்கள் இப்படிக் கண்ணீர் வெள்ளத்தில் நீந்தாவே!


118. கண் விதுப்பு அழிதல்

கண்தாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாம்காட்ட யாம்கண் டது. 1171

இக்கண்கள் அவரைக் காட்டியதால் அல்லவோ நீங்காத இக் காமநோயை யாமும் பெற்றோம்; அவை, இன்று என்னிடம் காட்டச் சொல்லி அழுவது எதனாலோ?

தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்பது எவன்? 1172

மேல்விளைவு பற்றி ஆராயாமல், அன்று அவரை நோக்கி மகிழ்ந்த கண்கள், இன்று, என் துயரைப் பகுத்து உணராமல், தாமும் துன்பப்படுவதுதான் எதனாலோ?

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து. 1173

அன்று, தாமே விரைந்து பார்த்தும், இன்று தாமே அழுகின்ற கண்கள், நம்மால் அதன் அறியாமை கருதிச் சிரிக்கத் தகுந்த இயல்பினையே உடையதாகும்.

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து. 1174

அன்று, யான் உய்யாத அளவு தீராத காமநோயை என்னிடம் நிறுத்திய கண்கள், இன்று, தாமும் அழுவதற்கு மாட்டாதபடி நீர்வற்றி வறண்டு விட்டனவே!

படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றாக்
காமநோய் செய்தஎன் கண். 1175

கடலிலும் பெரிதான காமநோயை அன்று எனக்குச் செய்த இக் கண்கள், அத் தீவினையால், தாமும் உறங்காமல் இவ்விரவுப் பொழுதில் துன்பத்தை அடைகின்றன.

ஓஒ இனிதே எமக்கிந்நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது. 1176

எமக்கு இத்தகைய காமநோயைச் செய்த கண்கள், தாமும் துயில் பெறாமல் இப்படி அழுகையில் ஈடுபட்டது, காண்பதற்கு மிகவும் இனியதாகும்.

உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண். 1177

விரும்பி உள் நெகிழ்ந்துவிடாதே, அன்று அவரைக் கண்டு மகிழ்ந்த கண்கள், இன்று துயிலாது வருந்தி வருந்தித் தம்மிடமுள்ள நீரும் அற்றே போவதாக!

பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணாது அமைவில கண். 1178

உள்ளத்தில் விருப்பமில்லாமல், பேச்சால் அன்பு காட்டியவர் இவ்விடத்தே உள்ளனர்; அதனால் என்ன பயன்? அவரைக் காணாமல் என் கண்கள் அமைகின்றிலவே!

வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண். 1179

காதலர் வராத போது, அவர் வரவை எதிர்பார்த்துத் தூங்கா; வந்த போது, பிரிவஞ்சித் துயிலா; இருவழியும் கண்கள் பொறுத்தற்கரிய துன்பத்தையே அடைந்தன!

மறைபெறல் ஊரார்க்கு அரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து. 1180

எம்மைப் போல் அறைபறையாகிய கண்களை உடையவரின், நெஞ்சில் அடக்கியுள்ள மறையை அறிதல், இவ்வூரிலே உள்ளவர்க்கு மிகவும் எளியதாகும்.


119. பசப்புறு பருவரல்

நயந்தவர்க்கு நல்காமை நேர்ந்தேன் பசந்தவென்
பண்பியார்க்கு உரைக்கோ பிற. 1181

என்னை விரும்பிய காதலரின் பிரிவுக்கு அந்நாளிலே உடன்பட்ட யான், இப்பொழுது பசந்த என் இயல்பை யாருக்குச் சென்று எடுத்துச் சொல்வேன்!

அவர்தந்தார் என்னும் தகையால் இவர்தந்தென்
மேனிமேல் ஊரும் பசப்பு. 1182

‘அவர் தந்தார்’ என்னும் உரிமையினாலே, இப் பசப்புத் தானும், என் உடலின் மேல் உரிமையோடு பற்றிப் படர்ந்து மேனி எங்கும் நிறைகின்றதே!

சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
நோயும் பசலையும் தந்து. 1183

என் அழகையும் நாணத்தையும் அவர் தம்மோடு எடுத்துக் கொண்டார்; அதற்குக் கைம்மாறாகக் காமநோயையும் பசலையையும் எனக்குத் தந்துள்ளார்!

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால்
கள்ளம் பிறவோ பசப்பு. 1184

அவரையே யான் நினைத்திருப்பேன்; அவர் திறங்களைப் பற்றியே பேசுவேன்; அவ்வாறாகவும், பசலையும் வந்து படர்ந்ததுதான் பெரிய வஞ்சனையாய் இருக்கின்றது!

உவக்காண்எம் காதலர் செல்வார் இவக்காண்என்
மேனி பசப்பூர் வது. 1185

அதோ பார், என் காதலர் என்னைப் பிரிந்து போகின்றார்; இதோ பார், அதற்குள்ளேயே என் உடலில் பசலையானது வந்து பற்றிப் படருகின்றது!

விளக்கற்றம் பார்க்கும் இருளேபோல் கொண்கன்
முயக்கற்றம் பார்க்கும் பசப்பு. 1186

விளக்கின் முடிவை எதிர்பார்த்துத் தான் வரக் காத்திருக்கும் இருளைப் போல, என் தலைவனுடைய தழுவலின் முடிவைப் பசலையும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது.

புல்லிக் கிடந்தேன் புடைபெயர்ந்தேன் அவ்வளவில்
அள்ளிக்கொள் வற்றே பசப்பு. 1187

தலைவனைத் தழுவியபடியே கிடந்தேன்; பக்கத்தில் சிறிது புரண்டேன்; அந்தப் பிரிவுக்கே பசலையும் அள்ளிக் கொள்வது போல, என் மீது மிகுதியாகப் பரவி விட்டதே.

பசந்தாள் இவள்என்பது அல்லால் இவளைத்
துறந்தார் அவர்என்பார் இல். 1188

‘இவள் பசந்தாள்’ என்று என்னைப் பழித்துப் பேசுவது அல்லாமல், இவளைக் காதலர் கைவிட்டுப் பிரிந்தார் என்று பேசுபவர் யாரும் இல்லையே!

பசக்கமன் பட்டாங்கென் மேனி நயப்பித்தார்
நன்னிலையர் ஆவர் எனின். 1189

‘பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் நல்ல நிலையினர் ஆவார்’ என்றால், என்னுடைய மேனியும் உள்ளபடியே பசலை நோயினை அடைவதாக!

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றார் எனின். 1190

‘பிரிவுக்கு உடன்படச் செய்து பிரிந்து போனவர், நமக்கு அருள் செய்யாதது பற்றித் தூற்றார்’ என்றால், யான் பசந்தேன் என்று பேர்பெறுவதும் நல்லதேயாகும்!


120. தனிப்படர் மிகுதி

தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி. 1191

தாம் விரும்பும் காதலர், தம்மையும் விரும்பும் பேறு பெற்றவர்கள், காதல் வாழ்வின் பயனாகிய விதையற்ற கனியை நுகரப் பெற்றவர்கள் ஆவர்.

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வார் அளிக்கும் அளி. 1192

தம்மை விரும்புபவருக்கு, அவரை விரும்புகிற காதலர் அளிக்கும் அன்பானது, உயிர்வாழ்பவருக்கு, வானம் மழை பெய்து உதவினாற் போன்றது ஆகும்.

வீழுநர் வீழப் படுவார்க்கு அமையுமே
வாழுநம் என்னும் செருக்கு. 1193

காதலரால் விரும்பப்படுகிறவருக்கு, இடையில் பிரிவுத் துன்பம் வந்தாலும், ‘மீண்டும் யாம் இன்பமாக வாழ்வோம்’ என்னும் செருக்குப் பொருந்துவது ஆகும்.

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅர் எனின். 1194

தாம் காதலிக்கின்ற காதலரால் தாமும் விரும்பப்படும் தன்மையைப் பெறாதவர் என்றால், அம் மகளிர், முன்செய்த நல்வினைப் பயனை உடையவரே அல்லர்.

நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ
தாம்காதல் கொள்ளாக் கடை. 1195

நாம் காதல் கொண்டவர், நம் மீது தாமும் காதல் கொள்ளாவிட்டால், நமக்கு என்ன நன்மையைத் தான் செய்யப் போகின்றார்!

ஒருதலையான் இன்னாது காமம்காப் போல
இருதலை யானும் இனிது. 1196

‘காதல் ஒருதலையானது’ என்றால் மிகவும் துன்பமானது; காவடித் தண்டின் பாரத்தைப் போல இரு பக்கமும் ஒத்தபடி இருந்ததானால், அதுவே மிகவும் இனிமையானது.

பருவரலும் பைதலும் காணான்கொல் காமன்
ஒருவர்கண் நின்றொழுகு வான். 1197

இருவரிடத்திலும் ஒத்து நடக்காமல் ஒருவரிடம் மட்டும் காமன் நின்று நடப்பதால், என் வருத்தத்தையும் துன்பத்தையும் அவன் காண மாட்டானோ?

வீழ்வாரின் இன்சொல் பெறாஅது உலகத்து
வாழ்வாரின் வன்கணார் இல். 1198

தாம் விரும்பிய காதலரின் இனிய சொல்லைப் பெறாமல், உலகத்தில் துன்புற்று வாழ்கின்ற பெண்களை விட வன்கண்மை உடையவர்கள், யாரும் இல்லை.

நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்டு
இசையும் இனிய செவிக்கு. 1199

யான் விரும்பிய காதலர் மீண்டும் வந்து அன்பு செய்யார் என்றாலும், அவரைப் பற்றிய புகழைப் பிறர் சொல்லக் கேட்பதும், காதுகளுக்கு இனிமையாக இருக்கின்றது.

உறாஅர்க்கு உறுநோய் உரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு. 1200

நெஞ்சமே! நின்னிடம் அன்பற்றவருக்கு நின் நோயைச் சென்று சொல்லுகிறாயே; அதை விட எளிதாகக் கடலைத் தூர்ப்பதற்கு நீயும் முயல்வாயாக.


121. நினைந்தவர் புலம்பல்

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால்
கள்ளினும் காமம் இனிது. 1201

நினைத்தாலும் தீராத பெருமகிழ்ச்சியை எமக்குச் செய்வதனால், உண்டால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளினும் காமமே உலகத்தில் இனிமை தருவதாகும்.

எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார்
நினைப்ப வருவதொன்று ஏல். 1202

யாம் விரும்புகின்ற காதலரை நினைத்தாலும், பிரிவுத் துன்பம் இல்லாமல் போகின்றது; அதனால், காமமும் எவ்வளவானாலும் ஒருவகையில் இனிமையானதே!

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும். 1203

தும்மல் எழுவது போலத் தோன்றி எழாமல் அடங்குகின்றதே! அதனால், நம் காதலர் நினைப்பவர் போலிருந்தவர் நம்மை மறந்து நினையாமற் போயினாரோ!

யாமும் உளேங்கொல் அவர்நெஞ்சத்து எந்நெஞ்சத்து
ஓஒ உளரே அவர். 1204

எம் நெஞ்சில் காதலராகிய அவர் எப்போதுமே உள்ளனர்; அது போலவே, அவருடைய நெஞ்சில், நாமும் நீங்காமல் எப்போதும் இருக்கின்றோமோ?

தம்நெஞ்சத்து எம்மைக் கடிகொண்டார் நாணார்கொல்
எம்நெஞ்சத்து ஓவா வரல். 1205

தம்முடைய நெஞ்சில் எம்மை வரவிடாமல் காவல் செய்து கொண்ட நம் காதலர், நம் உள்ளத்தில் தாம் ஓயாமல் வருவதைப் பற்றி வெட்கப்பட மாட்டாரோ?

மற்றியான் என்னுளேன் மன்னோ அவரொடி யான்
உற்றநாள் உள்ள உளேன். 1206

காதலரோடு இன்பமாயிருந்த அந்த நாட்களின் நினைவால் தான் நான் உயிரோடிருக்கிறேன்; வேறு எதனால் நான் அவரைப் பிரிந்தும் உயிர் வாழ்கின்றேன்?

மறப்பின் எவனாவன் மற்கொல் மறப்பறியேன்
உள்ளினும் உள்ளம் சுடும். 1207

அவரை மறந்தால் என்ன ஆவேனோ? அதனால், அவரை மறப்பதற்கும் அறியேன்; மறக்க நினைத்தால், அந்த நினைவும் என் உள்ளத்தைச் சுடுகின்றதே!

எனைத்து நினைப்பினும் காயார் அனைத்தன்றோ
காதலர் செய்யும் சிறப்பு. 1208

காதலரை எவ்வளவு அதிகமாக நினைத்தாலும், அவர் என்மேல் சினந்து கொள்ளவே மாட்டார்; நம் காதலர் நமக்குச் செய்யும் சிறந்த உதவியே அதுதான்!

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து. 1209

‘நாம் இருவரும் வேறானவர் அல்லேம்’ என்று சொல்லும் அவர், இப்போது அன்பில்லாமல் இருப்பதை மிகவும் நினைந்து, என் இனிய உயிரும் அழிகின்றதே.

விடாஅது சென்றாரைக் கண்ணினால் காணப்
படாஅதி வாழி மதி. 1210

மதியமே! என் உள்ளத்தில் பிரியாதிருந்து, என்னைப் பிரிந்து சென்ற காதலரை என் கண்ணால் தேடிக் காண்பதற்காக, நீயும் வானத்தில் மறையாமல் இருப்பாயாக!


122. கனவுநிலை உரைத்தல்

காதலர் தூதொடு வந்த கனவினுக்கு
யாதுசெய் வேன்கொல் விருந்து. 1211

பிரிவால் வருந்திய நான் அயர்ந்து கண் உறங்கிய போது, காதலர் அனுப்பிய தூதோடும் வந்த கனவுக்கு, யான் விருந்தாக என்ன கைம்மாறு செய்யப் போகின்றேன்!

கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு
உயலுண்மை சாற்றுவேன் மன். 1212

யான் விரும்பும் போது என் கண்கள் தூங்குமானால், கனவில் வந்து தோன்றும் காதலருக்கு, யான் தப்பிப் பிழைத்திருக்கும் உண்மையைச் சொல்வேன்!

நனவினால் நல்கா தவரைக் கனவினால்
காண்டலின் உண்டென் உயிர். 1213

நனவிலே வந்து நமக்கு அன்பு செய்யாதிருக்கின்ற காதலரை, கனவிலாவது கண்டு மகிழ்வதனால் தான், என் உயிரும் இன்னமும் போகாமல் இருக்கின்றது.

கனவினான் உண்டாகும் காமம் நனவினான்
நல்காரை நாடித் தரற்கு. 1214

நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடிக் கொண்டு வருவதற்காகவே, அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் கனவில் வந்து நமக்குத் தோன்றுகின்றன.

நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது. 1215

முன்பு நனவில் கண்ட இன்பமும் அந்தப் பொழுதளவிலே இனிதாயிருந்தது; இப்பொழுது காணும் கனவும், காணும் அந்தப் பொழுதிலே நமக்கு இனிதாகவே யுள்ளது.

நனவென ஒன்றில்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன். 1216

நனவு என்று சொல்லப்படும் ஒன்று இல்லையானால், கனவில் வருகின்ற நம் காதலர் நம்மை விட்டு எப்போதுமே பிரியாதிருப்பார் அல்லவோ!

நனவினால் நல்காக் கொடியார் கனவனால்
என்எம்மைப் பீழிப் பது. 1217

நனவில் வந்து நமக்கு அன்பு செய்வதற்கு நினையாத கொடுமையாளரான காதலர், கனவிலே வந்து மட்டும் நம்மை வருத்துவது தான் எதனாலோ?

துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால்
நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. 1218

தூங்கும் போது கனவிலே என் தோள்மேலராகக் காதலர் வந்திருப்பார்; விழித்து எழும் போதோ, விரைவாக என் நெஞ்சில் உள்ளவராக ஆகின்றார்!

நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர். 1219

கனவிலே காதலரை வரக்காணாத மகளிரே, நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைக் குறித்து வருத்தப்பட்டு, மனம் நொந்து கொள்வார்கள்.

நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால்
காணார்கொல் இவ்வூ ரவர். 1220

‘நனவிலே நம்மைவிட்டுப் பிரிந்து போனார்’ என்று அவரைப் பற்றி இவ்வூரார் பழித்துப் பேசுகின்றார்களே! இவர்கள் எம்போல் கனவில் தம் காதலரைக் காண்பதில்லையோ?


123. பொழுதுகண்டு இரங்கல்

மாலையோ அல்லை மணந்தார் உயிருண்ணும்
வேலைநீ வாழி பொழுது. 1221

பொழுதே! நீ மாலைக் காலமே அல்லை; காதலரோடு கூடியிருந்து, பிறகு பிரிவால் கலங்கியிருக்கும் மகளிரின் உயிரையுண்ணும் முடிவு காலமே ஆவாய்!

புன்கண்ணை வாழி மருள்மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை. 1222

மயங்கிய மாலைப்பொழுதே! எம்மைப்போலவே நீயும் துன்பமுற்றுத் தோன்றுகிறாயே! நின் துணையும் என் காதலரைப் போலவே இரக்கம் இல்லாததோ!

பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும். 1223

பனி தோன்றிப் பசந்துவந்த மாலைக் காலமானது, எனக்கு வருத்தம் தோன்றி மென்மேலும் வளரும்படியாகவே இப்போது வருகின்றது போலும்!

காதலர் இல்வழி மாலை கொலைக்களத்து
ஏதிலர் போல வரும். 1224

காதலர் அருகே இல்லாத போது, கொலை செய்யும் இடத்திலே ஆறலைப்பார் வருவதைப் போல, இம் மாலையும் என் உயிரைக் கொல்வதற்காகவே வருகின்றதே!

காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை? 1225

காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மைதான் யாது? என்னை இப்படிப் பெரிதும் வருத்துகின்ற மாலைப் பொழுதுக்கு யான் செய்த தீமையும் யாதோ?

மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்த திலேன். 1226

மாலைப் பொழுது இவ்வாறு துன்பம் செய்யும் என்பதை, காதலர் என்னை விட்டுப் பிரியாமல் கூடியிருந்த அந்தக் காலத்தில் யான் அறியவே இல்லையே!

காலை அரும்பிப் பகலெல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய். 1227

காலையிலே அரும்பாகித் தோன்றி, பகலெல்லாம் பேரரும்பாக வளர்ந்து, மாலைப் பொழுதிலே மலர்ந்து மலராக விரிகின்றது. இந்தக் காமமாகிய நோய்.

அழல்போலும் மாலைக்குத் தூதாகி ஆயன்
குழல்போலும் கொல்லும் படை. 1228

நெருப்பைப் போலச் சுடுகின்ற மாலைப் பொழுதுக்குத் தூதாகி, ஆயனுடைய புல்லாங்குழலின் இசையும், என்னைக் கொல்லும் படையாக வருகின்றதே!

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு
மாலை படர்தரும் போழ்து. 1229

அறிவு மயங்கும் படியாக மாலைப்பொழுது வந்து படர்கின்ற இப்பொழுதிலே, இந்த ஊரும் மயங்கியதாய், என்னைப் போலத் துன்பத்தை அடையும்.

பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை
மாயும்என் மாயா உயிர். 1230

பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைத்து, பிரிவுத் துன்பத்தாலே போகாமல் நின்ற என் உயிரானது, இம் மாலைப் பொழுதில் நலிவுற்று மாய்கின்றதே!


124. உறுப்புநலன் அழிதல்

சிறுமை நமக்கொழியச் சேட்சென்றார் உள்ளி
நறுமலர் நாணின கண். 1231

இந்தத் துன்பத்தை நமக்கு விட்டுவிட்டுத் தொலைவாகச் சென்றுவிட்ட காதலரை நினைத்து அழுவதனாலே, என் கண்கள், தம் அழகிழந்து நறுமலர்களுக்கு நாணின.

நயந்தவர் நல்காமை சொல்லுவ போலும்
பசந்து பனிவாரும் கண். 1232

பசலை நிறத்தைப் பெற்று நீரைச் சொரியும் கண்கள், நம்மை முன்பு விரும்பிய நம் காதலர், இப்போது அன்பு செய்யாததைப் பிறருக்கும் சொல்வன போல் உள்ளனவே!

தணந்தமை சால அறிவிப்ப போலும்
மணந்தநாள் வீங்கிய தோள். 1233

காதலரோடு கூடியிருந்த நாட்களிலே பூரித்திருந்த தோள்கள் மெலிவடைந்து, அவருடைய பிரிவைப் பிறருக்கு நன்றாகத் தெரிவிப்பவை போல் உள்ளனவே!

பணைநீங்கிப் பைந்தொடி சோரும் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள். 1234

தமக்கு துணையான காதலரைப் பிரிந்ததால், தம் பழைய அழகுகெட்டு வாடிய தோள்கள், தம் பசிய தொடிகளையும் சுழலச் செய்கின்றனவே!

கொடியார் கொடுமை உரைக்கும் தொடியொடு
தொல்கவின் வாடிய தோள். 1235

தொடிகளும் கழன்று வீழ, தம் பழைய அழகும் கெட்டுப் போன தோள்கள், நம் துன்பத்தை அறியாத கொடியவரின் கொடுமையை ஊரறியச் சொல்கின்றனவே!

தொடியொடு தோள்நெகிழ நோவல் அவரைக்
கொடியர் எனக்கூறல் நொந்து. 1236

தொடிகள் கழன்று வீழ்ந்து, தோள்களும் மெலிந்ததனால், காண்பவர் மனம் நொந்தவராக, அவரைக் ‘கொடியவர்’ என்று கூறக்கேட்டு, யானும் வருந்துவேனே!

பாடுபெறுதியோ நெஞ்சே கொடியார்க்கென்
வாடுதோட் பூசல் உரைத்து. 1237

நெஞ்சமே! கொடியவராகிவிட்ட காதலருக்கு என் வாடிய தோள்களின் ஆரவாரத்தை எடுத்துச் சொல்லி உதவியைச் செய்ததனால், நீயும் பெருமை அடையாயோ!

முயங்கிய கைகளை ஊக்கப் பசந்தது
பைந்தொடிப் பேதை நுதல். 1238

தழுவியிருந்த கைகளைத் தளர்த்திய அப்பொழுதிலேயே, பசிய தொடியணிந்த இப் பேதைமை உடையவளின் நெற்றியும் பசலை நிறத்தை அடைந்துவிட்டதே!

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற
பேதை பெருமழைக் கண். 1239

முயக்கத்திற்கு இடையே குளிர்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிதான மழை போன்ற கண்களும் அழகிழந்து, பசலை நிறம் அடைந்து விட்டனவே!

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே
ஒண்ணுதல் செய்தது கண்டு. 1240

காதலியின் ஒளியுள்ள நெற்றி பசலை நிறம் அடைந்ததைக் கண்டு, அவளுடைய கண்களின் பசலை நிறமும் மேலும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது!


125. நெஞ்சொடு கிளத்தல்

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும்
எவ்வநோய் தீர்க்கும் மருந்து. 1241

நெஞ்சமே! இந்தத் துன்பம் தரும் நோயினைத் தீர்க்கும் மருந்து ஏதாயினும் ஒன்றை நினைத்துப் பார்த்து, எனக்கு நீயாயினும் சொல்ல மாட்டாயோ?

காதல் அவரிலர் ஆகநீ நோவது
பேதைமை வாழியென் நெஞ்சு. 1242

நெஞ்சமே! அவர்தாம் நம்மிடம் காதல் இல்லாதவராக இருக்கவும், நீ மட்டும் அவரையே எப்போதும் நினைந்து நினைந்து வருந்துவது பேதைமை ஆகும்.

இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல்
பைதல்நோய் செய்தார்கண் இல். 1243

நெஞ்சமே! என்னுடன் இருந்தும் அவரையே நினைந்து வருந்துவது ஏன்? இத் துன்பநோயைச் செய்தவரிடம் நம்மேல் அன்புற்று நினைக்கும் தன்மை இல்லையே!

கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத்
தின்னும் அவர்க்காணல் உற்று. 1244

நெஞ்சமே! நீ அவரிடம் போகும் போது, இக்கண்களையும் அழைத்துப் போவாயாக! அவரைக் காண வேண்டும் என்று இவை என்னைப் பிடுங்கித் தின்கின்றன.

செற்றார் எனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம்
உற்றால் உறாஅ தவர். 1245

நெஞ்சமே! நாம் விரும்பி நாடினாலும், நம்மை நாடாத அவர், நம்மை வெறுத்து விட்டார் என்று நினைத்து, அவரைக் கைவிட நம்மால் முடியுமோ?

கலந்துணர்த்தும் காதலர்க் கண்டாற் புலந்துணராய்
பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. 1246

என் நெஞ்சமே! ஊடிய போது ஊடலுணர்த்திக் கூடுகின்றவரான காதலரைக் கண்டால், நீ பிணங்கி உணரமாட்டாய்; பொய்யான சினம் கொண்டு தான் காய்கின்றாய்!

காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே
யானோ பொறேன்இவ் விரண்டு. 1247

நல்ல நெஞ்சமே! ஒன்று காமத்தை விட்டுவிடு; அல்லது நாணத்தை விட்டுவிடு; இந்த இரண்டையும் சேர்த்துப் பொறுத்துக் கொண்டிருக்க என்னால் முடியாது.

பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர்
பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. 1248

என் நெஞ்சமே! நம் துன்பத்தை நினைந்து இரங்கி வந்து அவர் அன்பு செய்யவில்லை என்று ஏங்கிப் பிரிந்த காதலரின் பின்னாகச் செல்கின்றாயே, நீ பேதைமை உடையை!

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு. 1249

என் நெஞ்சமே! காதலர் நம் உள்ளத்துக்குள்ளேயே இருப்பவராகவும், நீதான் அவரை நினைத்து யாரிடத்திலே போய்த் தேடிச் செல்கின்றாயோ?

துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா
இன்னும் இழத்தும் கவின். 1250

நம்மோடு சேர்ந்திருக்காமல் நம்மைப் பிரிந்து சென்றவரை நம் நெஞ்சிலேயே உடையவராய் நாம் இருக்கும் போது, இன்னும், நாம் அழகிழந்து வருகின்றோமே!


126. நிறையழிதல்

காமக் கணிச்சி உடைக்கும் நிறையென்னும்
நாணுத்தாழ் வீழ்த்த கதவு. 1251

‘நாணம்’ என்னும் தாழ்பொருந்திய ‘நிறை’ என்னும் கதவினைக் காமம் ஆகிய கோடறியானது உடைத்துத் தகர்த்து விடுகின்றது.

காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை
யாமத்தும் ஆளும் தொழில். 1252

காமம் என்று சொல்லப்படும் ஒன்று கொஞ்சமேனும் கண்ணோட்டமே இல்லாதது; அ·து என் நெஞ்சத்தை இரவிலும் ஏவல் செய்து ஆள்கின்றது.

மறைப்பேன்மன் காமத்தை யானோ குறிப்பின்றித்
தும்மல்போல் தோன்றி விடும். 1253

யான் காமநோயை என்னுள்ளேயே மறைக்க முயல்வேன்; ஆனால் அதுவோ, என் குறிப்பின்படி மறையாமல், தும்மல் போலத் தானே புறத்து வெளிப்பட்டு விடும்.

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும். 1254

இதுவரையில் நிறையோடு இருப்பதாகவே நினைத்திருந்தேன்; ஆனால், என் காமம், என்னுள் மறைந்திருந்த எல்லையைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றதே!

செற்றார்பின் செல்லாப் பெருந்தகைமை காமநோய்
உற்றார் அறிவதொன்று அன்று. 1255

தம்மை வெறுத்தவர் பின்னே அவர் அன்பை வேண்டிச் செல்லாத பெருந்தகைமை, காமநோய் உற்றவர் அறியும் ஒரு தன்மையே அன்று.

செற்றவர் பின்சேறல் வேண்டி அளித்தரோ
எற்றென்னை உற்ற துயர். 1256

வெறுத்துக் கைவிட்ட காதலரின் பின் செல்லுதலை விரும்பிய நிலையிலே இருப்பதனால், என்னை அடைந்த இக் காமநோயானது எத்தன்மை உடையதோ!

நாணென ஒன்றோ அறியலம் காமத்தால்
பேணியார் பெட்ப செயின். 1257

நாம் விரும்பிய காதலரும், காமத்தால் நமக்கு வேண்டியவற்றைச் செய்தாரானால், நாமும் ‘நாணம்’ என்று குறிக்கப்படும் ஒன்றையும் அறியாதேயே இருப்போம்.

பன்மாயக் கள்வன் பணிமொழி அன்றோநம்
பெண்மை உடைக்கும் படை. 1258

பல மாயங்களையும் அறிந்த கள்வனாகிய காதலனின் பணிவான சொற்கள் அல்லவோ, அன்று, தம் பெண்மை என்னும் அரணை உடைக்கும் படையாய் இருந்தன.

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டு. 1259

ஊடுவேன் என்று நினைத்துச் சென்றேன்; ஆனால், என் நெஞ்சம் என்னை மறந்து அவரோடு சென்று கலந்து விடுவதைக் கண்டு, அவரைத் தழுவினேன்.

நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல். 1260

தீயிலே கொழுப்பை இட்டாற் போல உருகும் நெஞ்சை உடையவரான மகளிருக்கு, ‘இசைந்து ஊடி நிற்போம்’ என்று, ஊடும் தன்மைதான் உண்டாகுமோ!


127. அவர்வயின் விதும்பல்

வாளற்றுப் புற்கென்ற கண்ணும் அவர்சென்ற
நாளொற்றித் தேய்ந்த விரல். 1261

அவர் வருவாரென வழியையே பார்த்துக் கண்களில் ஒளியும் கெட்டன; அவர் பிரிந்த நாட்களைக் குறித்துத் தொட்டுத் தொட்டு விரல்களும் தேய்ந்து போயின.

இலங்கிழாய் இன்று மறப்பின்என் தோள்மேல்
கலங்கழியும் காரிகை நீத்து. 1262

தோழி! அவரைப் பிரிந்து வருந்திருக்கும் இன்றைக்கும், அவரை மறந்தால், என் தோள்கள் அழகுகெட்டு மெலியும்; என் தோள் அணிகளும் கழலும்படி நேர்ந்துவிடும்.

உரன்நசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரல்நசைஇ இன்னும் உளேன். 1263

வெற்றியை விரும்பி, ஊக்கமே துணையாக, வேற்று நாட்டிற்குச் சென்றுள்ள காதலர் திரும்பி வருதலைக் காண்பதற்கு விரும்பியே, இன்னும் உயிரோடுள்ளேன்.

கூடிய காமம் பிரிந்தார் வரவுள்ளிக்
கோடுகொ டேறுமென் நெஞ்சு. 1264

முன்னர்க் கூடியிருந்த காம இன்பத்தையும் மறந்து, பிரிந்து போனவரின் வரவை நினைத்து, என் நெஞ்சம் மரக்கிளை தோறும் ஏறி ஏறிப் பார்க்கின்றதே!

காண்கமன் கொண்கனைக் கண்ணாரக் கண்டபின்
நீங்கும்என் மென்தோள் பசப்பு. 1265

என் காதலனைக் கண்ணாரக் காண்பேனாக; அவ்வாறு கண்ட பின் என் மெல்லிய தோள்களில் உண்டாகியுள்ள பசலைநோயும் தானாகவே நீங்கிப் போய்விடும்.

வருகமன் கொண்கன் ஒருநாள் பருகுவன்
பைதல்நோய் எல்லாம் கெட. 1266

என் காதலன் ஒரு நாள் மட்டும் என்னிடம் வருவானாக; வந்தால், என் துன்ப நோய் எல்லாம் தீரும்படியாக, அவனோடு, இன்பத்தை நானும் பருகுவேன்.

புலப்பேன்கொல் புல்லுவேன் கொல்லோ கலப்பேன்கொல்
கண்அன்ன கேளிர் விரன். 1267

என் கண் போன்ற காதலர் வருவாரானால், யான் அவரோடு ஊடுவேனோ? அல்லது தழுவிக் கொள்வேனோ? அல்லது ஆவலோடு கலந்து இன்புறுவேனோ? என்ன செய்வேன்?

வினைகலந்து வென்றீக வேந்தன் மனைகலந்து
மாலை அயர்கம் விருந்து. 1268

வேந்தன் இவ் வினையிலே தானும் கலந்து வெற்றி அடைவானாக; யானும், என் மனைக்கண் சென்று சேர்ந்து, மாலைப் பொழுதில், அவளோடு விருந்தை அனுபவிப்பேன்.

ஒருநாள் எழுநாள்போல் செல்லும்சேண் சென்றார்
வருநாள்வைத்து ஏங்கு பவர்க்கு. 1269

தொலைவிடத்துக்குப் போய் பிரிந்து சென்ற காதலர் வரும் நாளை மனத்தில் வைத்து ஏங்கும் மகளிருக்கு, ஒரு நாள் தானும் ஏழுநாள் போல் நெடியதாகக் கழியும்.

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம்
உள்ளம் உடைந்துக்கக் கால். 1270

பிரிவுத் துயரம் தாங்காமல் உள்ளம் உடைந்து அழிந்து போய்விட்டால், அவரைப் பெறுவதனால் என்ன? பெற்றால் தான் என்ன? அவரோடு பொருந்தினால் தான் என்ன?


128. குறிப்பறிவுறுத்தல்

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன் றுண்டு. 1271

நீதான் மறைந்தாலும், நின் மறைப்பையும் கடந்து, நின் கண்கள் எனக்குச் சொல்ல முற்படுகின்ற ஒரு செய்தியும் நின்னிடத்தில் உள்ளதாகும்.

கண்ணிறைந்த காரிகைக் காம்பேர்தோட் பேதைக்குப்
பெண்நிறைந்த நீர்மை பெரிது. 1272

கண் நிறைந்த பேரழகும், மூங்கில் போலும் அழகிய தோள்களும் கொண்ட என் காதலிக்கு, பெண்மை நிறைந்த தன்மையோ பெரிதாக உள்ளது.

மணியில் திகழ்தரு நூல்போல் மடந்தை
அணியில் திகழ்வதொன்று உண்டு. 1273

நூலில் கோத்த மணியினுள்ளே காணப்படும் நூலைப் போல, என் காதலியின் அழகினுள்ளேயும் அமைந்து, புறத்தே விளங்குகின்ற குறிப்பும் ஒன்று இருக்கின்றது.

முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு. 1274

அரும்பினுள்ளே அடங்கியிருக்கின்ற மணத்தைப் போல, என் காதலியின் புன்முறுவலின் உள்ளே அடங்கியிருக்கும் உள்ளத்தின் குறிப்பும் ஒன்று உள்ளது.

செறிதொடி செய்திறந்த கள்ளம் உறுதுயர்
தீர்க்கும் மருந்தொன்று உடைத்து. 1275

செறிந்த தொடியுடையவளான என் காதலி செய்துவிட்டுப் போன கள்ளமான குறிப்பானது, என் மிக்க துயரத்தைத் தீர்க்கும் ஒரு மருந்தையும் உடையதாய் இருந்தது.

பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வ துடைத்து. 1276

பெரிதாக அன்பைச் செய்து, விருப்பம் மிகுதியாகுமாறு கலத்தல், அரிதான பிரிவைச் செய்து, அன்பில்லாமல் விட்டுப் பிரியும் உட்கருத்தையும் உடையதாகும்.

தண்ணந் துறைவன் தணந்தமை நம்மினும்
முன்னம் உணர்ந்த வளை. 1277

குளிர்ந்த நீர்த் துறைக்கு உரியவனாகிய நம் காதலன் நம்மைப் பிரிந்ததனை, நம்மைக் காட்டிலும், நம் கைவளையல்கள் முன்னதாகவே உணர்ந்து தாமும் கழன்றனவே!

நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து. 1278

நேற்றுத்தான் எம் காதலர் எம்மைப் பிரிந்து சென்றனர்; யாமும், அவரைப் பிரிந்து ஏழுநாட்கள் ஆகியவரைப் போல மேனி பசலை படர்ந்தவராய் இருக்கின்றோமே!

தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அ·தாண் டவள்செய் தது. 1279

தன் தோள்வளைகளை நோக்கி, மென்மையான தோள்களையும் நோக்கி, தன் அடிகளையும் நோக்கி, அவள் செய்த குறிப்பு உடன்போக்கு என்பதே ஆகும்.

பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு. 1280

கண்ணினாலே காம நோயைத் தெரிவித்துப் பிரியாமல் இருக்கும்படி இரத்தல், பெண் தன்மைக்கு, மேலும் சிறந்த பெண் தன்மை உடையது என்று சொல்லுவர்.


129. புணர்ச்சி விதும்பல்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு. 1281

நினைத்த பொழுதிலே களிப்படைவதும், கண்டபொழுதிலே மகிழ்ச்சி அடைவதும் ஆகிய இரண்டு நிலையும், கள்ளுக்குக் கிடையாது; காமத்திற்கு உண்டு.

தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத் துணையும்
காமம் நிறைய வரின். 1282

பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுக்குச் சிறிதாகவேனும் ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும்.

பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண். 1283

என்னைப் பேணி அன்பு செய்யாமல் புறக்கணித்து, தான் விரும்பியபடியே அவன் செய்தாலும், என் காதலனைக் காணாமல் என் கண்கள் அமைதி அடையவில்லையே!

ஊடற்கண் சென்றேன்மன் தோழி அதுமறந்து
கூடற்கண் சென்றது என் னெஞ்சு. 1284

தோழி! நான் அவரோடு ஊடுதலையே நினைத்துச் சென்றேன்; ஆனால் என் நெஞ்சமோ, அதை மறந்துவிட்டு, அவரோடு இணைந்து கூடுவதிலேயே சென்றதே!

எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து. 1285

மை எழுதும் போது, எழுதும் கோலைக் காணாத கண்ணின் தன்மையைப் போல, என் காதலனைக் கண்டபோது, அவன் குற்றங்களையும் யான் காணாமற் போகின்றேனே!

காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறல் லவை. 1286

என் காதலனைக் காணும் போது, அவர் போக்கிலே தவறானவற்றையே காணமாட்டேன்; அவரைக் காணாத போதோ, தவறல்லாத நல்ல செயல்களையே யான் காணேன்.

உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து. 1287

ஓடும் வெள்ளம் இழுத்துப் போகும் என்பதை அறிந்தும் அதனுள் பாய்கின்றவரைப் போல, ஊடுதல் பயனில்லை என்பதை அறிந்தும், நாம் ஊடுவதால் பயன் என்ன?

இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு. 1288

கள்வனே! இழிவு வரத்தகுந்த துன்பங்களையே செய்தாலும், கள்ளுண்டு களித்தவருக்கு மென்மேலும் ஆசையூட்டும் கள்ளைப் போல், நின் மார்பும் ஆசையூட்டுகிறதே!

மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார். 1289

அனிச்சமலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது; அதன் தன்மை அறிந்து, அதன் சிறந்த பயனையும் பெறக் கூடியவர்கள், உலகத்தில் சிலரே யாவர்.

கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று. 1290

கண் நோக்கத் தளவிலே பிணங்கினாள்; பின், என்னைக் காட்டிலும் தான் தழுவுவதிலே விருப்பம் கொண்டவளாகத் தன் பிணக்கத்தையும் மறந்து, அவள் கலங்கினாள்.


130. நெஞ்சொடு புலத்தல்

அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது. 1291

நெஞ்சமே! அவர் நெஞ்சமானது நம்மை மறந்து அவர் விருப்பத்தையே மேற்கொள்வதைக் கண்ட பின்னரும், நீதான் எமக்குத் துணையாகாதது தான் எதனாலோ?

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு. 1292

என் நெஞ்சமே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்ட போதும், அவர் வெறுக்க மாட்டார் என்று நினைந்து அவரிடமே செல்கின்றாயே! அதுதான் எதனாலோ?

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ
பெட்டாங்கு அவர்பின் செலல். 1293

நெஞ்சமே! நீ நின் விருப்பத்தின்படியே அவர் பின்னாகச் செல்லுதல், துன்பத்தாலே கெட்டுப் போனவருக்கு நண்பராக யாருமே இல்லை என்பதனாலோ?

இனிஅன்ன நின்னொடு சூழ்வார்யார் நெஞ்சே
துனிசெய்து துவ்வாய்காண் மற்று. 1294

நெஞ்சமே! நீதான் ஊடுதலைச் செய்து அதன் பயனையும் நுகரமாட்டாய்; இனிமேல் அத்தகைய செய்திகளைப் பற்றி நின்னோடு ஆராய்பவர் தாம் எவரோ?

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு. 1295

அவரைப் பெறாத போதும் அஞ்சும்; பெற்ற போதும் பிரிவாரோ என்று அஞ்சும்; இவ்வாறு என் நெஞ்சம் நீங்காத துயரையே உடையதாகின்றது.

தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத்
தினிய இருந்ததென் நெஞ்சு. 1296

அவரைப் பிரிந்த நாளில், தனியே இருந்து நினைத்த போது, என் நெஞ்சம் எனக்குத் துணையாகாமல், என்னைத் தின்பது போலத் துன்பம் தருவதாக இருந்தது!

நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு. 1297

காதலரை மறக்கவியலாத, என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்தோடு சேர்ந்து, மறக்கக் கூடாததாகிய நாணத்தையும் நான் மறந்தேனே!

எள்ளின் இளிவாம்என்று எண்ணி அவர்திறம்
உள்ளும் உயிர்க்காதல் நெஞ்சு. 1298

‘பிரிந்த கொடுமையாளரை இகழ்ந்தால் இழிவாகும்’ என்று நினைத்து, அவர் மேல் உயிர் போலக் காதல் கொண்ட என் நெஞ்சம், அவரது உயர் பண்புகளையே நினைக்கிறதே!

துன்பத்திற்கு யாரே துணையாவார் தாமுடைய
நெஞ்சந் துணையல் வழி. 1299

தாம் உரியதாக அடைந்திருக்கும் நம் நெஞ்சமே தமக்குத் துணையாகாத பொழுது, ஒருவருக்குத் துன்பம் வந்த காலத்தில், வேறு எவர் தாம் துணையாவார்கள்.

தஞ்சம் தமரல்லர் ஏதிலார் தாமுடைய
நெஞ்சம் தமரல் வழி. 1300

தாம் சொந்தமாக உடைய நெஞ்சமே தமக்கு உறவாகாத போது, அயலார் உறவில்லாதவராக அன்பற்று இருப்பது என்பதும் இயல்பானதே ஆகும்.


131. புலவி

புல்லா திராஅப் புலத்தை அவர் உறும்
அல்லல்நோய் காண்கம் சிறிது. 1301

நாம் ஊடும் போது அவர் அடைகின்ற அல்லல் நோயையும் சிறிது நேரம் காணலாம்; அதற்காக, அவர் வந்ததும், அவர் பாற் சென்று தழுவாமல் பிணங்கியிருப்பாயாக.

உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
மிக்கற்றால் நீள விடல். 1302

உணவுப் பண்டங்களில், அளவாக உப்புச் சேர்ந்திருப்பது போன்றதே ஊடல்; அதை அளவு கடந்து சிறிது நீள விட்டாலும், உப்பின் மிகுதி போல அது கெட்டுவிடும்.

அலந்தாரை அல்லல்நோய் செய்தற்றால் தம்மைப்
புலந்தாரைப் புல்லா விடல். 1303

தம்மோடு ஊடியவரைத் தெளிவித்துத் தழுவாமல் விட்டுவிடுதல், துன்புற்று வருந்துவாரை மேலும் துன்பஞ் செய்து வருந்தச் செய்வது போன்ற கொடுமையாகும்!

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. 1304

ஊடிப் பிணங்கியவரைத் தெளிவித்து அன்பு செய்யாமல் கைவிடுதல், முன்பே நீரில்லாது வாடிப் போன வள்ளிக் கொடியின் வேரை அறுப்பது போன்றது ஆகும்.

நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை
பூஅன்ன கண்ணார் அகத்து. 1305

நல்ல தகைமைகள் பொருந்தியுள்ள நல்ல ஆடவருக்கு அழகாவது, மலரன்ன கண்களையுடைய அவர் காதலியர் இடத்தே உண்டாகும் ஊடலின் சிறப்பே ஆகும்.

துனியும் புலவியும் இல்லாயின் காமம்
கனியும் கருக்காயும் அற்று. 1306

பெரிய பிணக்கமும் சிறிதான பிணக்கமும் இல்லாமற் போனால், காமமானது, மிகக்கனிந்த கனியும், பழுக்காத கருக்காயும் போலப் பயனற்றது ஆகும்.

ஊடலின் உண்டாங்கோர் துன்பம் புணர்வது
நீடுவ தன்று கொல் என்று. 1307

ஊடியிருத்தலிலும் காதலர்க்கு உண்டாவதோர் துன்பம் உளது; அது, ‘கூடியிருப்பதுதான் இனிமேல் நீட்டிக்காதோ’ என்று நினைத்து வருந்தும் அச்சமாகும்.

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அ·தறியும்
காதலர் இல்லா வழி. 1308

‘நம்மாலே இவரும் நோயுற்றார்’ என்று உணர்ந்து, அதைத் தீர்க்க முயலும் காதலர் இல்லாத போது, வீணாக வருத்தம் அடைவதனால் என்ன பயன்?

நீரும் நிழலது இனிதே புலவியும்
வீழுநர் கண்ணே இனிது. 1309

நீரும் நிழலிடத்தே உள்ளதானால் இனியதாகும்; அதுபோன்றே, ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தே நிகழுமானால், இனிமையைத் தருவதாகும்.

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம்
கூடுவேம் என்பது அவா. 1310

ஊடல் கொண்ட போது தெளிவித்து இன்பம் செய்யாமல் வாடவிடுகின்றவரோடு, எம் நெஞ்சம் ‘கூடுவோம்’ என்று நினைப்பது, அதுகொண்டுள்ள ஆசையினாலே ஆகும்.


132. புலவி நுணுக்கம்

பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு. 1311

பரத்தனே! பெண் தன்மை உடையவர் எல்லாரும், பொதுப் பொருளாகக் கொண்டு நின்னைக் கண்ணால் உண்பார்கள். ஆதலால், நின் மார்பை யான் தழுவ மாட்டேன்!

ஊடி இருந்தேமாத் தும்மினார் யாம்தம்மை
நீடுவாழ் கென்பாக் கறிந்து. 1312

காதலரோடு யாம் ஊடியிருந்தேமாக, அவரும் அவ்வேளையில், யாம் தம்மை, ‘நீடுவாழ்க’ என்று வாழ்த்துரை சொல்லுவோம் என்று நினைத்துத் தும்மினார்!

கோட்டுப் பூச் சூடினும் காயும் ஒருத்தியைக்
காட்டிய சூடினீர் என்று. 1313

மரக்கிளையிலிருந்து கொணர்ந்த பூவைச் சூட்டினாலும், என் காதலி, ‘நீர் இந்த அழகை எவளோ ஒருத்திக்குக் காட்டுவதற்கே எனக்குச் சூட்டினீர்’ என்று காய்வாள்.

யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று. 1314

‘யாரினும் நின்னையே விரும்புகின்றேம்’ என்று சொன்னேன் ஆக, அவள், ‘யாரினும்? யாரினும்?’ என்று கேட்டவளாக என்னோடும் ஊடிப் பிணங்கினாள்.

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள். 1315

‘இந்தப் பிறப்பிலே நாம் பிரியமாட்டோம்’ என்று சொன்னேனாக, இனி வரும் பிறப்பிலே பிரிவேம் என்று நான் கூறியதாகக் கருதிக் கண்களில் நீரைக் கொண்டனள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள். 1316

‘நின்னை நினைத்தேன்’ என்றேன்; ‘நினைத்தது உண்டாயின் மறந்திருந்தும் உண்டல்லவோ! என்னை ஏன் மறந்தீர்?’ என்று சொல்லி, அவள் தழுவாமல் பிணங்கினாள்.

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று. 1317

யாம் தும்மினேனாக ‘நூறாண்டு’ என்று கூறி வாழ்த்தினாள்; அடுத்து, அதை விட்டு, ‘எவர் நினைத்ததனாலே நீர் தும்மினீர்’ என்று கேட்டுக் கேட்டு அழுதால்.

தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று. 1318

அவள் பிணங்குவாள் என்று பயந்து நான் எழுந்த தும்மலையும், அடக்கினோனாக, ‘உம்மவர் நினைப்பதை எமக்குத் தெரியாதபடி மறைத்தீரோ?’ என்று அவள் அழுதாள்.

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று. 1319

அவள் ஊடிப் பிணங்கிய போது அதைத் தெளிவித்து இன்புறுத்தினாலும், ‘நீர் பிறமகளிர்க்கும் இத்தன்மையரே ஆவீர்’ என்று, என்மேற் சினம் கொள்வாள்.

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று. 1320

அவள் அழகையே நினைத்து வியந்து பார்த்தாலும், ‘நீர் எவரையோ மனத்திற் கொண்டு எல்லாம் ஒப்பிட்டுப் பார்த்தீரோ?’ என்று கேட்டுச் சினம் கொள்வான்.


133. ஊடல் உவகை

இல்லை தவறவர்க்கு ஆயினும் ஊடுதல்
வல்லது அவர்அளிக்கு மாறு. 1321

அவரிடம் தவறு எதுவும் இல்லையானாலும், அவரோடு பிணங்குதல், அவர் நம்மீது மிகுதியாக அன்பு செலுத்தும்படி செய்வதற்கு வல்லது ஆகும்.

ஊடலின் தோன்றும் சிறுதுனி நல்லளி
வாடினும் பாடு பெறும். 1322

அவரோடு ஊடுதலாலே உண்டாகின்ற சிறு துன்பம், அந்தப் பொழுதிலே அவர் செய்யும் நல்ல அன்பை வாடுவதற்குச் செய்தாலும், பின்னர்ப் பெருமை பெறும்.

புலத்தலின் புத்தேள்நாடு உண்டோ நிலத்தொடு
நீரியைந் தன்னார் அகத்து. 1323

நிலத்தோடு நீர் பொருந்தினாற் போல நம்மோடு கலந்த அன்பு உடையவரான காதலருடன் ஊடுவதைக் காட்டிலும், தேவருலகத்து இன்பமும் சிறந்ததாகுமோ!

புல்லி விடாஅப் புலவியுள் தோன்றுமென்
உள்ளம் உடைக்கும் படை. 1324

காதலரைத் தழுவி, விடாதேயிருக்கும் ஊடலினுள்ளே, என் உள்ளத்தின் வன்மையை உடைப்பதற்கு வலிமையான படையும் தோன்றுகின்றது.

தவறிலர் ஆயினும் தாம்வீழ்வார் மென்றோள்
அகறலின் ஆங்கொன் றுடைத்து. 1325

தவறு இல்லாதவரான போதும், தம்மால் காதலிக்கப்பட்ட மகளிரின் மென்மையான தோள்களை உடலால் நீங்கியிருக்கும் போது, உடலிலும் ஓர் இன்பம் உள்ளது.

உணலினும் உண்டது அறல்இனிது காமம்
புணர்தலின் ஊடல் இனிது. 1326

உண்பதைக் காட்டிலும் முன்னுண்டது செரித்தலே இன்பமாகும்; அதுபோலவே, காமத்தில் கூடிப்பெறும் இன்பத்தை விட ஊடிப்பெறும் இன்பமே சிறந்தது!

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். 1327

ஊடல் களத்திலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அந்த உண்மையானது, ஊடல் தெளிந்தபின், அவர் கூடி மகிழும் தன்மையிலே தெளிவாகக் காணப்படும்.

ஊடிப் பெறுகுவம் கொல்லோ நுதல்வெயர்ப்பக்
கூடலில் தோன்றிய உப்பு. 1328

நெற்றி வெயர்வு அரும்பும்படி காதலருடன் கூடும்போது உண்டாகும் இன்பத்தை, ஊடியிருந்து, அவர் உணர்த்த மீளவும் சேர்ந்து இன்புறும் போது பெறுவோமோ?

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப
நீடுக மன்னோ இரா. 1329

ஒள்ளிய இழையை உடையாள் இன்னும் ஊடுவாளாக! அதனைத் தணிவிக்கும் வகையிலே, யாம், அவளை இரந்து நிற்கும்படியாக, இராக்காலமும் இன்னும் நீள்வதாக!

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின். 1330

ஊடுதல் காமவாழ்விற்கே இன்பம் தருவதாகும்; காதலர் உணர்த்த உணர்ந்து கூடித் தழுவுதலையும் பெற்றால், அ·து, அதனினும் மிகுந்த இன்பமாகும்.